நமசிவாய - சிவாயநமநமசிவாய - சிவாயநம

-----

 

     உலகில் உள்ள ஒவ்வொரு சமயத்திற்கும்வழிபடு தெய்வம் ஒன்று இருக்கும். கடவுள் என்று ஒரு பொருள் உண்டு என்று உடன்பாடாகவோஇல்லை என்று எதிர்மறையாகவோ கூறாத புத்தம் முதலான சில சமயங்களும் உண்டு. கடவுள் உண்டு என்று சொல்லுகின்ற சமயங்களுள்வழிபடு தெய்வத்திற்கு உரிய மந்திரம் ஒன்று இருக்கும். அதனை உச்சரித்து வந்தால் நன்மை விளையும் என்பது நம்பிக்கை. "மந்திரம்" என்னும் சொல்லுக்கு, "நினைப்பவரைக் காப்பது" என்று பொருள் கூறுவர்.

 

     தமிழகத்தில் சைவம்வைணவம் என்று இரு தொன்மையான சபயங்கள் உள்ளன. அவை யாரால் எப்போது தோற்றுவிக்கப் பட்டவை என்பதை ஆராய்ந்து அறுதியிட முடியாது. அவ்வப்போது அவதரித்த நாயன்மார்களாலும்அருளாளர்களாலும்ஆழ்வாராதிகளாலும் அவை விளக்கம் செய்யப்பட்டன. 

 

     சைவசமயம் என்பது சிவசமயம்சிவநெறி என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. "சிவம்" என்னும் சொல்லுக்கு "அன்பு" என்றே பொருள். அன்பு உள்ள இடத்தில் சிவம் விளக்கம் பெற்று இருக்கும். எனவே, "அன்பினில் விளைந்த ஆரமுதே" என்றும், "நேயத்தே நின்ற நிமலன்" என்றும் அருளினார் மணிவாசகப் பெருமான். அன்பு என்றாலும்சிவம் என்றாலும் ஒன்றே. அன்பு வேறு,சிவம் வேறு என்று சொல்லுவோர் அறிவில்லாதவர் என்பதால்

 

"அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்;

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்;

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்,

அன்பே சிவமாய் அமர்ந்து இருந்தாரே".

 

என்னும் திருமந்திரப் பாடலை அருளிச் செய்துஅன்பு வேறு சிவம் வேறு என்பார் அறிவில்லாதவர் என்றும்அன்பும் சிவமும் ஒன்று என்பதே உண்மை என்றும்இதனை உணர்ந்தார் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பர் (உள்ளத்தால் பொருந்தி இருப்பார்) என்றும் கூறுகின்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார்.

 

     சைவத்திற்கு உரிய மந்திரமாகிய "நமசிவாய" என்னும் திருவைந்தெழுத்து அல்லது பஞ்சாக்கரம், "ஐந்துபதம்" என்று சொல்லப்படும். ஒவ்வொரு எழுத்துக்கும் பொருள் உண்டு. "அந்தியும் நண்பகலும் அஞ்சு பதம் சொல்லி" என்னும் சுந்தரர் தேவாரப் பாடலால் இது விளங்கும். ஐந்து எழுத்துக்களும் வெறும் எழுத்துக்கள் அல்ல. ஒவ்வொரு எழுத்தும் ஒரு பொருளைக் குறிக்கும்.

 

சி --- சிவம் (பதிஇறைவன்)

வ --- சத்தி (திருவருள் ஆற்றல்)

ய --- உயிர் (ஆன்மா)

ந --- திரோதம் (மறைப்பு ஆற்றல்)

ம --- மலம் (உயிர்களைக் கட்டியுள்ள அழுக்கு)

 

     இவற்றுள் நகாரத்தை முதலாக வைத்து, "நமசிவய" என்று ஓதுவது தூல பஞ்சாக்கரம் அல்லது தூல திருவைந்தெழுத்து. தூல பஞ்சாக்கரம் குறித்துதேவார மூவரும் (திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்அப்பர் என்று அன்போடு வழங்கப்பெறும் திருநாவுக்கரசு நாயனார்சுந்தரர் என்று வழங்கப்பெறும் நம்பியாரூரர்) நமச்சிவாயத் திருப்பதிகம் அருளிச் செய்து உள்ளனர்.

