சூர சம்மாரம் --- வள்ளித் திருமணம்

 

 

சூர சம்மாரம் --- பொருள் என்ன?

-----

     ஆண்டுதோறும் கந்தர் சட்டி வருகின்றது. விரதம் இருக்கின்றோம். சூர சம்மாரத்தையும், முருகப் பெருமான் திருமணத்தையும் கண்டு களிக்கின்றோம்.

     இதன் உண்மைப் பொருள் என்ன என்பதைப் பற்றி சிந்திப்போம்.

1.   சூரபதுமன் --- ஆணவ மலம்..

2.   சிங்கமுகன் --- கன்ம மலம்.

3.   கிரவுஞ்ச மலை --- வினைத்தொகுதி. (சஞ்சிதம், பிராரத்தம்,   ஆகாமியம் ஆகிய மூன்று விதமான வினைகளின் தொகுதி)

4.   தாரகன் --- மாயா மலம். 

5.   கடல் --- பிறவித் துன்பம்.

6.   இச்சா சத்தி --- வள்ளிநாயகி. இச்சத்தி உயிர்களுக்கு மலத்தை    நீக்கிச் சிவத்தை அளிக்கும்பொருட்டு  பெருங்கருணை    கொள்ளும் சத்தி.  

7.   ஞானசத்தி --- வேலாயுதம். உயிர்களின் மலத்தை நீக்கிச்    சிவத்தை அளிப்பதற்கு வேண்டிய வழிவகைகளை அறியும் சத்தி. 

8.   கிரியா சத்தி --- தெய்வயானை அம்மையார். படைத்தல் முதலிய ஐந்தொழில்களின் வழிவகைளைச் செய்யும் சத்தி.

     சூரபதுமன் அழியாத யாக்கையைப் பெற்றவன். வச்சிரம் போன்ற உடம்பு உடையவன். வச்சிர உடம்பு என்பது என்றும் அழியாது, பிறவிகள்தோறும் உயிருக்கு வந்து பொருந்துகின்ற ஆணவமலத்தைக் குறிக்கும்.

     சிங்கமுகாசுரன் என்பது உயிர்கள் இயற்றுகின்ற கன்மம் ஆகிய மலத்தைக் குறிக்கும். கன்மம் --- வினை அல்லது செயல். அது அறச் செயல், பாவச் செயல் என்று இருவகையாக இருக்கும். இச் செயல்கள் முறையே புண்ணியம் பாவம் ஆக மாறி, வினைத் தொகுதியில் சேரும்.

     இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சம் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.

"வருசுரர் மதிக்க ஒரு குருகுபெயர் பெற்ற கன

வடசிகரி பட்டு உருவ வேல்தொட்ட சேவகனும்"

என்றார் வேடிச்சி காவலன் வகுப்பில் அடிகளார். 

       "மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அருணகிரிநாதர் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்றார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.

       கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. அது பொன்மலை. பொன் யாரையும் மயக்கும். கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம், கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.

"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்

கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்

பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட 

தனி வேலை வாங்கத் தகும்."

என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.

       "நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடி, நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.

       வேல் --- வெல்லும் தன்மை உடையது. அது ஞானசத்தி என்னும் பதிஞானத்தைக் குறிக்கும். "ஞானபூரண சத்தி தரித்து அருள் பெருமாளே" என்றார் பிறிதொரு திருப்புகழில். எல்லாவற்றையும் வெல்லுவது அறிவே. ஆன்மாக்களின் வினையை வெல்லும் தன்மை உடையது வேல். ஞானம் வெளிப்பட, கர்மம் தொலைந்தது. மாயையும் ஆணவமும் அடங்கிப் போயின.

