பொது --- 1029. முத்து மணிபணிகள்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

 

முத்து மணிபணிகள் (பொது)

 

முருகா! 

தேவரீரது திருவடிகளை வழிபட்டு உய்ய அருள்.

 

            

தத்த தனதனன தானத் தான

     தத்த தனதனன தானத் தான

          தத்த தனதனன தானத் தானத் ...... தனதான

 

 

முத்து மணிபணிக ளாரத் தாலு

     மொய்த்த மலைமுலைகொ டேவித் தார

          முற்று மிளைஞருயிர் மோகித் தேகப் ...... பொருமாதர்

 

முற்று மதிமுகமும் வானிற் காரு

     மொத்த குழல்விழியும் வேய்நற் றோளு

          முத்தி தகுமெனும்வி னாவிற் பாயற் ......கிடைமூழ்கிப்

 

புத்தி கரவடமு லாவிச் சால

     மெத்த மிகஅறிவி லாரைத் தேறி

          பொற்கை புகழ்பெரிய ராகப் பாடிப் ...... புவியூடே

 

பொய்க்கு ளொழுகியய ராமற் போது

     மொய்த்த கமலஇரு தாளைப் பூண

          பொற்பு மியல்புதுமை யாகப் பாடப் ...... புகல்வாயே

 

பத்து முடியுமத னோடத் தோளிர்

     பத்து மிறையவொரு வாளிக் கேசெய்

          பச்சை முகில்சதுர வேதத் தோடுற் ...... றயனாரும்

 

பற்ற வரியநட மாடத் தாளில்

     பத்தி மிகவினிய ஞானப் பாடல்

          பற்று மரபுநிலை யாகப் பாடித் ...... திரிவோனே

 

மெத்த அலைகடலும் வாய்விட் டோட

     வெற்றி மயில்மிசைகொ டேகிச் சூரர்

          மெய்க்கு ளுறஇலகு வேலைப் போகைக் ......கெறிவோனே

 

வெற்றி மிகுசிலையி னால்மிக் கோர்தம்

     வித்து விளைபுனமும் வேய்முத் தீனும்

          வெற்பு முறையுமயில் வேளைக் காரப் ......பெருமாளே.

 

 

பதம் பிரித்தல்

 

 

முத்து மணி பணிகள் ஆரத்தாலும்,

     மொய்த்த மலைமுலை கொடேவித் தார

          முற்றும் இளைஞர் உயிர் மோகித்து ஏகப் ......பொருமாதர்,

 

முற்று மதிமுகமும்,வானில் காரும்

     ஒத்த குழல்,விழியும்,வேய் நல் தோளும்

          முத்தி தகும் எனும் வினாவில் பாயற்கு .....இடைமூழ்கி,

 

புத்தி கரவடம் உலாவி,சால

     மெத்த மிக அறிவு இலாரைத் தேறி,

          பொன் கை புகழ் பெரியர் ஆகப் பாடி,......புவிஊடே

 

பொய்க்குள் ஒழுகிஅயராமல் போது

     மொய்த்த கமல இரு தாளைப் பூண,

          பொற்பும் இயல் புதுமையாகப் பாடப் ...... புகல்வாயே.

 

பத்து முடியும் அதனோடு அத் தோள் இர்

     பத்தும் இறைய ஒரு வாளிக்கே செய்,

          பச்சை முகில்சதுர வேதத்தோடுற்ற ...... அயனாரும்,

 

பற்ற அரிய நடம் ஆட,தாளில்

     பத்தி மிக இனிய ஞானப் பாடல்

          பற்று மரபு நிலை ஆகப் பாடித் ...... திரிவோனே!

 

மெத்த அலைகடலும் வாய்விட்டு ஓட,

     வெற்றி மயில்மிசைகொடு ஏகி,சூரர்

          மெய்க்குள் உற இலகு வேலைப் போகைக்கு ....எறிவோனே!

 

வெற்றி மிகுசிலையினால் மிக்கோர் தம்

     வித்து விளைபுனமும்,வேய்முத்து ஈனும்

          வெற்பும் உறையும் மயில் வேளைக் காரப் ......பெருமாளே.

