Showing posts with label திருக்குறள் - பொருட்பால். Show all posts
Showing posts with label திருக்குறள் - பொருட்பால். Show all posts

059. ஒற்றாடல் - 08. ஒற்று ஒற்றித் தந்த

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 59 -- ஒற்றாடல்


இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "முன்னர் ஓர் ஒற்றன் ஒற்றாடிச் சொன்ன கருத்தையும், பின்னர் மற்றும் ஓர் ஒற்றனைக் கொண்டு, அவன் சொன்ன கருத்தையும் ஒப்பு நோக்குதல் வேண்டும்" என்கின்றார் நாயனார்.


இதற்குத் திருக்குறள்...

ஒற்று ஒற்றித் தந்த பொருளையும், மற்றும் ஓர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் --- ஒரொற்றன் ஒற்றிவந்து அறிவித்த காரியந்தன்னையும்; 

மற்றும் ஓர் ஒற்றனால் ஒற்றிக் கொளல் =-- பிறனோர் ஒற்றனாலும் ஒற்றுவித்து ஒப்புமை கண்டுகொள்க.

(ஒற்றப்பட்டாரோடு ஒத்து நின்று மாறுபடக் கூறலும் கூடுமாகலின், ஒருவன் மாற்றம் தேறப்படாது என்பதாம்.)



பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


“கற்று அறி அந்தணாளர்

விருத்திகள் கடவுள் தானத்து

அற்றம்இல் பூசைச் செல்வம்

அபப்புறம் நடக்கை, ஏனைச்

செற்றமில் குடிகள் மற்றும்

அமைச்சரால் தெளிந்தும், வெவ்வேறு

ஒற்றுவிட்டு உணர்ந்தும் வேறு

குறையுண்டேல் ஒறுத்துத் தீர்த்தும்.”     ---  தி.வி. புராணம்.


இதன் பொருள் ---

கற்று அறி அந்தணாளர் விருத்திகள் - (மறை முதலிய நூல்களைக்) கற்றுணர்ந்த அந்தணர்கள் விருத்திகளையும், கடவுள் தானத்து அற்றம் இல் பூசைச் செல்வம் -தேவாலயங்களில் நடக்கும் குற்றமில்லாத பூசனைச் சிறப்புக்களையும், அறப்புறம் நடக்கை - அறச் சாலைகளின் நிகழ்ச்சிகளையும், ஏனைச் செற்றம் இல் குடிகள் - அவை ஒழிந்த வெறுப்பு இல்லாத குடிகளின் (வாழ்க்கைகளையும்), மற்றும் - பிறவற்றையும், அமைச்சரால் தெளிந்தும்  -மந்திரிகளால் உணர்ந்தும், வெவ்வேறு ஒற்றுவிட்டு உணர்ந்தும் - வேறு வேறு ஒற்றர்களை அனுப்பி அறிந்தும், வேறு குறை உண்டேல் ஒறுத்துத் தீர்த்து - அவைகளுள் வேறு குறைகள் இருக்குமானால் தண்டித்து அக்குறைகளைப் போக்கியும்.... 


 

“ஒற்றரைத் தூண்டி அன்னோர் 

உறுவலி உணர்வ ரேனும்

மற்றுமோர் ஒற்றின் அல்லால் 

அன்னது மனத்துள் கொள்ளார்,

சுற்றுறும் அனிகம் அன்றி 

ஒருபுடை துவன்றிச் சூழும்

பெற்றியும் உளதோ என்னா 

வேயொரீஇத் தேர்வர் பின்னும்.” --- கந்தபுராணம்.


அறிவுமிக்க அரசர்கள் அல்லது தலைவர்கள், தங்கள் பகைவர்களின் வலிமையை அறிந்துகொள்வதற்காக முதலில் சில ஒற்றர்களை அனுப்பி உளவு பார்ப்பார்கள். அப்படி அனுப்பப்பட்ட ஒற்றர்கள் திரும்பி வந்து பகைவர்களின் அசாத்தியமான  வலிமையைப் பற்றித் தெரிவித்தால் கூட, அந்த ஒரு தகவலை மட்டுமே வைத்துக்கொண்டு உடனடியாக முடிவுக்கு வரமாட்டார்கள். அதன் உண்மைத் தன்மையை உறுதி செய்ய, வேறொரு புதிய ஒற்றனை அனுப்பி மீண்டும் ஆராய்வார்கள். தங்களைச் சுற்றியுள்ள பகைப் படை தவிர, வேறு ஏதேனும் ஒரு பக்கத்தில் மறைமுகமாகப் பெரும்படை திரண்டு சூழ்ச்சி செய்கிறதா என்பதையும் மேலும் பல ஒற்றர்களை ஏவித் தெளிவுபடுத்திக் கொள்வார்கள்.


059. ஒற்றாடல் - 06. துறந்தார் படிவத்தர்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 59 -- ஒற்றாடல்


இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "துறவினர் கோலத்தில் சென்று, தடைகளைக் கடந்து, எண்ணிப் பார்த்து, என்ன செய்தாலும் சோர்வு கொள்ளாதவர் ஒற்றர் எனப்படுவார்" என்கின்றார் நாயனார்.

பார்ப்பனர்,  வணிகர் முதலானோர் செல்லக் கூடாத இடங்களிலும் செல்லக் கூடிய துறவி வடிவத்தையும், தீர்த்த யாத்திரை மேற்கொண்டோர் வடிவத்தையும் கொண்டு செல்வானாயின், பிறர் ஐயுறுதல் இராது என்றார்.


இதற்குத் திருக்குறள்...

துறந்தார் படிவத்தர் ஆகி, இறந்து ஆராய்ந்து,

என்செயினும் சோர்வு இலது ஒற்று.


இதற்குப் பரிமேலழகர் பொருள் ---

துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து --- முற்றும் துறந்தாராயும் விரத ஒழுக்கினராயும் உள்புகுதற்கு அரிய இடங்களெல்லாம் உள்புக்கு ஆராயவேண்டுவன ஆராய்ந்தறிந்து; 

என் செயினும் சோர்வு இலது ஒற்று --- ஆண்டையார் ஐயுற்றுப் பிடித்து எல்லாத் துன்பமும் செய்து கேட்டாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான்.

(விரத ஒழுக்கம் - தீர்த்த யாத்திரை முதலாயின. செயினும் என்பது அறவோர் என்று செய்வாரின்மை விளக்கி நின்றது. மேல் நால்வகை உபாயத்தினும் சோர்வின்மை சொல்லி வைத்தும், ஈண்டும் தண்டத்தைப் பிரித்துக் கூறியது, அதனது பொறுத்தற்கு அருமைச் சிறப்பு நோக்கி. இதனுள் 'படிவம்' என்றதனை வேடமாக்கி, 'துறந்தார் வேடத்தாராகி' என்று உரைப்பாரும் உளர்.)



இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“வந்தசுக சாரன் வடிவை நிருதன்அன்றிச்

சிந்தைசெய்தார் காண்பார், சிவசிவா! --- பந்தம்

துறந்தார் படிவத்தர் ஆகி இறந்துஆராய்ந்து

என்செயினும் சோர்வுஇலது ஒற்று.”


இதன் பொருள் ---


சுகன், சாரன் என்னும் இருவரும் இராவணனுடைய ஒற்றர்கள். குரங்கு வடிவு கொண்டு இராமர் படையுள் புகுந்தனர். உளவு பார்த்தனர். விபீடணன் செய்த மந்திரத்தால் உண்மை வெளிப்பட்டது.  இராமபிரான் அவர்கள் பால் இரக்கம் காட்டித் தன் வரவை இராவணனுக்குச் சொல்லுமாறு விடுத்தனன்.


பின்வரும் கம்பராமாயணப் பாடல்களைக் காண்க.


அகன் உறப் பொலிந்த வள்ளல் 

கருணையால் அழுத கண்ணன், 

'நகம் நிறை கானின் வைகும் 

நம் இனத்தவரும் அல்லர்;

தகை நிறைவு இல்லா உள்ளத்து 

இராவணன் தந்த ஒற்றர்;

சுகன், இவன்; அவனும் சாரன்' 

என்பது தெரியச் சொன்னான்.


  உள்ளத்தே முழுதும்) நிரம்பி,  முகத்திலும் பொங்கிப் பொலியும் கருணையையுடைய வள்ளலாகிய இராமபிரானின் அருள் தேக்கத்தைக் கண்டு மனம் உருகி அழுத கண்களையுடைய வீடணன், “இவர்கள் மலைகள் நிறைந்த கானகங்களில் வாழும் நம்முடைய இனத்தவராகிய  வானரர்களும் அல்லர். நற்பண்புகள்  நிறையாத  மனத்தினை உடைய இராவணன் அனுப்பியுள்ள ஒற்றர்கள். இவனோ சுகன் எனும் பெயருடையான். அவனோ   சாரன்  எனும்  பெயருடையான்” என்று இராமபிரான் அறியுமாறு எடுத்துரைத்தான்.

 


கல்விக்கண் மிக்கோன் சொல்ல, 

கரு மன நிருதக் கள்வர்,

'வல் விற் கை வீர! மற்று இவ் 

வானரர் வலியை நோக்கி,

வெல்விக்கை அரிது என்று எண்ணி, 

வினையத்தால் எம்மை எல்லாம்

கொல்விக்க வந்தான்; மெய்ம்மை; 

குரங்கு நாம்; கொள்க!' என்றார்.


  உண்மைக்)  கல்வியில் மேம்பட்டு உயர்ந்தவனான வீடணன் இவ்வாறு கூறுகையில், இருண்ட மனமுடைய அரக்கராகிய   அந்த ஒற்றர்கள், இராமபிரானை  நோக்கி, வலியவில் ஏந்திய  கையினையுடைய வீரனே! இந்த வானர வீரர்களின் வலிமையை உணர்ந்து, இவர்களை இராவணன் வெல்லுமாறு செய்தல் இயலாது என்று கருதி, சூழ்ச்சியினால் எம் போன்ற குரங்குகளை எல்லாம் கொலையுண்ணுமாறு செய்ய வந்தவன் இவ் வீடணன். சத்தியம்; நாங்கள் உண்மையில் குரங்குகளே என்று  மனங்  கொள்ள வேண்டும் என்றனர்.

 

'கள்ளரே! காண்டி' என்னா 

மந்திரம் கருத்துள் கொண்டான்;

தெள்ளிய தெரிக்கும் தெவ்வர்,

தீர் வினை சேர்தலோடும்,

துள்ளியின் இரதம் தோய்ந்து, 

தொல் நிறம் கரந்து, வேறு ஆய்

வெள்ளி போன்று இருந்த செம்பும் 

ஆம் என, வேறுபட்டார்.


  இதனைக்  கேட்ட வீடணன், இவர்கள் வானரர் அல்லர். கள்வரே   காண்பாயாக என்று (ஒரு) மந்திரத்தை மனத்துக்குள்  உருவேற்றினான்  அரக்கர் ஆகிய ஒற்றர்கள் (பகைவர் வேடத்தைத்);  தெளிவாகத் தெரிவிக்கவல்ல, குரங்கு  வடிவத்தை மாற்ற வல்ல அம்மந்திர ஆற்றல் நெருங்கியவுடன், பாதரசத் துளி மேலே படப்பெற்றுப் பழைய நிறம் மறைந்து, புதுநிறம் பெற்று, வெள்ளிபோல  இருந்த செம்பு, மீண்டும் புடம் இட்டால் செம்பு ஆகவே ஆவது  போன்று, குரங்கு உரு மாறிப் பழைய அரக்கர் வடிவத்தைப் பெற்றார்கள்.

 



059. ஒற்றாடல் - 05. கடாஅ உருவொடு

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 59 -- ஒற்றாடல்


இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "யாரும் ஐயுறக் கூடாத தோற்றத்தோடு, வெகுளும் கண்ணுக்கு அஞ்சாது, எந்நிலையிலும் கருத்தை வெளிப்படுத்தாமல் இருக்கவல்லவனே ஒற்றன் ஆவான்" என்கின்றார் நாயனார்.

ஒற்றன் எனப்படுபவன் தன்னை ஒருவர் கண்ட காலத்தில், அவர் ஐயப்படாதவாறு, பார்ப்பனர், வணிகர் முதலியோரது வடிவைப் போல மாறுவேடம் பூண்டு இருந்தும், ஒருக்கால் சந்தேகம் கொண்டு, இன்னான் என்று அறிய முற்பட்டு, உண்மை அறிந்து கொண்டு இவனைக் கோபித்துப் பார்க்க நேரும்போது, சிறிதும் அஞ்சாது இருப்பதும், உண்மையை அறியவேண்டி சாமம், தானம், பேதம், தண்டம் முதலிய உபாயங்களால் துன்புறுத்திய போதும், தன்னை அறிவிக்காமல், தான் வந்த காரியத்தையும் அறிவிக்காமல் இருக்கும் திறம் படைத்தவனே ஒற்றன் ஆகத் தகுதி உடையவன்.


இதற்குத் திருக்குறள்....

கடாஅ உருவொடு, கண் அஞ்சாது, யாண்டும்

உகாஅமை வல்லதே ஒற்று.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

கடாஅ உருவொடு --- ஒற்றப்பட்டார் கண்டால் ஐயுறாத வடிவோடு பொருந்தி; 

கண் அஞ்சாது - அவர் ஐயுற்று அறியலுறின் செயிர்த்து நோக்கிய அவர் கண்ணிற்கு அஞ்சாது நின்று;

யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று --- நான்கு உபாயமும் செய்தாலும் மனத்துக் கொண்டவற்றை உமிழாமை வல்லனே ஒற்றனாவான்.

('கடா' என்பது 'கடுக்கும்' என்னும் பெயரெச்சத்து எதிர்மறை. ஐயுறாத வடிவாவன பார்ப்பார், வணிகர் முதலாயினார் வடிவு.)



பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


“இற்றிது காலம் ஆக, இலங்கையர் வேந்தன் ஏவ,

ஒற்றர் வந்து அளவு நோக்கி, குரங்கு என உழல்கின்றாரைப்

பற்றினன் என்ப மன்னோ-பண்டு தான் பல நாள் செய்த

நல் தவப் பயன் தந்து உய்ப்ப, முந்துறப் போந்த நம்பி."--- கம்பராமாயணம், ஒற்றுக் கேள்விப் படலம்.

இதன் பொருள் ---

காலம் இற்று இது ஆக - காலம் இத்தன்மையது ஆக; இலங்கையர் வேந்தன் ஏவ - இலங்கை மக்களின்  தலைவனான இராவணனது ஏவலினால்; ஒற்றர் வந்து -  (வேவு பார்க்கும்) ஒற்றர்கள் (அங்கு) வந்து; அளவு நோக்கி - (வானரப் படையின் திறம், எண்ணிக்கை முதலிய) அளவுகளைப் பார்த்து; குரங்கு என உழல்கின்றாரை -  குரங்குகள் போல வேடமிட்டுப் (பாடி வீடுகட்கிடையே) திரிகின்றவர்களை; தான் பண்டு பலநாள் செய்த - தான்,  முன்பு பன்னெடு நாட்கள் (பொறுமை பூண்டு) செய்த; நல்தவப் பயன்- நல்ல தவத்தின் பயன்; தந்து உய்ப்ப - விளைந்து (பின்னின்று) செலுத்த; முந்து உறப் போந்த நம்பி - முன்னதாக இராமன் திருவடிகளைப் பற்றி உய்ய வந்த புருடோத்தமனாகிய வீடணன்; பற்றினன் - (ஒற்றர் எனக் கண்டு) பற்றிக் கொண்டான்.  