       அறிவின் தன்மை அஞ்சாமை ஆகும். அஞ்சாமை வீரம் எனப்படும். அறிவின் தன்மை கூர்மை. "கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தின் நோக்கரிய நோக்கே" என்பது மணிவாசகம். "ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்றார் மணிவாசகர். ஆழ்ந்து இருப்பதும், வெற்றியைத் தருவதும், ஆணவமலத்தையும், வினைகளையும் அறுப்பது அறிவே ஆகும். காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாச்சரியம் என்னும் அறுவகைப் பகைகளை அறுப்பதும் அறிவே. ஆதலால், "போர்வேல்" எனப்பட்டது. அறிவு குறுகி இருத்தல் கூடாது. நீண்டு இருத்தல் வேண்டும். எனவே, வேல், "நெடுவேல்" எனப்பட்டது.

       சிவபெருமான் தனது தழல் பார்வையால் மும்மலங்கள் ஆகிய முப்புரங்களையும் எரித்தார். அறுமுகப்பெருமான் தனது திருக்கரத்தில் அமைந்துள்ள ஞானசத்தியாகிய வேலாயுதத்தால் மும்மலங்களையும் அறுத்தார்.

       அலைகள் எழுவதால் கடலானது சதாகாலமும் இரைந்து கொண்டே இருக்கும். கடலால் சூழப்பட்டது இந்த உலகம். "அலைகடல் வளைந்து உடுத்த எழுபுவி" என்பார் அருணை அடிகளார். "ஆழிசூழ் உலகம்" என்பார் கம்பநாடர். "நீர் ஆரும் கடல் உடுத்த நிலமடந்தை" என்பார் மனோன்மணீயம் சுந்தரனார். "இருங் கடல் உடுத்த இப் பெருங்கண் மாநிலம்" என்பது புறநானூறு.

       காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இல்லாமல் கடலில் அலைகள் சிறிதும் பெரிதுமாக வந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட கடலால் சூழப்பட்டு உள்ளது இந்த நிலவுலகம். இந்த நிலவுலகத்தில் எடுத்துள்ள இந்தப் பிறப்பினை இங்குக் குறிக்கப்பட்டது.

       செய்த வினைகளின் காரண காரியத் தொடர்ச்சியாய் இடையீடு இன்றிப் பிறவிகள் வருதலின், பிறவியைப் பெருங்கடல் என்றனர் நம் முன்னோர்.

(1)   கடலில் ஓயாமல் அலைகள் வீசிக்கொண்டே இருக்கின்றன. பிறவியாகிய கடலில் இன்ப துன்பங்களாகிய அலைகள் வந்துகொண்டே இருக்கின்றன.

(2)      கடலில் கப்பல்கள் மிதந்து கொண்டே இருக்கின்றன. பிறவியாகிய கடலிலும் ஆசைகளாகிய மரக்கலங்கள் மிதக்கின்றன. 

(3)      கடலில் திமிங்கிலங்கள் முதலைகள் வாழ்கின்றன. பிறவியாகிய கடலிலும் நம்மை எதிர்க்கின்ற பகைவர்கள், நமக்கு நன்மை செய்வது போல் தோன்றி, தீமையை விளைக்கின்ற ஐம்புலன்கள் உள்ளன. ஐம்புலன்களை வேடர் என்பது வழக்கம். வேடர்கள் ஆறு அலைப்பது போல, ஐம்புலன்கள் நமது உண்மை அறிவை விளங்கவொட்டாமல் செய்து அறிவை மயக்குகின்றன.

(4)      கடலில் பலவகைப்பட்ட மீன்கள் உலாவி வயிறு வளர்க்கின்றன. பிறவியாகிய கடலிலும், மனைவி மக்கள் முதலியோர் உலாவி வயிறு வளர்க்கின்றனர்.

(5)      கடலுக்குள் மலைகள் இருக்கின்றன. பிறவியாகிய கடலிலும் அகங்காரமாகிய மலை பெரிதாக வளர்ந்திருக்கின்றது.

(6)      கடல் ஆழமும் கரையும் காணமாட்டாமல் பயங்கரமாக இருக்கின்றது. பிறவியாகிய கடலும் எவ்வளவு சம்பாதித்துப் போட்டாலும் போட்ட இடங்காணாது முடிவு இன்றி பயங்கரத்தை விளைவிக்கின்றது.

       நன்கு சிந்தித்துப் பார்த்தால், ஒவ்வொருவருக்கும் இவ்வனுபவ மொழி நன்கு புலனாகும்.