 

     வள்ளல்பெருமானும் திருவருட்பாவில் நான்கு திருப்பதிகங்களை அருளிச் செய்து உள்ளார். இரண்டு திருப்பதிகங்களில் தூலபஞ்சாக்கரத்தையும்ஒரு திருப்பதிகத்தில் சூக்கும பஞ்சாக்கரத்தையும்ஒரு திருப்பதிகத்தில் காரண பஞ்சாக்கரத்தையும் வைத்துப் பாடி உள்ளார். "நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே" என்றும், "நமச்சிவாயத்தை நான் மறவேனே" என்றும் தூலபஞ்சாக்கரம் குறித்துப் பாடிய வள்ளல்பெருமான், "சிவாயநம என்று இடு நீறே" என்று தூலபஞ்சாகரத்தைக் குறித்து ஒரு திருப்பதிகமும் பாடி உள்ளார்.

 

     தூலபஞ்சாக்கரம் பொது. சூக்குமபஞ்சாக்கரம் சிறப்பு. நகரத்தை முதலாக வைத்து ஓதப் பெறுவது தூலபஞ்சாக்கரம் (நமசிவாய). இது காரிய சித்தியைத் தரக் கூடியது என்று பெரியோர் கூறுவர். சிகாரத்தை முதலாக வைத்து ஓதக் கூடிய சூக்குமபஞ்சாக்கரம் (சிவாயநம) காரியசித்தியோடுஞானசித்தியையும் அளிக்கவல்லது. இதனை,

 

"நம்முதல் ஓரைந்தின் நாடும் கருமங்கள்,

அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை

சிம்முதல் உள்ளே தெளிய வல்லார்கட்குத்

தம்முதல் ஆகும் சதாசிவன் தானே" 

 

என்னும் திருமந்திரப் பாடலால் தெளிய வைத்தார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார்.

 

"சிவன்,அருள்,ஆவி,திரோதம்மலம் ஐந்தும்

அவன் எழுத்து அஞ்சின் அடைவாம்,- இவன் இன்று

நம்முதலா ஓதில் அருள் நாடாது,நாடும்அருள்

சிம்முதலா ஒதுநீ சென்று".     

 

என்று மெய்கண்ட சாத்திரங்களுள் ஒன்றாகிய "உண்மை விளக்கம்" என்னும் நூல் கூறும்.   

 

     "நமசிவாய" என்று தூலமாக ஓதினால்இறையருள் கிடைக்காது. அருள் கிடைக்கவேண்டுமானால், "சிவாயநம" என்று ஓதவேண்டும்.

 

     மூவர் தேவாரத் திருப்பதிகங்களையும்திருமூலர் காட்டிய அருட்பாடல்களையும்வள்ளல்பெருமான் அருளிய திருப்பதிகங்களையும் ஊன்றிப் படித்தால் இந்த உண்மை விளங்கும். "நமசிவாய" எனப் போற்றப்படும் இடங்கள்இறைவனைத் துதிக்கும் பதிகங்களாகவும்"சிவாயநம" என்று போற்றப்படும் இடங்கள்தாம் பெற்ற அனுபவப் பேற்றினைக் கூறும் இடங்களாகவும் அமைந்துள்ளத்தைக் காணலாம்.

 

     "நமசிவாய வாழ்க" எனத் தொடங்கும் திருவாசகத்தில், "சிவாயநம எனப் பெற்றேன்" என்று மணிவாசகப் பெருமான் அருளி உள்ளதில் இருந்து இது தெளிவாகும். "நமசிவாய" என்பது திருப்பெயர். "சிவாயநம" என்பது உச்சரிப்புக்குதியானத்துக்கு உரிய மந்திரம். "நாதன் நாமம் நமச்சிவாயவே" என்று திருஞானசம்பந்தப் பெருமான் அருளி உள்ளார். "நாதன் நாமம் நமச்சிவாயம் காண் நாம் பெறும் துணையே" என்று வள்ளல்பெருமான் அருளிச் செய்து உள்ளார்.

 

     "சிவாயநம" என்பது அனுபவத்துக்கு உரிய சூக்குமத் திருவைந்தெழுத்து என்பது பின்வரும் பாடல்களால் தெளியப்படும்...

 

"கருவாய்க் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன்,

உருவாய்த் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன்உனது அருளால்

திருவாய்ப் பொலியச் "சிவாயநம" என்று நீறு அணிந்தேன்,

தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே".

