நாட்டின் சிறப்பு

 

நாட்டின் சிறப்பு.

----

"தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்வு இலாச்

செல்வரும் சேர்வது நாடு".

இத் திருக்குறளின் வழி, ஒரு நாடு என்பது எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்று திருவள்ளுவ நாயனார் காட்டினார். 

நுகர்வுக்குரிய குறையாத விளைபொருள்களும், தகுதி உடைய சான்றோரும், குறைவில்லாத செல்வம் படைத்தவர்களும் ஒருங்கு சேர்ந்து இருப்பது நாடு ஆகும். கேடு இல்லாத செல்வம் என்றால், வழங்க வழங்கக் குறையாத செல்வம் என்று பொருள். "கேடு இல் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடு" என்று பிறிதொரு திருக்குறளில் நாயனார் காட்டினார். மாடு என்றால், செல்வம் என்று பொருள். மற்றைய பொருட்செல்வமோ கீழ்மக்களிடத்தும் உள்ளது என்பதைக் காட்ட, "பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்றார். "பூரியார்" என்றது அறிவு ஒழுக்கங்களால் மேன்மை பெறாதவர் என்று பொருள்.

"வேழம் உடைத்து மலைநாடு; மேதக்க

சோழவளநாடு சோறு உடைத்து; --- பூழியர்கோன்

தென்னாடு முத்து உடைத்து; தெண்ணீர் வயல்தொண்டை

நன்னாடு சன்றோர் உடைத்து".

சேர, சோழ, பாண்டிய மற்றும் தொண்டை நாடுகளின் சிறப்புக் குறித்து, ஔவையார் பாடிய தனிப்பாடல்களில் ஒன்று இது. சேரநாடு யானைகள் மிகுந்து இருப்பது. மேன்மை உடைய சோழவளநாடு நெல்வளத்தை உடையது. பாண்டியனது தென்னாடு முத்து விளையும் சிறப்பை உடையது. நீர்வளம் மிக்க வயல்களால் சூழப்பட்டு உள்ள தொண்டை நாடு சான்றோரை உடையது என்பது இப் பாடலின் வெளிப்படையான பொருள்.

ஔவைப் பிராட்டி, நம்மை உய்த்து உணரச் செய்த பொருள் ஒன்று இப் பாட்டில் உள்ளது. தொட்ணை நாட்டில் வாழும் சான்றோர்களைக் குறித்துப் பாடிய ஔவையார், மற்ற நாடுகளில் உள்ள விளைபொருள்கைக் குறித்துப் பாடினார் என்பது ஏற்புடைதாக இல்லை. "தொண்டை நாடு சான்றோர்களை உடையது" என்று வெளிப்படையாகச் சொன்னதை வைத்து,  மற்றதை உய்த்து உணரச் செய்தார். தொண்டை வளநாட்டின் அருமை பெருமைகளைப் பலவாறாகப் பாடிய தெய்வச் சேக்கிழார் பெருமான், தொண்டை நாட்டின் பெருமை சொல்லளவில் அடங்காது என்பதால், "தீய என்பன கனவிலும் நினையாச் சிந்தைத் தூய மாந்தர் வாழ் தொண்டை நன்னாட்டு இயல்பு சொல் வரைத்தோ?" என்று முடித்தார். விளக்கத்தை, பெரியபுராணம், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் வரலாற்றில் காண்க.

மலைநாடு என்பது சேரநாடு எனப்படும். இப்போதைய கேரளம் இது. வேழம் உடைத்து. வேழம் என்றால் யானை மட்டும் அல்ல, கரும்பு என்றும், இசை என்றும் பொருள் உண்டு. இனிமையான மக்களை உடையது சேரநாடு. நடுநாட்டில் அவதரித்து, சோழ நாட்டுத் திருத்தலமாகிய திருவாரூரில் வாழ்ந்திருந்த சுந்தரமூர்த்தி நாயனார், சேரநாட்டில் அவதரித்த, சேரமான் பெருமாள் நாயானர் என்று போற்றப்பெறும் பெருமாக்கோதையார் என்பவருக்கு இனிய நண்பராக இருந்தார். 

