திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 58 -- கண்ணோட்டம்
இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "தகுந்த அளவில் கண்ணோட்டம் இல்லாத கண்களானவை, பார்ப்பவர்க்கு முகத்தில் உள்ளது போல் தோன்றுமே அல்லாமல், வேறு என்ன பயனைச் செய்யும்?" என்கின்றார் நாயனார்.
"எவன் செய்யும்" என்றதால், ஒரு பயனையும் செய்யாது என்பது பெறப்படும்.
இதற்குத் திருக்குறள்...
“உளபோல் முகத்து எவன் செய்யும், அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.”
இதற்குப் பரிமேலழகர் உரை ---
முகத்து உளபோல் எவன் செய்யும் --- கண்டார்க்கு, முகத்தின்கண் உளபோலத் தோன்றல் அல்லது வேறு என்ன பயனைச் செய்யும்;
அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண் --- அளவிறவாத கண்ணோடுதலை உடைய அல்லாத கண்கள்.
('தோன்றல்', 'அல்லது' என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. கழிகண்ணோட்டத்தின் நீக்குதற்கு 'அளவினான்' என்றார். 'ஒரு பயனையும் செய்யா' என்பது குறிப்பெச்சம்.)
பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...
“தண்ணீர் நிலநலத்தால் தக்கோர் குணங்கொடையால்
கண் நீர்மை மாறாக் கருணையால் --- பெண்நீர்மை
கற்புஅழியா ஆற்றால், கடல்சூழ்ந்த வையகத்துள்
அற்புதமாம் என்றே அறி.” --- நல்வழி.
இதன் பொருள் ---
தண்ணீர் நில நலத்தால் - தண்ணீரானது நிலத்தினது நன்மையினாலும், தக்கோர் குணம் கொடையால் - நல்லோருடைய குணமானது ஈகையினாலும். கண் நீர்மை மாறாக் கருணையால் - கண்களுடைய குணமானது நீங்காத அருளினாலும், பெண் நீர்மை கற்பு அழியா ஆற்றால் - பெண்களுடைய குணமானது கற்புநிலை கெடாத வழியினாலும், கடல் சூழ்ந்த வையகத்துள் - கடல் சூழ்ந்த பூமியினிடத்து, அற்புதம் ஆம் - வியக்கத்தக்க மேன்மை உடையன ஆகும், என்று அறி - என்று நீ அறிவாயாக.
நில நன்மையினாலே தண்ணீருக்கும், கொடையினாலே நல்லோருக்கும், அருளினாலே கண்களுக்கும், கற்பினாலே பெண்களுக்கும் பெருமை உண்டாகும்.
“கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம், காமுற்ற
பெண்ணுக்கு அணிகலம் நாண்உடைமை, --- நண்ணும்
மறுமைக்கு அணிகலம் கல்வி, இம் மூன்றும்
குறி உடையோர் கண்ணே உள.” --- திரிகடுகம்.
இதன் பொருள் ---
கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம் - கண்களுக்கு, அணியத் தக்க பூணாவது கண்ணோடுதல்; காமுற்ற பெண்ணுக்கு அணிகலம் நாண் உடைமை - கணவனால் விரும்பப்பட்ட குலமகளுக்கு அணிகலனாவது நாணம் உடையவளாயிருத்தல்; நண்ணும் மறுமைக்கு அணிகலம் கல்வி - உயிருக்கு வந்த பொருந்துகின்ற மறுப்பிறப்புக்கு அணிகலனாவது கல்வி அறிவு; இ மூன்றும் - ஆகிய இம் மூன்றும், குறி உடையார் கண்ணே உள - ஆராயும் இயல்புடையாரிடத்தே உண்டு.)
கண்ணோட்டத்தால் கண்ணும், நாணத்தால் பெண்ணும், கல்வியால் மறுமையும் அழகு பெறும் என்பது.
கண்ணோட்டமாவது தன்னோடு பழகினவர் சொன்னவற்றை மறுக்க மாட்டாமை;. அஃது அவர்மேல் கண் சென்ற பின்பே உண்டாவது பற்றி கண்ணோட்டம் என்று காரண ஆகுபெயர் ஆயிற்று. நாணம் - பெண்களுக்குரிய நாற்குணங்களில் முதன்மையானது. மற்றவை மடம் அச்சம் பயிர்ப்பு என்பன. சிற்றுயிர்க்கு உற்ற துணையாகிய கல்வி ஒருவனுக்கு இம்மையில் நன்மையைச் செய்து மறுமையிலும் இன்பம் தருதலால் மறுமைக்கு அணிகலம் என்றார்.
“பண்உக்கு வாம் பரித் தேர் ஆதபனும்,
பணிந்து பசுபதியை நோக்கி
மண்ணுக்குத் தவம் புரியும் தனஞ்சயற்குக்
கோடையினும், மதியம் போன்றான்;
எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும்
கண் ஆவான் இவனே அன்றோ?
'கண்ணுக்குப் புனை மணிப் பூண் கண்ணோட்டம்'
என்பது எல்லாம் கருணை அன்றோ?” --- வில்லிபாரதம், அருச்சுனன் தவம்.
இதன் பொருள் ---
பண் உக்கு வாம் பரி ஆதவனும் – கல்லணை அறுந்து விழும்படி தாவி ஓடுகின்ற குதிரைகள் பூட்டிய இரதத்தை உடைய சூரியனும், பசுபதியை நோக்கிப் பணிந்து - பரமசிவனைக் குறித்து வணங்கி, மண்ணுக்குத் தவம் புரியும் தனஞ்செயற்கு - (பாசுபதாஸ்திரம் பெற்றுப் பகைவரை வென்று) இராச்சியத்தைப் பெறும்பொருட்டுத் தவம் செய்கின்ற, அருச்சுனனுக்கு, கோடையினும் மதியம் போன்றான் - வெயில் காலத்திலும் சந்திரனை ஒத்துக் குளிர்ந்திருந்தான்; (ஏனெனில்), எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண் ஆவான் இவனே அன்றோ - (பதினான்கு என்கிற) கணக்குக்கு வருகின்ற உலகங்கள் எல்லாவற்றிற்கும், கண்ணைப் போன்றவன் இச் சூரியனே ஆவான் அல்லவா? கண்ணுக்குப் புனை மணிப் பூண் என்பது எலாம் –கண்ணுக்கு அணிதற்குரிய அழகிய ஆபரணம் என்று சொல்லுவது எல்லாம், கண்ணோட்டம் கருணை அன்றோ --- (பிறர்மேல்) கண் சென்றபோது உண்டாகின்ற, கருணையே அல்லவா?
"கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்" என்றபடி கண்ணுக்கு அழகு செய்வது கருணை என்பது நன்கு அறியப்பட்ட நிலை (பிரசித்தம்) என்பதால், உலகம் அனைத்துக்கும் கண்ணாக இருக்கின்ற சூரியன் மிகக் கருணை உடையவனாகத் தவம் செய்யும் அருச்சுனனைக் கோடைக் காலத்திலும் சுடாமல் இருந்தான் என்றார். இவ்வருச்சுனன் கடும் கோடை வெப்பத்தை அலட்சியம் செய்து தவம் புரிந்தான் என்பது இவ்வாறு சொல்லப்பட்டது. சூரியனுக்கு "ஜகச்சட்சு" (ஜகம் – உலகம். சட்சு --- கண்) என்று ஒருபெயர் வடமொழியில் உண்டு. எனவே, "கண் ஆவான் இவன்" என்று சூரியனைக் குறித்தார் கவிச்சக்கரவர்த்தி.
No comments:
Post a Comment