பொது --- 1028. வினைத் திரளுக்கு

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

வினைத் திரளுக்கு (பொது)

 

முருகா! 

தமிழால் உன்னைப் பாடிப் பரவ அருள்வாய்

 

 

தனத்ததனத் தனத்ததனத்

     தனத்ததனத் தனத்ததனத்

          தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான

 

 

வினைத்திரளுக் கிருப்பெனவித்

     தகப்படவிற் சலப்பிலமிட்

          டிசைக்குமிடற் குடிற்கிடைபுக் ...... கிடுமாய

 

விளைப்பகுதிப் பயப்பளவுற்

     றமைத்ததெனக் கருத்தமைவிற்

          சகப்பொருள்மெய்க் குறப்பருகக் ...... கருதாதே

 

எனக்கெதிரொப் பிசைப்பவரெத்

     தலத்துளரெச் சமர்த்தரெனப்

          புறத்துரையிட் டிகழ்ச்சியினுற் ...... றிளையாதுன்

 

எழிற்கமலத் திணைக்கழலைத்

     தமிழ்ச்சுவையிட் டிறப்பறஎய்த்

          திடக்கருணைத் திறத்தெனைவைத் ...... தருள்வாயே

 

சினத்தைமிகுத் தனைத்துலகத்

     திசைக்கருதிக் கடற்பரவித்

          திடத்தொடதிர்த் தெதிர்த்திடலுற் ...... றிடுசூரன்

 

சிரத்துடன்மற் புயத்தகலத்

     தினிற்குருதிக் கடற்பெருகச்

          சிறப்புமிகத் திறத்தொடுகைத் ...... திடும்வேலா

 

கனத்தமருப் பினக்கரிநற்

     கலைத்திரள்கற் புடைக்கிளியுட்

          கருத்துருகத் தினைக்குளிசைத் ...... திசைபாடி

 

கனிக்குதலைச் சிறுக்குயிலைக்

     கதித்தமறக் குலப்பதியிற்

          களிப்பொடுகைப் பிடித்தமணப் ...... பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

வினைத் திரளுக்கு இருப்பு என, வித்-

     தகப் படவில், சலபிலம் இட்டு,

          இசைக்கும் மிடல் குடிற்கு இடைபுக் ...... கிடு,மாய

 

விளைப் பகுதிப் பயப்பு அளவுற்று

     அமைத்தது என, கருத்து அமைவில்,

          சகப் பொருள் மெய்க்கு உறப் பருகக் ...... கருதாதே,

 

எனக்கு எதிர் ஒப்பு இசைப்பவர், எத்

     தலத்து உளர், எச் சமர்த்தர் என,

          புறத்து உரை இட்டு, இகழ்ச்சியின் உற்று,... இளையாது,உன்

 

எழில் கமலத்து இணைக்கழலைத்

     தமிழ்ச் சுவை இட்டு, இறப்பு அற, எய்த்-

          திடக் கருணைத் திறத்து, எனை வைத்து ......அருள்வாயே.

 

சினத்தை மிகுத்து, அனைத்துஉலகத்

     திசைக் கருதி, கடல் பரவித்

          திடத்தொடு எதிர்த்து, எதிர்த்திடல் உற் ...... றிடுசூரன்

 

சிரத்துடன்மல் புயத்துகலத்

     தினில் குருதிக் கடல் பெருக,

          சிறப்பு மிகத் திறத்தொடு உகைத் ...... திடும்வேலா!

 

கனத்த மருப்பு இனக் கரி,நல்

     கலைத் திரள்கற்புடைக் கிளியுள்

          கருத்து உருகத் தினைக்குள் இசைத்து,...... இசைபாடி

 

கனிக் குதலைச் சிறுக் குயிலைக்

     கதித்த மறக் குலப் பதியில்

          களிப்பொடு கைப் பிடித்த மணப் ...... பெருமாளே.