       பிறவியாகிய பெருங்கடலில், ஆணவமாகிய சூரபதுமன் ஒளிந்து இருந்தான். பின்னர் பெரிய மரமாக ஆனான். மாமரம் என்றால் பெரிய மரம் என்பது பொருள். அந்த மரம் எப்படி இருந்தது என்பதை, கந்தபுராணத்தின் வாயிலாக அறியலாம். அரக்கர்களுக்கு மனிதப் பண்பு இருக்காது.  "இரக்கம் என்று ஒரு பொருள் இல்லாத நெஞ்சினர், அரக்கர் என்று உள்ளர் சிலர், அறத்தின் நீங்கினார்" என்று கம்பராமாயணத்தில் அரக்கர்களின் நிலைமை காட்டப்பட்டது. "மரம் போல்வர் மக்கள் பண்பு இல்லாதவர்" என்றார் திருவள்ளுவ நாயனார். சூரபதுமன் கொண்டிருந்த மரத் தன்மையை அழித்தார் ஞானசத்திதரன் ஆகிய முருகப் பெருமான். சூரபதுமன் பிறவித் தன்மையில் இருந்து நீங்கினான். சேவலும் மயிலும் ஆனான். சேவலைத் தனது கொடியாக உயர்த்தி, மயிலைத் தனது ஊர்தியாகக் கொண்டார் முருகப் பெருமான். ஆணவமலம் நீங்கப் பெற்று, பிறவிக் கடலில் இருந்து தேறிய சூரபதுமன், புனிதம் பெற்றான். இன்று அவனைத் தான் நாம் மயில் வடிவிலும், சேவல்கொடி வடிவிலும் வணங்குகின்றோம். சூரத்தன்மை சம்மாரம் ஆனதால், ஆன்மா உயர் நிலை பெற்றது.

     எத்தகு கொடியவராக இருந்தாலும், இறைவன் திருக்கண் நோக்கத்தைப் பெற்றுவிட்டால், அவர்கள் எல்லாப் பாவங்களிலும் இருந்து விடுபட்டுப் புனிதராக ஆவார்கள் என்பதை உணர்த்தும், சூரசம்மாரம் குறித்து, கந்தபுராணத்தில் காட்டப்படும் பாடல் வருமாறு...

தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால்,

தூயவர் ஆகி, மேலைத் தொல்கதி அடைவர் என்கை

ஆயவும் வேண்டுங்கொல்லோ? அடுசமர் அந்நாள் செய்த

மாயையின் மகனும் அன்றோ வரம்பிலா அருள் பெற்று உய்ந்தான்"

     பிறவியாகிய பெருங்கடலில் அழுந்தித் தானும் துன்புற்று, பிறரையும் துன்புறுத்துகின்ற, ஆன்மாக்களை, முத்தியாகிய கரையில் இருந்து, ஞானசத்தியைக் கொண்டு வெற்றிகொண்டு, முத்திக் கரையில் இறைவன் சேர்த்த உண்மைதான் இது. முத்திக் கரையில் இருந்த நகரம், ஆன்மாக்களை வெற்றி கொண்ட, "ஜெயந்தி நகரம்", செந்தி நகரம் என்று ஆகி, இறுதியில், செந்தில் என்று மருவி, இப்போது, திருச்செந்தூர் என்று வழங்கப்படுகின்றது. முருகப் பெருமான், "ஜெயந்திநாதர்".

        இங்கே சொல்லப்பட்ட பிறவிக் கடலும் இது அல்ல. செந்தி நகரமும் இது அல்ல. நம்முடைய பாவனையே. உணர்வில் அறிந்துகொள்ள முடியும்.

       சூரசம்மாரம் முடிந்த பின்னர், முருகப் பெருமான், தேவேந்திரானல் தனக்கு அளிக்கப்பட்ட, கிரியாசத்தி ஆகிய தேவயானை அம்மையாரைத் திருமணம் புணர்ந்தார்.

