Showing posts with label கந்தர் அலங்காரச் சிந்தனைகள். Show all posts
Showing posts with label கந்தர் அலங்காரச் சிந்தனைகள். Show all posts

குணம் கெட்ட துட்டனை ஈடேற்றுவாய்


குணம் கெட்ட துட்டன்

-----


உயிரினங்கள் ஒன்றை ஒன்று சார்ந்தே வாழும் தன்மை உடையன. மனிதன் எப்போதும் கூட்டமாக வாழும் தன்மை உடையவன். தன் உள்ளத்திற்குப் பொருந்திய மக்களோடு சேர்ந்து வாழ்வதற்கு அவனுக்கு வாய்ப்பு உண்டு. தனியாகப் பிறந்த மனிதன் முதலில் தாய் தந்தையுடன் வாழ்கிறான். பின்பு சகோதர சகோதரிகளுடன் வாழ்கிறான். அதன் பின்பு மனைவியைத் திருமணம் செய்துகொண்டு அவளோடு இல்லறம் நடத்துகிறான். அதன் விளைவாகக் குழந்தைகளைப் பெற்றுக் குடும்பத்தை நடத்துகிறான். மனைவி, மக்கள், சுற்றம் ஆகியவர்களோடு பேரன் பேத்திகளைப் பெறுகிறான். அவற்றால் அவனுடைய குடும்பமே பெரியது ஆகிவிடுகிறது. ஊரார், உற்றார் என்று அவன் பிறருடன் சேர்ந்து வாழ்கிறான். 

அவனுடைய நிலைமையும், தலைமையும் பெருகப் பெருக அவன் இணக்கம் கொள்ளும் மனித சமூகம் விரிகிறது. நாட்டில் உள்ள மக்களோடு இணங்கி வாழ்கிறவன் பெரிய தலைவனாகிறான். உலகம் முழுவதும் உள்ள மக்களோடு சேர்ந்து வாழ்கிறவன் மிகமிகப் பெரிய மனிதனாகிறான். சிலருக்குத் தம்முடைய சுற்றத்தார்களை மாத்திரம் தெரிந்துகொள்ளும் வாழ்க்கை இருக்கும். சிலர் உறவினர்களாலும், ஊரவர்களாலும் மதிக்கப்படுகிற நல்லவர்களாக வாழ்கிறார்கள். அப்படியே நாட்டுக்குத் தலைவராக உள்ளவர்களை, உலகத்தவர் பலர் தெரிந்து கொள்ளும் மேன்மையும் இருக்கிறது.

'இனம் இனத்தோடு சேரும்' என்று சொல்வார்கள். நம்முடைய பண்புக்கு ஏற்றபடி அந்தப் பண்பை வளர்க்கின்ற மக்களோடு சேருவதுதான் இயல்பு. நமக்கு அறிவைக் கொடுத்திருக்கிறான் இறைவன். நம்மிடத்தில் உள்ள தீய குணங்கள் மாற்றுவதற்கு ஏற்பச் சிறந்த மக்களோடு சேருவதற்கும் வாய்ப்பு உண்டு. உடம்பில் அழுக்கு இருக்கும்போது அழுக்கோடு புரண்டு கொண்டிருப்பவன் அறியாதவன். அழுக்கை நீக்குவதற்கு இறைவன் தண்ணீரைக் கொடுத்திருக்கிறான். அழுக்கைப் பூசிக் கொண்டு வாழாமல் அதனை மாற்றிக் கொள்வதற்குரிய நீரைப் பயன்படுத்திக் கொள்பவன் அறிவாளி. அதுபோல இந்த உலகத்தில் அழுக்கு நெஞ்சு உடையவர்களும் இருக்கிறார்கள்; தூய நெஞ்சு உடையவர்களும் இருக்கிறார்கள். மனிதன் பிறந்தவுடன் எந்தப் பழக்கத்தையும் கொண்டு வருவது இல்லை. பழைய பிறவியில் இருந்த அவனுடைய சில குணங்கள், இயல்பாக இருக்கின்றன. ஆனாலும் அவற்றை மெல்லப் போக்கிக் கொள்வதற்கு நல்ல குணங்கள் உள்ளவர்களோடு இணங்க வேண்டும். அப்படி இணங்குவதனால் குற்றங்கள் குறைந்து, குணங்கள் பெருகும். விலங்குகள்கூட மனிதர்களோடு பழகினால் தம்முடைய குணங்களில் சிலவற்றை மாற்றிக் கொள்கின்றன. 

    "நிலத்து இயல்பால் நீர்திரிந்த அற்றாகும் மாந்தர்க்கு இனத்து இயல்பு அது ஆகும் அறிவு" என்பது திருக்குறள். நமக்கு இயல்பாக உள்ள அறிவு விளக்கம் பெறுவதற்கும், குணம் சிறந்து நிற்பதற்கும் நல்லவர்களுடைய இணக்கம் தேவை. “நல்லார் இணக்கமும் நின்பூசை நேசமுமே அல்லாது, நின்கும் நிலை உளதோ” என்பது பட்டினத்தடிகளார் அருள்வாக்கு. அல்லாதவர்களுடைய இணக்கத்தால் நம்மிடத்து ஏற்கெனவே பொருந்தி உள்ள தீய குணங்கள் வளர்வதோடு, நாம் யாரைச் சார்ந்து உள்ளோமோ, அவர்களுடைய தீயகுணங்களும் நம்மைச் சாரும். மனிதன் வரவர நல்லவற்றை எண்ணவும் நல்லவற்றைப் பேசவும் நல்லவற்றைச் சிந்திக்கவும் வேண்டும். இவற்றை இயல்பாகப் பெறாவிட்டாலும் சிறந்து நிற்பவர்களுடன் இணங்க வேண்டும். “குற்றம் குறைந்து, குணம் மேலிடும் அன்பர் கூட்டத்தையே முற்றும் துணை என நம்பு கண்டாய்” என்பது தாயுமானார் அருள்வாக்கு. 

    நாமாக எதையும் அறிந்துகொள்ள முடியாது. அறிவிக்க அறிந்து கொள்ளும் இயல்பு உடையது உயிர். பெரியவர்களுடன் பழகினால் எண்ணுதற்குரிய நல்லவைகள் இன்ன இன்ன என்பது தெரியவரும். நல்லவற்றைச் செய்வதற்கு முன்னால் நல்லவற்றை நினைக்கவும், பேசவும் தெரிந்து கொள்வதே சிறந்த சாதனை. பணத்தை வைத்துக் கொண்டு, உடல் பலத்தை வைத்துக் கொண்டு, மக்கள் துணையை வைத்துக் கொண்டு தனக்கு மட்டும் அன்றிப் பிறருக்கும் நன்மை பயக்கும் செயல்களையே செய்ய வேண்டும். அதற்கு நமக்கு வாய்ப்பு இல்லையென்று எண்ணிப் பலர் சோர்ந்து போகிறார்கள். எடுத்தவுடன் மனிதன் செயலில் இறங்குவது இல்லை. மனத்திலே எண்ணி, பலகாலம் சிந்தித்து, அதனை நிறைவேற்றுவதற்கு என்ன வழி என்று ஆலோசிக்கிறான். அதைப்பற்றி மற்றவர்களுடன் பேசுகிறான். அதன் பின்னே அதனைச் செய்வதற்குரிய கருவிகளைத் தேடுகிறான். மனத்தில் எத்தனை திண்மையான எண்ணம் இருக்கிறதோ அதற்கு ஏற்றபடி செயலை நிறைவேற்றுவதற்குரிய வகை தானே வந்து சேரும்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியர் 

திண்ணியர் ஆகப் பெறின்”

என்று திருவள்ளுவ நாயனார் கூறுகிறார். எண்ணத்தில் திண்மை இருந்தால் வேண்டிய கருவிகள் தாமே வந்து சேரும். 

