வேந்தர்க்கு அரிது --- விறலிக்கு எளிது

 

 

வேந்தர்க்கு அரிது --- விறலிக்கு எளிது.

வன்பர்க்கு அரிது --- அன்பர்க்கு எளிது.

 

மக்கள் உயிர் என்றால்,

மன்னன், உயிர்கள் வாழுகின்ற உடல் ஆவான்.

உயிர் இல்லாத உடம்பு பயனற்று அழியும்.

மக்கள் நலம் பேணாத மன்னன் பயனற்று அழிவான்.

-----

 

     விறலி என்பது கூத்தர் எனப்படுவோரின் பெண்பால் ஆவர்.  இவர் தோளில் ஒரு சிறு பையில், சிறு இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு ஊர் தோறும் சென்று, ஆடிப் பாடிப் பரிசில் பெறுகின்றவர். ஆடல் பாடல் புரிபவர்கள். பாடலின் பொருள் நன்கு விளங்குமாறு, தமது உடல் அசைவின் மூலம் வெளிப்படுத்துவதில் வல்லவர்கள். விறல் என்னும் சொல்லுக்கு, பெருமை, சிறப்பு என்று பொருள் உண்டு.

 

     பறம்பு மலையைத் தனது இருப்பிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்தவன் பாரிவேள். வேளிர் குலத்தில் பிறந்ததால் வேள். மிகச் சிறந்த வள்ளல். அவன் தாவிப் படருவதற்கு ஒரு கொழுகொம்பு இல்லாமல் வாடிக் கொண்டு இருந்த ஒரு முல்லைக் கொடியின் துயருக்கு இரங்கி, தனது அழகிய தேரையே தந்தவன். தனது ஆளுகைக்கு உட்பட்டிருந்த முன்னூறு ஊர்களையும், தன்னைப் பாடி வந்த வறியவர்க்குப் பரிசிலாக வழங்கியவன். பாரியின் நட்புக்கு இலக்கணமானவர் கபிலர் என்னும் புலவர்.

 

    கபிலர், ஒருகால், வறுமையால் வாடி வதங்கும் விறலி ஒருத்தியைக் கண்டு, அவளை வேள்பாரியிடம் சென்று, அவனைப் பாடித் தனக்கு வேண்டுவன பெற்றுக்கொள்க என அவளை ஆற்றுப் படுத்திய புறநானூற்றுப் பாடல், மக்களின் வறுமையைப் போக்குவது மன்னனின் கடமை என்பதை உணர்த்தும்.

 

சேயிழை பெறுகுவை, வாணுதல் விறலி!

தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை

வண்டுபடு புதுமலர்த் தண்சிதர் கலாவ,

பெய்யினும் பெய்யாது ஆயினும் அருவி

கொள் உழு வியன்புலத்து உழை காலாக

 மால்புடை நெடுவரைக் கோடுதோறு இழிதரும்

நீரினும் இனிய சாயல்

பாரி வேள்பாற் பாடினை செலினே.

 

இதன் பொருள் ---

 

         ஒளி தங்கிய நெற்றியினை உடைய விறலியே! விரிந்து அகன்ற சுனையின்கண் தழைத்து இருக்கும், கரிய இதழ்களை உடைய நீலோற்பல மலரில் வண்டுகள் மொய்த்து இருக்க வழிந்து ஓடும் புதுமலர்த் தேன் துளிகள், மழையானது பெய்தாலும், பெய்யாது பொய்த்தாலும், வற்றாது பெருகி, கொள் விதைக்கு உழுது கிடக்கும் பரந்த நிலத்தன் ஊடே வாய்க்கால் போல ஓடிப் பாயும். கணுக்களையே ஏணிப் படிகளாகக் கொண்டு மேல் ஏறும் மூங்கில்களை உடைய மலையின் முகட்டில் இருந்து அருவி நீர் ஆறாக வழிந்து ஓடும். அந்த அருவி நீரை விடவும், மிக இனிமை உடையவன் பாரிவேள். அவனைப் பாடி, நீ சென்றால், சிறந்த அணிகலன்களையும் வேண்டுவதையும் பெறுவாய்.  

 

     பாரியினுடைய பறம்பு மலையைப் பெறுவது "விறலிக்கு எளிது" என்று கபிலர் பாடிய புறநானூற்றுப் பாடல்...

