திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை
இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "கடும் சொற்களைப் பேசுபவன் ஆகி, கருணை இல்லாதவனாக இருந்தால், அவனுடைய பெருஞ்செல்வம் நீண்ட காலம் நிலைத்து இராது, அப்பொழுதே அழிந்து விடும்" என்கின்றார் நாயனார்.
இதற்குத் திருக்குறள்...
கடும்சொல்லன், கண் இலன் ஆயின், நெடும் செல்வம்
நீடு இன்றி ஆங்கே கெடும்.
இதற்குப் பரிமேரழகர் உரை ---
கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் --- அரசன் கடிய சொல்லையும் உடையனாய்க் கண்ணோட்டமும் இலனாயின்:
நெடுஞ்செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும் --- அவனது பெரிய செல்வம் நீடுதலின்றி அப்பொழுதே கெடும்.
(வேட்டம், கடுஞ்சொல், மிகுதண்டம், சூது, பொருள்ஈட்டம், கள், காமமொடு ஏழு' எனப்பட்ட விதனங்களுள் கடுஞ் சொல்லையும் மிகு தண்டத்தையும் இவர் இவ்வெருவந்த செய்தலுள் அடக்கினார். 'கண்' ஆகு பெயர்.இவை செய்தபொழுதே கெடுஞ் சிறுமைத்து அன்றாயினும் என்பார் 'நெடுஞ் செல்வம்' என்றார். நீடுதல்: நீட்டித்தல்.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
“வெய்துஉரையால் அக்கணமே வீந்தான் சிசுபாலன்,
தொய்யின் முலைஉமைபாற் சோமேசா! --- உய்யாக்
கடுஞ்சொல்லன் கண்இலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடுஇன்றி ஆங்கே கெடும்.”
இதன்பொருள்---
தொய்யின் முலை உமைபால் சோமேசா - தொய்யில் எழுதிய முலைகளை உடைய உமாதேவியாரை ஒருபாகத்தில் உடைய சோமேசா!, கடும்சொல்லன் கண்இலன் ஆயின் - அரசன் கடிய சொல்லையும் உடையனாய்க் கண்ணோட்டமும் இல்லாதவனாயின், நெடுஞ்செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும் - அவனது பெரிய செல்வம் நீடுதலின்றி அப்பொழுதே கெடும்,
சிசுபாலன் - சிசுபாலன் என்னும் அரசன், வெய்து உரையால் - கடுமையான சொல்லால், உய்யா - சிறிது காலமும் உயிரோடிராமல், அக்கணமே வீந்தான் - அந்த நொடிப்பொழுதிலேயே இறந்து ஒழிந்தான் ஆகலான் என்றவாறு.
கண் - கண்ணோட்டம், ஆகுபெயர். நீடுதல் - நீட்டித்தல். உய்யா - உய்யாமல். நெடுஞ்செல்வம் - பரம்பரையாக வரும் செல்வம் என்பர் பரிப்பெருமாள்.
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் ஆகலின், கண்ணோட்டம் இனிய பார்வையுடையனாதல். அதாவது காண்பார் அணுகுதற்குக் காரணமாய இனிய நோக்கு. கடுஞ்சொல் இன்மை, உரையின் இனிமை இவ்விரண்டும் கூடிய வழியே அரசர்க்கு எவரும் வசமாவர்.
சிசுபாலன் --- சேதி நாட்டு அரசன்.
சிசுபாலன் என்பான் வசுதேவன் உடன் பிறந்தாளும் அதனால் கண்ணனுக்கு அத்தையும் ஆகிய சேதி மன்னன் மனைவி சுருதசிரவை என்பாளுடைய மகன். திருமாலின் துவாரபாலகர்களாகிய ஜயவிஜயர்கள் ஒருகால் வைகுண்டம் புகுந்த சனகாதியரைத் தடுத்தமை பற்றி மூன்று பிறப்பு திருமாலுக்குப் பகைவராய்ப் பிறந்து, திருமாலின் கையால் இறக்க என அவரால் சபிக்கப்பட்டு, இரணிய இரணியாட்சராகவும், இராவண கும்பகர்ணனாகவும், சிசுபால தந்தவக்ரராகவும் பிறந்தார்கள்.