அரக்கர், விரும்பும் வடிவம்  பெற்றுக் கொள்ளும் திறம் உடையவர். விரும்பும் வடிவம் எடுக்கும் திறத்தால் அரக்கர்க்குக் 'காமரூபர்' என்னும் பெயர் உண்டு.


“கூட்டிய விரல் திண்கையால்

    குரங்குகள் இரங்கக் குத்தி,

மீட்டு ஒரு வினை செய்யாமல்,

    மாணையின் கொடியால் வீக்கிப்

பூட்டிய கையர் வாயால்

    குருதியே பொழிகின்றாரைக்

காட்டினன் கள்வர் என்னாக்

    கருணையங் கடலும் கண்டான்.”    ---  கம்பராமாயணம், ஒற்றுக் கேள்விப் படலம்

இதன் பொருள் ---

கூட்டிய விரல் திண்கையால் - சேர்த்து மடக்கி  (முட்டியாக்கிய) வலிய கைகளால்; இரங்கக் குரங்குகள் குத்தி - (காண்போர்) இரங்குமாறு குரங்குகளால் குத்தப் பெற்று; மீட்டு ஒருவினை செயாமல் - பின்பு,  வேறு ஒரு செயல் செய்ய  இயலாதவாறு;  மாணையின் கொடியால் வீக்கி - மாணையின் கொடியினால் (இறுக்கி); பூட்டிய கையர் - சேர்த்துக் கட்டிய கைகளை உடையவராய்;  வாயால் குருதியே பொழிகின்றாரை - வாயினால் இரத்தமே கக்குகின்றவர்களாகிய அந்த ஒற்றர்களை; 'கள்வர்'  என்னாக் காட்டினன் - 'வஞ்சகர்'  இவர்  என்று (வீடணன்) காட்டினான்; அம் கருணைக் கடலும்  கண்டான் – அதனை அழகிய கருணைக் கடலான இராமபிரானும் (திருவிழிகளால்) (அவர்களைப்) பார்த்தான்.

  மாணை --- ஒரு வகைக் கொடி, ஓணான் கொடி என்பர்.


059. ஒற்றாடல் - 03. ஒற்றினால் ஒற்றி

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 59 -- ஒற்றாடல்


இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "ஒற்றரைக் கொண்டு, பகைவர், அயலார், நட்பினர் ஆகிய எல்லாரிடத்தும் நிகழும் செயல்களை அறிந்து வரச் செய்து, அவற்றால் உண்டாகும் பயனை ஆராய்ந்து அறியாத மன்னன், வெற்றி அடையக் கிடந்த ஒரு வழி வேறு இல்லை" என்கின்றார் நாயனார்.

எதனையும் இடங்கள்தோறும் சென்று பிறர் அறியாமல் கண்டும், கேட்டும், நன்மை தீமைகளைச் சொல்லுகின்ற ஒற்றர்களைக் கொண்டு தெரிந்துகொள்வதன் மூலம், தனது ஆட்சிக்கும் மக்களுக்கும் எதிரான செயல்களை அறிந்து, அவைகளை வெற்றி கொள்ளவேண்டும்.


இதற்குத் திருக்குறள்... 

ஒற்றினான் ஒற்றி, பொருள் தெரியா மன்னவன்

கொற்றம், கொளக் கிடந்ததது இல்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் --- ஒற்றினானே எல்லார்கண்ணும் நிகழ்ந்தவற்றை ஒற்றுவித்து அவற்றான் எய்தும் பயனை ஆராயாத அரசன்; 

கொற்றம் கொளக் கிடந்தது இல் --- வென்றியடையக் கிடந்தது வேறொரு நெறி இல்லை.

(அந்நிகழ்ந்தனவும் பயனும் அறியாது பகைக்கு எளியனாதல் பிறிதின் தீராமையின் 'கொற்றம் கொளக் கிடந்தது இல்' என்றார். இதற்குக் கொளக்கிடந்ததொரு வென்றி இல்லை என்று உரைப்பினும் அமையும். இதனான் அத்தொழில் செய்யாதவழி வரும் குற்றம் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“மேகநா தன்செய்த வேள்விதனை ஒற்றினால்

ஏகிஅழித்து உய்ந்தார், இரங்கேசா! --- சேகரித்த

ஒற்றினால் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன்

கொற்றம் கொளக்கிடந்தது இல்.”

இதன் பொருள் ---  

இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! மேகநாதன் செய்த வேள்விதனை - இந்திரசித்தன் செய்த நிகும்பலை யாகத்தை, ஒற்றினால் ஏகி அழித்து உய்ந்தார் - வேவால் உணர்ந்து, சென்று, அழித்து, (இளையபெருமாள் முதலியோர் வெற்றி பெற்றுப்) பிழைத்தார்கள், (ஆகையால், இது) ஒற்றினால் ஒற்றி சேகரித்த பொருள் தெரியாத மன்னவன் - வேவால் பகைவரிடத்து நிகழ்பவைகளை அறிந்து கொண்டு அவற்றின் பிரயோசனத்தை ஆராய்ந்து அறியாத மன்னவன், கொற்றம் கொளக் கிடந்தது இல் - வெற்றிபெறத் தக்க வழி வேறு இல்லை (என்பதை விளக்குகின்றது).

கருத்துரை --- அரசன் ஒற்றால் உளவு அறிந்து காரியம் செய்யவேண்டும்.

விளக்கவுரை --- இந்திரசித்தன் நிகும்பலையில் செய்திருந்த யாகத்தை இளையபெருமாள் முதலியோர் அறியாதிருந்தார்கள். அவன் திடீரென்று மாயமாய் மறைந்து இருந்தான். ஆகையால், அவன் இருப்பைப் பற்றி சந்தேகமுற்ற இராமபிரான் விபீடணரை அனுப்பிப் பாம்பறியும் பாம்பின் கால் என்றபடி, இந்திரசித்தன் நிலைமையை அறிந்து வரும்படிக் கட்டளை இட்டார். அப்படியே அவர் சென்று, அவன் நிகும்பலையில் யாகம் செய்வதை உணர்த்தினார். உடனே இளையபெருமாள் முதலியோரை, இராமபிரான் ஏவி, அவ் யாகத்தை அழிக்கக் கட்டளை இட்டார். அதன்படி அவர்கள் சென்று யாகத்தை அழித்து, இந்திரசித்தனோடு போர் புரிந்து அவனையும் கொன்று வென்று விளங்கினார்கள். ஒற்றினால் ஒற்றிச் சேகரித்த பொருள் தெரிந்ததனால் வந்த பயன் இது. ஆகையால், "ஒற்றினால் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் கொற்றம் கொளக் கிடந்தது இல்" என்றார் நாயனார்.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“பின்னைகரம் வீடியபின் பேதுற்றான் சூரன்,ஒற்றை

முன்இனிது ஆளாமல், முருகேசா! --- அன்னதனால்

ஒற்றினால் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்

கொற்றம் கொளக்கிடந்தது இல்.”

இதன் பொருள் ---

முருகேசா - முருகப் பெருமானே, சூரபதுமன் - சூரபதுமனானவன், ஒற்றை - ஒற்றாடலை, முன் இனிது ஆளாமல் - முன்னரே நன்றாகச் செய்து கொள்ளாதபடியினால், பின்னை கரம் வீடிய பின் - தங்கையாகிய அசமுகியின் கை வெட்டுண்ட பிறகு, பேதுற்றான் - உள்ளம் வருந்தினான். அன்னதனால் - ஆகையால், ஒற்றினால் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் - ஒற்றர்களால் நாட்டு நிகழ்ச்சிகளை அறிந்து அவற்றின் பயனை அறிந்து கொள்ளாத அரசன், கொற்றம் கொளக் கிடந்தது இல் - வெற்றி பெறத்தக்க வழி வேறு இல்லை.

சூரபதுமனானவன் ஒற்றரைக் கொண்டு செய்தி அறிந்துகொள்ளுதலை, முன்னரே மேற்கொள்ளாதபடியினால் தங்கையினுடைய கை வெட்டுண்ட பிறகு வருத்தத்தை அடைந்தான். ஒற்றர்களால் நாட்டு நிகழ்ச்சிகளை அறிந்து அவற்றின் பயனைத் தெரிந்து கொள்ளாத அரசன் வெற்றி அடைதற்கு வழி ஒன்றும் இல்லை என்பதாம். 

சூரபதுமனுக்கு அஞ்சி இந்திரன் இந்திராணியோடு நிலவுலகத்தை அடைந்து தங்கினான். இந்திராணியை ஐயனார்பால் ஒப்புவித்து விட்டு, தான் திருக்கயிலைக்குச் சென்றான். ஐயனார் கட்டளைப்படி வீரமாகாளர் இந்திராணியைக் காவல் செய்திருந்தார். இந்திரணியைச் சூரபதுமனுடைய தங்கையாகிய அசமுகி ஒருநாள் கண்டாள். அவளைத் தன்னுடைய தமையனுக்கு மனைவியாக்க வேண்டுமென்று எண்ணினான்.  இந்திராணியினுடைய கையைப் பற்றி இழுத்தாள். அவ்வளவில் வீரமாகாளர் அசமுகியினுடைய கைகளை வெட்டினார். அவள் புலம்பிக்கொண்டு போய்ச் சூரபதுமனிடம் முறையிட்டாள்.  அவன் முன்னரே ஒற்றர்களை ஏற்படுத்தி வைத்திருந்தும் பகைவனாகிய இந்திரன் இருக்குமிடத்தையும் அவன் செய்யும் காரியங்களையும் ஒற்றர்கள் உணர்ந்து சென்று சூரனிடம் உரைக்கவில்லை. அதனாலேயே இவ்வாறு ஏற்பட்டது என்று வருந்தி அவ் ஒற்றர்களைப் பலவாறு கடிந்துரைத்து இகழ்ந்தான்.  ஒற்றர்களால் நன்கு செய்தி உணர்ந்து கொள்ளாதபடியால் சூரபதுமனானவன் பல தொல்லைகளை அனுபவிக்க நேர்ந்தது.

பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


“ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல்முன்இனிதே;

முன்தான் தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே;

பற்றிலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப்பாங்கறிதல்

வெற்றிவேல் வேந்தர்க்கு இனிது.”---இனியவை நாற்பது.

இதன் பொருள் ---

வெற்றி வேல் வேந்தற்கு ஒற்றினால் ஒற்றிப் பொருள் தெரிதல் முன் இனிதே - வெற்றியைத் தருகின்ற வேலையுடைய அரசனுக்கு ஒற்றராலே எல்லாரிடத்தும் நிகழ்வனவற்றை ஒற்றுவித்து, அவற்றின் பயனை ஆராய்தலின், பெருமை இனிது; முன் தான் தெரிந்து முறை செய்தல் முன் இனிதே - தான் குற்றத்தை முன்னர் ஆராய்ந்து தண்டம் செய்தல் மிக இனிது;  பற்று இலனாய் பல் உயிர்க்கும் பூத்து உற்று பாங்கு அறிதல் இனிது - ஒருவர்க்கும் பற்றிலனாய், எல்லார்க்கும் அப் பற்றினைப் பகுத்து,  எல்லாரிடத்தும் தானும் சென்று குற்றம் உளவாயின் அறிதல் இனிது.



“ஒற்றின் தெரியாச் சிறைப்புறத்து ஓர்தும்எனப்

பொன்தோள் துணையாத் தெரிதந்தும் - குற்றம்

அறிவுஅரிது என்று அஞ்சுவதே செங்கோன்மை, சென்று

முறையிடினும் கேளாமை அன்று.”  --- நீதிநெறி விளக்கம்.

இதன் பொருள் ---

ஒன்றின் தெரியா - வேவுகாரரால் தெரியப்படாத உண்மைகளை, சிறைப்புறத்து ஒர்தும் என - ஒதுக்கிடங்களில் இருந்து தெரிந்து கொள்வோம் என்று, பொன் தோள் துணையா தெரிதந்தும் - பொன்னாலான வீரவளை அணிந்த தனது தோளே தனக்குத் துணையாக நினைத்துக் கொண்டு போய் அங்கிருந்து அவற்றைத் தெரிந்து கொண்டும், குற்றம் அறிவரிது என்று அஞ்சுவதே செங்கோன்மை - குடிமக்களின் செய்கைகளில் குற்றமாவன இவைதாம் என்று துணிதல் அருமையானதென்று நினைத்து அக்குற்றங் காண்டலுக்கு அஞ்சுவதே நல்ல அரசாட்சி முறையாகும். (அதுவே முறையாமன்றிச்) சென்று முறையிடினும் கேளாமையன்று - குடிமக்களே போய்த் தமது குறைகளைச் சொல்லிக் கொண்டாலும் அதனைக் கேளாமலிருப்பது முறைமையன்று.

அரசனாவான் குடிமக்களின் நலங்களை அவர்கள் இருக்குமிடத்தில் வேவுகாரர்களை அனுப்பி வரச்செய்து, அவர்கள் வாயிலாகத் தெரிந்து கொள்வதுமன்றி, அவர்களாலும் தெரிந்து கொள்ளப்படாத உண்மைகளைத் தன் தோளே துணையாகத் தானே நேரிற்சென்று அறிவதும், அங்ஙனம் அறிந்த இடத்தும் அவர்பாலுள்ள குற்றங்களை அறியாதொழிவதுமே நல்ல அரசாட்சி முறையாம். அன்றி, அவ்வாறு தன் ஒற்றர்கள் மூலமாகவாவது அல்லது தானாகவாவது போய் அவர் நலங்களை அறியாதொழிதலும், குடிமக்கள் தாமாகவாவது தன்னிடம் வந்து முறையிட்டுக் குறையிரக்கும் போதுகூட அதனைக் கேளாமலிருப்பதும் முறையல்ல.



“அருமறை காவாத நட்பும், பெருமையை

வேண்டாது விட்டொழிந்த பெண்பாலும், யாண்டானும்

செற்றங்கொண் டாடுஞ் சிறுதொழும்பும், இம்மூவர்

ஒற்றாள் எனப்படு வார்.” ---  திரிகடுகம்.

இதன் பொருள் ---

அருமறை காவாத நட்பும் - பிறர்க்கு வெளிப்படுத்தக் கூடாத மறைமொழியைக் காப்பாற்றாத நட்பாளனும்; பெருமையை வேண்டாது விட்டு ஒழிந்து பெண்பாலும் - பெருமைக்குணத்தை விரும்பாமல் தலைவன் குறைகளை வெளிப்படுத்தி, தருமத்தினின்றும் நீங்கிய பெண்ணும்; யாண்டானும் - எங்காயினும், செற்றம் கொண்டு ஆடும் சிறு தொழும்பும் - கோபங்கொண்டு அவன்மேல் குற்றங் கூறுகின்ற குற்றலாளனும்; இ மூவர் - ஆகிய இம் மூவரும், ஒற்றாள் எனப்படுவார் - ஒற்றர்களை ஒப்பர் என்று சொல்லப்படுவார்.

ஒருவன் மறைமொழியை வெளிப்படுத்தும் நண்பனும், உள்ள பெருமையும் ஒழிக்கக் கருதும் பெண்ணும் தலைவரிடம் பகை பாராட்டும் வேலையாளனும் ஒற்றரை ஒத்தவர் என்பது கருத்து.


059. ஒற்றாடல் - 02. எல்லார்க்கும் எல்லாம்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 59 -- ஒற்றாடல்


இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "எல்லார் இடத்தும் நடப்பவற்றை எல்லாம், நாள்தோறும் ஒற்றரால் விரைந்து அறிதல் அரசனுக்கு உரிய தொழில் ஆகும்" என்கின்றார் நாயனார்.


