பணிவுடைமை என்னும் செல்வம்
-----
திருக்குறளில் "அடக்கம் உடைமை" என்னும் ஓர் அதிகாரம். இந்த அதிகாரத்தில் வரும் ஐந்தாம் திருக்குறள், "பெருமிதம் கொள்ளாமல் அடங்கி இருத்தல் எல்லோர்க்கும் நன்மையைத் தரும்; அவர் எல்லாருள்ளும் செல்வம் உடைவர்களுக்கு, அந்தப் பணிவானது, வேறு ஒரு செல்வமாகத் தோன்றும் சிறப்பினைத் தரும்" என்கின்றது.
அடக்கம் இன்மை, அகந்தை, செருக்கு என்னும் சொற்கள் ஆணவத்தைக் குறிக்கும். ஆணவம் கொண்டவர்களைத் ‘தலைக்கனம் பிடித்தவர்கள்’ என்று கூறுவார்கள். செருக்கு என்பது ஒரு ஆழ்குழி ஆகும். அதில் வீழ்ந்தவர்கள் அழிவது திண்ணம. செருக்கு என்னும் அடக்கம் இன்மை மனிதனிடத்தில் எட்டு விதமாகத் தோன்றும்.
1. அறிவுச் செருக்கு ---
தான் கல்வியில் சிறந்தவன் என்றும் தன்னைவிட எவரும் பெரிய அறிவாளி அல்ல என்று கருதுவதும் ஒருவகைச் செருக்கு. கல்வியில் சிறந்து விளங்கி அனைவராலும் பாராட்டப்படும் நிலைக்கு வந்தவர்களில் சிலருக்குக் கல்விச் செருக்கு ஏற்படுவது உண்டு. கற்றவர்களிடம் ஏற்படும் இந்தக் கல்விச் செருக்கைப் போக்குவதற்குத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் "நன்னெறி" என்னும் நூலில் பின்வரும் பாடல் வாயிலாக வழிகாட்டியுள்ளார்.
"கடலே அனையம்யாம் கல்வியால் என்னும்
அடல் ஏறு அனைய செருக்குஆழ்த்தி - விடலே
முனிக்கு அரசு கையால் முகந்து முழங்கும்
பனிக்கடலும் உண்ணப் படும்."
முனிவர்களுக்கு அரசர் என்று போற்றப்படுபவர் அகத்தியர். அவர் குள்ளமான உருவம் கொண்டவர். அந்தக் குள்ளமான உருவம் கொண்ட அகத்தியர் பெரிய கடலையே குடித்துவிட்டார் என்னும் புராணக் கருத்து இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாரகன் முதலான அசுரர்கள் கடலில் மறைந்து கொண்டு, அவ்வப்போது தேவர்கள் முதலானவர்களுக்குத் துன்பம் செய்து வந்தனர். அந்தக் தாரகன் முதலான அசுரர்களை வெளியேற்றுவதற்காக அகத்தியர் கடலைக் குடித்தார் என்று மச்ச புராணம் தெரிவிக்கிறது. பெரிய கடலைக் கூட, குள்ளமான உருவம் கொண்ட அகத்தியர் குடித்துவிட்டார். எனவே, கடல் அளவு மிகுதியான கல்வி அறிவு உடையவன் என்று ஆணவம் கொள்ளக்கூடாது என்று நன்னெறி கூறுகிறது. "கலைமகளே இன்னமும் ஓதிக் கொண்டுதான் இருக்கின்றாள். கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகு அளவு" என்கிறார் ஔவைப் பிராட்டியார்.
2. குலச் செருக்கு ---
மற்றவர் குலத்தைவிடத் தனது குலம் உயர்ந்தது என்று எண்ணுதல் ஆகும். "குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்றார் பாரதியார்.
