ஆத்திசூடி --- 20. தந்தைதாய்ப் பேண்

 

 

                                                            20. தந்தைதாய்ப் பேண்

 

(பதவுரை) தந்தை --- தந்தையையும், தாய் --- தாயையும், பேண் ---காப்பாற்று

 

(பொழிப்புரை) (நீ ஒரு மகனாக உலவுவதற்குக் காரணமாய் இருந்த) உன் தாய் தந்தையரை அன்புடன் போற்றிக் காப்பாற்று.

 

     மேலே, "இணக்கம் அறிந்து இணங்கு" என்று சொன்னதைக் கொண்டு, நான் வேண்டியதை எனக்குச் செய்யாத தந்தைதாயோடு, நான் எப்படி இணங்கி இருக்க முடியும் என்று ஐயம் உண்டாகுமானால், அதனைத் தெளிவித்தற்கு இவ்வாறு கூறினார்.

 

     உனது தந்தை தாயை, நீ பேணுவதற்கு வேறு காரணங்கள் வேண்டாம். உன்னைப் பெற்றெடுத்துப் பாதுகாத்து, உன்னையும் ஒரு மகனாக உலவுவதற்குக் காரணமாக உனது தந்தைதாய் அமைந்து இருந்தனர் என்ற ஒரு காரணமே, நீ அவர்களைப் போற்றுதல் வேண்டும் என்பதற்குப் பொருந்தும்.

 

     தோற்றத்திற்கு முதல் காரணம் தந்தை என்பதால், தந்தையை முதலில் வைத்துக் கூறினார். "ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்" என்று நான்மணிக் கடிகை என்னும் நூல் கூறும். தாய்க்கு நிகராக வைத்து மதிக்கத் தக்க கடவுள் வேறு இல்லை. "கொண்டானின் துன்னிய கேளிர் பிறர் இல்லை" என்றும் நான்மணிக் கடிகை கூறும். தன்னைத் திருமணஞ் செய்து கொண்ட கணவனைப் போல நெருங்கிய உறவினர், குலமகளிர்க்கு வேறு ஒருவரும் இல்லை. "குலமகட்குத் தெய்வம் கொழுநனே" என்று குமரகுருபர அடிகள் "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில் கூறியபடி, குலமகளுக்குத் தெய்வம் தனது கணவனே என்பதால், தந்தையை முன்னர் வைத்துக் கூறினார் என்பது அறிக.

 

     "புதல்வர்க்குத் தந்தையும் தாயும் தெய்வம்" என்று குமரகுருபர அடிகள் "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில் கூறியபடி, ஒருவனுக்குத் தந்தையும் தாயுமே தெய்வம் போன்றவர்கள் என்று அறிதல் வேண்டும். கண்ணால் காண முடியாதது தெய்வம். அதற்கு உருவம் இல்லை. நாம்தான் உருவத்தை உண்டாக்கி வைத்தோம். அது "கருணையே வடிவமானது" என்பதால், "கற்பனை கடந்த சோதி, கருணையே உருவமாகி" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். நம்மால் அறியப்படுகின்ற தெய்வம் தாய்தந்தையரே என்பதால், "அன்னையும் பிதாவும் முன் அறி தெய்வம்" என்று "கொன்றைவேந்தன்" என்னும் நூலில் ஔவைப் பிராட்டியார் அருளிச் செய்தார். "தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்" என்றார் வள்ளல்பெருமான்.

 

     தாய் தந்தைக்கு ஈடு எங்கும் இல்லை. அவர்க்குச் செய்யும் அருமையான கைம்மாறும் ஏதும் இல்லை. சிறுபொருள் தந்தவரையும் வாழ்நாள் முற்றும் மனத்தில் நினைக்க வேண்டும் என்பது பெரியோர் திருமொழி. அப்படியானால், நம் உடல் உயிர் வாழ்வு எல்லாம் தந்தருளிய தாய் தந்தையரை மறவாது இருப்பதல்லாமல், செய்யும் கைம்மாறு இல்லை.

 

சின்ன ஓர் பொருள் தந்தோரைச்

     சீவன் உள்ளளவும் உள்ளத்து

உன்னவே வேண்டும் என்ன

      உரைத்தனர் பெரியோர்; தேகம்

தன்னை, ஆருயிரை, சீரார்

     தரணியில் வாழ்வைத் தந்த

அன்னை தந்தைக்குச் செய்யும்

      அருங்கைம்மா றுளதோ அம்மா.  --- நீதிநூல்.