 

 

பதவுரை

 

 

     பத்து முடியும் --- இராவணனது பத்துத் தலைகளும்,

 

     அதனோடு அத்தோள் இர் பத்தும் இறைய --- அவற்றோடு தோள்கள் இருபதும் அற்று விழும்படியா,

 

     ஒரு வாளிக்கே செய் பச்சைமுகில் --- ஒப்பற்ற ஒரு கணையைச் செலுத்திய பச்சை மாமலைபோல் மேனியன் ஆகிய திருமாலும்,

 

      சதுர வேதத்தோடு உற்ற அயனாரும் பற்ற அரிய நடமாடு அத்தாளில் --- நான்கு வேதங்களிலும் வல்லவன் ஆன பிரமதேவனும் உணர்தற்கு அரிதான வகையில் ஆனந்தத் திருநடனம் புரிகின்ற திவபரம்பொருளின் திருவடிகளில்,

 

      பத்தி மிக இனிய ஞானப் பாடல் பற்றும் மரபு நிலையாகப் பாடித் திரிவோனே --- பத்திச் சுவை இனிதே விளங்க ஞானப் பாடல்களைப் புனைந்து  வழிபடவேண்டிய மரபுப் படிஇப்பூமியில் (தலங்கள் தோறும் சென்று) பாடித் திரிந்த திருஞானசம்பந்தமூர்த்தியே!

 

       மெத்த அலை கடலும் வாய் விட்டு ஓட --- மிகுந்த அலைகளை உடைய கடல்மு கூட வாய்விட்டு அலறுமாறு,

 

     வெற்றி மயில் மிசை கொ(ண்)டு ஏகி --- வெற்றி மயில் மீது ஏறிப் (போர்க்களம்) புகுந்து

 

      சூரர் மெய்க்குள் உற --- சூரபதுமனின் உடலில் துளைக்குமாறு,

 

     இலகு வேலைப் போகைக்கு எறிவோனே --- ஒளிபொருந்திய வேலை விடுத்து அருளியவரே!

 

      வெற்றி மிகு சிலையினால் மிக்கோர் தம் வித்து விளை புனமும் --- வெற்றி தரக் கூடிய வில்லைக் கையில் கொண்டுள்ள வலிமை மிக்க வேடர்களுடைய தினைப்புனத்திலும்

 

       வேய் முத்து ஈனும் வெற்பும் உறையும் மயில் வேளைக்காரப் பெருமாளே --- முத்துக்களைத் தருகின்ற மூங்கில் மரங்கள் நிறைந்த வள்ளிமலையிலும் வாசம் செய்யும் மயிலைப் போன்ற வள்ளிநாயகியிடம் போது போக்கிய பெருமையில் மிக்கவரே!

 

      முத்து மணி பணிகள் ஆரத்தாலும் மொய்த்த மலைமுலை  கொ(ண்)டே --- முத்துஇரத்தினங்களால் ஆன அணிகலன்களையும்,மாலையையும் அணிந்து உள்ள மலைபோன்ற முலைகளைக் கொண்டே,

 

      வித்தாரம் முற்றும் இளைஞர் உயிர் மோகித்து ஏகப் பொரு(ம்) மாதர் --- மோக இச்சை கொள்ளும்படியாக வித்தாரம் நிறைந்த இளைஞர்களைத் தாக்கும் வல்லமை பொருந்திய பொதுமகளிரின்,

 

      முற்று மதி முகமும் --- நிறைமதி முகமும்,

 

     வானில் காரும் ஒத்த குழல் --- வானத்தில் உள்ள கருமேகம் ஒத்த கூந்தலும்,

 

     விழியும் --- கண்களும்,

 

     வேய் நல் தோளும் --- மூங்கிலை ஒத்த நல்ல தோள்களுமே,

 

     முத்தி தகும் எனும் வினாவில் --- முத்தி இன்பம் தருபவை ஆகும் என்கின்ற நினைவோடு 

 

     பாயற்கு இடை மூழ்கி --- படுக்கைச் சுகத்தில் ஆழ்ந்து கிடந்து,

 

     புத்தி கரவடம் உலாவி --- புத்தியில் வஞ்சகம் கொண்டு உலவி,

 

