ஞானம் பெறுவதற்குத் தடையாக உள்ளது காமம்.

 


ஞானம் பெறுவதற்குத் தடையாக உள்ளது காமம்

-----

 

     இறைவனுடைய திருவருளை அடைவதற்குரிய முயற்சிகளைச் செய்யவொட்டாமல் தடுக்கும் உணர்ச்சிகள் பல உண்டு. அவை எல்லாவற்றிலும் மிக வலிமை உடையது காமம். அது அறிவை மறைத்து விடுகிறது. 'காமத்திற்குக் கண் இல்லைஎன்ற பழமொழி இதையே குறிக்கும். காமத்தினால் பெண்களோடு கலந்து இன்பத்தை அனுபவிக்கிற மனிதன்அதனால் அறிவு மயக்கத்தை அடைகிறான். மயக்கம் அடைகிற காரணத்தினால் காமத்திற்குக் கள்ளை உவமையாகச் சொல்வது உண்டு. 

 

     கள்ளைக் குடித்தால் அது மூளையைத் தாக்குகிறது. மூளைக்கும் கண்களுக்கும் தொடர்பாக உள்ள நரம்பைத் தாக்குகிறது. அதனால் கள் குடித்தவனுடைய கண்கள் திறந்திருந்தாலும் தூணைக் கண்டால் மனிதன் என்றும்,மனிதனைக் கண்டால் மாடு என்றும் நினைத்துக் கொள்கிறான். தன் மனத்தின் அடித்தளத்தில் மறைந்திருக்கிற விஷயங்களை எல்லாம் வெளிப்படுத்துகிறான். மானம்மதிப்பு,கெளரவம் என்று இதுவரையிலும் எண்ணியிருந்தவற்றைத் துறந்து மனம் போனபடி திரிகிறான். 

 

     கள்ளை உண்பவன்,அதனால் உண்டாகும் இன்பத்தை நாடுகிறான். உலகமெல்லாம் பழி கூறுகிறதே  என்று அவனுக்குத் தெரியாமல் இல்லை. கள் குடித்த மயக்கம் போய்த் தெளிவு பிறந்தவுடன் இவைகள் எல்லாம் தெரிந்து விடுகின்றன. ஒன்றால் ஒருவன் துன்பத்தை அடைந்தால்மீண்டும் அதை நாடமாட்டான். ஒரு முறை கள்ளைக் குடித்துவிட்டு ஆடியவன்அதனால் தனக்கு உண்டான பழியையும்அவமானத்தையும் நன்றாக உணர்ந்த பின்பும்திருட்டுத் தனமாக மீண்டும் மீண்டும் குடிக்கிறான் என்றால்,அதற்கு ஏதேனும் தக்க காரணம் இருக்க வேண்டும். மானம் மரியாதை பாவம் பழி ஆகியவற்றை எல்லாம் மிஞ்சுகிற இன்பம் கள்ளைக் குடிப்பதில் இருக்கிறது. அந்த இன்பம் இல்லாவிட்டால் கள்ளை அவன் நாடமாட்டான். அதனிடம் அவன் பெறும்படியான இன்பம் ஏதோ ஒன்று இருக்கிறது. அந்த இன்பம் எது

 

     தன்னை மறப்பது இன்பம். 'நன்றாகத் தூங்கினேன்என்று ஒருவன் சொல்கிறான். தூங்கும்போது ஆசாபாசங்களை மறந்துகவலையை மறந்துகடமையை மறந்து கட்டை போலக் கிடப்பதால் இன்பத்தை அடைகிறான். கள்ளைக் குடிப்பவனும் கட்டுக்களை உடைத்து எறிந்து விட்டுக் கவலைகளை எல்லாம் மறந்துதன்னையும் மறந்து விருப்பப்படி பேசுவதனால் இன்பத்தை அடைகிறான். 