 

அளிதோ தானே பாரியது பறம்பே?

நளிகொள் முரசின் மூவிரு முற்றினும்

உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே,

ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே,

இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம் மூழ்க்கும்மே,

மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே,

நான்கே, அணிநிற ஓரி பாய்தலின் மீது அழிந்து

திணிநெடுங் குன்றம் தேன் சொரியும்மே,

வான்கண் அற்று அவன் மலையே, வானத்து

மீன்கண் அற்று அதன் சுனையே, ஆங்கு

மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,

புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,

தாளிற் கொள்ளலிர், வாளின் தாரலன்,

யான் அறிகுவன் அது கொள்ளும் ஆறே,

சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி

விரை ஒலி கூத்தனும் விறலியர் பின்வர

ஆடினிர் பாடினிர் செலினே,

நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே.

 

     வேள்பாரியின் பெண்மக்களை மணக்க விரும்பி, அது மறுக்கப்பட்ட தமிழ் வேந்தர் மூவரும், அதுவே காரணமாக அவன்மீது பகைமை கொண்டார்கள். மூவேந்தரும் ஒருவர் ஒருவராக அவனொடு போரிடவந்து தோல்வி அடைந்தனர். அதுகண்ட கபிலர்,  "தமிழ் வேந்தர்களே! ஒருவரே அன்றி நாங்கள் மூன்று பேரும் ஒன்று கூடி நின்று, பாரியின் பறம்பினை முற்றுகையிட்டாலும், வேள் பாரியை வெல்லுதலும் முடியாது. அவனது பறம்பு மலையினைக் கைப்பற்றுதலும் உங்களால் முடியாது. அரிது.  பறம்பு நாட்டவர்க்கு வேண்டும் உணவு வகைகளை, உழவரது உழவினை வேண்டாதே, இப் பறம்பு மலையானது நால்வகை உணவுப் பொருளை நல்கும். அகல நீள உயர வகையில் பறம்பு மலையானது வானத்தை ஒத்ததாக உள்ளது. அதிலுள்ள சுனைகளோ வானத்தில் உள்ள விண்மீன்களை ஒத்தவையாக உள்ளன.  ஆகவே, நீங்கள் மரங்கள் தோறும் யானைகளைக் கட்டி நிறுத்தி, இடந்தோறும் தேர்களை நிறுத்தி, உங்கள் முயற்சியாலும் வாள்படையாலும், பாரியினது பறம்பு மலையினைப் பெற எண்ணுவது முடியாத செயல் எனத் தெளிந்து கொள்ளுங்கள். அவ்வாறு கொள்ளக் கருதுவதும் அறியாமை என்று எனக்குத் தெரியும். ஆனால், அதனைக் கொள்ளும் வழி அரியது அல்ல, மிக எளியது தான் என்பதை நான் அறிவேன். நீங்கள் உங்களது வடிவத்தை மாற்றிக் கூத்தர் வேடம் புனையவேண்டும். உம்முடைய காதல் மகளிர், விறலியர் வேடத்தைப் பூண்டு கொண்டு பின் தொடர, பாரியின் முன்பு சென்று பாடலும், ஆடலும் புரிந்தால், அதற்கு மகிழ்ந்து பாரி தனது நாட்டை மட்டுமல்லாது, தனது பறம்பு மலையையும் ஒருசேரக் கொடுப்பான்" என்னும் பொருள்படப் பாடிய பாடல் இது.

 

     தமிழ் மூவேந்தர்கள் புரிந்த சூழ்ச்சியால் பாரி கொல்லப்பட்டான். பாரிக்குப் பின்னர், கபிலர் அவனது மகளிர் இருவரை ஒளவையார் துணைக்கொண்டு தக்கார்க்கு மணம் புரிவித்தார். பாரி இல்லாத பறம்பு மலையைப் பார்த்து, "பறம்பு மலையே! நீ பாரியால் காக்கப்பட்டதால், உன்னை வேல் கொண்டு வென்று கைப்படுத்துதல் மூவேந்தர்களாலும் முடியாது போனது. ஆயினும் கிணை என்னும் மருதப் பறையைக் கையில் கொண்டு, பாடுகின்ற விறலி ஒருத்தி பாரியைப் பாடி வருவாளாயின், அவள் கொள்ளுதற்கு நீ எளிமையாக உள்ளாய்” என்று பாரியின் புகழைப் போற்றிப் பாடிய பாடல் இது.

