திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 55 -- செங்கோன்மை
இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "அரசனானவன், கொடியவர்களைக் கொலையினால் தண்டித்து, நல்லோரைக் காப்பாற்றுதல், உழவனானவன், களையைக் களைந்து பயிரைக் காப்பது ஒக்கும்" என்கின்றார் நாயனார்.
கொடியவர் என்றது ஆததாயிகளை. (ஆததாயிகள் – கொடியோர்) அவர், தீயிடுவோர், நஞ்சு இடுவோர், கருவிகளால் கொல்வோர், கள்வர், ஆறலைப்போர் (வழிப்பறி செய்வோர்), சூறைகொள்வோர் (கொள்ளை அடிப்போர்), பிறனில் விழைவோர் ஆவர். இவர்களைக் கருணை காட்டாது கொல்லாமல் விட்டால், உலகில் உள்ள நல்லோர் துன்புறுவர் என்பதற்கு, செழித்து வளருகின்ற பயிருக்குத் தீங்கு விளைவிக்கும் களையைப் பிடுங்கி எறிந்து பயிரைக் காத்தது போல என்றார்.
இதற்குத் திருக்குறள்...
“கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல், பைங்கூழ்
களை கட்ட அதனோடு நேர்.”
இதற்குப் பரிமேலழகர் உரை ---
வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல் --- அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துச் தக்கோரைக் காத்தல்,
பைங்கூழ் களை கட்டதனொடு நேர் --- உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனோடு ஒக்கும்.
('கொடியவர்' என்றது, தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற் கொல்வார்,கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறன்இல் விழைவார் என்றிவர் முதலாயினாரை, இவரை வடநூலார் 'ஆததாயிகள்' என்ப. இப்பெற்றியாரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சா நின்ற பைங்கூழ் போன்று நலிவுபல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசற்குச் சாதிதருமம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் செங்கோல் செலுத்தும் வெண்குடை வேந்தற்குத் தீயார்மாட்டு மூவகை ஒறுப்பும் ஒழியற்பால அல்ல என்பது கூறப்பட்டது.)
இத் திருக்குறளுக்கு ஒப்பாக, பின்வரும் பாடல்கள் அமைந்துள்ளதை அறியலாம்...
“தத்தம் சமயத் தகுதி நில்லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத் தண்டமும் செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண்டம் செய்வது அவ் வேந்தன் கடனே.” --- திருமந்திரம்.
இதன் பொருள் ---
சமயவாதிகள் பலரும் தம்தம் சமய அடையாளங்களை மட்டும் உடையவராய், அச்சமய ஒழுக்கத்தில் நில்லாது ஒழிவாராயின், அனைத்துச் சமயங்கட்கும் தலைவனாகிய சிவபெருமான் தான் தனது ஆகமத்தில் சொல்லியுள்ள தண்டங்கள் அனைத்தையும் மறுமையில் அவர்க்குச் செய்தல் திண்ணம் ஆயினும், இம்மையில் அவர்க்குரிய தண்டத்தைச் செய்தல் அரசனுக்குக் கடமை ஆகும்.
“நாயகன் அல்லன், நம்மை
நனி பயந்து எடுத்து நல்கும்
தாய் என, இனிது பேணத்
தாங்குதி தாங்கு வாரை;
ஆயது தன்மை யேனும்,
அற வரம்பு இகவா வண்ணம்,
தீயன வந்த போது,
சுடுதியால் தீமையோரை.” --- கம்பராமாயணம்.
இதன் பொருள் ---
நாயகன் அல்லன் - (இவன் நமக்கு) அரசன் அல்லன்; நம்மைப் பயந்து எடுத்து - நம்மைப் பெற்றெடுத்து; நனி நல்கும் தாய் என - நன்கு பாதுகாக்கும் தாயே என்று (எண்ணியும் சொல்லியும்); இனிது பேணி - இனிதாக (மக்கள் உன்னை) ஆதரிக்கும்படி; தாங்குவாரைத் தாங்குதி - பாதுகாத்தற்குரிய குடிமக்களைப் பாது காப்பாயாக; ஆயது தன்மையேனும் - அங்ஙனம் பாதுகாத்தலே அரச இயல்பாயினும்; தீயன வந்த போது - (எவராலேனும்) தீமை பயக்கும் செயல்கள் நேருமாயின்; தீமையோரை அவ்வாறு - தீங்கு செய்தவர்களை; அற வரம்பு இகவா எண்ணம் - தருமத்தின் எல்லையைக் கடவாதபடி; சுடுதி - (காய்ந்து) தண்டிப்பாயாக.
