50. இறைவன் அடியாரிடத்தில் விளக்கம் பெறுவான்

“இந்து, இரவி நீள்கிரணம் எங்கும் நிறைந்தாலும்,

இந்து இரவி காந்தத்து இலங்குமே; - இந்து இரவி

நேத்திரத்தோன் எங்கும் நிறைந்தாலும், நித்தன்அருள்

நேத்திரத்தோர் பாலே நிறைவு.” -- நீதிவெண்பா.


சந்திரன், சூரியன் என்பவைகளின் நீண்ட ஒளிகள் உலகம் முழுவதும் நிறைந்து இருந்தாலும், அவற்றின் ஒளிகள் காந்தக் கல்லினிடத்து மிகுதியாகத் தோன்றும். அதுபோல, சந்திரன், சூரியன் என்னும் இரண்டையுமே தன் இரண்டு கண்களாக உடைய இறைவன் உலகம் முழுவதும் நிறைந்து இருந்தாலும், அந்த இறைவனின் விளக்கம், அருள் பார்வை உடைய அடியவர்களித்தே தான் மிகுதியாக உண்டு.


(இந்து - சந்திரன். இரவி - சூரியன்.  கிரணம் - ஒளி.  நேத்திரம் - கண்.  நித்தன் - என்றும் நிலைத்து இருக்கும் இறைவன். நேத்திரத்தோர் - அடியவர்.)



055. செங்கோன்மை - 10. கொலையின் கொடியாரை

 திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல் 

அதிகாரம் 55 -- செங்கோன்மை


இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "அரசனானவன், கொடியவர்களைக் கொலையினால் தண்டித்து, நல்லோரைக் காப்பாற்றுதல், உழவனானவன், களையைக் களைந்து பயிரைக் காப்பது ஒக்கும்" என்கின்றார் நாயனார்.

கொடியவர் என்றது ஆததாயிகளை. (ஆததாயிகள் – கொடியோர்) அவர், தீயிடுவோர், நஞ்சு இடுவோர், கருவிகளால் கொல்வோர், கள்வர், ஆறலைப்போர் (வழிப்பறி செய்வோர்), சூறைகொள்வோர் (கொள்ளை அடிப்போர்), பிறனில் விழைவோர் ஆவர். இவர்களைக் கருணை காட்டாது கொல்லாமல் விட்டால், உலகில் உள்ள நல்லோர் துன்புறுவர் என்பதற்கு, செழித்து வளருகின்ற பயிருக்குத் தீங்கு விளைவிக்கும் களையைப் பிடுங்கி எறிந்து பயிரைக் காத்தது போல என்றார்.


இதற்குத் திருக்குறள்...

 “கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல், பைங்கூழ்

களை கட்ட அதனோடு நேர்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல் --- அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துச் தக்கோரைக் காத்தல், 

பைங்கூழ் களை கட்டதனொடு நேர் --- உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனோடு ஒக்கும்.

('கொடியவர்' என்றது, தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார்,கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறன்இல் விழைவார் என்றிவர் முதலாயினாரை, இவரை வடநூலார் 'ஆததாயிகள்' என்ப. இப்பெற்றியாரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சா நின்ற பைங்கூழ் போன்று நலிவுபல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசற்குச் சாதிதருமம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் செங்கோல் செலுத்தும் வெண்குடை வேந்தற்குத் தீயார்மாட்டு மூவகை ஒறுப்பும் ஒழியற்பால அல்ல என்பது கூறப்பட்டது.)



இத் திருக்குறளுக்கு ஒப்பாக, பின்வரும் பாடல்கள் அமைந்துள்ளதை அறியலாம்...


“தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை

அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி

எத் தண்டமும் செயும் அம்மையில் இம்மைக்கே

மெய்த்தண்டம் செய்வது அவ் வேந்தன் கடனே.”      ---  திருமந்திரம்.

