அச்சம் இன்றி வாழுகின்ற அருள்

 


அச்சம் இன்றி வாழுகின்ற அருள்.

-----

 

     திருக்குறளில் "அறிவுடைமை" என்னும் ஓர் அதிகாரம். அறிவு உடைமையாவதுகல்வி கேள்விகளால் ஆகிய அறிவோடுஉண்மை அறிவினையும் உடையவராய் இருத்தல் ஆகும். அறிவே ஒருவனுக்கு உண்மையான உடைமை ஆகும். "பொருள் உடைமை நில்லாது நீங்கி விடும்" என்றார் திருவள்ளுவ நாயனார். உண்மை அறிவு என்பது மெய்யறிவு என்றும் சொல்லப்படும். "மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்றார் நாயனார். நூலறிவு மட்டுமேதிருவள்ளுவ நாயனார் காட்டிய உண்மை அறிவு ஆகாது. அது அறிவுடைமையே அல்ல. அது,கறிக்கு உதவாத ஏட்டுச் சுரைக்காய். 

 

     நுண்ணறிவு பெறுவதற்கு நூலறிவு துணை செய்யும். நுண்ணறிவு பெற்றவர்க்கு நூலறிவு அவசியம் அற்றது. "நூலும் வேண்டுமோ நுண் உணர்ந்தார்க்கே" என்பது அப்பர் பெருமான் அருள்வாக்கு.

 

     கல்வி கேள்வி உடையவராக இருந்தாலும்கற்றகேட்ட பொருளை உள்ளவாறு உணர்ந்து அறிதல் வேண்டும். அதுவே "அறிவு உடைமை" ஆகும். "அறிவாவது நல்லதன் நலனும்,தீயதன் தீமையும் உள்ளவாறு உணர்தல்" என்று நச்சினார்க்கினியர் கூறியதன் உண்மையை அறிக.

 

"அறிவு அறிவு என்று அங்கு அரற்றும் உலகம்,

அறிவு அறியாமையை யாரும் அறியார்,

அறிவு அறியாமை கடந்துறிவு ஆனால்

அறிவு அறியாமை அழகிய வாறே".    ---  திருமந்திரம்.

 

இதன் பொருள் ---

 

     உலகினர், `எமக்கு அறிவு வேண்டும்அறிவு வேண்டும்என்று கூப்பாடு போடுகின்றனர். ஆயினும்அங்ஙனம் கூப்பாடு போட்டுப் பெற்ற அறிவு,அறியாமையாய் இருத்தலை ஒருவரும் அறியார்அங்ஙனம் ஒருவராலும் அறியப்படாது இருக்கின்ற அந்த அறியாமை நீங்கிஉண்மை அறிவு உண்டாகுமானால்முன்பு `அறிவுஎன்று நினைக்கப்பட்டது அறியாமையாய் இருந்த அழுக்கு வெளிப்பட,நகைப்பு உண்டாகும்.

     

     இந்த அதிகாரத்துள் மேல் வந்த ஏழு திருக்குறள் பாக்களின் வழியேஅறிவின் இலக்கணம் கூறிய நாயனார்,வரும் எட்டாம் திருக்குறளில்எது பேதைமை என்று கூறும் முகத்தால்அறிவுக்கு மேல் விளக்கம் கூறுகின்றார்.  "அஞ்சத் தக்கவற்றிற்கு அஞ்சாமல் இருப்பது பேதைமை. அஞ்சத் தக்கதை அஞ்சுதல் அறிவு உடையவரின் தொழில் ஆகும்" என்கின்றார் நாயனார்.

 

     அஞ்சவேண்டியதற்கு அஞ்சாதுஒருவன் தன்னுடைய தகுதியை அதிகமாக மதித்துதீய செயல்களைச் செய்வானாயின்,அது நிறைவேறாது போவதுடன்பழியும்பாவமும்கேடும் உண்டாகும். எனவே, "தீயவை தீய பயத்தலால்,தீயவை தீயினும் அஞ்சப்படும்" என்றது போலதீய செயல்களுக்கு ஒருவன் அஞ்சவேண்டும். அவ்வாறு செய்தால்இகழ்ச்சி இல்லாதுபுகழ்ச்சி உண்டாகும்.

 

"அஞ்சுவது அஞ்சாமை பேதைமைஅஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்"

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.  

