பிராயச்சித்தம் --- பாவமன்னிப்பு

 

பிராயச்சித்தம் --- பாவமன்னிப்பு

-----

 

          முற்பிறப்பில் செய்த வினைகளை இப்பிறப்பில் நுகர்ந்து கழிக்கிறோம்.இனிமேலும் பிறப்பு வருவதற்குக் காரணமாக இருப்பது எது என்று கேட்டால்,இப்பிறப்பில் வினையின் பயனை நுகரும் உயிர்கள்,"நான்"என்னும் அகங்காரத்தோடு நுகர்கின்றன. அப்போது விருப்பும் வெறுப்பும் விளைகின்றன. இவற்றிலிருந்து "ஏறுவினை"என்றும் "ஆகாமியம்"தோன்றி அடுத்த பிறப்பிற்குக் காரணமாகின்றது. "நான்"என்னும் உணர்வே "நான் செய்தேன்,பிறர் செய்தார்"என்ற எண்ணங்களைத் தோற்றுவித்துஅவைஅடுத்த பிறப்பிற்கு வித்து ஆகின்றன. இவ்வாறு பிறர்க்கு நலமும் தீங்கும் விளைவிக்கும் வினைஅல்லது கர்மமும்இரண்டு வகைப்படும். அறிந்து செய்யும் வினை (புத்திபூர்வகர்மம்) அறியாது செய்யும் வினை (அபுத்திபூர்வகர்மம்) என்பன அவை. அறிந்து செய்தாலும்அறியாமல் செய்தாலும்அவற்றின் பயன் தப்பாது விளையும்.

 

            வினைப் பயன்களைஅனுபவிக்கும்போது விருப்பு வெறுப்புக்கள் தோன்றுகின்றன. அவை முயற்சியால் வருகின்றன. இன்பம் வரும்போதும் துன்பம் நேரும்போதும் இவை எனது வினைப்பயனால் நேர்ந்தன எனக் கருதுவது இல்லை. இன்பம் வந்தால் "நான் செய்தேன்என்றும்துன்பம் நேர்ந்தால்,"பிறர் செய்தார்"என்றும் கருதுவது உலகியல். இதனால் மேலும் வினை விளைவதால் "நான் செய்தேன்,பிறர் செய்தார்"என்னும் அறிவுக்கோணலைஞான எரியால் மட்டுமே வெதுப்பி அழித்தல் கூடும்.

 

          இதே கருத்துபகவத்கீதை நான்காம் அத்தியாயம், 37-ஆவது பாடலில் பின்வருமாறு காட்டப்பட்டு உள்ளது காண்க.

 

யதை²தாம்ஸி ஸமித்³தோக்³நிர்பஸ்மஸாத்குருதேர்ஜுன|

ஜ்ஞாநாக்³னி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத் குருதே ததா²||

 

இதன் பொருள் --- அருச்சுனா! சுடர் விட்டு எரியும் தீயானது விறகுகளைச் சாம்பலாக்குவது போன்றுஞானக்கனலானது கர்மங்களை எல்லாம் சாம்பலாக்குகிறது.

 

           வினைகள் இரு திறப்பட்டுஅறிந்து செய்யும் வினைகள் எனவும்அறியாது செய்த வினைகள் எனவும் நிற்கும்.இவற்றால் பிறர்க்கு நலம் தீங்குகளை விளைவிக்கின்றோம். அவற்றின் விளைவு,புண்ணிய பாவங்கள் எனப்பட்டு,  தவறாமல்இறைவனால் ஊட்டப்படும் என்பதை அறிதல் வேண்டும். அவரவர் செய்த வினையின் பயனைஅவரவர்க்கு இறைவன் ஊட்டுவதுஉயிர்கள் மீது வைத்த அளப்பரும் கருணையே ஆகும்.

 

          புண்ணிய பாவங்கள் வருகின்ற விதம் குறித்தும்பாவத்தைப் போக்குகின்ற உபாயம் குறித்தும்"சிவப்பிரகாசம்"என்னும் மெய்கண்ட சாத்திரத்தில்அருள்நந்தி சிவாச்சாரியார் அருளியிருப்பதைக் காண்போம்.

 

"உற்றதொழில் நினைவுஉரையின் இருவினையும் உளவாம்;

            ஒன்று ஒன்றால் அழியாது;ஊண் ஒழியாது;உன்னில்

மற்று அவற்றில் ஒருவினைக்குஓர்வினையால்வீடு,

            வைதிக சைவம் பகரும் மரபில் ஆற்றப்

பற்றியது கழியும்இது விலையால் ஏற்கும்

            பான்மையும் ஆம்;பண்ணாது பலிக்கும்;முன்னம்

சொல்தருநூல்வழியில் வரில்,மிகுதி சோரும்;

            சோராது அங்குஅது மேலைத் தொடர்ச்சி ஆமே".