 

 

பதவுரை

 

 

     சினத்தை மிகுத்து --- கோபம் மிகுந்து,

 

     அனைத்து உலகத் திசைக் கரதி --- உலகின் அனைத்துத் திசைகளையும் வெல்லக் கருதி,

 

     கடல் பரவி --- கடல் மீதிலும் தனது ஆணை செல்லவேண்டும் என்று கருதி,

 

     திடத்தொடு அதிர்த்து எதிர்த்திடல் உற்றிடு சூரன் ---  வலிமையுடன் எவரையும் நடுங்கச் செய்து எதிர்த்தவனாகிய சூரபதுமனுடைய

 

     சிரத்துடன் --- தலையில் இருந்தும்,

 

     மற் புயத்து அகலத்தினில் --- திரண்ட தோள்களிலும்மார்பிலும் இருந்தும்,

 

     குருதிக் கடல் பெருக --- இரத்தமானது கடல் போல் பெருக்கெடுக்கும்படியா,

 

     சிறப்பு மிகத் திறத்தொடு உகைத்திடும் வேலா --- புகழ் மிகுந்த சாமர்த்தியத்துடன் வேலாயுதத்தை விடுத்து அருளிய வேலவரே! 

 

     கனத்த மருப்பு இனக் கரி --- கனத்த தந்தங்களை உடைய யானைகளின் கூட்டமும்,

 

     நல் கலைத் திரள் --- அழகிய மான்களின் கூட்டமும்,

 

     கற்புடைக் கிளி உள் கருத்து உருக --- சொல்லுவதைக் கற்றுத் திருப்பிச் சொல்லவல்ல கிளிகளின் கூட்டமும் உள்ளம் உருகும்படியாக,

 

     தினைக்குள் இசைத்து இசை பாடி --- தினைப்புனத்தில் இருந்துகொண்டு இசையோடு பாடியவள் ஆகிய

 

     கனிக் குதலைச் சிறுக் குயிலை ---  கனிரசம் போன்றதும்மழலை ததும்புவதும் ஆன இனிய குரலைக் கொண்ட குயிலை ஒத்தவள் ஆகிய வள்ளிநாயகியை,

 

     கதித்த மறக் குலப் பதியில் --- வேடர் கூட்டத்தினர் வாழ்ந்திருந்த பதியில்,

 

     களிப்பொடு கைப் பிடித்த மணப் பெருமாளே --- உள்ள மகிழ்ச்சியுடன் கரம் பற்றிய மணவாளராகிய பெருமையில் மிக்கவரே!

 

      வினைத் திரளுக்கு இருப்பு என வித்தகப் படவில் --- வினைக் கூட்டங்களுக்கு இருப்பிடம் என்று சொல்லப்படும் அதிசயமான ஓடம் ஆகியதும்,

 

       சல(ம்) பிலம் இட்டு --- நீர் மிகுந்த குகையினை ஒத்து உள்ளதும்,

 

     இசைக்கும் மிடல் குடிற்கு இடை புக்கு இடும் --- கட்டப்பட்ட வலிமை மிக்கதும் ஆன உடலினுள் புகுந்துள்ள இந்த,

 

       மாய விளைப் பகுதிப் பயப்பு --- மாய வாழ்க்கையானது

 

     அளவுற்று அமைத்தது எனக் கருத்து அமைவில் --- நெடுங்காலம் நீடித்து இருக்கும் என்னும் கருத்தினைக் கொண்டு,

 

      சகப் பொருள் மெய்க்கு உறப் பருகக் கருதாதே --- உலகத்தில் உள்ள அனுபவப் பொருள்களின் உண்மைக்கு ஏற்ப அனுபவிக்க எண்ணாமல்,

 

      எனக்கு எதிர் ஒப்ப இசைப்பவர் --- எனக்கு எதிர் நிகராக உள்ளவர்,

 

     எத்தலத்து உளர் --- எந்த உலகத்து உள்ளார்?

