பொது --- 1126. பட்டாடைக்கே

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

பட்டு ஆடைக்கே (பொது)


முருகா! 

திருவடியில் அணுக வரம் அருள்வாயே


தத்தா தத்தா தத்தா தத்தா

     தத்தா தத்தத் ...... தனதான


பட்டா டைக்கே பச்சோ லைக்கா

     துக்கே பத்தித் ...... தனமாகும்


பக்கே நிட்டூ ரப்பார் வைக்கே

     பட்டா சைப்பட் ...... டுறவாடி


ஒட்டார் நட்டார் வட்டா ரத்தே

     சுற்றே முற்றத் ...... தடுமாறும்


ஒட்டா ரப்பா விக்கே மிக்கா

     முற்றாள் கிட்டத் ...... தகுமோதான்


கட்டா விப்போ துட்டா விப்பூ

     கக்கா விற்புக் ...... களிபாடுங்


கற்பூர் நற்சா ரக்கா ழித்தோய்

     கத்தா சத்தித் ...... தகவோடே


முட்டா கக்கூ ரிட்டே னற்றாள்

     முற்றா மற்கொட் ...... குமரேசா


முத்தா முத்தீ யத்தா சுத்தா

     முத்தா முத்திப் ...... பெருமாளே.


                 பதம் பிரித்தல்


பட்டு ஆடைக்கே, பச்சு ஓலைக் கா-

     துக்கே, பத்தித் ...... தன மா கும்-


பக்கே, நிட்டூரப் பார்வைக்கே,

     பட்டு ஆசைப்பட்டு ...... உறவாடி,


ஒட்டார் நட்டார் வட்டாரத்து

     ஏசு உற்றே, முற்றத் ...... தடுமாறும்


ஒட்டாரப் பாவிக்கே, மிக்குஆம்

     உன் தாள் கிட்டத் ...... தகுமோதான்?


கள் தாவிப் போது உள் தாவிப் 

பூகக் காவில் புக்கு ...... அளிபாடும்


கற்பு ஊர் நற்சார் அக் காழித் தோய் 

கத்தா, சத்தித் தகவோடே,


முட்டாகக் கூரிட்டு ஏனல் தாள்

     முற்றாமல் கொள் ...... குமரேசா!


முத்தா! முத்தீ அத்தா! சுத்தா!

     முத்தா! முத்திப் ...... பெருமாளே.

பதவுரை

கள் தாவி, போது உள் தாவிப் பூகக் காவில் புக்கு அளிபாடும் --- தேனை நாடி அலைந்து, மலர்களின் உள்ளே பாய்ந்து,  பாக்கு மரச் சோலைக்குள்ளே புகுந்து வண்டுகள் பாடுகின்ற,

கற்பு ஊர் நற்சார் --- இல்லற ஒழுக்கம், கல்வி நலம், நீதிநெறி, இறைதியானம் ஆகியவை பொருந்திய நல்லோர் சார்பினை உடைய,

அக் காழித் தோய் கத்தா --- அந்தச் சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் முதல்வரே!

சத்தித் தகவோடே முட்டாகக் கூரிட்டு --- இச்சா சக்தியின் அம்சம் பொருந்தியுள்ள வள்ளிநாயகியின் முன்னே எதிர்ப்பட்டு அருள் புரிய வேண்டும் என்ற எண்ணம் மிகுதிப்பட்டு,

ஏனல் தாள் முற்றாமல் கொள் குமரேசா --- தினைப்புனத்தில் உள்ள பயிர்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்னமேயே அந்த வள்ளிநாயகிக்கு அருள் புரிந்து ஆட்கொண்ட குமாரக் கடவுளே!

முத்தா --- முத்தி நிலைக்கு அதிபரே!

முத்தீ அத்தா --- ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம் என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே! 

சுத்தா --- தூயவரே!

முத்தா --- பற்று அற்றவரே!

முத்திப் பெருமாளே --- உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!