 

இதன் பொருள் ---

 

          உற்ற தொழில்நினைவுஉரையின் அருவினையும் உள ஆம் --- உயிருக்குப் பொருந்தி வந்த உடம்பினைக் கொண்டு செய்யும் தொழிலாலும்மனத்தின் நினைவாலும்வாக்கின் சொல்லாலும் மேலே கூறப்பட்ட புண்ணிய பாவங்கள் இரண்டும் உண்டாகும். (அப்படி உண்டாகிய கர்மங்களில்ஒரு கர்மத்தைக் கொண்டுஒரு கர்மத்தைப் போக்கிக் கொள்ளலாமாஇரண்டு இரண்டாக அனுபவித்து விரைவில் கழித்துக் கொள்ளலாமோஎன்றால்) உன்னில் --- ஆராய்ந்து பார்த்தால்ஒன்று ஒன்றால் ஒழியாதுஊண் ஒழியாது --- புண்ணியத்தால் பாவமும் போகாதுபாவத்தால் புண்ணியமும் கழியாது, (அப்படியானால் ஒருவர் செய்த கர்மங்களைப் போக்கிக் கொள்ள வழியே இல்லையோஎன்றால்) மற்று அவற்றின் ஒருவினைக்கு ஓர்வினையால் வீடு --- அப்படிச் செய்யப்பட்ட கர்ங்களில் ஒரு கர்மத்தைக் கொண்டு ஒரு கர்மத்தைப் போக்கிக் கொள்ளுதற்கு உபாயத்தைவைதிக சமயம் பகரும் --- வேதாகமங்கள் சொல்லுகின்றன. மரபில் ஆற்ற --- வேதாமகங்கள் சொன்ன முறையிலே செய்தால்பற்றியது கழியும் --- உயிர்களைப் பற்றிய கர்மங்கள் நீங்கும். (அப்படிச் செய்யாதவர்களுக்குகர்மத்தால் உண்டான குற்றங்கள் (தோஷங்கள்) நூங்கும் வழி என்னஎன்று கேட்டால்) இது விலையால் ஏற்கும் பான்மையும் ஆம் பண்ணாது பலிக்கும் --- இந்தக் குற்றங்கள் நீங்குவதற்குத் தானாகவே செய்துகொள்ளவில்லையானாலும்சில திரவியங்களைக் கொடுத்துசெய்ய வல்லவர்களைக் கொண்டு செய்வித்துக் கொள்வதால்தான் செய்யாது இருந்தாலும்தனக்குப் பலிக்கும். (இவ்வாறு செய்து உண்டான குற்றங்களைப் (தோஷங்களைப்) போக்கிக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கசெய்தது அழியாது என்று சொன்னது ஏதுஎன்றால்அதாவது) முன்னம் சொல் தரு நூல் வழியில் வரின் மிகுதி சோரும் --- முன்னே சொல்லப்பட்ட வேதாகமங்களின் முறையிலே ஒருவன் தான் செய்த குற்றத்திற்குத் (தோஷத்திற்குத்) தக்க பிராயச்சித்தம் (கழுவாய்) செய்தாலும்அந்தக் குற்றத்தின் (தோஷத்தின்) கௌரவம் மாத்திரம் கெட்டுகுற்றம் (தோஷம்) நிற்கும். (அது என்னவென்றால்ஒருவன் பிரமஹத்திபசுவதை முதலாக உள்ள குற்றங்களைச் செய்துவிட்டுஅதற்குத் தக்க பிராயச்சித்தம் (கழுவாய்) செய்தாலும்நரகவேதனைக்கு உள்ள கௌரவம் மாத்திரம் கெட்டுப் போகும். கொலைத் தோஷம் நிற்கும். அப்படி நின்ற கொலைத் தோஷம் என்ன செய்யும்என்றால்) சோராது அது அங்கு மேலைத் தொடர்ச்சி ஆமே --- நீங்கிப் போகாத தோஷமானதுஇன்னொரு பிறவியை எடுத்து அனுபவிக்க நிற்கும். ஆனபடியால்ஒரு கர்மத்தால்இன்னரொ கர்மம் அழியாது என்பதை அறிதல் வேண்டும்.

 

          ஒரு வினையால் மற்றொரு வினை அழியாதுஎன்று சொல்லப்பட்டுள்ளதைக் கூர்ந்து நோக்கினால்,வினைப்பயனை அனுபவித்துக் கழிப்பதேவினை வராமல் காக்கும் முறை என்பது புலப்படும்.ஆயினும் வைதிக சைவ மரபில் கழுவாய் செய்யப் பாவம் நீங்கும் எனப்படுகிறதே என்றால்,புண்ணியத்தால் பாவத்தை ஒழிப்பது,விலை கொடுத்து நற்பயனை வாங்க முயல்வதற்கு ஒப்பாகும். ஆகம விதிப்படி கழுவாய் செய்தாலும் வினையின் கொடுமை நீங்குமே ஒழிய,வினையின் பயன் வேரறக் கழியும் என்பது உண்மை அல்லஅப்படிக் கழியாது மிஞ்சி நின்ற வினைப்பயன் அடுத்த பிறவிக்கும் தொடர்புடையது ஆகும்.