மேன்மை பொருந்திய சோழநாடு சோறு உடைத்து. "அன்னமய கோசம்" என்னும் தூல உடம்பைப் பெற்றுள்ள மக்களுக்கு, சோறு என்றவுடன், இந்த உடம்பு வளரத் துணைபுரியும் சோறு நினைவுக்கு வருவது இயல்பு.. ஆனால் அந்தச் சோறு, உடம்பு வளரத் துணை புரிவதுடன், உயிர் உணர்வும் வரளத் துணைபுரிவது என்பதுதான் உண்மை. சோழநாட்டில் நெல் நிறைய விளைவதால், சோறு உடையது என்பது அல்லாமல், அதற்கு ஒரு உள்ளுறை பொருளும் உள்ளது என்று அறிதல் வேண்டும். "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்பது மணிமேகலைக் காப்பியம். உண்டி என்றால் உணவு என்று பொருள். உணவு இல்லாமல் எந்த உயிரும் வாழ இயலாது. உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவை உணவு. மேலும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு இல்லாத நாடு, பொருளியல் வளம்பெற்ற நாடாகக் கருத இயலாது. உணவுப் பற்றாக் குறையே, நாட்டின் அமைதி இன்மைக்கும், சமூக விரோதச் செயல்களுக்கும் அடிப்படைக் காரணம். இது குறித்தே சோழநாட்டின் பெருமையைப் பின்வருமாறு கூறுகிறது "சோழமண்டல சதகம்" என்னும் நூல்.

"வேழம் உடைத்து மலைநாடு

மிகுமுத்து உடைத்து தென்னாடு;

தாழ்வில் தொண்டை வளநாடு

சான்றோர் உடைத்து என்று உரைத்தது அல்லால்

சோழன் புவிசோறு உடைத்து என்னும்

     துதியால் எவர்க்கும் உயிர்கொடுத்து

வாழும் பெருமைத் திருநாடு

      வளம்சேர் சோழ மண்டலமே."   --- சோழமண்டல சதகம்.

மலைநாடாகிய சேரநாடு யானைகளை உடையது. தென்னாடாகிய பாண்டி நாடு முத்து உடையது. தொண்டை நாடு சான்றோர் உடையது. சோழ வளநாடு சோறு உடையது. சோறு உயிர் கொடுப்பதால் எல்லாருக்கும் உயிர் கொடுத்து வாஅழும் பெருமையை உடையது சோழநாடு என்கிறது இப்பாடல்.

"சோறு" என்ற சொல்லுக்கு, "வீட்டின்பம்", "மோட்சம்" "முத்தி" என்றும் பொருள் உண்டு. "பாதகமே சோறு பற்றினவா தோள்நோக்கம்" என்பது மணிவாசகம். சோழநாட்டில்தான் சிவத் தலங்கள்,  முருகன் திருத்தலங்கள், திவ்விய தேசங்கள் நிறைந்துள்ளன. சைவத்தின் இராஜதானியான திருவாரூரும் உள்ளது. அங்கே கமலாலயம் உள்ளது. கமல+ஆலயம். ஆன்மாக்களின் இதய கமலத்தில் அஜபா நடனம் புரிபவர் தியாகராஜர். சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் திருவாரூருக்கு வா என்று அழைத்து, பரவை நாச்சியாரை மணம் முடித்தான் இறைவன். பரவை நாச்சியார் கொண்ட ஊடலை மாற்ற,  இறைவன் இருமுறை தூதனாக திருவாரூர்த் திருவீதிகளில் நடந்ததால், அன்றைய இரவில் திருவாரூர் வீதிகள் சிவலோகமாக விளங்கின என்பார் தெய்வச் சேக்கிழார் பெருமான். வேதநெறிகளின் உண்மைப் பொருளின் படி வாழ்ந்து காட்டிய மனுநீதிச் சோழன் அரசு புரிந்தது திருவாரூரைத் தலைநகராக் கொண்டுதான். அப்பருக்கு திருக்கயிலைக் காட்சி கிட்டிய திருவையாறு என்னும் திருத்தலமும் இந்த நாட்டில் உள்ளது. சைவமுதல்வராகிய திருஞானசம்பந்தர் அவதரித்த சீகாழி உள்ளது. பாடல் பெற்ற சிவத்தலங்கள் 274-ல், 190 திருத்தலங்கள் சோழநாட்டில்தான் உள்ளன. பெருஞ்சிறப்பாக, சைவர்களுக்குக் கோயில் எனப்படும் "சிதம்பரம்" உள்ளது. வைணவர்களுக்குக் கோயில் எனப்படும் "திருவரங்கம்" உள்ளது. இன்னும் சொல்லிக் கோண்டே போகலாம். 

