“கணக்காயர் இல்லாத ஊரும், பிணக்கு அறுக்கும்
மூத்தோரை இல்லா அவைக்களனும், - பாத்து உண்ணும்
தன்மை இலாளர் அயல் இருப்பும், இம்மூன்றும்
நன்மை பயத்தல் இல.” -- திரிகடுகம்.
நெடுங்கணக்கு முதலியன கற்பிக்கின்ற ஆசிரியர் இல்லாத ஊரில் இருத்தலும், பிணக்கை நீக்கி உதவுகின்ற, கல்வி கேள்விகளில் முதிர்ந்தோர் இல்லாத சபையில் இருத்தலும், பகுத்து உண்ணும் குணம் இல்லாதவர் பக்கத்தில் இருத்தலும், ஆகிய இந்த மூன்றும் ஒருவனுக்கு நன்மையைத் தருவன அல்லவாம். (தீமை பயப்பனவாம்)
கணக்காயர் - கணக்கு+ஆயர், கணக்கை ஆய்ந்தவர்; கணக்கு - இது இலக்கணம் முதலியவற்றிற்கும் உபலட்சணம். ஆயர் - ஆராய்ந்தவர்; ஆய் – ஆராய்.
பிணக்கு – பிணங்குதல், மாறுபடுதல். இருவருக்கும் இடையில் உண்டாகும் மாறுபாடு. அவையில் ஒருவர் சொல்லும் கருத்தால் உண்டாகும் மாறுபாடு. அறுத்தல் – ஐயம் திரிபு அற நீக்குதல். மூத்தோர் - கற்றறிந்த பெரியோர். "அவைக்குப் பாழ் மூத்தோரை இன்மை" என்று பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான “நான்மணிக்கடிகை” கூறும்.
பாத்து உண்ணும் தன்மை – தன்னிடத்து உள்ளதைப் பிறருக்கும் பகிர்ந்து அளித்துப் பின் உண்ணுதல். “பகடு நடந்த கூழ் பல்லாரோடு உண்க" என்கிறது நாலடியார். “பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை” எனவும், “பாத்தூண் மரீஇயவனைப் பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது” எனவும் திருவள்ளுவ நாயனார் அருளியதை அறிக.
No comments:
Post a Comment