“தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்,
வேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்,
கோளாளன் என்பான் மறவாதான், இம்மூவர்
கேளாக வாழ்தல் இனிது.” -- திரிகடுகம்.
நன்முயற்சியை உடையவன் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன் கடன் படாமல் வாழ்க்கையை நடத்துபவன். உதவியாளன் என்று சொல்லப்படுவோன், வந்த விருந்தினர் பசித்து இருக்கையில், தான் மட்டும் தனித்து உண்ணாதவன். ஆசிரியர் சொல்லக் கேட்டவற்றை மறவாது மனத்தில் கொண்டு இருக்கும் நற்சிந்தை உடையவன் நல்ல கொள்கையாளன் ஆவான். இம் மூவரும் தனக்கு நட்பினராயிருக்க ஒருவன் வாழ்வது, அவனுக்கு நன்மை தருவதாகும்.
(தாளாண்மை – ஊக்கம், விடாமுயற்சி. வேளாண்மை -உதவி புரிதல், கொடை. கோள் – கொள்ளுதல். கேள் – உறவு, நட்பு)
கடன்படாது வாழ்வதே நல்ல முயற்சி. வீட்டுக்கு வந்த விருந்தினரைப் பேணுதலே சிறந்த உதவி. ஆசிரியர் சொல்லியவற்றை மறவாது மனத்தில் கொண்டிருத்தலே நற்சிந்தை.
“செட்டிமக்கள் வாசல்வழிச் செல்லோமே, செக்காரப்
பொட்டிமக்கள் வாசல்வழிப் போகோமே,- முட்டிபுகும்
பார்ப்பாரகத்தை எட்டிப் பாரோமே, எந்நாளும்
காப்பாரே வேளாளர் காண்.” -- ஏர் எழுபது. (கம்பர்)
No comments:
Post a Comment