 

          கூர்ந்து நோக்கினால்,ஒரு புண்ணியத்தால் மற்றொரு பாவம் கழிக்கப்படுவதில்லை என்பதும்,வினை நீங்குவதற்கு இறைவன் திருவருளே துணை நிற்க வேண்டும் என்பதும் தெளிவாகும்.சமய குரவர்களான திருஞானசம்பந்தப் பெருமானும்,திருநாவுக்கரசர் பெருமானும்இறைவன் திருவடிகளை இறுகப்பற்றிக் கொண்டவர்களுக்கு வினைகள் வேரோடு அறும் என்று பல இடங்களில் அறிவுறுத்தி அருளியுள்ளமையைநன்றாக எண்ணிப் பார்த்தால்,வினைகளை முற்றிலும் துடைப்பவன் இறைவனே என்பதும்பிராயச்சித்தம் என்னும் கழுவாய் அல்லது பரிகாரம் மூலம் விளைகள் அறுவதற்கு வழியில்லை என்பதும்அவரவர் வினையை அவரவர் அனுபவித்தே கழிக்கவேண்டும் என்பதும்தெளிவாகும்.

 

          மேலும்பிராயச்சித்தம் அல்லது கழுவாய் அல்லது பரிகாரம் என்பது அவ்வபோது செய்யக் கூடாதவற்றைச் செய்துவிட்டுஅதன் விளைவில் இருந்து தப்பித்துக்கொள்ள அவ்வபோது செய்துகொள்வது அல்ல. ஒருமுறை தவறு செய்தால் மன்னிப்புக் கிடைக்கும். தொடர்ந்து தவறு செய்துகொண்டு இருந்தால்மன்னிப்புக் கிடைக்காது. தக்க தண்டனையே கிடைக்கும்.

 

          மேலே கூறப்பட்டமனம் வாக்கு காயங்களால் உயிர்கள் புரியும் நல்வினை தீவினை பற்றி"ஞானாமிர்தம்"என்னும் நூலில் கூறியுள்ளதைப் பார்ப்போம்....

 

"பொய்ப் பொறி புணர்க்கும் முப்பொறி உள்ளும்

உள்ளச் செய்தி தெள்ளிதில் கிளப்பின்,

இருள்தீர் காட்சிஅருளொடு புணர்தல்,

அரும்பொறை தாங்கல்பிறன்பொருள் விழையாமை,

செய்தநன்று அறிதல்கைதவம் கடிதல்,

பால் கோடாது பகலில் தோன்றல்,

மான மதாணி ஆணின் தாங்கல்,

அழுக்காறு இன்மைஅவாவின் தீர்தல்,

அருந்துயர் உயிர்கட்கு இருந்த காலை

அழல்தோய்வு அன்னர் ஆகிஆனாக்

கழலும் நெஞ்சில் கையற்று இனைதல்,

பன்னரும் சிறப்பில் மன்னுயிர்த் தொகைகட்கு

அறிவும் பொறியும் கழிபெரும் கவினும்

பெறற்கு அரும் துறக்கம் தம்மின் ஊஉங்கு

இறப்ப வேண்டும் என்று எண்அரும் பெருங்குணம்;

