திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 58 -- கண்ணோட்டம்
இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "இசையானது பாடல் தொழிலோடு பொருந்துவது இல்லையாயின், என்ன பயனைச் செய்யும்? அதுபோல, கண்ணானது கண்ணோட்டம் இல்லாதபோது என்ன பயனைச் செய்யும்?" என்கின்றார் நாயனார்.
இசையானது கேட்போர் மகிழும்வண்ணம் பாடப்படுதல் வேண்டும். பொருத்தம் இல்லாத பண் ஒன்றினால் பாடுகின்ற பாடல் பாடுகின்றவருக்கும் கேட்போர்க்கும் பயன்படாது.
அதுபோல, கண் இருந்தால், கண்ணோட்டம் இருக்கவேண்டும். அது இல்லையானால், கண்ணால் பயன் இல்லை.
இதற்குத் திருக்குறள்...
"பண் என்ஆம் பாடற்கு இயைபு இன்றேல், கண் என்ஆம்
கண்ணோட்டம் இல்லாத கண்."
இதற்குப் பரிமேலழகர் உரை ---
பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல் --- பண் என்ன பயத்ததாம் பாடல் தொழிலோடு பொருத்தமின்றாயின்;
கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் --- அதுபோலக் கண் என்ன பயத்ததாம் கண்ணோட்டமில்லாத இடத்து.
('பண்', 'கண்' என்பன சாதிப்பெயர், பண்களாவன: பாலையாழ் முதலிய நூற்றுமூன்று. பாடல் தொழில்களாவன: யாழின்கண் வார்தல் முதலிய எட்டும், பண்ணல் முதலிய எட்டும், மிடற்றின்கண் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம் என்னும் ஐந்தும், பெருவண்ணம், இடை வண்ணம், வனப்பு வண்ணம் முதலிய வண்ணங்கள் எழுபத்தாறுமாம்.. இவற்றோடு இயையாத வழிப் பண்ணால் பயன் இல்லாதவாறு போலக் கண்ணோட்டத்து இயையாத வழிக் கண்ணால் பயனில்லை என்பதாம். கண் சென்ற வழி நிகழ்தல் பற்றி அதனை இடமாக்கினார். இறுதிக்கண் 'கண்' என்பதனைக் 'கண்ணகல் ஞாலம்' (திரிகடுகம் 1) என்புழிப் போலக் கொள்க.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...
கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை,
எண்வனப்பு இத்துணையாம் என்றுஉரைத்தல் - பண்வனப்புக்
கேட்டார்நன்று என்றல், கிளர்வேந்தன் தன்நாடு
வாட்டான்நன்று என்றல் வனப்பு. --- சிறுபஞ்சமூலம்.
இதன் பொருள் ---
கண் வனப்பு கண்ணோட்டம் - கண்ணுக்கு அழகாவது பிறர்மேற் கண்ணோடுதலாம்; கால் வனப்பு செல்லாமை - கால்களுக்கு அழகாவது பிறரிடத்தில் இரக்கப் போகாமையாம்; எண் வனப்பு இத் துணை ஆம் என்று உரைத்தல் - ஆராய்ச்சிக்கு அழகாவது பொருளை அறுதியிட்டு முடிவு செய்தலாம்; பண் வனப்பு கேட்டார் நன்று என்றல் - இசைக்கு அழகாவது அதனைக் கேட்டவர்கள் இது நல்லது என்று புகழ்ந்து உரைத்தலாம்; கிளர் வேந்தன் வனப்பு, தன் நாடு வாட்டான் என்றல் - புகழினால் விளங்குகின்ற அரசனுக்கு அழகாவது, தனது நாட்டிலுள்ள குடிகளை, இவன்) வருத்தான், இவனுடைய ஆட்சி நல்லது, என்று உலகத்தவர் அவனைப் புகழ்ந்து கூறுதலாம்.
பண் அமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிது இன்னா;
எண் இறியா மாந்தர் ஒழுக்குநாட் கூற்று இன்னா;
மண்ணில் முழவின் ஒலி இன்னா; ஆங்கு இன்னா
தண்மை யிலாளர் பகை. --- இன்னா நாற்பது.
இதன் பொருள் ---
பண் அமையா யாழின் கீழ் பாடல் பெரிது இன்னா - இசை கூடாத யாழின் கீழிருந்து பாடுதல் மிகவும் துன்பமாம்; எண் அறியா மாந்தர் ஒழுக்கு நாள் கூற்று இன்னா - குறி நூல் (சோதிடம்) அறியாத மாக்கள் ஒழுகுதற்குரிய நாள் கூறுதல் துன்பமாம்; மண் இல் முழவின் ஒலி இன்னா - மார்ச்சனை இல்லாத மத்தளத்தினது ஓசை துன்பமாம்; ஆங்கு - அவ்வாறே, தண்மை இலாளர் பகை இன்னா - தண்ணிய குணம் இல்லாதவரது பகையானது துன்பமாம்.
No comments:
Post a Comment