 

     கவலைகளை மறந்துஉலகத்திலுள்ள பற்றுக்களை விட்டு விட்டு நிற்பதுதான் இன்பம். ஞானிகள் அப்படி இருக்கிறார்கள். அவர்கள் கிணறு முழுவதையும் தாண்டியவர்கள். கள்ளைக் குடித்தவன் பாதிக் கிணற்றைத் தாண்டியவன். அதனால்தான்கள்ளைக் குடித்திருக்கும் நேரத்தில் தன்னை மறந்து நின்றாலும்திரும்பத் தெளிவு ஏற்பட்டவுடன் அந்த இன்பம் போய்விடுகிறது. பிறர் நம்மைக் கண்டு பழிக்கிறார்களே என்று தெளிவுள்ள சமயத்தில் தனது செயலை நினைத்துத் துன்பப்படுகிறான். முதலில் உண்டான போலி இன்பம் நிலைகொள்வது இல்லை. மெய்ஞ்ஞானிகள் தம்மை எப்பொழுதும் மறந்து இருக்கிறார்கள். கள்ளைக் குடிப்பவன் சில நேரத்திற்கு ஒருவாறு தன்னை மறந்து இருக்கிறான். அவன் பெறுவது உண்மையான இன்பம் அல்ல. 

 

     காமம் மாத்திரம் அல்ல. உள்ளத்தில் எந்த உணர்ச்சி மிகுந்து இருந்தாலும் உலகத்தை  மறக்கும் நிலை உண்டாகும். இறை அடியார்களுக்கு அத்தகைய நிலை வருவது உண்டு. மணிவாசகப் பெருமான்பாண்டியமன்னன் பணத்தைப் பெற்றுக் கொண்டு குதிரை வாங்கப் போனார். போனவர் அப்பணத்தைக் கொண்டு சிவபெருமானுக்குத் திருக்கோயில் எழுப்பினார். இது கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிற மாதிரிதான். அரசன் அரச காரியத்துக்காகப் பணம் கொடுக்கஅவர் அந்தக் காரியத்தைச் செய்யாமல் வேறு வகையில் செலவிட்டார். அது தவறுதான். ஆனாலும்நாம் மணிவாசகரைக் கொண்டாடுகிறோம். அதற்குத் தக்க காரணம் இருக்க வேண்டும். அவர் கொண்டு போன பணத்திற்குக் குதிரை வாங்கியிருந்தால் குதிரைகளின் உதவி கொண்டு போரை நடத்தலாம். அதனால் பல்லாயிரக் கணக்கான பேர்கள் இறந்து போவார்கள். அவரோ எல்லா மக்களும் இறைவன் அருளைப் பெறுவதற்குத் தக்கபடி செலவிட்டார். அதனால் அவரைக் கொண்டாடுகிறோம். அவர் செய்த தொழிலின் பெருமைஅதன் பயனால் தெரிய வருகிறது. அரசன் கொடுத்த பணத்தை வேறு யாராக இருந்தாலும் கோயில் கட்டத் துணிவு வராது. மணிவாசகரின் உள்ளத்தில் பத்தி உணர்ச்சி மீதூர்ந்து இருந்தது. அதனால் உலகத்தார் என்ன சொல்வார்களோ என்று அஞ்சாமல்பற்றுக்களையும் கடமைகளையும் மறந்த நிலையில் அந்தக் காரியத்தைச் செய்தார். 

 

     அவர் பத்திப் பித்துப் பிடித்தவர். பத்திப் பித்துக் கொண்ட அடியார்கள் உலகம் தம்மைப் பழிக்கிறதே என்று நினைக்கமாட்டார்கள்.

 

"நாண் அது ஒழந்து,நாடவர் பழித்துரை

பூண் அது ஆக,கோணுதல் இன்றி,

சதுர் இழந்து அறிமால் கொண்டு சாரும்

கதியது பரம அதிசய மாகக்

கற்றா மனம் எனக் கதறியும் பதறியும்

மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது"

 

என்றும்,

 

 "நாடவர் நம்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப 

நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப"

 

என்றும் மணிவாசகர் பாடுகிறார். 