வாக்கொடு சிவணிய நோக்கின் மீக்கொள

அறம் பெரிது கரைதல்புறங் கூறாமை,

வாய்மைகல்விதீமையின் திறம்பல்,

இன்மொழி இசைத்தல்வன்மொழி மறத்தல்,

அறிவுநூல் விரித்தல்அருமறை ஓதுதல்,

அடங்கிய மொழிதல்கடுஞ்சொல் ஒழிதல்,

பயனின்ற படித்தல்படிற்று உரை விடுத்தல்,

காயத்து இயைந்த வீயா வினையுள்

அருந்தவம் தொடங்கல்திருந்திய தானம்,

கொடைமடம் படுதல்படைமடம் படாமை,

அமரர்ப் பேணல்ஆகுதி அருத்தல்,

ஒழுக்கம் ஓம்பும் விழுப்பெரும் கிழமை

உடம்பிடி ஏந்தி உடல் தடிந்திடுமார்

அடைந்த காலை அவண் இயல் துயரம்

தேரார் அல்லர் தெரிந்தும் ஆருயிர்

பெரும் பிறிதாக இரும்பிணம் மிசைஞரின்

ஓராங்குப் படாஅ மாசுஇல் காட்சி,

ஐம்பெரும் பாதகத்து ஆழி நீந்தல்

இந்தியப் பெரும்படை இரிய நூறும்

வன்தறு கண்மைவாள் இட்டா அங்கு

நோவன செய்யினும் மேவன இழைத்தல்,

தவச்சிறிது ஆயினும் மிகப்பல விருந்து,

பாத்தூண் செல்வம்பூக்கமழ் இரும்பொழில்,

தன்மனைக் கிழத்தி அல்லதைப் பிறர்மனை

அன்னையின் தீரா நன்னர் ஆண்மை

கார்கோள் அன்ன கயம்பல கிளைத்தல்,

கூவல் தொட்டல்ஆதுலர் சாலை,

அறம்கரை நாவின் ஆன்றோர் பள்ளி,

கடவுள் நண்ணிய தடவுநிலைக் கோட்டம்,

இனையவை முதல நினைவரும் திறத்த

புரத்தல் அறத்துறைமறத்துறை இவற்றின்

வழிப்படாது எதிர்வன கெழீஇ

உஞற்றல் என்ப உணர்ந்திசி னோரே."

 

இதன் பொருள் ---

 

          பொய்ப் பொறி புணர்க்கும் முப்பொறி உள்ளும் --- நிலையற்றதாகிய இந்தத் தூல உடம்பிலே உயிர்க்குக் கூட்டப்பட்டுள்ள மனம்வாக்குகாயம் என்ற மூன்று கரணங்களாலும் ஈட்டப்படும் கர்மங்களுள்,உள்ளச் செய்தி தெள்ளிதில் கிளப்பின்--- (முதலில் சொல்லப்பட்ட) மனம் என்னும் கருவியால் செய்யப்படுவன ஆகிய கர்மங்களைத் தெளிவாகச் சொல்லுவதாயின்இருள்தீர் காட்சிஅருளொடு புணர்தல்--- ஐயம்திரிபு ஆகிய குற்றங்களில் இருந்து நீங்கிய மெய்யுணர்வானது எக்காலமும் அருளொடு கூடி இருத்தல்,அரும்பொறை தாங்கல்--- பொறுத்தற்கு அரிய சினம் உண்டாகிய போதும்சொல்ல முடியாத துன்பம் வந்த போதும் அவற்றைப் பொறுத்துக் கொள்ளுதல்பிறன் பொருள் விழையாமை--- தமது உடல் சுகத்துக்காக வேண்டிபிறரிடம் உள்ள பொருளைக் கவர்ந்து கொள்ள விரும்பாமை,செய்த நன்று அறிதல்--- பிறர் தனக்குச் செய்த நன்மையை மறவாது இருத்தல் கைதவம் கடிதல்--- மனத்தில் வஞ்சகத்தை ஒழித்தல்,பால் கோடாது பகலில் தோன்றல்--- விருப்பு வெறுப்பு இல்லாமல்எங்கும் ஒரு தன்மையாக விளங்குகின்ற சூரியனைப் போலநண்பர்பகைவர் முதலிய எவரிடத்தும் ஒரு பக்கம் சாயாமல் நடுவுநிலையோடு இருத்தல்,மான மதாணி ஆணின் தாங்கல்--- மானம் என்னும் பெருமைக்கு உரிய அணிகலனை ஆண்மையோடு தரித்துக் கொள்ளுதல்,அழுக்காறு இன்மை--- பிறரிடத்து உள்ள செல்வம் முதலிய சிறப்புக்களைக் கண்டு பொறாமைப் படாது இருத்தல்அவாவின் தீர்தல் பிறப்பிற்கு ஏதுவாகிய ஆசையை விடுதல்அருந்துயர் உயிர்கட்கு இருந்த காலைஅழல்தோய்வு அன்னர் ஆகிஆனாக்கழலும் நெஞ்சில் கையற்று இனைதல்--- பிற உயிர்களுக்குப் பெரும் துன்பம் உண்டாக காலத்தில்நெருப்பில் இட்டால் போன்ற துயரத்தைத் தாமும் அடைந்துஅளவுகு அடங்காமல் அருகிய உள்ளத்தினராய்துன்பம் மிகுதியால் செயல் அற்று வருந்துதல்,பன்னரும் சிறப்பில் மன்னுயிர்த் தொகைகட்கு --- சொல்லுதற்கு அரிய சிறப்பினை உடைய நிலைபெற்ற உயிர்த் தொகுதிகளுக்குஅறிவும் பொறியும் --- ஞானமும்செல்வமும்கழிபெரும் கவினும் --- மிகப்பெரிய வடிவழகும்பெறற்கு அரும் துறக்கம் --- பெறுதற்கு அரிய சுவர்க்க இன்பமானதுதம்மின் ஊஉங்கு இறப்ப வேண்டும் என்று --- தம்மைக் காட்டிலும் மிகுதியாக உண்டாக வேண்டும் என்றுஎண்அரும் பெருங்குணம்--- எண்ணுகின்ற அரிய பெரிய குணம் ஆகிய இவைகளே ஆகும்.