3. சாதிச் செருக்கு
தன் சாதிதான் சிறந்தது என நினைப்பது. மகாபுருஷர்கள் என்று போற்றப்படும் பலரையும் எண்ணிப் பார்த்தால் எந்த சாதி உயர்ந்தது என்பது தெளிவாகும். "சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்" என்று சொல்லி, சாதி, குலத்தில் உயவர்வு தாழ்வு கற்பிக்கின்ற பாவத்தைச் செய்யவேண்டாம் என்பது இளம்பருவத்திலேயே விளங்கவேண்டும் என்பதாகச் சொல்லி வைத்தார் அமரகவி பாரதியார்.
"சாதி இரண்டு ஒழிய வேறுஇல்லை, சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி"
என்றார் ஔவையார். மனிதர்கள் பிறப்பால் உருவாக்கி கொள்ளுகின்ற சாதியை ஔவையார் குறிப்பிடவில்லை. பிறப்பால் எந்தக் குலத்தில் பிறந்தவர் ஆனாலும், ஒருவன் துன்பத்தில் உள்ளான் என்பதை அறிந்து, இல்லை என்று ஒருவன் கேட்கும் முன்பாகவே கொடுத்து உதவுபவர்களே பெரியோர்கள். பொருள் இருந்தும், உதவ வேண்டும் என்ற மனநிலை இல்லாவர்களே தாழ்ந்தவர்கள் என்றும் இவ்வாறு இரண்டு சாதிகளே உலகில் நீதிநெறிகளின்படி பார்த்தால் உண்டு என்றார் ஔவையார்.
“ஈதல் இசைபட வாழ்தல், அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.”
என்று திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்தினார்.
சாதிப் பெருமை, குலப்பெருமை பேசுகின்ற ஈனத் தனத்தினால், உள்ளத்தில் ஊனமே உண்டாகும். அந்த ஈனத் தனத்திலே தன்னை ஆட்படுத்திக் கொண்டவர்கள் ஈடேற வழியே இல்லை. அவர்களுக்குப் பிறவி என்னும் தடுமாற்றமே உண்டாகும். வெள்ளச் சுழலில் அகப்பட்டுக் கொண்டவனுக்கு அதிலிருந்து தப்பிக்க வழியே இல்லை. அதுபோல, சாதி குலம் பிறப்பு என்கின்ற சுழியிலே, அறியாமையால் தன்னைத் தானே அகப்படுத்திக் கொண்டவர்களுக்கு ஈடேற்றம் இல்லை என்பதைப் பின்வரும் மணிவாசகப் பாடல் உணர்த்தும்.
"சாதி, குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதம் இலி நாயேனை அல்லல் அறுத்து ஆட்கொண்டு,
பேதைகுணம் பிறருருவம் யான் எனது என் உரைமாய்த்துக்
கோதுஇல் அமுது ஆனானைக் குலாவுதில்லைக் கண்டேனே". --- திருவாசகம்.
இதன் பொருள் ---
சாதி, குலம், பிறவி என்கின்ற சூழலிலே அகப்பட்டு அறிவு கலங்குகின்ற அன்பில்லாத நாய் போன்ற எனது துன்பத்தினைக் களைந்து, என்னையும் அடிமை கொண்டு அறியாமைக் குணத்தையும் அன்னியருடைய வடிவம் என்ற எண்ணத்தையும், நான், எனது என்று சொல்லும் சொல்லையும் அறவே அழித்து, குற்றம் இல்லாத அமுதம் ஆனவனைத் தில்லையம்பலத்தில் கண்டேன்.
4. செல்வச் செருக்கு ---
சிறிது செல்வம் சேர்ந்து விட்டாலே, தன்னை குபேந்திரனாக எண்ணி இறுமாப்பு அடைவது உண்டு. கல்விச் செருக்கு எவ்வாறு மனிதனிடம் இருக்கக் கூடாதோ அதைப்போல, செல்வச் செருக்கும் ஒருவனிடம் இருக்கக் கூடாது என்பதைச் சிவப்பிரகாசர் பாடியுள்ளார்.
