கடுகம் 8

“தொல் அவையுள் தோன்றும் குடிமையும், தொக்கிருந்த

நல் அவையுள் மேம்பட்ட கல்வியும் ,- வெல்சமத்து

வேந்து உவப்ப வாட்டார்த்த வென்றியும், இம்மூன்றும்

தாம் தம்மைக் கூறாப் பொருள்.” -- திரிகடுகம்.

    பழைமையை ஆராயவல்லோர் கூடியிருக்கும் சபையிடத்தே, தானாக விளங்கித் தோன்றும் குடிப்பிறப்பு; பலவகை நூலோரும் கூடியிருந்த நல்ல சபையினிடத்தே மேன்மைப்பட்ட கல்வி;போரிடத்தே தமது அரசன் மகிழும்படியாகப் பகைவரைக் கொன்று நிறைத்த வெற்றி; ஆகிய இம் மூன்றையும் ஒருவன் தானே புகழ்ந்து கூறுதல் தகாது.

இதுபற்றிப் பிற நூல்கள் கூறுவதையும் இங்குப் பொருத்தி வைத்துப் பார்த்தல் நல்லது.

"உன்பால் உறும் உயர்வை ஓர்ந்துபிறர் பாராட்டின்

இன்பாம், நீ சொன்னால் இளிவாமே --- பொன்புனைந்த

தன்முலையைத் தன்கையால் தான்வருடின் ஒருமங்கைக்கு

உள்மலி இன்பு உண்டோ உணர்".   --- தருமதீபிகை.

     ஒருவனுடைய உயர் நலங்களை உலகத்தார் பலமுறையும் கூர்மையாக ஆராய்ந்து, உணர்ந்து பாராட்டிப் புகழ்ந்து கொண்டாடினால்,அது இன்பத்தைத் தரும். தன்னைக் குறித்துப் பிறர் பெருமையாகப் பேசவேண்டும், எண்ணிக் கொள்ளவேண்டும் என்பது மனித இயல்பு. தானே தனது பெருமையைச் சொல்ல நேர்ந்தால், அழகிய மங்கை ஒருத்தி, தனது கொங்கையைத் தானே வருடியது போல் நகைப்புக்கே இடமாகும்.

     ஒரு மனிதனுடைய உயர்வை அறிவுடைய பிறர் கூறினால், அது இருபாலார்க்கும் இனிமை தரும். அவ்வாறு அல்லாமல், தானே தனது பெருமையைப் பேசப் போவது யாருக்கும் இனிமையைத் தராது.


"எம்மை அறிந்திலிர், எம்போல்வார் இல் என்று

தம்மைத்தாம் கொள்வது கோள் அன்று: - தம்மை

அரியரா நோக்கி அறன் அறியும் சான்றோர்

பெரியராக் கொள்வது கோள்".       ---  நாலடியார்.

 இதன் பொருள் ---

     "எமது தகுதியை நீர் அறிந்திருக்கவில்லை, எம்மைப் போன்ற தகுதி உடையார் பிறர் யாரும் இல்லை"என்று தம்மைத் தாமே தம்பட்டம் அடித்துப் பெருமைப்படுத்திக் கொள்வது சிறந்த மதிப்பாகாது. தம்மை அருமைஉடையவர் என்று, அறவழியைஉணர்ந்த சான்றோர் மதித்து ஏற்றுக் கொள்ளுதலே பெருமையாகும்.

      தம்மைச் சான்றோர் பெரியர் என மற்றவர் மதித்து ஏற்குமாறு தமது செயல்பாடுகளை வகுத்துக் கொண்டு வாழ்வதே நல்லது. தம்மைத் தாமே பெரியர் என வாயுரையாகப் புலப்படுத்திக் கொள்ளுதல் மதிப்புடைமையாகாது.


 

"கற்றனவும்,கண்அகன்ற சாயலும்,இற்பிறப்பும்,

பக்கத்தார் பாராட்டப் பாடு எய்தும்; தான் உரைப்பின்

மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத

பித்தன் என்று எள்ளப் படும்".        --- நாலடியார்.

இதன் பொருள் ---

     தனக்கு உள்ள கல்வி அறிவு,  தனது நெடிது உயர்ந்த தோற்றம், தனது உயர் குடிப் பிறப்புப் பெருமை ஆகியவற்றைத் தன்னைச் சுற்றி உள்ளவர்கள் பாராட்டிப் பேசினால் அது பெருமை ஆகும். அவ்வாறன்றித் தன்னைத் தானே புகழ்ந்து தம்பட்டம் அடித்துக் கொண்டால்,  அப்படிப்பட்டவனை, கண்டபோது முகமன் கூறி விளையாடி உடன் இருந்து, அப்பால் சென்று, மருத்துவர் பலர் கூடி மருந்து கொடுத்தால் கூடத் தேற்ற முடியாத பித்தன் இவன் என்று இகழுபவர்கள் மிகப் பெருகுவார்கள். 