எல்லார் இடத்தும் என்றது, பகைவர், நண்பர், அயலார் ஆகிய மூவரிடத்தும். எல்லாம் என்றது, நாட்டில் நிகழும் நல்லனவும் தீயனவும் ஆகிய எல்லா நிகழ்வுகளையும், தெரிந்து கொள்ளுதலும், 


வல்லறிதல் ஆவது, தெரிந்துகொண்ட பொழுதே, நல்ல செயல்களுக்கு உண்டான அருளைச் செலுத்தி, அதற்கு உரியோரைக் காத்தலும், தீய செயல்களுக்கு உரியோரைத் தக்க முறைப்படி தண்டித்தல் செய்வதும். காலம் நீட்டிப்பின் அதனால் விளையும் தீமையும் பல ஆதலின் வல்லறிதல் என்றார்.


இதற்குத் திருக்குறள்...

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை, எஞ்ஞான்றும்

வல்அறிதல், வேந்தன் தொழில்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

எல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும் வல்அறிதல் --- எல்லார் கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றான் விரைந்தறிதல்;

வேந்தன் தொழில் --- அரசனுக்கு உரிய தொழில்.

('எல்லார்க்கும்' என்றது மூன்று திறத்தாரையும். நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்தது. 'நிகழ்வன எல்லாம்' என்றது, நல்லவும் தீயவுமாய சொற்களையும், செயல்களையும். அவை நிகழ்ந்த பொழுதே அவற்றிற்குத் தக்க அளியாகத் தெறலாகச் செய்யவேண்டுதலின் 'வல்லறிதல்' என்றும், இவ்விரு தொழிற்கும் அறிதல் காரணம் ஆதலின், அதனையே உபசார வழக்கால் 'தொழில்' என்றும் கூறினார். 'ஒற்றான்' என்பது அதிகாரத்தான் வந்தது. இதனான் ஒற்றினாய அறன் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடியருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

“சீர்படைத்த முக்கண் சிவன் அன்பன் என்று எழுதும்

பேர்படைத்த சேரர் பெருமான்போல் --- பார்மிசையின்

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை, எஞ்ஞான்றும்

வல்அறிதல் வேந்தன் தொழில்.”

இதன் பொருள் ---

சேரர்பெருமான் - சேரமான் பெருமாள் நாயனார்.  பாணபத்திரருடைய வறுமையைத் தீர்த்தல் பொருட்டுச் சிவபெருமான் சேரமான் பெருமாள் நாயனாருக்கு எழுதிய திருமுகப் பாசுரம் வருமாறு......

திருச்சிற்றம்பலம்

மதிமலி புரிசை மாடக் கூடல்,

பதிமிசை நிலவு பால் நிறவரிச் சிறகு

அன்னம் பயில்பொழில், ஆலவாயில்

மன்னிய சிவன், யான் மொழிதரு மாற்றம்,


பருவக் கொண்மூப்படி எனப் பாவலர்க்கு

உரிமையின் உரிமையின் உதவி, ஒளிதிகழ்

குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்

செருமா உகைக்கும் சேரலன் காண்க,


பண்பால்  யாழ் பயில் பாணபத்திரன்,

தன்போல் என்பால் அன்பன், தன்பால்

காண்பது கருதிப் போந்தனன்,

மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே.

திருச்சிற்றம்பலம்

இதனைக் கொண்டு சென்ற பாணபத்திரரைச் சேரர் பல உபசாரங்களுடன் வரவேற்று, அவர் விரும்பிய பொருளைக் கொடுத்து அனுப்பினார் என்பது வரலாறு.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடியருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“வேதன்இல்லாள் வீந்ததிறம் மீனவற்கு நீதெரித்தாய்,

சோதி,பழி அஞ்சும் சோமேசா - பூதலத்தின்

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்அறிதல் வேந்தன் தொழில்.”


இதன் பொருள் ---

சோதி - பரஞ்சோதி வடிவமாகவுள்ளவரே,  பழி அஞ்சும் சோமேசா - முன்பு பாண்டிய மன்னனுக்கு வர வின்ற பழிக்கு அஞ்சிய சோமேசப் பெருமானே! பூதலத்தின் - நிலவுலகத்தில், எல்லார்க்கும் - எல்லார்கண்ணும், நிகழ்பவை எல்லாம் - நிகழ்வன எல்லாவற்றையும், எஞ்ஞான்றும் வல் அறிதல் - நாள்தோறும் ஒற்றான் விரைந்து அறிதல், வேந்தன் தொழில் - அரசனுக்கு உரிய தொழில்,

வேதன் - ஓர் அந்தணணுடைய, இல்லாள் வீந்த திறம் - மனைவி இறந்த விதத்தை, மீனவற்கு - குலோத்துங்க பாண்டியனுக்கு, நீ தெரித்தாய் - நீயே தெரிவித்து அருளினாய் ஆகலான் என்றவாறு.

அரசர்க்கு உற்றார் உறவினர் நண்பினர் பகைவர் எல்லாரானும் தீமை விளையக் கூடும் ஆகலின், அவர்கள் செயலையும் ஒற்றான் அறியவேண்டுவது அரசர்க்கு இன்றி அமையாதது ஆயிற்று. காலம் நீட்டிப்பின் அதனால் விளையும் தீமையும் பல ஆதலின் வல்லறிதல் என்றார்.

குலோத்துங்க பாண்டியன் என்பான் செங்கோல் செலுத்தும் நாள், ஓர் அந்தணன் தன் மனைவியோடும் கைக் குழந்தையோடும் திருப்புத்தூரினின்றும் புறப்பட்டு மாமனார் வீடு செல்ல மதுரைக்கு வருகிற வழியில் தாகவிடாய் கொண்ட மனைவியைக் குழந்தையுடன் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் விட்டு, நீர் கொணரச் சென்றான். அவ் ஆலமரத்தில் நெடுங்காலமாய்ச் சிக்குண்டு இருந்த ஓர் அம்பு காற்றால் அலைப்புண்டு வீழ்ந்து அப் பார்ப்பனியின் வயிற்றில் ஊடுருவிற்று. அவளும் உயிர் இழந்தாள். அத் தருணத்தில் அம்பினைத் தொடுத்த வில் ஏந்தியவனான வேடன் ஒருவன் வெயிற்கு ஒதுங்கி அந்த ஆலமரத்தின் அடியில் நின்றான். நீர் கொணரச் சென்ற அந்தணன் நீரொடு திரும்பி வந்து, தன் மனைவி இறந்து கிடப்பதைக் கண்டான். இது யார் செய்தார் என்று சுற்றிப் பார்த்தான். வேடன் ஒருபுறம் நிற்கின்றான். அவனே செய்தானென்று துணிந்து அரசன் ஆணை கொண்டு அவன் தன்னுடன் வரும்படி செய்து இறந்த மனைவியைத் தன் முதுகில் இட்டுக் குழந்தையை இடுக்கி மதுரை நோக்கி வழி நடந்து வந்து பாண்டியன் அரண்மனை வாயிலில் வேடனை விட்டு, மனைவியின் சவத்தை இட்டு, "நீதி தவறாத மன்னவ! இது முறையோ?" என்று கதறினான். வாயில் காப்போர் நிகழ்ந்தன யாவும் பாண்டியற்குத் தெரிவித்தார்கள். பாண்டியன் உடனே தன் அரியணையினின்றும் போந்து அந்தணன் நிலை கண்டு வருந்தி விசாரித்தான். அந்தணன் நிகழ்ந்தன கூறி "அவ் வேடனே கொன்றான்" என்றான். அதன்பின் அரசன் வேடனது வாய்ப் பிறப்பைக் கேட்டான். அவன் "தான் கொன்றதுமில்லை, கொன்றாரைக் கண்டதுமில்லை" என்றான். மேல் தான் இட்ட கட்டளைப்படி அவ் வேடனைச் சிறையிலிட்டுத் தண்டலாளர்கள் பலவாறு கடும் தண்டனை செய்தும் அவன் ஒரு சொல்லாகச் சொன்னமையானும், கொன்ற குறிப்பு முகத்தில் தோன்றாமையானும், ஒன்றும் தோன்றாது பாண்டியன் சுந்தரேசப் பெருமான் திருமுன் புகுந்து, "மன்றாடு மணியே! ஒன்றாலும் என் ஐயம் தீர்தற்கு இடனில்லை. நீரே என் தாழ்வு கெட நிகழ்ந்தவற்றைத் தெரிவிக்கவேண்டும்" என்று பிரார்த்தித்தான்.  உடனே, "வணிக வீதியில் ஒரு வீட்டில் மணம் நடக்கிறது. அந்தணனோடு நீ அங்கு வருவாய். உனது ஐயம் தெளியும்" என்று ஆகாயவாணி கூறக்கேட்டு, அவ்வாறே அன்று இரவு அந்தணனோடு அவ் வீட்டில் ஒரு பக்கம் மறைந்து இருந்தான். அன்று அம் மணமகன் ஆயுள் முடிய, யமதூதர்கள் அவனுடைய உயிரைக் கவர வந்தார்கள். பாண்டியனும் அந்தணனும் கேட்கும்படி, வந்த தூதர்களில் ஒருவன், "யாம் எவ்வாறு இம் மணமகன் உயிரைக் கொள்வது? அவன் உடம்பில் பிணி ஏதும் இல்லையே? காரணமின்றி உயிர் கொள்ளப்படாதே" என்றான். அதற்கு மற்றவன், "அன்று ஆலமரத்தில் சிக்குண்டு இருந்த அம்பைக் காற்றால் விழும்படி செய்து எவ்வாறு பார்ப்பனியின் உயிரைக் கவர்ந்தோமோ, அவ்வாறு ஓர் உபாயத்தால் இவன் உயிரையும் கவரவேண்டும். ஒன்று செய்க. வாத்திய முழக்கொலியால் அவ் ஈன்றணிமையுடைய இப்பசுவை வெருட்டித் தாம்பு அறுத்துவிட்டு இவன் உயிரைக் கவர்க" என்றான். பாண்டியன் அந்தணனை நோக்கி, "கேட்டீரோ, மனம் தெளிந்ததோ" என்றான். அதற்கு அந்தணன், "நிற்க இம் மணமகன் இவ்வாறு இறப்பானேல், என் மனைவி இறந்தது அவ்வாறெனக் கொள்வன்" என்றான். மணவினை தொடங்கினார்கள். பல வாத்தியங்களும் முழங்கின.  அம்முழக்கொலியால் வெருண்டு கட்டிய தாம்பு அறுந்து போக அப் பசுவானது ஓடிப்போய் மணமகனை முட்டியது. அவன் அக்கணமே உயிர் துறந்தான். ஐயம் நீங்கி யாவர்க்கும் இது கூறி மகிழ்ந்து, அந்தணனுக்கு மறுமணம் முடிக்கப் பொருளுதவி, விடை தந்து,  சிறையிலிருந்த வேடனுக்கு இடப்பட்ட விலங்கைக் கழற்றுவித்து, "தெளியாது யாம் கடும் தண்டம் செய்தோம். பொறுத்துக் கொள்க" என்று இரந்துவேண்டி அவனுக்கு வேண்டியன கொடுத்து விட்டான் பாண்டியன். இது திருவிளையாடல் புராணத்து உள்ளது.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில் வரும் சேரமான் பெருமாள் நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார், "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடியுள்ள ஒரு பாடல்...

"நெறிவார் சடையாரைப் போல், நீள்திலத்தோர் செய்கை

அறிவார் கழிறிற்று அறிவார் --- அறிவார்ஆர்

எல்லார்க்கு எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்அறிதல் வேந்தன் தொழில்"

இதன் விளக்கம் ---

மலைநாட்டிலே உள்ள மகோதை என்னும் பெயரை உடைய கொடுங்கோளூரிலே, சேரர் குடியிலே பெருமாக்கோதையார் என்பவர் அவதரித்தார். இளம் வயதிலேயே அவர் வைராக்கியம் உடையவராய்ச் சிவபெருமானுடைய திருவடியை அடைதல் வேண்டும் என்னும் கருத்தினராய் விளங்கினார்.  திருவஞ்சைக்களம் என்னும் திருத்தலத்தை அடைந்தார். பரமசிவனே சுவதந்திரர். நாம் பரதந்திரர் என்று உணர்ந்தார். சிவாதீனமாய் நின்றார். நாள்தோறும் நியமமுடன் திருத்தொண்டுகளைச் செய்வாராயினார். அப்போது செங்கோல் பொறையன் என்னும் சேர அரசன் தபோவனத்தை அடைந்தான். மன்னன் ஒருவன் இல்லாமல் நாடு இருத்தல் கூடாது என்று எண்ணிய, மந்திரிமார்கள் திருத்தொண்டு செய்துகொண்டு இருக்கும் பெருமாக்கோதையாரிடம் வந்து இம்மலை நாட்டை நீரே முடிசூடி அரசியற்றல் வேண்டும் என்று விண்ணப்பித்தனர்.  பெருமாக்கோதையார் அதனைக் கேட்டு ஆலயத்தினுள் சென்று சிவபெருமானை வணங்கி விண்ணப்பித்தார்.  அவருடைய திருவருளினாலே அவரிடத்தே வைத்த பத்தி வழுவாது அரசியற்றும் சத்தியையும், யாரும் யாவும் கழறினவைகள் அனைத்தையும் அறியும் அறிவையும், நாசம் இல்லாத மகா பராக்கிரமத்தையும், பெருங்கொடையையும், அரசருக்கு உரிய படை வாகனம் முதலிய எல்லாவற்றையும் கைவரப் பெற்றார். மீட்டும் இறைவனை வணங்கி விடைபெற்று வெளிப் போந்து, முடிசூடி அரசியற்றினார் சேரமான் பெருமாள். எல்லார்கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றால் விரைந்து அறிதல் அரசனுக்கு உரிய தொழில் என்றார் திருவள்ளுவ நாயனார்.


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...

தாய் அறியாத சேய் இருந்தாலும்

தான் அறியாதவர் இல்லை,

ஆய தன்மையினால் அறவழி நிற்கும்

அறிஞரை அறிந்து, அவர்க்குரிய

தேய ஆதிக்கம் தந்து நல் நீதி

செலுத்தி, எங்கணும், மருந்தினுக்கும்

தீயவர் இலர் என்று இசையுற மடக்குந்

திறல்உளோன் பூதல வேந்தே. ---  நீதிநூல்.


  எல்லாக் குடிகளையும் தானறிந்து, நல் அறிவாளரைக் கொண்டு அரசு நடத்தித், தீயவர் பெயருமில்லாமல் நீக்கிப் புகழுடன் ஆள்வோனே மன்னன்.


059. ஒற்றாடல் - 01. ஒற்றும் உரைசான்ற

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 59 -- ஒற்றாடல்


அதாவது, பகைவர், நட்பினர், அயலார் ஆகிய மூன்று சாராரிடத்தும் நிகழுபவைகளை அறிந்து கொள்வதற்கு ஒற்றரை வைத்து ஆளும் முறைமையைச் சொன்னது.

இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "ஒற்றரும், புகழ் சார்ந்த நூல்முறைகளும் ஆகிய இவை இரண்டும் தன்னிரண்டு கண்களாகக் கொண்டு ஒருவன் தெளிவு பெறவேண்டும்" என்கின்றார் நாயனார்.

