அறமே ஆக்கம் தருவது - அறம் செய விரும்பு.

                                        அறமே ஆக்கம் தருவது - அறம் செய விரும்பு

----

 

     திருக்குறளில் "அறன் வலியுறுத்தல்" என்னும் அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "அறத்தைக் காட்டிலும் மேம்பாடு தருவது இல்லை; அந்த அறத்தை மறப்பதைக் காட்டிலும் அழிவைத் தருவதும் இல்லை" என்கின்றார் நாயனார்.

 

     கோவூர் கிழார் என்னும் புலவர் பாடிய புறநானூற்றுப் பாடலில், "சிறப்பு உடை மரபில் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படுஉம் தோற்றம் போல" என்று சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுறுத்துமாறு கூறியுள்ளார். "மேன்மை உடைய முறைமையினால் பொருளும் காமமும் அறத்தின் பின்னே தோன்றும் காட்சியைப் போலஎன்பது இதன் பொருள்.

 

     பொருள் படைத்த ஒருவன்தனக்கு உள்ள பொருளிலேயே இன்புற்று இருக்கலாம். ஆனால்அந்தப் பொருளைக் கொண்டு அவன் அறச்செயல்களைச் செய்யவில்லையானால்அவன் படைத்துள்ள பொருளால் அவனுக்கு யாதொரு நன்மையும் இல்லை. உண்மையானநிலைத்த இன்பம் அவனுக்கு இல்லாமல் போகும்.

 

---   அறத்தின் பெயர் இன்பம். 

---   அறத்தின் பெயர் அமைதி. 

---   அறத்தின் பயன் ஒருமைப்பாடு. 

---   அறத்தின் பயன் எல்லாரும் நன்றாக வாழ்தல். 

 

இதுவே மனித வாழ்க்கையின் நியதி ஆகும். 

 

     அறவழியில் நிற்கவில்லையானால்அதுவே ஒருவனுக்கு எல்லாவிதமான கேட்டையும் அடைவதற்கு வழி ஆகும். அறம் என்பது மனம் சார்ந்தது. மனம் செம்மையாக இருந்தால் அற உணர்வு தன்னால் வரும். "மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்" என்று நாயனார் பிறிதொரு திருக்குறளில் காட்டினார். மனம் தூயதாக இருந்தால்இருக்கின்ற நிலையற்ற பொருளைக் கொண்டுநிலையான பயனைத் தருகின்ற அறத்தைச் செய்து வாழ்வதுதான் வாழ்வின் குறிக்கோள் என்பது புலப்படும். பொருள் பொருளாகவே இருந்தால்என்றாவது ஒரு நாள் அது நம்மை விட்டுப் போகும். அல்லது நாம் அதைவிட்டுப் போய்விடுவோம். பொருளை அருளாக மாற்றிக் கொண்டால்அது நம்மோடு வந்து மறுமைக்கும் இன்பத்தைத் தரும்.

 

"அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லைஅதனை

மறத்தலின் ஊங்கு இல்லை கேடு".    

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.       

 

     ஒருவனுக்கு மேம்பட்ட பெருக்கத்தைத் தருவது அறத்தைச் செய்வதாலேயே.  வேறு ஒன்னிறாலும் ஆக்கம் வருவது இல்லை.அறத்தைச் செய்வதை அறிவு மயக்கத்தால் மறந்து விடுவதால் வருகின்ற மேம்பட்ட கேட்டைத் தருவதும் வேறு ஒன்றும் இல்லை.

 

     ஆக்கம் என்பதற்குஎல்லாப் பேற்றினும் சிறந்ததாகிய வீடு பேறு என்று சொல்லப்பட்டது. வீடு பேறுசுவர்க்கம் முதலிய இன்பங்கள் "ஆக்கம்" என்று சொல்லப்பட்டன. அவை உயிருக்கு இன்பத்தையே தருவதால்,பிறப்பினால் வரும் துன்பத்தைக் "கேடு" என்றே கொள்ள வேண்டும்.

 

     "பிறவியால் வருவன கேடு உளஆதலால் பெரிய இன்பத் துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது எனத் தூங்கினாயே" என்ற திருஞானசம்பந்தப் பெருமான் தேவாரத்தால் இது தெளியப்படும். முதல் திருப்பதிகத்திலேயே, "துயர் இலங்கும் உலகில்" என்று அப் பெருமானார் பாடியுள்ளதும் கருத்தில் கொள்ளத்தக்கது.

 

     ஆக, "ஆக்கம்" என்பது ஆண்டவன் அருளால் வருகின்ற வீடுபேறும் அதனால் விளைகின்ற அளவிலா இன்பமும் என்பதும், "கேடு" என்பது பிறவியும்அதனால் வருகின்ற துன்பமும் என்பதும் இதனால் நன்கு விளங்கும்.

 

     இத் திருக்குறளுக்கு விளமக்கமாககமலை வெள்ளியம்பலவாண முனிவர் தாம் பாடிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில்அறவழியில் நின்றுபசுக்களைக் காத்த சண்டீச நாயனாருக்குஅவர் புரிந்த பாதகத்துக்குப் பரிசாகதனது திருவடிப் பேற்றை சிவபெருமான் அருளியதையும்வேள்வியை ஆற்றினாலும்அது அறவழியில் அமையாததால்சிவபெருமான் தக்கனைத் தண்டித்ததையும் வைத்துபின் வரும் பாடலைப் பாடி உள்ளார்.

 

தண்டிக்கு அருள் புரிந்துதக்கன் சிரம் அறுக்கும்

அண்டர் பெருமான் அருளும் ஆகமத்தில் ---  கண்ட,

அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கு இல்லை கேடு.               

 

     தண்டி - சண்டேச நாயனார். இவருக்குச் சிவபெருமான் அருளியது சண்டேச பதவி. தக்கன் சிவபிரானிடத்து வெறுப்புற்று அவரை அழையாமல் மற்றத் தேவர்களைக் கொண்டு பெரியதொரு வேள்வியைத் தொடங்கினான். அப்போதுஅவன் சிவநிந்தைக்கும்அபசாரத்துக்கும் ஆளாகவேசிவபெருமான் வீரபத்திரரைக் கொண்டுஅவன் தலையை அறுப்பித்து வேள்வியையும் அழித்தார்.

 

      அண்டர்பிரான் கூறும் ஆகமத்தில் கண்ட அறத்திலும் சிறந்தது இல்லை என்பது சண்டேசுவரர் வரலாற்றால் தெரியவரும். 'அதனை'என்றது ஆகமத்தில் கூறிய அறத்தினை.  

 

     அறத்தினை மறத்தலால் வரும் தீங்கினை உணர்த்துவது தக்கன் வரலாறு ஆகும். தாம் சிவபூசை செய்து வரும்போதுஅதற்கு இடையூறாகப் பூசைக்குரிய உபகரணங்களைக் காலால் உதைத்துத் தள்ளிய தம் தந்தையின் தாளைச் சண்டேசுவரர் துணித்தார். இச்செயல் அறச் செயலேயாகச் சிவபெருமான் அருளுக்கு இவர் பாத்திரமானார்.

 

     பின் வரும் சிவஞானசித்தியார் பாடல் ஒன்று இங்கு வைத்து எண்ணத் தகும்...

 

"அரன் அடிக்கு அன்பர் செய்யும் 

     பாவமும் அறமதாகும்

பரன் அடிக்கு அன்பு இலாதார் 

     புண்ணியம் பாவம் ஆகும்

வரம் உடைத் தக்கன் செய்த 

     மாவேள்வி தீமை ஆகி

நரரினில் பாலன் செய்த 

     பாதகம் நன்மை ஆய்த்தே".