"தொலையாப் பெரும்செல்வத் தோற்றத்தோம் என்று
தலையா யவர்செருக்குச் சார்தல் - இலையால்
இரைக்கும்வண்டு ஊதும்மலர் ஈர்ங்கோதாய் மேரு
வரைக்கும்வந் தன்று வளைவு."
மேரு என்னும் மலை புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மிகப்பெரிய மலை, இந்த மலை நூற்றுக்கணக்கான சிகரங்களைக் கொண்டது. பொன்மலை என்று போற்றப்படுவது. இத்தகைய உறுதியான மேரு மலையைக் கூட, சிவபெருமான் வில்லாக வளைத்துக் கையில் தாங்கினார். எனவே, குறையாத செல்வத்தைக் கொண்டவன் என்று யாரும் ஆணவம் கொள்ளக்கூடாது என்று சிவப்பிரகாசர் அறிவுறுத்தியுள்ளார்.
5. வீரச் செருக்கு ---
தான் மட்டுமே வீரன் என்று நினைப்பது வீரச் செருக்காகும். இறுமாப்பால் வீரம் அழியும். அகந்தையால் அழிந்தவர்கள் இராவணன், தக்கன், சூரபதுமன் முதலானோர். வரலாறும் இதனை எடுத்துக் காட்டும்.
6. வலிமைச் செருக்கு ---
தன்னுடைய பலத்திற்கும் வலிமைக்கும் முன் எவருமில்லை என்று ஆணவம் அடைவது. கோவர்த்தன மலையையே குடையாகப் பிடிக்கும் வலிமை படைத்தவர் திருமால். மேருமலையையே வில்லாக வளைக்கும் திறம் கொண்டவர் சிவபெருமான். நம் வலிமை பெரியதா என எண்ணிப்பார்க்க வேண்டும்.
7. வனப்புச் செருக்கு ---
உடல் அழகுடன் இருப்பவர்கள் தன்னை விட வனப்புடன் எவருமில்லை எனக் கருதுவது வனப்புச் செருக்காகும். மற்றவர்க்கு வேண்டுமானால் தனது உடல் அழகே பெரிதாகத் தோன்றலாம். அதனை மேலும் மெருகு ஏற்றிக் கொள்ளலாம். ஆனால், கற்றவர்க்கு, கல்வியால் உண்டான நலமே சிறந்த அணிகலம் ஆகும். அவருக்கு வேறு அணிகலன்கள் தேவையில்லை என்கின்றார் குமரகுருபர அடிகள்.
"கற்றார்க்குக் கல்வி நலனே நலன், அல்லால்
மற்றுஓர் அணிகலம் வேண்டாவாம்; - முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா, யாரே
அழகுக்கு அழகுசெய் வார்". --- நீதிநெறி விளக்கம்
இதன் பொருள் ---
எக்காலத்திலும் முழுமையான மணிகளால் செய்யப்பட்ட ஆபரணங்களுக்கு அழகு செய்ய, வேறு ஆபரணங்கள் தேவை இல்லை. யாராவது அழகுக்கு அழகு செய்வார்களா? அது போல, நன்கு கற்றவர்க்கு, கல்வியால் உண்டாவதே அழகு. அவருக்கு அழகு செய்ய வேறு ஓர் அணிகலன் வேண்டுவது இல்லை.
பிற நூல்களும் இதனையே வலியுறுத்துகின்றன.
"குஞ்சி அழகும், கொடுந்தானைக் கோட்டு அழகும்,
மஞ்சள் அழகும், அழகு அல்ல; - நெஞ்சத்து
நல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு." --- நாலடியார்.
