திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 57 -- வெருவந்த செய்யாமை
இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "பேசுகின்ற கடுமையான மொழிகளும், முறை கடந்த தண்டையும், அரசனின் பகை கெடுக்கும் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும், வலிமையுடைய இரும்பினைத் தேய்க்கின்ற அரம் போன்று ஆகும்" என்கின்றார் நாயனார்.
பகையைத் தேய்க்கும் வல்லமையை வலிமை மிக்க இரும்பாகவும், கடுமொழியையும், கையிகந்த தண்டத்தையும் அரம் ஆகவும் உருவகம் செய்தார்.
கடுமொழியால் சேனைகளும், கையிகந்த தண்டத்தால் குடிமக்களும் அரசனிடத்து அன்பு இல்லாது போவார்கள். அதனால் அவனது ஆண்மை சுருங்கி வரும்.
இதற்குத் திருக்குறள்...
கடுமொழியும், கைஇகந்த தண்டமும், வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.
இதற்குப் பரிமேலழகர் உரை ---
கடுமொழியும் கையிகந்த தண்டமும் --- கடிய சொல்லும் குற்றத்தின் மிக்க தண்டமும்,
வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் --- அரசனது பகை வெல்லுதற்கேற்ற மாறுபாடாகிய இரும்பினைத் தேய்க்கும் அரமாம்.
(கடுமொழியால் தானையும், கையிகந்த தண்டத்தால் தேசமும் கெட்டு, முரண் சுருங்கி வருதலின், அவற்றை அரமாக்கித் திண்ணிதாயினும் தேயும் என்றற்கு அடுமுரணை இரும்பாக்கினார். ஏகதேச உருவகம். அரம் என்பதனைத் தனித்தனி கூட்டுக. இவைஐந்து பாட்டானும், செவ்வியின்மை, இன்னாமுகம் உடைமை, கண்ணோட்டம் இன்மை, கடுஞ்சொற் சொல்லல், கைஇகந்த தண்டம் என்று இவைகள் குடிகள் அஞ்சும் வினையென்பதூஉம், இவைசெய்தான் ஆயுளும் அடுமுரணும் செல்வமும் இழக்கும் என்பதூஉம் கூறப்பட்டன.
இத் திருக்குறளுக்கு ஒப்பாக பின்வரும் பாடல் அமைந்துள்ளதை அறியலாம்...
“கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்தல் இன்னா;
நெடுநீர் புணையின்றி நீந்துதல் இன்னா;
கடுமொழி யாளர் தொடர்பு இன்னா; இன்னா
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு.” --- இன்னா நாற்பது.
இதன் பொருள் ---
கொடுங்கோல் மறமன்னர் கீழ் ஆழ்தல் இன்னா - கொடுங்கோல் செலுத்தும் கொலைத் தொழிலையுடைய அரசரது ஆட்சியின் கீழ் வாழ்வது துன்பத்தைத் தரும்; நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா - மிக்க நீரை தெப்பமில்லாமல் கடந்து செல்லுதல் துன்பத்தில் முடியும்; கடுமொழியாளர் தொடர்பு இன்னா - வன்சொல் கூறுவோரது நட்பு துன்பத்திலு முடியும்; உயிர்க்கு தடுமாறி வாழ்தல் இன்னா --- உயிர்களுக்கு மனத்தடுமாற்றம் அடைந்து, வாழ்வது துன்பமானது.
No comments:
Post a Comment