      சால மெத்த மிக அறிவிலாரைத் தேறி --- மிகவும் நிரம்பிய அறிவு இல்லாதவர்களை (அறிவு உடையவர்களாகத்) தேர்ந்து சென்று

 

     பொன் கை புகழ் பெரியராகப் பாடி --- பொன்னை வாரிச் சொரிகின்ற கைகளை உடைய பெரியவர்கள் என்று அவர்களைப் பெரிதாகப் புகழ்ந்து பாடி,

 

     புவி ஊடே பொய்க்குள் ஒழுகி அயராமல் --- இந்தப் பூமியில் பொய்யான நெறியில் ஒழுகிச் சோர்ந்து போகாமல்,

 

     போது மொய்த்த கமல இரு தாளைப் பூண --- பூமாலைகளோடு பாமாலைகளும் நிறைந்து உள்ள தேவரீரது தாமரைத் திருவடிகளை அடியேன் அடைந்திருக்குமாறு,

 

     பொற்பும் இயல் புதுமை ஆகப் பாடப் புகல்வாயே --- பொலிவு பொருந்தப் புதுமையான பாமாலைகளால் தேவரீரது திருப்புகழைப் பாடி வழிபட அருள் புரிவாயாக.

 

பொழிப்புரை

 

     இராவணனது பத்துத் தலைகளும்தோள்கள் இருபதும் அற்று விழும்படியா,ஒப்பற்ற ஒரு கணையைச் செலுத்திய பச்சை மாமலைபோல் மேனியன் ஆகிய திருமாலும்,நான்கு வேதங்களிலும் வல்லவன் ஆன பிரமதேவனும் உணர்தற்கு அரிதான வகையில் ஆனந்தத் திருநடனம் புரிகின்ற திவபரம்பொருளின் திருவடிகளில்பத்திச் சுவை இனிதே விளங்க ஞானப் பாடல்களைப் புனைந்து  வழிபடவேண்டிய மரபுப் படி இப்பூமியில் (தலங்கள் தோறும் சென்று) பாடித் திரிந்த திருஞானசம்பந்தமூர்த்தியே!

 

     மிகுந்த அலைகளை உடைய கடல்மு கூட வாய்விட்டு அலறுமாறு,வெற்றிமயில் மீது ஏறிப் (போர்க்களம்) புகுந்துசூரபதுமனின் உடலில் துளைக்குமாறுஒளி பொருந்திய வேலை விடுத்து அருளியவரே!

 

      வெற்றி தரக் கூடிய வில்லைக் கையில் கொண்டுள்ள வலிமை மிக்க வேடர்களுடைய தினைப்புனத்திலும்முத்துக்களைத் தருகின்ற மூங்கில் மரங்கள் நிறைந்த வள்ளிமலையிலும் வாசம் செய்யும் மயிலைப் போன்ற வள்ளிநாயகியிடம் போது போக்கிய பெருமையில் மிக்கவரே!

 

       முத்துஇரத்தினங்களால் ஆன அணிகலன்களையும்மாலையையும் அணிந்து உள்ள மலைபோன்ற முலைகளைக் கொண்டே மோக இச்சை கொள்ளும்படியாக வித்தாரம் நிறைந்த இளைஞர்களைத் தாக்கும் வல்லமை பொருந்திய பொதுமகளிரின்நிறைமதி முகமும்,வானத்தில் உள்ள கருமேகம் ஒத்த கூந்தலும், கண்களும்மூங்கிலை ஒத்த நல்ல தோள்களுமேமுத்தி இன்பம் தருபவை ஆகும் என்கின்ற நினைவோடு படுக்கைச் சுகத்தில் ஆழ்ந்து கிடந்துபுத்தியில் வஞ்சகம் கொண்டு உலவி,(அவர்களுக்குப் பொன் தர வேண்டி) மிகவும் நிரம்பிய அறிவு இல்லாதவர்களை (அறிவு உடையவர்களாகத்) தேர்ந்து சென்றுபொன்னை வாரிச் சொரிகின்ற கைகளை உடைய பெரியவர்கள் என்று அவர்களைப் பெரிதாகப் புகழ்ந்து பாடிஇந்தப் பூமியில் பொய்யான நெறியில் ஒழுகிச் சோர்ந்து போகாமல்பூமாலைகளோடு பாமாலைகளும் நிறைந்து விளங்கும் தேவரீரது திருவடித் தாமரைகளை அடியேன் அடைந்திருக்குமாறுபொலிவு பொருந்தப் புதுமையான பாமாலைகளால் தேவரீரது திருப்புகழைப் பாடி வழிபட அருள் புரிவாயாக.