நாம் இப்போது எத்தனையோ கருவிகளைப் பெற்றிருக்கிறோம். அவற்றைத் தக்க வண்ணம் பயன்படுத்திக் கொள்ளாமையால், நம்மால் வெற்றி காண முடிவது இல்லை. கிடைத்த பொருளைக் கொண்டு பெறத் தக்க பெரும்பயன் இருக்க, அதனை மறந்து, கிடைத்ததைக் கொண்டு சிறப்பாக வாழப் பழகாமல், கிடைக்காத பொருளுக்கு ஆசைப்பட்டு நிற்கிறோம். இறைவன் நமக்குக் கொடுத்திருக்கிற கருவிகளுள் மிகச் சிறந்தது அறிவு. தனுகரண புவன போகங்கள் ஆகியவை விலங்குகளுக்குக் கிடைக்காத வகையில் நமக்குக் கிடைத்திருக்கின்றன. அவற்றை வைத்துக் கொண்டு தக்கபடி முயற்சி செய்து, நல்ல பயனை அடைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 'பெறுதற்கரிய பிறவி' என்று மனிதப் பிறவியைச் சொல்வதற்குக் காரணம் இதுதான். நாம் அந்தக் கருவிகளைச் சரியானபடி பயன்படுத்திக்கொள்வதில்லை. அதற்கான வழி நமக்குத் தெரிவதில்லை. பயன்படுத்திக் கொள்ளும் நல்லவர்களைக் கண்டு நாம் செய்யலாம். 

     சிறு குழந்தை உலகத்தினரைப் பார்த்து ஒவ்வொன்றாகப் பழக்கம் செய்து கொள்கிறது. ஒடுவதும், ஆடுவதும், சிரிப்பதும், அழுவதும் ஆகிய எல்லாமே குழந்தை பிறரிடமிருந்து தெரிந்து கொள்பவைகளே. தாய்தந்தை உலகம் ஆகியவற்றோடு கலந்து மெல்ல மெல்லப் புதிய பழக்கங்களை உண்டாக்கிக் கொள்கிறது. ஆகவே, அறிவை உடைய மனிதன் தனக்கு தெரியாவிட்டாலும் நல்லவர்களுடன் கலந்து நல்ல எண்ணங்களையும் நல்ல பேச்சையும் நல்ல செயல்களையும் தெரிந்து கொள்ளலாம். 

நல்லவர்களோடு இணங்குவது என்பது எளிதில் வருவது இல்லை. உலகில் பெரும்பாலும் தீயவர்களுடைய ஆதிக்கமே நிலவுகிறது. ஆகையால், தீயவர்களுடைய கூட்டத்திற்குள் புகுவது மிக எளிதாக இருக்கிறது. நாம் தீயவர்களை ஒதுக்கி, நல்லவர்களைத் தேட வேண்டும். நன்மை என்பது பலவகைப்படும். அறம் செய்வது நன்மை; பொருள் ஈட்டுவது நன்மை; நல்ல முறையில் இன்பம் பெறுவதும் நன்மைதான். நம் வாழ்நாள் மிகக் குறுகியது என்பதை உணர்ந்து எல்லாவற்றிலும் சிறந்த நன்மை எது, அதனைப் பெறுவதற்குரிய வழி என்ன என்று ஆராயவேண்டும். மிகச் சிறந்த நன்மை இறைவன் அருளைப் பெறுவதுதான். அந்த அருளைத் தருவதற்குரிய நாயகனாகிய இறைவன் எப்போதும் இருக்கிறான்; எங்கும் இருக்கிறான். நாம் முயன்றால் அருள் தரமாட்டேன் என்று சொல்ல மாட்டான். 

ஆனால், முயல்வதற்குரிய வழி தெரியாமல் நாம் திண்டாடுகிறோம். நம்முடைய இணக்கமெல்லாம் இறைவனைப் பற்றி எண்ணாதவர்களுடைய இணக்கமாகவே இருக்கிறது. ஏதோ சம்பிரதாயத்திற்காக, கடவுள் என்று சொல்லிக் கொண்டு, வயிற்றுப் பிழைப்புக்காக சாமியார் வேடம் பூண்டு, பொய்யாக வாழ்கிறவர்களோடு உறவு வைத்துக் கொண்டு வாழ்வதால் பயன் இல்லை. அவர்களுடைய இணக்கம் நமக்கு நலம் தராது. “இணக்கம் அறிந்து இணங்கு”, “சேர் இடம் அறிந்து சேர்” என்ற ஔவையின் அருள்வாக்கை நினைவில் கொள்ள வேண்டும். நம்முடைய இயற்கை மாறவேண்டுமானால், நல்ல குணங்கள் படிய வேண்டுமானால், முதலில் நாம் தீயவர்களுடன் இணங்கக் கூடாது. இறைவனை வணங்கித் துதிக்க அறிந்த மனிதர்களுடன் இணங்க வேண்டும். பெரும்பாலோருடைய நிலை அப்படி இல்லை. வணங்கத் தெரியும். துதிக்கத் தெரியும். கைமேல் பலன் தருகிற மக்களைத்தானே வணங்க வேண்டும், துதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எல்லாச் செயலுக்கும் மூலகாரணனாக இருந்து எல்லாக் காரியங்களையும் நிறைவேற்றித் தருகிறவன் இறைவன். தம்மால் புகழ்ந்து துதிப்பதற்கு உரியவன் அவன்தான் என்பதை அறிவாளிகள் எண்ணுகிறார்கள். மற்றவர்கள் எண்ணுவது இல்லை. 

உலகத்தில் சிறுசிறு இலாபங்களில் மனத்தைப் போக்கி வாழ்கின்றவர்கள் இறைவனை வணங்குவதும் இல்லை; துதிப்பதும் இல்லை. ஓரிடத்தில் ஒரு பெரிய விருந்து நடக்க இருந்தது. விருந்தினர்களுக்குப் பரிமாறுவதற்காகப் பூந்தி பண்ணிக் குவித்திருந்தார்கள். அந்தப் பூந்தியில் எறும்பு வந்து மொய்த்துக் கொள்ளுமோ என்ற ஐயம் விருந்து செய்யும் தலைவருக்கு உண்டாயிற்று. உடனே அங்கே இருந்த ஒரு பெரியவர் ஒரு தந்திரம் செய்தார். கொஞ்சம் சருக்கரையைக் கொண்டு வந்து பூந்திக் குவியலைச் சுற்றிச் சிறிது தூரம் விட்டு வட்டமாகத் தூவினார். எறும்புகள் வந்தன. அந்தச் சருக்கரையிலேயே நின்று மொய்த்திருந்தன. அதைத் தாண்டிப் பூந்திக் குவியலுக்குப் போகவில்லை. பூந்தியாகிய பெரிய பயனைப் பெறாமல் சர்க்கரையாகிய சிறிய பயனைப் பெற்று நின்றுவிட்டன. 

மனிதனும் அப்படித்தான் இருக்கிறான். தான் பெறுகிற புலன் நுகர்ச்சியைப் பெரிதென்று எண்ணி அதனோடு நின்றுவிடுகிறான். இன்னும் சிலர் அறிவினால் ஆராயும் ஆராய்ச்சியில் ஏற்படுகிற இன்பக் கிளுகிளுப்புக் கண்டு அதோடு நின்றுவிடுகிறார்கள். அவர்கள் எல்லாம் சின்ன எறும்பு இனத்தைச் சேர்ந்தவர்கள். இறைவன் அருள்பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் அந்தத் துறையில் எண்ணியும் பேசியும் செயல் செய்தும் வாழ்கிறவர்களே சிறந்த நன்மையை அடைவார்கள். இறைவனை  வணங்கித் துதித்து அவனுடைய திருவருளைப் பெறுகிறவர்களே மனிதப் பிறவியில் பெரிய பயனை அடைவார்கள். அத்தகைய மனிதர்களோடு இணங்க வேண்டுமென்று அறியாது, இறைவனை வணங்கித் துதிக்க அறியாதவரோடு இணங்கிப் பயன் இல்லை. இவர்களுடன் இணங்குவதால் நம்மிடத்தே இயல்பாக உள்ள தீக்குணங்கள் அல்லாமல், புதிய தீயகுணமும் வந்து சேரும். 

இறைவனை வணங்காமலும் துதிக்காமலும் இருக்கிறவர்கள் எத்தனை பெரிய மனிதர்களாக இருந்தாலும் அவர்களுடன் இணங்குவது கூடாது என்கிறார் அருணகிரிநாதர். நூல்களை எல்லாம் ஆராய்ந்திருந்தாலும், தத்துவங்களை அறிந்திருந்தாலும், பல பெரிய மனிதர்களை அறிந்திருந்தாலும், எத்தனை பண்பாடு இருந்தாலும், இறைவனுடைய அன்புப் பிணைப்பு இல்லாத இடத்து, அவர்கள் திருமங்கல்யம் இல்லாத அழகியைப் போன்றோர் என்றே சொல்ல வேண்டும். "இந்த நிலையில் இருக்கிற என்னைக் காக்க வேண்டும்' என்று முருகப் பெருமானிடத்தில் விண்ணப்பம் செய்து கொள்கிறார் அருணகிரிநாதர். 