தான் செல்ல முடியாத இடங்களில் எல்லாம் சென்று, அங்கு நிகழ்வனவற்றை அறிந்து அறிவிப்பதால் ஒற்றரும், அவ் ஒற்றர் சொன்ன செய்திகளை நீதிநூலில் சொல்லப்பட்டுள்ள வழியே சென்று ஆராய்ந்து தெளியவேண்டி உள்ளதால், அந்த நீதிநூல்களும் ஒருவனுக்கு இரு கண்களைப் போன்றவை ஆகும்.

ஒற்றரை ஊனக் கண் என்றும், நீதிநூல்களை ஞானக்கண் என்றும் கொள்வது சிறப்பாக அமையும்.


இதற்குத் திருக்குறள்...

ஒற்றும், உரைசான்ற நூலும், இவை இரண்டும்

தெற்று என்க மன்னவன் கண்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும் --- ஒற்றும் புகழமைந்த நீதிநூலுமாகிய இவை இரண்டனையும்; 

மன்னவன் கண் தெற்றென்க --- அரசன் தன் இரண்டு கண்ணுமாகத் தெளிக.

(ஒற்றுத் தன் கண் செல்லமாட்டாத பரப்பெலாம் சென்று கண்டு ஆண்டு நிகழ்ந்தன எல்லாம் உணர்த்தலானும், நூல் அந் நிகழ்ந்தவற்றிற்குத் தன்னுணர்வு செல்ல மாட்டாத வினைகளை எல்லாம் சொல்லி உணர்த்தலானும், இவ்விரண்டனையுமே தனக்கு ஊனக் கண்ணும் ஞானக் கண்ணுமாகத் துணிந்துகொண்டு ஒழுகுக என்பதாம். ஒற்றனை 'ஒற்று' என்றார், வேந்தனை 'வேந்து' என்றாற்போல. 'தெற்றென்க' என்பது 'தெற்று' என்பது முதனிலையாக வந்த வியங்கோள். அது 'தெற்றென' என்னும் செயவென் எச்சத்தான் அறிக. இதனான் ஒற்றினது சிறப்புக் கூறப்பட்டது.)



இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

"எற்றுஇன்றி ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும்

தெற்றென்க மன்னவன்கண் என்பர், ஈதுஉன் செயல்பொருந்தும்

முற்றின்ப மன்னர் முறைமை, நின்பாத முளரியின்மேல்

பற்று என்று நான் பெறுவேனோ புல்லாணிப் பதிக்கொண்டலே".

இதன் பொருள் ---

என்னவோ என்று தெளிய முடியாதவைகளை அறிந்து சொல்லுகின்ற ஒற்றரும்,  புகழமைந்த நீதிநூல்களும் ஆகிய இவை இரண்டும், தெளியத் துணை புரிவன என்று பெரியோர் சொன்னதால், உனது தொழிலாகிய காத்தல் தொழிலைப் புரிகின்ற மன்னருக்கு இவை இரண்டும் பொருந்தும். ஒற்று, நீதிநூல் ஆகிய இரண்டில் பற்று வைத்துத் தெளிகின்ற, எல்லா இன்பங்களும் நிறையப் பெற்ற மன்னர்களைப் போல், திருப்புல்லாணிப் பதியில் கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள திருமாலே! அடியேன் உனது திருவடித் தாமரையின் மேல் அன்பு வைத்துத் தெளிந்த ஞானத்தை எப்போது பெறுவேனோ?

முற்றின்ப மன்னர் - எல்லா இன்பங்களும் நிறையப் பெற்ற அரசர்கள். பாதமுளரி - திருவடித் தாமரை. பற்று - அன்பு.


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


“எள்ளப் படுமரபிற்று ஆகலும், உள்பொருளைக்

கேட்டு மறவாத கூர்மையும், முட்டின்றி

உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும், இம்மூன்றும்

ஒள்ளிய ஒற்றாள் குணம்.” --- திரிகடுகம்.


இதன் பொருள் ---


எள்ளப்படும் மரபிற்று ஆகலும் - (தன் செய்கை பகைவரால்) நன்கு மதிக்கப்படாத, முறையை உடையதாதலும், உள் பொருளைக் கேட்டு மறவாத கூர்மையும் - (அப் பகைவரிடத்து) நடந்துள்ள காரியத்தைக் கேட்டுப் பின் மறவாத, கூரறிவுடைமையும்; உள் பொருள் முட்டு இன்றி சொல்லும் உணர்ச்சியும் - அப் பொருளை, தடையின்றித் தன் அரசனுக்குச் சொல்லுகின்ற தெளிவுடைமையும்; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், ஒள்ளிய ஒற்று ஆள் குணம் - அறிவுள்ள வேவுகாரனது தன்மையாம்.


058. கண்ணோட்டம் - 10. பெயக் கண்டும்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "பலரும் விரும்பி அன்புமிக்குப் போற்றக் கூடிய அருள் ஒளிப் பண்பை விரும்பி இருப்பவர், தமது நண்பர் நஞ்சினை இடுதல் கண்டும், அதனை உண்டு, தமது உயரிய பண்பினால், அக் குற்றத்தை மறந்து கண்ணோடி மனம் அமைதி உறுவர்" என்கின்றார் நாயனார்.

தம்மோடு பழகியவர் தமக்கு விடத்தையே கலந்து உண்ணச் செய்தாலும்,  தாம் சாதற்கு அது இடமாகும் என்று அறிந்து இருந்தும், அவரிடத்தே உள்ள அன்பின் மிகுதியால், "நீர் நஞ்சு வைத்தீர்" என்று கூறாமலும், தாம் இறப்பதை எண்ணாமலும், அவர் கொடுத்த நஞ்சை உண்டு, பின்னும் அன்போடு பழகுவர். எல்லோராலும் விரும்பத்தக்க கண்ணோட்டம் என்னும் நற்பண்பினை உடையவர் இவர் ஆவர்.


இதற்குத் திருக்குறள்...

பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர், நயத்தக்க

நாகரிகம் வேண்டு பவர்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

நஞ்சு பெயக் கண்டும் உண்டு அமைவர் --- பயின்றார் தமக்கு நஞ்சிடக் கண்டுவைத்தும், கண் மறுக்கமாட்டாமையின் அதனை உண்டு பின்னும் அவரோடு மேவுவர்; 

நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் --- யாவரானும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுபவர்.

(நாகரிகம் என்பது கண்ணோட்டமாதல் 'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்' (நற் 355 ) என்பதனானும் அறிக. அரசர் அவரை ஒறாது கண்ணோடற்பாலது தம்மாட்டுக் குற்றம் செய்துழி என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.)



இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


"செயத்தக்க பாவத்தினும் மேல்செய்தேனைத் திருவருள்கூர்ந்து

உயத் தக்கவாறு செய்யாய், பெயக்கண்டும் நஞ்சு உண்டு அமைவர்

நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் எனப் புகன்றார்

பயத்தக் கராசலங் காத்து அருள் புல்லைப் பதிக்கொண்டலே".


இதன் பொருள் ---


பலரும் விரும்பி அன்புமிக்குப் போற்றக் கூடிய அருள் ஒளிப் பண்பை விரும்பி இருப்பவர், தமது நண்பர் நஞ்சினை இடுதல் கண்டும், அதனை உண்டு, தமது உயரிய பண்பினால், அக் குற்றத்தை மறந்து கண்ணோடி மனம் அமைதி உறுவர் என்று திருவள்ளுவ நாயனார் சொன்னார். எனவே, திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளி உள்ள முகில்வண்ணனே! ஆதிமூலமே என்ற யானைக்கு அபயம் தந்த காத்தவனே! செய்யக்கூடிய பாவத்தினை விடவும் மேலான பாவத்தைப் புரிந்து என் மீது திருவருள் வைத்து, பிழைக்க வைத்து அருள்வாய்

மேற்செய்தேனை - மிகுதியாகச் செய்த என்னை.  திருவருள் கூர்ந்து - திருவருள் பொருந்தி. உயத் தக்கவாறு - பிழைக்கத் தக்கபடி. பயத்த - அச்சத்தை அடைந்த. கராசலம் - ஆதிமூலமே என்ற யானை. (கரம் – கை. இங்கே துதிக்கை குறித்தது. அசலம் – மலை. துதிக்கையினை உடைய மலை. அது நானை) புல்லைப் பதிக் கொண்டல் - திருப்புல்லாணியில் எழுந்தருளிய முகில்வண்ணன்.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளதை அறியலாம்...



“முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்     

நஞ்சும் உண்பர் நனி நாகரிகர், 

அஞ்சில் ஓதி என் தோழி தோள்துயில் 

நெஞ்சின் இன்புறாய் ஆயினும், அது நீ 

என்கண் ஓடி அளிமதி, 

நின்கண் அல்லது பிறிதியாதும் இலளே.”  ---  நற்றிணை. 


இதன் பொருள் ---

நட்டோர் முந்தை இருந்து கொடுப்பின் - நட்புடையாளர் கண்ணோட்டம் உடையார்க்கு எதிரே சென்றிருந்து 'இதனை நீவிர் உண்பீராக!' என்று நஞ்சைக் கலந்து கொடுத்தாலும்; நனி நாகரிகர் நஞ்சும் உண்பர் - நட்பின் மிக்க அக் கண்ணோட்டமுடையார் அது நஞ்சு எனக் கண்டு வைத்தும், கண் மறுக்கமாட்டாமையின் அதனை உண்டு பின்னும் அவரோடு மேவுவார்; அது நீ அம் சில் ஓதி என் தோழி தோள் துயில் நெஞ்சின் இன்புறாய் --- நீ அத்தகைய நட்புடையனாய் இருந்தும் அழகிய சிலவாய கூந்தலையுடைய என் தோழியின் தோளிலே துயிலுவதை நின் உள்ளத்து இன்பமாகக் கொண்டாயல்லை; ஆயினும் - அங்ஙனம் கொள்ளாயே ஆயினும்; என் கண் ஓடி அளி - என்பால் உள்ள கண்ணோட்டத்தினாலாவது இவளுடைய தோளிலே துயிலுவதனை இன்பமாகக் கொண்டு தலையளி செய்வாயாக!; நின் கண் அல்லது பிறிது யாதும் இலள் - இவள்தான் நின்பால் அடைக்கலமாக உடையள் அல்லது வேறொரு களைகணும் உடையள் அல்லள்காண்.

நாகரிகர் - கண்ணோட்டம் உடையவர். 



“செயக்கடவ அல்லனவும் செய்துமன் என்பார்

நயத்தகு நாகரிகம் என்ஆம்? - செயிர்த்து உரைப்பின்

நெஞ்சு நோம் என்று தலைதுமிப்பான் தண்ணளிபோல்

எஞ்சாது எடுத்து உரைக்கல் பாற்று.”  --- நீதிநெறி விளக்கம்.


இதன் பொருள் ---

செயக்கடவ அல்லனவும் செய்தும்மன் - செய்தற்கரிய செயல்களையும் மிகுதியும் செய்து முடிப்போம், என்பார் - (என்று செயலில் காட்டாது) சொல்லளவில் சொல்லி நிற்பாரின், நயத்தகு நாகரிகம் என்ஆம் - முகமனான கண்ணோட்டம் என்ன பயனைத் தரும்? (இச் செய்கை) செயிர்த்து உரைப்பின் - ஒருவரைக் கோபித்துச் சொன்னால், நெஞ்சு நோம் என்று - அவர்க்கு மன வருத்தம் உண்டாகுமென்று, தலை துமிப்பான் தண்ணளிபோல் - அவர் தலையை வெட்டும் கருணைத் திறனை ஒக்குமென்று, எஞ்சாது எடுத்து உரைக்கற்பாற்று - அது கூசாமல் கூறுந்தன்மையதாகும்.


தன்னை வந்து அடுத்துத் தன் உதவி விரும்புவானிடம், தான் செய்தற்கரிய காரியங்களையும் செய்து முடிக்க முடியுமென்று சொல்லளவில் சொல்லிச் செயலில் அவ்வாறு செய்யாது ஒழிவது நாகரிகமாகாது.       


058. கண்ணோட்டம் - 09. ஒறுத்து ஆற்றும்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "தம்மை வருத்தும் வல்லியல்பு உடையாரிடத்தும், கண்ணோட்டம் செய்து, பொறுத்துக் கடமை புரியும் பண்பே தலை சிறந்தது" என்கின்றார் நாயனார்.

தன்னைத் துன்புறுத்துகின்றவர்களைத் துன்புறுத்தாது பொறுத்துக் கொள்வது, கண்ணோட்டத்தின் பயன் ஆகும். அதுவே, தலைசிறந்த குணம்.


இதற்குத் திருக்குறள்...

ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும், கண்ஓடி,

பொறுத்து ஆற்றும் பண்பே தலை.


இதற்குப் பரிமேழலழகர் உரை ---

ஒறுத் தாற்றும் பண்பினார் கண்ணும் --- தம்மை ஒறுக்கும் இயல்பு உடையார் இடத்தும்; 

கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை --- கண்ணோட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்கும் இயல்பே அரசர்க்குத் தலையாய இயல்பாவது.

('பண்பினார்' என்றதனான், அவர் பயிற்சி பெற்றாம் 'ஒறுத்தாற்றும்', 'பொறுத்தாற்றும்' என்பன ஈண்டு ஒரு சொல் நீர.)



இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“மாலான் முதல்இகழ்ந்த வானவர்தீங் கும்பொறுத்துத்

தோலா விடம்உண்டாய், சோமேசா! --- சால

ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்

பொறுத்துஆற்றும் பண்பே தலை.”


இதன்பொருள்---


சோமேசா! சால ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் - தம்மை மிகுதியும் வருத்தும் தன்மையுடையாரிடத்தும், கண் ஓடி - கண்ணோட்டம் உடையராய், பொறுத்தாற்றும் பண்பே - குற்றத்தைப் பொறுக்கும் இயல்பே, தலை - அரசர்க்குத் தலையாய இயல்பாவது,


மாலான் முதல் - திருமால் முதலிய, இகழ்ந்த வானவர் தீங்கு - தேவரீரை முழுமுதற்கடவுள் என நினையாது செருக்கால் மயங்கி அவமதித்த தேவர்களுடைய குற்றத்தை, பொறுத்தும் - பொறுத்துக் கொண்டும், தோலா விடம் உண்டாய் - தோல்வி அடையாமல் யாவரையும் அழித்தற் பொருட்டு எழுந்து வந்த ஆலகால விடத்தை உண்டு பாதுகாத்து அருளினீர் ஆகலான் என்றவாறு.


சுராசுரர்கள் அமுதம் வேண்டித் திருப்பால் கடலில் மந்தரகிரியை மத்தாக நாட்டி, வாசுகியைக் கயிறாகப் பூட்டிக் கடைந்து இளைத்தார்கள். மந்தரகிரியும் நிலைபெறாது தாழ்ந்தது. அப்போது அங்கு வந்த வாலி உதவியாய் நின்று மேலும் கடையத் திருமால் கூர்வடிவம் கொண்டு மந்தரகிரியைத் தாங்கினார். மிக்க கடுமையாகக் கடையும்போது வாசுகி வருத்தம் பொறாது விடத்தைக் கக்கிப் பெருமூச்செறியக் காளகூடம் என்னும் விடம் கடலினின்றும் எழுந்து கடல் நீரைச் சுவற்றி அண்டகடாகத்தையும் எரித்து உயிர்த் தொகைகளை எல்லாம் சுட்டு வருத்த, வாலி அஞ்சி ஓடினான். பிரம விட்டுணுக்கள் உருக்குலைந்தார்கள். இறைவனை மறந்தமையால் எடுத்த காரியம் இடையூறு உற்றதன்றித் தமக்கெல்லாம் இறுதியும் வரநின்றது என அஞ்சித் திருக்கயிலை புகுந்து நிகழ்ந்தனவற்றை விண்ணப்பித்து, "இது பொழுது காத்திலையேல், எமக்கு இறுதி இன்றே ஆம், விதுமுடித்த பெருங்கருணை வெள்ளமே" என்று இரக்க, பெருமான் இருந்த நிலையில் திருக்கரத்தை நீட்ட, அவ் விடம் திரண்டு அதனுள் அடங்க, அக்கணமே அதனை உண்டு கண்டத்தின் வைத்தார்.



அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கின்ற, "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“சொல்லுக என்று அங்கதனைத் தூதுஏவி, மாதைவிடல்

இல்லைஅவன் என்றான், இரங்கேசா! --- மெல்ல

ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்

பொறுத்துஆற்றும் பண்பே தலை.”


இதன் பொருள் ---  


இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! அங்கதனை - வாலிகுமாரனாகிய அங்கதன் என்பவனை, சொல்லுக என்று - (இராவணனுக்குப் புத்தி) சொல்லி வா என்று, தூது ஏவி - (நீ) தூது அனுப்பியும், (அவன் போய்த் திரும்பி வந்து), அவன் மாதை விடல் இல்லை என்றான் - (நான் என்ன சொல்லியும்) அவன் பிராட்டியை விடுகிற விஷயம் இல்லை என்று சொன்னான், (ஆகையால், இது) ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும் - தம்மோடு தண்டம் செய்யும் தன்மையை உடைய பகைவரிடத்தும், மெல்ல கண்ணோடி - நிதானமாய் தாட்சணியம் செலுத்தி, பொறுத்து ஆற்றும் பண்பே தலை - (அவர் குற்றத்தைப்) பொறுத்துக் கொள்ளும் குணமே (அரசர்க்கு) முதன்மையான குணமாகும் (என்பதை விளக்குகின்றது).


கருத்துரை --- பகைவரிடத்தும் தாட்சணியம் செலுத்துதல் பார்வேந்தர் கடனாம்.


விளக்கவுரை --- இராம்பிரான் சுக்கிரீவனைத் தமக்குப் படைத் துணைவனாகக் கொண்டு, சேதுபந்தனம் செய்து, இலங்கையில் சேர்ந்த போது, இராவணன் அபசாரம் செய்தவனாயிருந்தும், அவனுக்குப் புத்தி சொல்ல, மெத்தப் பொறுமையோடு, அங்கதனைத் தூது அனுப்பினார். அவன் போய் எத்தனையோ திறமான அறிவூட்டியும், "எத்தனைதான் தேய்த்தாலும் பித்தளைக்கு தன்னிறம் இயற்கை" என்றபடி, அவன் ஒரே பிடிவாதமாய்ப் பிராட்டியை விடேன் என்று சொல்லிவிட்டான். அதை அங்கதன் திரும்பி வந்து உரைக்கக் கேட்ட பிறகே, தாசரதி இராவணனோடு போர் புரிகையிஙல், முதற்போரில் இராவணன் சோர்வு பட்டமை அறிந்து, நிராயுதபாணியாக நிற்கும் அவனைக் கொல்லாமல், “இன்று போய் நாளை வா” என்று சொல்லி அவனை அனுப்பினார். பின்னர் நிகழ்ந்த போரில் அவனைக் கொன்றார். ஒறுத்தாற்றும் பண்பினான் ஆகிய இராவணனிடத்தும் இராம்பிரானுக்கு கண்ணோடிப் பொறுத்து ஆற்றும் பண்பு இருந்தமை சால வியக்கற்பாலது.


058. கண்ணோட்டம் - 08. கருமம் சிதையாமல்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "முறைசெய்தலாகிய தமது தொழில் சிதையாமல் கண்ணோட்டம் செய்ய வல்லவர்க்கு, இந்த உலகம் உரிமை உடையதாகும்" என்கின்றார் நாயனார்.

நடுநிலையாக நின்று, நட்பினர், பகைவர், அயலார் என்று எண்ணாது, குற்றம் செய்தவர்களைத் தண்டித்தும், குணம் செய்தவர்களைக் காத்தும் வரவேண்டும். அவ்விதம் செய்யாது, கண்ணோட்டம் வைத்து ஒருவனுக்கு அளவு கடந்த நன்மைகளைச் செய்துவிட்டாலும், குற்றத்திற்காகத் தண்டிக்காவிட்டாலும், "இவன் நடுவுநிலைமை அற்றவன்" என்று, பிறர் அவனை விட்டு நீங்குவார். அவ்வாறு இல்லாமல், கருணை காட்டவேண்டிய இடத்துக் கருணை காட்டியும், தண்டிக்க வேண்டிய இடத்து தக்க வகையில் தண்டித்தும் ஒழுகுதல் வேண்டும்.


இதற்குத் திருக்குறள்...

கருமம் சிதையாமல் கண் ஓட வல்லார்க்கு,

உரிமை உடைத்து இவ் உலகு.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு --- முறை செய்தல் ஆகிய தன் தொழில் அழியாமல் கண்ணோட வல்ல வேந்தர்க்கு; 

உரிமை உடைத்து இவ்வுலகு --- உரித்தாம் தன்மை உடைத்து இவ்வுலகம்.

(தம்மொடு பயின்றார் பிறரை இடுக்கண் செய்துழி அவரைக் கண்ணோடி ஒறாதார்க்கு முறை சிதைத்தல், மேல் 'ஓர்ந்து கண்ணோடாது' (குறள் 541 )என்ற முறை இலக்கணத்தாலும் பெற்றாம். முறை சிதைய வரும் வழிக் கண்ணோடாமையும், வாராவழிக் கண்ணோடலும் ஒருவற்கு இயல்பாதல் அருமையின், 'கண்ணோட வல்லார்க்கு' என்றும், அவ்வியல்பு உடையார்க்கு உலகம் நெடுங்காலம் சேறலின், 'உரிமை உடைத்து' என்றும் கூறினார். இதனான் கண்ணோடுமாறு கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“வாணன் இருகரமும் வைத்துப் பணிகருதி

நாதன் அறுப்பித்தரும் நன்னயத்தைப் போலக்

கருமம் சிதையாமல் கண் ஓட வல்லார்க்கு,

உரிமை உடைத்து இவ் உலகு.”


இதன் பொருளி ---


மகாபலி சக்கரவர்த்தியின் புதல்வனாகிய வாணன் என்னும் வாணாசுரன் சிவபெருமானைப் பூசித்து மிகுந்த வலிமை பெற்று, அவரைத் தன் கோட்டைக்குக் காவலாக வைத்து, வலிமையில் தனக்கு ஒப்பார் எவருமில்லை என்று செருக்குற்று இருந்தான். ஒருசமயம் தன் மகள் உஷையின் காரணமாகக் கண்ணபிரானுடைய பேரன் அநிருத்தன் வாணன் ஊர்க்குக் கொண்டு வரப்பெற, அவன் வாணனால் சிறை வைக்கப்பட்டான். இதனை அறிந்த கண்ணபிரான், வாணன் ஊர் வந்து, சிவபிரானை வழிபட்டு உள்ளே நுழைந்து வாணனுடைய ஆயிரம் கைகளுள், சிவனைப் பூசித்துவரும் இரண்டினை வைத்து, எஞ்சியவற்றைக் களைந்து மீண்டார். பிறகு வாணன், திருக்கயிலையில் சிவபிரானுக்கு மத்தளம் கொட்டும் பணியைப் பூண்டான் என்பது வரலாறு.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“முப்புரத்தை நீறு ஆக்கி, மூவரையும் காத்தநலம்

செப்ப முடியாதே, சிவசிவா! --- ஒப்பில்

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்துஇவ் உலகு.”


முப்புரம் - மூன்று கோட்டைகள், இரும்பு, வெள்ளி, பொன்னாலாகிய வானத்து இயங்கும் கோட்டைகள்.  சிவபெருமான் அவற்றை நகைத்து எரித்தருளினர். முப்புரங்களையும் எரித்து அழிக்கும் கருமமானது, சிதையாமல்படிக்கு, அவற்றை அழித்து, அங்கே சிவபூசையைக் கைவிடாத மூவரையும் காத்தனர்.


058. கண்ணோட்டம் - 07. கண்ணோட்டம் இல்லவர்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "கண்ணோட்டம் என்பது இல்லாவதர் கண் என்பதும் இல்லாதவர். கண் உடையவர் என்பவர் கண்ணோட்டம் இல்லாமல் இருப்பதும் இல்லை" என்கின்றார் நாயனார்.

கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணிருந்தும் குருடரே ஆவர்.


இதற்குத் திருக்குறள்...

கண்ணோட்டம் இல்லவர் கண் இலர், கண் உடையார்

கண்ணோட்டம் இன்மையும் இல்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

கண்ணோட்டம் இல்லவர் கண் இலர் - கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணுடையரும் அல்லர்; 

கண் உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல் - கண்ணுடையவர் கண்ணோட்டம் இலராதலும் இல்லை.

(கண்ணுடையராயின் காட்சிக்கண்ணே அஃது ஓடும் என்பதுபற்றி, 'கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்' எனக் கூறியபின், அதனை எதிர்மறை முகத்தான் விளக்கினார். உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவை இரண்டு பாட்டானும் கண்ணோடாதாரது இழிபு கூறப்பட்டது.)


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்....


கண்இல் கயவர் கருத்து உணர்ந்து, கைமிக

நண்ணி, அவர்க்கு நலனுடைய செய்பவேல்

எண்ணி இடர்வரும் என்னார், புலிமுகத்து

உண்ணி பறித்து விடல்.        --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


கண்ணில் கயவர் கருத்து உணர்ந்து - கண்ணோட்டம் இல்லாத கீழ்மக்களது எண்ணத்தை அறிந்து, கைமிக நண்ணி அவர்க்கு நலனுடைய செய்பவேல் - செயல் மிக அவரையடைந்து அவர்க்கு வேண்டிய நன்மைகளைச் செய்வாராயின், (அங்ஙனம் செய்தல்) எண்ணி இடர் வரும் என்னார் - துன்பம் வரும் என்பதை ஆராயாதவராகி, புலிமுகத்து உண்ணி பறித்துவிடல் - இரக்கத்தால் புலியினது முகத்தின்கண் உள்ள உண்ணியை எடுத்து விடுதலோடு ஒக்கும்.


கண்ணோட்டம் இல்லாத தீயவர்களுக்கு நன்மை செய்தல் தனக்குக் கேடு தேடிக் கொள்ளுதலாக முடியும். புலிமுகத்து உண்ணி பறிப்பார் எங்ஙனம் பிழையாரோ, அதுபோன்றே தீயவர்களுக்கு உதவி செய்வாரும் பிழைத்தல் இலர்.


'புலிமுகத்து உண்ணி பறித்துவிடல்' என்பது பழமொழி.


058. கண்ணோட்டம் - 06. மண்ணோடு இயைந்த

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "கண்ணிருந்தும், கண்ணோடு பொருந்தி இருக்க வேண்டியதாகிய கண்ணோட்டம் இல்லாவதர், மண்ணோடு பொருந்தி இருக்கின்ற மரத்தைப் போன்றவர்" என்கின்றார் நாயனார்.

மரத்திற்குக் கணுக்கள் இருந்தாலும், காணக் கூடிய கண்கள் இல்லை. கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணிருந்தும் குருடர் ஆவார். உள்ளம் உருகாத கண்கள் மரத்திற்குச் சமம்.


இதற்குத் திருக்குறள்...

 மண்ணொடு இயைந்த மரத்து அனையர், கண்ணொடு

இயைந்து கண்ணோடா தவர்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

கண்ணொடு இயைந்து கண்ணோடாதவர் --- ஓடுதற்கு உரிய கண்ணோடு பொருந்தி வைத்து அஃது ஓடாதவர்; 

மண்ணொடு இயைந்த மரத்து அனையர் --- இயங்கா நின்றாராயினும் மண்ணொடு பொருந்தி நிற்கின்ற மரத்தினை ஒப்பர்.

('ஓடாதவர்' என்புழிச் சினைவினை முதல்மேல் நின்றது. மரமும் கண்ணோடு இயைந்து கண்ணோடாமையின். இது தொழில் உவமம். அதனைச் சுதை மண்ணோடு கூடிய மரப்பாவை என்று உரைப்பாரும் உளர். அஃது உரையன்மை, காணப்படும் கண்ணானன்றி, அதனுள் மறைந்து நிற்கின்ற ஒருசார் உள்ளீட்டால் கூறினமையானும், மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று, இரக்கண்டாய் (புறத்திரட்டு 1555 முத்தொள் ) என்பதனானும் அறிக.) 


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்....


"வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்

    பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்

பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மே லாகப்

    பதைத்துருகும் அவர்நிற்க என்னை யாண்டாய்க்

குள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய்

    உருகாதால் உடம்பெல்லாங் கண்ணாய் அண்ணா

வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்

    கண்ணிணையு மரமாம்தீ வினையி னேற்கே."    ---  திருவாசகம்.


இதன் பொருள் ---


கங்கை நீர்ப் பெருக்குத் தங்கிய, விரிந்த சடையினை யுடையாய்! எருதினை ஊர்தியாக உடையாய்! தேவர் தலைவனே! என்று அன்பர் சொல்லக் கேட்டவுடன், ஆர்வம் மிகுந்த மனத்தினராய், பள்ளத்தில் விழுகின்ற மிகுந்த நீர் போல, மேல் கீழாக விழுந்து, வணங்கி நெஞ்சம் துடிக்கும் அடியார் பலர் நிற்க, என்னைப் பெருங்கருணையால் ஆண்டு கொண்ட உன் பொருட்டு என் உள்ளங்கால் முதல் உச்சி வரையுள்ள உடம்பின் பகுதிமுற்றும், மனத்தின் இயல்புடையதாய் உருகாது, உடம்பு எல்லாம், கண்ணின் இயல்புடையதாய் நீர்ப்பெருக்குப் பாயவில்லை; ஆகையால் கொடிய வினையை உடையேனுக்கு நெஞ்சானது கல்லினால் அமைந்ததே ஆம். இருகண்களும் மரத்தினால் ஆனவையாம்.



"தன்னெஞ்சம் நினைப்பு ஒழியாத அறிவிலிநான்

ஞானமெ் எனும் தன்மை பேச

உன் நெஞ்சம் மகிழ்ந்து, ஒருசொல் உரைத்தனையே!

     அதனைஉன்னி உருகேன், ஐயா!

வன்நெஞ்சோ? இரங்காத மர நெஞ்சோ?

     இருப்பு நெஞ்சோ? வைரம் ஆன

கல் நெஞ்சோ? அலது மண்ணாங் கட்டிநெஞ்சோ?

    எனதுநெஞ்சம் கருதில் தானே. " --- தாயுமானவர்.


இதன் பொருள் ---


"ஒரு பொழுதும் வாழ்வதறியார் கருதுப கோடியும் அல்ல பல" என்பது போன்று எளியேன் மனமானது (தான் முன் நினைந்த பிறவிக்கு வித்தாகிய பயனில்லாத) தன் எண்ணங்களை நீக்காத நிலையிலுள்ள அறியாமையை அணிகலமாகக் கொண்டவன் அடியேன். திருவடி உணர்வு எனப்படும் மெய்யுணர்வின் தன்மையினைப் பேசுமாறு தேவரீர் திருவுள்ளம் மகிழ்ந்து ஒருசொல் மொழிந்தருளினீர். அத் திருமொழியினை இடையறாது எண்ணி எண்ணி உள்ளம் உருகேன். ஐயோ! எளியேன் மனமானது கருதுமிடத்து இரக்கம் வாய்க்கப்பெறாத மரநெஞ்சமோ? இரும்பாலாகிய வன்னெஞ்சமோ? வைரம் பொருந்திய கல்நெஞ்சமோ? அல்லது ஒன்றுக்கும் பற்றாத மண்ணாங்கட்டி நெஞ்சமோ? இன்னது என்று அறியேன்.