 

இதன் பொருள் ---

 

     சிவபெருமானுடைய திருவடிக்கு அன்பு பூண்ட மெய்யடியார்கள் வழிபாடு செய்யும் காலத்தில்,அவர்கள் செய்கிற பாவச் செயல்களும் அறமே ஆகும். தலைவனாகிய சிவனது திருவடிகளுக்கு அன்பு இல்லாதவர்கள் செய்யும் புண்ணியங்களும் பாவமே ஆகும். தனது தவ வலிமையால் பல வரங்களைப் பெற்ற தக்கன் இயற்றத் தொடங்கிய சிறந்த வேள்வி பாவச் செயலாக முடிந்தது. சிறிய பெருந்தகையான சண்டீசர் தமது தந்தையின் காலைத் தடிந்த பாதகம் நன்மையாக முடிந்தது.

 

     சிவபெருமானை ஒதுக்கி விட்டுத் தன் முனைப்போடு வேள்வி செய்யத் தொடங்கினான் தக்கன். அந்த வேள்வி அவனுக்கு நன்மையைத் தராமல் தீமையில் முடிந்தது. இந்த வரலாறு கந்த புராணத்தில் இடம் பெறுகிறது

 

     சேய்ஞலூர்ப் பிள்ளையாராகிய சண்டீசர் மணலைச் சிவலிங்கமாகப் பிடித்து வைத்துப் பாலால் திருமஞ்சனம் ஆட்டி வழிபட்டார். அதனைத் தடுக்க முயன்ற தமது தந்தையின் காலை அருகில் கிடந்த சிறு கோலால் எறிந்தார். அதுவே வாளாகித் தந்தையின் கால்கள் இரண்டையும் துணித்து எறிந்தது. இவ்வாறு பெரியபுராணத்தில் கூறப்படுகிறது.

 

     "புத்தன் மறவாது ஓடி எறி சல்லி புதுமலர்கள் ஆக்கினான் காண்" என்பார் அப்பர் பெருமானார். சாக்கிய நாயனார் சிவலிங்கத்தின் மீது நாள்தோறும் கல்லினை எறிந்தது அறச் செயலே. மறச் செயல் அல்ல. ஆனால்மன்மதன் சிவபிரான் மீது எறிந்தவை மலர்க்கணைகள் என்ற போதிலும்,அச் செயல் பாவச் செயலாகவே முடிந்த்து. அதனால் மன்மதன் எரிந்து சாம்பலானான்.

 

     ஆஅற வழியில் நின்றால் ஆக்கம் என்னும் வீடுபேறு வாய்க்கும் என்பதும்அறத்தை அறிவு மயக்கத்தால் மறந்து அல்லாத வழியில் சென்றால்,கேடு என்னும் பிறப்பும்நரகத் துன்பமும் வாய்க்கும் என்பது தெளிவாக்கப்பட்டது.

                                                                        

     அடுத்ததாககுமார பாரதி என்னும் பெரியவர்தாம் பாடிய "திருத்தொண்டர் மாலை"என்னும் நூலில்இத் திருக்குறளுக்கு விளக்கமாகபெரிய புராணத்தில் வரும் மூர்க்க நாயனார் வரலாற்றை வைத்துப் பின்வரும் பாடலைப் பாடி உள்ளார்.

 

உருள் ஆயமும் பொன் உதவுதல் மூர்க்கர்க்கே,

பொருள்ஆயம் மற்றவர்க்கே போக்கும்,- அருளாம்

அறத்தினூஉங்கு ஆக்கமும் அல்லை அதனை

மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.                

 

      தொண்டை நாட்டிலே திருவேற்காட்டிலே வேளாளர் குலத்திலே தலைமை பெற்றவர் ஒருவர் இருந்தார். சிவனடியார்களைச் சிவன் எனவே கொண்டு நாள்தோறும் வணங்கித் திருவமுது செய்வித்துத் தாம் உண்ணும் நியமம் உடையவர். அடியவர் வேண்டும் பொருள்களையும் கொடுத்து வந்தார். நாளடைவில் அவரிடமுள்ள பொருள்கள் எல்லாம் அடியார்கட்கு அமுது அருத்தி வந்தமையால் செலவாகிவிட்டன. அடிமை,நிலம் முதலியவற்றையும் விற்று, அவர் மாகேசுர பூசையை மனமகிழ்வுடன் வழுவாமல் செய்து வந்தார். அதன் பின்பு மாகேசுர பூசையைச் செய்வதற்குப் பொருள் இல்லாமையால்தாம் முன்பு கற்றிருந்த சூதாட்டத்தினால் பொருள் சம்பாதிக்க நினைத்தார். அவ்வூரில் சூதாடுவோர் இன்மையால் அவ்வூரை அகன்றார். அவர் சிவத்தலங்கள் தோறும் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அங்கங்கே சூதாடலால் வரும் பொருளைக் கொண்டு மாகேசுர பூசை நடத்தி வரலானார். கும்பகோணத்தைச் சேர்ந்தார். அங்கே சூதாடிப் பொருள் தேடித் தம் நியமத்தைச் சரிவர நடத்தினார். சூதிலே மறுத்தவர்களை அவர் உடைவாளை உருவிக் குத்துவார். அதனால் 'நற்சூதர்''மூர்க்கர்' என்னும் பெயரையும் பெற்றார். அடியார்கள் திருவமுது செய்தபின்பு தாம் கடைப் பந்தியிலேயே உண்பார். இவ்வாறு சிலகாலம் செய்திருந்து அப்பெரும் சிவபுண்ணியத்தினாலே சிவபதம் அடைந்தார்.  

 

      ஒருவனுக்கு அறம் செய்தலின் மேம்பட்ட ஆக்கமும் இல்லை. அதனை மயக்கத்தால் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை என்றார் திருவள்ளுவ நாயனார்.அறவழியிலே நின்றதால் மூர்க்க நாயனாருக்கு,உருள் ஆயம் என்னும் சூதாட்டத்தால் பொன் கிடைத்தது. மற்றவர்க்கு சூதாட்டத்தால் பொருள் போனது.

 

     அடுத்ததாகபிறைசை சாந்தக் கவிராயர் தாம் பாடிய நீதி சூடாமணி என்னும் "இரங்கேச வெண்பா"வில்இத் திருக்குறளுக்கு விளக்கமாகப் பின்வரும் பாடலைப் பாடி உள்ளார்.

 

கானக் குரங்கு எழலால்,கங்கை சுதன் முதலோர்

ஈனப் படலால்,இரங்கேசா! - ஆன

அறத்தினூஉங்கு ஆக்கமு மில்லை யதனை

மறத்திலின் ஊங்கில்லை கேடு.                              

 

இதன் பொருள் ---  

 

     இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளேகானக் குரங்கு எழலால் - காட்டில் வாழும் குரங்குகள் வெற்றி பெற்று இராமாயணத்தில் விளங்கின காரணத்தாலும்,  கங்கை சுதன் முதலோர் - கங்கை மைந்தராகிய வீடுமர் முதலிய பெரியோர் ஈனம் படலால் - பாரதத்தில் தோல்வி அடைந்து பெருமை குன்றின காரணத்தாலும் ஆன - எல்லார்க்கும் அனுகூலமான அறத்தின் ஊங்கு - தருமத்தைக் காட்டிலும் ஆக்கமும் இல்லை - செல்வமும் வாழ்வும் கிடையாது. அதனை மறத்தலின் ஊங்கு - அதை மறந்து பாவம் செய்வதை விட கேடு இல்லை - கெடுதியும் தாழ்வும் இல்லை.

 

      கருத்துரை--- தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்.

 

      விளக்கவுரை--- தேவக் குரங்குகளாகிய கானக் குரங்குகள் இராமாயணத்தில் வெற்றி பெற்று விளங்கினமை உலகறிந்த கதை. அவைகள் கேவலம் குரங்குகளாய் நிராயுத பாணிகளாய் இருந்தும்அறத்தை மேற்கொண்டு ஒழுகிய இராமபிரானை அடுத்திருந்த காரணத்தால்இராவணன் முதலிய அர்க்கரைக் கொன்று வென்று நன்று விளங்கின. இராமபிரானுடைய அறக் கருனையும்அறம் போற்றும் ஆற்றலும் இராமாயணத்தில் எங்கெங்கும் பரக்கக் காணலாமாயினும்,இராவணனிடத்தில் அவர் அங்கதனைத் தூது அனுப்பின பெருங் கருணைத் திறம் பெரிதும் வியக்கற்பாலது. இப்படித் தருமத்தையே பெரிதும் பாராட்டிப் போற்றின புண்ணிய புருஷோத்தமனை நண்ணிய சேனைகள் குரங்குகள் எனினும் வெற்றி பெற்றன. 