பட்டு ஆடைக்கே --- பட்டுப் புடைவையின் அழகுக்கும்,

பச்சை ஓலைக் காதுக்கே --- பசும்பொன்னினால் ஆன தோட்டினை அணிந்துள்ள காதுகளின் அழகுக்கும்,

பத்தித் தன மா கும்பக்கே --- ஒழுங்காக அமைந்துள்ள பெரிய கலசங்களை ஒத்த முலைகளின் மீதும்,

நிட்டூரப் பார்வைக்கே பட்டு --- உள்ளத்தில் காமக் கொடுமையை விளைவிக்கும் பார்வையில் அகப்பட்டு,

ஆசைப்பட்டு உறவாடி --- விலைமாதர் மீது ஆசை வைத்து, அவர்களோடு உறவாடி,

ஒட்டார் நட்டார் வட்டாரத்து ஏசு உற்றே --- பகைவர்கள், மட்டுமல்லாது  நண்பர்கள் சூழலிலும் பழிச் சொல்லுக்கு ஆளாகி,

முற்றத் தடுமாறும் ---முழுதும் மனத் தடுமாற்றத்தை அடைந்துள்ள,

ஒட்டாரப் பாவிக்கே --- பிடிவாதக்காரன் ஆகிய இந்தப் பாவிக்கு, 

மிக்காம் உன் தாள் கிட்டத் தகுமோதான் --- மேலான தேவரீரது திருவடிகளைக் கிட்டும்படியான தகுதி உண்டோ?


பொழிப்புரை

தேனை நாடி அலைந்து, தேன் உள்ள மலர்களின் உள்ளே பாய்ந்து,  பாக்கு மரச் சோலைக்குள்ளே புகுந்து வண்டுகள் பாடுகின்ற சோலைகளை உடையதும், இல்லற ஒழுக்கம், கல்வி நலம், நீதிநெறி, இறைதியானம் ஆகியவை பொருந்திய நல்லோர் சார்பினை உடையதும் ஆகிய அந்தச் சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் முதல்வரே!

இச்சா சக்தியின் அம்சம் பொருந்தியுள்ள வள்ளிநாயகியின் முன்னே எதிர்ப்பட்டு அருள் புரிய வேண்டும் என்ற எண்ணம் மிகுதிப்பட்டு, தினைப்புனத்தில் உள்ள பயிர்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்னமேயே அந்த வள்ளிநாயகிக்கு அருள் புரிந்து ஆட்கொண்ட குமாரக் கடவுளே!

முத்தி நிலைக்கு அதிபரே!

ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினம் என்னும் மூன்று வேள்வித் தீக்குத் தலைவரே! 

தூயவரே!

பற்று அற்றவரே!

உயிர்களுக்கு முத்தியை அளிக்கும் பெருமையில் மிக்கவரே!

பட்டுப் புடைவையின் அழகிலும், பசும்பொன்னினால் ஆன தோட்டினை அணிந்துள்ள காதுகளின் அழகிலும், ஒழுங்காக அமைந்துள்ள பெரிய கலசங்களை ஒத்த முலைகளின் மீதும்,மனதை வைத்து, உள்ளத்தில் காமக் கொடுமையை விளைவிக்கும் விலைமாதரின் பார்வையில் அகப்பட்டு, ஆசை வைத்து, அவர்களோடு உறவாடி, பகைவர்கள், மட்டுமல்லாது  நண்பர்கள் சூழலிலும் பழிச் சொல்லுக்கு ஆளாகி, முழுதும் மனத் தடுமாற்றத்தை அடைந்துள்ள, பிடிவாதக்காரன் ஆகிய இந்தப் பாவிக்கு, மேலான தேவரீரது திருவடிகளைக் கிட்டும்படியான தகுதி உண்டோ?


விரிவுரை


பலபாடல்களிலும் விலைமாதரால் உண்டாகும் கேடு குறித்துப் பாடி நம்மை அறிவுறுத்தியுள்ள அடிகளார், இப் பாடலிலும் அதை வலியுறுத்தியுள்ளார். நெறி தவறி நடந்தால் ஆகாதவர்கள் ஆனவர்கள் என்று எல்லோராலும் இகழப்படும் நிலை உருவாகும் என்பதை இந்தப் பாடலில் காட்டி உள்ளார்.