 


058. கண்ணோட்டம் - 05. கண்ணுக்கு அணிகலம்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "கண்ணுக்குப் பூணும் நகை போன்றது கண்ணோட்டம். அது இல்லாவிட்டால், அந்தக் கண் ஒரு புண் என்று உணரப்பட வேண்டும்" என்கின்றார் நாயனார்.

கண்ணாகத் தோன்றினாலும், புலனைப் பற்றுதலாலும், நோய்களாலும் தன்னை உடையவனுக்குத் துயர் விளைத்தல் பற்றி, "புண் என்று உரணப்படும்" என்றார்.

இதற்குத் திருக்குறள்...

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம், அஃது இன்றேல்

புண் என்று உணரப்படும்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் ---- ஒருவன் கண்ணிற்கு அணியும் கலமாவது கண்ணோட்டம்; 

அஃது இன்றேல் புண் என்று உணரப்படும் --- அக் கலம் இல்லையாயின் அஃது அறிவு உடையரால் புண் என்று அறியப்படும்.

(வேறு அணிகலம் இன்மையின் 'கண்ணிற்கு அணிகலம்' என்றும், கண்ணாய்த் தோன்றினும் நோய்களானும் புலன் பற்றலானும் துயர் விளைத்தல் நோக்கி, 'புண் என்று உணரப்படும்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் ஓடாது நின்ற கண்ணின் குற்றம் கூறப்பட்டது.)



பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


“தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால்

கண் நீர்மை மாறாக் கருணையால் --- பெண்நீர்மை

கற்புஅழியா ஆற்றால், கடல்சூழ்ந்த வையகத்துள்

அற்புதமாம் என்றே அறி.” ---  நல்வழி.


இதன் பொருள் ---


தண்ணீர் நில நலத்தால் - தண்ணீரானது நிலத்தினது நன்மையினாலும், தக்கோர் குணம் கொடையால் - நல்லோருடைய குணமானது ஈகையினாலும். கண் நீர்மை மாறாக் கருணையால் - கண்களுடைய குணமானது நீங்காத அருளினாலும், பெண் நீர்மை கற்பு அழியா ஆற்றால் - பெண்களுடைய குணமானது கற்புநிலை கெடாத வழியினாலும், கடல் சூழ்ந்த வையகத்துள் - கடல் சூழ்ந்த பூமியினிடத்து, அற்புதம் ஆம் - வியக்கத்தக்க மேன்மை உடையன ஆகும், என்று அறி - என்று நீ அறிவாயாக.


நில நன்மையினாலே தண்ணீருக்கும், கொடையினாலே நல்லோருக்கும், அருளினாலே கண்களுக்கும், கற்பினாலே பெண்களுக்கும் பெருமை உண்டாகும்.



“கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம், காமுற்ற

பெண்ணுக்கு அணிகலம் நாண்உடைமை, --- நண்ணும்

மறுமைக்கு அணிகலம் கல்வி, இம் மூன்றும்

குறி உடையோர் கண்ணே உள.” --- திரிகடுகம்.


இதன் பொருள் ---


கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் - கண்களுக்கு, அணியத் தக்க பூணாவது கண்ணோடுதல்; காமுற்ற பெண்ணுக்கு அணிகலம் நாண் உடைமை - கணவனால் விரும்பப்பட்ட குலமகளுக்கு அணிகலனாவது நாணம் உடையவளாயிருத்தல்; நண்ணும் மறுமைக்கு அணிகலம் கல்வி - உயிருக்கு வந்த பொருந்துகின்ற மறுப்பிறப்புக்கு அணிகலனாவது கல்வி அறிவு; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், குறி உடையார் கண்ணே உள - ஆராயும் இயல்புடையாரிடத்தே உண்டுள.)


கண்ணோட்டத்தால் கண்ணும், நாணத்தால் பெண்ணும், கல்வியால் மறுமையும் அழகு பெறும் என்பது. கண்ணோட்டமாவது தன்னோடு பழகினவர் சொன்னவற்றை மறுக்க மாட்டாமை. அது அவர்மேல் கண் சென்ற பின்பே உண்டாவது பற்றி. கண்ணோட்டம் காரண ஆகுபெயர். நாணம் - பெண்கட்குரிய நாற்குணங்களில் முதன்மையானது. மற்றவை மடம் அச்சம் பயிர்ப்பு என்பன.  சிற்றுயிர்க்கு உற்ற துணையாகிய கல்வி ஒருவனுக்கு இம்மையில் நன்மையைச் செய்து மறுமையிலும் இன்பம் தருதலால் மறுமைக்கு அணிகலம் என்றார்.


“கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை,

எண்வனப்பு இத்துணையாம் என்றுஉரைத்தல் - பண்வனப்புக்

கேட்டார்நன்று என்றல், கிளர்வேந்தன் தன்நாடு

வாட்டான்நன்று என்றல் வனப்பு.” --- சிறுபஞ்சமூலம்.


இதன் பொருள் --- 


கண் வனப்பு கண்ணோட்டம் - கண்ணுக்கு அழகாவது பிறர்மேல் கண்ணோடுதல் ஆகும்; கால் வனப்பு செல்லாமை - கால்களுக்கு அழகாவது பிறரிடத்தில் இரக்கப் போகாமை ஆகும்;

எண் வனப்பு இத் துணை ஆம் என்று உரைத்தல் - ஆராய்ச்சிக்கு அழகாவது பொருளை அறுதியிட்டு முடிவு செய்தல் ஆகும்; பண் வனப்பு கேட்டார் நன்று என்றல் - இசைக்கு அழகாவது அதனைக் கேட்டவர்கள் இது நல்லது என்று புகழ்ந்து உரைத்தல் ஆகும்; கிளர் வேந்தன் வனப்பு, தன் நாடு வாட்டான் என்றல் - புகழினால் விளங்குகின்ற அரசனுக்கு அழகாவது, தனது நாட்டிலுள்ள குடிகளை, இவன்) வருத்தான், இவனுடைய ஆட்சி நல்லது, என்று உலகத்தவர் அவனைப் புகழ்ந்து கூறுதல் ஆகும்.


“முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்

தொல்லை அளித்தாரைக் கேட்டு அறிதும், - சொல்லின்

நெறிமடல் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப!

அறிமடமும் சான்றோர்க்(கு) அணி.”  --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


நெறி மடல் பூந்தாழை நீடு நீர் சேர்ப்ப - செறிந்த மடல்களையுடைய அழகிய தாழைகள் பொருந்திய கடல் நாடனே!, முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை அளித்தாரை கேட்டறிதும் - காட்டிற் படர்ந்திருந்த முல்லைக் கொடிக்குத் தேரையும், வாடையால் வாடி நின்ற மயிலுக்குத் தனது போர்வையையும் முன்னாளில் கொடுத்தவர்களைக் கேள்வி வாயிலாக அறிந்தோம். சொல்லின் - ஆராய்ந்து சொல்லுமிடத்து, அறிமடமும் சான்றோர்க்கு அணி - அறிமடமும் சான்றோர்க்கு அழகேயாம்.


அறிந்தும் அறியாது போன்று செயல்களைச் செய்தல் சான்றோர்க்கு அழகினைத் தருவதாம்.


“பண்உக்கு வாம் பரித் தேர் ஆதபனும், 

பணிந்து பசுபதியை நோக்கி

மண்ணுக்குத் தவம் புரியும் தனஞ்சயற்குக் 

கோடையினும், மதியம் போன்றான்;

எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் 

கண் ஆவான் இவனே அன்றோ?

'கண்ணுக்குப் புனை மணிப் பூண் கண்ணோட்டம்' 

என்பது எல்லாம் கருணை அன்றோ?”    --- வில்லிபாரதம், அருச்சுனன் தவம்.


இதன் பொருள் ---


பண் உக்கு வாம் பரித் தேர் ஆதவனும் – கல்லணை அறுந்து விழும்படி தாவி ஓடுகின்ற குதிரைகள் பூட்டிய இரதத்தை உடைய சூரியனும், பசுபதியை நோக்கிப் பணிந்து - பரமசிவனைக் குறித்து வணங்கி, மண்ணுக்குத் தவம் புரியும் தனஞ்செயற்கு - (பாசுபதாஸ்திரம் பெற்றுப் பகைவரை வென்று) இராச்சியத்தைப் பெறும்பொருட்டுத் தவம் செய்கின்ற, அருச்சுனனுக்கு, கோடையினும் மதியம் போன்றான் - வெயில் காலத்திலும் சந்திரனை ஒத்துக் குளிர்ந்திருந்தான்; (ஏனெனில்), எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண் ஆவான் இவனே அன்றோ - (பதினான்கு என்கிற) கணக்குக்கு வருகின்ற உலகங்கள் எல்லாவற்றிற்கும், கண்ணைப் போன்றவன் இச் சூரியனே ஆவான் அல்லவா? கண்ணுக்குப் புனை மணிப் பூண் என்பது எலாம் – கண்ணுக்கு அணிதற்குரிய அழகிய ஆபரணம் என்று சொல்லுவது எல்லாம், கண்ணோட்டம் கருணை அன்றோ --- (பிறர்மேல்) கண் சென்றபோது உண்டாகின்ற, கருணையே அல்லவா?


    "கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்" என்றபடி கண்ணுக்கு அழகு செய்வது கருணை என்பது நன்கு அறியப்பட்ட நிலை என்பதால், உலகம் அனைத்துக்கும் கண்ணாக இருக்கின்ற சூரியன் மிகக் கருணை உடையவனாகத் தவம் செய்யும் அருச்சுனனைக் கோடைக் காலத்திலும் சுடாமல் இருந்தான் என்றார். அருச்சுனன் கடும் கோடை வெப்பத்தை அலட்சியம் செய்து தவம் புரிந்தான் என்பது இவ்வாறு சொல்லப்பட்டது.  சூரியனுக்கு "ஜகச்சட்சு" (ஜகம் – உலகம். சட்சு --- கண்) என்று ஒருபெயர் வடமொழியில் உண்டு. எனவே, "கண் ஆவான் இவன்" என்று சூரியனைக் குறித்தார் கவிச்சக்கரவர்த்தி.



058. கண்ணோட்டம் - 04. உளபோல் முகத்து

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "தகுந்த அளவில் கண்ணோட்டம் இல்லாத கண்களானவை, பார்ப்பவர்க்கு முகத்தில் உள்ளது போல் தோன்றுமே அல்லாமல், வேறு என்ன பயனைச் செய்யும்?" என்கின்றார் நாயனார்.

"எவன் செய்யும்" என்றதால், ஒரு பயனையும் செய்யாது என்பது பெறப்படும்.

இதற்குத் திருக்குறள்...

“உளபோல் முகத்து எவன் செய்யும், அளவினால்

கண்ணோட்டம் இல்லாத கண்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

முகத்து உளபோல் எவன் செய்யும் --- கண்டார்க்கு, முகத்தின்கண் உளபோலத் தோன்றல் அல்லது வேறு என்ன பயனைச் செய்யும்; 

அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண் --- அளவிறவாத கண்ணோடுதலை உடைய அல்லாத கண்கள்.

('தோன்றல்', 'அல்லது' என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. கழிகண்ணோட்டத்தின் நீக்குதற்கு 'அளவினான்' என்றார். 'ஒரு பயனையும் செய்யா' என்பது குறிப்பெச்சம்.)



பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


“தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால்

கண் நீர்மை மாறாக் கருணையால் --- பெண்நீர்மை

கற்புஅழியா ஆற்றால், கடல்சூழ்ந்த வையகத்துள்

அற்புதமாம் என்றே அறி.” ---  நல்வழி.


இதன் பொருள் ---


தண்ணீர் நில நலத்தால் - தண்ணீரானது நிலத்தினது நன்மையினாலும், தக்கோர் குணம் கொடையால் - நல்லோருடைய குணமானது ஈகையினாலும். கண் நீர்மை மாறாக் கருணையால் - கண்களுடைய குணமானது நீங்காத அருளினாலும், பெண் நீர்மை கற்பு அழியா ஆற்றால் - பெண்களுடைய குணமானது கற்புநிலை கெடாத வழியினாலும், கடல் சூழ்ந்த வையகத்துள் - கடல் சூழ்ந்த பூமியினிடத்து, அற்புதம் ஆம் - வியக்கத்தக்க மேன்மை உடையன ஆகும், என்று அறி - என்று நீ அறிவாயாக.

நில நன்மையினாலே தண்ணீருக்கும், கொடையினாலே நல்லோருக்கும், அருளினாலே கண்களுக்கும், கற்பினாலே பெண்களுக்கும் பெருமை உண்டாகும்.


“கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம், காமுற்ற

பெண்ணுக்கு அணிகலம் நாண்உடைமை, --- நண்ணும்

மறுமைக்கு அணிகலம் கல்வி, இம் மூன்றும்

குறி உடையோர் கண்ணே உள.” --- திரிகடுகம்.


இதன் பொருள் ---


கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் - கண்களுக்கு, அணியத் தக்க பூணாவது கண்ணோடுதல்; காமுற்ற பெண்ணுக்கு அணிகலம் நாண் உடைமை - கணவனால் விரும்பப்பட்ட குலமகளுக்கு அணிகலனாவது நாணம் உடையவளாயிருத்தல்; நண்ணும் மறுமைக்கு அணிகலம் கல்வி - உயிருக்கு வந்த பொருந்துகின்ற மறுப்பிறப்புக்கு அணிகலனாவது கல்வி அறிவு; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், குறி உடையார் கண்ணே உள - ஆராயும் இயல்புடையாரிடத்தே உண்டு.)

கண்ணோட்டத்தால் கண்ணும், நாணத்தால் பெண்ணும், கல்வியால் மறுமையும் அழகு பெறும் என்பது.

கண்ணோட்டமாவது தன்னோடு பழகினவர் சொன்னவற்றை மறுக்க மாட்டாமை;. அஃது அவர்மேல் கண் சென்ற பின்பே உண்டாவது பற்றி கண்ணோட்டம் என்று காரண ஆகுபெயர் ஆயிற்று. நாணம் - பெண்களுக்குரிய நாற்குணங்களில் முதன்மையானது. மற்றவை மடம் அச்சம் பயிர்ப்பு என்பன.  சிற்றுயிர்க்கு உற்ற துணையாகிய கல்வி ஒருவனுக்கு இம்மையில் நன்மையைச் செய்து மறுமையிலும் இன்பம் தருதலால் மறுமைக்கு அணிகலம் என்றார்.


“பண்உக்கு வாம் பரித் தேர் ஆதபனும், 

பணிந்து பசுபதியை நோக்கி

மண்ணுக்குத் தவம் புரியும் தனஞ்சயற்குக் 

கோடையினும், மதியம் போன்றான்;

எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் 

கண் ஆவான் இவனே அன்றோ?

'கண்ணுக்குப் புனை மணிப் பூண் கண்ணோட்டம்' 

என்பது எல்லாம் கருணை அன்றோ?”   --- வில்லிபாரதம், அருச்சுனன் தவம்.

