துறவுநெறி - அருள்நெறி
-----
மனிதன் பெற வேண்டிய இணையற்ற செல்வம், அருளுடைமை ஆகும். அது மகவு எனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்து ஒழுகும் அருளொழுக்கமாகும். அருள் வாழ்க்கை என்பது மிக எளிமை போலத் தோன்றினாலும், அருள் உடையராக வாழ்தல் அரிதினும் அரிது.
மனித இனத்திற்கு இருக்க வேண்டிய இன்றியமையாத பண்பும், எளிய சாதனமுமாகிய அன்பு நெறியிலேயே இன்னமும் மனிதன் தட்டுத் தடுமாறிக் கொண்டே இருக்கிறான். தனக்குப் பயன்படுவோருக்குத் தானும் மீண்டும் அவ்வண்ணமே பயன்படவேண்டும் என்ற உணர்வின்றி, அடித்தும், கெடுத்தும், எடுத்தும், வஞ்சித்தும் விலங்கினைப் போலத் தின்று வாழ்ந்து கொண்டு இருக்கிறான்.
அன்பு என்பது தொடர்பு உடையார் மாட்டு உண்டாவது. அருள் என்பது தன்னோடு தொடர்பு இல்லாத பிற உயிர்கள் மாட்டும் உண்டாவது என்று பெரியோர் வகுத்துக் காட்டி வாழ்ந்தனர். அன்பிலும் முதிர்ந்தது அருள். அன்பு தாய். அது பெற்றெடுத்த குழந்தையே அருள் என்பார் திருவள்ளுவ நாயனார். "அருள் என்னும் அன்பு ஈன் குழவி" என்னும் திருக்குறளைக் காண்க.
இந்த உலகில் யாரிடத்திலும், எந்த உயிரினிடத்திலும் அன்புகாட்டி வாழ்வித்து வாழும் உணர்ச்சியே அருள் உணர்ச்சி. அருள் உணர்ச்சி உள்ள இடத்தில் தன்னலம் இல்லை. அருளுணர்ச்சி உடையாருக்கு இன்பம் என்பது, பிறர் இன்புற்று வாழ்வதைக் காண்பதே ஆகும். "தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுதல்" அருள் உடையார் வாழ்க்கை.
இத்தகு அருள் உணர்வு திடீரென ஒருநாளில் தோன்றி விடுவதில்லை. அதற்கு இடையறாத பயிற்சி தேவை. அருள் உணர்வுக்கு இடையூறாக இருப்பது மனிதனுடைய புலன் உணர்வு. எதையாவது ஒன்றைத் துய்த்து மகிழ வேண்டும் என்ற அவா, புலன்களினுடைய இயற்கை. அந்த இயற்கையுணர்வு, முதலில் பெரும்பாலும் தான் துய்த்து மகிழ வேண்டும் என்றே தொடங்கும். அந்த உணர்வைத் தடுத்து, மடை மாற்றிப் பிறரைத் துய்ப்பிக்கச் செய்தல் மூலம் தான் துய்த்ததாகவே கருதி மகிழ்கின்ற உணர்வைத் தோற்றுவித்து வளர்த்துக் கொள்ளவேண்டும்.
இந்த நிலையில்தான் தொண்டு உணர்வு கால் கொள்ளுகின்றது. தொண்டு உணர்வு கால் கொள்ளும்போதுதான் துறவு நிலை முகிழ்க்கின்றது. துறவு, மிகமிக உயர்ந்த இயல்புடையது. துறவு நெறி வெளிப்படுவது தோற்றத்தில் அல்ல. உள் உணர்விலேயே துறவு முகிழ்க்க வேண்டும். என்னுடையது என்று யாதொன்றும் வைத்துக் கொள்ளாதவரும், இது இல்லாமல் எதவும் முடியாது என்னும் வாழ்க்கைப் போக்கு இல்லாதவருமே உண்மைத் துறவியாக வாழ முடியும்.