சுக்கிரீவனுக்கு முடி சூட்டிய பின்னர், இராமபிரான் சில அறிவுரைகளைக் கூறி, குடிமக்களிடத்து அன்பு காட்டி ஒழுகுதலும், அவ்வாறு நடக்கையில் எவரேனும் தவறு செய்தால் குற்றத்திற்கேற்ற படி தண்டித்தலும் அரசர்க்கு ஏற்ற முறையாகும் என்று சொன்னார்.
'குடிபுறம் காத்து ஓம்பிக் குற்றம் கடிதல், வடு அன்று வேந்தன் தொழில்', 'கொலையில் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ் களைகட்டதனொடு நேர்', 'தக்காங்கு நாடித் தலைச் செல்லா வண்ணத்தால், ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து' எனவரும் திருக்குறள் கருத்துக்கள் இங்கு வைத்து எண்ணத் தக்கன.
பின்வரும் பாடலும் அத்தகையதே...
“நஞ்சம் அன்னவரை நலிந்தால், அது
வஞ்சம் அன்று; மனு வழக்கு ஆதலால்,
அஞ்சில், ஐம்பதில், ஒன்று அறியாதவன்
நெஞ்சில் நின்று நிலாவ, நிறுத்துவாய்.” --- கம்பராமாயணம்.
இதன் பொருள் ---
நஞ்சம் அன்னவரை நலிந்தால், அது வஞ்சம் அன்று - நஞ்சு போன்ற கொடியவர்களைத் தண்டித்தால், அது கொடுமையாகாது; மனு வழக்கு ஆதலால் - (அவ்வாறு நலிவது) மனு தர்மத்தில் கூறப்பட்டுள்ள நீதியாதலால்; (இதை); அஞ்சில் ஐம்பதில் - ஐந்து வயதிலும் ஐம்பது வயதிலும்; ஒன்று அறியாதவன் - தக்கது தகாதது என்பதனை அறியாதவனான அச் சுக்கிரீவனது; நெஞ்சில் நின்று நிலாவ - மனத்தில் நன்றாகப் பதிந்து விளங்கும்படி; நிறுத்துவாய் - (சொல்லி) நிலை நிறுத்துவாய்.
கொடியவரைக் கொல்லாவிட்டால் உலகம் பலவாறு நலிவுபட்டு வருந்தும்; ஆதலால், நல்லவர்களைப் பாதுகாத்தற் பொருட்டுத் தீயவரை அழித்தல் தருமச் செயல் ஆகும் என்பது அறிவுறுத்தப்பட்டது.
“தொகைமை சான்ற நம் குரவர்
பல்லோர் உயிர் தொலைத்த
பகைஞர் ஆதலின் அமரரைச்
சிறை இடைப் படுத்தேன்,
மிகை செய்தார்களை நாடியே
வேந்து ஒறுத்திடுதல்
தகைமையே என மனுமுறை
நூல்களும் சாற்றும்.” --- கந்தபுராணம், சூரன் அமைச்சியல் படலம்.
இதன் பொருள் ---
பெருமைக்கு உரிய நமது குலகுருமார்கள் பலரின் உயிரையும் அழித்த பகைவர்கள் என்பதால் தேவர்களை நான் சிறையில் இட்டேன். அரசன் ஆனவன், தவறு செய்தவர்களைக் கண்டறிந்து, அவர்களைத் தண்டித்தல் தகுதியானதே என்று மனுநூல்களும் கூறுகின்றன. (என்று சூரபதுமன் கூறினான்)
No comments:
Post a Comment