இதன் பொருள் ---

பண் உக்கு வாம் பரி ஆதவனும் – கல்லணை அறுந்து விழும்படி தாவி ஓடுகின்ற குதிரைகள் பூட்டிய இரதத்தை உடைய சூரியனும், பசுபதியை நோக்கிப் பணிந்து - பரமசிவனைக் குறித்து வணங்கி, மண்ணுக்குத் தவம் புரியும் தனஞ்செயற்கு - (பாசுபதாஸ்திரம் பெற்றுப் பகைவரை வென்று) இராச்சியத்தைப் பெறும்பொருட்டுத் தவம் செய்கின்ற, அருச்சுனனுக்கு, கோடையினும் மதியம் போன்றான் - வெயில் காலத்திலும் சந்திரனை ஒத்துக் குளிர்ந்திருந்தான்; (ஏனெனில்), எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண் ஆவான் இவனே அன்றோ - (பதினான்கு என்கிற) கணக்குக்கு வருகின்ற உலகங்கள் எல்லாவற்றிற்கும், கண்ணைப் போன்றவன் இச் சூரியனே ஆவான் அல்லவா? கண்ணுக்குப் புனை மணிப் பூண் என்பது எலாம் –கண்ணுக்கு அணிதற்குரிய அழகிய ஆபரணம் என்று சொல்லுவது எல்லாம், கண்ணோட்டம் கருணை அன்றோ --- (பிறர்மேல்) கண் சென்றபோது உண்டாகின்ற, கருணையே அல்லவா?

    "கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்" என்றபடி கண்ணுக்கு அழகு செய்வது கருணை என்பது நன்கு அறியப்பட்ட நிலை (பிரசித்தம்) என்பதால், உலகம் அனைத்துக்கும் கண்ணாக இருக்கின்ற சூரியன் மிகக் கருணை உடையவனாகத் தவம் செய்யும் அருச்சுனனைக் கோடைக் காலத்திலும் சுடாமல் இருந்தான் என்றார். இவ்வருச்சுனன் கடும் கோடை வெப்பத்தை அலட்சியம் செய்து தவம் புரிந்தான் என்பது இவ்வாறு சொல்லப்பட்டது.  சூரியனுக்கு "ஜகச்சட்சு" (ஜகம் – உலகம். சட்சு --- கண்) என்று ஒருபெயர் வடமொழியில் உண்டு. எனவே, "கண் ஆவான் இவன்" என்று சூரியனைக் குறித்தார் கவிச்சக்கரவர்த்தி.


058. கண்ணோட்டம் - 03. பண் என்னாம்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "இசையானது பாடல் தொழிலோடு பொருந்துவது இல்லையாயின், என்ன பயனைச் செய்யும்? அதுபோல, கண்ணானது கண்ணோட்டம் இல்லாதபோது என்ன பயனைச் செய்யும்?" என்கின்றார் நாயனார்.

இசையானது கேட்போர் மகிழும்வண்ணம் பாடப்படுதல் வேண்டும். பொருத்தம் இல்லாத பண் ஒன்றினால் பாடுகின்ற பாடல் பாடுகின்றவருக்கும் கேட்போர்க்கும் பயன்படாது. 

அதுபோல, கண் இருந்தால், கண்ணோட்டம் இருக்கவேண்டும். அது இல்லையானால், கண்ணால் பயன் இல்லை.


இதற்குத் திருக்குறள்... 

"பண் என்ஆம் பாடற்கு இயைபு இன்றேல்,  கண் என்ஆம்

கண்ணோட்டம் இல்லாத கண்."


இதற்குப் பரிமேலழகர் உரை ---

பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல் --- பண் என்ன பயத்ததாம் பாடல் தொழிலோடு பொருத்தமின்றாயின்; 

கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் --- அதுபோலக் கண் என்ன பயத்ததாம் கண்ணோட்டமில்லாத இடத்து.

('பண்', 'கண்' என்பன சாதிப்பெயர், பண்களாவன: பாலையாழ் முதலிய நூற்றுமூன்று. பாடல் தொழில்களாவன: யாழின்கண் வார்தல் முதலிய எட்டும், பண்ணல் முதலிய எட்டும், மிடற்றின்கண் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம் என்னும் ஐந்தும், பெருவண்ணம், இடை வண்ணம், வனப்பு வண்ணம் முதலிய வண்ணங்கள் எழுபத்தாறுமாம்.. இவற்றோடு இயையாத வழிப் பண்ணால் பயன் இல்லாதவாறு போலக் கண்ணோட்டத்து இயையாத வழிக் கண்ணால் பயனில்லை என்பதாம். கண் சென்ற வழி நிகழ்தல் பற்றி அதனை இடமாக்கினார். இறுதிக்கண் 'கண்' என்பதனைக் 'கண்ணகல் ஞாலம்' (திரிகடுகம் 1) என்புழிப் போலக் கொள்க.)



பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை,

எண்வனப்பு இத்துணையாம் என்றுஉரைத்தல் - பண்வனப்புக்

கேட்டார்நன்று என்றல், கிளர்வேந்தன் தன்நாடு

வாட்டான்நன்று என்றல் வனப்பு. --- சிறுபஞ்சமூலம்.

இதன் பொருள் --- 

கண் வனப்பு கண்ணோட்டம் - கண்ணுக்கு அழகாவது பிறர்மேற் கண்ணோடுதலாம்; கால் வனப்பு செல்லாமை - கால்களுக்கு அழகாவது பிறரிடத்தில் இரக்கப் போகாமையாம்; எண் வனப்பு இத் துணை ஆம் என்று உரைத்தல் - ஆராய்ச்சிக்கு அழகாவது பொருளை அறுதியிட்டு முடிவு செய்தலாம்; பண் வனப்பு கேட்டார் நன்று என்றல் - இசைக்கு அழகாவது அதனைக் கேட்டவர்கள் இது நல்லது என்று புகழ்ந்து உரைத்தலாம்; கிளர் வேந்தன் வனப்பு, தன் நாடு வாட்டான் என்றல் - புகழினால் விளங்குகின்ற அரசனுக்கு அழகாவது, தனது நாட்டிலுள்ள குடிகளை, இவன்) வருத்தான், இவனுடைய ஆட்சி நல்லது, என்று உலகத்தவர் அவனைப் புகழ்ந்து கூறுதலாம்.



பண் அமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிது இன்னா;

எண் இறியா மாந்தர் ஒழுக்குநாட் கூற்று இன்னா;

மண்ணில் முழவின் ஒலி இன்னா; ஆங்கு இன்னா

தண்மை யிலாளர் பகை. --- இன்னா நாற்பது.

இதன் பொருள் ---

பண் அமையா யாழின் கீழ் பாடல் பெரிது இன்னா - இசை கூடாத யாழின் கீழிருந்து பாடுதல் மிகவும் துன்பமாம்; எண் அறியா மாந்தர் ஒழுக்கு நாள் கூற்று இன்னா - குறி நூல் (சோதிடம்) அறியாத மாக்கள் ஒழுகுதற்குரிய நாள் கூறுதல் துன்பமாம்; மண் இல் முழவின் ஒலி இன்னா - மார்ச்சனை இல்லாத மத்தளத்தினது ஓசை துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, தண்மை இலாளர் பகை இன்னா - தண்ணிய குணம் இல்லாதவரது பகையானது துன்பமாம். 


058. கண்ணோட்டம் - 02. கண்ணோட்டத்து உள்ளது

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "உலக நடையானது கண்ணோட்டத்தில் உள்ளது. அது இல்லாதவர் உயிர்வாழ்ந்து கொண்டு இருத்தல் நிலத்திற்குச் சுமை" என்கின்றார் நாயனார்.

உலகநடை என்பது, உயிர்களுக்கு உபகாரம் செய்தல், காப்பாற்றுதல், குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளுதல் முதலானவை. நடை என்பது ஒழுக்கம் ஆகும். உலகநடை என்பது உலக ஒழுக்கம். 

கண்ணோட்டம் இல்லாதவர் தனக்கும் பிறர்க்கும் பயன்படார் என்பது பற்றி, "நிலக்குப் பொறை" என்றார்.


இதற்குத் திருக்குறள்...

கண்ணோட்டத்து உள்ளது உலகுஇயல், அஃது இலார்

உண்மை நிலக்குப் பொறை.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

உலகியல் கண்ணோட்டத்து உள்ளது --- உலகநடை கண்ணோட்டத்தின் கண்ணே நிகழ்வது; 

அஃது இலார் உண்மை நிலக்குப் பொறை --- ஆகலான், அக்கண்ணோட்டம் இல்லாதார் உளராதல் இந்நிலத்திற்குப் பாரமாதற்கே, பிறிதொன்றற்கு அன்று.

(உலகநடையாவது: ஒப்புரவு செய்தல், புறந்தருதல், பிழைத்தன பொறுத்தல் என்ற இவை முதலாயின. அவை நிகழாமையால் தமக்கும் பிறர்க்கும் பயன்படார் என்பதுபற்றி, 'நிலக்குப் பொறை' என்றார். 'அதற்கு' என்பது சொல்லெச்சம். இவை இரண்டு பாட்டானும் கண்ணோட்டத்தது சிறப்புக் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்..


“ஓவில்உழ வன்வேண்ட உக்கிரனார் இந்திரன்கொண்

மூவைவிடு வித்தார், முருகேசா! --- தாவல்இலா

கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதுஇலார்

உண்மை நிலக்குப் பொறை.”


இதன் பொருள் ---


முருகேசா - முருகப் பெருமானே, ஓவில் உழவன் வேண்ட - ஒழிதலில்லாத வேளாளன் வேண்டிக் கொள்ள, உக்கிரனார் - உக்கிர பாண்டியன், இந்திரன் கொண்மூவை விடுவித்தார் - இந்திரனுடைய மேகங்களைச் சிறையில் இருந்து விடுவித்தார்.  தாவல் இலா - அழிதல் இல்லாத, உலகியல் - உலக நடையானது, கண்ணோட்டத்து உள்ளது - அருளினிடத்திலே உள்ளதாம். அஃது இலார் - கண்ணோட்டமாகிய அருள் இல்லாதவர்கள், உண்மை - நிலவுலகில் இருத்தல், நிலக்குப் பொறை - நிலத்திற்குச் சுமையாகும்.

வேளாளன் வேண்டிக் கொள்ள உக்கிர பாண்டியன் இந்திரனுடைய முகில்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான். உலகநடையானது அருளுடைமையோடு விளங்குதலில்தான் உள்ளது. அருளில்லாதவர்கள் உலகத்திலே இருப்பது நிலத்துக்குச் சுமையாகும் என்பதாம்.

                          உக்கிரபாண்டியன் கதை

ஒரு காலத்திலே சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தர்களுடைய நாட்டிலே மழையில்லாமல் போய்விட்டது. அகத்தியருடைய அறிவுரைப்படி மூவரும் இந்திரனுடைய அவைக்குச் சென்றார்கள். சேரனும் சோழனும் இந்திரன் காட்டிய இருக்கைகளிலே இருந்தார்கள். உக்கிரபாண்டியன் மட்டும் இந்திரனுடைய இருக்கையிலே ஏறி இந்திரனோடு ஒன்றாக இருந்தான். இதனைப் பார்த்த இந்திரனுக்குச் சினம் உண்டாகியது. சேர சோழர்களுடைய செய்தியை வினவி அவர்களுடைய நாடுகளிலே மட்டும் மழை பெய்யச் செய்தான். இருவரையும் அனுப்பிய பிறகு உக்கிரபாண்டியனுடைய செருக்கை அடக்கவேண்டும் என்று எண்ணினான். இந்திரன் பாண்டியனுக்குச் சிறப்புச் செய்வான்போலத் தூக்க முடியாத மாலை ஒன்றைக் கொண்டு வரச் செய்து, அதனைப் பாண்டியனுடைய கழுத்திலே போட்டான். பாண்டியன் அம்மாலையை மலர்மாலை போலத் தாங்கிக் கொண்டு இந்திரனை மதியாமல் இருந்தான். பிறகு தன்னுடைய நாட்டை அடைந்தான். ஒருநாள் இந்திரனுடைய புட்கலாவருத்தம் முதலிய நான்கு மேகங்கள் பொதிய மலைச் சாரலில் மேயக் கண்டு அவைகளைச் சிறையிலிட்டான். இதனை உணர்ந்து இந்திரன் உக்கிரபாண்டியனை எதிர்த்துப் போரிடத் தொடங்கினான். போரில் பாண்டியனை வெல்ல முடியவில்லை. அதனால் தோற்றோடினான். பிறகு "உன்னுடைய நாட்டிலேயும் மழை பெய்யச் செய்கிறேன், அன்புகூர்ந்து மேகங்களைச் சிறை விடுக" என்று செய்தியனுப்பினான். அச்சமயத்தில் வேளாளன் ஒருவன் இந்திரன் பொருட்டுப் பிணை நின்று வேண்டிக் கொண்டான்.  உக்கிரபாண்டியனும் அருள் கொண்டு முகில்களைச் சிறையிலிருந்து விட்டுவிட்டான். இதன் விரிவைத் திருவிளையாடல் புராணத்தில் காணலாம்.


058. கண்ணோட்டம் - 01. கண்ணோட்டம் என்னும்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 58 -- கண்ணோட்டம்


அதாவது, தன்னோடு பழகியவர் சொல்லுவதை மறுக்கமாட்டாமல், குற்றம் குறைகளை மறந்து, அவர்க்கு இணங்கச் செய்வது. பழகியவர்மீது கண் சென்றபோது உண்டாவதால், "கண்ணோட்டம்" எனப்பட்டது. இது முகம் கொடுத்தல் என்றும், தாட்சண்ணியம் என்றும் சொல்லப்படும்.

இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், “கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிக்க பேரழகு மக்களிடம் இருத்தலால், இந்த நிலவுலகமானது தொன்றுதொட்டு நிலைபெற்று இயங்கி வருகின்றது" என்கின்றார் நாயனார்.

குடிமக்கள் அஞ்சும் செயல்களை அரசன் புரிவானாயின், குடிமக்கள், புலியைக் கண்ட மான் கூட்டம் போல, அரசனை விட்டு விலகிப் போவார்கள். அதனால் உலகியல் சரிவர நடக்காது. அதனால், அரசனுக்குக் கண்ணோட்டம் என்னும் தாட்சண்ணியம் அவசியமாகின்றது.


இதற்குத் திருக்குறள்...

கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை

உண்மையான், உண்டு இவ் உலகு.


இதற்குப் பரிமேலகர் உரை ---

கண்ணோட்டம் என்னும் கழி பெருங்காரிகை உண்மையான் --- கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற சிறப்பு உடைய அழகு அரசர்மாட்டு உண்டு ஆகலான்; 

இவ்வுலகு உண்டு --- இவ்வுலகம் உண்டாகாநின்றது.

('கழிபெருங் காரிகை' என்புழி ஒருபொருட் பன்மொழி, இவ் உயிரழகது சிறப்புணர நின்றது. இவ்வழகு அதற்கு உறுப்பு ஆகலின், 'உண்மையான்' என நிலைபேறும் கூறினார். இன்மை வெருவந்த செய்தல் ஆகலின், அவர் நாட்டு வாழ்வார் புலியை அடைந்த புல்வாயினம் போன்று ஏமஞ் சாராமை பற்றி, 'இவ்வுலகு உண்டு' என்றார்.)



பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்... 