        இச்சாசத்தி ஆகிய வள்ளி அம்மையார், சீவான்மாவாக வள்ளிமலையில் அவதரித்து, தினைப்புனத்தைக் காவல் கொண்டு இருந்தார்.

வள்ளிநாயகி --- சீவான்மா.

தினைப்புனம் --- உள்ளம்.

தினைப்பயிர் --- நல்லெண்ணங்கள்.

பறவைகள் --- தீய நினைவுகள்.

பசுங்கதிர் --- ஞான அனுபவம்.

       உலக வாழ்வில் அமிழ்ந்து கிடப்பவர் கேவலம் வயிற்றை வளர்க்கும் பொருட்டும், மனைவி மக்களைக் காப்பாற்றும் பொருட்டும் மெய்போன்ற பொய்களைப் பற்பல விதமாகவும், சாமர்த்தியமாகவும் பேசி உழல்வர்.

(1)   ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பாதிக்கும் வழி இப்புத்தகத்தில் உள்ளது. இதன் விலை ரூபாய் 100.  இது பொய். உண்மையாக இருக்கும்பட்சத்தில், நாளொன்றுக்கு ஐம்பது ரூபாய் சம்பாதிக்கும் வழியைத் தெரிந்தவன், புத்தகம் அடங்கிய பெரிய பையைச் சுமந்து, விற்றுக்கொண்டு அலைய வேண்டாமே?

(2)       இந்த மருந்து பல வியாதிகளைக் கண்டிக்கும். இம்மருந்தை உண்டு 3 மணி நேரத்தில் குணமில்லை என்றால் ரூ. 1000 இனாம். இதுவும் பொய். 

(3)       நோயில்லாத பொழுது, மருத்துவரிடம் பணம் தந்து, மருத்துவச் சான்றிதழ் பெற்று, விடுமுறை எடுத்தல்.

     இவை போல் எத்தனையோ ஆயிரம் மெய் போன்ற பொய்கள்.

இந்தப் பொய்யான வாழ்க்கையால், ஆன்மாக்களின் உள்ளமாகிய தினைப்புனம் பாழ்பட்டுக் கிடக்கின்றது. மெய்ம்மையான உழவைச் செய்து, நல்ல எண்ணங்கள் ஆகிய பயிரை வளர்க்கவேண்டும்.

"நெஞ்சப் புனத்து வஞ்சக் கட்டையை

வேர் அற அகழ்ந்து போக்கித் தூர்வைசெய்து,

அன்பு என் பாத்தி கோலி, முன்புற

மெய் எ(ன்)னும் எருவை விரித்து, ங்கு, யமில்

பத்தித் தனி வித்து ட்டு, நித்தலும்

ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி, நேர் நின்று

தடுக்குநர்க்கு அடங்காது இடுக்கண் செய்யும்

பட்டி அஞ்சினுக்கு அஞ்சி, ள் சென்று

சாந்த வேலி கோலி வாய்ந்தபின்,

ஞானப் பெருமுளை நந்தாது முளைத்து,

கருணை இளந்தளிர் காட்ட, அருகாக்

காமக் குரோதக் களை அறக் களைந்து

சேமப் படுத்துழி, செம்மையின் ஓங்கி

மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட்டு, ம் எனக்

கண்ணீர் அரும்பி, கடிமலர் மலர்ந்து, புண்ணிய

அஞ்செழுத்து அருங்காய் தோன்றி; நஞ்சுபொதி

காள கண்டமும், கண் ஒரு மூன்றும்,

தோள் இரு நான்கும், சுடர்முகம் ஐந்தும்,

பவளநிறம் பெற்று, தவளநீறு பூசி,

அறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய்க்

காணினும் கேட்பினும் கருதினும் களிதரும்

சேண் உயர் மருத மாணிக்கத் தீங்கனி

பையப் பையப் பழுத்துக் கைவர,

எம்ம னோர்கள் இனிது இனிது அருந்திச்

செம்மாந்து இருப்ப; சிலர்இதின் வாராது,

 

