திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 58 -- கண்ணோட்டம்
அதாவது, தன்னோடு பழகியவர் சொல்லுவதை மறுக்கமாட்டாமல், குற்றம் குறைகளை மறந்து, அவர்க்கு இணங்கச் செய்வது. பழகியவர்மீது கண் சென்றபோது உண்டாவதால், "கண்ணோட்டம்" எனப்பட்டது. இது முகம் கொடுத்தல் என்றும், தாட்சண்ணியம் என்றும் சொல்லப்படும்.
இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், “கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிக்க பேரழகு மக்களிடம் இருத்தலால், இந்த நிலவுலகமானது தொன்றுதொட்டு நிலைபெற்று இயங்கி வருகின்றது" என்கின்றார் நாயனார்.
குடிமக்கள் அஞ்சும் செயல்களை அரசன் புரிவானாயின், குடிமக்கள், புலியைக் கண்ட மான் கூட்டம் போல, அரசனை விட்டு விலகிப் போவார்கள். அதனால் உலகியல் சரிவர நடக்காது. அதனால், அரசனுக்குக் கண்ணோட்டம் என்னும் தாட்சண்ணியம் அவசியமாகின்றது.
இதற்குத் திருக்குறள்...
கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை
உண்மையான், உண்டு இவ் உலகு.
இதற்குப் பரிமேலகர் உரை ---
கண்ணோட்டம் என்னும் கழி பெருங்காரிகை உண்மையான் --- கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற சிறப்பு உடைய அழகு அரசர்மாட்டு உண்டு ஆகலான்;
இவ்வுலகு உண்டு --- இவ்வுலகம் உண்டாகாநின்றது.
('கழிபெருங் காரிகை' என்புழி ஒருபொருட் பன்மொழி, இவ் உயிரழகது சிறப்புணர நின்றது. இவ்வழகு அதற்கு உறுப்பு ஆகலின், 'உண்மையான்' என நிலைபேறும் கூறினார். இன்மை வெருவந்த செய்தல் ஆகலின், அவர் நாட்டு வாழ்வார் புலியை அடைந்த புல்வாயினம் போன்று ஏமஞ் சாராமை பற்றி, 'இவ்வுலகு உண்டு' என்றார்.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...
“தெற்றப் பகைவர்இடர்ப்பாடு கண்டக்கால்,
மற்றும் கண் ஓடுவர் மேன்மக்கள், --- தெற்ற
நவைக்கப் படுந்தன்மைத்து ஆயினும், சான்றோர்
அவைப்படின் சாவாது பாம்பு. “ --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
பாம்பு - பாம்பானது, தெற்ற நவைக்கப்படுந் தன்மைத்து ஆயினும் - தெளிவாகத் துயர் செய்யப்படும் தன்மையது ஆயினும், சான்றோர் அவை படின் சாவாது - அறிவுடையோர் கூட்டத்தில் சென்றால் அது இறவாது; (அதுபோல), மேன் மக்கள் - உயர்குடிப் பிறந்தோர், தெற்ற பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால் - தெளிவாக அறியப்பட்ட பகைவர்கள் அடையும் துன்பத்தினைக் கண்டால், மற்றும் கண்ணோடுவர் - தமக்குப் பல பிழைகளைச் செய்தவராயிருப்பினும் மீண்டும் அவரிடத்தில் கண்ணோட்டம் செலுத்துவர்.
சான்றோர் துன்பப்படுபவர் தம் பகைவராயினும் அத்துன்பத்தை நீக்க முயலுவர்.
இங்ஙனம் கண்ணோட்டம் செலுத்துவது ஊராண்மை எனப்படும். அதாவது, இலங்கை அரசனான இராவணன் இராமனுடன் செய்த போரில் தனது சேனை முழுவதும் அழிந்து தனியனாய் நின்ற நிலைமை நோக்கி, அயோத்தியர் இறையான இராமபிரான் மேற்கொண்டு போர் புரியாது, 'இன்று போய் நாளை வா' என விட்டது போல்வது என்பர் பரிமேலழகர்.
'சான்றோர் அவைப்படின் சாவாது பாம்பு' என்பது பழமொழி.
கர்ணனைப் படைத் தலைவனாகக் கொண்டு பதினாறாம் நாள் பாரதப் போர் நடைபெறுகிறது. அருச்சுனனோடு போர் புரிந்த கர்ணன் சிறிதே தளர்ச்சி அடைகிறான். முதல்நாள் போரிலே இராணவன் தளர்ச்சி அடைந்தமை கண்டு கருணைவடிவினன் ஆன இராமபிரான் அவனோடு மேலும் போர் புரிய விரும்பாது, பகைவனான அவன் மீதும் கண்ணோட்டம் வைத்து, “இன்று போய்ப் போர்க்கு நாளை வா” என்று கூறி அனுப்பியதைப் போலவே, பதினாறம் நாள் போரில் கர்ணன் தளர்ச்சி அடைந்ததைக் கண்ட அருச்சுனன், மேலும் அவனோடு போர் புரிதலை விடுத்து, அவன் மீது கண்ணோட்டம் வைத்து, “நீ இனி இன்று போய் நாளை வா” என்று இனிமையாகச் சொல்லி அனுப்பினான் என்பதை வில்லிபாரதம் பின் வரும் பாடலால் தெளிவிக்கும்.
“அன்று போர் புரி சேனையின் பதியான வீரனை, 'நீ
இன்று போய் இனி நாளை வா' என இனிது இயம்பினனால்-
வென்றி கூர் வரி வின்மையால் அடல் வெவ் அரக்கரை முன்
கொன்ற காளையை ஒத்த பேர் இசை கொண்ட ஆண்மையினான்.“
இதன் பொருள் –
அப்பொழுது போர் செய்த, சேனையின் கௌரவ சேனைத் தலைவனான கர்ணனை நோக்கி, “நீ இன்றைக்குப் (போர் செய்யாமல் உயிரோடு மீண்டு) போய் பின்பு நாளைக்குப் போர்க்கு வருவாயாக” என்று இனிமையாகச் சொன்னான். அவர் யார் என்றால், வெற்றி மிகுந்த, கட்டமைந்த வில்லின் தொழிலால், வலிமையை உடைய கொடிய இராக்கதரை, முன்னே [திரோதாயுகத்தில்] கொன்ற வீரனாகிய இராமபிரானை, ஒத்த மிக்க புகழைக் கொண்ட பராக்கிரமம் பொருந்திய அருச்சுனன் ஆவான்.
No comments:
Post a Comment