 

     பத்து மாதம் தனது உடல் வருந்தச் சுமந்து இருந்து,  கசப்பான மருந்துகளை உண்டு இருந்து, அநேகம் துயரங்களைத் தாங்கி, பெற்றெடுத்து, பாலூட்டி, சீராட்டி வளர்த்து விட்ட தாயை வணங்கவேண்டும்.

 

கடவுளை வருந்திச் சூலாய்க்

     கைப்புறை உண்டு, அனந்தம்

இடர்கள் உற் ற, தரம் தன்னில்

     ஈரைந்து திங்கள் தாங்கி,

புடவியில் ஈன்று, பன்னாள்

     பொன்தனப் பாலை ஊட்டித்

திடம் உற வளர்த்து விட்ட

     செல்வியை வணங்காய் நெஞ்சே. --- நீதிநூல்.          

 

     உலகில் உள்ளோர் யாவரும் துதித்துப் போற்றுகின்ற இறைவனை நீ வணங்க விரும்பினால், ஒப்பு சொல்ல முடியாத, கண்கண்ட தெய்வங்களாக விளங்குகின்ற தாயையும், தந்தையையும் வணங்கவேண்டும்.   

           

எப் புவிகளும் புரக்கும்

     ஈசனைத் துதிக்க வேண்டின்,

அப்பனே தாயே என்போம்,

     அவரையே துதிக்க வேண்டின்,

ஒப்பனை உளதோ? வேலை

     உலகில் கட்புலனில் தோன்றும்

செப்பருந் தெய்வம் அன்னார்

     சேவடி போற்றாய் நெஞ்சே.       --- நீதிநூல்.

 

     தன்னைப் போற்றாதவரை எந்த தாயும், தந்தையும் தண்டிப்பது இல்லை. தாய் தந்தையரைப் போற்றாத பெரும் குற்றத்தைப் புரிந்தவரை, நன்றி மறந்த குற்றத்திற்காக, இறைவனே அவர்களைத் தண்டிப்பான். வைத்து வளர்த்தவர்க்குப் பூ,  நிழல், பழம் ஆகியவற்றை மரத்தை வெட்டி எரிப்பது போன்று, தாய் தந்தையரை வணங்காத அறிவில்லாரை ஆண்டவன் இருள் (நரக) உலகில் தள்ளி வருத்துவான்.

 

வைத்தவர் உளம் உவப்ப

     மலர்நிழல் கனி ஈயாத

அத்தருத் தன்னை வெட்டி

     அழல் இடு மாபோல், ஈன்று

கைத்தலத்து ஏந்திக் காத்த

     காதல் தாய் பிதாவை ஓம்பாப்

பித்தரை அத்தன் கொன்று

     பெருநரகு அழல் சேர்ப்பானே.     --- நீதிநூல்.

 

     ஓர் உதவியைச் செய்தால், பிரதி உபகாரமாக ஓர் உதவியை எதிர்பார்க்காதவர் யாரும் இல்லை. தனது மகன் ஓங்கி வாழ்வான், தளர்ச்சி அடைந்து உடல் வருந்தும்போது, நம்மைத் தாங்குவான், தாங்கமாட்டான் என்றெல்லாம் சிறிதும் கருதிப் பார்க்காது, அன்போடு நம்மை அவர்கள் வளர்த்த பாங்கு போற்றுதலுக்கு உரியது. எனவே, பெற்றோரின் அன்பினை அளவிட்டுக் கூறமுடியாது.

 

ஈங்கு எதிர் உதவி வெஃகாது,

     எவருமே உதவி செய்யார்;

ஓங்கும் சேய் வாழும் வீயும்

     உடல் எய்க்கும் பொழுது, தம்மைத்

தாங்கிடும் தாங்காது என்னுந்

     தன்மை நோக்காது, பெற்றோர்

பாங்குடன் வளர்க்கும் அன்பு

     பரவலாம் தகைமைத்து அன்றே.  --- நீதிநூல்.