 

     நாட்டில் உள்ளோர் கூறும் பழிச் சொற்களைச் சிறிதும் அடியார்களை சிறுமையாகக் கருதமாட்டார்கள். பெருமையாகவே கருதுவார்கள். "நாட்டில் உள்ளார் நம் இயல்பினை நோக்கி நம்மை இகழ்ந்து சிரிக்கநாமும் அவர்கள் அறியாமையை எண்ணி நகை செய்ய" என்கிறார். அவரைப் பார்த்து கைதட்டி நகைத்தவர்களே,பின்பு அவரைக் கையெடுத்துக் கும்பிட்டார்கள். 

 

"அவமதிப்பும்ஆன்ற மதிப்பும்இரண்டும்,

மிகை மக்களால் மதிக்கற்பாலநயம் உணரா,

கை அறியாமாக்கள் இழிப்பும் எடுத்து ஏத்தும்,

வையார் வடித்த நூலார்"

 

என்கின்றது "நாலடியார்". தூற்றினாலும் போற்றினாலும் இரண்டையும் ஒன்றாகவே ஏற்றுக் கொண்டு பாராட்டும் பண்பு சான்றோர்களிடத்தில் உண்டு. அவர்களுக்கு இழிந்த கீழ்மக்களின் பழிப்பும் பாராட்டும் ஒரு பொருட்டாக மாட்டா.

 

     இப்படியேஉள்ளத்தில் கோபமோ துக்கமோ மிகுந்துகுறிப்பிட்ட ஓர் எல்லையைக் கடக்கும்போது மற்றவைகள் எல்லாம் கீழே தாழும். இரண்டு பேர் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஒருவனை மற்றவன் கத்தியால் குத்தப் போகிறான். அவ்வழியில் செல்லும் யாரோ ஒருவன் அவர்களுக்குள் சமாதானம் செய்து வைக்க இடையே புகுந்தால்,அவனைக் குத்தி விடுகிறான். அவனா எதிரிஇவன் கோபம் தடுத்தவனைப் போய்ச் சாரக் காரணம்கோபம் என்ற உணர்ச்சி மீதுர்ந்து நிற்கும்போது கடமைதர்மம்ஞாபகம்ஞானம் ஆகிய எல்லாமே அழிந்து விடுகின்றன. அதுபோலவே காமம் என்னும் உணர்ச்சி மிகும் போது எல்லாம் கீழே போய்விடுகின்றன. 

 

     அருணகிரிநாதர், "நான் காமத்தினால் கலவி என்னும் கள்ளை மொண்டு மொண்டு உண்ணுகிறேன்என்று சொன்னார். ஆனால் அப்படி உண்டாலும் அவர் முற்றும் மயங்கவில்லை. அவருடைய மயக்கத்தில் ஒரு விஷயத்தில் மாத்திரம் நினைவு போகவில்லையாம். 

 

     போதை என்னும் அறிவு மயக்கத்தைத் தருகின்ற பொருள்களை உபயோகிக்கிறவர்களில் சிலர் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள். 'கள் குடித்தாலும் அதை ஒரு நிதானத்தில் வைத்திருக்கிறேன்என்று சொல்வார்கள். சிலரைப் பற்றி, 'அவன் குடித்திருந்தாலும் நிதானம் இழப்பதில்லை. மரியாதை தவறிப் பேசுவதில்லை' என்று சொல்வதையும் நாம் கேட்கிறோம். அதைப்போல அருணகிரிநாதர் இந்தப் பாட்டில் பேசுகிறார். முருகப் பெருமானை நோக்கி, "நான் மாதரார் காமக் கலவிக் கள்ளை மொண்டு உண்டு மயங்கினாலும்,வேலாயுதத்தை மறக்க மாட்டேன்என்று சொல்கிறார்.