காமத்துள் அழுந்தி நின்று  கண்டரால் ஒறுப்புஉண் ணாதே

சாமத்து வேதம் ஆகி நின்றதுஓர் சயம்பு தன்னை

ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்பு வார்க்கு

ஓமத்துள் ஒளியது ஆகும் ஒற்றியூர் உடைய கோவே.    ---  அப்பர்.

தம் மனைவி அல்லாத மற்றப் பெண்களை எல்லாம் இந்நாட்டவர், 'அம்மா' என்று அழைப்பது மரபு. மனைவியையும் 'அம்மா' என்றே அழைக்கும் பக்குவம் உள்ளவர்களும் உண்டு. அம்மா என்று அழைக்கும் உள்ளத்திலே அவகாமம் தோன்றாது. சிவகாமம் தோன்றும். எல்லாப் பற்றுக்களையும் அறத் துறந்து, தவநிலையில் வாழ்பவர்களின் உள்ளத்தையும் வளைத்துப் பிடித்து, பதைக்கப் பதைக்க வதைக்கின்ற வல்லமை பொதுமகளிரின் கண் பார்வைக்கு உண்டு. விலைமாதர்கள் தமது கண் வலையை வீசியும், சொல் வலையை வீசியும் காமுகரைத் தன்வசப் படுத்துவார்கள். பெண்களின் எழிலானது ஆடவரின் உள்ளத்தை மயக்கும். அவர் தரும் இன்பத்திற்காக உள்ளமானது ஏங்கி வருந்தும். இது இறுதியில் துன்பத்திற்கே ஏதுவாகும்.

இந்த மயக்கத்தினால் வரும் துன்பமானது தீரவேண்டுமானால், இறையருள் பெற்ற அடியார்களின் திருக்கூட்டத்தில் இருப்பது தான் ஒரே வழி. பெண்மயலானது எப்பேர்ப் பட்டவரையும் விட்டு வைத்தது இல்லை. உலகப் பற்றுக்களை நீத்து, இறைவனது திருவடியைச் சார, பெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்தி, அவர் தரும் இன்பத்தை நாடி வருகின்ற மான் போன்றவர்கள் விலைமாதர்கள். விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும்.


மணிவாசகப் பெருமானும், திருவாசகத்தில் பின்வருமாறு பாடி அருளினார்....

"வேனில்வேள் மலர்க்கணைக்கும், 

வெண்ணகைச் செவ்வாய், கரிய

பானலார் கண்ணியர்க்கும் 

பதைத்து உருகும் பாழ்நெஞ்சே!

ஊன்எலாம் நின்று உருகப் 

புகுந்து ஆண்டான், இன்றுபோய்

வானுளான் காணாய், நீ 

மாளா வாழ்கின்றாயே".    ---  திருவாசகம்.


"பெண்ஆகி வந்து, ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டு, என்னை

கண்ணால் வெருட்டி, முலையால் மயக்கி, கடிதடத்துப்

புண்ஆம் குழியிடைத் தள்ளி, என் போதப் பொருள் பறிக்க,

எண்ணாது உனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!"


"மண்காட்டிப் பொன்காட்டி மாயஇருள் காட்டிச்

செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்,

கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கி,மிக

அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே."  


என்று பாடுகின்றார் பட்டினத்து அடிகளார்.


மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,

பீதிதரும் அல்குல் பெருநகரம், - ஓதில்அதில்

வீழ்ந்தோர்க்கும் ஏற விரகுஇல்லை, போரூரைத்

தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.         


என்கின்றார் (திருப்போரூர்ச் சந்நிதி முறை) திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்.


விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார். காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். ஆனால், இவை இறையருள் வாய்க்கப் பெறாத முனிவருக்கு உரியவை. காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய அருளாளரைப் பொது மகளிர் மயக்க இயலாது. திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான். அப்போது அரம்பை முதலிய வானமாதர்கள் வந்து அவர் முன்னே,


"ஆடுவார், பாடுவார், அலர்மாரி மேல்பொழிவார்,

கூடுவார் போன்று அணைவார், குழல் அவிழ இடைநுடங்க

ஓடுவார், மாரவேளுடன் மீள்வர்; ஒளிபெருக

நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்"  


என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் அருளிய "பெரியபுராணம்" கூறுகின்றது. இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. “உமக்கு இங்கு என்ன வேலை? போமின்” என்று அருளிச் செய்தார். ஆதலால், இறைடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள். "ஞான வேலைப் படையாக உடைய கந்தப் பெருமானே" என்று ஓலமிட்டு அழைத்து அலறினால், வேற்படை துணையாக வரும். இளைத்துத் தவிக்கின்ற நிலை வராது.


கற்பு --- 

கற்பு என்னும் சொல், இல்லற ஒழுக்கம், கல்வி நலம், நீதிநெறி, இறைதியானம் என்னும் பொருள்களையும் உடையது.


காழித் தோய் கத்தா --- 

கர்த்தர் என்னும் சொல் பாடலின் சந்தம் நோக்கி, “கத்தா” என வந்தது. காழி என்பது சீகாழி என்னும் திருத்தலத்தைக் குறிக்கும். சோழ நாட்டில் உள்ள திருத்தலம். திருஞானசம்பந்தப் பெருமான் திரு அவதாரம் புரிந்தது. குரு, இலிங்க, சங்கம வழிபாட்டு முறையில் பிரமன் பூசித்த பிரமபுரீசுவரர் இலிங்கமாகவும்,திரு ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் தந்தருளிய தோணியப்பர் குருமூர்த்தமாகவும், சட்டைநாதர் சங்கம வடிவினராகவும் உள்ளது. ஐந்தொழில்களைச் செய்தருளுவதற்கு இலிங்கமாகவும், பக்குவ ஆன்மாக்களுக்கு உபதேசம் புரிந்து, சிவஞானச்செல்வத்தை அளிப்பதற்குக் குருவடிவமாயும், பேரின்ப சித்திகளை அருளுவதற்கு சங்கம வடிவாயும், இறைவன் உள்ளார்.


இத் திருத்தலத்திற்கு வழங்கப்படும் பன்னிரண்டு பெயர்கள் குறித்துப் பின்வருமாறு காண்க.


பிரமபுரம் வேணுபுரம் புகலி பெரு வெங்குரு நீர்ப்

பொருஇல் திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன்

வருபுறவம் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம்

பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால்.      ---  பெரியபுராணம்.


1.    பிரமபுரம் –  பிரமதேவர் பூசித்துப் பெறு பெற்றதலம்.


தோடுஉடைய செவியன் விடைஏறி ஓர்தூவெண் மதி சூடி

காடுஉடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்

ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள் செய்த

பீடு உடைய பிராமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே


சேவுயரும் திண்கொடியான் திருவடியே

         சரண் என்று சிறந்த அன்பால்

நா இயலும் மங்கையொடு நான்முகன்தான்

         வழிபட்ட நலம் கொள் கோயில்

வாவிதொறும் வண்கமலம் முகம்காட்டச்

         செங்குமுதம் வாய்கள் காட்டக்

காவிஇரும் கருங்குவளை கருநெய்தல்

         கண்காட்டும் கழுமலமே


எனத் திருஞானசம்பந்தப் பெருமானார் அருளிச் செய்து இருத்தல் காண்க.


2.    வேணுபுரம் –  சூரபதுமனுக்கு அஞ்சிய தேவேந்திரன் இங்குப் போந்து வழிபட்ட பொழுது, சிவபெருமான் வேணு (மூங்கில்) வடிவில் முளைத்து அருள்புரிந்த தலம். தேவேந்திரன் தன் இடுக்கண் நீங்க வேணு வழியாய் இத்தலத்தை அடைந்து பூசித்தனன் என்றும் கூறுவர்.