 

     இதனையே இங்கு "கானக் குரங்கு எழலால்" என்று கூறினார். இதனால் அறத்தின் ஊங்கு ஆக்கம் இல்லை என்பது நன்கு விளங்குகின்றது.

 

      கங்கை சுதன் முதலோர் ஈனப்படலால் என்பதுகங்கையின் மைந்தர் ஆகிய வீடுமர் முதற்கொண்டு  துரோணர்கிருபர்விதுரர் முதலிய பெரியோர்பாவியாகிய துரியோதனனை அடுத்திருந்த காரணத்தால் ஈனம் அடைந்து பாண்டவர்க்குத் தோற்றமையைக் குறிக்கின்றது. குரங்குச் சேனையைக் காட்டிலும் எத்தனையோ வில்லாண்மையில் சிறந்த வீடுமர் முதலிய சேனா வீரர்களைப் பெற்றிருந்தானாயினும்துரியோதனன் தருமத்தைக் கைவிட்டுப் பாண்டவர்க்குச் சேர வேண்டிய பாகத்தை, அவர்கள் வனவாசம் தீர்ந்து வந்த பின்பும் கொடுக்க மறுத்தானாகையால்பாரதப் போரில் தன் சுற்றத்தோடு அநியாயமாய் மாண்டான்.  

 

     "அறத்தின் ஊங்கு ஆக்கம் இல்லை" என்னும் திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கிற்கு ஒப்புமையாகப் பின்வரும் பாடல்களைக் கொள்ளலாம்...

 

அறத்தின் ஊங்கு ஆக்கம் இல்லை 

     என்பதும்,இதனை ஆய்ந்து

மறத்தின் ஊங்கு இல்லை கேடும் 

     என்பது மதித்துவர் தம்

திறத்தினே அறிந்து கொண்மின்,

     தீக்கதிப் பிறவி அஞ்சில்,

மறத்தை நீத்து அறத்தோடு ஒன்றி 

     வாழும்நீர் வையத்தீரே.        --- மேருமந்தர புராணம்.

 

இதன் பொருள் ---

 

     இப்பூமியில் உள்ளவர்களே! தர்மத்தைக் காட்டிலும் பெரிதாகியசெல்வம்இல்லை என்று உலகத்தில் சொல்வதையும்பாவத்தைக் காட்டிலும் பெரிதாகியகேடும் இல்லை என்று சொல்வதையும்இச் சரித்திரத்தை ஆராய்ந்துஎண்ணிஇந்த முனிவன்,ஆரியாங்கனை ஆகியோரால் தர்மபலன் சிறந்து விளங்கியதையும்,பாம்பாகியசத்தியகோஷனின் தன்மையால்  பாவபலன் தாழ்ந்து நின்றதையும் தெரிந்து கொள்ளுங்கள்அவ்வாறு தெரிந்து கொண்டு,நீங்கள்கெட்ட கதியில் பிறக்கும் பிறப்புக்குப் பயந்தால் பாவத்தை நீக்கிதருமத்தோடு சேர்ந்துவாழக்கடவீராக.

 

"அறம் அ(ல்)லது உறுதி செய்வார்கள் தாம் இ(ல்)லை,

மறம் அ(ல்லாது இடர் செ(ய்)ய வருவதும் இ(ல்)லை

நெறி இவை இரண்டையும் நினைந்து,நித்தமும்

குறுகுமின் அறநெறி குற்றம் நீங்கவே".      --- மேருமந்தர புராணம்.

 

இதன் பொருள் ---

 

     அறம் அ(ல்)லது உறுதி செய்வார்கள்தாம் இல்லை - தர்மமே அல்லாமல்உயிருக்கு உறுதியான நன்மை செய்பவர்கள் இல்லை,   மறம் அ(ல்)லாது இடர் செய வருவதும் இல்லை - பாவமே அல்லாமல் உயிருக்குத் துன்பம் செய்ய வருவதும்வேறு இல்லை. நெறி இவை இரண்டையும் நினைந்து - (ஆக்கத்தைத் தருகின்ற) அறநெறி, (கேட்டினைத் தருகின்ற) பாவநெறி ஆகிய இரு நெறிகளையும் மனதில் ஆராய்ந்து வைத்து, நித்தமும் -  நாள்தோறும்,  குற்றம் நீங்க - பாவத்துக்குக் காரணம் ஆகியவிருப்பு வெறுப்பு ஆகிய இரண்டும்காமம் முதலாகிய குற்றங்களும் விலகும்படியாகஅறநெறி - இம்மையில் உலகியல் இன்பத்தையும்மறுமையில் அழியாத இன்பத்தைத் தருகின்ற வீடுபேற்றையும் தருகின்ற அறநெறியை,  குறுகுமின் - அடையுங்கள்.

 

"ஆக்குவது ஏது எ(ன்)னில்,அறத்தை ஆக்குக;

போக்குவது ஏது எ(ன்)னில்,வெகுளி போக்குக;

நோக்குவது ஏது எ(ன்)னில்,ஞானம் நோக்குக;

காக்குவது ஏது எ(ன்)னில்,விரதம் காக்கவே.".   --- மேருமந்தர புராணம்.

 

இதன் பொருள் ---

 

     ஆக்குவது ஏது என்னில்அறத்தை ஆக்குக- செய்ய வேண்டியது எது என்றால்அறத்தையே செய்க. போக்குவது ஏது என்னில் வெகுளி போக்குக - நீக்க வேண்டியதுஎன்னஎன்றால்கோபத்தை நீக்குகநோக்குவது ஏது என்னில் ஞானம் நோக்குக - மனத்தால் நாட வேண்டியது எது என்றால்வேண்டியதுஞானத்தையே கருத்தாகப் பார்த்து அறிககாக்குவது ஏது என்னில் விரதம் காக்கவே - காக்க வேண்டியது எது என்றால்விரதம் ஒன்றையே வழுவாமல் காப்பாற்றுவாயாக.

 

"இளமையும் வனப்பும் நில்லா

     இன்பமும் நின்ற அல்ல,

வளமையும் வலிவும் நில்லா

     வாழ்வு நாள் நின்ற அல்ல,

களமகள் நேசம் நில்லா

     கைப்பொருள் கள்வர் கொள்வார்,

அளவு இலா அறத்தின் மிக்கது 

     யாதும் மற்று இல்லை அன்றே".    --- நரி விருத்தம்.

 

இதன் பொருள் ---

 

     இளமையும் அழகும் நிலையற்றன. அதனால் வரும் இன்பமும் நிலையில்லாதது. வாழ்க்கையில் கொண்டுள்ள வளமும்வலிமையும் கூட நிலையில்லாதன. வாழ்நாளும் ஒரு முடிவுக்கு வரும். தோட்டம்துரவுமனை முதலான பூமிகளின் மீது நீங்கள் நேசம் வைத்திருப்பதும் நிலையற்றது. உங்களின் கையில் உள்ள பொருளை கள்வர்கள் கவர்ந்து கொள்வார்கள். அளவு இல்லாத நன்மைகளைத் தரக்கூடிய அறத்தின் மேலானதுவேறு எதுவும் இல்லை.

 

     "அறத்தை மறந்தால் வரும் கேடு" என்பதற்கு ஒப்புமையாகப் பின்வரும் பாடல்களைக் கொள்ளலாம்...

 

'வாழியாய் ! கேட்டியால்: வாழ்வு கைம்மிக

ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய்,

கீழ்மையோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ ?