 

அளிதோ தானே, பேர் இருங் குன்றே!

வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே;

நீலத்து, இணை மலர் புரையும் உண்கண்

கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே.

 

    அதியமானைக் கண்டு பரிசில் பெற்றுச் சென்ற ஒளவையார், வழியில், தன் சுற்றத்தோடு போந்து தங்கியிருந்த விறலி ஒருத்தியைக் கண்டார். அந்த விறலி, தான் அடைந்து வருந்தும் வறுமையைத் தெரிவித்து, "இடுவோர் இல்லாமையால், கவிழ்ந்து கிடக்கும் எனது உண்கலம் ஆகிய பாத்திரத்தை, மலர்த்தி வைப்பவர் யார்?" என ஏங்கியிருப்பது கண்டு, "விறலியே! அதியமான் என்பவன் நெடுந்தூரத்தில் இல்லை. அண்மையிலேயே உள்ளான். அவன் பகைப்புலத்தாரிடம் இருந்து திறையாகக் கொண்ட பொருள் நிரம்ப உடையவன். இந்த உலகம் வறுமை அடைந்தாலும், தனது மக்களைப் பாதுகாப்பதில் வல்லவன். நீ அவன்பால் செல்க" என்று ஆற்றுப்படுத்துகின்றார்.

 

ஒருதுலைப் பதலை தூங்க, ஒருதலைத்

தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூங்கி,

கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் எனச்

 சுரன் முதல் இருந்த சில்வளை விறலி!

செல்வை ஆயின், சேணோன் அல்லன்,

 முனைசுட  எழுந்த மங்குல் மாப்புகை

மலைசூழ் மஞ்சின் மழகளிறு அணியும்

பகைப்புலத் தோனே பல்வேல் அஞ்சி

பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை

மெழுகுமெல் அடையில் கொழுநிணம் பெருப்ப

அலத்தல் காலை ஆயினும்

புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே.

 

இதன் பொருள் ---

 

    தோளில் தூக்கிய காவடியில், ஒரு பக்கத்தில் பதலையும், மறுபக்கத்தில் துளையை உடைய முழாவும் தொங், "இடுவார் இன்றிக் கவிழ்ந்து கிடக்கும் என் பாத்திரத்தை இட்டு நிரப்புவார் யார்?" என்று அறியாது வழிநடந்து வரும் விறலியே! நீ அதியமானிடம் செல்வாயாக. அவன் இருக்கும் இடம் வெகுதொலைவில் இல்லை. பகைப் பலத்தை அழிக்க எழுந்து பெரும் தீயின் புகையானது மலையில் தவழும் மேகத்தைப் போல, யானைக் குட்டிகளைச் சூழ்ந்து இருக்கும், அருகில் உள்ள பகைவர் நாட்டில்தான், வேற்படையை உடைய அதியமான் இப்போது இருக்கின்றான். உனது உண்கலமானது ஒருபோதும் குறையாமல் நிறைந்து வழியும்படியாக, தேன் அடை போலும் உணவை, அவன் உனக்குத் தரத் தவறமாட்டான். இவ்வாறு இல்லை என்று வந்தோர்க்கு, இல்லை என்னாது ஈந்து அளிக்கும் அவன் திருவடிகள் வாழ்க.

 

    இப் பாடலில் ஒரு நுட்பம் உள்ளது. "திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்" என்று நம்மாழ்வார் பாடியருளியதற்கு ஒப்ப, திருமால் காத்தல் தொழிலைப் புரிவது போல, மக்களைக் காக்கும் தொழிலைப் புரிவதால், அரசனும் திருமாலை ஒத்தவனே ஆவான். உலகம் புரக்கும் திருமாலின் திருவடிக்குப் பல்லாண்டு பாடினார் ஆழ்வார். தனது மக்களைக் காக்கின்ற அதியமான் திருவடிகளுக்கு வாழ்த்துச் சொல்லினார் ஔவையார். "வேந்தனும் ஓங்குக" என்றார் திருஞானசம்பந்தப் பெருமான். இதற்கு விளக்கம் தந்தருளிய தெய்வச் சேக்கிழார் பெருமான். பெரியபுராணத்தில் காட்டியதைக் காணலாம்.

