ஆத்திசூடி --- 18. இடம்பட வீடு எடேல்

 

 

                                                18. இடம்பட வீடு எடேல்

 

     (பதவுரை) இடம்பட --- விசாலமாக,  பெரிதாக, வீடு --- வீட்டை, எடேல் --- கட்டாதே

 

     (பொழிப்புரை) அளவுக்குமேல் இடம் வீணாய்க் கிடக்கும்படி வீட்டைப் பெரிதாகக் கட்டாதே.

 

     ''சிறுகக் கட்டிப் பெருக வாழ்'' என்பது பழமொழி.

 

     இடம்பம் என்னும் ஆடம்பரம் வேண்டாம் என்று அறிவுறுத்தினார். வீடு என்பது மிகவும் விசாலமாகவும், மிகவும் குறுகியதாகவும் இருத்தல் கூடாது.

 

     ஆடம்பரம் கருதி, தம்மைப் பெரிதாகப் பிறர் எண்ணவேண்டும் என்று கருதி, தன்னைத் தானே பெரிதாக மதித்துக் கொண்டு, ஒருவன் தனது கையில் உள்ள பொருளை எல்லாம் கொட்டி, வீட்டை அழகிலும், அளவிலும் பெரிதுபடுமாறு கட்டக் கூடாது. வீட்டில் வைப்பதற்குப் பொருள் இல்லாமல் போகும்.

 

     இடம்பம் என்னும் ஆடம்பரத்தால் கெட்டுப் போனவவர்கள் அநேகம் பேர். ஆடம்பரத்தின் மென்மையான மெத்தையின் மீதுதான் பெரும்பாலான அரசுகள் மாய்ந்து ஒழிந்தன. சொகுசான வாழ்க்கை மனித சமூகத்தையே அழிக்கின்றது. உடல்களையும் உள்ளங்களையும் அரித்து விடுகின்றது. ஆடம்பரங்கள் ஒழுக்கங்களைக் கெடுத்து விடுகின்றன.

 

     ஆடம்பரம் என்னும் சொல்லுக்கு, பகட்டு, வெளிவேடம் என்றும் பொருள் உண்டு. செல்வச் செருக்குக் காரணமாக ஆடம்பரம் பண்ணுவோரும் உண்டு. தன்னைப் பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காக, புலியைப் பார்த்துப் பூனை சூடு வைத்துக் கொண்டதற்கு ஒப்ப, பெரும்பொருள் வைத்து வீடு எடுப்போரும் உண்டு. ஆடம்பரமே கூடாது. அது கேட்டை விளைவிக்கும் என்னும்போது, போலியான ஆடம்பரம் என்பது பெருங்கேட்டை விளைவிக்கக் கூடியதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

     பெரும்பொருளைச் செலவு பண்ணி, வீட்டைப் பெரிதாகவும், ஆடம்பரமாகவும் அமைத்துவிட்டு, அதனை, அவ்வப்போது பராமரிப்பதற்கு இல்லாமல் போவது, எடுத்துக் கட்டிய வீடு கெட்டுப் போவதற்கு இடமாகும். அல்லாமல், பிறரால் பழிப்புக்கும் ஆளாக நேரும்.

 

     ஆசைக்கு ஆனையைப் பெரும்பொருள் செலவிட்டு வாங்கிவிடலாம். ஆனால், அதற்கு நாள்தோறும் உணவு தந்து பராமரித்தல் வேண்டும். "ஆனை அசைந்து தின்னும், வீடு அசையாமல் தின்னும்" என்பது பழமொழி.

 

     ஒருவன் கல்வி அறிவு இல்லாதவனாக இருந்தாலும், அவன் கையில் பொருள் இருந்தால்தான் எல்லாரும் மதிப்பர். அவனை எதிர்கொண்டு உபசாரம் செய்வர். கல்வி அறிவு உள்ளவனாக இருந்தாலும், பொருள் இல்லாதவனாய் இருந்தால், அவனை அவனுடைய மனைவியும் விரும்பமாட்டாள். அன்பு செலுத்த வேண்டிப் பெற்றெடுத்த தாயும் அவன் விரும்பமாட்டாள். அவன் வாயில் இருந்து பிறக்கும் சொல் எதுவும் எடுபடாது. எல்லாரும் அவனை ஒதுக்கியே வைப்பர் என்கின்றார் ஔவையார், "நல்வழி" என்னும் நூலில்,

 

கல்லானே ஆனாலும், கைப்பொருள் ஒன்று உண்டாயின்,

எல்லாரும் செனறு அங்கு எதிர்கொள்வர்,-இல்லானை

இல்லாளும் வேண்டாள்,மற்று ஈன்றெடுத்த தாய்வேணடாள், 

செல்லாது அவன்வாயிற் சொல்.        ---  நல்வழி.