 

 

விரிவுரை

 

 

ஒரு வாளிக்கே செய் பச்சைமுகில்--- 

 

ஒரு வாளி --- ஒப்பற்ற ஒரு கணை.

 

பச்சை முகில் --- பச்சை மாமலைபோல் திருமேனியன் ஆகிய திருமால்.

 

சதுர வேதத்தோடு உற்ற அயனாரும் பற்ற அரிய நடமாடு அத்தாளில்--- 

 

சதுரம் - நான்கு. 

 

"சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்

மதுரம் பொழில்சூழ் மறைக்காட்டு உறைமைந்தா"  --- திருஞானசம்பந்தர்.

 

அரிய நடமாடும் அத் தாள் --- உணர்தற்கு அரிதான ஆனந்தத் திருநடனத்தை உயிர்கள் உய்யும்பொருட்டுப் புரிந்து அருளுபவர் அம்பலவாணப் பெருமான்.

 

தாள் --- திருவடி.

 

பத்தி மிக இனிய ஞானப் பாடல் பற்றும் மரபு நிலையாகப் பாடித் திரிவோனே--- 

 

பத்திச் சுவை மிகுந்த இனிய தமிழ்ப் பாடல்களைஇறைவனைப் பாட வேண்டிய ம்பரில் நின்று பாடி அருளிஉலகவரும் அதனைப் பற்றியே இறைவனைப் போற்றி உய்யுமாறு வழிகாட்டியவர் திருஞானசம்பந்தப் பெருமான். "நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்" என சுந்தரமூர்த்தி சுவாமிகள் போற்றிப் பாடி உள்ளார்.

 

வேதநெறி தழைத்து ஓங்கமிகு சைவத் துறை விளங்கபரம்பரை பொலியஅருக்கன் முதல் கோள் அனைத்தும் அழகிய உச்சங்களிலேபெருக்க வலியுடன் நிற்கபேணிய நல் ஓரை எழதிருக்கிளரும் ஆதிரை நாள் திசை விளங்க,பரசமயத் தருக்கு ஒழிய,சைவ முதல் வைதிகமும் தழைத்து ஓங்க,தொண்டர் மனம் களி சிறப்பதூய திருநீற்று நெறி எண்திசையும் தனி நடப்பஏழ்உலகும் களி தூங்கஅண்டர் குலம் அதிசயிப்பஅந்தணர் ஆகுதி பெருகவண்தமிழ் செய் தவம் நிரம்பமாதவத்தோர் செயல் வாய்ப்ப, திசை அனைத்தின் பெருமை எல்லாம் தென்திசையே வென்று ஏறமிசைஉலகும் பிறவுலகும் மேதினியே தனி வெல்லஅசைவு இல் செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்லஇசை முழுதும் மெய்யறிவும் இடங்கொள்ளும் நிலை பெருகதாள் உடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெறநாள் உடைய நிகழ்காலம் எதிர்காலம் நவை நீங்கவாள் உடைய மணி வீதிவளர் காழிப்பதி வாழஆள் உடைய திருத்தோணி அமர்ந்த பிரான் அருள் பெருகஅவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பர சமயப் பவம் பெருக்கும் புரை நெறிகள் பாழ்படநல் ஊழிதொறும் தவம் பெருக்கும் சண்பையிலே தா இல் சராசரங்கள் எல்லாம் சிவம் பெருக்கும் பிள்ளையார் ஆகத் திரு அவதாரம் செய்தார்.

 

அப்பொழுதுபொற்பு உறு திருக்கழுமலத்தோர்எப் பெயரினோரும் அயல் எய்தும் இடை இன்றிமெய்ப்படு மயிர்ப்புளகம் மேவி அறியாமேஒப்பு இல் களி கூர்வதொர் உவப்பு உற உரைப்பார்சிவன் அருள் எனப் பெருகு சித்தம் மகிழ் தன்மைஇவண் இது நமக்கு வர எய்தியது என் என்பார் சிலர். கவுணியர் குலத்தில் ஒரு காதலன் உதித்தான்அவன் வரு நிமித்தம் இது என்று அதிசயித்தார் பலர்.