 

          (இதுவரைமனத்தால் செய்யப்படும் நல்ல நினைவுகள் பற்றிக் கூறிஇனிவாக்கால் செய்யப்படும் வினைகளை எடுத்துக் கூறப்படுகின்றது)

 

          வாக்கொடு சிவணிய நோக்கின் --- வாக்கினால் வந்து பொருந்துகின்ற வினைகள் பற்றிக் கூறல் உற்றால்மீக்கொள அறம் பெரிது கரைதல்--- மேன்மை உண்டாகுமாறு அறங்களை மிகுதியாக எடுத்து உரைத்தல் புறங் கூறாமை--- ஒருவரைக் காணாத இடத்துஅவரைப் பற்றிப் பிறரிடம் இகழ்ந்து கூறாது இருத்தல்வாய்மை--- உண்மையான சொற்களைப் பேசுதல்கல்வி---உயர்ந்த நூல்களைக் கற்றல்தீமையின் திறம்பல்--- தீய சொற்களில் இருந்து நீங்குதல்இன்மொழி இசைத்தல்--- இனிய சொற்களைக் கூறுதல்வன்மொழி மறத்தல் --- வன்சொற்களை அடியோடு மறந்து விடுதல்அறிவு நூல் விரித்தல்--- (உலக நூல்களை விடுத்து) அறிவு நூல்களை ஓதுதல்அருமறை ஓதுதல்--- அரிய வேதங்களை ஓதுதல்அடங்கிய மொழிதல்--- பணிவான சொற்களைச் சொல்லுதல்கடுஞ்சொல் ஒழிதல்--- கடுமையான சொற்களைச் சொல்லாது இருத்தல்பயனின்ற படித்தல்--- பிறர்க்குப் பயன்படும் சொற்களைச் சொல்லுதல்படிற்று உரை விடுத்தல்--- பயனில்லாத வெற்றுச் சொற்களைச் சொல்லாது விடுத்தல்,

 

          (இனி உடம்பால் செய்யப்படும் வினைகளைப் பற்றிக் கூறப்படுகின்றது)

 

          காயத்து இயைந்த வீயா வினையுள் --- உடம்பால் செய்யப்படுகின்ற கெடாத வினைகளுள் சிலவற்றைச் சொல்லப் புகுந்தால்அருந்தவம் தொடங்கல்--- மனமானது பொறிவழிப் போகாது நிறுத்துவதற்கு வேண்டிவிரதங்களால் சுருக்குதல் முதலான அரிய தவத்தை மேற்கொள்ளுதல்திருந்திய தானம் அறநெறியில் வந்த பொருளைத் தகுதி உடைய நல்லோர்க்கு மகிழ்ந்து கொடுத்தல்கொடைமடம் படுதல்--- இன்னார் இனியார் என்று பாராமல் தன்னிடம் உள்ளதை எல்லாம் வரையாது கொடுத்தல்படைமடம் படாமை--- போரில் வீரர் அல்லாதார் மேலும்புறமுதுகு இட்டார் மேலும்புண்பட்டவர் மேலும்மூத்தவர்இளையவர் மேலும் செல்லாது இருத்தல்அமரர்ப் பேணல்--- தேவர்களைப் போற்றி வழிபடுதல்ஆகுதி அருத்தல் --- வேள்விகளைச் செய்துஆகுதிகளைத் தேவர்களுக்கு உணவாகக் கொடுத்தல்ஒழுக்கம் ஓம்பும் விழுப்பெரும் கிழமை --- தான் இருந்த நிலைக்குப் பொருந்திய ஒழுக்கத்தைப் போற்றிப் பாதுகாக்கும் சிறப்புஉடம்பிடி ஏந்தி உடல் தடிந்திடுமார் அடைந்த காலை --- வாளை ஏந்திக் கொண்டுதனது உடலை வெட்டுவதற்குபலர் கூடி வந்த பொழுதுஅவண் இயல் துயரம் தேரார் அல்லர் --- தனது உடலும் உள்ளமும் என்ன பாடுபடும் என்பதைத் தெரியாதவர் அல்லர்தெரிந்தும் --- அது தெரிந்து இருந்தும்ஆருயிர் பெரும் பிறிதாக --- (புலால் உணவிற்காக) அருமையான உயிரை அதன் உடலில் இருந்து பிரியச் செய்து,இரும்பிணம் மிசைஞரின் ஓராங்குப் படாஅ --- பிணமாகிய உடலைத் தின்பவருடன் நட்புக் கொள்ளாதமாசுஇல் காட்சி--- குற்றம் அற்ற அறிவுடைமைஐம்பெரும் பாதகத்து ஆழி நீந்தல் --- கொலைகளவுகள் உண்ணுதல்குருநிந்தனைபொய் என்று சொல்லப்பட்ட ஐம்பெரும் பாதகம் ஆகிய ஆழ்கடலில் விழாது தப்புதல்இந்தியப் பெரும்படை இரிய நூறும் வன் தறுகண்மை--- இந்திரியங்கள் ஆகிய வெல்லுதற்கு அரிய பெரிய பகைப்படையைப் பின்னிட்டு ஓடுமாறு வென்று அழிக்கின்ற வலிய பேராண்மைவாள் இட்டா அங்கு நோவன செய்யினும் மேவன இழைத்தல்--- வாளால் அறுப்பது போன்ற பெரும் துன்பத்தை ஒருவர் தனக்குச் செய்தாலும்அவரே பின்னொரு சமயத்தில் வந்து ஒரு காரியத்தை முடித்துக் கொடுக்கும்படி வேண்டி நிற்கும் நிலை வந்தால்பழையதை நினைத்துப் பாராதுஅவர் வேண்டிய ஒன்றைவேண்டியவாறே முடித்துக் கொடுத்தல்தவச் சிறிது ஆயினும் மிகப்பல விருந்து பாத்தூண் செல்வம்--- தன்னிடம் உள்ளது மிகச் சிறியது ஆனாலும்மிகப் பலராகிய விருந்தினரோடு பகிர்ந்து உண்டு மகிழுகின்ற சிறப்பு,