இச் சிசுபாலன் பிறந்தபொழுது அவனுக்கு நான்கு கைகளும், மூன்று கண்களும் இருந்தன. யார் தொட்டால் அவை மறையுமோ, அவனால் இவனுக்கு மரணம் என்று ஆகாயவாணி கூற, அவ்வாறு பலரும் தொடுகையில், கண்ணன் தொட்ட அப்போதே அவை மறைய, கண்ணனால் அவனுக்கு மரணம் என்று அறிந்தார்கள்.
கண்ணனும் அவன் அத்தை வேண்ட நூறு பிழை பொறுப்பதாக வாக்களித்தான். ஏற்கெனவே சிசுபாலனுகுக் கண்ணனிடத்து உள்ள பகையானது, தனக்கென இருந்த உருக்குமிணியைக் கண்ணன் மணந்தபின் மேலிட்டது. தருமபுத்திரர் செய்த இராஜசூய யாகத்தில் அவர் கண்ணனுக்கு அக்ரபூசை செய்தமை கண்டு மனம் புழுங்கிக் கொதித்துக் கண்ணனைப் பல நூறுமுறை வைதமையின், அப்பெருமான் எதிர் ஒன்றும் கூறாது, சக்கரத்தை விட, அது அவன் தலையைத் துணிக்க, உடன் அவன் உடம்பினின்றும் ஒரு சோதி எழுந்து கண்ணன் திருவடியை அடைந்தது.
"பூபாலர் அவையத்து முற்பூசை
பெறுவார் புறங்கானில்வாழ்
கோபாலரோ என்று உருத்து அங்கு
எதிர்த்துக் கொதித்து ஓதினான்,
காபாலி முனியாத வெங்காம
நிகரான கவின்எய்திஎழ்,
தீபால் அடங்காத புகழ்வீர
கயமன்ன சிசுபாலனே",
"திண்ணியநெஞ் சினனான சிசுபாலன்
தன்நெஞ்சில் தீங்குதோன்ற
எண்ணிய மன் பேரவையில் இயம்பியபுன்
சொற்களெலாம் எண்ணி எண்ணிப்
புண்ணியர் வந்து இனிது இறைஞ்சும்
பூங்கழலோன் வேறொன்றும் புகலானாகிப்
பண்ணிய தன் புரவிநெடும்
பருமணித்தேர் மேற்கொண்டான் பரிதிபோல்வான்"
என்னும் வில்லிபுத்தூரார் பாரதக் கவிகள் காண்க.
‘இனிய சொல்லினன்; ஈகையன்; எண்ணினன்;
வினையன்; தூயன்; விழுமியன்; வென்றியன்;
நினையும் நீதி நெறி கடவான் எனில்,
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம்கொலோ?” --கம்பராமாயணம்,
‘(ஓர் அரசன்) இனிய சொல்லினன் - (கேட்டார்க்கு) இனிமை பொருந்தச் சொல்லும் இன்சொல் உடையவன்; ஈகையன் நல்ல கொடைத்திறம் உள்ளவன்; எண்ணினன்- ஆராய்ச்சி உடையவன்; வினையன் - முயற்சி உடையவன்; தூயன் - தூய்மையானவன்; விழுமியன் - சிறந்தவன்; வென்றியன் - வெற்றி உடையவன்; நினையும் நீதிநெறி கடவாதவன் - ஆராய்ந்து அறியும் நேர்மையில் சிறிதும் அகலாதவன்; எனில் - என்றால்; அனைய மன்னற்கு - அப்படிப்பட்ட அரசனுக்கு; அழிவும் உண்டாம் கொலோ? - கேடும் உண்டாகுமோ?’ (உண்டாகாது). (இவ்வாறு சுமந்திரன் இராமனுக்கு அறிவுரை பகர்ந்தான்)
No comments:
Post a Comment