 

அழிந்து புவனம் ஒழிந்திடினும்

     அழியாத் தோணி புரத்தின்மறை

யவர்கள் குலத்தின் உதித்துஅரனோடு

     அம்மை தோன்றி அளித்த வள்ளச்

 

செழுந்தண் முலைப்பால் குடித்துமுத்தின்

     சிவிகை ஏறி மதுரையில் போய்,

செழியன் பிணியும்,சமண் பகையும்,

     தேவி துயரும் தீர்த்து அருளி,

 

வழிந்து நறுந்தேன் உகுவனபோல்

     மதுரம் கனிந்து கடைதுடிக்க

வடித்துத் தெளிந்த செந்தமிழ்த் தே-

     வாரப் பாடல் சிவன் கேட்க

 

மொழிந்து சிவந்த கனிவாய்ச்சண்

     முகனே! முத்தம் தருகவே.

முத்துக் குமரா! திருமலையின்

     முருகா! முத்தம் தருகவே.--- திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்.

 

"பெம்மான் முருகன் பிறவான் இறவான்" என்று அருணகிரிநாதப் பெருமான் அருளியபடிமுருகப் பெருமான் பிறப்பும் இறப்பும் இல்லாத தனிப்பெரும் பரம்பொருள். அவர் ஒரு தாய் வயிற்றில் திருஞானசம்பந்தராக அவதரித்தார் என்பது பொருந்தாது. முருகப் பெருமான் திருவருளைப் பெற்ற அபர சுப்பியமணியர்களுள் ஒருவர்முருகப் பெருமானுடைய திருவருட்கருணையால்இந்த உலகத்தில் திருஞானசம்பந்தராக அவதரித்துசெந்நெறியாகிய சிவநெறியைப் பரப்பிபரசமய இருளை நீக்கி அருள் புரிந்தது என்று கொள்வதே பொருத்தம் ஆகும்.

 

வெற்றி மிகு சிலையினால் மிக்கோர் தம் வித்து விளை புனமும் வேய் முத்து ஈனும் வெற்பும் உறையும் மயில் வேளைக்காரப் பெருமாளே---

 

சிலை --- விலை.

 

மிக்கோர் --- வில்வித்தையில் மிக்கவர்களாகிய வேடர்கள்.


ள்ளிமலையில் இருந்த தினைப்புனத்ததைக் காவல் கொண்டு இருந்பக்குவ ஆன்மாவாகிய வள்ளிநாயகியாருக்குத் திருவருள் புரிய வேண்டிமுருகப் பெருமான் அவர் இருக்கும் இடம் தேடி வந்துபோது போக்கிக் களித்திருந்து, தக்க வேளை பார்த்து ஆட்கொண்டார்.  "விந்தை குறமாது வேளைக்கார" என்றும், "சுத்த மறவர் மகள் வேளைக்கார" என்றும் முருகப் பெருமான் அருணகிரிநாதப் பெருமான் தமது திருப்புகழ்ப் பாடல்களில் போற்றி உள்ளார். "திருவேளைக்காரன் வகுப்பு" என்னும் திருவகுப்பு ஒன்றையும் அருளி உள்ளார்.

 

முத்து மணி பணிகள் ஆரத்தாலும் மொய்த்த மலைமுலை  கொ(ண்)டே.... முற்று மதி முகமும்வானில் காரும் ஒத்த குழல்விழியும்,  வேய் நல் தோளும் முத்தி தகும் எனும் வினாவில்---

 

"ஏந்திழையார் முத்தி" என்றும் "அரிவையர் இன்புறு முத்தி" என்று சைவசித்தாந்த நூல்கள் முத்தி வகைகளைக் குறித்துக் கூறும்.

 

பொன்னாசைபெண்ணாசைமண்ணாசை முதலிய மூன்று ஆசைகள் என்னும் நெருப்பு மூண்டுஅதனால் நெருப்பிலை பட்ட இரும்பைப் போல தகித்துஆசை பாணங்களில் அகப்பட்டு ஆன்மா துன்பத்தை அடையும்.