மல சம்பந்தத்தினால் பலவிதமான துன்பங்களுக்கு உள்ளாகிறவர்களுடைய இடரைப் போக்குகிறவன் முருகன். அவன் நிர்மலன். "குணம் கெட்டதுட்டனாகிய என்னை, நிர்மலன் ஆகிய நீ ஈடேற்ற வேண்டும்' என்று விண்ணப்பம் செய்து கொள்கிறார். முருகப் பெருமான் தன்னுடைய திருக்கரத்தில் வேலாயுதத்தை வைத்திருக்கிறார். அது ஞானத்தின் அடையாளம். அது ஞானவெற்றியைத் தருகின்ற விக்கிரம வேலாயுதம். வேல் புகுந்த இடத்தில் தோல்வி என்பது சிறிதும் இராது. 

அசுரர்களைப் போர்க்களத்தில் அந்த வேலாயுதம் கொன்றது. அசுரர்கள் ஊனை உணவாக உடையவர்கள். ‘பிசிதர்' என்று அருணகிரிநாதர் சொல்லுகிறார். அவர்கள் ஊனை உண்பவர்கள் ஊனை உண்ணும் வாயிலிருந்து நிணம் கக்குகிறது. வேல் அவர்களுடைய வாய்களை இரத்தமும் ஊனும் கக்கும்படி செய்கிறது. ஊன் உண்ணுகிற அசுரர்களை, 'பிசிதர்' என்கிறார் அருணகிரிநாதர். தாம் உண்ட ஊன் உணவைக் கக்குவது போல, வேல், அவர்களது வாயைக் கிழித்துப் புண்படுத்தி நிணத்தைக் கக்கும்படி செய்கிறது. அவர்கள் உடம்பு சிதைந்து, குலைந்து போர்க்களத்தில் வீழ்ந்தமையால் பலருக்குக் கொண்டாட்டம். பிறரைக் கொன்று கொண்டாடி வந்த அசுரர்கள், உயிர்விட்டுப் போர்க்களத்தில் கிடக்கிறார்கள், அவர்களுடைய திண்ணடாட்டத்தால் உலகில் உள்ள உயிர்கள் கொண்டாட்டம் அடைகின்றன.

போர்க்களத்தில் அசுரர்களுடைய உடல்கள் துண்டு பட்டுக் கிடக்கின்றன, சாமானிய உடல்போல் இல்லாமல் மலைபோல் இருக்கிற அசுரர்கள் பிணமாகக் கிடக்கிறார்கள். மயானத்தில் காக்கையும் கழுகும் வந்து ஊனைக் கொத்தித் தின்னும். பிணம் உள்ள இடத்தில் அவை விருந்து அயரும். காக்கையும் கழுகும் பந்தலிட்டுப் பறக்கின்றன. நான் முந்தி, நீ முந்தி என்று பிணங்குகின்றன, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அசுரர்களுடைய பிணங்கள் கிடப்பதனால் எங்கே பார்த்தாலும் பந்தல் போட்டது போலக் காக்கையும் கழுகும் இணைந்து பறக்கின்றன. பேய்கள் சேர்ந்து கைகளைக் கோர்த்துக் கொண்டு ஆடுகின்றன. பேய்கள் வைரவருடைய சாபத்தால் உணவு இல்லாமல் வாடுபவை. உயிரோடு இருப்பவர்கள் உடலை உண்ணக் கூடாது என்பது அவர்களுக்கு இட்ட கட்டளை. ஆகையால், போர்க்களத்தில் இறந்தவர்களை உண்பதற்காக அவை தேடிக்கொண்டிருக்கும். போர் நடக்கிறது என்றால் பேய்களுக்குத்தான் முதலில் கொண்டாட்டம். 

இங்கே அலகைகள் எல்லாம் துணங்கை ஆடுகின்றன. துணங்கை என்பது கைகளைக் கோர்த்துக்கொண்டு சுற்றிச் சுற்றி ஆடுகிற ஒருவகையான ஆட்டம். போர்க்களத்தில் கிடந்த அசுரர்களுடைய உடல்களைத் தின்று வயிறு தடித்து பேய்கள் ஆனந்தக் கூத்தாடுகின்றன. பலகாலம் பட்டினி கிடந்து, போதிய உணவு எங்கே கிடைக்கப் போகின்றது என்று வாடி நின்றவை அவை. இப்போது தம் அளவுக்கு மிஞ்சி விருந்து உண்டு துணங்கை ஆடுகின்றன. மேலே கொடியும், கழுகும் இணைந்து பந்தல் போட, அந்தப் பந்தலின் கீழே கைகோத்து நடமாடி முருகப் பெருமானை வாழ்த்துகின்றன. அந்தப் பேய்கள். திருமுருகாற்றுப் படையில் முருகன் சூரனோடு போர் செய்ததால் பேய்மகள் அடைந்த ஆனந்தத்தைச் சொல்கிறார் நக்கீரர். 

“உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் 

குருதிய ஆடிய கூர்உகிர்க் கொடுவிரல் 

கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை 

ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர 

வென்றடு விறல்களம் பாடித் தோள்பெயரா 

நினம்தின் வாயள் துணங்கை துங்க."

கொடியும் கழுகும் தம்முள் போராடிப் பிணங்கிப் போட்டி போட்டு ஊனை ஈர்க்கின்றன. அலகைகள் தமக்கு வேண்டிய உணவை உண்டு கைகோத்து ஆடுகின்றன. இவ்வாறு அசுரர்கள் போர்க்களத்தில் படும்படியாக வெற்றிவேலை விடுத்தார் முருகப் பெருமான். “துட்டர்களாகிய அசுரக் கூட்டங்களை வேலாயுதத்தால் அழித்து வெற்றி கண்ட நிர்மலனே! துட்டன் ஆகிய என்னை, என்பாலுள்ள தீய பண்புகளை எல்லாம் மாற்றி ஈடேற்ற வேண்டும்” என்று இந்தப் பாட்டில் வேண்டிக் கொள்கிறார் அருணகிரிநாதர். 

“வணங்கித் துதிக்க அறியா மனிதருடன் இணங்கிக் 

குணங்கெட்ட துட்டனை ஈடேற்றுவாய்! கொடியும் கழுகும் 

பிணங்க, துணங்கை அலகை கொண்டாட, பிசிதர்தம்வாய் 

நிணம்கக்க விக்ரம வேலாயுதம் தொட்ட நிர்மலனே!”   -- கந்தர் அலங்காரம்.

    காக்கையும் கழுகும் ஒன்றனோடு ஒன்று போட்டி போடவும், பேய்கள் துணங்கைக் கூத்து ஆடவும், ஊன் உணவை உடைய அசுரர்களின் வாய்கள் நிணத்தைக் கக்கவும் வெற்றிவேற்படையை விடுத்து அருளிய மலமற்ற தூய முருகப் பெருமானே! தேவரீரை உடம்பால் வணங்கி, வாயினால் புகழந்து அறியாத துட்டர்களுடன் பொருந்தி இருந்து, குணம் கெட்டுப்போன தீயவனாகிய அடியேனை நற்கதி அடையும்படி செய்தருள்வாய்: 



எமனுக்கு எச்சரிக்கை

 


எமனுக்கு எச்சரிக்கை

----


வருமுன் காப்பது, வந்தபின் காப்பது, வரும்போது காப்பது என்பது உலகில் வருகிற நோய்களுக்கும், துன்பத்திற்கும், வறுமைக்கும், மரணத்திற்கும் பொருந்தும். 


நாளைக்கு வேண்டும் என்று இன்றே உணவுப் பொருள்களைத் தேடிக் கொள்ளுகின்றவன் ஒருவன். பசி வந்த பிறகு உணவைத் தேடுகிறவன் ஒருவன். உண்ணும் நேரம் தாண்டிய பிறகு பசி மிகுதியாகித் துன்புற்று உணவைத் தேடிப் போகிறவன் ஒருவன். இந்த மூன்று பேர்களிலும், பசித் துன்பமானது நிச்சயமாக வரும் என்று முன் கூட்டியே உணர்ந்து அந்தத் துன்பத்திலிருந்து பாதுகாப்புத் தேடிக் கொள்ளத் தக்க முயற்சி செய்கிறவனே அறிவாளி. 