 

என்பது அப்பர் அருளிய தேவாரம்.

 

"நானேயோ தவம் செய்தேன்?

    "சிவாயநம" எனப் பெற்றேன்,

தேனாய் இன் அமுதமுமாய்த்

    தித்திக்கும் சிவபெருமான்

தானே வந்து எனது உள்ளம்

    புகுந்துடியேற்கு அருள்செய்தான்,

ஊன் ஆரும் உயிர்வாழ்க்கை

    ஒறுத்து அன்றே வெறுத்திடவே"

 

என்பது மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகம்.

 

"நான்செய்த புண்ணியம் யாதோ?

     "சிவாயநம" எனவே

ஊன்செய்த நாவைக் கொண்டு ஓதப்பெற்

     றேன்எனை ஒப்பவர் ஆர்?

வான்செய்த நான்முகத் தோனும்

     திருநெடு மாலும் மற்றைத்

தேன்செய்த கற்பகத் தேவனும்

     தேவரும் செய்ய அரிதே".

 

என்பது வள்ளல்பெருமான் அருளிய திருவருட்பா.

 

     எனவே, "நமசிவாய" என்பது பெயர் என்பதும், "சிவாயநம" என்பது மந்திரம் என்பதும் தெளிவாக விளங்கும். உலகில்நமசிவாயம் என்னும் பெயர் உடையோர் பலர் உண்டு. சிவாயநம என்னும் பெயர் உடையோர் ஒருவரும் இல்லை. நடுவீதியில் இருந்துகொண்டுநமசிவாயம் என்று அழைத்தால்யாராவது திரும்பிப் பார்ப்பார்கள். சிவாயநம என்று கூப்பிட்டால் சிரிப்பார்கள். இறைவன் திருநாமத்தைப் பெயராக சூட்டிக் கொள்வது வழக்கு. மந்திரத்தைப் பெயராக வைத்துக் கொள்வது வழக்கம் அல்ல. "சிவாயநம" என்பது சிந்தனைக்குதியானத்துக்கு மட்டுமே உரியது என்பதால், "சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை" என்றார் ஔவைப் பிராட்டியார்.

 

     வைணவர்களிலும்நாராயணன் என்பது இறைவனது திருப்பெயர். "நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்" என்று ஆழ்வார் பாடி உள்ளதை அறியலாம்.  "நாராயணாயநம" என்பது உச்சரிப்புக்குதியானத்துக்கு உரிய மந்திரம் ஆகும். "நாராயணாயநம" என்று யாரையும் கூவி அழைப்பது இல்லை.

 

     உண்மை இவ்வாறு இருக்கசைவப் பெருமக்கள் மட்டும் ஒருவரை ஒருவர் கண்டால், "சிவாயநம" என்று கூவுவது பொருத்தமானது அல்ல. அது தவிர்க்கப்பட வேண்டும். "சிவாயநம" என்பது சூக்கும்பஞ்சாக்கரம். அது தியானத்துக்கு உரியது.

 

     "நமசிவாய" என்னும் தூலபஞ்சாக்கரம்சாதாரண பக்குவர்க்குசமயகுருவாக உள்ளவர் உபதேசிப்பது. "சிவாயநம" என்பதுஞானகுருவாக உள்ளவர்தீவிர பக்குவர்க்கு உபதேசிப்பது. மந்திரங்களை உச்சரிக்கும் முறை கூறப்பட்டு உள்ளது. "மானசம்" என்பது மனதில் மந்திரங்களை உச்சரித்தல்"உபாஞ்சு" என்பது தன்னுடைய காதுகளுக்கு மட்டும் கேட்குமாறு மந்திரங்களை உச்சரித்தல்"வாசகம்" பிறர் காதுகளுக்கும் கேட்குமாறு மந்திரங்களை உச்சரித்தல். எனவேமந்திரம் என்பது கூவி அழைப்பதற்கு உரியது அல்லஉச்சரிப்புக்கு உரியது என்பதை அறிந்துகொள்ளுதல் வேண்டும்.

 

No comments:

Post a Comment

பொது --- 1030. விட்ட புழுகுபனி

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   விட்ட புழுகுபனி (பொது)   முருகா!  விலைமாதர் கூட்டுறவால் எனது அறிவு மயங்காமல் காத்து அருள்.            ...