46. விதிவழியே எல்லாம் ஆகும்

 

46.  தன் அளவே ஆகும் தனக்கு.

விதி வழியே எல்லாம் ஆகும்.

                        -----


"வங்காளம் ஏறுகினும் வாருகோல் ஒருகாசு

     மட்டன்றி அதிகம் ஆமோ?

வான்ஏறி உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி

     வண்ணப் பருந்து ஆகுமோ?


கங்கா சலந்தன்னில் மூழ்கினும் பேய்ச்சுரைக்

     காய்நல்ல சுரை ஆகுமோ?

கடலுக்குள் நாழியை அமுக்கியே மொண்டிடின்

     காணுமோ நால்நாழிதான்?


ஐங்காதம் ஓடினும் தன்பாவம் தன்னோடே

     அடையாமல் நீங்கிவிடுமோ?

ஆரிடம் சென்றாலும் வெகுதொலைவு சுற்றினும்

     அமைத்தபடி அன்றிவருமோ?


மங்காத செந்தமிழ் கொண்டுநக் கீரர்க்கு

     வந்ததுயர் தீர்த்தமுருகா

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

மங்காத செந்தமிழ் கொண்டு நக்கீரர்க்கு வந்த துயர் தீர்த்த முருகா! --- நக்கீரதேவர் பாடி அருளிய அழியாத செந்தமிழ்ப் பாடலாகிய திருமுருகாற்றுப்படையை ஏற்றுக்கொண்டு அவருக்கும், அவரோடு இருந்த மற்றவர்க்கும்  நேர இருந்த துயரத்தைத் தீர்த்து அருளிய முருகப் பெருமானே!, 

மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

வங்காளம் ஏறுகினும் வாருகோல் ஒரு காசு மட்டன்றி அதிகம் ஆமோ? --- ஐம்பத்தாறு தேசங்களில் ஒன்றான  வங்காள தேசத்திற்குச் சென்றாலும்  துடைப்பமானது ஒருகாசு அளவு அல்லாமல், பெரிய விலைக்குப் போகுமோ? (அங்கேயும் துடைப்பம் இருக்குமே. இல்லாத பொருள் அல்லவே)

வான் ஏறி உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி வண்ணப் பருந்து ஆகுமோ? --- வானத்திலே மிக உயர்ந்த இடத்திலே பறந்து சென்றாலும் ஊர்க்குருவி அழகிய பருந்தாகுமோ? 

கங்கா சலம் தன்னில் மூழ்கினும் பேய்ச் சுரைக்காய் நல்ல சுரை ஆகுமோ? --- கங்கை நீரிலே மூழ்கி இருந்தாலும் பேய்ச்சுரைக்காய் நல்ல சுரைக்காயாக ஆகுமோ?

கடலுக்குள் நாழியை அமுக்கியே மொண்டிடின் நால் நாழி தான் காணுமோ --- நாழி என்னும் அளவை உள்ள ஒரு பாத்திரத்தைக் கடலிலே முழுக அமுக்கி அமுக்கி மொண்டாலும் அது நான்கு நாழி நீரைக் கொள்ளுமோ?

ஐங்காதம் ஓடினும் தன் வினைகள் தன்னோடே அடையாமல் நீங்கி விடுமோ? --- ஐந்து காத தூரம் சென்றாலும் ஒருவன் செய்த வினைகள் அவனைச் சேராமல் நீங்கி விடுமோ?, 

ஆர் இடம் சென்றாலும் வெகு தொலைவு சுற்றிலும் அமைத்தபடி அன்றி வருமோ? --- யாரிடத்திலே சென்று சேர்ந்தாலும்,  நீண்ட தொலைவு சுற்றி அலைந்தாலும் நமக்கு விதிக்கப்பட்டது அல்லாமல் தான் எண்ணிய வேறு ஒன்று வருமோ?

விளக்கம் --- உலகில் உள்ள உயிர்கட்கு எப்போதும் இன்பதுன்பங்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கின்றன. சிலர் வாழ்வதும், சிலர் தாழ்வதும், சிலர் சுவர்க்கம் புகுவதும், சிலர் நரகம் புகுவதும், சிலர் உயர்குடி பிறப்பதும், சிலர் இழிந்தகுடிப் பிறப்பதும் ஏன்? உயிர்கள் தன் விருப்பப்படி செய்யுமாயின் எல்லா உயிர்களும் தனவந்தர் வீட்டில்தானே பிறக்கும்?  உயர்குடியில் தானே பிறக்கும்?

இறைவன் ஆணையின் வழி இவை நிகழ்கின்றன.  அங்ஙனமாயின், இறைவன் பட்சபாதம் உள்ளவன் ஆகின்றான்.  இறைவனுடைய அருட்குணத்திற்கு இது முரணாக அமையும் என்று தோன்றலாம். உயிர்களின் இருவினைக்கு ஏற்பவே, இறைவன் இவ்வாறு ஐந்தொழில்களையும் புரிகின்றான். அதனால் இறைவனுக்குப் பட்சபாதம் இல்லை என்று அறிக. நிமித்தகாரணன் ஆகிய இறைவனுக்கு, ஆணையே அன்றி வினையும் துணைக் காரணம் ஆகும்.