நாளைக்கு உணவு வேண்டுமே என்று தேடி வைத்துக் கொள்ளும் அறிவு விலங்குகளுக்கு இல்லை. இன்பத்தை அளிப்பது எது, துன்பத்தை அளிப்பது எது என்று நமக்குத் தெரிகிறது. வரக் கூடிய இன்பம் எத்தகையது, துன்பம் எத்தகையது என்று எண்ணிப் பார்க்கின்ற அறிவு நமக்கு இருக்கிறது. பசித் துன்பம் வருமே என்று முன்னதாகவே உணவு ஆக்கிக் கொள்ளத் தெரிகிறது. அரிசி குத்தி வைத்துக் கொள்கிறோம். நெல்லைக் குதிரில் போட்டு வைத்துக் கொள்கிறோம். இத்தகைய அறிவுடைய நாம், நமக்கு வருகிற துன்பங்களுக்கு எல்லாம் தலையாய துன்பம் எது என்று ஆராய்ந்து அந்தத் துன்பத்தினின்றும் விடுதலை பெறுவதற்குரிய வழியைத் தேடிக் கொள்வதுதான் அறிவுடைமை.


ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறக்கிறது. பிறந்தது முதல் அதற்காகச் சேமிக்கத் தொடங்குகிறான். காரணம், அந்தக் குழுந்தைக்கு, தக்க வயதில் திருமணம் பண்ண வேண்டும் என்பதை அவன் உணர்ந்துகொண்டு இருக்கிறான். இப்படிச் செய்கிறவர்கள் வருமுன் காப்பவர்கள், பிழைக்கத் தெரிந்தவர்கள், வாழத் தெரிந்தவர்கள். கோயிலுக்குப் போய் இறைவனைத் தரிசித்து வரலாம் என்று ஒருவன் சொன்னால், பகுத்தறிவுவாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்கிற ஒருவன் அவனை மூட நம்பிக்கைக்காரன் என்கிறான். பிறந்த பெண் குழந்தையின் திருமணத்திற்காக, முன் கூட்டியே சேமநிதியில் பணம் கட்டுவது அறிவானால், ஏதாவது விபத்து வந்து நேரும் என்று பாதுகாப்பாக, காப்பீடு செய்து வைத்துக் கொள்வது அறிவானால், உயிருக்கு வருகிற துன்பத்தைப் போக்கிக் கொள்ளப் பாதுகாப்புத் தேடிக் கொள்வதும் அறிவுதான். 


செத்துப் போன பிறகும், இந்த உலகில் அழியாது நிற்கும் உடம்பு ஒன்று உண்டு. பஞ்சபூதங்களினாலான உடம்பு அழிந்து விடலாம். ஆனால் அந்த உடம்பு அழியாது. அதனைப் "புகழ் உடம்பு" என்று சொல்வார்கள். 


"மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயாது 

ஏந்திய கைகொடு இரந்தவர், எந்தாய்! 

வீந்தவர் என்பவர்  வீந்தவ ரேனும் 

ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே"


என்பது கவிச்சக்கரவர்த்தியின் இராமாயணப் பாடல். இந்த உடம்பு செத்துப் போகலாம். புகழ் உடம்பு இறவாது. புகழ் இன்றி வெறும் உடம்பைச் சுமந்துகொண்டு ஒருவன் வாழலாம். அவன் நடைப் பிணம். பெரியவர்கள் பூத உடம்பு அழிந்தாலும் புகழ் உடம்பை நிலை நாட்டிக் கொள்வார்கள். அவர்கள் இந்த உலகில் புகழ் உடம்பை வைத்துவிட்டு, மறுமையில் இன்பத்தை அடைகிறார்கள். பாவி என்னும் பேர் படைத்து, இந்த உலகில் பலகாலம் வாழ்ந்தால் உலகம் அவனைப் பழிக்கும். மறுமையில் அவன் நரகத்தை அடைவான். இங்கே பழியைத் தேடிக் கொண்டவனுக்கு அங்கே இன்பம் இல்லை. 


இறந்த பிறகும், உலகம் பழி சொல்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காகப் பணம் சேர்த்து வைத்து நலம் பண்ணுகிறவனை அறிவாளி என்கிறோம். இளைத்த பின்பும் உதவியாக ஓய்வூதியம் பெறும் அரசு வேலை இருந்தால் நல்லது என்று நாடுகிறோம். உடம்புக்கு இளைப்பு வருவது போல், உயிருக்கும் இளைப்பு வரும். உயிருக்குத் தளர்ச்சி ஏற்படுகிற காலத்தில் அதற்கு உதவி செய்யவேண்டிய பொருளை வாழும் காலத்திலேயே தேடிவைத்துக் கொள்ளவேண்டும். அதை எப்படித் தேடிக் கொள்வது என்பதைப் பெரியாழ்வார் காட்டுகின்றார்.


"துப்பு உடையாரை அடைவது எல்லாம் 

சோர்விடத்துத் துணையாவர் என்றே,

ஒப்பிலேன் ஆகிலும் நுன் அடைந்தேன், 

ஆனைக்கு நீ அருள் செய்தமையால்,

எய்ப்புஎன்னை வந்து நலியும்போது 

அங்குஏதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்,

அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் 

அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே!"


பணியில் எய்ப்பு என்பது ஒரு கால வரையறைக்குள் வருவது. உண்மையான எய்ப்பு என்பது உடம்பை விடுவது. அது எப்போது வரும் என்பதே நமக்குத் தெரியாது. அந்த எய்ப்பு எப்போதும் வரலாம். அந்த எய்ப்பில், பெரிய இன்பத்தைத் தருவதற்குரிய வைப்பு அருளாகிய செல்வம்தான். எனவே, அருணகிரிநாதர், "மாகத்தை முட்டிவரும் நெடுங் கூற்றன் வந்தால் என் முன்னே தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்" என்று வேண்டினார்.


அடியார்கள் வேண்டுவதை வேண்டியபடியே அருள் புரிகின்றவன் இறைவன். "யார்க்கும் இல்லை என்னாது அருள்வார்" என்பது தேவாரம். இறைவனைப் பிரார்த்தனை பண்ணினவுடன். நிச்சயமாகத் திருவருள் நமக்குக் கிடைக்கும் என்ற உறுதி அருணகிரிநாதர் உள்ளத்தில் எழுந்தது. இனி அவர் அச்சப்பட வேண்டியதில்லை. ஒரு குழந்தை ஒரு பெரிய பையனிடம் பயந்து கொண்டு அப்பாவிடம் ஓடுகிறான். அப்பா துணைக்கு வரும்போது அந்தக் குழந்தை அந்தப் பெரியவனிடம், "இப்போது என்ன செய்வாய்" என்று தைரியமாகச் சொல்லும்.


அதுபோல்,  இறைவன் திருவருளைத் துணையாகப் பெற்ற அருணகிரிநாதர், எமனை விளித்து, "எனக்குத் துணையாக முருகப் பெருமானைக் கொண்டு உள்ளேன். இனி அச்சம் இல்லை.  வேண்டுமானால் என் பக்கத்தில் வந்து பார். உன் உயிரையே வாங்கி விடுகிறேன்" என்று கூறுகிறார்.  


உலகத்திலுள்ள மக்களுக்கு அச்சத்தைத் தருகிறவன் எமன். அவன் கரிய பெரிய எருமை மீது வருகின்றவன். இருள்நிற மேனி உடையவன். அவனை ஒளியுடைய திருமேனி படைத்த முருகன் அழித்து ஒழிப்பான் என்ற கருத்தில், எமன் நேரே வந்ததாகப் பாவித்துப் பாடி நம்மை நல்வழிப் படுத்துகிறார் அருணகிரிநாதர். நம்மை அச்சுறுத்துவற்குக் காரணமாக இருப்பவன் எமன். பாதுகாப்புத் தேடிக் கொண்டால், அவனிடம் அகப்படாமல் இருக்கலாம்.