     அறிவுடையோர் நன்னெறியில் ஒழுகி வருவதால், அவரது தன்மையைப் பிறர் என்றுமே பாராட்டுவர். அறிவில்லாதவர் அவ்வாறு இல்லாமையால் அவரைப் பாராட்டுவார் இல்லை. தம்மைத் தாமை புகழ்ந்து கூறுவது இழிவு என்பது அறிவிலிக்குத் தோன்றாது. எனவே, தன்னைத் தானே புகழ்ந்து கூறிக் கொள்ளுகின்ற இவரது பித்துத் தன்மையானது, மருந்தினால் தீராது என்றார்.



"தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல்,தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்த்து அற்றால், –  தன்னை

வியவாமை அன்றே வியப்பு ஆவது, இன்பம்

நயவாமை அன்றே நலம்".           --- நீதிநெறி விளக்கம். 

இதன் பொருள் ---

     தன்னைப் பிறர் மதிக்கும்படி செய்வதற்காகத் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுதல் என்பது, குளிர்ந்த நீரை விட்டு எரிகின்ற நெருப்பை வளர்க்க நினைத்தது போல ஆகும். தீ வளரும் என்று குளிர்ந்த நீரை விட்டால், முன் இருந்த தீயும் எவ்வாறு அணைந்து போகுமோ, அதுபோல, தனது மதிப்பு உயரும் என்று நினைத்து, ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கூறிக் கொண்டால், தனக்கு முன்னர் இருந்த நன்மதிப்பும் அழிந்து போகும். எனவே, ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமல் இருப்பது மதிப்பை உண்டாக்கும்.


 

"சடம் அதைக் கழுவ உன்னிச் சகதியில் தோய்தல் போலும்,

சுடரினைத் தூண்ட வேண்டி ஊதியே தொலைத்தல் போலும்,

மடமையால் தன்னைத் தானே புகழுவோன் வசைகள் எல்லாம்

புடவியே எடுத்து உரைக்கப் பூணுவன் நிந்தை அம்மா".   --- நீதிநூல்.

இதன் பொருள் ---

     உடம்பைக் கழுவுவதற்காக் குளிக்கவேண்டும் என்று நினைத்துப் போய்ச் சேற்றில் மூழ்குதலும், விளக்கைத் தூண்ட விரும்பி அதனை ஊதி அணைத்தலும் போல, ஒருவன் அறியாமையால் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வானானால் உலகோர் அவனுடைய பழியையே எடுத்து உரைப்பர். அதனால் இகழ்வு பெறுவான்.


"தற் புகழ்வோன்தனைப் பழிக்கும் தாரணி,

சொற்புகழ் விரும்பிடான் தனைத் துதித்திடும்

நற்புகழ் பெறுவழி நன்ன டக்கையோடு

அற்பமும் தற் புகழாமை ஆகுமே".        --- நீதிநூல்.            

இதன் பொருள் --

     தன்னைத்தானே புகழ்ந்து கொண்டு செருக்குபவனை உலகில் உள்ளவர் பழிப்பர். தன் புகழைப் பிறர் கூறக் கேட்கவும் விரும்பாதவனை உலகோர் போற்றுவர். எனவே, நல்ல புகழை ஒருவன் பெறுவதற்குச் சிறந்த உபாயம், பிறருக்கு நன்மை செய்தலும், தன்னைத் தானே சிறிதும் புகழ்ந்து கொள்ளாமையுமே ஆகும்.

     தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுவதோடு, தன்னைத் துதி பாடுவதற்காகவே ஒரு கூட்டத்தையும் சிலர் வைத்து இருப்பர். இதனால், அவரது செல்வ நிலை மற்றும் அதிகார நிலையை வைத்து, அவரைக் கண்டபோது வேண்டுமானால், இச்சகம் பேசுவார்களே ஒழிய, புறத்திலே சென்று தூற்றிப் பேசுபவர்களும், இகழ்பவர்களுமே இருப்பார்கள் என்பதை அறிதல் வேண்டும்.

     புகழ் என்பது மலரில் இருந்து வீசுகின்ற நறுமணம்,காற்று வீசுகின்ற திசைகளில் எல்லாம் தன்னாலேயே பரவுவது போல அமைந்து இருக்கவேண்டும். சரி, ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுகின்றான் என்றால், அதன் விளைவு எப்படி இருக்கும் என்பது குறித்துத் திருவள்ளுவ நாயனார் கூறுவது காண்போம்.


"அமைந்தாங்கு ஒழுகான், அளவு அறியான், தன்னை

வியந்தான் விரைந்து கெடும்".

இதன் பொருள் ---

     சூழலுக்கு ஏற்றபடி பொருந்தி வாழாதவன், தனது வலிமை என்னவென்று அறியாதவன், தன்னைத் தானே வியந்து கொள்ளுவான். அப்படிப்பட்டவன் விரைந்து கெட்டுப் போவான்.


No comments:

058. கண்ணோட்டம் - 02. கண்ணோட்டத்து உள்ளது

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 58 -- கண்ணோட்டம் இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "உலக நடையானது கண்ணோட்டத்த...