மனம் எனும் புனத்தை வறும்பாழ் ஆக்கிக்

காமக் காடு மூடி, தீமைசெய்

ஐம்புல வேடர் ஆறலைத்து ஒழுக,

இன்பப் பேய்த்தேர் எட்டாது ஓட,

கல்லா உணர்வு எனும் புல்வாய் அலமர,

இச்சை வித்து உகுத்துழி, யான் எனப் பெயரிய

நச்சு மாமரம் நனிமிக முளைத்து,

பொய் என் கவடுகள் போக்கி, செய்யும்

பாவப் பல்தழை பரப்பி, பூ எனக்

கொடுமை அரும்பி, கடுமை மலர்ந்து,

துன்பப் பல்காய் தூக்கி, பின்பு

மரணம் பழுத்து, நரகிடை வீழ்ந்து,

தமக்கும் பிறர்க்கும் உதவாது,

இமைப்பில் கழியும் இயற்கையோர் உடைத்தே".

எனவரும் "திருவிடைமருதூர் மும்மணிக் கோவை" என்னும் அருள் நூலில், மெய்ம்மையான உழவு குறித்தும், அது அல்லாதது குறித்தும் பட்டினத்தடிகள் பாடி உள்ளது காண்க.

இதன் பொருள் ---

     நெஞ்சப் புனத்து --- மனமாகிய கொல்லைப் புறத்தில், வஞ்சக் கட்டையை வேர் அற அகழ்ந்து போக்கி --- (அநாதியே முளைத்து வேர் விட்டு இருந்த) வஞ்சகம் என்னும் மரத்தினை வேரோடு அற்றுப் போகுமாறு தோண்டி எடுத்து அப்புறப்படுத்தி, தூர்வை செய்து --- நல்ல முளை முளைப்பதற்கு உரியவாறு பதப்படுத்தி, அன்பு என் பாத்தி கோலி --- அன்பு என்னும் பாத்தியைச் செய்து, முன்புற மெய் எ(ன்)னும் எருவை விரித்து --- முதலில் வாய்மை என்கின்ற எருவை இட்டு, ங்கு --- அந்தக் கொல்லையில், யம் இல் பத்தித் தனிவித்து ட்டு --- பழுது முதலியவற்றால் முளைக்காது என்னும் சந்தேகம் சிறிதும் இல்லாத, பத்தி எனப்படுகின்ற விதையை விதைத்து, நித்தலும் ஆர்வத் தெண்ணீர் பாய்ச்சி --- நாள்தோறும் ஆர்வம் என்கின்ற தெளிந்த நீரைப் பாய்ச்சி, நேர் நின்று --- எதிரில் நின்று, தடுக்குநர்க்கு அடங்காது --- உள் புகாதவாறு தடுப்பவர்க்கு அடங்காது, இடுக்கண் செய்யும் பட்டி அஞ்சினுக்கு அஞ்சி --- துன்பத்தைச் செய்கின்ற ஐந்து பட்டிமாடுகளுக்குப் பயந்து, உள் சென்று --- அவைகளைத் தடுப்பதற்கு, கொல்லையின் உள்ளே சென்று, சாந்த வேலி கோலி --- சாந்தம் என்னும் வேலியினை அமைத்து, வாய்ந்த பின் --- (இவை அனைத்தும்) முடிந்த பின்னர், ஞானப் பெருமுளை நந்தாது முளைத்து --- ஞானம் என்னும் பெரிய முளையானது கெடாது முளைத்து, கருணை இளந்தளிர் காட்ட --- அது வளர்ந்து, கருணை என்கின்ற பசுமையான தளிர்கள் தழைத்து வளர்ந்து, அருகா --- எடுக்கும் தோறும் கெடாது வளர்கின்ற, காமக் குரோதக் களை அறக் களைந்து --- காமம் குரோதம் என்னும் களைப் பூண்டுகளை வைரோடு பறித்து எறிந்து, சேமப் படுத்துழி --- அந்தக் கொல்லையைச் செம்மையாக்கிய பின்னர், செம்மையின் ஓங்கி --- செம்மையாக வளர்ந்து, மெய்ம்மயிர்ப் புளகம் முகிழ்த்திட்டு --- உடம்பில் உள்ள மயிர்க்கால்கள் தோறும் உண்டாகும் புளகாங்கிதம் என்னும் அரும்பு உண்டாகி, ம் எனக் கண்ணீர் அரும்பி --- அந்தப் புளகாங்கிதத்தால் உண்டான ஆனந்தக் கண்ணீர் என்னும் அரும்பை விட்டு, கடிமலர் மலர்ந்து --- ஞானமணம் உள்ள மலர் மலர்ந்து, புண்ணிய  அஞ்செழுத்து அருங்காய் தோன்றி --- புண்ணியத்தின் வடிவான திருவைந்தெழுத்து என்னும் கிடைத்தற்கு அரிய காய் உண்டாகி, நஞ்சு பொதி காள கண்டமும் --- ஆலகால விடம் பொருந்திய நீலகண்டமும், கண் ஒரு மூன்றும் --- ஒப்பற்ற மூன்று திருக்கண்களும், தோள் இரு நான்கும் --- எட்டுத் திருத்தோள்களும், சுடர்முகம் ஐந்தும் --- அருள் ஒளி வீசும் ஐந்து திருமுகங்களும், பவளநிறம் பெற்று --- பவள நிறத்தோடு விளங்கி, தவள நீறு பூசி --- வெண்மையான திருநீற்றினைப் பூசி, அறுசுவை அதனினும் உறுசுவை உடைத்தாய் --- கைப்பு, இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு என்னும் ஆறுவகையான சுவையிலும் மிக்க இனிமையான சுவையினை உடையதாய், காணினும் கேட்பினும் கருதினும் களிதரும் --- கண்ணால் கண்டாலும், காதால் கேட்டாலும், மனத்தால் கருதினாலும் ஆனந்தத்தை தருகின்ற, சேண் உயர் மருத மாணிக்கத் தீங்கனி --- மிக உயர்ந்த மருதமாணிக்கம் என்னும் இனிய கனியானது, பையப் பையப் பழுத்துக் கைவர --- மெல்ல மெல்ல முதிர்ந்து கையில் எளிதாகக் கிடைக்க, எம்மனோர்கள் இனிது இனிது அருந்திச் செம்மாந்து இருப்ப --- எம்மைப் போன்றவர்கள் (அந்தச் சிவஞானக் கனியை) இன்புற உண்டு மகிழ்ந்து இருக்க,