உயிரும் உடம்பும் ஒட்டி இருப்பதனாலேயே ஒரு மனிதன் வாழ்கிறான் என்று சொல்ல முடியாது. செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாவிட்டால் கைகளைப் படைத்த பயனில்லை. அது பிணத்தின் கை போன்றதே. "வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே, வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பனை ஏத்தாதே சூழ்கின்றாய் கேடு உனக்கு" என்றார் மணிவாசகப் பெருமான். "உழுத சால் வழியே உழுவான் பொருட்டு, இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே" என்றார் அப்பர் பெருமான். இத்தகைய நெஞ்சம் வாழ்வாங்கு வாழ்வதற்குப் பயன்படாது என்பதால், "வாழாத நெஞ்சமே" என்றும், தீமை செய்வதற்கு முற்படுவது குறித்து, "வாழ்கின்றாய்" என்றும் கூறினார் மணிவாசகர்.


நம் உள்ளத்திற்குள் ஒரு நோய் உண்டு. ஒரு செயலைச் செய் என்று உள்ளே இருந்து ஒன்று சொல்கிறது. அதைச் செய்யாதே என்று மற்றொன்றும் உள்ளே இருந்தே தடுக்கிறது. செய்ய வேண்டிய செயலைச் செய்யவிடாமல் செய்கிற இந்த நோய்தான் மனிதனை வாழவிடாமல் செய்கிறது. நமது மனமே நமக்குப் பகையாக இருக்கிறது. 


"தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும்

தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்

தானே தனக்குக் கரி". --- அறநெறிச்சாரம்.


இதன் பொருள் ---


தனக்குத் துன்பம் செய்யும் பகைவனும், இன்பம் செய்யும் நண்பனும் தானே ஆவான்.  பிறர் அல்ல. தனக்கு மறுபிறவியில் உண்டாகக் கூடிய இன்பத்தையும், இந்தப் பிறவியில் அனுபவிக்கும் இன்பத்தையும் செய்து கொள்பவனும் அவனேதான். தான் செய்த வினைகளின் பயனாக, இன்ப துன்பங்களைத் தானே அனுபவிக்கின்றான். எனவே,  தான் செய்த வினைகளுக்குச் சான்றாக உள்ளவனும் அவனே தான்.


ஒருவருக்கு உண்டாகும் மேன்மையும், சிறுமையும், அவரவர் செய்யும் செயல்களால் உண்டாகும்.அறிவினாலும், பிறர்க்கு உதவி செய்தல் முதலியவற்றாலும் பெரியவரே, பெரியவர். அவரே பெருமை உடையவர்.


"நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை

நிலைகலக்கிக் கீழ் இடுவானும், நிலையினும்

மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத்

தலையாகச் செய்வானும் தான்".    --- நாலடியார்.



இதன் பொருள் ---


எல்லோரும் போற்றும்படியாக சிறந்த நிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்பவனும், தனது முன் நிலையையும் குலையச் செய்து, தன்னைக் கீழ்நிலையில் தாழ்த்திக் கொள்பவனும், தான் முன் இருந்த சிறந்த நிலையில் இருந்து, மேன்மேலும் உயர்ந்த நிலையில் தன்னை மேம்படுத்தி நிலைசெய்து கொள்பவனும், தன்னை அனைவரினும் தலைமை உடையவனாகச் செய்து கொள்பவனும் தானே ஆவான்.


உலகியல் நிலை மட்டும் அல்லாது, அருளியல் நிலையும் அவ்வாறே என்பதை,


"தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும்

தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்

தானே தனக்குத் தலைவனும் ஆமே".


என்று நிறுவுகிறார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார்.


தனக்கு துன்பம் செய்யும் பகைவனும் இன்பம் செய்யும் நட்பு உடையவனும் தானே ஆவான்.  பிறர் காரணம் அல்ல. தனக்கு மறுமை இன்பத்தையும் இம்மை இன்பத்தையும் செய்துகொள்பவனும் தானே ஆவான். தான் செய்த வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத் தானே அனுபவிப்பவனும் அவனே. அதனால், தனக்குத் தானே தலைவனாக இருந்து தன்னை நல்ல நெறியில் செலுத்திக் கொள்பவனும்,  தீய நெறியில் செலுத்திக் கொள்பவனும் அவனே தான். உயிர்களின் பக்குவத்தைப் பொறுத்தே நன்மையும் தீமையும் அமையும்.


நமக்குப் பகையாக உள்ள மனதை அடக்கினால் இறைவன் திருவருளைப் பெறலாம். மனதை அடக்கவேண்டுமானால் இறைவனுடைய திருவுருவத்தைத் தியானம் செய்ய வேண்டும். 


முருகப் பெருமான் குழந்தையாக உலகத்தில் அவதாரம் செய்தார். சரவணப்பூம் பொய்கையில் தாராகணங்கள் ஆகிய கிருத்திகைப் பெண்கள் அறுவர் தந்த முலைப்பாலை உண்டார். அது போதாமல், உமாதேவியார் கொடுத்த ஞானப்பாலைக் குடித்தவர் அவர். தாராகணம் - நட்சத்திரங்களின் கூட்டம். ஆறு நட்சத்திரங்கள் சேர்ந்த கூட்டத்தைக் கிருத்திகை நட்சத்திரம் என்று சொல்வார்கள். அந்த ஆறு நட்சத்திரங்களும் ஆறுமாதர்கள்.  இவர்கள் குழந்தைவேலனுக்குப் பாலூட்டி வளர்க்க வேண்டும் என்று தவம் புரிந்தவர்கள் அவர்கள். அந்த ஆறு பேரும் சரவணப் பூம்பொய்கையில் ஆறு குழந்தைகளின் உருவத்தில் இருந்த முருகப் பெருமானுக்குப் பால் ஊட்டினார்கள். கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தமையால் எம்பெருமானுக்கு கார்த்திகேயன் என்னும் திருநாமம் வழங்கப்படுவதாயிற்று.


"அறுமீன் முலைஉண்டு, அழுது, விளையாடி

நறுநீர் முடிக்கு அணிந்த நாதன் - குறுமுறுவல்

கன்னியொடும் சென்று அவட்குக் காதல் உருக்காட்டுதலும்,

அன்னவள் கண்டு, அவ்வுருவம் ஆறினையும் - தன்இரண்டு

கையால் எடுத்து அணைத்து, கந்தன் எனப்பேர் புனைந்து

மெய்ஆறும் ஒன்றாக மேவுவித்து, -  செய்ய

முகத்தில் அணைத்து,  உச்சி மோந்து, முலைப்பால்

அகத்துள் மகிழ் பூத்து அளித்து, - சகத்துஅளந்த

வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து

உள்ளம் உவப்ப உயர்ந்தோனே!"


என்று கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபர அடிகளார் பாடி உள்ளார்.


இதன் பொருள் ---


சரவணப் பொய்கையில் சிவபரம்பொருளிடம் இருந்து வெளிப்பட்ட தீப்பொறிகள் ஆறும், ஆறு குழந்தைகளின் திருவுருவங்களாய் மாற, முதற்கண் கார்த்திகைப் பெண்கள் அறுவர் முலைப்பாலைப் பருகி, அழுது விளையாடிக் கொண்டு இருந்தார் முருகப் பெருமான், மணமிக்க கங்கை நீரைச் சடைமுடியில் தரித்த சிவபெருமான்,  புன்சிரிப்பை உடைய உமாதேவியாரொடு சரவணப் பொய்கையினை அடைந்து, தனது திருமகனுடைய திருவுருவங்களை அத்தேவிக்குக் காண்பித்தலும்,  உமாதேவியார் கண்டு, அந்த ஆறு திருவுருவங்களையும், தன்னுடைய இரண்டு திருக்கரங்களாலும் ஒரு சேர எடுத்து, ஆறு திருவுருவங்களையும் ஒரு திருவுரு ஆக்கிச் சேர்த்துத் தழுவி,  "கந்தன்" என்று திருநாமம் சூட்டி, தனது செவ்விய திருமுகத்தில் சேர்த்து அணைத்து, உச்சியை முகந்து, திருவுளத்தில் மகிழ்ச்சி உற்று, தனது திருமுலைப் பாலை அளித்து, உலகத்தைத் தனது ஈரடியால் அளந்த திருமாலாகிய வெள்ளை இடபத்தின் மீது எழுந்தருளி இருக்கும் சிவபெருமானது திருக்கரத்தில் கொடுத்து இருக்க,  அம்மையப்பர் திருவுளம் மகிழ்ச்சி கூர உயர்வு உற்று இருந்த பெருமானே!