வாழ்மைதான்அறம் பிழைத்தவர்க்குவாய்க்குமோ ?

                                               --- கம்பராமாயணம்வீடணன் அடைக்கலப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     அண்ணலே வாழ்க! நான் கூறுவதைக்கேட்பாயாகஉனது வாழ்க்கை நாளுக்கு நாள்மேம்படஊழிக் காலத்தின் எல்லையைக்காண உள்ள உனது உயிரின் பெருமையைஎண்ணாது இருக்கிறாய்நீகீழ்மக்களின்சொல்லைக் கேட்டு;  கேட்டை அடையமுற்படுகிறாயா?  அறநெறிகளை விட்டுத் தவறி நடந்தவர்க்கு நல்ல வாழ்க்கை அமையுமோ? (என்று இராவணனுக்குஅவனது தம்பியான விபீடணன் அறிவுரை கூறினான்)

     

'அறம் உனக்கு அஞ்சிஇன்று ஒளித்ததால்அதன் 

திறம் முனம் உழத்தலின்வலியும் செல்வமும் 

நிறம் உனக்கு அளித்ததுஅங்கு அதனை நீக்கிநீ

இறமுன் அங்குயார் உனை எடுத்து நாட்டுவார்

                                                 --- கம்பராமாயணம். கும்ப. வதைப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     இப்போது  உன் செயலைக் கண்டு அறம் அஞ்சி ஒளித்துக் கொண்டதுமுன்பு நீ அறத்தின் கூறுபாட்டைவருந்திச் செய்ததால்அவ்வறம் உனக்கு வலிமை செல்வம் ஆகியமேன்மையைக் கொடுத்ததுஅத்தகைய அற வழியில் இருந்து நீங்கி,நீ இப்போது அழியப் போகும்போதுபிறர் யார் வந்து உன்னை எடுத்துமீட்க வல்லார். (என்று கும்பகர்ணன் தான் போருக்குப் போவதற்கு முன்னர்தனது அண்ணனாகிய இராவாணனுக்கு அறிவுரை கூறினான்)

 

     இராவணனைப் பார்த்துதான் போருக்குப் போகும் முன்னர், "அறம் பல செய்துதவமும் செல்வமும் வலிமையும் பெற்ற நீஇப்போது அறம் அல்லாத செயல்களைச் செய்து அழிகின்றாய்" என்றான் கும்பகர்ணன். 

 

 

 

குவியாத கரங்கள்

 


குவியாத கரங்கள்

-----

 

     உடம்பைப் பெற்றதன் பயன் உடம்பினுள் குடிகொண்டு இருக்கிற இறைவனை வணங்க வேண்டும். என்றாலும் அந்த உணர்வு பெரும்பாலான நேரங்களில் எடுபடாமல் உள்ளதால்உலக இயலில் ஈடுபட்டிருக்கிறோம். இறைவனை வணங்கவில்லையே என்று நாம் வருந்துவதற்குப் பதிலாக"வணங்காத் தலை வந்து இது எங்கே எனக்கு இங்ஙன் வாய்த்ததுவே" என்று அருணகிரிநாதர் நமக்காக வருந்தியதைப் பார்த்தோம்.

 

     தலை மாத்திரம் வணங்கவில்லை என்று சொன்னால் போதாது. மேலும் சில உறுப்புக்கள் இன்ன இன்ன காரியங்களைச் செய்ய வில்லை என்பதைத் தொடர்ந்து சொல்கிறார். கர்மேந்திரியங்கள் எனப்படும் தொழிற்கருவிகள்ஞானேந்திரியங்கள் என்று எனப்படும் அறிவுக் கருவிகள் எல்லாவற்றாலும் இறைவனை வழிபடவேண்டும்உடம்பில் கண்காதுமூக்குநாக்குதோல் ஆகிய ஞானேந்திரியங்கள் ஐந்தும் - கை,கால்வாய்எருவாய்கருவாய் ஆகிய கர்மேந்திரியங்கள் ஐந்தும் உள்ளன. ஞானேந்திரியங்களுக்குள் கண் சிறந்தது. கர்மேந்திரியங்களுக்குள் கை சிறந்தது. கை செயலுக்கு அறிகுறியாக இருக்கிறது. ஒரு காரியத்தை நன்கு செய்பவனைக் "கையால் ஆகிறவன்" என்றும்செய்ய முடியாதவனைக் "கையால் ஆகாதவன்" என்றும் சொல்கிறோம். 

 

     ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்யும்போது இறைவனை நினைந்து சங்கற்பம் செய்து கொள்வது நமது வழக்கம். நம்முடைய ஆற்றலை மாத்திரம் நம்பிச் செய்யாமல்இறைவன் திருவருளும் வேண்டும் என்று கருதியே இந்தச் சங்கற்பத்தைச் செய்து கொள்கிறோம். அப்படிச் செய்யும்போது இரண்டு கைகளையும் சேர்த்துத் தொடையில் வைத்துக் கொண்டு ஆண்டவன் துணையை நாடுகிறோம். நாம் செய்கிற காரியங்களுக்குக் கை உதவும் கருவிஎனவேசங்கற்ப முத்திரையைக் கையால் காட்டுகிறோம். 

 

     உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஒருவருக்கொருவர் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளச் சில முறைகளைக் கொண்டு உள்ளார்கள். கையை நெற்றியில் வைத்து வணங்கும் வழக்கம் பல நாடுகளில் இருக்கிறது. மார்பிலே வைத்துத் தலையால் வணங்குவாரும் உண்டு.  நமது நாட்டிலும் வணக்கத்தை வெளிப்படுத்துகிறோம். கையைக் கூப்பிக் கும்பிடுவது ஒருவகை. கையைக் கூப்பும்போதே தலையைச் சிறிது குனிந்து வணங்குவது ஒருவகை. பெரியவர்கள் வீட்டுக்கு வந்தால் இரண்டு கைகளையும் பூமியில் வைத்து முழங்காலை மண்டியிட்டுக் கொண்டு நெற்றி நிலத்தில் படும்படியாக வணங்குவது ஒருவகை. இதற்குப் பஞ்சாங்க வணக்கம் என்று பெயர். தலைஇரண்டு கைகள்இரண்டு கால்கள் ஆகிய ஐந்து உறுப்புக்கள் பூமியில் படுவதால் "பஞ்சாங்க வணக்கம்" என்று பெயர் வந்தது. பெண்கள் இப்படி வணங்குவது வழக்கம். இறைவனையும் இப்படியே பெண்கள் வணங்குவார்கள். பெரியவர்களையும்இறைவன் சந்நிதியிலும் வணங்கும்போது ஆண்கள் அட்டாங்கமாகச் செய்வது வழக்கம். அட்டாங்கம் என்பதற்கு எட்டு அங்கங்களுடன் செய்வது என்று பொருள். நெற்றிஇரண்டு கைகள்மார்புஇரண்டு பாதங்கள்இரண்டு முழங்கால்கள் ஆகியவை நிலத்தில் படும்படியாக வணங்குவது அட்டாங்க வணக்கம். கீழே விழுந்து வணங்குவதைத் "தண்டனிடுதல்" என்றும் சொல்வார்கள். "தண்டம்" என்பது தடி. தடி சாய்ந்து விழுவது போல உடம்பு இறைவன் சந்நிதியில் கீழே விழுந்து வணங்குவது தண்டன் இடுதல் ஆகும்.  