இதன் பொருள் ---

சமயவாதிகள் பலரும் தம்தம் சமய அடையாளங்களை மட்டும் உடையவராய், அச்சமய ஒழுக்கத்தில் நில்லாது ஒழிவாராயின், அனைத்துச் சமயங்கட்கும் தலைவனாகிய சிவபெருமான் தான் தனது ஆகமத்தில் சொல்லியுள்ள தண்டங்கள் அனைத்தையும் மறுமையில் அவர்க்குச் செய்தல் திண்ணம் ஆயினும், இம்மையில் அவர்க்குரிய தண்டத்தைச் செய்தல் அரசனுக்குக் கடமை ஆகும்.


“நாயகன் அல்லன், நம்மை

    நனி பயந்து எடுத்து நல்கும்

தாய்  என, இனிது பேணத்

    தாங்குதி தாங்கு வாரை;

ஆயது தன்மை யேனும்,

    அற வரம்பு இகவா வண்ணம்,

தீயன வந்த போது,

    சுடுதியால் தீமையோரை.”                        --- கம்பராமாயணம்.

இதன் பொருள் ---

நாயகன் அல்லன் - (இவன் நமக்கு) அரசன் அல்லன்; நம்மைப் பயந்து எடுத்து - நம்மைப் பெற்றெடுத்து; நனி நல்கும் தாய் என - நன்கு பாதுகாக்கும் தாயே என்று (எண்ணியும் சொல்லியும்); இனிது பேணி - இனிதாக (மக்கள் உன்னை) ஆதரிக்கும்படி; தாங்குவாரைத் தாங்குதி - பாதுகாத்தற்குரிய குடிமக்களைப் பாது காப்பாயாக; ஆயது தன்மையேனும் - அங்ஙனம் பாதுகாத்தலே அரச இயல்பாயினும்; தீயன வந்த போது - (எவராலேனும்) தீமை பயக்கும் செயல்கள் நேருமாயின்; தீமையோரை அவ்வாறு - தீங்கு செய்தவர்களை; அற வரம்பு இகவா எண்ணம் - தருமத்தின் எல்லையைக் கடவாதபடி; சுடுதி - (காய்ந்து) தண்டிப்பாயாக.

    சுக்கிரீவனுக்கு முடி சூட்டிய பின்னர், இராமபிரான் சில அறிவுரைகளைக் கூறி, குடிமக்களிடத்து அன்பு காட்டி ஒழுகுதலும், அவ்வாறு நடக்கையில் எவரேனும் தவறு செய்தால் குற்றத்திற்கேற்ற படி தண்டித்தலும் அரசர்க்கு ஏற்ற முறையாகும் என்று சொன்னார்.

  'குடிபுறம் காத்து ஓம்பிக் குற்றம் கடிதல், வடு அன்று வேந்தன் தொழில்', 'கொலையில் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களைகட்டதனொடு நேர்', 'தக்காங்கு நாடித் தலைச் செல்லா வண்ணத்தால், ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து' எனவரும் திருக்குறள் கருத்துக்கள் இங்கு வைத்து எண்ணத் தக்கன.


பின்வரும் பாடலும் அத்தகையதே...     

“நஞ்சம் அன்னவரை நலிந்தால், அது

வஞ்சம் அன்று; மனு வழக்கு ஆதலால்,

அஞ்சில், ஐம்பதில், ஒன்று அறியாதவன்

நெஞ்சில் நின்று நிலாவ, நிறுத்துவாய்.”     --- கம்பராமாயணம்.

இதன் பொருள் ---

     நஞ்சம் அன்னவரை நலிந்தால், அது வஞ்சம் அன்று - நஞ்சு போன்ற கொடியவர்களைத் தண்டித்தால், அது கொடுமையாகாது; மனு வழக்கு ஆதலால் - (அவ்வாறு நலிவது) மனு தர்மத்தில் கூறப்பட்டுள்ள நீதியாதலால்; (இதை);  அஞ்சில் ஐம்பதில் - ஐந்து வயதிலும் ஐம்பது வயதிலும்; ஒன்று அறியாதவன் - தக்கது தகாதது என்பதனை அறியாதவனான அச் சுக்கிரீவனது; நெஞ்சில் நின்று நிலாவ - மனத்தில் நன்றாகப் பதிந்து விளங்கும்படி; நிறுத்துவாய் - (சொல்லி) நிலை நிறுத்துவாய்.