வெறும் அறிவினால் உலகத்திற்குப் பயன் இல்லை. அறிவு மாத்திரம் தனித்திருந்தால் இன்பம் உண்டாகாது. அருளும், அறிவும் கலந்தால் உண்மையான இன்பம் உண்டாகும். அறிவினால் மாத்திரம் பார்த்தால் உலகத்தில் பேதம் தெரியும். அறிவை மறந்து அருளினால் பார்த்தால் அபேதம் தோன்றும். 


"அருளால் எவையும் பார் என்றான், - அத்தை 

அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன்; 

இருளான பொருள்கண்டது அல்லால் - கண்ட 

என்னையும் கண்டினலன்; என்னடி தோழி'!"


என்று தாயுமானவர் பாடுவார். 


ஞானமயமாக நிலவிய முருகன் உலகத்திற்கு அருள் செய்ய வேண்டுமென்ற பெருங்கருணையினால் அறப்பெருஞ் செல்வியாகிய உமையம்மை, தனது அருளைக் கலந்து குழைத்த பாலை முருகப் பெருமானுக்கு ஊட்டினாள். சிவமும் சத்தியும் கூடினால்தான் உலகம் இயங்கும். முருகப் பெருமான் இறைவனுடைய அம்சமாகத் தோன்றியவர். அந்தப் பெருமானுக்குப் பராசத்தியினுடைய அம்சம் கலந்தால்தான் அருள் வெள்ளம் பெருக்கெடுக்கும். அதன் பொருட்டே உமாதேவியாருக்குச் சிவபரம்பொருள் சரவணப் பொய்கையில் தவழ்ந்து கொண்டு இருந்த குழந்தையைக் காட்டினார். உமாதேவியார் உள்ளம் மகிழ்ந்து அருட்பாலை ஊட்டினார். இதை வைத்தே,  "தாராகணம் என்னும் தாய்மார் அறுவர் தரும் முலைப்பால் ஆராது, உமைமுலைப்பால் உண்ட பாலன்" என்று அருணகிரிநாதர் பாடுகிறார். 


அந்தக் குழந்தையின் துணை தனக்கு இருக்கிறது' என்கிறார் அருணகிரிநாதர். எமனைப் பார்த்து,  "வாராது அகல் அந்தகா!" என்று மிடுக்காகப் பேசுகிறார். அந்தகன் என்றால் எமன் என்றும், குருடன் என்றும் இரண்டு பொருள்கள் உண்டு. 'நான் முருகப் பெருமானுடைய அருளைப் பெற்றிருக்கிறேன் என்பதை நீ கண்டு கொள்ளாமல் குருடனாக இருக்கிறாயே' என்பது குறிப்பு.


எமன் வருவான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். உயிரைப் போக்குகின்ற ஒரு சக்திக்கு எமன் என்று உருக் கொடுத்துப் பருப்பொருளாக இப்படிச் சொல்லி இருக்கிறார்கள். குதிரையின் மேல் வரும் மனிதனைப் போலக் கண்ணுக்கு நன்றாகத் தெரியும்படி எருமைக் கடாவின் மேல் அவன் வருவது இல்லை. எமன் என்பது கற்பனை.  அவன் நம்மைப் பாசம் போட்டு இழுத்துச் செல்வான் என்பது பாவனை. அந்தப் பாவனைக்கு மாற்று மற்றொரு பாவனைதான். எமன் வருவதாகப் பாவனை செய்வதை மாற்ற, முருகன் வருவதாகப் பாவனை செய்யவேண்டும்.


பாசம், கதை முதலியனவற்றை எடுத்துக் கொண்டு வருவதாக எமனைப் பற்றிய நினைப்பு வரும்போது, அதனை மாற்றுவதற்குரிய சிறந்த வீரராக உள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் நினைக்கிறார். இறைவன் திருக்கரங்களிலுள்ள படைக்கலங்களை நினைக்கிறார். 


நான் எப்போதும் முருகப் பெருமானுடைய திருவுருவத்தைத் தியானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன் அவனுடைய ஒவ்வோர் அங்கமும் என் உள்ளத்தில் நிற்கிறது அவன் கையில் உள்ள ஆயுதங்களும் என் அகக் கண்ணில் நிற்கின்றன. அவன் தன் இடையில் உடைவாளைச் செருகி இருக்கிறான். அது எனக்குப் பலமாக இருக்கிறது. அவன் கையில் சிறிய வாளை வைத்திருக்கிறான். அதுவும் எனக்குத் துணையாக வரும். இந்த இரண்டுமே போதும். இந்த இரண்டிலும் தீராத பெரும் பகை இருந்தாலும், ஆதனையும் அழித்து ஒழிக்கின்ற பெரும்படையாகிய வேலாயுதம் பெருமானிடம் இருக்கிறது. பெரிய பெரிய அசுரர்களை அடியோடு அழித்து வென்ற வீரவேல் அது. சீராவும், சிறுவாளும், வேலும் எனக்குத் துணையாக என் நெஞ்சில் எப்போதும் இருந்து கொண்டிருக்கும்போது, நீ எந்தப் படையோடு என்னிடத்தில் வந்தாலும் உய்யமாட்டாய். நீ பிழைத்திருக்க வேண்டுமானால் என் பக்கத்தில் வராமல் அகன்று செல்வாயாக  என்கிறார் அருணகிரிநாதர். 


காலனுக்குக் காலனாகிய இறைவன் தன்னுடைய திருவடியினால் காலனை உதைத்து அழித்துக் கொன்றான் என்று புராணம் கூறுகிறது. மார்க்கண்டேயர் சிவபெருமானைச் சரணடைந்தார். அப்போது அந்தப் பெருமான் காலனுக்குக் காலனாக நின்று, தன் காலால் உதைத்து, தனது அடியவருக்குத் திருவருள் புரிந்தார். ஆனால்,  மார்க்கண்டேயர் பட்ட பாட்டை அருணகிரிநாதர் படவில்லை. அவருக்கு மிக எளிதில் பாதுகாப்புக் கிடைத்திருக்கிறது. 


முருகப்பெருமான் திருக்கரத்தில் உள்ள படைக்கலங்கள் உலகத்தில் உள்ள அழிப்புக் கருவிகளாகிய படைக்கலங்களைப் போன்றவை அல்ல. அவை ஞானத்தின் சொரூபம். ஞானசக்தியே வடிவேலாக இருக்கிறது. அதன் அம்சங்களாகவே மற்ற ஆயுதங்களும் இருக்கின்றன. அஞ்ஞானம், மறதி, மரணம், இருள் ஆகிய எல்லாவற்றுக்கும் ஒரு வடிவம் கொடுத்து எமன் என்று சொல்கிறோம். இவற்றையெல்லாம் அடியோடு அழிப்பதற்கு முருகப் பெருமானுடைய படைக்கலங்கள் இருக்கின்றன. அவை அஞ்ஞான இருளை, துன்பத்தை ஒட்டும் வல்லமை வாய்ந்தவை. 


மிகவும் வலிமை உள்ள எமனை ஒட்டுவதற்கு நம்மிடத்தில் படைக்கலம் இல்லாவிட்டாலும், இறைவனைத் தியானம் செய்து, அவன் திருக்கரத்தில் உள்ள படைகளைச் சிந்தனையில் கொண்டால் அந்த அச்சம் ஓடி விடும். காலனால் துன்பம் வருமே என்ற அச்சமே நமது துன்பத்துக்கு அடிப்படை. எங்கே அச்சம் இல்லையோ அங்கே காலனுக்கு வேலை இல்லை. அந்த அச்சத்தைப் போக்குவதற்கு, அச்சம் தோன்றும் இடமாகிய உள்ளத்தில் தைரியம் தோன்றச் செய்கின்ற தியானத்தை உறுதிப் படுத்தவேண்டும்.