பூக்கமழ் இரும்பொழில்--- பூக்கள் மணம் கமழுகின்ற பெரிய சோலைகளை அமைத்தல்தன்மனைக் கிழத்தி அல்லதைப் பிறர்மனை அன்னையின் தீரா நன்னர் ஆண்மை--- தன்னுடைய மனைவியைத் தவிரபிற மாதரைத் தனது தாயைப் போலப் பார்ப்பதில் நீங்காத நல்ல பெரிய ஆண்மைகார்கோள் அன்ன கயம்பல கிளைத்தல்--- கடலைப் போன்ற ஏரி குளம் பலவற்றை அமைத்தல்கூவல் தொட்டல்--- கிணறுகளை வெட்டுதல்ஆதுலர் சாலை--- மருத்துவச் சாலைகளை உண்டாக்குதல்அறம் கரை நாவின் ஆன்றோர் பள்ளி--- அறங்களை எடுத்துச் சொல்லுகின்ற நாவினை உடைய சான்றோர்கள் தங்கி இருப்பதற்கு உரிய தவப் பள்ளிகளை அமைத்தல்கடவுள் நண்ணிய தடவுநிலைக் கோட்டம்--- கடவுள் எழுந்தருளி உள்ள உயர்ந்த ஆலயங்களை எடுத்தல்,

 

          இனையவை முதல நினைவரும் திறத்த புரத்தல் அறத்துறை--- இத் தன்மை உடைய இவை முதலான நினைத்தற்கு அரிய புண்ணியச் செயல்களைச் செய்தல் அறத்துறை ஆகிய கர்மங்கள் ஆகும். மறத்துறை --- இனிமறத்துறை என்னும் பாவமானதுஇவற்றின் வழிப்படாது எதிர்வன கெழீஇ உஞற்றல் --- மேலே சொன்னவற்றிற்கு மாறுபாடானவற்றைப் பொருந்திச் செய்தல்என்ப உணர்ந்திசி னோரே --- என்று உண்மையை உணர்ந்த பெரியோர் சொல்லுவர்.

 

          மேலேஒரு புண்ணியத்தால் மற்றொரு பாவம் கழிக்கப்படுவதில்லை என்றும்,வினை நீங்குவதற்கு இறைவன் திருவருளே துணை நிற்க வேண்டும்என்றும் கண்டோம்.

 

          தானே பின்னர் நினைந்து வருத்தப்படுமாறு ஒரு காரியத்தை ஒருவன் செய்யாது இருக்கவேண்டும். தப்பித் தவறிச் செய்து விட்டால்அத்தகைய காரியத்தைத் திரும்பவும் செய்யாமல் இருப்பது நல்லது என்னும் பொருளில், "எற்று என்று இரங்குவ செய்யற்கசெய்வானேல்மற்று அன்ன செய்யாமை நன்று" என்று திருவள்ளுவ நாயனார் அருளியதன் அருமையை எண்ணிப் பார்க்கவேண்டும். அப்படிப் பார்த்தால், ஒருவன் தான் செய்த பாவச் செயல்களுக்கு உள்ளம் வருந்திபின்னர் செய்யாது தவிர்த்தால்அவன் செய்கின்ற வினைகள் எல்லாம் தூய்மை ஆகின்றன. இனிச் செய்யும் செயல்கள் தூயவாக இருந்தாலும்அவன் நல்லவனாகவே மாறினாலும்,முன்னர் செய்த பாவச் செயல்களின் பயனை அனுபவித்துத் தான் ஆகவேண்டும்.

 

          இதற்கு உண்மையான பிராயச்சித்தம் என்னும் கழுவாய் இல்லையாமனம் திருந்திய ஒருவனுக்குப் பாவமன்னிப்பே கிடையாதாமேலும் அவன் துன்பப் படத் தான் வேண்டுமா?என்றால்,அப்படிப்பட்ட தூய்மையான மனம் உடைய ஒருவனுக்குத் தெய்வம் துணை நிற்கும் என்பதைக் காட்டத்தான்வினை நீக்கம் பெறத் திருவருள் துணை நிற்கவேண்டும் என்று கண்டோம்.