     கொடியவரைக் கொல்லாவிட்டால் உலகம் பலவாறு நலிவுபட்டு வருந்தும்; ஆதலால், நல்லவர்களைப் பாதுகாத்தற் பொருட்டுத் தீயவரை அழித்தல் தருமச் செயல் ஆகும் என்பது அறிவுறுத்தப்பட்டது.  


“தொகைமை சான்ற நம் குரவர் 

பல்லோர் உயிர் தொலைத்த

பகைஞர் ஆதலின் அமரரைச் 

சிறை இடைப் படுத்தேன்,

மிகை செய்தார்களை நாடியே 

வேந்து ஒறுத்திடுதல்

தகைமையே என மனுமுறை 

நூல்களும் சாற்றும்.”                            --- கந்தபுராணம், சூரன் அமைச்சியல் படலம்.


இதன் பொருள் ---


பெருமைக்கு உரிய நமது குலகுருமார்கள் பலரின் உயிரையும் அழித்த பகைவர்கள் என்பதால் தேவர்களை நான் சிறையில் இட்டேன். அரசன் ஆனவன், தவறு செய்தவர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தண்டித்தல் தகுதியானதே என்று மனுநூல்களும் கூறுகின்றன. (என்று சூரபதுமன் கூறினான்)



055. செங்கோன்மை - 09. குடி புறங் காத்து

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல் 

அதிகாரம் 55 -- செங்கோன்மை


இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "குடிமக்களைப் பிறர் வருத்தாமல் காத்து, தானும் வருத்தாமல் ஆதரவு புரிந்து, குற்றம் உண்டானால், அதனைக் கண்டித்துத் தண்டித்தல் அரசனது தொழில் ஆகும். தண்டித்தல் அவனுக்குப் பழி ஆகாது" என்கின்றார் நாயனார்.

பிறர் வருத்தாமல் காப்பது, தன்னால் வருத்தம் வராமல் காப்பது என்பது பின்வரும் பெரியபுராணப் பாடலால் தெளிவாகும்...


மாநிலம் காவலன் ஆவான்

மன்உயிர் காக்கும் காலைத்

தான், அதனுக்கு இடையூறு

தன்னால், தன் பரிசனத்தால்,

ஊனமிகு பகைத்திறத்தால்,

கள்வரால், உயிர்தம்மால்,

ஆனபயம் ஐந்தும் தீர்த்து

அறம் காப்பான் அல்லனோ.

இதன் பொருள் ---

பெரிய நிலவுலகத்திற்கு அரசன் ஆக உள்ளவன், நிலை பெற்ற உயிர்களைக் காக்கும் காலத்தில், அவ்வுயிர்களுக்குத் தன் காரணமாயும், தன் கீழ்ப் பணிபுரியும் அமைச்சர் முதலானோரின் காரணமாயும், குற்றத்தை விளைவிக்கும் பகைவர்கள் காரணமாயும், கள்வர் காரணமாயும், பிற உயிர்கள் காரணமாயும் வருகின்ற துன்பங்களால் வரும் ஐந்து அச்சங்களையும் நீக்கி அறத்தை வழுவாமல் காப்பவன் அல்லனோ?

பிறவற்றால் வரும் இடையூறுகளைக் காப்பதற்கு உரிய அரசன், தானே தவறு செய்வானாயின் அதனைத் தடுப்பார் எவரும் இல்லை. எனவே, முதலிலே வராமல் காக்கவேண்டியது தன்னால் நேரக் கூடிய இடையூறே ஆகும்.