 

     தந்தைதாயைப் பேணாமல் ஒருவன் தன்னைத் தானே பேணிகொள்ளுதல் கூடாது. தனக்கு முன் அறியப்படுகின்ற தெய்வங்களான தாய்தந்தையரைப் பேணுதல் ஒருவனுக்குத் தலையாய கடமை மட்டுமல்ல. அதுவே, ஒருவனது நன்றியுணர்விற்கு அறிகுறியாகவும் விளங்குவது. நன்றி கொன்றால் உய்தி இல்லை என்று சொல்லப்பட்டுள்ளதால், தாய்தந்தையரைப் பேணுவது அவசியம். தமக்கு விருப்பம் அல்லாதவற்றைத் தாய்தந்தையர் செய்தாலும், அவரை விடவும் சிறந்த துணை ஒருவனுக்கு இல்லை. எனவே, இந்த அரிய கருத்துக்களை எல்லாம் உள்ளடக்கி, "தந்தைதாய்ப் பேண்" என்று ஔவைப் பிராட்டியார் அறிவுறுத்தியதன் அருமையை அறிதல் வேண்டும்.

 

கண்எதிரே கண்ட கடவுள் உயர் தாய்தந்தை,

எண் எதிரே காண எதிர் உண்டோ? --- மண்எதிரே

வந்தருளி நம்மை வளர்த்து அருளும் மாமுதலை

முந்து பணிக முனைந்து.

 

     "தருமதீபிகை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல் இது.

 

     உலகில் உள்ள எல்லாப் பொருள்களினும், பெருமை மிக்க பொருள் தாய்தந்தை ஆதலின், இவ்வாறு சொன்னார். மூலமுதலான மூர்த்திகள் ஆகிய தாய்தந்தையரைப் போற்றி உபசரித்து வரவேண்டும். அவர்களை முதலில் வணங்கி மகிழ்க.

 

     தாயும் தந்தையும் நமது கண் எதிரில் காணும் தெய்வங்களாக உள்ளனர். இவர்களே நமது கண் கண்ட தெய்வங்கள். இவர்களைப் போற்றினால், தெய்வத்தைப் போற்றியதாகும்.

 

     எங்கும் நீக்கம் அற நிறைந்து விளங்கும் பரம்பொருள் பொதுவான தெய்வம். எல்லா உயிர்களுக்கும் ஆதாரமாக அது விளங்குகின்றது. அதுவே உயிர்களைப் படைத்துக் காத்து, அருளுகின்றது. அதனை நம்பி பயபத்தியுடன் போற்றி வழிபாடு செய்கின்றோம். ஆனால், யாரும் நேரில் காணவில்லை. இதுதான் தாயாகியும் தந்தையாகியும் வந்து, நம்மை ஈன்று, புறம் தந்து, இனிய கல்வியினைத் தந்து சான்றோக்கி, நல்லோர் போற்றச் சபை நடுவே வீற்றிருக்கச் செய்து, நலம் பலவும் தந்து அருளுகின்றது. எனவே, "ஈன்றாளுமாய், எனக்கு எந்தையுமாய், உடன் தோன்றினராய், மூன்றாய் உலகம் படைத்து உகந்தான்" என்று அருளினார் அப்பர் பெருமான். நாம் நமது கண் எதிரில் காணுகின்ற தெய்வங்கள் தாய்தந்தையர் என்பதால், "அன்னையும் பிதாவும் முன் அறி தெய்வம்" என்றார் ஔவைப் பிராட்டியார். "தாயாகி, தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம், தன்னை நிகர் இல்லாத தனித் தலைமைத் தெய்வம்" என்றார் வள்ளல்பெருமான்.

 

     தந்தைதாயைப் பேணும் ஒழுக்கம் உள்ள ஒருவனுக்கு, இயல்பாகவே, தந்தைக்கு ஒப்பவும், தாய்க்கு ஒப்பவும் மதித்துப் போற்றுதற்கு உரியவர்களையும் மதித்துப் போற்றும் நற்குணம் விளங்கும்.

 

     இராமன் பரதனுக்கு அறிவுறுத்தியதாக வரும் கம்பராமாயணப் பாடல்களால் தாய்தந்தையரின் பெருமை அறியப்படும்.

 

பரவு கேள்வியும், பழுது இல் ஞானமும்,

விரவு சீலமும், வினையின் மேன்மையும்,

உர வி(ல்)லோய்! தொழற்கு உரிய தேவரும்,

குரவரே எனப் பெரிது கோடியால்.