 

     ஒரு ஆலமரத்தில் இலையும், மலர்களும், காயும், கனிந்த பழங்களும் இருந்தால், பறைவைகள் யாவும் தமது இருப்பிடம் என்று கருதி அதனிடத்தில் வாழ்ந்து இருக்கும். அந்த மரத்தின் அடியில் பலகோடி வாலிபர்கள் வந்து தங்கி இளைப்பாறுவார்கள். ஆனால, அந்த ஆலமரத்தில் இலை முதலியன இல்லாது போனால், அந்த மரத்தில் பறவைகளும் வந்து தங்காது. அதனடியில் இளைப்பாற வந்து தங்குவாரும் இல்லை. அதுபோலவே, ஒருவனிடம் செல்வம் குவிந்து இருக்கும்பொழுது, கோடிக்கணக்கான பேர் வந்து, இருந்து, வணங்கித் துதித்துப் பாராட்டுவர். செல்வம் இல்லாது போனால், அவனை ஒருவரும் அணுகமாட்டார்கள் என்கின்றது, "விவேக சிந்தாமணி" என்னும் நூல்...

 

ஆல்இலை பூவும்காயும் அளிதரும் பழமும் உண்டேல்,

சாலவே பட்சி எல்லாம் தம் குடி என்றே வாழும்,

வாலிபர் வந்து தேடி வந்திப்பர் கோடாகோடி,

ஆலிலை ஆதிபோனால் அங்கு வந்திருப்பார் உண்டோ?

 

     பொன்னும் மணியும் சேர்ந்த செல்வத்தைப் படைத்துள்ள ஒருவன், கீழினத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், "இவன் நமது உறவினன்" என்று கூறிக் கொண்டு, துதி பாடி, அவனுக்கு உயர்ந்த இனத்தில் திருமணம் முடித்து வைப்பர். அரசராக இருந்த பேர்களும், தமது நிலையில் கெட்டுப் போவார்களானால், "இவர் யாரோ?" என்று ஏளனமாகப் பேசுவது மட்டுமின்றி, "இவன் ஏன் இன்னமும் உயிரோடு இருக்கின்றான்" என்று ஏசவும் செய்வார்கள் என்கின்றது, "விவேக சிந்தாமணி" என்னும் நூல்...

 

பொன்னொடு மணி உண்டானால்

     புலைஞனும் கிளைஞன் என்று

தன்னையும் புகழ்ந்து கொண்டு,

     சாதியில் மணமும் செய்வர்;

மன்னராய் இருந்த பேர்கள்

     வகைகெட்டுப் போவார் ஆகில்,

பின்னமாய் யாரோ என்று

     பேசுவார் ஏசுவாரே!          

 

     கையில் பொருள் இல்லாதவர்க்கு இன்பம் இல்லை. உலகியல் சுகம் வாய்க்காது. அறச் செயல்களைச் செய்வதற்குப் பொருள் இல்லாமையால், புண்ணியமும் இல்லை, புகழும் இல்லை. மனிதர்களிடையில் மதிப்பு இருக்காது. நினைத்த செயலைச் செய்யவும் முடியாது. நற்கதி அடையவும் வழி காணாது. அவர்கள் இந்த உலகில் நடைப்பிணமாக அலைந்து திரிவர் என்கின்றது, "விவேக சிந்தாமணி" என்னும் நூல்..

 

பொருள் இல்லார்க்கு இன்பம் இல்லை,

     புண்ணியம் இல்லை, என்றும்

மருவிய கீர்த்தி இல்லை,

     மைந்தரில் பெருமை இல்லை,

கருதிய கருமம் இல்லை,

     கதிபெற வழியும் இல்லை,

பெருநிலம் தனில் சஞ்சாரப்

     பிரேதமாய்த் திரிகுவாரே.

 

     அளவு அறிந்து வாழவேண்டும் என்பதை, "வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண்" என்று "கொன்றைவேந்தன்" என்னும் நூலில் ஔவையார் காட்டினார்.

 

     செல்வ வளத்தில் சோழனுக்கு ஒப்பானவன் ஆக இருந்தாலும், பொருள் வரவின் அளவைத் தெரிந்து,  அதற்கேற்பச் செலவழித்து அனுபவிக்கவேண்டும்.

 

     எனவே,  இடம்பம் என்னும் ஆடம்பரம் கூடாது. அது அழிவைத் தரும் என்பதால், "இடம்பட வீடு எடேல்" என்று அறிவுறுத்தினார்.


No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...