தன்னால் வருவன - வரிப்பொருளை மிகுதிகொள்ளுதல் - அதனை வலிந்து கொள்ளுதல், கொடுக்க வகையில்லாதவரிடம் கொள்ளுதல், அல்லவை நீக்காது ஒழுகுதல், காட்சிக்கு அரியன் ஆதல், கடும் சொல்லன் ஆதல், இடிக்கும் துணையாயினார் சொற்களைக் கேட்கப் பொறுக்கும் பண்பு இல்லாதவனாதல், அறநிலையப் பொருளை வவ்வுதல் முதலியன.


“இன்று கொளற்பால நாளைக் கொளப்பொறான்,

நின்று குறையிரப்ப நேர்படான், --- சென்றொருவன்

ஆவன கூறின் எயிறு அலைப்பான், ஆறு அலைக்கும்

வேடுஅலன், வேந்தும் அலன்“


"ஒற்றின் தெரியாச் சிறைப்புறத்து ஓர்தும்எனப்

பொன்தோள் துணையாத் தெரிதந்தும், - குற்றம்

அறிவுஅரிது என்று அஞ்சுவதே செங்கோன்மை, சென்று

முறையிடினும் கேளாமை அன்று".   


முதலிய நீதிநெறி விளக்கக் செய்யுட்களைக் காண்க.


     தன் பரிசனத்தால் வருவன --- அரசனிடம் அதிகாரம் பெற்றுள்ளோம், அரசனது வலிய சார்பு பெற்றுள்ளோம் என்ற இறுமாப்பினால் வருகின்ற நியதி மீறிய மிகைச் செயல்கள்.


     ஊனமிகு பகைத்திறத்தால் வருவன --- பசுக் கவர்தல் - பொருள் கொள்ளையிடல் - மாதர் கற்பழித்தல் முதலியன.


     கள்வரால் வருவன --- வழிப்பறி முதலியன. 


        உயிரால் வருவன --- புலி, யானை முதலியவற்றால் விளைவன.

   

  இந்நாள், நமது அரசாட்சி முறையிலே நமது நாட்டுக் குற்றத்தீர்வு நீதிச் சட்டமும், குடிகளின் உயிர் உடம்புகளையும், உடைமைகளையும், காவல் புரிதலையே குறிக்கோளாகக் கொண்டு, உடம்பைப் பொறுத்த குற்றங்கள் - உடைமையைப் பொறுத்த குற்றங்கள் என்று (Offences against perosn & offences against property) இரு பெரும் பிரிவுகளாக வகுத்ததும், அக்குற்றம் செய்தார்க்குத் தண்டம் விதித்ததும், குற்றங்கள் நிகழாமல் குடிகாவல் விதித்ததும், இங்கு வைத்து ஒப்பு நோக்கிக் காணத்தக்கன.

துன்பம் செய்தல், பொருளைக் கொள்ளுதல், கொல்லுதல் எனத் தண்டம் மூவகைப்படும்.


இதற்குத் திருக்குறள்...

“குடிபுறம் காத்து, ஓம்பி, குற்றம் கடிதல்,

வடு அன்று, வேந்தன் தொழில்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

குடி புறங்காத்து ஓம்பிக் குற்றம் கடிதல் --- குடிகளைப் பிறர் நலியாமல் காத்துத் தானும் நலியாது பேணி, அவர்மாட்டுக் குற்றம் நிகழின் அதனை ஒறுப்பான் ஒழித்தல், 

வேந்தன் வடு அன்று தொழில் --- வேந்தனுக்குப் பழி அன்று, தொழில் ஆகலான்.

(துன்பம் செய்தல், பொருள் கோடல், கோறல் என ஒறுப்பு மூன்று. அவற்றுள் 'ஈண்டைக்கு' எய்துவன முன்னைய என்பது குற்றம் கடிதல் என்பதனால் பெற்றாம். தன்கீழ் வாழ்வாரை ஒறுத்தல் அறன் அன்மையின், வடுவாம் என்பதனை ஆசங்கித்து, 'அஃது ஆகாது அரசனுக்கு அவரை அக்குற்றத்தின் நீக்கித் தூயர் ஆக்குதலும் சாதி தருமம்' என்றார்.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான, மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“மைந்தன் எனாமல் அசமஞ்சன் தனை வெறுத்தான்

சுந்தரச் செங்கோல் சகரன், சோமேசா! --- முந்தும்

குடிபுறங் காத்துஓம்பிக் குற்றம் கடிதல்

வடுஅன்று வேந்தன் தொழில்.”