வினையின் வண்ணமே எல்லாம் நடக்கும் என்றால், இறைவன் எதற்கு? என்றும் தோன்றலாம்.  வினை சடப்பொருள் ஆதலின், தானே வந்து செய்தவனைப் பொருந்தாது.  ஆதலின், அந்தந்தக் காலத்தில், அவ்வவ் வினையை அறிந்து பொருத்துவதற்கு இறைவன் வேண்டும் என்று உணர்க.

இனி, உயிர்கள் சித்துப்பொருள் தானே? அவ் உயிர்களே அவ்வினைகளை எடுத்து நுகருமே? வினைகளை ஊட்டுவதற்கு இறைவன் எதற்கு? எனவும் தோன்றலாம். உயிர்கள் தாமே அறியா.  அறிவித்தால் மட்டுமே அறியும். ஆதலின், அறிந்து ஊட்டுவதற்கு இறைவன் இன்றியமையாதவன் ஆகின்றான்.

அப்படி ஆயின், வினையின் வழியே உயிர்கட்கு, இறைவன் சுகதுக்கங்களைத் தருகின்றான் என்றால், இறைவனுடைய சுதந்திரத்துக்கு இழுக்கு எய்துமே என்றால், எய்தாது. குடிகளுடைய குணம் குற்றங்கட்கு ஏற்ப அரசன் அருளும் தண்டமும் செய்வதனால், அரசனுடைய சுதந்திரத்திற்கு இழுக்கு இல்லை, அல்லவா?

வினை ஆதியா அநாதியா என்று ஐயம் நிகழ்வது இயல்பு. ஆதி ஆயின், இல்லது தோன்றாது என்ற சற்காரிய வாதம் பிழைபடும்.  ஆகவே, வினை அநாதியே உண்டு என்க. அது எதுபோல் எனின், நெல்லிற்கு உமியும், செம்பிற்குக் களிம்பும்போல், உயிர்கட்கு வினை தொன்மை என அறிக.

"நெல்லிற்கு உமியும், நிகழ்செம்பினில் களிம்பும்,

சொல்லில் புதிதுஅன்று, தொன்மையே, ---  வல்லி

மலகன்மம் அன்று உளவாம், வள்ளலால் பொன்வாள்

அலர்சோகம் செய்கமலத்து ஆம்."

வினையானது, ஈட்டப்படுங்கால் மந்திர முதலிய அத்துவாக்களிடமாக, மனவாக்குக் காயங்கள் என்ற மூன்று காரணங்களால் ஈட்டப்பட்டுத் தூல கன்மமாய் ஆகாமியம் எனப் பெயர் பெறும். பின்னர், பக்குவம் ஆகும் வரை புத்தி தத்துவத்தினை இடமாக மாயையில் கிடந்து, சாதி, ஆயு, போகம் என்னும் மூன்றற்கும் ஏதுவாகி, முறையே சனகம், தாரகம், போக்கியம் என்ற மூவகைத்தாய், அபூர்வம் சஞ்சிதம், புண்ணிய பாவம் என்னும் பரியாயப் பெயர் பெறும்.

    வினை பக்குவமாதல் என்பது அவ்வப் பயன்களைத் தோற்றுவித்தற்கு உரிய துணைக் கருவிகள் எல்லாவற்றோடும் கூடுதல் ஆகும். அது, பின்னர்ப் பயன்படுங்கால், ஆதிதைவிகம், ஆதிஆண்நிகம், ஆதிபௌதிகம் என்ற முத்திறத்தால் பலவகைப்பட்டு, பிராரத்தம் எனப் பெயர் பெறும். எனவே ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம் என வினை மூவுருவம் கொள்ளும்.


ஆகாமியம் - செய்யப்படுவது.

சஞ்சிதம் - பக்குவப் படாமல் இருப்பாக இருப்பது.

பிராரத்தம் - அநுபவிப்பது.


    இனி, பிராரத்தம்  ஆதிதைவிகம், ஆதிஆன்மிகம், ஆதிபௌதிகம் என்ற மூன்று வழியாக வரும் என்றோமே, அதன் விவரம் வருமாறு....

(1) ஆதி தைவிகம் --- தெய்வத்தால் வரும் இன்பதுன்பங்கள். அவை ---  கருவில் சேர்தல், பிறக்கும்போது எய்தும் இடர், நரை திரை மூப்பு முதலியன, நரகத்தில் ஆழ்தல், உலகை அரசு புரிதல் முதலிய இன்ப துன்பங்களாம்.