சோறு என்னும் சொல்லுக்கு, "அன்னம்" என்று வெளிப்படையாக ஒரு பொருள் உள்ளது. சோறு என்னும் சொல்லுக்கு, "வீட்டின்பம்" "மோட்சம்" என்றும் பொருள் உள்ளது என்று மேலே குறித்தேன். "அமுதம்" என்றும் ஒரு பொருள் உள்ளது. சோறு இடுவதை, "அமுது படைத்தல்" என்றுதான் வழங்குகின்றன நமது அருள்நூல்கள். அடியார்களுக்கு அமுது படைத்தலை, "அன்னம் பாலிப்பு" என்று உயர்வாகச் சொல்லுவர். விட்டின்பத்தை அருளுகின்ற இறைவனை "அமுதே, அமுதமே" என்றும் போற்றுதல் காண்க.

"அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்" என்று பாடினார். "தில்லையைத் தரிசிக்க மோட்சம்" என்னும் வழக்குச் சொல் இதற்குச் சான்று. "பாதகமே சோறு பற்றினவா தோள் நோக்கம்" என்னும் திருவாசகச் சொற்றொடரில், "சோறு" என்னும் சொல், "விட்டின்பம்" அல்லது "மோட்சம்" என்பதையே பொருளாக உடையது. 

தில்லையை வணங்க முத்தி. திருவாரூரில் பிறக்க முத்தி. சோழ நாட்டின் பெருமைக்கு இன்னும் என்ன வேண்டும்?. இத் தகைய சோழநாட்டில் வாழ்பவருக்கு வீட்டின்பம் அல்லது மோட்சம் உறுதி என்பதால், "சோழநாடு சோறு உடைத்து" எனப்பட்டது.

"பூழியர் கோன்" என்பது பாண்டிய மன்னனைக் குறிக்கும். தென்+நாடு = தென்னாடு. "தென்" என்றால் தெற்குத் திசை என்று பொதுவாகச் சொல்லுவர். அது பொருந்துமாயினும், அழகு அல்லது ஞானம் என்று பொருள்தான் சிறப்புடையது. ஞானம் விளைகின்ற நாடு பாண்டி நாடு. பாண்டி நாடு முத்து உடைத்து. பாண்டிய நாட்டின் ஒரு பகுதியான தூத்துக்குடியில் முத்துக் குளித்தல் இன்றும் நடைபெறுவதை அறிவோம். முத்து என்னும் சொல்லுக்கு, "வெளிப்படுவது" "விடுபடுவது" என்றும் பொருள் உண்டு. சிப்பியில் இருந்து வெளிப்படுவது முத்து எனப்பட்டது. 

"முத்தி" என்றால் விடுபடுதல், வெளிப்படுதல் என்று பொருள். பாசங்களில் இருந்து விடுபடுவது "முத்தி". எனவே, "முத்தி" என்பதன் பொருள் "பாசநீக்கம்" ஆகும். வாயிதழில் இருந்து அன்பின் வெளிப்பாடாக ஓசையுடன் வருவது "முத்தம்" எனப்படும். "முத்து" என்னும் சொல்லுக்கு, அழகு, அன்பு, கண்ணீர் என்றும் பொருள் உண்டு.

சிப்பியில் இருந்து விடுபட்டு வருகின்ற, வெளிப்படுகின்ற மணிக்கு "முத்து" என்று பெயர். உடல் சூட்டை வெளியேற்றுவது. கறையில்லாத மழைநீர்த் துளியானது, ஆவணிச் சுவாதியில், சிப்பியின் வயிற்றில் புகுந்து, கட்டித் தன்மையுடன் முத்தாக வெளிவரும். நவமணிகளில் மற்ற மணிகளை அணிவதில் குற்றம் உண்டாதலும் உண்டு. ஆனால், முத்து எல்லோரும் அணியும் அற்புத நலம் வாய்ந்தது.

கறையற்ற தெய்வநலம் பொருந்திய திருஞானசம்பந்தப் பெருமானுக்கு, இறைவன் முத்துப் பந்தரும், முத்துச் சிவிகையும், முத்துக் குடையும் அளித்த அருள்நலத்தை எண்ணிப் பார்த்தால் முத்தின் நலமும், சிறப்பும் விளங்கும்.

பிற மணிகள் பட்டை தீட்டினால் அன்றி ஒளி விடா. முத்து இயல்பாகவே ஒளி விடும். பட்டை தீட்ட வேண்டுவது இல்லை. முத்து நவமணிகளுள் சிறந்தது. முத்தினை உடம்பில் அணிந்து கொள்வதால் நன்மைகள் பல உண்டு. 