 

     இருள் சூழ்ந்து உள்ள இடத்தில்,விளக்கு ஒளி கொடுக்கிறது. கதிரவன் தோன்றிவிட்டால்விளக்குப் பயன் அற்றதாகப் போகிறது. அப்போதுவிளக்கு தன்னைக் காட்டிக் கொண்டு நிற்குமே தவிர வேறு பொருளைக் காட்டுகின்ற அவசியம் அதற்கு இல்லாமல் போகிறது. இறைவனை உணராத இடங்களில் எல்லாம் இந்த உடம்பு கால்களையும்கைகளையும் ஆட்டிப் பலவிதமான செயல்களைப் புரியும். இறைவனுடைய சந்நிதியில் செயலற்றுப் போகும். அதுதான் முறை. இறைவன் எங்கும் இருக்கிறான் என்பதை உணர்ந்தவர்களுக்கு உலகம் முழுவதுமே இறைவனுடைய சந்நிதானம். ஆகையால்,அவர்கள் எப்போதுமே செயல் ஒழிந்து நிற்கிறார்கள். அது செயல் மாண்ட நிலை. இந்த அனுபவத்தை,

 

"கயல்மாண்ட கண்ணிதன் பங்கன் எனைக் கலந்து ஆண்டலுமே,

அயல்மாண்டு,அருவினைச் சுற்றமும் மாண்டு, அவனியின்மேல்

மயல்மாண்டு,மற்றுஉள்ள வாசகம்மாண்டு,என்னுடைய 

செயல்மாண்டவா பாடித் தெள்ளேணம் கொட்டாமோ!"

 

என்று பாடுகிறார் மணிவாசகப் பெருமான். 

 

     ஆகையால்,இறைவன் சந்நிதானத்தில் தடியைப் போல உடம்பைக் கீழே விழச்செய்து வணங்குகிறோம். அவனே எல்லாச் செயல்களுக்கும் மூலகாரணம் என்பதையும்இந்த உடம்பினாலே செய்கின்ற செயல் ஒன்றும் இல்லை என்பதையும் அந்த வணக்கம் காட்டுகிறது. "அன்பால் வியந்து உருகிஅடி அற்ற மரம் என்ன அடியிலே வீழ்ந்து வீழ்ந்துஎம் அடிகளே! உமது அடிமை யாங்கள் என்னும் நால்வருக்கு அறம் ஆதி பொருள் உரைப்பதென்பாலின் முகம் ஆகி வட ஆல் இருக்கின்ற செல்வமே" என்பார் தாயுமான அடிகளார். அடி அற்ற மரம் போல் விழுந்து வணங்குவது அதி உன்னதமான நிலை.

 

     கைகளைக் கூப்புவதைத் "தொழுவது" என்று சொல்வார்கள். "கைகாள் கூப்பித் தொழீர்" என்று அப்பர் பெருமான் பாடுகிறார். "தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி” என்பது மணிவாசகர் திருவாக்கு. கை குவிப்பதை அஞ்சலிம்கும்பிடு என்றும் சொல்கிறோம். கும்பிடும்போது இரண்டு கைகளும் ஒன்று சேருகின்றன. இயற்கையாக நம்முடைய கைகள் விரிந்து பல பல செய்கைகளைச் செய்கின்றன. இறைவன் சந்நிதியில் செயல்கள் அற்று ஒன்று சேர்ந்து குவிகின்றன. அப்படிச் செய்வதால் இருதயம் மலரும் என்பதைக் காட்ட, "கரமலர் மொட்டித்துஇருதயம் மலர" என்பார் பணிவாசகப் பெருமான். 

 

     கை நீளம் உடையவன் என்று திருட்டுக் குணம் உடையவனைச் சொல்கிறோம். கைகள் விரிய விரிய உள்ளத்தில் ஆசை விரிகிறது. ஆகையால் முடிவு இல்லாத பிறப்பு இறப்பை உடைய வாழ்க்கை தொடர்ந்து வருகிறது. எத்தனைக்கு எத்தனை ஆசைகளையும் செயல்களையும் விரிவுபடுத்திக் கொள்கிறோமோஅத்தனைக்கு அத்தனை துன்பமும் விரிந்து கொண்டு போகிறது. எத்தனை எத்தனை அவற்றைச் சுருக்கிக் கொள்கிறோமோ அத்தனைக்கு அத்தனை துன்பமும் சுருங்குகிறது. 

 

     பசுமாடு வைத்துக் கொள்ளவில்லை என்றால்,உண்ணி எடுக்கும் வேலை இல்லை. புல் வாங்கிப் போடும் கவலை இல்லை. கொட்டில் அலம்பும் தொல்லை இல்லை. ஆள்காரனைத் தேடும் அவதி இல்லை. இப்படியே ஒவ்வொரு செயலிலும் பார்க்கலாம். 

 

"யாதனின் யாதனின் நீங்கியான்,நோதல் 

அதனின் அதனின் இலன்"

 

என்கிறார் திருவள்ளுவ நாயனார். எந்த எந்தப் பொருளோடு தொடர்பு இல்லாமல் அறுத்துக் கொள்கிறோமோஎந்த எந்த நிகழ்ச்சிகளில் இருந்து விலகி இருக்கிறோமோ,அவ்வவற்றால் வருகின்ற துன்பம் இல்லை,தாபமும் இல்லை.

 

     எதிர்மறையில் திருவள்ளுவ நாயனார் சொன்ன இந்தத் திருக்குறளை அப்படியே உடன்பாட்டு வாய்ப்பாடாக மாற்றினால்,

 

 "யாதனின் யாதனின் ஓங்கியான்,நோதல் 

அதனின் அதனின் உளன்"

 

என்று வரும். எந்த எந்தப் பொருளோடு தொடர்பு வைத்துக் கொள்கிறோமோ,அந்த அந்தப் பொருளினால் துன்பம் உண்டு என்ற கருத்து வெளிப்படும். 

 

     இறைவனைத் தொழுது வணங்குகின்ற கைகளை, "சொர்ணம் இடுகின்ற கைகள்" என்றும்தொழுது வணங்காத கைகள், "பலி ஏற்க நீள் கொடும் கை" என்றும் வள்ளல்பெருமான் காட்டினார். சொர்ணம் என்றால் தங்கம். பலி ஏற்றல் என்றால் பிச்சை எடுத்தல் என்று பொருள்.

 

     அருணகிரிநாதப் பெருமான்நமது கைகள் பிச்சை எடுக்காமல்தங்கத்தைப் பிறருக்கு வாரி வழங்குகின்ற வள்ளல் கைகளாக விளங்கஓர் அற்புதமான உபாயத்தை அருளிச் செய்கின்றார். முருகப் பெருமானுடைய மாமன் திருமால். இவர் பத்து விதமான அவதாரங்களை எடுத்தவர். இராமாவதாரத்தில் இவர் செய்த ஓர் அற்புதம். சீதாபிராட்டியை இராவணன் தூக்கிச் சென்று இலங்கையில் சிறை வைத்துவிட்டான். இவர் நினைத்திருந்தால் சீதாதேவியைத் தாம் இருந்த இடத்தில் இருந்தபடியே தம்மிடத்தில் அழைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால்அவர் அப்படிச் செய்யவில்லை. பிராட்டி சிறைப்பட்டு இருந்த இலங்கைக்குச் சென்றார். விபீடணனுக்கு அருள் செய்ய வேண்டி அவன் இருந்த இடத்திற்கே போனார். அப்படிப் போகும்போது இடையிலுள்ள கடலுக்குப் பாலம் கட்டிச் சென்றார். அந்தப் பாலத்தை அவர் தாமாகக் கட்டவில்லை. குரங்குகளைப் படையாகக் கொண்டு கடலை அடைத்துப் பாலம் கட்டச் செய்தார். அத்தகைய பெரியவராகிய திருமாலுடைய மருமருகன் முருகப் பெருமான்.

 

     திருமாலை அறிமுகம் செய்ய எத்தனையோ அடையாளங்கள் இருக்க,அவற்றையெல்லாம் சொல்லாமல்,  குரங்குகளைக் கொண்டு கடலை அடைத்தவர்என்று சொல்கிறார். அதில் சிறப்பு உண்டு.