 

          வினை நீக்கம் பெறுவதற்குஇறைவன் திருவடியைச் சரண் புகுவது ஒன்றே வழி ஆகும். "கலைஞான சம்பந்தன் தமிழ் பத்தும்  யாழ் இன்னிசை வல்லார்,சொலக் கேட்டார் அவர் எல்லாம்ஊழின்மலி வினைபோயிட உயர்வான் அடைவாரே" எனவும், "ஞானசம்பந்தன் வாய்நவிற்றிய தமிழ்மாலைஆதரித்துஇசை கற்று வல்லார் சொலக்கேட்டு உகந்தவர் தம்மைவாதியா வினை,மறுமைக்கும் இம்மைக்கும்வருத்தம் வந்து அடையாவே" எனவும் தவமுதல்வராகிய திருஞானசம்பந்தப் பெருமான் அளித்துள்ள உத்தரவாதமே இதற்குச் சான்றாகும்.

 

          பகவத் கீதையிலும், "ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ - அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:" (எல்லா அறங்களையும் பரித்தியாகம் செய்துவிட்டுஎன் ஒருவனையே சரணடைவாயாக. நான் உன்னை எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவிப்பேன்விசனப்படாதே) என்று கண்ணன் அருச்சுனனுக்கு உபதேசித்தது காண்க.

 

          புராணத்திலும்தக்கனுடைய சாபத்தால் வருந்திய சந்திரன்சிவபெருமானைச் சரண் புகஅவனுடைய சாபம் தீர்ந்தது என்பதை அறிந்துள்ளோம். 

 

          பிரமனது மானத புத்திரருள் ஒருவனாகியத் தட்சப்பிரசாபதி,தான்பெற்ற அசுவினி முதல் ரேவதி ஈறாயுள்ள இருபத்தியேழு பெண்களையும்அநுசூயாதேவியின் அருந்தவப் புதல்வனாகிய சந்திரன் அழகில் சிறந்தோனாக இருத்தல் கருதி அவனுக்கு மணம்புரிவித்துஅவனை நோக்கி, “நீ இப்பெண்கள் யாவரிடத்தும் பாரபட்சமின்றி சமநோக்காக அன்பு பூண்டு ஒழுகுவாயாக” என்று கூறிப் புதல்வியாரைச் சந்திரனோடு அனுப்பினன். சந்திரன் சிறிது நாள் அவ்வாறே வாழ்ந்துபின்னர் கார்த்திகை உரோகணி என்ற மாதர் இவரும் பேரழகு உடையராய் இருத்தலால்அவ்விரு மனைவியரிடத்திலே கழிபேருவகையுடன் கலந்துஏனையோரைக் கண்ணெடுத்தும் பாராதவன் ஆனான். மற்றைய மாதர்கள் மனம் வருந்தி,தமது தந்தையாகிய தக்கனிடம் வந்து தம் குறைகளைக் கூறி நின்றனர். அது கண்ட தக்கன் மிகவும் வெகுண்டுசந்திரனை அழைத்து “உனது அழகின் செருக்கால் என் கட்டளையை மீறி நடந்ததனால் இன்று முதல் தினம் ஒருகலையாகத் தேய்ந்து ஒளி குன்றிப் பல்லோராலும் இகழப்படுவாய்” என்று சபித்தான்.

 

          அவ்வாறே சந்திரன் நாளுக்குநாள் ஒவ்வொரு கலையாகத் தேய்ந்து பதினைந்து நாட்கள் கழிந்தபின் ஒருகலையோடு மனம் வருந்திஇந்திரனிடம் சென்றான். பின்னர் பிரமதேவனிடம் சென்றான். எங்கும் அவனது துன்பத்திற்குத் தீர்வு கிடைக்கவில்லை. இறுதியில்சந்திரன் திருக்கயிலைமலைச் சென்றுநந்தியெம்பெருமானிடம் அனுமதி பெற்று,மகா சந்நிதியை அடைந்துஅருட்பெருங்கடலாகியச் சிவபெருமானை முறையே வணங்கிதனக்கு நேர்ந்த சாபத்தை விண்ணப்பித்து, “பரம தயாளா! எனக்கு உற்ற இவ்விடரை நீக்கி இன்பம் அருள்வீர்” என்ற குறையிரந்து நின்றனன்.மலைமகள் மணாளன் மனமிரங்கி, "அஞ்சேல்" என அபயம் தந்துஅவ்வொரு கலையினைத் தமது திருமுடியில் தரித்து, “உனது கலைகளில் ஒன்று நமது திருமுடியில் இருத்தலால் நாளுக்கு ஒரு கலையாகக் குறைந்தும் இருக்கக் கடவாய்எப்போது ஒரு கலை உன்னை விட்டு நீங்காது” என்று கருணை பாலித்தனர். இவ் வரலாறு கந்தபுராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