இதன் பொருள் ---
வாரி விடப்பட்ட கூந்தல் அழகும், நன்கு உடுத்தப்பட்ட அழகிய கரையோடு கூடிய வண்ண உடை அழகும், முகத்தில் ஒப்பனையாகப் பூசப்படுகின்ற மஞ்சளின் அழகும், ஒருவருக்கு உண்மையில் அழகு தருவன அல்ல. உள்ளத்தால் நல்லவராய் வாழுகின்ற நடுநிலை தவறாத வழியில் ஒருவனைச் செலுத்துகின்ற கல்வியே சிறந்த அழகு ஊட்டும் அணிகலம் ஆகும்.
இப் பாடல் பெண்களுக்கு மட்டும் சொல்லப்பட்டதாக எண்ணவேண்டாம். தலைமயிர் அழகு, உடை அழகு இரண்டும் இருபாலர்க்கும் பொருந்தும் என்பதை அறிந்து கொள்ளுக.
"மயிர்வனப்பும், கண்கவரும் மார்பின் வனப்பும்,
உகிர்வனப்பும், காதின் வனப்பும், --- செயிர்தீர்ந்த
பல்லின் வனப்பும், வனப்புஅல்ல, நூற்குஇயைந்த
சொல்லின் வனப்பே வனப்பு". --- சிறுபஞ்சமூலம்.
இதன் பொருள் ---
தலைமயிரால் உண்டாகும் அழகும், கண்டவர் கண்களைக் கவர்தற்கு உரிய எடுப்பான மார்பினால் உண்டாகும் அழகும், நகத்தால் உண்டாகும் அழகும், காதினால் உண்டாகும் அழகும், குற்றம் நீங்கின (வெண்மையான) பல்லினால் உண்டாகும் அழகும், அழகு அல்ல. கற்ற நூல்களுக்குப் பொருந்திய சொல்லின் அழகே அழகு ஆகும்.
புற அழகு நாளாக நாளாகக் குன்றும். அக அழகு எப்போதும் வளர்ந்துகொண்டே இருக்கும். கல்லாமையால் உண்டாகும் இழிவை எடுத்துக் காட்டவே இவ்வளவும் சொல்லப்பட்டது. புற அழகு கூடாது என்று சொல்லவில்லை. புற அழகோடு, கல்வி அறிவினால் உண்டாகும் உள்ளத்தின் அழகும் தேவை என்பதே சொல்லப்பட்டது.
"இடைவனப்பும் தோள்வனப்பும், ஈடின் வனப்பும்,
நடைவனப்பும், நாணின் வனப்பும், - புடைசால்
கழுத்தின் வனப்பும், வனப்பு அல்ல; எண்ணோடு
எழுத்தின் வனப்பே வனப்பு". --- ஏலாதி.
இதன் பொருள் ---
இடுப்பின் அழகும், தோள்களின் அழகும், செல்வத்தின் அழகும், நடக்கின்ற நடையின் அழகும், நாணத்தின் அழகும், பக்கங்களில் தசை கொழுவியுள்ள கழுத்தின் அழகும், உண்மை அழகு ஆகா. மக்களுக்கு இலக்கணத்தோடு கூடிய இலக்கியக் கல்வியழகே உண்மை அழகு ஆகும்.
தனக்கு ஒரு கேடு அல்லது தாழ்வு வந்தபோது, புற அழகு எவ்விதத்திலும் துணை செய்யாது. கல்வி அறிவு ஒன்றே துணை நிற்கும்.
8. தவச் செருக்கு ---
விரதங்களும் நோன்புகளும் பல இருந்துவிட்டுத் தம்மைவிடத் தவத்தில் சிறந்தவர் எவருமில்லை என்று நினைப்பது தவச் செருக்காகும்.