இதன் பொருள்---

சோமேசா! முந்தும் குடி - முன்னேறிச் செல்லுதற்குரிய தம் குடிகளை, புறங்காத்து ஓம்பி - பிறர் நலியாமல் காத்து, தானும் நலியாது பேணி, குற்றம் கடிதல் - அவர்மாட்டுக் குற்றம் நிகழின் அதனை தண்டிக்க வேண்டிய வழியில் தண்டித்தல், வேந்தன் வடு அன்று தொழில் -  வேந்தனுக்குப் பழி ஆகாது. தொழில் ஆகும்,

சுந்தரச் செங்கோல் சகரன் - அழகிய நீதி முறைமையை உடைய சகரன் என்னும் அரசன், அசமஞ்சன் தனை - அசமஞ்சனை, மைந்தன் எனாமல் - தன் மகன் என்று கருதாமல், வெறுத்தான் - வெறுத்து நாட்டைவிட்டுத் துரத்தினான் ஆகலான் என்றவாறு.

சூரிய வமிசத்தில் தோன்றிய சகரன் என்னும் சக்கரவர்த்தி தன் மகன் அசமஞ்சன் என்பான் தீவழி ஒழுகிப் பற்பல சிறுவர்களைச் சரயு நதியில் எறிந்து கொன்றமை கண்டு, தன் நாட்டை விட்டுத் துரத்தினான்.


அடுத்து, இத் திருக்குளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்தில் வரும் கோட்புலி நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“பொலிகிளை கொன்றார் கோட்புலியார், விரையாக்

கலிகடந்த குற்றம் கடிந்தார், --- உலகில்

குடிபுறங் காத்துஓம்பிக் குற்றம் கடிதல்

வடுஎன்று வேந்தன் தொழில்.”

இதன் பொருள் ---

கோட்புலி நாயனார் சோழநாட்டிலே, திருநாட்டியத்தான்குடி என்னும் திருத்தலத்திலே வேளாளர் குலத்திலே அவதரித்தவர்.  சிவபத்தியில் சிறந்தவர். அரசனிடத்திலே சேனாதிபதித் தொழில் பூண்டவர். அதனால் கிடைக்கின்ற வேதனத்தைக் கொண்டு சிவாயலங்கட்குத் திருவமுதின் பொருட்டு நெல்லு வாங்கிக் கட்டுதலாகிய திருப்பணியை நெடுங்காலம் அவர் செய்துவந்தார்.

ஒருநாள் அரசன் ஏவலினால் அவர் போர் முனைக்குச் செல்ல நேர்ந்தது. தாம் திரும்பி வரும் வரையில் சுவாமிக்குத் திருவமுதின் பொருட்டு வேண்டும் நெல்லைக் கட்டினார். அதனை எடுத்துச் செலவழியாது இருக்கும்படி தமது சுற்றத்தார் எல்லாருக்கும் தனித்தனியே ஆணையிட்டார். போருக்குப் போயினார். சிலநாளிலே பஞ்சம் வந்து அடுத்தது. பஞ்சம் நீங்கும்வரை சுவாமிக்குத் திருவமுதின் பொருட்டுக் கட்டிய இந்நெல்லைக் கொண்டாயினும் நாம் பிழைத்து, பின்னர் கொடுத்து விடுவோம் எனச் சுற்றத்தார் கருதி, அதனை எடுத்துச் செலவழித்தார்கள். கோட்புலி நாயனார் பகைவரை வென்று போர்முனையில் இருந்து திரும்பினார். தம் ஊரை அடைந்ததும் சுற்றத்தார் அதிபாதகம் செய்தமையை அறிந்தார். தம் வீட்டின் உள்ளே நுழைந்து அனைவரையும் வாளினாலே துணித்தார். எஞ்சிய ஓர் ஆண்குழந்தையைக் கண்டார். இது இந்நெல் உண்டவளுடைய முலைப்பாலை உண்டது என அதனையும் துணித்தார். சிவபெருமான் திருவருள் பெற்றார்.