 

     எச் சமர்த்தர் என --- எனக்கு எதிராக எந்த விதமான திறமையை உடையவர்கள் என்று

 

      புறத்து உரை இட்டு --- வெளியில் சொல்லிக் கொண்டு,

 

     இகழ்ச்சியின் உற்று இளையாது --- விழிப்பு இன்மையோடு இருந்து நான் இளைத்துப் போகாமல்,

 

      உன் எழில் கமலத்து இணைக் கழலை --- வீரக் கழலை அணிந்த உமது தாமரை மலர் போன்ற திருவடிகளை,

 

     தமிழ்ச் சுவை இட்டு --- இனிமையான தமிழ்ப் பாமாலைகளைக் கொண்டு வழிபட்டு,

 

     இறப்பு அற எய்த்திட--- மரணம் இல்லாப் பெருவாழ்வை அடியேன் பெற்றி,

 

     கருணைத் திறத்து என வைத்து அருள்வாயே --- உனது கருணையின் வல்லபத்தில் அடியேனைச் என்னைச் சேர்த்து அருள் புரிவாயாக.


பொழிப்புரை

 

 

     கோபம் மிகுந்துஉலகின் அனைத்துத் திசைகளையும் வெல்லக் கருதிகடல் மீதிலும் தனது ஆணை செல்லவேண்டும் என்று கருதிவலிமையுடன் எவரையும் நடுங்கச் செய்து எதிர்த்தவனாகிய சூரபதுமனுடையதலையில் இருந்தும்திரண்ட தோள்களிலும்மார்பிலும் இருந்தும்,இரத்தமானது கடல் போல் பெருக்கெடுக்கும்படியா,புகழ் மிகுந்த சாமர்த்தியத்துடன் வேலாயுதத்தை விடுத்து அருளிய வேலவரே! 

 

            கனத்த தந்தங்களை உடைய யானைகளின் கூட்டமும்அழகிய மான்களின் கூட்டமும்சொல்லுவதைக் கற்றுத் திருப்பிச் சொல்லவல்ல கிளிகளின் கூட்டமும் உள்ளம் உருகும்படியாகதினைப்புனத்தில் இருந்துகொண்டு இசையோடு பாடியவள் ஆகிய கனிரசம் போன்றதும்,மழலை ததும்புவதும் ஆன இனிய குரலைக் கொண்ட குயிலை ஒத்தவள் ஆகிய வள்ளிநாயகியை,வேடர் கூட்டத்தினர் வாழ்ந்திருந்த பதியில்திருவுள்ளம் மகிழ்ந்து கரம் பற்றிய மணவாளராகிய பெருமையில் மிக்கவரே!

 

            வினைக் கூட்டங்களுக்கு இருப்பிடம் என்று சொல்லப்படும் அதிசயமான ஓடம் ஆகியதும்நீர் மிகுந்த குகையினை ஒத்து உள்ளதும்கட்டப்பட்ட வலிமை மிக்கதும் ஆன உடலினுள் புகுந்துள்ள இந்தமாய உடல் வாழ்க்கையானதுநெடுங்காலம் நீடித்து இருக்கும் என்னும் கருத்தினைக் கொண்டு, உலகத்தில் உள்ள அனுபவப் பொருள்களின் உண்மைக்கு ஏற்ப அனுபவிக்க எண்ணாமல்எனக்கு எதிர் நிகராக உள்ளவர்எந்த உலகத்து உள்ளார்எனக்கு எதிராக எந்த விதமான திறமையை உடையவர்கள் என்றுவெளியில் சொல்லிக் கொண்டுவிழிப்பு இன்மையோடு இருந்து நான் இளைத்துப் போகாமல்,வீரக் கழலை அணிந்த உமது தாமரை மலர் போன்ற திருவடிகளைஇனிமையான தமிழ்ப் பாமாலைகளைக் கொண்டு வழிபட்டுமரணம் இல்லாப் பெருவாழ்வை அடியேன் பெற்றிஉனது கருணையின் வல்லபத்தில் அடியேனைச் என்னைச் சேர்த்து அருள் புரிவாயாக.