முருகப் பெருமான் ஞானாம்பிகை ஆகிய உமாதேவியாரின் திருமுலைப் பாலாகிய சிவஞானத் திருவமுதை உண்டு "ஞானபண்டிதன்" என்று நின்று, தன்னை நம்பினோர் அனைவருக்கும் ஞானத்தை அருளிச்செய்து, அஞ்ஞான இருளாகிய துன்பத்தை இல்லாமல் பண்ணுகின்றார். அதனால், "ஞானாகரன்" என்று அருணகிரிநாதரால் போற்றப்பட்டார். அறுமுகச் சிவனார் அம்மை திருமுலைப்பாலை விரும்பிச் செய்த அருட்செயலை அடியில் கண்ட அரும்பாடலில் கண்டு மகிழ்க.


"எள் அத்தனை வருந்து உறுபசிக்கும்

இரங்கி, பரந்து சிறுபண்டி

எக்கிக் குழைந்து, மணித் துவர்வாய்

          இதழைக் குவித்து, விரித்து எழுந்து

துள்ளித் துடித்து, புடைபெயர்ந்து,

          தொட்டில் உதைத்து, பெருவிரலைச்

     சுவைத்து, கடைவாய் நீர்ஒழுக,

          தோளின் மகரக் குழை தவழ,

மெள்ளத் தவழ்ந்து, குறுமூரல்

           விளைத்து, மடியின் மீதுஇருந்து,

விம்மிப் பொருமி முகம்பார்த்து,

           வேண்டும் உமையாள் களபமுலை

வள்ளத்து அமுதுஉண்டு அகமகிழ்ந்த

           மழலைச் சிறுவா! வருகவே!

     வளரும் களபக் குரும்பைமுலை

           வள்ளி கணவா! வருகவே!"                   --- திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்.


உமையம்மையின் திருமுலைப்பாலை உண்டவர்கள் இருவரே. ஒருவர் இளைய பிள்ளையாராகிய திருமுருகன். ஞானாகரன், ஞானபண்டிதன் என்னும் திருப்பெயர் அவருக்கு அமைந்தது. மற்றொருவர் ஆளுடைய பிள்ளையார் ஆகிய திருஞானசம்பந்தர். உமையம்மை அருளிய ஞானப்பாலை உண்டதனால் அவர் சிவஞானசம்பந்தர் ஆயினார்.


அருணகிரிநாதர், முருகப் பெருமான் திருவருளைப் பெற்ற இறுமாப்பில், எமனைப் பார்த்துக் கூறும் பாடல் இது.


"தாரா கணம்எனும் தாய்மார் அறுவர் தரும் முலைப்பால் 

ஆராது, உமை முலைப்பால் உண்ட பாலன் அரையில்கட்டும் 

சீராவும் கையில் சிறுவாளும் வேலும் என் சிந்தையவே; 

வாராது அகல் அந்தகா! வந்த போது உயிர் வாங்குவனே".


இதன் பொருள் ---


இயமனே! நட்சத்திரக் கூட்டம் என்கின்ற அன்னையர்கள் ஆறு பேர்களும் தந்த முலைப்பாலை உண்டு, அத்துடன் அமையாமல், உமையம்மையாரின் திருமுலைப்பாலையும் உண்டு அருளிய திருக்குமாரர் ஆகிய முருகப் பெருமான் தனது திருவரையில் (இடுப்பில்) கட்டிக் கொள்ளும் உடைவாளும், திருக்கரத்தில் ஏந்தி உள்ள சிறுவாளும், வேலாயுதமும் அடியேனுடைய சிந்தையில் குடிகொண்டு இருக்கின்றன. ஆதலினால், என்னிடம் வராது நீங்கிப் போவாயாக. மீறி வந்தால் உனது உயிரை வாங்கிவிடுவேன்.


எங்காயினும் வரும் ஏற்பவர்க்கு இட்டது.

 

ஏற்பவர்க்கு இட்டது எங்காயினும் வரும்

-----

தான் செய்கிற செயல் ஒவ்வொன்றும் தனக்குப் பல காலத்திற்குப் பயன்படும்படி செய்ய வேண்டும் என்றுதான் மக்கள் யாவரும் விரும்புவர். ஒரு நாளைக்கு மட்டும் சோறு சமைத்துச் சாப்பிடுகிறவன் அன்றாடம் காய்ச்சி. பல காலத்துக்கும் பொருள் சேகரித்து வைத்துக் கொண்டு சுகமாகச் சாப்பிடுகிறவன் செல்வன். பல காலத்திற்குப் பலவகையில் பயன்படுகிற நற்செயலைச் செய்கிறவனே அறிவாளி.

நம்முடைய உடம்பு நிலையானது அல்ல என்று நமக்குத் தெரியும். வாழ்நாளைப் பொறுத்து உடம்பு இருக்கிறது. உயிருக்கு இறுதி இல்லை. என்றைக்கு இறைவனோடு ஒன்று படுகிறதோ அன்றைக்குத்தான் அதன் பயணம் முடிவடைகிறது. அந்த உயிருக்குப் பயன்படுகிற பொருளைச் சேமித்து வைக்க வேண்டும். நம்முடைய கைப்பொருளை இல்லை என்பவர்களுக்கு இட்டு வைத்திருந்தால், அது நமக்குப் பின்னால் உயிருக்குப் பயன் அளிக்கும் என்கின்றார் அருணகிரிநாதர்.

ஒரு நல்ல செயலைச் செய்தால், அது எப்போது வந்து பலன் தரும் என்கின்ற ஆராய்ச்சிக்கு அவசியம் இல்லை. செயலுக்கு உரிய பலன் எப்போதாவது வந்தே தீரும்.

"நன்றி ஒருவற்குச் செய்தக்கால், அந்நன்றி 

என்று தருங்கொல் எனவேண்டா, - நின்று 

தளரா வளர்தெங்கு தாள் உண்ட நீரைத் 

தலையாலே தான் தருதலால்"

என்னும் ஔவைப் பிராட்டியின் பாடல் இதற்கு விளக்கம் தருகின்றது. ஒருவனுக்கு ஓர் உதவியைச் செய்தால், அதன் பயன் மறுபடியும் நமக்கு எப்படிக் கிடைக்கும் என்ற சிந்தனை கூடாது. நிச்சயமாக செய்ததைவிடக் குறைவாகத் கிடைக்காது, அதிகமாகவே கிடைக்கும். தென்ன மரத்திலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம் என்கிறார் ஔவைப் பிராட்டியார்.

இதைப் போலவே, அருணகிரிநாதர் நமக்கு உபதேசம் செய்கிறார். "நீ உன்பால் வந்து இரப்பவர்களுக்கு உன்னுடைய பொருளை இட்டால், அதனால் என்ன பயன் என்று நினைக்காதே. நீ அளிக்கிற கொடை உனக்கு எங்காயினும் வந்து உதவி பண்ணும். நீ செய்த தருமம் ஒன்று,  அதற்கான இறையருள் ஒன்று. இரண்டும் உனக்கு உதவி செய்ய எப்படி வரும், எங்கே வரும், எப்போது வரும் என்று உனக்கே தெரியாது. எங்காயினும் அந்த இரண்டும் வந்து உதவும்"  என்கிறார்.  பசிக்கு ஏதாவது கிடைக்காதா என்று ஏங்குகிறவர்களை வலிய அழைத்து, உணவு கொடுக்கின்ற தருமம் எங்காயினும் வரும். 

எங்காயினும் என்றால் இந்த உலகத்தில் மாத்திரம் அல்ல. மறுபிறவியிலும் வரும். சிவஞானிக்கு ஒரு கவளம் அன்னம் இட்டால், எடுக்கிற பிறவியில் சோற்றுக்குப் பஞ்சம் இல்லாமல் வாழலாம். அறம் செய்தால், அது பின்பு வந்து விளையும். பொருள் கொடுத்தால், அது பிறன் ஒருவனால் உனக்குக் கொடுக்கப்படுகிற பொருளாக வந்து சேரும்.அருணகிரிநாதர், ஓர் உவமை சொல்லுகிறார். "முருகப் பெருமானுடைய அருள்போல், ஏற்பவர்க்கு இட்டது எங்காயினும் வரும்" என்கிறார்; "வேலையில் வேலை விட்டோன் அருள் எங்காயினும் வரும்" என்கின்றார்.