 

     பெண்களைப் பற்றிச் சொல்லும்போது அவர்களுடைய சொல்லின் தன்மையை முதலில் பேசுகிறார். அவர்கள் சொல் கற்கண்டு போல இனிக்கின்றது. அந்தச் சொல்லைக் கேட்ட மாத்திரத்திலேயே காம உணர்ச்சி உண்டாகிறது. அதனாலே மயங்கி அவர்களை அணைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் மிக மென்மையான உருவத்தை உடையவர்கள். அவர்களிடத்தில் விளைகின்ற கலவி என்கின்ற கள்ளை மொண்டு உண்டு மயங்கி நிற்கிறார்கள் காமிகள். கள்ளைத் தன்னுடைய விருப்பப்படியே எந்த வரையறையும் இல்லாமல் மொண்டு உண்டால் அயர்வுதான் வரும். வரையறையாக உண்டால் அயர்வு ஒரளவு நிற்கும். இங்கே தம்முடைய மனப்படியே கலவிக் கள்ளை மொண்டு உண்டு அயர்ந்தாலும்எல்லாவற்றையும் மறந்தாலும்ஒன்றை மாத்திரம் மறக்கவில்லை என்று அருணகிரிநாதர் சொல்கிறார். இந்த நிலை காமிகளுக்குசாதாரண மக்களுக்குவருவது இல்லை. இதற்குப் பல காலமாகப் பழக்கம் செய்திருக்க வேண்டும். 

 

     மனிதன் எதில் பற்றுக் கொண்டு வாழ்ந்திருந்தாலும் அந்தப் பற்றுக்கு மூலகாரணமாக இருப்பது அவனுடைய பழக்க வழக்கங்கள். ஏதேனும் ஒரு பொருளிடத்தில் அதிகப் பற்று இருக்குமானால் அதைப் பற்றிப் பேசியும்அதை ப்பற்றி நினைந்தும்அது சம்பந்தமான செயல்களைச் செய்தும் வருவான். மறப்பதும் நினைப்பதும் மனத்தினுடைய செயல்கள். இறைவனை வழிபடுவதும் துதிப்பதும் மற்றக் கரணங்களின் செயல்கள். எப்போதும் அவனை நினைத்துக் கொண்டிருப்பதற்குப் பழக்கம் வேண்டும். பழக்கத்தால் அது கை கூடும். 

 

     அருணகிரிநாதர், "சிற்றின்ப நுகர்ச்சியிலும் வேலை மறக்கமாட்டேன்"என்று சொல்லிஒர் அரிய உண்மையை அதன் வாயிலாகச் சொல்லித் தருகிறார். எம்பெருமானுடைய திருவடிகளைஅவனுடைய வேலாயுதத்தைநெஞ்சிலே நினைக்க வேண்டும். உலகத்தில் வாழும்போது பலப்பல இன்னல்கள் அதைக் குலைக்க வரும். ஆனாலும் திருப்பித் திருப்பி அவனுடைய திருவுருவ நினைவு நமக்கு வரவேண்டும். அப்படி வந்து பழகினால் எந்தச் சமயத்திலும் அவனுடைய நினைப்பு நமக்கு உண்டாகும். எந்த விதமான செயல்களைச் செய்தாலும்மனம் இயங்கும் வரைக்கும் அந்த மனத்தில் இறைவனுடைய வேலை நினைக்கலாம். 

 

     "தொழுது எழுவார் வினை வளம் நீறு எழஎன்று திருக்கோவையாரில் மணிவாசகப் பெருமான் ஓர் அற்புதமான ஒரு நிகழ்வைச் சொல்லி உள்ளார். அடியார்கள் படுக்கையை விட்டு எழும்போதேஇறைவனைத் தொழுகிறார்கள். திருவள்ளுவ நாயனாரும் "கொழுநன் தொழுது எழுவாள் பெய் எனப் பெய்யும் மழை" என்கிறார். 