 

பற்றுஅவாஆசைபேராசை என்று நான்கு வகை எழுச்சிகள் மனதில் எழும்.

 

1. உள்ள பொருளில் வைத்திருக்கும் பிடிப்பு பற்று எனப்படும்.

 

2. இன்னும் அது வேண்டும்இது வேண்டும் என்று கொழுந்து  விடுகின்ற நினைவு அவா எனப்படும்.

 

3. பிறர் பொருளை விரும்பி நிற்பது ஆசையாகும்.

 

4. எத்தனை வந்தாலும் திருப்தியின்றி நெய்விடநெய்விட   எரிகின்ற நெருப்பின் தன்மைபோல் சதா உலைந்து அலைந்து மேலிடுகின்ற விருப்பத்துக்குப் பேராசை என்று    பெயர்.

 

எந்தப் பொருளின் மீதும் பற்று இன்றி நின்றவர்க்கே பிறப்பு அறும்.

 

பற்றுஅற்ற கண்ணே பிறப்புஅறுக்கும்,மற்று

நிலையாமை காணப் படும்.                  --- திருக்குறள்.

 

அற்றது பற்றெனில் உற்றது வீடு      --- திருவாய்மொழி

 

உள்ளது போதும் என்று அலையாமல்இன்னும் அது வேண்டும்இது வேண்டும் என்று விரும்புவோர் துன்பத்தை அடைவார்கள். இந்த அவாவே பெருந்துயரை விளைவிக்கும்பிறப்பைக் கொடுக்கும்.

 

அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

தவாஅப் பிறப்பு ஈனும் வித்து.              ---திருக்குறள்.

 

அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம்,அஃது உண்டேல்

தவாஅது மேல்மேல் வரும்.                ---திருக்குறள்.

 

அவா என்ற ஒன்று ஒருவனுக்குக் கெடுமாயின் அவன் வீடுபேறு எய்திய போதுமட்டுமன்றி இம்மையிலும் இடையறாத இன்பத்தை அடைவான்.

 

இன்பம் இடையறாது ஈண்டும்அவா என்னும்

துன்பத்துள் துன்பம் கெடின்.              --- திருக்குறள்.

 

பிறர் பொருளின் மீது வைப்பது ஆசையாகும். இது பற்றினும்அவாவினும் கொடிது.

 

பிறருடைய மண்ணை விரும்புவது மண்ணாசைமண் ஆசையால் மடிந்தவன் துரியோதனன். பிறருடைய மனைவியை விரும்புவது பெண்ணாசை. பெண்ணாசையால் பெருங்கேடு அடைந்தவர்கள் இராவணன்இந்திரன்சந்திரன்கீசகன் முதலியோர்கள். பிறவிகள் தோறும் தொடர்ந்து வருவது பெண்ணாசை ஒன்றே. 

                                    

கடவுளுக்கும் நமக்கும் எவ்வளவு தூரம்என்று ஒரு சீடன் ஆசிரியனைக் கேட்டான். ஆசிரியர் ஆசையாகிய சங்கிலி எவ்வளவு நீளம் உளதோ அவ்வளவு தூரத்தில் கடவுள் இருக்கின்றார்” என்றார்.

 

சங்கிலி பல இரும்பு வளையங்களுடன் கூடி நீண்டு உள்ளது. ஒவ்வொரு வளையமாக கழற்றி விட்டால் அதன் நீளம் குறையும். அதுபோல் பலப்பல பொருள்களின் மீது வைத்துள்ள ஆசைச் சங்கிலி மிகப் பெரிதாக நீண்டுள்ளது. ஒவ்வொரு பொருளின் மீதும் உள்ள ஆசையைச் சிறிது சிறிதாகக் குறைக்க வேண்டும். முற்றிலும் ஆசை அற்றால் அப்பரம் பொருளை அடையலாம்.

 

கடவுள் என்று ஒரு பொருள் இல்லை. வினைகளால் உண்டாகும் பயன்கள் இல்லை என்றெல்லாம் வாதிடுகின்றவர்கள் உண்டு. அவர்களை உலகாயதர்கள் என்பர். அவர்களால் விளையும் கேட்டினை விரித்துக் கூறிஅவர்களுடைய தொடர்பு அடியேனுக்கு உண்டாகாமல் காத்து அருளவேண்டும் என்று வள்ளல்பெருமான் வேண்டுகின்றார்.