 

     குரங்கின் கை சும்மா இராது என்பார்கள். கட்டின மாலை மட்டுமல்லாமல்கண்ட பொருள்களை எல்லாம் பிய்த்துப் போடும். அத்தகைய கையே பாலத்தைக் கட்டின. இராமச்சந்திரமூர்த்தி அவற்றை ஆட்கொள்ளாவிட்டால்அவற்றினிடம் குரங்குப் புத்திதான் இருக்கும். ஆஞ்சநேயர் சீதா பிராட்டியைத் தேடிக் கொண்டு இலங்கை வருகிறார். இலங்கை முழுவதும் தேடிப் பார்த்தும் அவள் இருக்கும் இடத்தைக் காண முடியவில்லை.சீதையைக் கண்டு வருவான் அனுமன் என்ற நம்பிக்கை இராமனுக்கு உண்டு. "கண்டு வரும் என்று இருக்கும் காகுத்தன்"என்பது இராமனது நிலை.  'கவிக் குலக் கோன் கொண்டுவரும் என்றிருக்கும்என்பது விபீடணன் நிலை.  இப்படி இராமனும்சுக்கிரீவனும் நினைக்கின்ற நினைப்புகளில் வேறுபாடு இருக்கிறது. காகுத்தன் சீதையை ஆஞ்சநேயன் கண்டு வருவான் என்று எண்ணுகிறான். கவிகுலக் கோனாகிய சுக்கிரீவன் சீதையைக் கொண்டு வருவான் என்று எண்ணுகிறான். 

 

     சுக்கிரீவன் இராமனைப் போல அறிவுச் சிறப்பு உடையவன் அல்ல. சீதையின் பெருமையையும் உணர்ந்தவன் அல்ல. அவன் கவிக்குலக் கோன்குரங்கு அரசன். எதையும் பற்றிக் கொண்டு எடுத்து வருவது குரங்குகளின் இயல்பு. ஆஞ்சநேயன் சீதாபிராட்டியை ஏதோ ஒரு பண்டத்தைத் தூக்கிக் கொண்டு வருவதுபோலக் கொண்டு வந்து விடுவான் என்று அவன் நினைக்கிறான். குரங்கு அரசன்,

 

     எதையும் பிரித்துத் தூக்கிக் கொண்டு வருகிற இயல்பினை உடைய குரங்குகள் இராமனுடைய தொடர்பு கிடைத்த பின்னர் அற்புதமான மாற்றத்தை அடைந்தன. அவை இலங்கைக்குப் பாலம் கட்டின. குரங்குகளிடத்தில் மற்றொரு ஆற்றலும் உண்டு. அதுதான் பிடிக்கிற ஆற்றல். 'குரங்குப்பிடி'என்று சொல்வது உண்டு. குரங்குக்குப் பிரிக்கிறது எப்படி இயல்போ,அப்படியே பிடிக்கிறதும் இயல்புதான். ஆனால் பிடிக்கும் இயல்பு மிகவும் அரிதாகவே காணப்படும். 

 

     சமய நூல்களில் இறைவனைப் பற்றிக் கொள்ளும் திறத்தை இரண்டு வகையாகப் பிரிப்பார்கள். ஒன்று மார்ச்சால நியாயம். மார்ச்சாலம் - பூனை. மற்றொன்று மர்க்கட நியாயம். மர்க்கடம் - குரங்கு. தாய்ப்பூனை தனது குட்டிகளை வாயால் கெளவிக் கொண்டு செல்லும். பூனைக் குட்டிகளுக்கு ஒரு வேலையும் இல்லை. இறைவன் தன்னைச் சார்ந்தவர்கள் சிலருக்கு ஒரு வேலையுமின்றி அவர்களுடைய இன்பதுன்பங்களை எல்லாம் தானே தன் பொறுப்பாக ஏற்றுக் கொண்டு காப்பாற்றுகிறான். இது மார்ச்சால நியாயம் ஆகும். தாய்க்குரங்கு குட்டியைப் பற்றிக் கொள்ளாது. குட்டிதான் தாய்க் குரங்கின் வயிற்றை இறுகப் பற்றிக் கொள்ளும். பிடியை விட்டால் குரங்குக் குட்டி கீழே விழ வேண்டியதுதான். அப்படி நாம் குரங்குக் குட்டிகளைப் போல இறைவனைப் பற்றிக் கொண்டு சரணாகதி அடைய வேண்டும். அவனைச் சரணாக அடைந்துவிட்டால்தான் நமக்குப் பாதுகாப்புக் கிடைக்கும். இதுதான் மர்க்கட நியாயம் என்று சொல்வார்கள். "உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்" என்று திருவாசகம் "பிடித்தபத்து"ப் பகுதியில் மணிவாசக் பெருமான் காட்டிய சரணாகதி இதுதான்.

 

     இராமனோடு சம்பந்தப்பட்ட அளவில் குரங்குகளுக்கு உள்ள பிய்க்கிற தன்மையும்,பிரிக்கிற தன்மையும் மாறிபிடிக்கிற தன்மை மேல் ஓங்கியது. அதனால் பாலத்தைக் கட்டி முடிக்கின்ற ஆற்றலைப் பெற்றன. நமது மனமும் ஒரு குரங்கு தான். பிய்த்து எரிகின்ற ஆற்றலை விடுத்துபற்றிக் கொள்ளுகின்ற ஆற்றல் வளர வேண்டுமானால் 'குரங்குகளால் கடலை அடைத்தவன் ஆகிய திருமாலின் திருமருகர் ஆகிய முருகப் பெருமான் திருவருளை நாம் பெறவேண்டும்.

 

     திருமாலுக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தும் குரங்கைக் கொண்டு கடலை அடைத்தவர் என்று அறிமுகம் செய்த அருணகிரிநாதப் பெருமான்சிவபெருமானுக்கும் உள்ள அடையாளங்களையும் தெரிவிக்கின்றார். 

 

     பாம்புக்கும் சந்திரனுக்கும் எப்போதும் பகை. நஞ்சு கக்கும் பாம்புகளின் பக்கத்தில்தான் சிவபெருமான் திருமுடியில் சந்திரன் இருக்கிறது. பாம்பு இருக்கிறதே என்று சந்திரன் அஞ்சுவது இல்லை.  நமக்குப் பகையாகிய சந்திரன் இருக்கிறானேஅவனை விழுங்க வேண்டும் என்று பாம்பும் நினைப்பது இல்லை. அச்சம் கொள்ளாமல் சந்திரன் இருக்கிறான். சந்திரனை விழுங்கும் பகையாகிய பாம்புகளோ நஞ்சைக் கக்காமல் பகை உணர்ச்சியை விட்டுவிட்டுச் செயல் மாண்டு கிடக்கின்றன. "பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய்" என்று சிவபரம்பொருளைப் போற்றிப் பாடி உள்ளார் அப்பர்பெருமான்.

 

     நம்முடைய மனம் என்னும் பாம்புஐந்து பொறிகளின் வாயிலாகப் பகையாகிய நஞ்சைக் கக்காமல் செயல் அற்று இருக்க வேண்டும். மனம் செயலற்று இருக்க வேண்டுமானால்இறைவனைத் தொழுது சரணடைதல் வேண்டும். ஆனால்நம்முடைய கரங்கள் குவியாமல் விரிந்திருக்கின்றன. அதனால்ஆசை மிகுந்து பல செயல்களைப் புரிந்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆகவே சிவபெருமானை அறிமுகம் செய்து வைக்கும் அருணகிரிநாதர், "நஞ்சு கக்கும் நாகத்தைப் பகைமை உணர்ச்சி அடங்கி இருக்கும்படி ஆபரணமாகச் சூட்டிக் கொண்டவர் இவர்" என்று அடையாளம் காட்டுகிறார். 

 

     இறைவனுடைய திருவருள் இருக்கும் இடத்தில் பகையாக இருக்கும் பொருள்கள் எல்லாம் பகை நீங்கி ஒன்றுபட்டு வாழ்கின்றன. உலகில் எல்லா உயிர்களும் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்றால் எம்பெருமானுடைய திருவருள் நினைவு வேண்டும். புலியும்மானும் பகையுணர்ச்சி நீங்கி ஓர் இடத்தில் நீர் குடிக்கின்றன என்று நல்ல அரசட்சிக்கு ஒர் அடையாளம் சொல்வார்கள். ஆண்டவன் திருவருளைப் பலமாகக் கொண்ட மன்னர்கள் அறத்தை வளர்த்தார்கள். 

