திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 58 -- கண்ணோட்டம்
இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "கண்ணுக்குப் பூணும் நகை போன்றது கண்ணோட்டம். அது இல்லாவிட்டால், அந்தக் கண் ஒரு புண் என்று உணரப்பட வேண்டும்" என்கின்றார் நாயனார்.
கண்ணாகத் தோன்றினாலும், புலனைப் பற்றுதலாலும், நோய்களாலும் தன்னை உடையவனுக்குத் துயர் விளைத்தல் பற்றி, "புண் என்று உரணப்படும்" என்றார்.
இதற்குத் திருக்குறள்...
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம், அஃது இன்றேல்
புண் என்று உணரப்படும்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் ---- ஒருவன் கண்ணிற்கு அணியும் கலமாவது கண்ணோட்டம்;
அஃது இன்றேல் புண் என்று உணரப்படும் --- அக் கலம் இல்லையாயின் அஃது அறிவு உடையரால் புண் என்று அறியப்படும்.
(வேறு அணிகலம் இன்மையின் 'கண்ணிற்கு அணிகலம்' என்றும், கண்ணாய்த் தோன்றினும் நோய்களானும் புலன் பற்றலானும் துயர் விளைத்தல் நோக்கி, 'புண் என்று உணரப்படும்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் ஓடாது நின்ற கண்ணின் குற்றம் கூறப்பட்டது.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...
“தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால்
கண் நீர்மை மாறாக் கருணையால் --- பெண்நீர்மை
கற்புஅழியா ஆற்றால், கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி.” --- நல்வழி.
இதன் பொருள் ---
தண்ணீர் நில நலத்தால் - தண்ணீரானது நிலத்தினது நன்மையினாலும், தக்கோர் குணம் கொடையால் - நல்லோருடைய குணமானது ஈகையினாலும். கண் நீர்மை மாறாக் கருணையால் - கண்களுடைய குணமானது நீங்காத அருளினாலும், பெண் நீர்மை கற்பு அழியா ஆற்றால் - பெண்களுடைய குணமானது கற்புநிலை கெடாத வழியினாலும், கடல் சூழ்ந்த வையகத்துள் - கடல் சூழ்ந்த பூமியினிடத்து, அற்புதம் ஆம் - வியக்கத்தக்க மேன்மை உடையன ஆகும், என்று அறி - என்று நீ அறிவாயாக.
நில நன்மையினாலே தண்ணீருக்கும், கொடையினாலே நல்லோருக்கும், அருளினாலே கண்களுக்கும், கற்பினாலே பெண்களுக்கும் பெருமை உண்டாகும்.
“கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம், காமுற்ற
பெண்ணுக்கு அணிகலம் நாண்உடைமை, --- நண்ணும்
மறுமைக்கு அணிகலம் கல்வி, இம் மூன்றும்
குறி உடையோர் கண்ணே உள.” --- திரிகடுகம்.
இதன் பொருள் ---
கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் - கண்களுக்கு, அணியத் தக்க பூணாவது கண்ணோடுதல்; காமுற்ற பெண்ணுக்கு அணிகலம் நாண் உடைமை - கணவனால் விரும்பப்பட்ட குலமகளுக்கு அணிகலனாவது நாணம் உடையவளாயிருத்தல்; நண்ணும் மறுமைக்கு அணிகலம் கல்வி - உயிருக்கு வந்த பொருந்துகின்ற மறுப்பிறப்புக்கு அணிகலனாவது கல்வி அறிவு; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், குறி உடையார் கண்ணே உள - ஆராயும் இயல்புடையாரிடத்தே உண்டுள.)
கண்ணோட்டத்தால் கண்ணும், நாணத்தால் பெண்ணும், கல்வியால் மறுமையும் அழகு பெறும் என்பது. கண்ணோட்டமாவது தன்னோடு பழகினவர் சொன்னவற்றை மறுக்க மாட்டாமை. அது அவர்மேல் கண் சென்ற பின்பே உண்டாவது பற்றி. கண்ணோட்டம் காரண ஆகுபெயர். நாணம் - பெண்கட்குரிய நாற்குணங்களில் முதன்மையானது. மற்றவை மடம் அச்சம் பயிர்ப்பு என்பன. சிற்றுயிர்க்கு உற்ற துணையாகிய கல்வி ஒருவனுக்கு இம்மையில் நன்மையைச் செய்து மறுமையிலும் இன்பம் தருதலால் மறுமைக்கு அணிகலம் என்றார்.
“கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை,
எண்வனப்பு இத்துணையாம் என்றுஉரைத்தல் - பண்வனப்புக்
கேட்டார்நன்று என்றல், கிளர்வேந்தன் தன்நாடு
வாட்டான்நன்று என்றல் வனப்பு.” --- சிறுபஞ்சமூலம்.
