61. இவர் பிரிவால் இது இல்லை

“மாதா மரிக்கின் மகன்நாவின் நற்சுவைபோம்,

தாதா எனில்கல்வி தாம்அகலும், - ஓதில்உடன்

வந்தோன் மரித்துவிடில் வாகுவலிபோம், மனையேல்,

அந்தோ, இவை யாவும் போம்.” -- நீதிவெண்பா


செல்லப் புகுந்தால், தாயார் இறந்து விட்டால், மகனின் நாவிற்குச் சிறந்த சுவைப் பொருள்களை அனுபவிக்க முடியாமல் போகும்.  தந்தை இறந்தான் என்றால், அம் மகனுக்குக் கல்வி கற்க முடியாமல் போகும். உடன்பிறந்தவன் இறந்து விட்டால், தோள் வலிமை கெட்டுப் போகும். மனைவியே இறந்து விட்டாள் என்றால், ஐயோ! மேற்சொன்னவைகள் எல்லாம் ஒருங்கே இல்லாமல் கெட்டுப் போகும்.


(மாதா - தாய்.  தாதா - தந்தை. உடன் வந்தோன் - சகோதரன். வாகுவலி - தோள் வலிமை.)


பின்வரும் ஔவையார் தனிப்பாடலையும் இங்கு வைத்து எண்ணுதல் நலம்.


“தாயோடு அறுசுவைபோம், தந்தையொடு கல்விபோம்,

சேயோடு தான்பெற்ற செல்வம்போம், – ஆயவாழ்(வு)

உற்றா ருடன்போம், உடற்பிறப்பால் தோள்வலிபோம்,

பொற்றாலி யோடு எவையும் போம்.”.    – ஔவையார்.


இதன் பொருள் ---

 

தாயோடு அறு சுவை உணவு கிடைப்பது இல்லாது போகும். தந்தை இல்லாவிட்டால் கல்வியைப் பயிலுவது நின்று போகும். தான் பெற்ற பிள்ளைகளோடு ஒருவன் பெற்ற செல்வம் போய் விடும். (மனிதன் ஒருவன் பெறவேண்டிய பேறுகளில் பிள்ளைப் பேறும் ஒன்று. அதை “நன்மக்கள் பேறு” என்பார் திருவள்ளுவ நாயனார். “பெறும் அவற்றுள் யாம் அறிந்தது இல்லை, அறிவு அறிந்த மக்கட்பேறு அல்ல பிற" என்னும் திருக்குறளைக் காண்க.) வாழுகின்ற பெரிய வாழ்க்கையானது உறவினர்கள் இல்லாவிடில் பொருள் அற்றதாக அமையும். (“சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல், செல்வம்தான் பெற்றத்தால் பெற்ற பயன்” என்பது திருவள்ளுவ நாயனார் அருள்வாக்கு.) உடன் பிறந்த சகோதர சகோதரிகளோடு வலிமை போய்விடும். தாலி கட்டிக் கொண்டு வந்த மனைவியோடு எவையும் போகும்.


No comments:

058. கண்ணோட்டம் - 06. மண்ணோடு இயைந்த

  திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 58 -- கண்ணோட்டம் இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "கண்ணிருந்தும், கண்ணோடு பொ...