 

வேள்வி நற்பயன் வீழ்புனல் ஆவது,

நாளும் அர்ச்சனை நல் உறுப்பு ஆதலால்,

ஆளும் மன்னனை வாழ்த்தியது, அர்ச்சனை

மூளும் மற்று இவை காக்கும் முறைமையால்.   --- பெரியபுராணம்.

 

இதன் பொருள் ---

 

    நல்ல வேள்விகளின் பயன், மழை தவறாமல் பெய்தலாகும் என்று அருள் செய்தது, அந்த வேள்வியே நாள்தோறும் இறைவரின் அருச்சனைக்கு உறுப்பாதலால் ஆகும். உலகை ஆளும் வேந்தனை `ஓங்குக' என்று வாழ்த்தியது, அருச்சனை முதலாக வரும் இவற்றை, மன்னன் காக்கின்ற முறையினால் ஆகும்.

 

    மன்னன் முறையாக ஆட்சி புரியவில்லையானால், "ஆ பயன் குன்றும், அறுதொழிலோர் நூல் மறப்பர்" என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

 

    மக்கள் உயிர் என்றால், அந்த உயிர்கள் வாழுகின்ற உடலைப் போன்றவன் மன்னன். அயோத்தியில் வாழும் உயிர்களுக்கு உடலைப் போன்றவன் தசரதன் என்று ஒரு மன்னனுக்கு இருக்கவேண்டிய இலக்கணத்தைக் காட்டினார் கம்பநாட்டாழ்வார்.

 

வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்,

உயிர் எலாம் தன் உயிர் ஒக்க ஓம்பலால்,

செயிர் இலா உலகினில் சென்று, நின்று. வாழ்

உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பு ஆயினான். --- கம்பராமாயணம்.

 

இதன் பொருள் ---

 

    வயிரத்தால் இழைத்துச் செய்யப்பட்ட அழகிய அணிகலன்களை அணிந்துள்ளவனும், சிங்கம் போன்று வலிமை உள்ளவனும் ஆன தயரத மன்னன், மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிர் போலக் கருதிக் காத்து வருவதால், குற்றம் இல்லாத  இந்த உலகத்திலே வாழும் உயிரெல்லாம் தங்கி வாழ்வதற்குத் தக்க பெருமை மிக்க உடம்பாகவும் ஆனான்.

 

    தயரதன் அன்பாலும் அருளாலும் உயிர்கள் அனைத்தின்

விருப்பம் நிறைவேற்றுகின்ற உடலாக மட்டுமே இருந்தான் என்கின்றார் கம்பநாட்டாழ்வார்.

 

    அத்தகைய அரசர்கள், பெரிய இராயசூயம்,  வாஜபேயம்,  அசுவமேதம் முதலிய யாகங்களைச் செய்தல் வேண்டும். என்றாலும், அறம்,  அருள், சத்தியம் என்ற மூன்றிலும் நிலைத்து நின்று ஒரு மன்னன் அரசாட்சி செய்து வந்தால், அதுவே யாகம் ஆகும்.  வேறு யாகம் செய்ய வேண்டுவது இல்லை என்றும் காட்டுகின்றார் கம்பநாட்டாழ்வார்.

 

வையம்ம மன் உயிர் ஆக, அம் மன் உயிர்

உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு,

ஐயம் இன்றி, அறம் கடவாது, அருள்

மெய்யில் நின்றபின், வேள்வியும் வேண்டுமோ?  --- கம்பராமாயணம்.

 

இதன் பொருள் ---

 

    உலக மக்கள்  நிலைத்த உயிராகவும், அந்த நிலைத்த உயிர்கள் வாழும்படி சுமக்கின்ற உடம்பாகவும் உள்ள அரசனுக்கு, அவன் மேற்கொண்ட அரசாட்சியின் உறுதி (நன்மை) பற்றிய சந்தேகம் இல்லாமல், அறத்தை விட்டு விலகாது அருளிலும்,  சத்தியத்திலும் நிலைபெற்று நின்ற பிறகு, யாகங்களும் செய்தல் வேண்டுமோ(வேண்டாம் என்றபடி.)