“தெற்றப் பகைவர்இடர்ப்பாடு கண்டக்கால்,

மற்றும் கண் ஓடுவர் மேன்மக்கள், --- தெற்ற

நவைக்கப் படுந்தன்மைத்து ஆயினும், சான்றோர்

அவைப்படின் சாவாது பாம்பு. --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


பாம்பு - பாம்பானது, தெற்ற நவைக்கப்படுந் தன்மைத்து ஆயினும் - தெளிவாகத் துயர் செய்யப்படும் தன்மையது ஆயினும், சான்றோர் அவை படின் சாவாது - அறிவுடையோர் கூட்டத்தில் சென்றால் அது இறவாது; (அதுபோல), மேன் மக்கள் - உயர்குடிப் பிறந்தோர், தெற்ற பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால் - தெளிவாக அறியப்பட்ட பகைவர்கள் அடையும் துன்பத்தினைக் கண்டால், மற்றும் கண்ணோடுவர் - தமக்குப் பல பிழைகளைச் செய்தவராயிருப்பினும் மீண்டும் அவரிடத்தில் கண்ணோட்டம் செலுத்துவர்.


சான்றோர் துன்பப்படுபவர் தம் பகைவராயினும் அத்துன்பத்தை நீக்க முயலுவர்.


இங்ஙனம் கண்ணோட்டம் செலுத்துவது ஊராண்மை எனப்படும். அதாவது, இலங்கை அரசனான இராவணன்  இராமனுடன் செய்த போரில் தனது சேனை முழுவதும் அழிந்து தனியனாய் நின்ற நிலைமை நோக்கி, அயோத்தியர் இறையான இராமபிரான் மேற்கொண்டு போர் புரியாது, 'இன்று போய் நாளை வா'  என விட்டது போல்வது என்பர் பரிமேலழகர்.


'சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு' என்பது பழமொழி.


கர்ணனைப் படைத் தலைவனாகக் கொண்டு பதினாறாம் நாள் பாரதப் போர் நடைபெறுகிறது. அருச்சுனனோடு போர் புரிந்த கர்ணன் சிறிதே தளர்ச்சி அடைகிறான். முதல்நாள் போரிலே இராணவன் தளர்ச்சி அடைந்தமை கண்டு கருணைவடிவினன் ஆன இராமபிரான் அவனோடு மேலும் போர் புரிய விரும்பாது, பகைவனான அவன் மீதும் கண்ணோட்டம் வைத்து,  “இன்று போய்ப் போர்க்கு நாளை வா” என்று கூறி அனுப்பியதைப் போலவே, பதினாறம் நாள் போரில் கர்ணன் தளர்ச்சி அடைந்ததைக் கண்ட அருச்சுனன், மேலும் அவனோடு போர் புரிதலை விடுத்து, அவன் மீது கண்ணோட்டம் வைத்து, “நீ இனி இன்று போய் நாளை வா” என்று இனிமையாகச் சொல்லி அனுப்பினான் என்பதை வில்லிபாரதம் பின் வரும் பாடலால் தெளிவிக்கும். 


“அன்று போர் புரி சேனையின் பதியான வீரனை, 'நீ

இன்று போய் இனி நாளை வா' என இனிது இயம்பினனால்-

வென்றி கூர் வரி வின்மையால் அடல் வெவ் அரக்கரை முன்

கொன்ற காளையை ஒத்த பேர் இசை கொண்ட ஆண்மையினான்.“


இதன் பொருள் –


அப்பொழுது போர் செய்த, சேனையின் கௌரவ சேனைத் தலைவனான  கர்ணனை நோக்கி, “நீ இன்றைக்குப் (போர் செய்யாமல் உயிரோடு மீண்டு) போய் பின்பு நாளைக்குப் போர்க்கு வருவாயாக” என்று இனிமையாகச் சொன்னான். அவர் யார் என்றால், வெற்றி மிகுந்த, கட்டமைந்த வில்லின் தொழிலால், வலிமையை உடைய கொடிய இராக்கதரை,  முன்னே [திரோதாயுகத்தில்] கொன்ற வீரனாகிய இராமபிரானை, ஒத்த மிக்க புகழைக் கொண்ட பராக்கிரமம் பொருந்திய அருச்சுனன் ஆவான்.


     


057. வெருவந்த செய்யாமை - 07. கடுமொழியும்

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை


இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "பேசுகின்ற கடுமையான மொழிகளும், முறை கடந்த தண்டையும், அரசனின் பகை கெடுக்கும் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும், வலிமையுடைய இரும்பினைத் தேய்க்கின்ற அரம் போன்று ஆகும்" என்கின்றார் நாயனார்.


பகையைத் தேய்க்கும் வல்லமையை வலிமை மிக்க இரும்பாகவும், கடுமொழியையும், கையிகந்த தண்டத்தையும் அரம் ஆகவும் உருவகம் செய்தார்.


கடுமொழியால் சேனைகளும், கையிகந்த தண்டத்தால் குடிமக்களும் அரசனிடத்து அன்பு இல்லாது போவார்கள். அதனால் அவனது ஆண்மை சுருங்கி வரும்.


இதற்குத் திருக்குறள்...


கடுமொழியும், கைஇகந்த தண்டமும், வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---

கடுமொழியும் கையிகந்த தண்டமும் --- கடிய சொல்லும் குற்றத்தின் மிக்க தண்டமும், 

வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் --- அரசனது பகை வெல்லுதற்கேற்ற மாறுபாடாகிய இரும்பினைத் தேய்க்கும் அரமாம்.

(கடுமொழியால் தானையும், கையிகந்த தண்டத்தால் தேசமும் கெட்டு, முரண் சுருங்கி வருதலின், அவற்றை அரமாக்கித் திண்ணிதாயினும் தேயும் என்றற்கு அடுமுரணை இரும்பாக்கினார். ஏகதேச உருவகம். அரம் என்பதனைத் தனித்தனி கூட்டுக. இவைஐந்து பாட்டானும், செவ்வியின்மை, இன்னாமுகம் உடைமை, கண்ணோட்டம் இன்மை, கடுஞ்சொற் சொல்லல், கைஇகந்த தண்டம் என்று இவைகள் குடிகள் அஞ்சும் வினையென்பதூஉம், இவைசெய்தான் ஆயுளும் அடுமுரணும் செல்வமும் இழக்கும் என்பதூஉம் கூறப்பட்டன.



இத் திருக்குறளுக்கு ஒப்பாக பின்வரும் பாடல் அமைந்துள்ளதை அறியலாம்...


“கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்தல் இன்னா;

நெடுநீர் புணையின்றி நீந்துதல் இன்னா;

கடுமொழி யாளர் தொடர்பு இன்னா; இன்னா

தடுமாறி வாழ்தல் உயிர்க்கு.” --- இன்னா நாற்பது.


இதன் பொருள் ---


கொடுங்கோல் மறமன்னர் கீழ் ஆழ்தல் இன்னா - கொடுங்கோல் செலுத்தும் கொலைத் தொழிலையுடைய அரசரது ஆட்சியின் கீழ் வாழ்வது துன்பத்தைத் தரும்; நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா - மிக்க நீரை தெப்பமில்லாமல் கடந்து செல்லுதல் துன்பத்தில் முடியும்; கடுமொழியாளர் தொடர்பு இன்னா - வன்சொல் கூறுவோரது  நட்பு துன்பத்திலு முடியும்; உயிர்க்கு தடுமாறி வாழ்தல் இன்னா --- உயிர்களுக்கு மனத்தடுமாற்றம் அடைந்து, வாழ்வது துன்பமானது.


057. வெருவந்த செய்யாமை - 06. கடும் சொல்லன்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை


இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "கடும் சொற்களைப் பேசுபவன் ஆகி, கருணை இல்லாதவனாக இருந்தால், அவனுடைய பெருஞ்செல்வம் நீண்ட காலம் நிலைத்து இராது, அப்பொழுதே அழிந்து விடும்" என்கின்றார் நாயனார்.


இதற்குத் திருக்குறள்...

கடும்சொல்லன், கண் இலன் ஆயின், நெடும் செல்வம்

நீடு இன்றி ஆங்கே கெடும்.


இதற்குப் பரிமேரழகர் உரை ---

கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் --- அரசன் கடிய சொல்லையும் உடையனாய்க் கண்ணோட்டமும் இலனாயின்: 

நெடுஞ்செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும் --- அவனது பெரிய செல்வம் நீடுதலின்றி அப்பொழுதே கெடும்.

(வேட்டம், கடுஞ்சொல், மிகுதண்டம், சூது, பொருள்ஈட்டம், கள், காமமொடு ஏழு' எனப்பட்ட விதனங்களுள் கடுஞ் சொல்லையும் மிகு தண்டத்தையும் இவர் இவ்வெருவந்த செய்தலுள் அடக்கினார். 'கண்' ஆகு பெயர்.இவை செய்தபொழுதே கெடுஞ் சிறுமைத்து அன்றாயினும் என்பார் 'நெடுஞ் செல்வம்' என்றார். நீடுதல்: நீட்டித்தல்.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


“வெய்துஉரையால் அக்கணமே வீந்தான் சிசுபாலன்,

தொய்யின் முலைஉமைபாற் சோமேசா! --- உய்யாக்

கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடுஞ்செல்வம்

நீடுஇன்றி ஆங்கே கெடும்.”


இதன்பொருள்---


தொய்யின் முலை உமைபால் சோமேசா - தொய்யில் எழுதிய முலைகளை உடைய உமாதேவியாரை ஒருபாகத்தில் உடைய சோமேசா!,  கடும்சொல்லன் கண்இலன் ஆயின் - அரசன் கடிய சொல்லையும் உடையனாய்க் கண்ணோட்டமும் இல்லாதவனாயின், நெடுஞ்செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும் - அவனது பெரிய செல்வம் நீடுதலின்றி அப்பொழுதே கெடும்,


சிசுபாலன் - சிசுபாலன் என்னும் அரசன், வெய்து உரையால் - கடுமையான சொல்லால், உய்யா - சிறிது காலமும் உயிரோடிராமல், அக்கணமே வீந்தான் - அந்த நொடிப்பொழுதிலேயே இறந்து ஒழிந்தான் ஆகலான் என்றவாறு.


கண் - கண்ணோட்டம், ஆகுபெயர். நீடுதல் - நீட்டித்தல். உய்யா - உய்யாமல். நெடுஞ்செல்வம் - பரம்பரையாக வரும் செல்வம் என்பர் பரிப்பெருமாள்.  


கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் ஆகலின், கண்ணோட்டம் இனிய பார்வையுடையனாதல். அதாவது காண்பார் அணுகுதற்குக் காரணமாய இனிய நோக்கு.   கடுஞ்சொல் இன்மை, உரையின் இனிமை இவ்விரண்டும் கூடிய வழியே அரசர்க்கு எவரும் வசமாவர்.  


சிசுபாலன் --- சேதி நாட்டு அரசன்.


சிசுபாலன் என்பான் வசுதேவன் உடன் பிறந்தாளும் அதனால் கண்ணனுக்கு அத்தையும் ஆகிய சேதி மன்னன் மனைவி சுருதசிரவை என்பாளுடைய மகன். திருமாலின் துவாரபாலகர்களாகிய ஜயவிஜயர்கள் ஒருகால் வைகுண்டம் புகுந்த சனகாதியரைத் தடுத்தமை பற்றி மூன்று பிறப்பு திருமாலுக்குப் பகைவராய்ப் பிறந்து, திருமாலின் கையால் இறக்க என அவரால் சபிக்கப்பட்டு, இரணிய இரணியாட்சராகவும், இராவண கும்பகர்ணனாகவும், சிசுபால தந்தவக்ரராகவும் பிறந்தார்கள். 


இச் சிசுபாலன் பிறந்தபொழுது அவனுக்கு நான்கு கைகளும், மூன்று கண்களும் இருந்தன. யார் தொட்டால் அவை மறையுமோ, அவனால் இவனுக்கு மரணம் என்று ஆகாயவாணி கூற, அவ்வாறு பலரும் தொடுகையில், கண்ணன் தொட்ட அப்போதே அவை மறைய, கண்ணனால் அவனுக்கு மரணம் என்று அறிந்தார்கள்.  


கண்ணனும் அவன் அத்தை வேண்ட நூறு பிழை பொறுப்பதாக வாக்களித்தான். ஏற்கெனவே சிசுபாலனுகுக் கண்ணனிடத்து உள்ள பகையானது, தனக்கென இருந்த உருக்குமிணியைக் கண்ணன் மணந்தபின் மேலிட்டது. தருமபுத்திரர் செய்த இராஜசூய யாகத்தில் அவர் கண்ணனுக்கு அக்ரபூசை செய்தமை கண்டு மனம் புழுங்கிக் கொதித்துக் கண்ணனைப் பல நூறுமுறை வைதமையின், அப்பெருமான் எதிர் ஒன்றும் கூறாது, சக்கரத்தை விட,  அது அவன் தலையைத் துணிக்க, உடன் அவன் உடம்பினின்றும் ஒரு சோதி எழுந்து கண்ணன் திருவடியை அடைந்தது.  


"பூபாலர் அவையத்து முற்பூசை

பெறுவார் புறங்கானில்வாழ்

கோபாலரோ என்று உருத்து அங்கு

எதிர்த்துக் கொதித்து ஓதினான்,

காபாலி முனியாத வெங்காம

நிகரான கவின்எய்திஎழ்,  

தீபால் அடங்காத புகழ்வீர

கயமன்ன சிசுபாலனே",


"திண்ணியநெஞ் சினனான சிசுபாலன்

தன்நெஞ்சில் தீங்குதோன்ற

எண்ணிய மன் பேரவையில் இயம்பியபுன்

சொற்களெலாம் எண்ணி எண்ணிப்

புண்ணியர் வந்து இனிது இறைஞ்சும்

பூங்கழலோன் வேறொன்றும் புகலானாகிப்

பண்ணிய தன் புரவிநெடும்

பருமணித்தேர் மேற்கொண்டான் பரிதிபோல்வான்"


என்னும் வில்லிபுத்தூரார் பாரதக் கவிகள் காண்க.


‘இனிய சொல்லினன்; ஈகையன்; எண்ணினன்;

வினையன்; தூயன்; விழுமியன்; வென்றியன்;

நினையும் நீதி நெறி கடவான் எனில்,

அனைய மன்னற்கு அழிவும் உண்டாம்கொலோ?”    --கம்பராமாயணம்,

   

  ‘(ஓர் அரசன்) இனிய சொல்லினன் - (கேட்டார்க்கு) இனிமை பொருந்தச் சொல்லும்  இன்சொல்  உடையவன்;  ஈகையன்  நல்ல கொடைத்திறம் உள்ளவன்;  எண்ணினன்- ஆராய்ச்சி உடையவன்;  வினையன் - முயற்சி உடையவன்; தூயன் - தூய்மையானவன்; விழுமியன் - சிறந்தவன்;  வென்றியன் - வெற்றி உடையவன்;  நினையும் நீதிநெறி கடவாதவன் - ஆராய்ந்து அறியும் நேர்மையில் சிறிதும் அகலாதவன்; எனில் - என்றால்;  அனைய மன்னற்கு - அப்படிப்பட்ட அரசனுக்கு; அழிவும் உண்டாம் கொலோ? -  கேடும் உண்டாகுமோ?’ (உண்டாகாது). (இவ்வாறு சுமந்திரன் இராமனுக்கு அறிவுரை பகர்ந்தான்)


மூலம் 15

“பிழைத்தல் பொறுத்தல் பெருமை, சிறுமை இழைத்த தீங்கு எண்ணி இருத்தல், - இழைத்த பகைகெட வாழ்வதும், பல்பொருளார் நல்லார் நகைகெட வாழ்வதும் நன்று.” ...