கல்வி, குடிப்பிறப்பு, செல்வம் ஆகியவற்றால் செருக்குக் கொள்ளாத ஒருவனுக்குப் பெருமை உண்டாகும். கல்வி உடையார், குடிப்பிறப்பு உடையார், செல்வம் உடையார் என்னும் மூவகையினருக்கும் அடக்கம் என்னும் குணம் பொதுவானது என்றாலும், பொருள் உடையார் இடத்தில் செருக்கு மிகுந்து இருக்கும். அவரிடத்திலும் அடக்கம் இருக்குமானால், அது கல்வி உடையாரின் அடக்கத்திலும், குடிப்பிறப்பு உடையாரின் அடக்கத்திலும் மேம்பட்டு விளங்கும்.
"எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல், அவர் உள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து." --- திருக்குறள்.
இதன் பொருள் ---
பணிதல் எல்லார்க்கும் நன்றாம் - பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து - அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வம் ஆகும் சிறப்பினை உடைத்து.
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடிய, "முதுமொழிமேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்,
"ஆனை இழிந்தும் அரசு இறைஞ்சும் போலியைக்கண்டு,
ஏனை அரன் அன்பர் என்றால் என்படுமோ? --- மாநிலத்துள்
எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல், அவர் உள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து."
அரசு - சேரமான் பெருமாள் நாயனார். போலியைக் கண்டு - முழுநீறு பூசிய சிவனடியாரைப் போல் தோன்றிய வண்ணானைக் கண்டு. இறைஞ்சும் - வணங்குவார்.
சேரமான் பெருமாள் நாயனார் வரலாறு
சேரமன்னர் குலமும் உலகும் செய்த பெரும் தவப்பயனாகப் பெருமாக்கோதையார் அவதரித்தார். அரச குமாரராகிய அவர், மண் மேல் சைவநெறி வாழ வளர்ந்து, முன்னைப் பல பிறவிகளிலும் பெற்ற பேரன்பினால் சிவபெருமானுடைய திருவடிகளையே பரவும் கருத்து உடையர் ஆயினார். தமக்கு உரிய அரசியல் தொழிலை விரும்பாமல் திரு அஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலை அடைந்து சிவபெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்து வாழ்வதை விரும்பினார். உலகின் இயல்பும் அரசியல்பும் உறுதியல்ல என உணர்ந்த அப்பெருந்தகையார், நாள்தோறும் விடியற்காலத்தே நித்திரை விட்டெழுந்து நீராடித் திருவெண்ணீறு அணிந்து மலர் கொய்து மாலை தொடுத்தமைத்துத் திருவஞ்சைக்களத் திருக்கோயிலுக்குச் செல்வார். அங்கு திருவலகும் திருமெழுக்கும் இட்டுத் திருமஞ்சனம் கொணர்ந்து, இறைவனுக்கு நீராட்டி, முன்னைய அருளாசிரியர் திருவாய் மலர்ந்தருளிய திருப்பாட்டினை ஒருமை மனத்துடன் ஓதி அருச்சித்து வழிபாடு புரிந்து வருவார். இங்கனம் நிகழும் நாளில் மலைநாட்டை ஆட்சி புரிந்த செங்கோற்பொறையான் என்ற சேரவேந்தன் தனது அரச பதவியினைத் துறந்து தவஞ்செய்வதற்காகக் கானகம் சென்றான்.