 

     அஞ்சாமை என்பதுஅஞ்சப்பட வேண்டியதனை ஆலோசிக்காமல் செய்து அவதிப்படல். அஞ்சுதல் என்பதுஆலோசித்துச் செய்யாமல் விடுதல். அஞ்சவேண்டுவதற்கு அஞ்சாமை பேதைமை. அஞ்ச வேண்டாததற்கு அஞ்சுவதும் பேதைமை.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாதிராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய"சோமேசர் முதுமொழி வெண்பா"என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

"அன்றுஅமணர் தீவைப்ப,அஞ்சியதுஎன் என்னன்மின்,

துன்றியசீர்ச் சம்பந்தர்,சோமேசா! - நன்றேயாம்

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்".

 

இதன் பொருள்---

 

            சோமேசா! அஞ்சுவது அஞ்சாமை பேதைமை ---  அஞ்சப்படுவதனை அஞாசாமை பேதைமையாம்அஞ்சுவது அஞ்சுதல் அறிவார் தொழில் --- அவ் அஞ்சப்படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம்,

 

            சீர் துன்றிய சம்பந்தர் --- சிவடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்பவம் அதனை அற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானங்களாகிய சிறப்புக்கள் மிக்க திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்அன்று --- பாண்டி மாதேவியான மங்கையர்க்கரசியார் வேண்டுகோளுக்கு இசைந்து திருஆலவாயாகிய மதுரைக்குச் சென்ற அக்காலத்தில்சமணர் தீ வைப்ப --- கொல்லாமையை மறைந்து ஒழுகும் சீலத்தவராகிய சமண சமயத்தவர் தாம் தங்கியிருந்த திருமடத்திலே நெருப்பிட,  அஞ்சியது என் என்னன்மின் --- அச்சம் உற்றமைக்குக் காரணம் யாது எனக் கருதற்கநன்றே ஆம் --- அவ்வாறு நாயனார் அஞ்சியது நன்மையே ஆகும் ஆகலான் என்றவாறு.

 

            அஞ்சாமை --- எண்ணாது செய்து நிற்றல். அஞ்சுதல் --- எண்ணித் தவிர்தல். அது காரியம் அன்று என்று இகழப்படாது என்பார்அறிவார் தொழில் என்றார். பாவத்தைத் தருகின்ற கொடிய தொழில்களைச் செய்வதற்கு அஞ்சி ஒழுகவேண்டும்.

 

            அன்று அமணர் --- பகைத்த சமணர்கள் எனினும் ஆம்.  அன்றுதல் --- பகைத்தல்.

 

"என்பொருட்டு அவர்செய்த தீங்கு ஆயினும்,இறையோன்

அன்பருக்கு எய்துமோ என்று,பின்னையும் அச்சம்

முன்புறபின்பு முனிவுற,முத்தமிழ் விரகர்

மன்புரக்கும் மெய்ம்முறை வழுஎன மனம்கொண்டார்".

                                                                                    

என வரும் பெரியபுராணப் பாடலால்சமணர்கள்,தாம் அடியாரோடு தங்கி இருந்து மடத்திற்குத் தீ வைத்ததை அறிந்து திருஞானசம்பந்தர் முதலில் அச்சம் கொண்டார்,பின்பு முனிவு கொண்டார் என்பதை அறியலாம்.

 

            பாண்டி நாட்டை சமணக்காடு மூடவேகூன் பாண்டியனும் சமணர்கள் வழிப்பட்டான். அவன் மனைவியாகிய மங்கையர்க்கரசியாரும்மந்திரியாகிய குலச்சிறையாரும் மனம் மிக வருந்தி,"பாண்டியன் என்று நல்வழிப்படுவான்" என்று இருக்கும் காலத்தில்திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருமறைக்காடு என்னும் தலத்திற்கு எழுந்தருளி உள்ளதை அறிந்து,  அவ் இருவரும் விடுத்த ஓலை தாங்கிச் சென்ற ஏவலாளர்கள் அங்குச் சென்று மதுரைக்கு வரவேண்டும் எனக் குறையிரந்தமையான்பிள்ளையார் அவர்க்கு விடை தந்து,பின்னர் தாமும் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு மதுரை அடைந்தார். அச் செய்தி உணர்ந்த சமண முனிவர்கள் அவர் தங்கியிருந்த மடத்தில் இராப்போது தீயிடபிள்ளையார் அத்தீயை, "பையவே சென்று பாண்டியற்கு ஆகவே" என்று பணித்தார். அத் தழல் பாண்டியனைச் சுரநோயாகப் பற்றியது. அவன் அதன் கொடுமை தாங்காது துடித்தான். சமணர்கள் செய்த பரிகாரங்கள் எல்லாம் நோயை வளர்த்தன. பின் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் பிள்ளையாரை வருவிக்க அவர் சுரநோயைத் தீர்த்தருளினார். அதன் பின்னும் சமணர்கள் பிள்ளையாரை வாதுக்கு அழைத்து அனல்வாதம்புனல்வாதங்களில் தோற்றுத் தாம் முன்னர்க் கூறியவாறே கழு ஏறினார்கள்.