 

     புலி போன்ற உருவத்தையும்மான் போன்ற உருவத்தையும் பக்கத்தில் வைத்தால் புலியும் மானும் ஓர் இடத்தில் இருப்பது போலத் தோன்றும். அல்லது உயிர் அற்ற மானும்உயிர் அற்ற புலியும் ஒர் இடத்தில் இருக்கலாம். உயிரோடு இருக்கும்போது அவை இரண்டும் பக்கத்தில் பக்கத்தில் எப்படி நிற்கும்?பகைத் தன்மை உடைய விலங்குகள் பகை நீங்கி இருக்கின்ற அற்புதத்தை இறைவனுடைய அருளிலேயே ஈடுபட்ட ஆனாய நாயனார் செய்தார். 

 

     ஆனாய நாயனார் நீர்வளம்நில வளம் பொருந்திய சோழ நாட்டில் ஆயர் குலத்தில் தோன்றியவர் இறைவனிடத்தில் எல்லை இல்லாக் காதல் கொண்டு வாழ்ந்தவர். ஊரில் உள்ள கன்று காலிகளை ஒட்டிக் கொண்டு போய்த் தினந்தோறும் மேய்த்து வருவார். ஒவ்வொரு நாளும் அவர் மாடுகளை மேய்க்க அழைத்துச் செல்லும்போது அவ்விடத்தில் புல்லாங்குழல் ஊதுவார். மாடுகள் காலாற நடந்து மேய்ந்து கொண்டிருக்கும். அவர் தம் கையில் உள்ள புல்லாங்குழலை எடுத்துத் திருவைந்தெழுத்து மந்திரத்தை அதில் ஊதுவார். அந்த இன்னிசை காற்றில் பரவி அமுதம் புகுந்தது போல மக்கள் காதில் புகும். உயிர்க் கூட்டங்களின் காதில் புகுந்து அவற்றை வசம் ஆக்கும். 

 

     ஆனாய நாயனார் மாடுகளை மேய்த்த காட்டில்,பிறரை வருத்துகின்ற கொடிய விலங்குகளும் இருந்தன. அவற்றால் துன்புறும் எளிய பிராணிகளும் இருந்தன. பாம்புகள் இருந்தன பாம்பைக் கொத்தும் மயில்கள் இருந்தன. யானைகள் இருந்தன-யானைகளை அடித்துக் கொல்லும் சிங்கங்களும் இருந்தன. மான்கள் இருந்தனமான்களைத் தின்னும் புலிகளும் இருந்தன. ஆனாய நாயனார் புல்லாங்குழலில் இருந்து வெளிப்படும் அந்த அமுத இசையைக் கேட்டு அவை யாவும் தம்முடைய இயல்பு மாறி ஒன்றுபட்டு நின்றன என்று சேக்கிழார் பாடுகிறார். அந்த விலங்கினங்களின் காதும் கருத்தும் இசையிலே ஒன்றுபட்டதனால் அவற்றின் இயல்பான பகை உணர்ச்சி மாய்ந்து போயிற்றாம். 

 

"நலிவாரும் மெலிவாரும் உணர்வு ஒன்றாய் நயத்தலினால்,

மலிவாய் வெள்எயிற்று அரவம் மயில்மீது மருண்டுவிழும்,

சலியாத நிலைஅரியும் தடங்கரியும் உடன்சாரும்,

புலிவாயின் மருங்கு அணையும் புல்வாய புல்வாயும்.".   --- பெரியபுராணம்.

 

இதன் பொருள் ---

 

     உலகத்தில் வலிமை உடையவராய்ப் பிறரைத் துன்புறுத்துவாரும்அவரால் துன்பப்படுவாரும்தமது உணர்வு எல்லாம் இசை மயமாய் அதனையே நயத்தலினால்நஞ்சு மலிந்த வெண்பற்களை உடைய பாம்புகள் தமது பகையான மயிலின் மீது மருண்டு விழும். சலிப்படையாத சிங்கமும்அதன் பகையான பெருத்த யானையும் உடன் சேர்ந்து வரும். புலி வாயின் அருகில்புல்லை மேய்ந்து அதனை வாயில் கொண்ட சிறுமானும் அணையும்.

 

     வருத்துகின்ற வலியவர்களும்அவரால் துன்பத்தை அடைகின்ற எளியவர்களும் ஆனாய நாயனாரின் குழல் இசையைக் கேட்டு வேற்றுமை இல்லாமல் மனம் ஒருமைப் பட்டு இலயித்து விட்டார்கள். அதனால் பாம்புகள் மயில் மீது மயங்கி விழுந்தன.  புல்லை வாயில் வைத்துக் கொண்டிருக்கும் மான்,அதனைத் தின்னாமல் அப்படியே மயங்கி நிற்கும். அதன் அருகில் வாயைத் திறந்து கொண்டிருக்கும் புலி அந்த இன்னிசையில் தன்னை மறந்து நிற்கும். மான் புலி வாயில் போகாமல் அதன் பக்கத்தில் நிற்கும். புல்லானது மான் வாயில் போகாமல் அதன் வாயில் தொங்கும். மானுக்கும் புலிக்கும்  உயிர் இருந்தது. ஆனால் விலங்கு உணர்ச்சி இல்லை. அவற்றின் செவி வழியாகப் புகுந்த இன்னிசை மானின் கோழைத் தன்மையை மாற்றி,புலியைக் கண்டு அஞ்சாமல் அதன் பக்கத்தில் நிற்கும்படி செய்தது. அப்படியே புலியினிடம் இருந்த வெறித் தன்மையும் மாறி,மானைக் கொன்று தின்ன வேண்டுமென்ற உணர்ச்சி இல்லாமல் திறந்த வாயை மூடாமல் நின்றது. 

 

     இப்படியேபாம்பு தன் பாம்புத் தன்மையை இழக்கவும்சந்திரன் தன் கோழைத் தன்மையை இழக்கவும் இறைவனுடைய திருமுடியில் அவை இரண்டும் ஒன்றுக்கொன்று பக்கத்தில் செயல் அடங்கிக் கிடக்கின்றன. நஞ்சு கொப்புளிக்கும் நாகம் அவனுக்கு ஆபரணமாக விளங்குகிறது. பாம்புகளைச் செயல் அடங்கச் செய்து அணியாகச் சூட்டிக் கொண்டிருக்கிற பெருமான் ஆகிய சிவபரம்பொருளின் திருமகன் ஆகிய முருகப் பெருமானின் சிறப்பைத்தான் நமக்கு அருணகிரிதாநர் காட்டுகின்றார்.

 

     பாம்பு நஞ்சைக் கக்காமல் அணியாக மாறி இருப்பது போலஐந்து பொறிகளாகிய படங்களை உடைய நமது மனம் என்னும் பாம்பு நஞ்சைக் கக்காமல் இறைவன் திருவடிகளைச் சார்ந்து அணியாகும் நிலையைப் பெறலாம் என்பது இதனால் புலனாகிறது. மனம் தீயதாக இருந்தால் அதன் விளைவும் தீயதாகவே இருக்கும். அதை அடக்கிஅதன் கெட்ட தன்மையை மாற்றினால் அதுவே நமக்கு உதவியாகவிளங்கும். 

 

     இத்தனை பெருமைகளை உடைய மாமாவுக்கு மருமகன் ஆகவும்தந்தைக்கு மகனாகவும் உள்ள அந்த முருகப் பெருமான் தன் திருக்கரத்தில் வேல் தாங்கி இருக்கிறான். அந்த வேல் ஞானம். நல்லவற்றையும்நல்லவர்களையும் குலைப்பதையே தம் வேலையாகக் கொண்டவர்கள் அசுரர்கள். 