     சிலர் இதின் வாராது --- இதன் அருமையை உணர்ந்து தெளியாத சிலர், இந்த உழைப்பினை முயலாது, மனம் எனும் புனத்தை வறும்பாழ் ஆக்கி --- மனமாகிய கொல்லைப் புறத்தை பயனற்ற பாழ் நிலமாக இருக்கவிட்டு, காமக் காடு மூடி --- காமம் என்னும் காடு மூடிக் கிடந்ததால், தீமை செய் ஐம்புல வேடர் ஆறலைத்து ஒழுக --- தீமைகளைப் புரிகின்ற ஐம்புல வேடர்கள் வழிப்பறி செய்து இழுக்க, இன்பப் பேய்த்தேர் எட்டாது ஓட --- சிற்றின்பம் ஆகிய கானல் நீரானது கைக்கு எட்டாது ஓட,  கல்லா உணர்வு எனும் புல்வாய் அலமர --- கல்வி அறிவு இல்லாத உணர்வு என்கின்ற மான் ஆனது இங்கும் அங்குமாக ஓடித் திரியும்படி, இச்சை வித்து உகுத்துழி --- ஆசை என்னும் வித்தை (அந்தப் பாழ் நிலத்தில்) உதிர்த்த காலத்தில், யான் எனப் பெயரிய நச்சு மாமரம் நனிமிக முளைத்து --- நான் என்னும் ஆங்காரம் ஆகிய பெரிய நச்சுமரமானது மிகவும் முளைத்து, பொய் என் கவடுகள் போக்கி --- பொய்ம்மையாகிய கிளைகளைப் பரப்பி, செய்யும் பாவப் பல்தழை பரப்பி --- செய்யப்பட்டு வருகின்ற பாவம் ஆகிய பல தழைகளை விரித்து, பூ எனக் கொடுமை அரும்பி --- கொடுமை என்னும் அரும்புகளை விட்டு, கடுமை மலர்ந்து --- தீமையே மலர்ந்து, துன்பப் பல்காய் தூக்கி --- துன்பம் என்னும் பல காய்களைத் தாங்கிக் கொண்டு, பின்பு --- அதன் பின்பு, மரணம் பழுத்து --- மரணம் என்கின்ற பழமானது பழுத்து, நரகிடை வீழ்ந்து --- நரகத்தில் விழுந்து, தமக்கும் பிறர்க்கும் உதவாது --- தமக்கும், மற்றவர்க்கும் பயன்படாது, இமைப்பில் கழியும் --- இமைக்கின்ற நேரத்தில் அழிந்து கெடுகின், இயற்கையோர் உடைத்தே --- குணம் உடையவர்களை இந்த உலகம் பெற்று இருக்கின்றது.