இத்தகு துறவுநெறி இந்த வையகத்தில் எங்கிருக்கிறது? என்று கேட்கக் கூடிய நிலை இன்று இருக்கின்றது. எண்ணில்லாத செவ்வத்திற்கு உரியவர்களாக நம்மிடையே காவி உடுத்தும் தாழ் சடை வைத்தும் சுகபோக வாழ்க்கையை வாழுகின்ற துறவிகள் உண்டு. இவர்களை சாதாரண மக்கள் நெருங்க முடியாது. மற்றொரு வகையினர், வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியின்றிப் பிச்சை எடுக்கும் திருக்கோலமாகத் துறவுக் கோலம் பூண்டு நடமாடுகின்றனர். அவர்களிடத்துத் தோற்றத்திலேயே துறவு காணப்படுகிறது. முதல் வகையினரின் வாழ்க்கை முறையில் துறவுக்கான வாடையும் இல்லை. இருந்திருந்தால், அப்படிப்பட்ட துறவிகளின் கையிலே பட்ட பொருளானது, இந்த நாட்டு மக்களது வாழ்க்கைக்கு உணவாக,கல்வியாக, மருந்தாகப் பயன்பட்டிருக்கும். வீணான ஆடம்பரங்களுக்கே அப்பொருள் பயன்படாது. இழக்க வேண்டிய ‘நான்’ என்னும் அகப்பற்று ஆகிய அகங்காரமும்,‘எனது’ என்னும் புறப்பற்று ஆகிய மமகாரமும் ஆகிய இரண்டு பற்றுக்களும் பற்றறத் துறக்கப்படவில்லை. இப்படிப்பட்டவர்களைப் பார்த்துத் தான் கூடாவொழுக்கம் என்னும் ஓர் அதிகாரத்தை வைத்து அருளினார் திருவள்ளுவ நாயனார்.
"வான் உயர் தோற்றம் எவன் செய்யும், தன்நெஞ்சம்
தான் அறி குற்றப் படின்?" --- திருக்குறள்.
"தான் குற்றம் என்று அறிந்த ஒன்றிலே மனம் பதியுமானால், ஒருவனுக்கு வானளாவ உயர்ந்த தவ வேடமானது என்ன பயனைத் தரும்?" என்று வினவுகின்றார் நாயனார். கம்பீரமாய் விளங்கும் தோற்றத்தை "வான் உயர் தோற்றம்" என்பது இலக்கண வழக்கு. அறியாமல் செய்த குற்றத்திற்குக் கழுவாய் உண்டு. அறிந்தே செய்த குற்றத்திற்குக் கழுவாய் இல்லை. எனவே, செய்த குற்றம் நிற்கும். தவவேடத்தால் மற்றவரை மருட்டியதே அல்லாமல் வேறு பயன் இல்லை.
"வலி இல் நிலைமையால் வல்லுருவம்,பெற்றம்
புலியின்தோல் போர்த்து மேய்ந்து அற்று". --- திருக்குறள்.
"மனத்தைத் தன்வயப்படுத்தி அடக்கும் வல்லமை இல்லாத இயல்பினை உடையவன், மனத்தைத் தம்வயப்படுத்தி அடக்கின வல்லமை உடையவரது தவவேடத்தைத் தான் மேற்கொண்டு, தான் தனது மனம் போன வழியே போதல், பசுவானது, காவல்காரர் விரட்டாது இருக்கும்படி, புலியின் தோலைப் போர்த்துக் கொண்டு, பயிரை மேய்ந்தது போலும்" என்கின்றார் நாயனார். புலியானது பசித்தாலும் புல்லைத் தின்னாது என்னும் நம்பிக்கையாலும், நெருங்கிச் சென்று துரத்தினால் கொன்றுவிடும் என்னும் பயத்தாலும், புலியின் தோலைப் போர்த்துப் பயிரை மேயும் பசுவைக் காவலர் துரத்தமாட்டார். பசுவானது வல்லுவருவம் கொண்டதன் பயன் அதுவே.
தவத்தினர், காம இன்பத்தை அனுபவிக்க மாட்டார் என்னும் நம்பிக்கையாலும், நெருங்கிச் சென்று விசாரித்தால், அவர் இடுகின்ற சாபத்தை அனுபவிக்க நேருமே என்னும் பயத்தாலும், உலகவர் சந்தேகம் கொள்ளமாட்டார் என்னும் காரணத்தாலும், தனக்கு உரிமையாக உள்ள மனைவியையும் துறந்து, மனத்தைத் தன்வயப்படுத்தும் வல்லமை இல்லாது, பிறர் சந்தேகம் கொள்ளாதபடி, தவவேடத்தைத் தரித்து,கூடாவொழுக்கத்தால், தன்மனம் சென்ற வழியே சென்று, தவவேடத்தில் மறைந்து நின்று,பிற பெண்களை விரும்புதல், தவத்திற்குக் கூடாவொழுக்கம் ஆகியது. கௌதம முனிவரின் பன்னியை இச்சித்த இந்திரன், கௌதம முனிவர் போன்று வேடமிட்டு வந்தது இங்கு கருதத் தக்கது.