 

     நன்மையைக் குலைக்கின்றவர்கள். நல்லவர்களுக்குத் துன்பம் விளைத்து,அவர்கள் அழுவதைக் கண்டு மகிழும் இயல்பு உடையவர்கள். அவர்களைக் குலைப்பதற்கு முருகன் 

வேலைக் கையில் தொட்ட மாத்திரத்தில் அசுரர்களுடைய உலகத்தில் எழும்பிய புலம்பல் ஒலி எழும்பியது. அசுரர்கள் தமது தவத்தினால் திறல் பெற்றவர்கள்படையினால் திறல் பெற்றவர்கள்உடம்பு வலிமையினால் திறல் பெற்றவர்கள். அத்தகையவர்களைத் தனது ஞானசத்தியாகிய வேலாயுதத்தால் அழித்து ஒழித்தார் முருகப் பெருமான். வேலை எடுத்த மாத்திரத்தில் அசுரர்களுடைய உலகத்தில் துன்ப ஆரவாரம் எழுந்தது. விளக்கைக் கொண்டு வரும்போது இருள் ஒடுவதைப் போல ஞானம் தோற்றும்போது,அஞ்ஞானம் குலைந்து போகும். அசுர சம்பத்துகளாகிய தீய குணங்கள்ஞானம் தோன்றும்போது நிலைகுலைந்து கெட்டுவிடும். 

 

     இப்படி அஞ்ஞானத்தைப் போக்கிஞானத்தையே அருளும் சத்தியாகிய வேலைத் திருக்கையில் தாங்கி உள்ள முருகப் பெருமானைப் போற்றித் தொழாவிட்டால் நம்முடைய கைகளை பயன் அற்ற கைகள் ஆகிவிடும். அவன் கைவேல் எடுக்கும் தன்மை உடையது. அஞ்ஞானத்தைப் போக்குவதற்குரிய திருவிளையாட்டைச் செய்வதையே தன் தொழிலாகக் கொண்டது. நம்முடைய கை,செயல் ஒழிந்து அவன் முன்னால் குவிவதையே கடமையாகக் கொள்ள வேண்டும். 

 

     ஆனால்முருகப் பெருமானை வணங்கக் குவியாத கரங்கள் தமக்கு வாய்த்துவிட்டதாக அருணகிரிநாதர் பாடுகின்றார்.

 

     நம்முடைய கைகள் பல சமயங்களில் குவிகின்றன. இல்லாதவர்,இருக்கின்றவரிடம் சென்று கையேந்தி நிற்பது உண்டு. தேர்தலில் வாக்குக் கேட்டுஎத்தனையோ பேர்களுக்குமுன்னால் போய் நின்று கையைக் குவிக்கிறார்கள். இறைவனுடைய சந்நிதானத்திலும் அவர்கள் கை குவிப்பது உண்டு "சுவாமிஎன் பெட்டியில் நிறைய வாக்குச் சீட்டுகள் விழவேண்டும் என்று வேண்டிக் கொண்டு குவிக்கிறார்கள். விரிந்த கையானது குவிவதற்குக் காரணம் நெஞ்சிலே இறைவன்பால் மீது கொண்ட பத்தி அல்லவேறு ஒன்றில் வைத்த ஆசைதான். அன்பு இல்லாமல் கைகள் குவிந்தாலும்குவியாமலே இருந்தாலும் ஒன்றுதான். நம்முடைய கைகள் இறைவனுடைய சந்நிதியிலே குவிவதற்கு முன்னாலேகருத்து அன்பினாலே குவிய வேண்டும். எனவே, "அன்பால் குவியாக் கரங்கள்" என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான். 

 

     திருவிளையாடல் புராணத்தில்பரஞ்சோதி முனிவர் கைகள் அன்பினாலே தொழும் முறையை அழகாகச் சொல்கிறார். மணிவாசகருக்குக் கைகள் குவிந்தன. அவர் குவிக்கவில்லைதாமாகக் குவிந்தனவாம். மணிவாசகர் துதியில் இந்தக் கருத்து வெளிப்படுகிறது. மணிவாசகரை வணங்குவோம் என்று அவர் சொல்லவில்லை. மணிவாசகருடைய அடியவர்க்கு அடிமை செய்வோம் என்கின்றார். தொழுத கை தலைமீது ஏறத் துளும்பு கண்ணீருள் மூழ்கி,அழுது அடி அடைந்த அன்பன் அடியவர்க்கு அடிமை செய்வாம்என்பது பாடல்.

 

     மணிவாசகர் எப்படி உயர்ந்தவர்வேதங்களாலும் தேடிக் காண முடியாத இறைவனை இரவும் பகலும் பூசித்து இறைவனுடைய திருவருளிலேயே ஈடுபட்டு,அவன்பால் கொண்ட அன்பினாலேயே அவர் கைகள் தாமாகக் குவிகின்றன. "தொழுத கை தலை மீது ஏறஎன்று பாடுகிறார் பரஞ்சோதியார். மணிவாசகருடைய உள்ளம் நெகிழ்ந்து நெகிழ்ந்து கண்ணிர் ஆறாகப் பெருகிதொழுத கைகள் அவரை அறியாமல் தலைமேல் ஏறுகின்றன. "மெய்தான் அரும்பிவிதிர் விதிர்த்துஉள்ளம் பொய்தான் தவிர்ந்துஉன்னப் போற்றிசயசய போற்றி என்னும் கைதான் நெகிழ விடேன்" என்று மணிவாசகர் உள்ளம் குழைந்து நெக்கு உருகிப் பாடினார்.

 

     அன்பு உள்ளத்தில் இல்லாவிட்டால் கைகள் குவிவது இல்லை. குவிந்தாலும் அதற்குப் பயனும் இல்லை. அன்பினாலே நாம் கையைக் குவிக்கப் பழகிக் கொண்டோமானால் நம் நினைவு இல்லாமல் கைகள் தாமே குவியும் நிலைமை வந்துவிடும். இவற்றையெல்லாம் நினைந்து அருணகிரியார், "எனது உள்ளத்தில் உண்மையான அன்பு இல்லாமையால்எனது கைகள் குவியாமல் வீணாக உள்ளன" என்று பாடுகிறார். 

 

"கவியால் கடல் அடைத்தோன் மருகோனை,கணபணக் கட் 

செவியால் பணிஅணி கோமான் மகனை,திறல்அரக்கர் 

புவிஆர்ப்பு எழத்தொட்ட போர்வேல் முருகனைப் போற்றி  அன்பால் 

குவியாக் கரங்கள் வந்து எங்கே எனக்கு இங்ஙன்  கூடியவே?"

 

என்பது கந்தர் அலங்காரத்தில் வரும் பாடல்.

 

இதன் பொருள் ---

 

     குரங்குகளைக் கொண்டு கடலில் அணைகட்டி அடைத்த திருமாலின் திருமருகரும்படங்களை உடைய பாம்புகளை அணிகலனாக அணிந்து உள்ள சிவபெருமானுடைய திருப்புதல்வரும்வலிமை உடைய அரக்கர்கள் வாழ்கின்ற உலகங்கள் கதறுமாறுவேலை விடுத்து அருளியவரும் ஆகிய முருகப் பெருமானை அன்போடு வணங்கிகும்பிடாத கைகள் அடியேனுக்கு எவ்விதம் வந்து பொருந்தியனவோ?

 

(கவி - குரங்கு கணம் - கூட்டம். பணம் - படம். கட்செவி - பாம்பு. திறல் - வலிமை. ஆர்ப்பு - ஆரவாரம் . இங்ஙன் - இங்கே.)

 

     உலகியல் நிலையில்ஒன்றுக்கும் உதவாதவர்களை எல்லாம்உதவுவார்கள் என்று எண்ணிஅவர்களைப் பார்த்து நமது கைகளைக் குவிப்பதை விடுத்துஎன்றும் இல்லை என்று சொல்லாமல்நமது தகுதி நோக்கி அருள்புரிகின்ற வள்ளல் ஆகிய இறைவனைக் கை கூப்பிசிரம் தாழ்த்தி வணங்குதல் வேண்டும்.

 

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...