 

 

விரிவுரை

 

வினைத் திரளுக்கு இருப்பு என வித்தகப் படவில்--- 

 

படவு --- சிறிய ஓடம்.

 

"படவு அது ஏறிப் பாரொடு விண்ணும் பணிந்து ஏத்த" என வரும் திருவாசகப் பாடல் வரி காண்க.

 

படவு என்பது இங்கே ஆன்மா வினையின் காரணமாக எடுத்து வந்த உடம்பைக் குறிக்கும்.

 

வினைத் திரளுக்கு இருப்பிடமான சிறிய படகு என்று சொல்லப்படும் உடம்பை எடுத்துள்ள ஆன்மா பிறவியாகிய பெருங்கடலில் போக்கு வரவு புரிகின்றது.

 

இசைக்கும் மிடல் குடிற்கு இடை புக்கு இடும் --- 

 

மிடல் --- வலிமை.  குடில் --- உடல்.

 

மாயவிளைப் பகுதிப் பயப்பு--- 

 

மாயையால் விளைந்த உடம்பைக் கொண்டு வாழுகின்ற மாய வாழ்க்கை.

 

அளவுற்று அமைத்தது எனக் கருத்து அமைவில் சகப் பொருள் மெய்க்கு உறப் பருகக் கருதாதே--- 

 

மாய வாழ்க்கையானது ஒவ்வொருவருக்கும் அவரவது வினைப் பயனுக்கு ஏற்ப அனுபோகத்துக்கு உரியது. இவனைப் போகம் உள்ள வரையில் இந்த உடம்பு நிலைத்து இருக்கும். வினைப் போகம் தீர்ந்த உடனேஇல்லாமல் போய்விடும். "வினைப் போகமே ஒரு தேகம் கண்டாய்வினைதான் தீர்ந்தால் தினைப்போது அளவும் நில்லாது" என்பார் பட்டினத்தடிகள். 

 

எனக்கு எதிர் ஒப்ப இசைப்பவர் எத்தலத்து உளர் எச் சமர்த்தர் எனப் புறத்து உரை இட்டு இகழ்ச்சியின் உற்று இளையாது--- 

 

இந்த உண்மையை உணர்ந்து கொள்ளாமல்இந்த மாய உடம்பும் இதற்கென வகுக்கப்பட்ட வினைப் போகமும் எப்போதும் நிலைத்து இருக்கும் என்று எண்ணி,அறியாமையால் இறுமாந்து, "எனக்கு எதிர் யார்?" என்றும், "எனக்கு எதிர் ஆகும் திறம் உள்ளவர் யார்?" என்று வீறாப்பு பேசிக் கொண்டு இருந்துஅருமையாகப் பெற்ற இந்த உடம்பினைக் கொண்டு பெறவேண்டிய பயனை அறியாது இகழ்ச்சியாக இருத்தல் கூடாது. "யார் யார்க்கும் தாழ்ச்சி சொல்லல்" வேண்டும். பெருமையைப் பெறவேண்டுமானால்பணிவு இருக்கவேண்டும். "பணியுமாம் என்றும் பெருமை" என்றார் நாயனார்.

 

உன் எழில் கமலத்து இணைக் கழலை தமிழ்ச் சுவை இட்டு இறப்பு அற எய்த்திட கருணைத் திறத்து என வைத்து அருள்வாயே--- 

 

"எய்திட" என்னும் சொல்பாடல் சந்தம் நோக்கி, "எய்த்திட" என்று வந்தது.