3.    புகலி – சூரபதுமனால் இடுக்கண் எய்திய தேவர்கள் சிவபிரானைப் புகல் அடைந்து, அடைக்கலம் புகுந்து வணங்கிய தலம்.


4.    வெங்குரு – அசுரர்களின் குருவாகிய சுக்கிரன் வழிபட்டுத் தேவகுருவாகிய பிருகற்பதிக்குச் சமத்துவம் பெற்ற தலம்.  எமதருமன் தன்னைக் கொடியவன் என்று உலகம் இகழாதவாறு இறைவனை வழிபட்டு உய்ந்த தலம்.


5.    தோணிபுரம் – ஊழிமுடிவில் சிவபெருமான் உமாதேவியாரோடு பிரணவம் ஆகிய தோணியில் வீற்றிருப்பத் தான் அழியாமல், நிலைபேறு எய்தித் திகழும் தலம்.


6.    பூந்தராய் – சங்கநிதி பதுமநிதி என்னும் இருநிதிகளும் பூவும் தாருமாய்ப் பூசித்து அழியாவரம் பெற்ற தலம்.


7.    சிரபுரம் – சயிங்கேயன் என்னும் அசுரன் வேற்று வடிவம் கொண்டு மறைந்து வந்து தேவர்களுடன் இருந்து அமிர்தம் உண்ணும் நிலையில் சூரியனால் கண்டுபிடிக்கப்பட்டு, விட்டுணுவால் சிரம் வெட்டுண்ட தலம்.


8.    புறவம் – சிபிச் சக்கரவர்த்தியைச் சோதித்தற்கு அக்கினிதேவன் புறாவடிவம் கொண்டு போந்து, புறாவின் எடை அளவிற்குத் தன் தசையை அரிந்து கொடுத்தும், அது போதாமை கண்டு, அவனே துலை ஏறித் தன் வள்ளன்மையினைப் புலப்படுத்திய நிலையில், புறா வடிவம் கொண்ட அக்கினிதேவன், அப்பாவம் அழியுமாறு வழிபட்டு உய்ந்த தலம்.


9.    சண்பை – கபில முனிவர் சாபத்தின்படி தம் குலத்தினன் வயிற்றில் பிறந்த இருப்பு உலக்கையைப் பொடியாக்கிக் கொட்டிய துகள், சண்பைப் புல்லாக முளைத்து இருந்ததை ஆயுதமாகக் கொண்டு போர் செய்து மடிந்த யாதவர்களின் கொலைப்பழி, தன்னை அணுகாவண்ணம் கண்ணன் பூசித்த தலம்.


10.   சீர்காழி – காளிதன் என்னும் நாகம் வணங்கிய தலம்.  நடனத்தில் தோற்ற காளி வழிபட்டுப் பேறுபெற்ற தலம்.


11.   கொச்சைவயம் – பராசரர் தாம் மச்சகந்தியை ஆற்றிடையில் புணர்ந்து அடைந்த தீநாற்றமும், பழியும் போகும் வண்ணம் இறைஞ்சி உய்ந்த தலம்.


12.   கழுமலம் – உரோமச முனிவர் இறைவனை வழுத்தி ஞானோபதேசம் பெற்றுத் தம்முடைய மலங்களைக் கழுவப்பெற்ற தலம்.


சத்தித் தகவு ---

தகவு – தகுதி, உரிமை, குணம், பெருமை, அருள், அறிவு, தெளிவு, கற்பு, நன்மை, நல்லொழுக்கம். இத்தகு நற்பண்புகள் அனைத்தும் பொருந்தியவர் வள்ளிநாயகியார். அவர் இச்சாசத்தி ஆவார்.

கருத்துரை

முருகா! திருவடியில் அணுக வரம் அருள்வாயே.





No comments:

பொது --- 1126. பட்டாடைக்கே

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பட்டு ஆடைக்கே (பொது) முருகா!  திருவடியில் அணுக வரம் அருள்வாயே தத்தா தத்தா தத்தா தத்தா      தத்தா தத்தத் .....