 

     அறிவில்லாதவர் தம்மிடத்துப் பொருந்தி உள்ள பழிக்குச் சிறிதும் அஞ்சமாட்டர் என்பதைதுறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் பின் வரும் பாடலால் காட்டினார்.

                                                

அறிவுடையார் அன்றி,அதுபெறார் தம்பால்

செறிபழியை அஞ்சார் சிறிதும் - பிறைநுதால்!

வண்ணஞ்செய் வாள்விழியே அன்றி மறைகுருட்டுக்

கண் அஞ்சுமோ இருளைக் கண்டு.   ---  நன்னெறி.

 

இதன் பொருள் ---

 

      பிறைமதியைப் போன்ற நெற்றியை உடையவளேகுருட்டுக் கண்கள் இருளைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை. அழகும் ஒளியும் பொருந்திய கண்களே இருளுக்கு அஞ்சவேண்டும். அதுபோலஅறிவில்லாத மூடர் பழியைக் கண்டு அஞ்சமாட்டார்கள். அறிவுடையவரே பழிக்கு அஞ்சுவர்.

 

      அது பெறார் --- அறிவைப் பெற்று இருக்காதவர்கள். செறி --- பொருந்திய. பிறைநுதால் --- பிறைபோலும் நெற்றியை உடையவளே. 

 

     இறையருளைப் பரிபூரணமாகப் பெற்ற திருஞானசம்பந்தரே சமணரால் இழைக்கப்பட்ட தீங்கினை எண்ணி அச்சம் கொண்டார். அவர் முற்றறிவு உடையவர். எனவேஅஞ்ச வேண்டியதற்கு அஞ்சினார். பிறகு அதைத் தீர்ப்பதற்கான வழி திருவருள் துணை என்று கண்டுசமணர்கள் இட்ட தீயானது, "பையவே சென்று" பாண்டிய மன்னனுக்கு ஆகட்டும் என்று பணித்தார். அறிவுதான் "அற்றம் காக்கும் கருவி" - அறிவுதான் ஒருவனை அழிவில் இருந்து காக்கின்ற கருவி என்று "அறிவுடைமை" அதிகாரத்தின் முதல் திருக்குறளிலேயே நாயனார் காட்டியதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இது விளங்கும்.

 

     மணிவாசகப் பெருமானும் "அச்சப்பத்து" என்னும் ஒரு திருப்பதிகத்தை அருளிச் செய்துஅதில் மனிதனாகப் பிறந்தவன் அச்சம் கொள்ள வேண்டியவைகளை வரிசைப்படுத்தி,அஞ்சத் தக்கவர்களிலேயே மிகவும் கொடுமையானவர் யார் என்பதையும் காட்டிஅவர்களைக் கண்டு தான் அஞ்சுவதாகப் பாடினார். மனிதனாகப் பிறந்தவன் சிறப்புற வாழவேண்டும் என்றால்இறைவனுடைய திருவடிகளை வாழ்த்தி வழிபடவேண்டும். அப்படிப்பட்டவர்களால்தான் பிறரை நன்னெறிப்படுத்திவாழ்விக்க முடியும். சிறப்பாக வாழ்கின்ற ஒருவரால்தான்இன்னொருவரைச் சிறப்புற வாழ வழிகாட்ட முடியும். அப்படி வாழாத அறிவிலிகளைக் கண்டு தாம் அஞ்சுவதாக "வெறிகமழ் சடையவன்அப்பன்விண்ணவர் நண்ணமாட்டாச் செறிதரு கழல்கள் ஏத்திசிறந்து இனிது இருக்கமாட்டா அறிவு இல்லாதவரைக் கண்டால்அம்ம! நாம் அஞ்சுமாறே" என்று பாடினார் மணிவாசகப் பெருமான்.