 

     'தொழுது கொண்டே எழுந்திருப்பதாவதுஎழுந்திருந்த பின்தானே தொழ முடியும்?' என்று தோன்றலாம். தூங்கும்போது நம்மை மறந்து தூங்குகிறோம். விழிப்பு ஏற்படும்போதே உணர்ச்சி ஏற்படுகிறது. அந்த உணர்ச்சி தோன்றியவுடனே தொழுது கொண்டே எழுந்திருக்கிறார்கள் அன்பர்கள். எழுந்திருப்பதற்கு முன் தோன்றுகிற முதல் உணர்ச்சியிலேயே இறைவனின் நினைவு அவர்களுக்குத் தெளிவாக உண்டாகி விடுகிறதுஇறைவனைத் தொழுது கொண்டே எழுந்திருக்கிறார்கள். "தொழுதெழுவாள்"என்பதற்கு உரை வடித்த பரிமேலழகரும்தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவதுதுயிலெழும் காலத்துஆகலின் "தொழுதெழுவாள்" என்றார் என்கிறார். 

 

     மனம் எப்பொழுதெல்லாம் வேலை செய்கிறதோ அப்பொழுதெல்லாம் இறைவனை நினைக்க வேண்டும். 'இன்னும் நான் பல் தேய்க்கவில்லையே! நீராடித் திருநீறு அணியவில்லையே! இப்போது எப்படிக் கடவுளை நினைப்பது?' என்று சிலர் சொல்லலாம். பல் தேய்த்து நீராடா விட்டாலும் மூச்சுவிடுவது இல்லையாமூச்சுவிடுவதைப் போலவே இறைவனை மனத்தால் நினைக்க வேண்டும். 

 

     நாம் உணர்ச்சியுடன் இருக்கும்போதெல்லாம் மனம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த மனத்திற்கு இறைவனது  திருக்கரத்திலுள்ள வேலை நினைப்பது மிக எளிது. அந்த நினைவு எந்தச் சமயத்தில் இருக்க வேண்டும்எந்தச் சமயத்தில் இருக்கக் கூடாது என்ற வரையறை இல்லை. "நாம் உடம்பெல்லாம் அழுக்காக நீராடாமல் இருக்கிறோம். அப்போது இறைவனை நினைக்கலாமா?" என்று சிலர் கேட்பது உண்டு. உடம்பில் தூய ஆடை அணிவதற்கு அழுக்கான உடம்பு கூடாது. உண்ணுவதற்கு அழுக்கான வாய் கூடாது. ஆனால் இறைவனை நினைப்பதற்கு உடம்பு எப்படி இருந்தாலும்வாய் எப்படி இருந்தாலும்,மனம் தெளிவாக இருந்தால் போதும். இது சாத்தியமான செயலே. 

 

     சுந்தரமூர்த்தி நாயனார் இத்தகைய பழக்கத்தில் தம்முடைய மனத்தை நிலைநிறுத்திக் கொண்டவர். "நற்றவா! உன்னை நான் மறக்கினும்சொல்லும் நா நமச்சிவாயவே"என்று அவர் பாடுகிறார். அவர் திருவொற்றியூருக்குச் சென்றார். அங்கே சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டார். அவருக்கு, 'நான் இந்த ஊரை விட்டு வெளியில் செல்ல மாட்டேன்என்ற உறுதியைச் செய்து கொடுத்திருந்தார். ஆனால்,திருவாரூரின் நினைவு வந்தபோதுதிருவொற்றியூரை விட்டுப் புறப்பட்டுவிட்டார். சத்தியத்தை மீறிய குற்றத்திற்காக இறைவன் அவருடைய கண் ஒளியை மறைத்தான். அப்போது சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனை நினைத்துக் கதறுகிறார். "வழுக்கி வீழினும் திருப்பெயர் அல்லால்,மற்று நான் அறியேன் மறுமாற்றம்" என்கின்றார். தவறிக் கீழே வழிந்தாலும்உனது திருநாமத்தை ஒழிய வேறு எதையும் நான் அறிந்தது இல்லை என்கின்றார். நாமாக இருந்தால்இறைவழிபாடு செய்துகொண்டு இருக்கும்போதேஇடறி விழ நேர்ந்தால், "ஐயோ! அம்மா!" என்றுதான் அலறுவோம். 