 

பரம்ஏதுவினைசெயும் பயன்ஏதுபதிஏது,

                        பசுஏதுபாசம்ஏது,

            பத்திஏதுஅடைகின்ற முத்திஏதுஅருள்ஏது,

                        பாவபுண் ணியங்கள் ஏது,

வரம்ஏதுதவம்ஏதுவிரதம்ஏதுஒன்றும்இலை,

                        மனம்விரும்பு உணவு உண்டுநல்

            வத்திரம் அணிந்துமட மாதர்தமை நாடி,நறு

                        மலர்சூடிவிளையாடி,மேல்

 கரம்மேவ விட்டுமுலைதொட்டு வாழ்ந்துஅவரொடு

                        கலந்து மகிழ்கின்ற சுகமே

            கண்கண்ட சுகம்இதே கைகண்ட பலன்எனும்

                        கயவரைக் கூடாது அருள்,

தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

                        தலம் ஓங்கு கந்தவேளே!

            தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!

                        சண்முகத் தெய்வமணியே!                 

 

துடிஎன்னும் இடை,அன்னம் பிடி என்னும் நடைமுகில்

                        துணைஎனும் பிணையல் அளகம்,

            சூது என்னும் முலைசெழும்தாது என்னும் அலைபுனல்

                        சுழிஎன்ன மொழிசெய் உந்தி,

வடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என

                        மங்கையர்தம் அங்கம் உற்றே,

            மனம்என்னும் ஒருபாவிமயல் என்னும் அது மேவி

                        மாழ்க,நான் வாழ்கஇந்தப்

படிஎன்னும் ஆசையைக் கடிஎன்ன என்சொல் இப்

                        படிஎன்ன அறியாதுநின்

            படிஎன்னஎன்மொழிப் படிஇன்ன வித்தைநீ

                        படிஎன்னும் என்செய்குவேன்,

தடிதுன்னும் மதில்சென்னை கந்தகோட்டத்துள் வளர்

                        தலம் ஓங்கு கந்தவேளே!

            தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!

                        சண்முகத் தெய்வமணியே!            

 

பாயற்கு இடை மூழ்கி புத்தி கரவடம் உலாவி ---

 

கரவடம் --- வஞ்சகம்.

 

விலைமாதர் தரும் படுக்கைச் சகமே கண்கண்ட சுகம் என்றுஅதனை விளைவை அறியாமல் அறிவு மயங்கிஇரவு பகலாக அவர்களோடு கூடி இருந்துநல்ல அறிவானது கெட்டுப் போய்க் கிடக்கும்.

 

விடம் அடைசு வேலைஅமரர் படைசூலம்,

     விசையன் விடு பாணம் ...... எனவேதான்,

விழியும் அதிபார விதமும் உடை மாதர்

     வினையின் விளைவு ஏதும் ...... அறியாதே,

 

கடிஉலவு பாயல் பகல் இரவு எனாது

     கலவிதனில் மூழ்கி,...... வறிதுஆய,

கயவன்அறிவு ஈனன்,இவனும் உயர் நீடு

     கழல்இணைகள் சேர ...... அருள்வாயே..     --- திருப்புகழ்.

 

சால மெத்த மிக அறிவிலாரைத் தேறி பொன் கை புகழ் பெரியராகப் பாடி. புவி ஊடே பொய்க்குள் ஒழுகி அயராமல்--- 

 

விலைமாதர் தரும் இன்பமே பரம இன்பம் எனக் கருதுவர் காமுகர். விலைமாதர் பொருள் இல்லாமல் கூடி மகிழமாட்டார். அவர்க்குப் பொன்னும் பொருளும் வாரி வாரித் தருதல் வேண்டும். எனவேபொன்னையும் பொருளையும் தேடிஅவை உள்ளவரிடத்துச் சென்றுஏங்கிக் கிடந்துஎல்லையற்ற துன்பத்தை அனுபவிப்பர்.