 

இதன் பொருள் ---

 

     வலிமை பொருந்திய வில்லை உடையவனே! புகழ்ந்து சொல்லப்படும் நூற்கேள்வியும்; குற்றமற்ற நல்லுணர்வும்;  உடன் கொள்ளத்தக்க ஒழுக்கமும்; செய்தொழிலின்

சிறப்பும்; வணங்குதற்கு உரிய தேவர்களும்; பெரியோர்களே என்று மிகவும் மனத்தில் கொள்வாய்.

 

     கேள்வி, ஞானம், சீலம், வினை மேன்மை என்பனவற்றைக் குரவர்என்றது உபசாரவழக்கு.

 

அந்த நல் பெருங் குரவர் ஆர்? எனச்

சிந்தை தேர்வுறத் தெரிய நோக்கினால்,

தந்தை தாயர் என்று இவர்கள்தாம் அலால்,

எந்தை! கூற வேறு எவரும் இல்லையால்.

 

இதன் பொருள் ---

 

     என் அன்பில் சிறந்த பரதனே!; நான் கூறிய சிறந்த பெருமையுடைய குரவர்கள் யார் என்று மனத்தால் மிக ஆராய்ந்து விளக்கப் பார்த்தால், தந்தையும் தாயுமே அல்லாமல்;  சிறப்பித்துக் கூற வேறு ஒருவரும் இல்லை.

   

     தாய்க்கு நிகரான தெய்வம் வேறு இல்லை என்பதால், "தாயில் சிறந்தொரு கோயிலும் இல்லை" என்றார் ஔவைப் பிராட்டியார். தாய்க்கு நிகராக மதித்துப் போற்றுதற்கு உரிய தெய்வம் வேறு இல்லை என்பதால், "ஈன்றாளோடு எண்ணக் கடவுளும் இல்" என்கின்றது "நான்மணிக்கடிகை"

 

     ஈன்று எடுத்தவள் நல்தாய். இவள் அல்லாது மற்றவரும் தாயராக உள்ளனர். அவர்கள், பாராட்டுந் தாய், ஊட்டுந் தாய், கைத்தாய், செவிலித்தாய் எனப்படுவர்.

 

தன்னை அளித்தாள், தமையன்மனை, குருவின்

பன்னி, அரசன் பயில்தேவி, - தன்மனையைப்

பெற்றாள், இவர்ஐவர் பேசில் எவருக்கும்

நற்றாயர் என்றே நவில்.               --- நீதிவெண்பா.

 

இதன் பொருள் ---

 

            பேசுமிடத்து, தன்னை ஈன்றவள், தன் மூத்த சகோதரனின் மனைவி, ஆசிரியரின் மனைவி, அரசனுக்குரிய மனைவி, தன் மனைவியைப் பெற்றவள் (மாமியார்) ஆகிய இவ் ஐந்து வகையாரையும் எவர்க்கும் பெற்ற தாய்மார்கள் என்றே சொல்லு.

 

     அதுபோலவே, தந்தையர் ஐவர் என்றும் பின்வரும் பாடல் கூறும்.

 

பிறப்பித்தோன், வித்தைதனைப் பேணிக் கொடுத்தோன்

சிறப்பின் உபதேசம் செய்தோன், - அறப்பெரிய

பஞ்சத்தில் அன்னம் பகர்ந்தோன், பயம்தீர்த்தோன்

எஞ்சாப் பிதாக்கள்என எண்.                --- தனிப்பாடல்.

 

இதன் பொருள் ---

 

     பெற்ற தந்தை, வித்தைகளைக் கற்றுக் கொடுத்தவர், உபதேசம் செய்த ஆசான், பஞ்சத்தில் உணவளித்தவர், அச்சம் போக்கியவன் ஆகிய ஐவரும் ஒருவனுக்குத் தந்தையாவர்.

 

     பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான "ஆசாரக்கோவை" கடவுளுக்கு நிகராக வைத்துப் போற்றத் தக்கவர் யார் என்று கூறுவதைக் காண்போம்...

 

அரசன், உவாத்தியான், தாய்தந்தை ,தம்முன்,

நிகரில் குரவர் இவர் இவரைத்

தேவரைப் போலத் தொழுது எழுக என்பதே

யாவரும் கண்ட நெறி.      

 

இதன் பொருள் ---

 

     அரசனும், ஆசிரியரும், தாயும் தந்தையும், தனக்கு மூத்தோனும் என இவர்கள், தமக்கு நிகர் இல்லாக் குரவர் ஆவார். இவர்களைத் தேவரைப்போலத் தொழுது எழுக என்று சொல்லப்படுவது எல்லாரும் வரையறுத்துக் கூறிய நெறி ஆகும்.