"நெஞ்சில் துறவார், துறர்நார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்" --- திருக்குறள்.
"மனத்தளவில் பற்றுக்களைத் துறவாது இருந்து, துறந்தவர் போல், தானம் செய்வாரை வஞ்சித்து வாழ்கின்றவரைப் போல,கொடுமையை உடையோர் உலகத்தில் ஒருவரும் இல்லை" என்கின்றார் நாயனார். நாம் இந்த தவசிக்கு ஏதாவது கொடுப்போமானால், மறுமையில் தேவலோகத்தை அடைதல் கூடும் என்று எண்ணிக் கொடுப்பவர் இல்லறத்தார்கள். அவர் பொருளைப் பெற்றுக் கொண்டு, அவரைத் தாழ்ந்த நிலையினர் ஆக்குதல், தமக்கு ஆவன செய்யாதார்க்கு,ஆகாதனவற்றைச் செய்தல். இப்படி, பொய்யான ஒழுக்கத்தால் பிறரை வஞ்சித்தவர்கள் மிகவும் கொடியவர்கள். அவர்கள் மறுபிறப்பில் இழிவான பிறப்பை அடைவார்கள்.
துறவு என்பது எங்கோ இருக்க வேண்டியவர்களுக்கு இருக்கின்ற இயல்பல்ல. சராசரி ஒவ்வொரு மனிதனுக்கும் கூடத் துறவு உணர்வு தேவை. காதல் வாழ்க்கைக்கும் கூட ஓரளவு துறவு தேவை. காதலன் காதலி மகிழ்வுக்காகச் சிலவற்றைத் துறக்கிறான். காதலி தாயான பின்பு தனது குழந்தைக்காகச் சிலவற்றைத் துறக்கிறாள். இங்ஙனம் வேண்டிய போது வேண்டியபடியே துறவு மனப்பான்மை தலைகாட்டாத குடும்ப வாழ்க்கை இன்பம் தராது. ஊரொடு தழுவி வாழும் இயல்பு இல்லாத குடும்ப வாழ்க்கை இன்பம் பெருக்காது. துன்பமே சூழும்.
துறத்தல் --- கைவிடுதல், பற்று அறுத்தல்.
துறவு --- விடுதல், இரகசியம், வாய்ப்பான நிலை, வெளியிடம், சந்நியாசம்.
நியாசம் --- வைத்தல்.
ஆசை, பாசம், பற்று என்பவற்றிலிருந்து நீங்கிய நிலை, உலக இன்பங்களை விட்டு ஆன்மீக ஈடேற்றத்தை நாடும் நிலை, சந்நியாசம் ஆகும். மௌனம் வாக்கின் தண்டம். பலனில் பற்றுக்கொண்டு செயல்களைச் செய்யாமல்இருப்பது, உடலின் தண்டம். பிராணாயாமம் முதலியன செய்வது, மனதின் தண்டம். இந்த மூன்று தண்டங்களைக் (திரிதண்டி) கைக் கொள்ளாத துறவி, வெறும் மூங்கில் தடியைச் சுமப்பதால் மட்டும் சந்நியாசியாக முடியாது.