 

ஆன்மா பற்றுக்கோடு இல்லாமல் வாழ முடியாது. நாமரூபம் இல்லாத ஆன்மாவினைகளைத் துய்த்துஅருள் நலம் பெறப் பற்றுக்கோடாக உடம்பு வாய்த்தது. உடம்பில் இருந்துகொண்டுஉலகப் பற்றுக்களைச் சார்ந்து இருப்பதை விடுத்துஇறையை பற்றிக் கொண்டு வாழவேண்டும். ஏன் இறையைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்னும் வினா எழும்.

 

"பற்றுக பற்று அற்றான் பற்றினைஅப் பற்றைப்

பற்றுக பற்று விடற்கு"

 

என்னும் திருவள்ளுவ நாயனாரின் அருள்வாக்கும்,

 

"இப்பாசத்தைப் பற்று அநாம் பற்றுவான் பற்றிய பேரானந்தம்"

 

என்னும் மணிவாசகப் பெருமானாரின் அருள் வாக்கும் சிந்தைக்கு உரியவை.

 

இறைவன் திருவடிப் பற்றை இறுகப் பற்றிக் கொள்வதற்குத் தேவைப்படுவது, "தமிழ்ச் சுவை" என்றார் அடிகளார்.

உலகில் பேசப்படும் மொழிகளுக்குள் தலை சிறந்தது தமிழ் மொழியே ஆகும். இறைவன் அருளை எளிதில் பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழே. இறைவன் சங்கப் புலவரில் தானும் ஒருவனாய் இருந்து தமிழ் ஆராய்ந்தமையாலும்பெற்றான் சாம்பான் பொருட்டு உமாபதி சிவத்தினிடம் சீட்டு எழுதியனுப்பியது தமிழிலே ஆதலானும்சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணகிரிநாதருக்கும் அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே என்பதனாலும் இதன் பெருமை நன்கு விளங்குகின்றது. முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ்.கற்புணையை நற்புணையாக்கியது தமிழ்.எலும்பைப் பெண்ணாக்கியது தமிழ்இறைவனை இரவில் இருமுறை நடந்து தூது போகச் செய்தது தமிழ்குதிரைச் சேவகனாக வரச்செய்தது தமிழ்.கற்றூணில் காட்சிதரச் செய்தது தமிழ்பற்பல அற்புதங்களைச் செய்ய வைத்தது தமிழ்இயற்கையான மொழி தமிழ்பேசுந்தோறும் பேரின்பத்தை வழங்குவது தமிழ். 

சிவபெருமானும் தமிழ்ப் பாடலில் காதல் உடையவர். சுந்தர்மூர்த்தி சுவாமிகள் பாடலை மிகவும் விரும்பியவர்.

"மற்று,நீ வன்மை பேசிவன்தொண்டன் என்னும் நாமம்  

பெற்றனைநமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க

அர்ச்சனை பாட்டே ஆகும்;  ஆதலால் மண்மேல் நம்மைச்

சொல்தமிழ் பாடுகஎன்றார் தூமறை பாடும் வாயார்".

 

"சொல்ஆர் தமிழ் இசைபாடிய தொண்டன் தனை இன்னும்    

பல்லாறு உலகினில் நம்புகழ் பாடுஎன்று உறு பரிவின்

நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன்

எல்லா உலகு உய்யப் புரம் எய்தான் அருள் செய்தான்".

 

"என்ற பொழுதில் இறைவர்தாம்

     எதிர்நின்று அருளாது எழும் ஒலியால்

மன்றின் இடை நம் கூத்து ஆடல்

     வந்து வணங்கி வன்தொண்டன்

ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி

     உரைசேர் பதிகம் பாடுதலால்

நின்று கேட்டு வரத் தாழ்த்தோம்

     என்றார் அவரை நினைப்பிப்பார்".

 

என வரும் பெரியபுராணப் பாடல்களையும்,அவை சார்ந்த அருள் வரலாறுகளையும் எண்ணி இன்பம் உறுக.