 

"கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம்

காமம் வெகுளி கழிபெரும் பொய் எ(ன்)னும்

தூய்மையில் குப்பை தொலைவின்றிக் கிடந்ததை

அரிதின் இகழ்ந்து போக்கி, பொருதிறல்

மைருள் நிறத்து மதன் உடை அடுசினத்து

வகைக் கடாவும் யாப்பு அவிழ்த்து அகற்றி,

அன்புகொடு மெழுகி, அருள்விளக்கு ஏற்றி,

துன்ப இருளைத் துரந்து, முன்புறம்

மெய்யெனும் விதானம் விரித்து, நொய்ய

கீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப்

பாழறை உனக்குப் பள்ளியறை க்கிச்

சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு

ந்தை நீ இருக்க இட்டனன்" 

என்று "திருக்கழுமல மும்மணிக் கோவை" என்னும் அருள்நூலில், பட்டினத்தடிகள், மெய்ம்மையான உழவைச் செய்வது, தமது உள்ளம் என்னும் பாழறையை, இறைவனுக்குப் பள்ளியறை ஆக்கிய அருமை குறித்துப் பாடி உள்ளார்.

இதன் பொருளைச் சிந்திப்போம்....

      கருமுதல் தொடங்கிப் பெருநாள் எல்லாம் --- நான் கருவில் அகப்பட்டு, பூமியில் பிறக்கத் தொடங்கிய காலம் முதலாகக் கழிந்த எண்ணில்லாத காலங்கள் எல்லாம், காமம் --- காமத்தால் விளைந்த தீமையும், வெகுளி --- நல்லோரையும் மற்றோரையும் கோபித்துக் கொண்டதால் வந்த தீமையும், கழிபெரும் பொய் எ(ன்)னும் --- மிகுதியாகப் பொய்யைப் பேசுவதால் வந்த தீமையும் எனப்படும், தூய்மையில் குப்பை --- தூய்மை இல்லாத குப்பைகள், தொலைவின்றிக் கிடந்ததை --- அழியாமல் இருப்பில் இருந்தவற்றை. அரிதின் இகழ்ந்து போக்கி --- நீக்கக் கூடாதவையாக இருந்த அவற்றால் விளைந்த தீமைகளால் அவற்றை வெறுத்து, அவை என்னை விட்டுப் போகும்படியாகச் செய்து, பொருதிறல் --- போர் புரியும் தன்மை கொண்ட, மைருள் நிறத்து --- மிக்க கருமை நிறம் கொண்ட, மதன் உடை --- மதம் பிடித்த, அடு சினத்து வகைக் கடாவும் யாப்பு அவிழ்த்து அகற்றி --- கொல்லத்தக்க கோபத்தினை உடைய ஐந்து வகையான வேறுபட்ட ஒழுக்கம் கொண்ட, ஐந்து புலன்கள் ஆகிய கடாக்களையும், அவைகள் கட்டப்பட்டு இருந்து கட்டினை அவிழ்த்து அப்புறப்படுத்தி,  அன்புகொடு மெழுகி --- அந்த இடத்தினை அன்பு என்னும் நீரால் மெழுகி, அருள்விளக்கு ஏற்றி --- அருள் என்னும் விளக்கினை ஏற்றி வைத்து, துன்ப இருளைத் துரந்து --- துன்பமாகிய இருட்டினை ஓட்டி, முன்புறம் --- இவ்வாறு இருந்த அந்த இடத்தில்,  மெய் எ(ன்)னும் விதானம் விரித்து --- வாய்மை என்கின்ற மேற்கட்டினை விரித்து விளங்கக் கட்டி, நொய்ய கீழ்மையில் தொடர்ந்து கிடந்தஎன் சிந்தைப் பாழறை --- அற்பமாகிய தாழ்ந்த குணங்களில் சிக்கியிருந்த எனது மனமாகிய பாழான அறையை, எந்தை, னக்குப் பள்ளியறை க்கி --- எனது பெருமானே! நீ திருத்துயில் கொண்டு இருக்கும் இடமாகப் பண்ணி, அந்தப் பள்ளியறையில், நீ இருக்க --- தேவரீர் எழுந்தருளி இருக்க, சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவிசு இட்டனன் --- எனது சிந்தையாகிய அழகிய தாமரை மலரினால் ஆகிய அழகிய இருக்கையை இட்டு வைத்தேன்.