துறவு நிலை எது? துறவி என்பவர் யார்? என்பன போன்ற வினாக்கள் பலகாலமாகவே கேட்கப்பட்டு வருகின்றன. இன்றும் கேட்கப் பெறுபவை. தமிழகம், தனக்கென ஒரு சிறந்த சமய நெறியைப் பெற்று விளங்கிய புகழுடையது. சேக்கிழார் தமிழகத்துச் சமய நெறியினை "அசைவு இல் செழுந்தமிழ் வழக்கு’ என்றார். இந்தச் செழுந்தமிழ் வழக்கு, அயல் வழக்கை வென்று விளங்க வேண்டும் என்ற திருக்குறிப்பு திருஞானசம்பந்தர் வரலாற்றில் நமக்குக் கிடைக்கிறது. இங்குச் சேக்கிழார் குறிப்பிடும் அயல் வழக்கு எது? சமண் சமயமே அயல் வழக்கு. சமண சமயம் கடுமையான துறவினை வலியுறுத்தவது. அந்தச் சமணத்தை எதிர்த்தே திருஞானசம்பந்தர் கிளர்ச்சி செய்தார்.
மணிவாசகர் பெளத்தத்தைச் சந்தித்து இருக்கிறார்; பெளத்தத்தை வழக்காடி வென்றிருக்கிறார். அந்த வழக்கில் “உங்கள் இறைவன் தனது திருமேனியில் ஒருபால் பெண்ணை வைத்து மகிழ்ந்து கூத்தாடுகின்றானே, அவன் ஒரு பெண் பித்தன் தானே" என்று ஏளனமாகப் பேசினார்கள் பௌத்தர்கள்.
"தென்பால் உகந்து ஆடும் தில்லைச் சிற்றம்பலவன்
பெண்பால் உகந்தான், பெரும்பித்தன் காண், ஏடீ!"
என்று எழுந்த கேலிப் பேச்சுக்கு விடையாக,
"பெண்பால் உகந்திலனேல் பேதாய்! இருநிலத்தோர்
விண்பால் யோகு எய்தி வீடுவர்காண்"
என்று பாடி, "அறிவிலியே! எமது இறைவன் தனது திருமேனியில் பெண்ணின் பகுதியை விரும்பாவிடில், பெரிய நிலவுலகத்தார் யாவரும், வீடு அடைவதற்குரிய யோகம் ஒன்றிலேயே நின்று, அதனை முற்றுவிக்க மாட்டாமல் அழிவர்" என்று விடை தந்தருளினார்.
"மங்கையோடு இருந்தே யோகு செய்வான்", பெண்ணோடு கூடியிருந்தே யோகநிலையில் உள்ளவன் சிவபரம்பொருள் என்று திருவிசைப்பா கூறும்.
அப்பரடிகள் திருவையாற்றில் திருக் கயிலையைக் காட்சியை இறைவன் காட்டக் கண்டு ஊனுருக, உளமுருக நின்று பாடுகிறார். “காதல் மடப்பிடியோடும் களிறு வருவன” காண்கிறார். இங்கே இப்போதைய துறவு நிலை கூறப்படவில்லை. சுந்தரமூர்த்தி சுவாமிகள், பரவையாரை மணந்து,பெற்ற சிற்றின்பமே பேரின்பமாக வாழ்ந்தார். இவர்கள் நமது நாயன்மார்கள். நமக்கு நல்ல வழிகாட்டும் தலைவர்கள். இதிலிருந்து தெளிவாகத் தெரிவது என்னவென்றால்,புற வாழ்க்கைத் துறவை நம்முடைய சமய ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதே.
வாழ்க்கை என்பது, உடல் வாழ்க்கை, உயிர் வாழ்க்கை, உணர்வு வாழ்க்கை என்றெல்லாம் பகுத்துக் கண்டவர் நமது முன்னோர். சிலர், உடல் வாழ்க்கைக்கு உரியதையே உயிர், உணர்வு வாழ்க்கைக்கும் உரியதாக்கி விடுவர். அது விலங்கியல் வாழ்க்கை. "திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில் இதனை விரிவாகவே காட்டி உள்ளார் பட்டினத்து அடிகள். இந்த வாழ்க்கைப் படிகள் அனைத்தையும் அடைந்து அனுபவித்து அதனதன் எல்லையிலே நின்று உணர்வில் சிறந்து வாழ்தல் சிறப்புடைய வாழ்க்கை. அதுவே சீலம் நிறைந்த வாழ்க்கை. அறவாழ்வு என்று சொன்னாலே, அது இல்லறத்தைத் தான் குறிக்கும். "அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை" என்றார் திருவள்ளுவ நாயனார். துறவறம் அறம் ஆகாதா? என்னும் வினா எழுமாயின், "அதுவும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று" என்று விடை பகர்ந்தார் திருவள்ளுவ நாயனார். தவ உணர்வுக்குப் புறம்பான கூடாவொழுக்கம் இருக்குமாயின், அது பிறரால் பழிக்கப்படும். எனவே, பிறரால் பழிப்புக்கு இடமாகாமல் இருந்தால் துறவறமும் நல்லதுதான் என்றார்.