இந்நிலையில் அரசியல் நூல் நெறியில் வல்ல அமைச்சர்கள், சேர நாட்டின் அரசியல் நலங்குறித்துச் சிலநாள் ஆராய்ந்தனர். பண்டைச் சேர மன்னர் மேற்கொண்டொழுகிய பழைய முறைமைப்படி அந்நாட்டின் ஆட்சியுரிமை திரு அஞ்சைக்களத்திலே திருத்தொண்டு புரிந்துவரும் சேரர்குலத் தோன்றலாகிய பெருமாக்கோதையாருக்கே உரியதெனக் கண்டனர். திரு அஞ்சைக்களத்தை அடைந்து பெருமாக்கோதையாரை வணங்கி "இச்சேர நாட்டின் ஆட்சி உரிமை தங்களுக்கு உரியதாதலால் தாங்களே இந்நாட்டினைக் காக்கும் ஆட்சி புரிந்தருளுதல் வேண்டும்" என வேண்டினர். பெருமாக்கோதையார் "சிவத்தொண்டிற்குச் சிறிதும் தடை நேராதபடி அடியேன் இந்நாட்டை ஆட்சிபுரிய இறைவனது திருவருள் துணைபுரிவதானால் அப்பெருமானது திருவுள்ளக் கருத்தை உணர்ந்து நடப்பேன்" எனத் தமது உள்ளத்தில் எண்ணிக்கொண்டு திருவஞ்சைக்களத்து இறைவனது திருவருளால், புல் முதல் யானை ஈறாக உள்ள எல்லா உயிர்களும் மக்கள் யாவரும் தம்நாட்டு அரசியலின் நன்மை குறித்துத் கூறுவனவற்றை மனத்தினால் உய்த்து உணர்ந்து கொள்ளும் நுண்ணுர்வும், கெடாத வலிமையும், கைம்மாறு கருதாது இரவலர்க்கு ஈயவல்ல (கொடுக்கவல்ல) கொடை கெடாத வண்மையும், நாடாள் வேந்தர்க்கு இன்றியமையாத படை ஊர்தி முதலிய அரசுறுப்புக்களும் ஆகிய எல்லா நலங்களும் பெற்றார்.
உலகுயிர்கள் கழறும் சொற்கள் அனைத்தையும் உணரும் ஆற்றல் பெற்ற பெருமாக்கோதையார், தாம் முடிசூடிச் சேரநாட்டினை ஆட்சி புரிதல் வேண்டும் என்பது சிவபெருமான் திருவுள்ளக் கருத்தாதலை உணர்ந்து வணங்கி அமைச்சர் வேண்டுகோளுக்கு இசைந்தருளினார். அவரது இசைவுபெற்று மகிழ்ந்த அமைச்சர்கள் வெண்டுவன செய்ய உரிய நன்னாளில் திருமுடிசூடி இவ்வுலகத்தை ஆட்சிபுரியும் பெருவேந்தராயினார். மலைநாட்டரசராய் மணிமுடி சூடிய சேரமான் பெருமாள் நாயனார். திருவஞ்சைக்களத் திருக்கோயிலை வலம் வந்து வணங்கி, பட்டத்து யானை மீது அமர்ந்து வெற்றிக்குடையும் வெண்சாமைரையும் பரிசனங்கள் தாங்கிவர, நகரில் நகரில் திருவுலா வந்தனர். அப்பொழுது உவர்மண் பொதியைத் தோளிலே சுமந்து வரும் ஒருவன் எதிர்ப்பட்டான். மழையில் நனைந்து வந்த அவனது சரீரம் உவர்மண் உடல் முழுவதும் படிந்து வெளுத்திருந்தமையால், உடல் முழுவதும் திருநீறு பூசிய சிவனடியார் திருவேடம் எனக்கொண்ட சேரமான் பெருமாள் விரைந்து யானையினின்றும் இறங்கிச் சென்று வணங்கினார். அரசர் பெருமான் தன்னை வணங்கக் கண்டு சிந்தை கலங்கி அச்சமுற்ற அவன், அரசரைப் பணிந்து "அடியேன் தங்கள் அடிமைத் தொழில் புரியும் வண்ணான்" என்றான். அதுகேட்ட சேரர்பிரான் "அடியேன் அடிச்சேரன், காதலால் பணிந்து போற்றுதற்குரிய சிவனடியார் திருவேடத்தை அடியேன் நினைக்கும்படி செய்தீர். இதுபற்றி மனம் வருந்தாது செல்வீராக" என அவனுக்குத் தேறுதல் கூறி அனுப்புவாராயினர். அன்பு நிறைந்த சேரமான் பெருமாளது அடியார் பத்தியைக் கண்டு வியந்த அமைச்சர் அனைவரும் அப்பெருந்தகையை வணங்கிப் போற்றினர்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, குமார பாரதி என்னும் பெரியார் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் இருந்து, பெரியபுராணத்தில் வரும் குலச்சிறை நாயனாரின் வரலாற்றினை வைத்துப் பாடிய பாடல்...