 

    இது கம்பநாட்டாழ்வார் காட்டி அருளிய முடியாட்சியில் குடியாட்சிக் கொள்கை ஆகும்.

 

    இந்த உலகத்துக்கும், அதில் வாழும் உயிர்களுக்கும், நெல்லும், உண்ணும் உணவும் உயிர் அல்ல. குடிக்கின்ற நீரும் உயிர் அல்ல. இந்தப் பரந்த உலகில் வாழும் மக்களுக்கு எதுதான் உயிர்? என்றால், மன்னன் தான் உயிர். அதனால், தான் தான் உயிர் போன்றவன் என்பதை, வேலும், வீரப்படையையும் உடைய வேந்தர் உணர்ந்து இருக்கவேண்டியது அவசியம் ஆகும். மக்களைக் காக்க வேண்டிய மகத்தான கடமையை உடையவன் மன்னன். அவன் தனிமனிதன் அல்ல. மக்களின் தலைவன். மக்களைக் காப்பதில் அவன் உயிர் போன்றவன், என்பதை விளக்கும் உன்னதமான பாடல். புறநானூற்றில் உள்ளது.

 

நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;

மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;

அதனால், யான் உயிர் என்பது அறிகை

வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே. --- புறநானூறு.

 

    "உயிர் இல்லாத வழி, உடல் இயங்காமை போல மக்கள்

இல்லாத வழி மன்னனுக்கு வேலை இல்லை" என்பதும்,  

"மக்களுக்காக மன்னவனே அன்றி, மன்னனுக்காக மக்கள் அல்ல" என்பதும், "அறம்,  அருள் சத்தியம் இல்லாதவன் யாகம் செய்வது வீண் ஆரவாமே" என்பதும் கம்பர் கருத்து. 

   

     இதில் இருந்து அறிந்துகொள்ள வேண்டுவது, மன்னனாக இருந்தால், மக்கள் மீது அன்பு கொண்டு இருத்தல் வேண்டும் என்பதே. அன்பு உள்ள மன்னன் தனக்கென வாழாத பிறர்க்குரியாளனாகவே இருப்பான். அப்படித்தான், நமது முடியரசர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.

 

"அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர், அன்பு உடையார்

என்பும் உரியர் பிறர்க்கு"

 

என்பது திருக்குறள் கருத்தாகும். என்பு --- எலும்பு. எலும்பு என்பது ஆகுபெயராய் உடம்பைக் குறித்து நின்றது. அன்பு உடையவர்கள் தமது உடைமையால் மட்டும் அல்ல; தமது உடம்பாலும் பிறர்க்கு உதவுவார்கள் என்றார் நாயனார்.

 

         பிற உயிர்மேல் அன்பு அற்ற சுயநலப் பிரியர்கள், தமது உடல் பொருள் ஆவி முன்றும் தம்மது என்று இருப்பர்.  அன்புடையார், அங்ஙனமின்றித் தமது உயிரையும் பிறர்க்கு வழங்கச் சித்தமாய் இருப்பார்கள்.

 

     கொழுகொம்பு இல்லாமல் வாடிய முல்லைக் கொடிக்கே அன்பு காட்டி, தனது தேரைத் தந்து சென்றது மட்டுமல்லாமல், தன்னைப் பாடி வந்த வறியவர்க்கு, அன்போடு தனது உடைமைகளை எல்லாம் வாரி வழங்கியவன் வள்ளல் பாரிவேள்.

 

     தமது உடம்பாலும் பிறருக்கு உதவுபவர்கள் என்பது, சோழர் குலத்தில் உதித்தவராகிய, சிபிச் சக்கரவர்த்தியையும், அந்தணர் வடிவம் கொண்டு வந்து யாசித்த இந்திரனுக்கு, தனது கவசகுண்டலங்களைக் கொடுத்த, அங்கநாட்டு அரசனாகிய கர்ணனையும் குறிக்கும்.