 

இறைவன், "தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டான்" என்று போற்றினார் மணிவாசகப் பெருமான். பெருமானுக்குஅவர் ஆய்ந்த தமிழில் விருப்பம் மிகுதி. ஆதலால்,

 

"சிறைவான் புனல் தில்லைச் சிற்றம்

    பலத்தும்,என் சிந்தையுள்ளும்

உறைவான்,உயர்மதிற் கூடலின்

    ஆய்ந்த ஒண் தீந்தமிழின்

துறைவாய் நுழைந்தனையோ?அன்றி

    ஏழிசைச் சூழல்புக்கோ?

இறைவா! தடவரைத் தோட்கு என்கொல்

    ஆம் புகுந்து எய்தியதே"

 

என்று மணிவாசகப் பெருமான் திருக்கோவையாரில் வைத்துப் பாடி அருளினார்."தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன்" என்று பாடினார் அப்பர் பெருமான்.

 

கண்ணுதல் பெரும் கடவுளும் கழகமோடு அமர்ந்து

பண்உறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ்,ஏனை

மண்ணிடைச் சில இலக்கண வரம்புஇலா மொழிபோல்

எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ?

 

தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும்முதலை

உண்ட பாலனை அழைத்ததும்எலும்பு பெண் உருவாக்

கண்டதும்மறைக் கதவினைத் திறந்ததும்கன்னித்

தண்தமிழ்ச் சொலோமறுபுலச் சொற்களோ சாற்றீரே.

 

எனத் திருவிளையாடல் புராணம் கூறுமாறு காண்க.

 

இவ்வாறெல்லாம் சிறப்புப் பெற்ற முத்தமிழால் பாடித் துதிக்கின்ற முத்தர்களின் துதியில் மகிழ்கின்றவர் சிவபெருமான். அவருக்கு உபதேசம் புரிந்து அருளியவர் முருகப் பெருமான் என்கின்றார் அடிகளார்.

 

முருகப் பெருமானைச் "செந்தமிழ்ப் பெருமாள்" என்றே அரணகிரிநாதப் பெருமான் இரண்டு திருப்புகழ்ப் பாடல்களில் வைத்துப் போற்றி உள்ளார். 

 

     எனவேசுவை மிக்க தமிழால் இறைவனை வழிபட்டுப் பேறு பெறுதல் வேண்டும் என்பது தெளிவாகும்.

 

கனத்த மருப்பு இனக் கரிநல் கலைத் திரள் கற்புடைக் கிளி உள் கருத்து உருகதினைக்குள் இசைத்து இசை பாடிகனிக் குதலைச் சிறுக் குயிலை கதித்த மறக் குலப் பதியில் களிப்பொடு கைப் பிடித்த மணப் பெருமாளே--- 

 

விலங்கினங்களும்பறவை இனங்களும் உள்ளம் உருகும்படியாக இனிய குரலால் பாடிக் கொண்டு தினைப்புனத்தில் காவல் காத்துக் கொண்டு இருந்தவர் வள்ளிநாயகியார். எம்பிராட்டியின் இனிய மொழியை, "இந்தளாம்ருத வசனம்" என்றும் "ரஞ்சிதாம்ருத வசனம்" என்றும், "கொல்லியைச் சேர்கின்ற சொல்லி" என்றும் அருணகிரிநாதப் பெருமான் போற்றிப் புகழ்ந்து உள்ளார். "கொச்சை மொழிச்சி" என்று "பச்சிலை இட்டு" எனத் தொடங்கும் திருப்புகழிலும், "பாகு கனிமொழி மாது" என்று பிறிதோர் திருப்புகழிலும் அடிகளார் வள்ளிநாயகியின் அருமையைப் புகழ்ந்து உள்ளார்.

 

கருத்துரை

 

முருகா! தமிழால் உன்னைப் பாடிப் பரவ அருள்வாய்

No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...