 

     மேற்கூறிய எல்லாவற்றுக்கும் மேலே ஒரு படி சென்று, ஒருவன் தனது தந்தையர்களாக வைத்துப் போற்றத் தக்கவர்கள் ஒன்பது பேர் என்று "குமரேச சதகம்" என்னும் நூல் அறிவிக்கும் பாடலைக் காண்போம்.

 

தவம் அது செய்தே பெற்று எடுத்தவன் முதல் பிதா,

     தனை வளர்த்தவன் ஒரு பிதா,

தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒரு பிதா,

     சார்ந்த சற்குரு ஒரு பிதா,

 

அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா, நல்ல

     ஆபத்து வேளை தன்னில்

அஞ்சல் என்று உற்ற தயர் தீர்த்துளோன் ஒரு பிதா,

     அன்புஉள முனோன் ஒரு பிதா,

 

கவளம்இடு மனைவியைப் பெற்று உளோன் ஒருபிதா,

     கலி தவிர்த்தவன் ஒரு பிதா,

காசினியில் இவரை நித்தம் பிதா என்று உளம்

     கருதுவது நீதியாகும்,

 

மவுலிதனில் மதியரவு புனைவிமலர் உதவுசிறு

     மதலையென வருகுருபரா!

மயிலேறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே!

 

            இதன் பொருள் ----

 

     மவுலி தனில் மதி அரவு புனை விமலர் உதவு சிறு மதலை என வரு குருபரா --- திருச்சடையில் பிறைச்சந்திரனையும், பாம்பையும் தரித்துள்ள சிவபெருமான், சூரபதுமனால் தேவர்கள் படும் துயர் தீர்வதற்காக உதவி அருளிய குழந்தைவேலனாக வந்து, தந்தைக்கு உபதேசம் செய்து அருளிய மேலான குருநாதனே! மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே! புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

     1. தவம் அது செய்தே பெற்று எடுத்தவன் முதல் பிதா --- இல்லறமாகிய தவத்தினைப் புரிந்து அதன் பயனாகப் பெற்று எடுத்தவன் முதல் தந்தை ஆவான்,

 

     2. தன்னை வளர்த்தவன் ஒரு பிதா --- தன்னை வளர்த்தவன் மற்றொரு தந்தை ஆவான்,

 

     3. தயையாக வித்தையைச் சாற்றினவன் ஒரு பிதா --- பெரும் கருணை செய்து கல்வியைக் கற்பித்தவன் ஒரு தந்தை ஆவான்,

 

     4. சார்ந்த சற்குரு ஒரு பிதா --- உயிர் மேலான புருஷார்த்தங்களை அடைய அருள் நூல்களை அறிவுறுத்தியவன்  ஒரு தந்தை ஆவான்,

 

     5. அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா --- துன்பம் நேராமல் காத்து அரசினை ஆளுகின்றவன் ஒரு தந்தை ஆவான்,

 

     6. நல்ல ஆபத்து வேளை தன்னில் அஞ்சல் என்று உற்ற துயர் தீர்த்துளோன் ஒரு பிதா --- கொடிய ஆபத்து வந்த காலத்தில் அஞ்சாதே என்று ஆதரவு கூறி, நேர்ந்த வருத்தத்தை நீக்கியவன் ஒரு தந்தை ஆவான்,

 

     7. அன்பு உள முனோன் ஒரு பிதா --- அன்புடைய அண்ணன் ஒரு தந்தை ஆவான்,

 

     8. கவளம் இடும் மனைவியைப் பெற்றுளோன் ஒரு பிதா --- அன்போடு உணவு ஊட்டும் மனைவியைப் பெற்றவன் ஒரு தந்தை ஆவான்,

 

     9. கலி தவிர்த்தவன் ஒரு பிதா --- வறுமையைப் போக்கி உதவியவன் ஒரு தந்தை ஆவான்,

 

     காசினியில் இவரை நித்தம் பிதா என்று உளம் கருதுவது நீதியாகும் --- உலகத்தில் இவர்களை எப்போதும் தந்தையர் என்று உள்ளத்தில் கொண்டாடுவதே அறம் ஆகும்.

No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...