"கருவினில்துயர், செனிக்கும் காலைத் துயர்,மெய்

திரைநரைமூப்பில் திளைத்து, செத்து --- நரகத்தில்

ஆழும்துயர், புவியைஆள் இன்பம் ஆதிஎல்லாம்

ஊழ்உதவு தைவிகம்என்று ஓர்."


(2) ஆதி ஆன்மிகம் --- தன்னாலும், பிறராலும் வரும் இன்ப துன்பங்களாம். அவை --- மனத்துயர், பயம், சந்தேகம், கோபம்,  மனைவி மக்கள் கள்வர், பகைவர், நண்பர், விலங்கு, பேய், பாம்பு, தேள், எறும்பு, கரையான், அட்டை, நண்டு, முதலை, மீன் முதலியவைகளால் வரும் துன்ப இன்பங்களாம்.

"தன்னால் பிறரால் தனக்குவரும் தீங்குநலம்

இன்னா விலங்குஅலகை தேள்எறும்பு – செல்முதல்நீர்

அட்டை அலவன் முதலை மீன் அரவம் ஆதியின்ஆம்

கட்டமும் இங்கு ஆன்மிகமே காண்."


(3) ஆதிபௌதிகம் ---  மண் முதலிய பூதங்களால் வரும் இன்ப துன்பங்கள். அவை ---  குளிர்ச்சி, மழை, வெயில், கடும்காற்று, இருள், மின்னல், இடி,  தென்றல் முதலியன.

"பனியால் இடியால் படர்வாடை யினாலும்

துணிதென்றலினாம் சுகமும் --- தனைஅனைய

நீரினாம், இன்பு,இன்னலும் நெருப்பின் ஆம்துயர்இன்பு

ஓரில் பவுதிகம் ஆகும்."

இன்னும் உலகம், வைதிகம், அத்தியான்மிகம், அதிமார்க்கம், மாந்திரம் என வினை ஐவகைப்படும்.

1. உலக வினை ---  கிணறு, குளம், தண்ணீர்ப்பந்தல் முதலியன செய்தலால் உண்டாவதாய், நிவிர்த்தி கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

2. வைதிக வினை --- வேதத்துள் விதித்த அக்கினிட்டோமம் முதலிய வேள்வி முதலியன செய்வதால் உண்டாவதாய், பிரதிட்டா கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

3. அத்தியான்மிக வினை ---  வேதநெறியால் செய்யும் பூசனை துறவு முதலியவற்றால் உம்டாவதாய், வித்தியாகலையில் அடங்கிய புவன போகங்களைத் தருவது.

4. அதிமார்க்க வினை ---  இயமம் நியம் முதலிய யோகப் பயிற்சியால் உண்டாவதாய், சாந்திகலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

5. மாந்திர வினை ---  சுத்த மந்திரங்களைக் கணித்தல் முதலிய ஞானப்பயிறிச் விசேடங்களால் உண்டாவதாய், சாந்தியாதீத கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

இதுகாறும் ஆராயந்தவற்றால் அறியப்படுவது, பிறவிக்கு வினை காரணம். அவற்றை உயிரானது அனுபவித்துக் கழிக்க வேண்டும். மாற்று இல்லை. அவ்வினை அற்றால் அன்றி பிறவி அறாது எனத் தெளிக.


"செங்காவி மலர்த்தடம்சூழ் தண்டலைநீள்

     நெறியே! நின் செயல் உண்டு ஆகில்

எங்கு ஆகில் என்ன? அவர் எண்ணியது எல்-

     லாம் முடியும்!, இல்லை ஆகில்,

பொங்கு ஆழி சூழ் உலகில் உள்ளங்கால்

     வெள் எலும்பாய்ப் போக ஓடி

ஐங்காதம் போனாலும் தன்பாவம்

     தன் உடனே ஆகும் தானே." --- தண்டலையார் சதகம்.

"பார்க்குள் அறிவு இருந்தாலும் படித்தாலும்

     கேட்டாலும், பணிந்து வேத

மார்க்கமுடன் நடந்தாலும், சிறியவர்க்குப்

     பெரியவர்தம் மகிமை உண்டோ?

ஆர்க்கும் அரும் கதி உதவும் தண்டலையா

     ரே! சொன்னேன்! ஆகாயத்தில்

ஊர்க்குருவி தான் உயரப் பறந்தாலும்

     பருந்து ஆகாது உண்மை தானே." --- தண்டலையார் சதகம்.

"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்

நாழி முகவாது நால்நாழி, - தோழி!

நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம்

விதியின் பயனே பயன்." ---  மூதுரை

"எழுதியவாறே காண் இரங்குமட நெஞ்சே!

கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப்போய்க்

கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்,

முற்பவத்தில் செய்த வினை." ---  மூதுரை.

"வகுத்தான் வகுத்த வகை அல்லால், கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது." --- திருக்குறள்.


No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...