 

          இராவணன் விமானத்தில் செல்லுகையில்,சிவபரம்பொருள் வீற்றிருந்து அருளும் திருக்கயிலாயமலை தடையுண்டது.  அப்பொழுது நந்திதேவர் அவனை விலக்கவும் கேளாது,இராவணன் திருக்கயிலையைப் பேர்த்து எறியத் தொடங்கினான். அதுகண்ட சிவபெருமான் அவனை மலையின்கீழ்தனது கால் பெருவிரலால்நெறித்தார். இராவணன் அலறித் துடித்தான். தனது தவறை உணர்ந்துசிவபரம்பொருளைச் சாமகானத்தால் துதித்தான். அவனது வழிபாட்டிற்கு இரங்கிநாளும் வாளும் அறித்தருளினார் சிவபெருமான். இறைவன் இருக்கும் மலையையே பெயர்த்து எறியும் அளவுக்குப் பெரும்பாவத்தைப் புரிந்தான் இராவணன். பின்னர்தனது தவறை உணர்ந்துஇறைவனைச் சரண் அடைந்ததால் உய்தி பெற்றான். இதுவே பாவமன்னிப்பு ஆகும்.

 

          திருஞானசம்பந்தப் பெருமான் தாம் பாடியருளிய திருப்பதிகம் தோறும்எட்டாவது திருப்பாடலில்,இந்த வரலாற்றை உலகவர்க்கு அறிவுறுத்தி,இறைவனைச் சரணடைந்து எல்லாப் பாவங்களில் இருந்தும் ஈடேற்றம் பெறலாம் என்பதைக் காட்டினார் என்று தெய்வச் சேக்கிழார் பெருமான்பெரியபுராணத்தின் வாயிலாக நமக்கு வழிகாட்டுகின்றார்.

 

மண்ணுலகில் வாழ்வார்கள்

            பிழைத்தாலும் வந்துஅடையின்,

கண்ணுதலான் பெருங்கருணை

            கைக்கொள்ளும் எனக்காட்ட,

எண்ணம்இலா வல்லரக்கன்

            எடுத்துமுறிந்து இசைபாட,

அண்ணல் அவற்கு அருள்புரிந்த

            ஆக்கப்பாடு அருள்செய்தார்.

 

இதன் பொருள் ---

 

          இம்மண்ணுலகத்தில் வாழுகின்ற உயிர்கள் பிழையைச் செய்தாலும்அவை தம்மை வந்து சரண் புகுந்தால்,நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் தமது பெருங்கருணையினால் அவற்றை மன்னித்தருளிக் கைகொடுத்து ஆள்வார் என்பதைக் காட்டவேநல்லுணர்வு இல்லாதவன் ஆன கொடுமை உடைய அரக்கனான இராவணன் திருக்கயிலை மலையை எடுக்கஉடல் முறிவுபட்டு,பின் இசையைப் பாடப் பெருமையுடைய இறைவர் அவனுக்கும் அருள்செய்த ஆக்கப்பாடுகளை அந்தத் திருப்பதிகத்துள் வைத்துப் பாடினார்.

 

          அடைதல் --- சரண்டைதல். புகலாக வந்து அடைதல்.

 

          எனவேதிருஞானசம்பந்தப் பெருமான் காட்டிய பிராயச்சித்தம் அல்லது கழுவாய் என்பதுஇறைவனைச் சரணடைவதே ஆகும். அதுவேபாவமன்னிப்புக் கிடைக்கும் வழி. அல்லாதுவெற்றுக் கிரியைகளின் வழிபிராயச்சித்தம் அல்லது கழுவாய் என்பது கிடையாது. ஒன்று அனுபவித்துக் கழிக்கவேண்டும் அல்லது இறைவனைச் சரண்புக வேண்டும். கண்ணன் காட்டிய சரணாகதியும் இதுவே ஆகும்.

 

"கோடிய மனத்தால்வாக்கினால்செயலால்

     கொடிய ஐம்புலன்களால் அடியேன் 

தேடிய பாவம்,நரகமும் கொள்ளா,

     செய்தவம் புரியினும் தீரா;

வீடிய பிரமர் சிரம் எலாம் கவர்ந்த

     விழவு அறா வீதி வெண்காடா!

ஆடிய பாதா! அம்பலத்து ஆடும் ஐயனே!

     உய்யுமாறு அருளே"

 

என்று பட்டினத்தடிகள் பாடியுள்ளதை நோக்கபிராயச்சித்தமாகத் தவம் புரிவதால் மட்டும் வினைப் பயன் தீராது. இறைவன் உய்தியை அருளவேண்டும். எனவேதான்இறைவனிடம் முறையிட்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

வான் செய்த நன்றிக்கு வையகம் என்ன செய்யும்?

  2. வான்செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?                              ----- கூன்செய்த பிறையணியும் தண்டலையார்      கருணைசெய்து, கோடி கோட...