 

     சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு இருந்த பழக்கம் நமக்கும் இருந்தால் துன்பப்படும்போதும்இன்பம் அடையும்போதும் முருகா முருகா என்று சொல்ல வரும். இந்தப் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக முதிர்ந்துவிட்டால் மனம் இறைவனுடைய தியானத்தில் ஒன்றிவிடும். பல காரியங்களைச் செய்து துன்பப்படும் போதும்இந்திரியங்கள் வாயிலாக இன்பத்தை அடையும் போதும்காம நுகர்ச்சியில் ஈடுபடும்போதும் இறைவனைப் பற்றிய நினைப்பு மாறாது. 

 

     அருணகிரிநாதப் பெருமான் முருகப் பெருமான் திருக்கையில் உள்ள வேலாயுதத்தை மிக எளிதில் நினைந்து தியானிக்கலாம் என்கின்றார். அதனால் "வேல் மறவேன்என்கிறார். வேல் என்பது ஞானசத்தியைக் குறிக்கும். ஞானத்தைத் தந்துஅறிவு மயக்கத்தைத் தீர்த்து வைப்பது வேல். அஞ்ஞானத்தை வெல்லும் தன்மை உடையதால்வேல் என்று பெயர் வந்தது.

 

     எந்தக் காரியமும் பழக்கம் இல்லாமல் அனுபவத்தை உண்டாக்காது. "சித்திரமும் கைப்பழக்கம்செந்தமிழும் நாப் பழக்கம்வைத்தது ஒரு கல்வி மனப்பழக்கம்நித்தம் நடையும் நடைப் பழக்கம்" என்றார் ஔவைப் பிராட்டி. பழக்கத்தால் அனுபவம் உண்டாக வேண்டும். வெறுமனே பலகாலம் பழகிக் கொண்டு இருப்பதும் கூடாது. இறைவனைப் பற்றிப் பலகாலம் பேசிபலகாலம் கேட்டுபலகாலம் படித்திருந்தாலும் அவற்றினால் சிறிதேனும் அனுபவம் இல்லாவிட்டால் பயன் இல்லை. நாம் தவம் செய்ய முடியாது. இந்திரிய நிக்கிரகம் செய்ய இயலாது. விரதங்களைக் கடைபிடிப்பதற்கான நிலையும் நம்மிடம் இல்லை. ஆனால்,மனம் உள்ள வரை இறைவனைத் தியானிக்க வழி உண்டு. முருகன் திருக்கரத்தில் உள்ள வேலை நாள்தோறும் அரை நிமிட நேரமாவது பார்த்து,அதை மனத்தில் நிறுத்தித் தியானம் செய்யலாம். அதுவே தவமுறை தியானம். அந்த தியானம் வாய்க்கவில்லையானால்நாம் சடம்கசடுமூடம்மட்டி தான்.

 

     விளக்கை ஏற்றி வைத்துவேலைப் பார்க்க வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு அந்த வேலை மனக் காண்ணால் பார்த்துப் பழகவேண்டும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்து வேலை மனத்தில் நினைக்கப் பழகினால் பின்பு அந்த வேலே சோதிப் பிழம்பாக உள்ளத்தில் நிற்கும். தியானம் பண்ணிப் பண்ணிப் பழகிவிட்டால் மின்னல் கீற்றுப் போல,அந்த வேல் உள்ளத்தில் ஒளிவிடும். அந்தப் பழக்கம் முறுகினால் வேலே அருட்பெரும்சோதியாக நமக்குத் தோன்றும். வேல் மறைந்து,ஒளிப் பிழம்பு தோன்றும்போது தன்னை மறக்கிற நிலை வந்துவிடும். எல்லாம் மறந்து போகும்.இன்பம் உண்டாகும். 