திருஞானசம்பந்தர், எளிமையாகத் துறவு நிலையை அடைவதற்கு அற்புதமான ஒரு வழியைக் காட்டினார். “துறவி ஆகுமே” என்று பாடுகின்றார். நீ துறவி ஆவாய் என்கின்றார். எப்பொழுது? உள்ளதைத் துறப்பதினால் மட்டும் துறவியாகி விடுவதில்லை. துறக்கக் கூடாத ஒன்றைத் துறக்காமல் இருப்பதன் மூலமே துறவி ஆகின்றாய் என்கின்றார். துறவு நிலையை மேற்கொண்டவர்கள் துறந்த பொருட்களின் பட்டியல் பெருகலாம். "உடை துறந்தேன்" என்பார் ஒருவர். அதில் அவருக்கென்ன இழப்பு? உடலுக்கு அல்லவா இழப்பு? “உணவைத் துறந்தேன்!” என்பார் ஒருவர். அதில் அவருக்கென்ன இழப்பு? உடலுக்கு அல்லவா இழப்பு? துறந்த பொருள்களின் பட்டியல் பெருகுவதால் பயனில்லை. எல்லாரும் எல்லாவற்றையும் வைத்து கொண்டா வாழ்கிறார்கள்? மகிழ்கிறார்கள்? வண்டி வாகனம் ஏதும் இல்லாமல், உலகத்தில் ஆயிரம் ஆயிரம் பேர் கால்களால் நடக்கிறார்கள். அவர்கள் எல்லாம் வண்டிகளைத் துறந்தவர்களாகத் தம்மை அறிவித்தால் பொருந்துமா? ஒரு வேளை உண்பது துறவு என்றால், ஒருவேளை உணவு கூடக் கிடைக்காமல் வெறும் வயிற்றோடு வாடுபவர்கள் பலர் இன்னமும் இருக்கின்றனர். இவர்களைத் துறவிகள் என்று சொல்லாலம் அல்லவா?எனவே, புறத்திலே துறந்த பொருட்களைக் கொண்டு துறவு நிலையை நிர்ணயிக்க முடியாது. உண்மையில் ஒருவன் துறக்க வேண்டியது, அவன் கொண்டுள்ள "நான்" என்னும் அகப்பற்று ஆகிய அகங்காரத்தையும், "எனது" என்னும் புறப்பற்று ஆகிய மமகாரத்தையுமே ஆகும். இத்தகு நிலைக்கே துறவுக் கோலம் நிச்சயிக்கப்பட்டது. துறக்க வேண்டியவற்றைத் துறக்காமல், வெறும் துறவுக் கோலத்தை மட்டும் பூண்டு இருப்பதால் பயனில்லை. மாறாக சமூகக் கேடு தான் விளையும். "வேடநெறி நில்லாதார் வேடம் பூண்டு என்ன பயன்?" என்கின்றார் திருமூல நாயனார்.
துறக்க வேண்டியவை அகங்கார, மமகாரங்கள் ஆகிய அகப்புறப் பற்றுக்கள். துறக்கக் கூடாத ஒன்றும் உள்ளது. அது இறைப்பற்று ஆகும். இறைப்பற்றை இறுகப் பற்றிக் கொண்டால், அகப்புறப் பற்றுக்கள் நாளடைவில் இல்லாமல் போய்விடும்.
திருஞானசம்பந்தப் பெருமான் உண்மைத் துறவு நிலையைத் தமது பாடலில் விளக்குகின்றார். நீ ஒன்றைத் துறவாது இருந்தால் துறவி ஆவாய் என்கிறார். பெருமான் திருவாக்கினைக் கொண்டு பார்த்தால் மனிதன் துறக்கக் கூடாததும் ஒன்று உண்டு எனத் தெரிகின்றது. அதுதான் இறைவன் திருநாமம். இறைவன் திருநாமத்தை நெஞ்சு துறக்கக்கூடாது,மறக்கக்கூடாது. இறைவன் திருநாமத்தை வாயாரக் கூறி வழிபடத் தவறுதல் கூடாது. அதுவே துறவுக்கு இலக்கணம் என்பதைத் "துறவி ஆகுமே" என்று சொல்லி நம்மை நெறிப்படுத்துகின்றார்.