"நலச்சிறைநீர் வேணியர் நல்லடியார் யார்க்கும்
குலச்சிறையார் தாம்பணிதல் குன்றார் - இலர்க்குஇகழார்
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து."
இதன் பொருள் ---
பாண்டிய நாட்டிலே மணமேற்குடியிலே குலச்சிறை நாயனார் என்பவர் அவதரித்தார். விபூதி உருத்திராக்கம் தரித்தவர்களும் திரு ஐந்தெழுத்தை இடையறாது ஓதுகின்றவர்களும் ஆகிய சிவனடியார்களை வணங்கித் துதித்து அவர்க்கு வேண்டும் உதவிகளை எல்லாம் செய்யும் பணி பூண்டவர். குணம் இலராயினும் அவரை இகழ்ச்சி செய்யாதவர். பாண்டிய அரசராகிய நின்றசீர்நெடுமாறனுக்கு முதல் மந்திரியாக இருந்து அரசு புரிவித்தார். பரசமய கோளரியாகிய ஆளுடைய பிள்ளையார் என்னும் திருஞானசம்பந்தரை வணங்கிப் போற்றி, அவரால் தேவாரத் திருப்பதிகத்திலே வைத்துப் பாராட்டப் பெற்ற சிறப்பினையும் பெற்றார். சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டத் தொகையிலே "பெருநம்பி" என்று வியந்து உரைக்கப்பட்டார்.
"நலம்இலர் ஆக நலம் அதுஉண் டாக
நாடவர் நாடுஅறி கின்ற
குலம்இலர் ஆகக் குலம் அதுஉண் டாகத்
தவம்பணி குலச்சிறை பரவும்
கலைமலி கரத்தன் மூஇலை வேலன்
கரிஉரி மூடிய கண்டன்
அலைமலி புனல்சேர் சடைமுடி அண்ணல்
ஆலவாய் ஆவதும் இதுவே." --- திருஞானசம்பந்தர்.
பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே எனினும், அவ் எல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வமாம் சிறப்பினை உடைத்து எனத் திருவள்ளுவ நாயனார் கூறியருளினமை காண்க.
"நோக்கு இருந்தும் அந்தகரா, காது இருந்தும்
செவிடரா, நோய் இல்லாத
வாக்கு இருந்தும் மூகையரா, மதி இருந்தும்
இல்லாரா, வளருங் கைகால்
போக்கு இருந்தும் முடவரா, உயிர் இருந்தும்
இல்லாத பூட்சியாரா
ஆக்கும் இந்தத் தனம் அதனை, ஆக்கம்என
நினைத்தனை நீ அகக் குரங்கே." --- நீதிநூல்.
இதன் பொருள் ---
நெஞ்சமாகிய வஞ்சகக் குரங்கே! நீ கண்ணிருந்தும் குருடராய்க், காதிருந்தும் செவிடராய்க், குற்றமற்ற வாயிருந்தும் ஊமையராய், அறிவிருந்தும் மூடராய், நீண்ட கைகால்களிருந்தும் முடவராய், உயிரிருந்தும் அது இல்லாத வெற்று உடலினராய்ப் பயனிழக்கச் செய்யும் தீய பொருளை, வளரும் செல்வமாம் வாழ்வு என நினைத்தனை.
சிறப்புடன் வாழவேண்டுமானால், செருக்கு முதலிய சிறுமைகள் இல்லாமல் வாழவேண்டும்.
"செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம், பெருமித நீர்த்து"
என்று நாயனார் அருளிய திருக்குறளை உணரவேண்டும்.