குடிகளைப் பிறர் நலியாமல் காத்துத் தானும் நலியாது பேணி, அவர் மாட்டுக் குற்றம் நிகழின் அதனை ஒறுப்பான் ஒழித்தல், வேந்தனுக்குப் பழி அன்று. தொழிலாகலான் என்றார் திருவள்ளுவ நாயனார்.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளதை அறியலாம்...


“கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை,

எண்வனப்பு இத்துணையாம் என்றுஉரைத்தல் - பண்வனப்புக்

கேட்டார்நன்று என்றல், கிளர்வேந்தன் தன்நாடு

வாட்டான்நன்று என்றல் வனப்பு.” --- சிறுபஞ்சமூலம்.


இதன் பொருள் ---


கண் வனப்பு கண்ணோட்டம் - கண்ணுக்கு அழகாவது, பிறர்மேல் கருணை கொள்ளுதல்; கால் வனப்பு செல்லாமை - கால்களுக்கு அழகாவது  பிறரிடத்தில் இரக்கப் போகாமையாம்;எண் வனப்பு இத்துணை ஆம் என்று உரைத்தல் - ஆராய்ச்சிக்கு அழகாவது பொருளை அறுதியிட்டு முடிவு செய்தல்; பண் வனப்பு கேட்டார் நன்று என்றல் - இசைக்கு அழகாவது, அதனைக் கேட்டவர்கள், இது நல்லது என்று புகழ்ந்துரைத்தல்; கிளர் வேந்தன் வனப்பு நன்று, தன் நாடு வாட்டான் என்றல் - புகழினால் விளங்குகின்ற அரசனுக்கு அழகாவது, தனது நாட்டிலுள்ள குடிகளை இவன் வருத்தான், இவனுடைய ஆட்சி நல்லது என்று உலகத்தவர் அவனைப் புகழ்ந்து கூறுதல்.



"கொற்றம் கொண்டு குடிபுறம் காத்தும்

செற்ற தெவ்வர் தேஎம்தமது ஆக்கியும்

தருப்பையின் கிடத்தி வாளின் போழ்ந்து

செருப்புகல் மன்னர் செல்வுழிச் செல்கென

மூத்து விளிதல்இக் குடிப்பிறந் தோர்க்கு

நாப்புடை பெயராது நாணுத்தகவு உடைத்தே..."--- மணிமேகலை.

இதன் பொருள் ---

வெற்றிகொண்டு குடிகளைப் பிறர் நலியாமல் பாதுகாத்தும், பகைமையை உடைய மாற்றாரது நாட்டினைத் தம்முடையது ஆக்கியும் அன்றி, தருப்பைப் புல்லில் கிடத்தி வாளால் பிளந்து போரில் வெற்றிகொண்டு உயிர் துறந்த மன்னர் செல்லும் உலகத்தின்கண் செல்க என்று கூறுமாறு வாளா முதுமையுற்று இறத்தல்,  இச்சோழர் குடியில் பிறந்தோர்க்கு நாணும் தகுதியை உடைத்து. ஆகலான் இதனைக் கூறுதற்கு எனது நா எழவில்லை.


50. இறைவன் அடியாரிடத்தில் விளக்கம் பெறுவான்

“இந்து, இரவி நீள்கிரணம் எங்கும் நிறைந்தாலும், இந்து இரவி காந்தத்து இலங்குமே; - இந்து இரவி நேத்திரத்தோன் எங்கும் நிறைந்தாலும், நித்தன்அருள் ந...