பெளத்தத் துறவிகள் கடவுளை மறந்தனர். சமணத் துறவிகள் நோன்பே கடவுள் எனக் கொண்டனர். இன்றையத் துறவிகளில் சிலர், கடவுளை மறந்து சாதி குலம் பார்க்கின்றனர். உருத்திராக்க மாலையை அதிகமாக அணிபவர்கள் சிலர், கடவுளை மறந்து காசுகளை அதிகமாக எண்ணுகின்றனர். காணிகளே வேண்டும் என்று எண்ணி. கோயிலைப் பாழடித்து விட்டுக் காணிகளை வைத்துக் களிப்புறுகின்றனர். இப்படிப்பட்ட ‘துறவிகள்’ நம்முடைய தலைமுறையில் இல்லையா? என்ன? இந்த வினாவிற்கு விடை வெளிப்படையாகக் கிடைக்காது. விசாரித்து அறிந்தால் தெரிய வரும்.
உடையும் கலன்களும் துறவுக் கோலந்தான்! வாழும் வகை துறவு போலத்தான் தெரிகிறது! கனியின் தோல் பழுத்து பின் உட்புறம் பழுப்பதில்லை. அகத்தில் கனிந்த கனிவே தோலையும் பற்றுகிறது. சுவை மிக்க கனிவு புறத்திலிருந்து அகத்தே செல்வதல்ல. புறம் வேண்டுமானால் வாயிலாக இருக்கலாம். முதற்கனிவு கனியின் உட்பகுதியே ஆகும். கனியின் உட்புறம் கனியாமல் தோல் மட்டும் கனிநிறம் காட்டினால் அது கனியல்ல, அது வெம்பல்! துறவிலும் உள்ளம் பழுக்கவேண்டும். "பழுத்த மனத்து அடியர்" என்பார் மணிவாசகப் பெருமான். உடல் பழுத்திருக்கிறது; உடை பழுத்துக் காட்டுகிறது; ஆனாலும் உள்ளம் பழுக்கவில்லை! இத்தகைய துறவுக் கோலத்தினர்,திருஞானசம்பந்தர் கூறிய துறக்கக் கூடாத ஒன்றைத் துறந்துவிட்டனர். திருஞானசம்பந்தர் கூறுவதைப்போல இறைவன் திருநாமத்தை நினைப்பற நினைந்து ஏத்துங்கள்! அந்தச் சீலமே துறவு நிலைக்கு உயர்த்தும். பிறவியை அறுக்கத் துணை புரியும்.
பிறவியை அறுக்க நினைப்பவர்கள். துறவு நிலைக்கு உயர வேண்டும். அருணகிரிநாதப் பெருமான் கூறியது போல, "காவி உடுத்தும், தாழ்சடை வைத்தும், காவி உடுத்தும்,தாழ்சடை வைத்தும், காடுகள் புக்கும் தடுமாறி;காய்கனி துய்த்தும்,காயம் ஒறுத்தும்,காசினி முற்றும் திரிவது" துறவு அல்ல.இறைவன் செம்மேனி எம்மான் ஆதலினாலும், செம்பொருளைக் குறிப்பதற்குரிய முயற்சியை உடையார் என்ற குறிப்பைக் காட்டுதல் பொருட்டும் துறவிகள் கல்லாடையைப் புனைவது மரபு.
நீண்ட சடையை வைத்துக் கொள்ளுதலும் துறவிகட்கு ஒரு அங்கம். அன்றி முண்டிதம் செய்து கொள்வதும் உண்டு. காம குரோதம் முதலிய குற்றங்களைக் கடிந்து விட்டவர்க்கு தலைமயிரை நீட்டினாலும் குறைத்தாலும் ஒன்று தான். நல்லொழுக்கம் உடையார்க்கு சடை இன்றியமையாதது அல்ல.
"மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம்
பழித்தது ஒழித்து விடின்". --- திருக்குறள்.