பலவிதமான முத்துக்களால் ஆன மாலைகளை அணிந்து கொண்டு, முருகப் பெருமான், தனது தேவிமார்களோடும், தனது அடியார்களோடும் எழுந்தருளி வந்து அருள் புரியவேண்டும் என்று அருணகிரிநாதப் பெருமான், ஒரு திருப்புகழ்ப் பாடலில் வேண்டி உள்ளார். இதனால் முத்தின் சிறப்பு விளங்கும்.

    

"கழைமுத்து மாலை, புயல்முத்து மாலை,

     கரிமுத்து மாலை, ...... மலைமேவும்

கடிமுத்து மாலை, வளைமுத்து மாலை,

     கடல்முத்து மாலை, ...... அரவு ஈனும்


அழல்முத்து மாலை, இவைமுற்றும் மார்பின்

     அடைவு ஒத்து உலாவ, ...... அடியேன்முன்,

அடர் பச்சை மாவில், அருளில் பெணோடும்,

     அடிமைக் குழாமொடு ...... அருள்வாயே."

இதன் பதவுரை ---

கழை முத்து மாலை --- கரும்பு தரும் முத்தால் ஆன மாலை, புயல் முத்து மாலை --- மேகம் தரும் மழைத் துளிகளால் ஆன முத்து மாலை, கரி முத்து மாலை --- யானையின் தந்தத்தில் பிறந்த முத்தால் ஆன மாலை, மலை மேவும் கடிமுத்து மாலை --- மலையில் உள்ள மூங்கில்களில் கிடைக்கும் சிறப்பான முத்தினால் ஆன மாலை, வளை முத்து மாலை --- சங்கிலிருந்து கிடைக்கும் முத்தால் ஆன மாலை, கடல் முத்து மாலை --- கடலில் பெறப்படும் சிப்பியின் முத்தால் ஆன மாலை, அரவு ஈனும் அழல் முத்து மாலை --- பாம்பு தரும் ஒளியுள்ள முத்தால் ஆன மாலை, இவை முற்றும் மார்பின் அடைவு ஒத்து உலாவ --- ஆக, எல்லா மாலைகளும் திருமார்பிலே முறையாகப் புரண்டு அசைய, அடியேன் முன் ---  அடியேனின் எதிரே  அடர் பச்சை மாவில் --- வலிமை மிக்க பச்சை நிறபுடைய குதிரை போன்ற மயிலில் அருள் இல் பெணோடும் --- அருளையே குடியாகக் கொண்ட வள்ளியம்மையாருடனும், தேவயானை அம்மையாருடனும், அடிமைக் குழாமொடு அருள்வாயே --- அடியார் திருக் கூட்டத்துடனும் வந்து அருள் புரிவாயாக

முருகவேள் உமைக்கும் ஒரு முத்தாய் முளைத்த முத்துக்குமாரசுவாமி. ஆதலின், இத்தனை விதமான முத்து மாலைகளுடன், தனியாக வராமல், தனது தேவிமார்களுடனும், தன்னை வழிபடும் அடியார் திருக்கூட்டத்துடனும் எழுந்தருளி வரவேண்டுகின்றார் அருணகிரிநாதப் பெருமான். உமாதேவியார் திருவுள்ளம் மகிழ்ந்து முருகப் பெருமானின் திருமேனி முழுதும் முத்தங்களைப் பொழிகின்றார். அந்த அன்பு முத்தங்களால் அகம் மகிழ்ந்த திருத்தணிகைப் பெருமான், தனக்கும் முத்தம் (முத்தி) தந்து அருளவேண்டும் என்பதாக, திருத்தணிகை முருகன் பிள்ளைத் தமிழில் ஒரு பாடல் பின்வருமாறு அமைந்துள்ளது.


"கஞ்ச முகத்தில் முழுமுத்தம்,

கண்ணில் ப(ன்)னிரண்டு உயர் முத்தம்,

கன்னத்தினில் ஆறு இருமுத்தம்,

கனிவாயினில் மூவிரு முத்தம்,


அஞ்சல் கரத்து ஆறு இரு முத்தம்,

அகன்ற பார்பில் ஓர் முத்தம்,

அம்பொன் புயத்து ஆறு இரு முத்தம்,

அழகுஆர் உந்திக்கு ஒரு முத்தம்,


தஞ்சத்து அருள் சேவடி மலரில்

தகவு ஆர் இரண்டு முத்தம் எனத்

தழுவிக் கவுரி அளித்து மகிழ்

தனயா! எனை ஆள் இனியோனே!


செஞ்சல் குறமின் முத்து உகந்த

சேயே! முத்தம் தருகவே!