இதன் பொருள் ---
கண் வனப்பு கண்ணோட்டம் - கண்ணுக்கு அழகாவது பிறர்மேல் கண்ணோடுதல் ஆகும்; கால் வனப்பு செல்லாமை - கால்களுக்கு அழகாவது பிறரிடத்தில் இரக்கப் போகாமை ஆகும்;
எண் வனப்பு இத் துணை ஆம் என்று உரைத்தல் - ஆராய்ச்சிக்கு அழகாவது பொருளை அறுதியிட்டு முடிவு செய்தல் ஆகும்; பண் வனப்பு கேட்டார் நன்று என்றல் - இசைக்கு அழகாவது அதனைக் கேட்டவர்கள் இது நல்லது என்று புகழ்ந்து உரைத்தல் ஆகும்; கிளர் வேந்தன் வனப்பு, தன் நாடு வாட்டான் என்றல் - புகழினால் விளங்குகின்ற அரசனுக்கு அழகாவது, தனது நாட்டிலுள்ள குடிகளை, இவன்) வருத்தான், இவனுடைய ஆட்சி நல்லது, என்று உலகத்தவர் அவனைப் புகழ்ந்து கூறுதல் ஆகும்.
“முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
தொல்லை அளித்தாரைக் கேட்டு அறிதும், - சொல்லின்
நெறிமடல் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப!
அறிமடமும் சான்றோர்க்(கு) அணி.” --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
நெறி மடல் பூந்தாழை நீடு நீர் சேர்ப்ப - செறிந்த மடல்களையுடைய அழகிய தாழைகள் பொருந்திய கடல் நாடனே!, முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் தொல்லை அளித்தாரை கேட்டறிதும் - காட்டிற் படர்ந்திருந்த முல்லைக் கொடிக்குத் தேரையும், வாடையால் வாடி நின்ற மயிலுக்குத் தனது போர்வையையும் முன்னாளில் கொடுத்தவர்களைக் கேள்வி வாயிலாக அறிந்தோம். சொல்லின் - ஆராய்ந்து சொல்லுமிடத்து, அறிமடமும் சான்றோர்க்கு அணி - அறிமடமும் சான்றோர்க்கு அழகேயாம்.
அறிந்தும் அறியாது போன்று செயல்களைச் செய்தல் சான்றோர்க்கு அழகினைத் தருவதாம்.
“பண்உக்கு வாம் பரித் தேர் ஆதபனும்,
பணிந்து பசுபதியை நோக்கி
மண்ணுக்குத் தவம் புரியும் தனஞ்சயற்குக்
கோடையினும், மதியம் போன்றான்;
எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும்
கண் ஆவான் இவனே அன்றோ?
'கண்ணுக்குப் புனை மணிப் பூண் கண்ணோட்டம்'
என்பது எல்லாம் கருணை அன்றோ?” --- வில்லிபாரதம், அருச்சுனன் தவம்.
இதன் பொருள் ---
பண் உக்கு வாம் பரித் தேர் ஆதவனும் – கல்லணை அறுந்து விழும்படி தாவி ஓடுகின்ற குதிரைகள் பூட்டிய இரதத்தை உடைய சூரியனும், பசுபதியை நோக்கிப் பணிந்து - பரமசிவனைக் குறித்து வணங்கி, மண்ணுக்குத் தவம் புரியும் தனஞ்செயற்கு - (பாசுபதாஸ்திரம் பெற்றுப் பகைவரை வென்று) இராச்சியத்தைப் பெறும்பொருட்டுத் தவம் செய்கின்ற, அருச்சுனனுக்கு, கோடையினும் மதியம் போன்றான் - வெயில் காலத்திலும் சந்திரனை ஒத்துக் குளிர்ந்திருந்தான்; (ஏனெனில்), எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண் ஆவான் இவனே அன்றோ - (பதினான்கு என்கிற) கணக்குக்கு வருகின்ற உலகங்கள் எல்லாவற்றிற்கும், கண்ணைப் போன்றவன் இச் சூரியனே ஆவான் அல்லவா? கண்ணுக்குப் புனை மணிப் பூண் என்பது எலாம் – கண்ணுக்கு அணிதற்குரிய அழகிய ஆபரணம் என்று சொல்லுவது எல்லாம், கண்ணோட்டம் கருணை அன்றோ --- (பிறர்மேல்) கண் சென்றபோது உண்டாகின்ற, கருணையே அல்லவா?
"கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்" என்றபடி கண்ணுக்கு அழகு செய்வது கருணை என்பது நன்கு அறியப்பட்ட நிலை என்பதால், உலகம் அனைத்துக்கும் கண்ணாக இருக்கின்ற சூரியன் மிகக் கருணை உடையவனாகத் தவம் செய்யும் அருச்சுனனைக் கோடைக் காலத்திலும் சுடாமல் இருந்தான் என்றார். அருச்சுனன் கடும் கோடை வெப்பத்தை அலட்சியம் செய்து தவம் புரிந்தான் என்பது இவ்வாறு சொல்லப்பட்டது. சூரியனுக்கு "ஜகச்சட்சு" (ஜகம் – உலகம். சட்சு --- கண்) என்று ஒருபெயர் வடமொழியில் உண்டு. எனவே, "கண் ஆவான் இவன்" என்று சூரியனைக் குறித்தார் கவிச்சக்கரவர்த்தி.
No comments:
Post a Comment