 

சிபிச் சக்கரவர்த்தி தனது தசையை ஈந்த வரலாறு

 

     தன்னை இழந்தும் பிறர் நலம் காணும் வள்ளலாய் வாழ்ந்தவர்  சூரியகுலத் தோன்றலாகிய சிபி என்னும் சக்கரவர்த்தி. அவர் தம் வள்ளல் தன்மையை உலகறியச் செய்ய எண்ணிய இந்திரன் பருந்தாகவும், இயமன் புறாவாகவும் உருக் கொண்டனர். புறாவினைப் பருந்து துரத்த, புறா சிபியிடம் அடைக்கலம் புகுந்தது. ''என் இரையைக் கொடு''  என்று பருந்து சிபியைக் கேட்க, சக்கரவர்த்தியோ, தன்பால் அடைக்கலம் புகுந்த ஒன்றனைத் தருதல் இயலாது என மறுத்து, ஈடாக வேறு எதனை வேண்டினும் தருவதாகக் கூறினான். அதற்கு உடன்பட்ட பருந்து, அந்தப் புறாவின் எடை அளவுக்குச் சிபியின் உடலில் இருந்து ஊன் தந்தால் போதும் என்றது. மகிழ்ந்த சிபி, புறாவினை ஒரு தட்டில் வைத்து, தன் உடல் தசையில் பகுதியை துலாக் கோலின் வேறு தட்டில் இட்டான். ஆனால், தன் உடல் உறுப்புகளை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அரிந்து வைத்த போதும் துலாக்கோல் சமன் அடையாது, புறாவின் தட்டு தாழ்ந்தே நின்றது. பின்னர், தானே தட்டில் ஏறி நின்றனன். தட்டுகள் சமநிலை உற்றன. அப்போது இந்திரனும் இயமனும் தத்தம் உண்மை உருவோடு தோன்றி அவர்க்கு வேண்டிய

வரங்களைத் தந்து போயினர் என்பது வரலாறு.

 

"புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க

   பெருந்தகைதன் புகழில் பூத்த

அறன் ஒன்றும் திரு மனத்தான், அமரர்களுக்கு

   இடர் இழைக்கும் அவுணர் ஆயோர்

திறல் உண்ட வடிவேலான், "தசரதன்" என்று.

   உயர் கீர்த்திச் செங்கோல் வேந்தன்,

விறல்கொண்ட மணிமாட அயோத்திநகர்

   அடைந்து, இவண் நீ மீள்தல்!என்றான்".

 

"இன் உயிர்க்கும் இன் உயிராய்

   இரு நிலம் காத்தார் என்று

பொன் உயிர்க்கும் கழலவரை

   யாம் போலும் புகழ்கிற்பாம்?

மின் உயிர்க்கும் நெடு வேலாய்!

   இவர் குலத்தோன் மென்புறவின்

மன் உயிர்க்கு. தன் உயிரை

   மாறாக வழங்கினனால்"

 

என்று கம்பநாட்டாழ்வார் சிபிச் சக்கரவர்த்தியைப் பற்றிப் பாடி உள்ளார்.

 

"நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்

தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்

கால் உணவாகச் சுடரொடு கொட்கும்

அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்

கூருகிர்ப் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇத்

தன் அகம் புக்க குறுநடைப் புறவின்

தபுதி அஞ்சிச் சீரை புக்க

வரையா ஈகை உரவோன் மருக"

 

என்று புறநானூற்றுப் பாடலிலும் சிபியின் பெருமை போற்றப்பட்டு இருப்பது காண்க. தன்னுயிர் போ, மன்னுயிர் காத்தவன் சிபி.

 

     கர்ணனது வரலாறு அடைவரும் அறிந்ததே.

 

     மண்ணில் வாழுகின்ற உயிர்க்கு எல்லாம், கண்ணும் உயிரும் போன்றவன் திருவாரூரை ஆட்சி புரிந்து இருந்த மனுநீதிச் சோழன் என்கின்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

 

"மண்ணில் வாழ்தரு மன்உயிர்கட்கு எலாம்

கண்ணும் ஆவியும் ஆம் பெருங் காவலான்"     --- பெரியபுராணம்.

 

     , வேந்தர் என்பவர், தமது பகைவர்க்கு அரியவாரகவும், தனது குடையின் கீழ் வாழும் மக்களுக்கு எளியவராகவும் இருந்தனர் என்பது தெரியவரும்.

 

     அதிகாரம் படைத்துள்ளோர் அனைவரும் அறிந்து உய்யவேண்டிய நெறி இதுவாகும்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...