 

     எது ஒருவனைத் துன்பத்தில் ஆழ்த்துமோஅதனைக் கண்டு அச்சம் கொள்ளவேண்டும். அறிவுடைய யாரையும் அச்சம் கொள்ள வைப்பது பிறப்பு இறப்புத் துன்பம். இறப்புத் தான் துன்பம். பிறப்புமா துன்பம்?என்னும் ஐயம் எழலாம். 

 

"தோற்றும் பொழுதின் ஈற்றுத் துன்பத்து

யாயு் உறு துயரமும்,யான் உறு துயரும்

இறக்கும் பொழுதில் அறப்பெருந் துன்பமும்"

 

என்பார் பட்டினத்து அடிகள் திருவிடைமருதூர் மும்மணிக் கோவையில்."தக்க தசமதி தாயொடு தான் படும் துக்க சாகரத் துயர்"என்பார் மணிவாகப் பெருமான். பிறக்கும் போது உண்டாகின்ற துன்பம்தான் சாகரம் (கடல்) போன்றது.

 

     அஞ்ச வேண்டியதற்கு அஞ்சி வாழ்வதே அறிவுடைமை ஆகும். அத்தகு அறிவுடையாருக்கும் தவிர்த்துக் கொள்ள இயலாததாய் உண்டாகின்ற பிறப்பு இறப்பு ஆகிய அச்சத்தைத் தவிர்த்து அவர்களை ஆட்கொண்டு அருள் புரிவது இறைவன். மணிவாசகப் பெருமான் தனக்கு விளைந்த இன்னருளைப் பின்வருமாறு பாடுகின்றார்.

 

"கறங்கு ஓலை போல்வது ஓர்

    காயப் பிறப்போடு இறப்பு என்னும்

அறம்பாவம் என்ற இரண்டு

    அச்சம் தவிர்த்து என்னை ஆண்டுகொண்டான்,

மறந்தேயும் தன்கழல்நான்

    மறவா வண்ணம் நல்கிய அத்

திறம்பாடல் பாடிநாம்

    தெள்ளேணங் கொட்டாமோ!"       --- திருவாசகம்.

 

இதன் பொருள் ---

 

     ஓலைச் சுருள் போல்வதாகிய உடம்பின் பிறப்புஇறப்புகளால் நேரிடுகிற புண்ணிய பாவங்கள் என்கிற இரண்டு அச்சங்களையும் ஒழித்து என்னை ஆண்டு கொண்டவனாகிய சிவபெருமான்தன் திருவடியை நான் மறவாதபடி அருள் செய்த கருணையைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டுவோம்.

 

     அறம்பாவம் என்பவை இரண்டும் அச்சங்கள் என்கிறார். "இருள்சேர் இருவினை" என்னும் திருவள்ளுவ நாயனார் அருள் வாக்கிற்கு உரை வடித்த பரிமேலழகர், "நல்வினை தீவினை என்னும் இரண்டு வினை" என்றும், "நல்வினையும் பிறத்தற்கு ஏது" என்றும் கூறியதைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். 

 

     எனவேஅச்சம் கொள்ளவேண்டியவை அறம் பாவம் என்னும் இரண்டுமே ஆகும். மணிவாசகப் பெருமான்திருவாசகத்தில்திருவண்டப் பகுதியில், "அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க" என்று அருளி இருப்பதும் சிந்தனைக்கு உரியது. 

 

     "அச்சம் இன்றி வாழுகின்ற அருள்" என்றால்இறைவன் திருவருளைப் பரிபூரணமாக,அப்பர் பெருமான் பெற்றதைப் போல தாமும் பெற்றுவிட்டதாகவும்அவர், "நாம் ஆர்க்கும் குடி அல்லோம்" என்று வீறு கொண்டு பாடியதைப் போலநாமும் யாருக்கும் அஞ்சவேண்டியது இல்லை எனவும் பொருள் கருதுவது பேதைமை ஆகும். அச்சம் கொள்ள வேண்டியது பிறப்பும் இறப்புமே. அதனால்தான், "பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்" என்றார் மணிவாசகப் பெருமான். "அச்சம் இன்றி வாழ்வது"பிறப்பும் இறப்பும் இனி இல்லை என்ற அருள்நிலையில் வாழ்வதையே குறிக்கும். அந்த அருளைத் தான் இறைவனிடத்தல் வேண்டிப் பெறுதல் வேண்டும். எனவேஅச்சம் இன்றி வாழுகின்ற அருளைத் தருமாறு இறைவனை வேண்டிக் கொள்வோம்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...