தெய்வத் தணிகை மலைவாழும்

தேவே! முத்தம் தருகவே."

எல்லாவிதமான முத்துக்களுக்கும் விலை உண்டு. ஆனால், முருகப் பெருமான் தந்து அருளுகின்ற முத்தத்திற்கு (முத்திக்கு) விலைமதிப்பு இல்லை. ஒப்பற்றதும் விலைமதிப்பு அற்றதும் ஆனதொரு முத்தத்தை முருகப் பெருமான் தனக்குத் தந்து அருளவேண்டும் என்பதாக, திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழில் அமைந்துள்ளது ஒரு பாடல்.


"கத்தும் தரங்கம் எடுத்து எறியக்

கடுஞ்சூல் உளைந்து, வலம்புரிகள்

கரையில் தவழ்ந்து வாலுகத்தில்

கான்ற மணிக்கு விலை உண்டு;


தத்தும் கரட விகடதட

தந்திப் பிறைக்கூன் மருப்பில்விளை

தரளம் தனக்கு விலை உண்டு;

தழைத்துக் கழுத்து வளைந்தமணிக்


கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக்

குளிர் முத்தினுக்கு விலை உண்டு;

கொண்டல் தரு நித்திலம் தனக்குக்

கூறும் தரம் உண்டு; உன் கனிவாய்


முத்தம் தனக்கு விலைஇல்லை,

முருகா! முத்தம் தருகவே!

முத்தம் சொரியும் கடல் அலைவாய்

முதல்வா! முத்தந் தருகவே."


முருகப் பெருமானைப் புகழ்ந்து போற்றிய அருணகிரிநாதர், முருகப் பெருமான் தனது மணிவாயினால் முத்தம் தந்து அருளவேண்டும் என்றும் ஒரு திருப்புகழ்ப் பாடலில் "மணிவாயின் முத்தி தரவேணும்" என்று வேண்டி உள்ளார். இதற்கு, உபதேசப் பொருளை குருவாக எழுந்தருளி அருள் புரிந்து, முத்திக்கு வழிகாட்டவேண்டும் என்று பொருள்.

ஆன்மாவுக்கு இயற்கையாய் அமைந்துள்ள பாசபந்தங்களில் இருந்து விடுபடுகின்ற நிலையை "முத்தி" நிலை என்று சாத்திரங்கள் கூறும். ஞானமுத்தமிழை, சங்கப் புலவர்கள் நாற்பத்தொன்பதின்மரோடு, பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில், தலைமைப் புலவனாய் இருந்து ஆய்ந்தவன் சிவபெருமான். முருகப் பெருமானும் உருத்திரசன்மராக இருந்து தமிழை விளக்கம் காண வைத்தவர். முருகப் பெருமானைத் தமிழால் திட்டினாலும் கூட வாழவைப்பார். "முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன்" என்றார் அருணகிரிநாதர். "வைதல்" என்னும் சொல் பாண்டி நாட்டில் இன்றும் வழங்கப்படுகிறது.

அந்த ஞானமுத்தமிழ் ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கும். தமிழ் மிக இனிமையான அருள்மொழி. "இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்" என்பது நிகண்டு. அந்த சீர்மிகு பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்த மணிவாசகர் இறையருளால் முத்தி நிலையைப் பெற்றார். அந்த மதுரையில் தான், தனது தொன்மைக் கோலத்தினை விடுத்து, சோமசுந்தரனாக சிவபெருமான் ஆட்சி புரிந்தான். அறுபத்துநான்கு திருவிளையாடலைப் புரிந்த சொக்கேசனுடைய அன்பு மீனாட்சி இன்றும் இன்றும் அருளாட்சி புரிகின்றாள். மீன் தனது பார்வையாலேயே முட்டையில் இருந்து குஞ்சுகளை விடுவிப்பது போல், அங்கயற்கண்ணி அம்மை தனது அருட்பார்வையால் ஆன்மாக்களை பந்தபாசங்களில் இருந்து விடுவித்து அருள் புரிகின்றாள். "பாண்டியனார் அருள்கின்ற முத்திப் பரிசு இதுவே" என்பது மணிவாசகம். எனவே,  பாண்டி நாடு முத்து உடைத்து எனப்பட்டது. 


No comments:

Post a Comment

மக்கட்செல்வம்

  மக்கட் செல்வம் ----- வாழ்வில் ஒருவன் பெற வேண்டிய செல்வங்கள் பலவற்றுள் மக்கள் செல்வமும் ஒன்று ஆகும். அதனை "நன்மக்கள் பேறு" என்ற...