நாட்டை விட்டு காடு போய், மழைக் காலத்திலும், பனிக் காலத்திலும், தண்ணீரில் நின்றும், வெய்யில் காலத்தில் நெருப்பில் நின்றும் தவம் இயற்றுதல். உள்ளன்பு இல்லையானால் இம் முயற்சி பெரும்பலனை அளிக்காது.
"காடே திரிந்து என்ன,காற்றே புசித்து என்ன,கந்தை சுற்றி
ஓடே எடுத்து என்ன,உள்ளன்பு இலாதவர் ஓங்கு விண்ணோர்
நாடே,இடைமருது ஈசர்க்கு மெய்யன்பர்,நாரியர் பால்
வீடே இருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே!" --- பட்டினத்தார்.
அன்பு இல்லாத வைராக்கியம் பயன்படாது, உயிர் இல்லாத உடம்பு போல் ஆகும். அன்பு உடையார் கல்லை விட்டு எறிந்தாலும் இறைவன் ஏற்றுக் கொண்டான். அன்பு இல்லாதவர் மலர் விட்டு எறியினும் இறைவன் ஏற்றுக் கொள்ளமாட்டான். இதற்குச் சான்று சாக்கிய நாயனாரும் மன்மதனும். இறைவன் திருவடியில் தலையாய அன்பு கொண்டு, திருவருள் தாகம் கொண்டு நிற்றலே அவன் அடியை அடைவதற்கு எளிய வழியாகும்.
இதற்கு மாற்று என்ன?என்றால்"சீவன் ஒடுக்கம்,பூத ஒடுக்கம்தேற உதிக்கும் பரஞானதீப விளக்கம் காண,எனக்கு உன் சீதள பத்மம் தருவாயே" என்று முருகப் பெருமான் திருவருளை வேண்டுகின்றார் அருணகிரிநாதப் பெருமான்.
சீவன் ஒடுக்கம் --- உயிரைப் பொருள் என அறிவது பசுஞானம். அது கழலுதல் வேண்டும். அந்தக்கரண ஒடுக்கம் இதுவே ஆகும். விடயங்களைப் பற்றி நிச்சயித்து அபிமானித்து சிந்தித்து நிற்கும் மனம் புத்தி அகங்காரம் சித்தம் என்னும் அந்தக்கரண வாசனை நீங்குதல் ஆகும்.
பூத ஒடுக்கம் ---பாசத்தைப் பற்றி அறியும் ஞானம் பாசஞானம்ஆகும். அதுவும் நீங்குதல் வேண்டும். விடயங்களை அபகரிக்கும் கண் முதலிய பஞ்சேந்திரியங்களுக்கும், அபகரித்த போது வசன கமன தான விசர்க்க ஆனந்த விடயீகரிக்கும் வாக்கு ஆதி கன்மேந்திரியங்களுக்கும், ஆதாரமாய் நிற்கும் பூதங்களின் நீக்கம்.
பரஞானம் ---பரஞானம், பதிஞானம், அநுபவஞானம், சிவஞானம் எல்லாம் ஒன்றே. இதுவே திருவருள் ஞானம். இதுவே பரகதிக்கு சிறந்த சாதனம். இந்தப் பரஞான தீப விளக்கத்தைத் திருவருளால் பெறுவதே சிறந்த சாதனம் ஆகும்.
திருத்தலங்கள் தோறும் சென்று இறைவரை வழிபட்டு, வாழ்வியல் நெறிகளை மக்களுக்கு உணர்த்தி, திருப்பதிகங்களை இன்னிசையோடு பாடி, நன்னெறிப்படுத்திய திருஞானசம்பந்தப் பெருமான் கூறுகின்றார்...
"பிறவி அறுப்பீர்காள்! அறவன் ஆரூரை
மறவாது ஏத்துமின், துறவி ஆகுமே!"
பிறவியை அறுத்துக் கொள்ள வேண்டுமானால், நான் எனது என்னும் அகங்கார மமகாரங்களை அறுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் துறவு நிலை உண்டாகும். அதற்கு ஒரே சாதனம், இறைவன் திருவடியை மறவாது வழிபடுதல் ஒன்றே ஆகும். அருள்நெறியில் ஒழுகுவதே துறவுநெறி ஆகும்.