 

     இத்தகைய சிறந்த இன்பத்தை அடைவதற்கு மிக எளிதான வகையை அருணகிரிநாதப் பெருமான் இந்தப் பாடலின் மூலம் நமக்கு அறிவுறுத்துகின்றார்.  

 

"கண்டு உண்ட சொல்லியர் மெல்லியர் காமக்  கலவிக் கள்ளை

மொண்டு உண்டு அயர்கினும் வேல்மறவேன்,முதுகூளித் திரள்

டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டு டுண்டு

டிண்டிண்டு எனக் கொட்டி ஆட வெம்சூர்க்  கொன்ற ராவுத்தனே". --- கந்தர் அலங்காரம்.

 

இதன் பொருள் ---

 

     முதிர்ந்த பேய்க்கூடங்கள்டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டு டுண்டுடிண்டிண்டு என்னும் ஒலிக்குறிப்புடன் பறையை அடித்துக் கொண்டு கூத்தாகொடிய சூரபதுமனைக் கொன்று அருளிய வீரம் மிக்கவரே! கற்கண்டை ஒத்த சொற்களை உடையவரும்மென்மை உடையவரும் ஆகிய பெண்களது காமப் புணர்ச்சி என்னும் மதுவை நிரம்பவும் மொண்டு மொண்டு குடித்துஅதனால் அறிவு மயங்கி இருந்தாலும்தேவரீருடைய வேற்படையை அடியேன் மறக்கமாட்டேன்.

 

     காமத்திற்குக் கள் உவமை சொல்லப்பட்டது. கள்ளானது அறிவை மயக்கிதீய செயல்களை அஞ்சாது செய்ய வைத்து நரகத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும். அதுபோலவேகாம உணர்வும் அறிவை மயக்கிபல கொடுமைகளைச் செய்ய வைத்துபழியையும் பாவத்தையும் உண்டாக்கிநரகத்தில் கொண்டு போய்த் தள்ளும். கள்ளை உண்டவரைப் போலவேகாமத்தில் முழுகியவர்களும் பழி பாவங்களுக்கு அச்சம் கொள்ளமாட்டார். கள்ளுக்கும் காமத்திற்கும் உள்ள வேறுபாடு குறித்துதிருவள்ளுவ நாயனார் கூறுமாறு காண்க.

 

"உள்ளக் களித்தலும்காண மகிழ்தலும்

கள்ளுக்கு இல்காமத்திற்கு உண்டு".   --- திருக்குறள்.

 

     கள்ளானது குடித்தால்தான் களிப்பைத் தரும். கள்ளைக் கண்ட அளவில் மகிழ்ச்சி உண்டாகாது. ஆனால்காமமானது நினைத்தாலே களிப்பைத் தரும். கண்டாலே மகிழ்வைத் தரும். 

 

     காம உணர்வுக்கு ஆட்பட்ட ஒருவன் கொலை செய்யத் தயங்கமாட்டான். பொய் சொல்ல நாணம் கொள்ளமாட்டான். மானம் போவதைப் பற்றிக் கவலை கொள்ளமாட்டான். திருட்டுத் தொழிலைச் செய்யவும் முனைவான். பழிபாவம் என்பதை எல்லாம் கருதமாட்டான். அப்படிப்பட்டவன் வேறு என்னதான் செய்யமாட்டான்என்கிறார் குமரகுருபர அடிகள்.

 

"கொலை அஞ்சார்,பொய்ந் நாணார்,மானமும் ஓம்பார்,

களவு ஒன்றோ?ஏனையவும் செய்வார்,- பழியோடு

பாவம் இஃது என்னார்,பிறிதுமற்று என்செய்யார்

காமம் கதுவப்பட் டார்".          --- நீதிநெறி விளக்கம்.