 

பயனில்லாத பதடிகளைத் தேடிப் போய்தூய செந்தமிழை - இறைவனைப் பாடுதற்கு உரிய தீந்தமிழை - வறிதாக அப் பதர்களைப் புனைந்துரையும் பொய்யுரையுமாகப் புகழ்ந்து பாடிஅவர்கள் தரும் பொருளைப் பெற்று மகிழ்வர். சிறிது காலமே நின்று மின்னலைப்போல் விரைவில் அழியும் பொருளையே பெற்று வீணுற்றனர். என்றும் அழியாத திருவருட் செல்வத்தை வாரி வாரி வழங்கும் எம்பெருமானைப் பாடி உய்யும் திறன் அறியாது கெடுவர்.  அந்தோ பரிதாபம். அவர்களின் மதியின்மை அவ்வளவு.

 

இங்ஙனம் தன் வீடு தேடி வந்து,உயர்ந்த பொருள்களோடு கூடிய பாடல்களைப் பாடினாலும்உலோப சிகாமணிகளாகிய செல்வந்தர்தாராளமாகப் பொருளைத் தராமல்இன்று வாநாளை வா என்று அலைய வைத்துமிகச் சிறிய அளவில் பொருள் தருவர். அங்ஙனம் கிடைக்கின்ற பொருளைச் சிறிது சிறிதாகச் சேர்த்துத் திரட்டிக் கொணர்ந்துஅதனை அறவழியில் செலவிடாமலும்தானும் அநுபவிக்காமலும்பொதுமகளிர்க்கு வழங்கித் துன்பம் உறுவர்.

 

குன்றும் வனமும் குறுகி வழிநடந்து

சென்று திரிவது என்றும் தீராதோ - என்றும்

கொடாதவரைச் சங்குஎன்றும்கோஎன்றும் சொன்னால்

இடாதோ அதுவே இது.                         --- இரட்டையர்.

 

வஞ்சக லோபமூடர் தம்பொருள் ஊர்கள்தேடி

மஞ்சரி கோவை தூது             பலபாவின்

வண்புகழ் பாரிகாரி என்றுஇசை வாதுகூறி

வந்தியர் போல வீணில்     அழியாதே....   --- திருப்புகழ்.

 

கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்,

     காடு எறியும் மறவனை நாடு ஆள்வாய் என்றேன்,

பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்,

     போர்முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்,

மல்ஆரும் புயம்என்றேன் சூம்பல் தோளை,

     வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்,

இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்

     யானும்என்றன் குற்றத்தால் ஏகின் றேனே.      --- இராமச்சந்திர கவிராயர்.

 

அறிவுஇலாப் பித்தர்ன்தன் அடிதொழாக் கெட்ட வஞ்சர்

     அசடர்பேய்க் கத்தர்,நன்றி ...... அறியாத

அவலர்மேல் சொற்கள் கொண்டு,கவிகள் ஆக்கிப் புகழ்ந்து,

     அவரை வாழ்த்தித் திரிந்து, ...... பொருள்தேடி,

 

சிறிது கூட்டிக் கொணர்ந்து,தெருவு உலாத்தித் திரிந்து,

     தெரிவைமார்க்குச் சொரிந்து,...... அவமேயான்

திரியும் மார்க்கத்து நிந்தை அதனை மாற்றிரிந்து,

     தெளிய மோட்சத்தை என்று ...... அருள்வாயே. --- திருப்புகழ்.

 

போது மொய்த்த கமல இரு தாளைப் பூண பொற்பும் இயல் புதுமை ஆகப் பாடப் புகல்வாயே--- 

 

போது --- மலர்கள். பூக்களாலும்இனிய தமிழ்ப் பாக்களாலும் இறைவனை வழிபடுவர். பூக்களால் வழிபடுவது கிரியை வழிபாடு. அருட்பாக்களால் வழிபடுவது ஞான வழிபாடு. ஞானமலர்களால் இறைவனை வழிபட்டு உய்யும் பேற்றுக்கு ஆவல்கொண்டு இருந்தால்இறைவன் திருவருள் துணை புரியும்.

 

கருத்துரை

 

முருகா! தேவரீரது திருவடிகளை வழிபட்டு உய்ய அருள்.

 

 

 

 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...