     இவ்வாறு, மனம் என்னும் நல்ல கொல்லைப் புனத்தில் வளர்கின்ற, நல்ல எண்ணம் ஆகிய தினைப்பயிரை, தீய எண்ணங்கள் ஆகிய பறவைகள் வந்து பாழ்படுத்தாமல் காவல் புரிந்து கொண்டு, இறைவனையே எண்ணித் தவம் புரிந்துகொண்டு, தமது மனத்தை முருகப் பெருமான் எழுந்தருளி இருக்கும் பள்ளியறையாக மாற்றி இருந்தவர், சீவான்மா ஆக உருவெடுத்து வந்த எம்பிராட்டி, அகிலாண்ட நாயகியாகிய வள்ளித் தாயார். நாரதர் ஆகிய பழஅடியார் பரிந்துரைக்க, அவரது சகாயத்தோடு, முருகப் பெருமான் அந்த சீவான்மா ஆகிய வள்ளிநாயகியைத் தேடி வந்து ஆட்கொண்டு அருள் புரிந்தார்.

நாவலர் பாடிய நூல்இசை யால்வரு

     நாரத னார்புகல் ...... குறமாதை

நாடியெ கானிடை கூடிய சேவக!

     நாயக! மாமயில் ...... உடையோனே.     --- (ஏவினைநேர்) திருப்புகழ். 

நாரதன் அன்று சகாயம் மொழிந்திட,

     நாயகி பைம்புனம் ...... அதுதேடி,

நாணம் அழிந்து, உரு மாறிய வஞ்சக!

     நாடியெ பங்கய ...... பதம் நோவ, 

மார சரம் பட, மோகம் உடன் குற-

     வாணர் குறிஞ்சியின் ...... மிசையேபோய்,

மா முநிவன் புணர் மான் உதவும், தனி

     மானை மணம் செய்த ...... பெருமாளே.      --- (பாரநறுங்) திருப்புகழ். 

என்று வள்ளித் திருமணம் பற்றி, அருணகிரிநாதப் பெருமான் அழகுறப் பாடியருளினார். வள்ளித் திருமணம் பல அருமையான தத்துவங்களை உள்ளடக்கியது.

       நாமும், ஆணவம், மாயை, கன்மம் என்னும் மும்மலங்கள் அற்று, பக்குவம் பெற்ற சீவான்மாவாக விளங்கி, நல்லெண்ணங்களை வளர்த்து, ஞானானுபவத்தைப் பெற்று விளங்குவோமானால், எம்பெருமான் வந்து ஆட்கொண்டு அருள் புரிவான்.

     இதனை விளக்குவதே, சூரசம்மாரம் மற்றும் தேவயானை, வள்ளித் திருமணங்கள்.


No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...