 

     ஆராய்ந்து அறிந்தால்தீமைகள் என்று எவை எவை உள்ளனவோஅவை அனைத்தையும் தருவதும்உயிருக்கு உள்ள சிறப்பையும் கெடுப்பதும்குற்றமற்ற செல்வத்தையும் கெடுப்பதும்நல்ல உணர்வுகைள அழிப்பதும்உயிர்களைப் பாதுகாவலாக உள்ள நல்ல நெறியில் செல்லவிடாமல் தடுத்துநரகத் துன்பத்தில் செலுத்தவதும் ஆகிய காமத்தை விட வேறு ஒரு பகை இந்த உலகத்தில் உள்ளதாஇல்லை என்கின்றது கந்தபுராணம்.

 

"தீமை உள்ளன யாவையும் தந்திடும்சிறப்பும்

தோம்இல் செல்வமும் கெடுக்கும்நல் உணர்வினைத் தொலைக்கும்,

ஏம நன்னெறி தடுத்து இருள் உய்த்திடும்இதனால்

காமம் அன்றியே ஒருபகை உண்டுகொல் கருதில்.    --- கந்தபுராணம்.

 

     ஓர் ஊரே தீப்பற்றிக் கொண்டது என்றால்அதில் இருந்து தப்பித் கொள்ள அருகில் உள்ள நீர்நிலைக்குச் சென்று அதனுள் அழுந்தித் தன்னை ஒருவன் காத்துக் கொள்ளலாம். ஆனால்நீருக்குள் அமிழ்ந்தாலும்காமத் தீயானது சுடும். மலையின் மேல் ஏறி,அங்குள்ள ஒரு குகையில் போய் ஒளிந்து கொண்டாலும்காமத் தீயானது அடங்காமல் சுடும் என்கின்றது நாலடியார்.

 

"ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு

நீருள் குளித்தும் உ(ய்)யல் ஆகும்; - நீருள்

குளிப்பினும் காமம் சுடுமேகுன்று ஏறி

ஒளிப்பினும் காமம் சுடும்".           --- நாலடியார்.

 

     காமமே கொலைகளுக்கு எல்லாம் காரணமாய் உள்ளதுகண்ணோட்டம் இல்லாத காமமே களவு அனைத்திற்கும் காரணமாகும்கூற்றவனும் அஞ்சுதற்குரிய காமமே கள்ளினை நுகர்வதற்கும் காரணமாகும்ஆதலினாலேகாமம் ஒன்றே அவை அனைத்தாலும் நேரும் நரக பூமியைக்காணியாட்சியாகக் கொடுக்க வல்லது என்கின்றது திருவிளையாடல் புராணம்.

 

"காமமே கொலை கட்கு எல்லாம் 

     காரணம்;கண் ஓடாத

காமமே களவுக்கு எல்லாம் 

     காரணம்கூற்றம் அஞ்சும்

காமமே கள் உண்டற்கும் 

     காரணம்ஆதலாலே

காமமே நரக பூமி 

     காணியாக் கொடுப்பது என்றான்".   --- திருவிளையாடல் புராணம்.

 

       இத்தகு கொடிய காமமானது இறையடியார்களை ஒன்றும் செய்யாது. எனவேஇறையருளை நாடி உய்தி பெறவேண்டும். முருகப் பெருமானுடைய திருக்கரத்தில் உள்ள ஞானசத்தி ஆகிய ஒளி மயமான வேலைத்தியானம் செய்ய வேண்டும். அதை எந்தச் சமயத்திலும் மறவாமல் இருக்கவேண்டும். ஞானத்திற்கு மாறுபாடான காம நுகர்ச்சியில் ஈடுபடும்போதும் அதை மறவாமல் நினைத்தால் நல்ல இன்பத்தைப் பெறலாம்.பேரின்பத்தை அடையலாம் என்பதே அருணகிரிநாதர் அருளிச் செய்த உபதேசம் ஆகும்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...