திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 58 -- கண்ணோட்டம்
இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "கண்ணிருந்தும், கண்ணோடு பொருந்தி இருக்க வேண்டியதாகிய கண்ணோட்டம் இல்லாவதர், மண்ணோடு பொருந்தி இருக்கின்ற மரத்தைப் போன்றவர்" என்கின்றார் நாயனார்.
மரத்திற்குக் கணுக்கள் இருந்தாலும், காணக் கூடிய கண்கள் இல்லை. கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணிருந்தும் குருடர் ஆவார். உள்ளம் உருகாத கண்கள் மரத்திற்குச் சமம்.
இதற்குத் திருக்குறள்...
மண்ணொடு இயைந்த மரத்து அனையர், கண்ணொடு
இயைந்து கண்ணோடா தவர்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
கண்ணொடு இயைந்து கண்ணோடாதவர் --- ஓடுதற்கு உரிய கண்ணோடு பொருந்தி வைத்து அஃது ஓடாதவர்;
மண்ணொடு இயைந்த மரத்து அனையர் --- இயங்கா நின்றாராயினும் மண்ணொடு பொருந்தி நிற்கின்ற மரத்தினை ஒப்பர்.
('ஓடாதவர்' என்புழிச் சினைவினை முதல்மேல் நின்றது. மரமும் கண்ணோடு இயைந்து கண்ணோடாமையின். இது தொழில் உவமம். அதனைச் சுதை மண்ணோடு கூடிய மரப்பாவை என்று உரைப்பாரும் உளர். அஃது உரையன்மை, காணப்படும் கண்ணானன்றி, அதனுள் மறைந்து நிற்கின்ற ஒருசார் உள்ளீட்டால் கூறினமையானும், மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று, இரக்கண்டாய் (புறத்திரட்டு 1555 முத்தொள் ) என்பதனானும் அறிக.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்....
"வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப்
பள்ளந்தாழ் உறுபுனலிற் கீழ்மே லாகப்
பதைத்துருகும் அவர்நிற்க என்னை யாண்டாய்க்
குள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய்
உருகாதால் உடம்பெல்லாங் கண்ணாய் அண்ணா
வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம்
கண்ணிணையு மரமாம்தீ வினையி னேற்கே." --- திருவாசகம்.
இதன் பொருள் ---
கங்கை நீர்ப் பெருக்குத் தங்கிய, விரிந்த சடையினை யுடையாய்! எருதினை ஊர்தியாக உடையாய்! தேவர் தலைவனே! என்று அன்பர் சொல்லக் கேட்டவுடன், ஆர்வம் மிகுந்த மனத்தினராய், பள்ளத்தில் விழுகின்ற மிகுந்த நீர் போல, மேல் கீழாக விழுந்து, வணங்கி நெஞ்சம் துடிக்கும் அடியார் பலர் நிற்க, என்னைப் பெருங்கருணையால் ஆண்டு கொண்ட உன் பொருட்டு என் உள்ளங்கால் முதல் உச்சி வரையுள்ள உடம்பின் பகுதிமுற்றும், மனத்தின் இயல்புடையதாய் உருகாது, உடம்பு எல்லாம், கண்ணின் இயல்புடையதாய் நீர்ப்பெருக்குப் பாயவில்லை; ஆகையால் கொடிய வினையை உடையேனுக்கு நெஞ்சானது கல்லினால் அமைந்ததே ஆம். இருகண்களும் மரத்தினால் ஆனவையாம்.
"தன்னெஞ்சம் நினைப்பு ஒழியாத அறிவிலிநான்
ஞானமெ் எனும் தன்மை பேச
உன் நெஞ்சம் மகிழ்ந்து, ஒருசொல் உரைத்தனையே!
அதனைஉன்னி உருகேன், ஐயா!
வன்நெஞ்சோ? இரங்காத மர நெஞ்சோ?
இருப்பு நெஞ்சோ? வைரம் ஆன
கல் நெஞ்சோ? அலது மண்ணாங் கட்டிநெஞ்சோ?
எனதுநெஞ்சம் கருதில் தானே. " --- தாயுமானவர்.
இதன் பொருள் ---
"ஒரு பொழுதும் வாழ்வதறியார் கருதுப கோடியும் அல்ல பல" என்பது போன்று எளியேன் மனமானது (தான் முன் நினைந்த பிறவிக்கு வித்தாகிய பயனில்லாத) தன் எண்ணங்களை நீக்காத நிலையிலுள்ள அறியாமையை அணிகலமாகக் கொண்டவன் அடியேன். திருவடி உணர்வு எனப்படும் மெய்யுணர்வின் தன்மையினைப் பேசுமாறு தேவரீர் திருவுள்ளம் மகிழ்ந்து ஒருசொல் மொழிந்தருளினீர். அத் திருமொழியினை இடையறாது எண்ணி எண்ணி உள்ளம் உருகேன். ஐயோ! எளியேன் மனமானது கருதுமிடத்து இரக்கம் வாய்க்கப்பெறாத மரநெஞ்சமோ? இரும்பாலாகிய வன்னெஞ்சமோ? வைரம் பொருந்திய கல்நெஞ்சமோ? அல்லது ஒன்றுக்கும் பற்றாத மண்ணாங்கட்டி நெஞ்சமோ? இன்னது என்று அறியேன்.
No comments:
Post a Comment