இறைவன் திருவருள், யாருக்கு, எப்போது, எப்படி வரும் என்று சொல்ல முடியாது. இறைவன் திருவருளினாலே நல்லது பொல்லாதது ஆகிய இரண்டுமே வந்து கொண்டிருந்தாலும் தீமை வரும்போதுதான், "இறைவன் என்னைப் இப்படி சோதிக்கிறார்” என்று  பலர் நினைக்கிறார்கள். இறைவனுடைய அருளை உணர்வதற்கு மனம் இருந்தால், வாழ்க்கையில் ஒவ்வொரு கனமும் அவனுடைய திருவருளை அனுபவிக்கலாம்.

அலுவலக வேலையாக ஒருவர் டெல்லிக்குப் போக விமானச்சீட்டு வாங்கி வைத்து, பயண ஏற்பாடுகளைச் செய்து விட்டார். அன்றைக்கு என்று அவருடைய குழந்தைக்குச் சற்று உடம்பு சரியில்லை. மனைவி அவரைப் போகக்கூடாது என்று தடுக்கிறாள். போவதைத் தடுத்து விட்டதாக மனைவியின் மேல் கடுங்கோபம் உண்டானது. பொறுத்துக் கொண்டார். மறநாள் செய்தித் தாளில், அவர் கிளம்பிச் செல்ல இருந்த விமானம் நடுவழியில் விழுந்து எரிந்து விட்டதாக வந்ததைப் படித்தவுடன்தான், இறைவனுடைய திருவருள் நம்மை ஊருக்குப் போகாது தடுத்திருக்கிறது என்று நினைந்து உருகினார். மனைவியிடத்தில் கோபித்துக் கொண்டதற்காக வருத்தப்பட்டார். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எதிர்பாராத நன்மைகள் இப்படி எத்தனையோ நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை எல்லாம் இறைவனுடைய திருவருள் என்று நினைக்க மனம் இல்லை. எதிர்பாராமல் வந்து நிற்கிற இலாபத்தைக் காண்கிறோம். அதை நம் அதிருஷ்டம் என்று சொல்கிறோம். 

எதிர்பாராத வகையில் யாராவது எங்காயினும் உதவி செய்தால், அதை அவன் செய்தான் என்று நினையாமல் அவனைக் கருவியாகக் கொண்டு இறைவன் திருவருள் துணை செய்தது என்று நினைக்க வேண்டும். துன்பம் வந்தால் யாரோ நமக்கு வேண்டுமென்றே செய்ததாக நினைக்கிறோம். செய்தவனிடம் கோபப்படுகிறோம். எதிர்பார்த்து விளைந்தால் நம்மால் விளைந்தது எனச் சொல்லிக் கொள்ளலாம். எதிர்பாராமல் நல்லது வந்தாலும் இறைவன் திருவருள் என்று நினைக்க வேண்டும், தீயது வந்தாலும் அவ்வாறே நினைக்க வேண்டும். 

உடம்புக்கு வந்த நோயை எப்படிக் குணமாக்குவது என்று மருத்துவருக்குத் தான் தெரியும். உயிருக்கு வந்துள்ளது தீராத நோயாகிய பிறவிநோய். நம்முடைய புண்ணிய பாவ வினைகளைக் கழுவிவிட வேண்டும் என்பதற்காகவே இறைவன் இந்தப் பிறவியைக் கொடுத்திருக்கிறான். அவன் அருளால் நம்முடைய ஊழ்வினைக்கு ஏற்ப இன்பதுன்பங்கள் விளைகின்றன. துன்பம் வந்தாலும் இன்பம் வந்தாலும் இறைவனுடைய திருவருள் என்று நினைந்து வாழ்பவர்களுக்குத் துன்பத்தினாலே வருத்தம் இராது. இன்ப துன்பம் இரண்டும் அவர்களுக்குச் சமமாகவே இருக்கும். 

ஒரு கிலோ இரும்பு கனமா? ஒரு கிலோ பஞ்சு கனமா?' என்று கேட்டால், கொஞ்சம் மந்தமான புத்தி உள்ளவர், பஞ்சைவிட இரும்பு கனமானது என்று எண்ணி, "இரும்புதான் கனம்'"என்று சொல்லலாம். அறிவாளியாக இருந்தால்,  "பஞ்சாய் இருந்தால் என்ன? இரும்பாய் இருந்தால் என்ன?  இரண்டு சமம்" என்று சொல்லுவார். அதுபோலத்தான், இன்பமாக இருந்தால் என்ன? துன்பமாக இருந்தால் என்ன? இரண்டும் ஆண்டவன் அருள்தான்' என்று நினைப்பவர்களுக்கு இன்பமும் துன்பமும் சமமாகவே இருக்கும். இன்பத்தைக் கண்டு அவர்கள் மனம் புதிய மகிழ்ச்சியை அடையாது. துன்பத்தைக் கண்டு அவர்கள் மனம் துவளாது.

"நன்றாங்கால் நல்லவாக் காண்பவன், அன்றாங்கால் 

அல்லற்படுவது எவன்" 

என்கின்றார் திருவள்ளுவ நாயனார். 

நல்லதுதான் வேண்டும், தீயது வேண்டாம் என்று சொல்வதற்கு நமக்கு உரிமை இல்லை. அடியார்கள் அப்படித்தான் நினைப்பார்கள். "கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்" என்று இவர்களை அடையாளப் படுத்துகிறார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.

நம்மை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்பது இறைவனுக்குத் தெரியும். நாம் நினைக்கிறபடி எல்லாம் வேலை செய்யும் வேலைக்காரன் அல்ல அவன்.  குழந்தை கேட்கிறபடி எல்லாம் உணவுப் பண்டங்களைக் கொடுத்து விட்டால் குழந்தை உருப்படாது. பலாப்பழம் வேண்டும் என்று குழந்தைக் கத்துகிறது. தாய் அதை அதன் கண்ணில் படாமல் ஒளித்து விடுகிறாள். குழந்தை மாந்தம் வந்து துன்பப்படக் கூடாது என்கிற மேலான கருணையால் அப்படிச் செய்கிறாள். நமக்கு இன்பம் அளிப்பது எது, துன்பம் அளிப்பது எது என்று நமக்குத் தெரியாது. இறைவனுக்குத் தெரியும். "வேண்டத் தக்கது அறிவோய் நீ" என்கின்றார் மணிவாசகப் பெருமான். நம்முடைய பாவ புண்ணிய வினைகளுக்கு ஏற்ப இறைவன் அருள் துன்பமாகவும் வரலாம்.  இன்பமாகவும் வரலாம். இரண்டையும் அவன் திருவருளாக ஏற்றுக் கொள்ள வேண்டும். 

துன்பம் இன்பம் இரண்டும் கலந்த வாழ்வில் இறைவன் அருள் என்பது தனியாக வருவது இல்லை. இரண்டுமே அவனுடைய அருள்தான். இத்தகைய மனப்பாங்கு வந்துவிட்டவர்கள் இடுக்கண் வந்தால், அதைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். நமக்குத் துன்பம் வந்தால் நெஞ்சு நடுங்குகிறது. இன்பம் வந்தால் மகிழ்ச்சி உண்டாகிறது. துன்பத்தைத் துன்பம் என்று பார்க்காமல் இறைவன் அருள் என்று நினைப்பார்க்கு,  'இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை' என்று உறுதி வந்துவிடும். 

இறைவனுடைய திருவருள் எப்படிக் காப்பாற்றும் என்று சொல்ல முடியுமா? ஒரு பாலைவனத்திலே போய் நிற்பான். தாகத்திற்குத் தண்ணீர் கிடைக்கவில்லையே என்று அவன் துன்பப்பட்டுக் கொண்டிருப்பான். அவ்வழியே போகிறவன் தனக்காக எடுத்துச் செல்லும் இளநீரை இவனுக்குக் கொடுத்து விடுவான். இறைவன் திருவருள் இவன் தாகத்திற்கு இளநீராக வரும். எம்பெருமான் அருள் எங்கு வரும், எப்படி வரும் என்று சொல்ல முடியாது; எங்காயினும் வரும். 

"பொங்கார வேலையில் வேலைவிட்டோன் அருள்போல் உதவ எங்காயினும் வரும் ஏற்பவர்க்கு இட்டது" என்கின்றார் அருணகிரிநாதர். இறைவன் அருள் இன்ன இடத்தில் இப்படி வரும், இப்படி உபகாரம் செய்யும் என்று சொல்ல முடியாமல் எங்காயினும் வந்து உதவி செய்வது போலவே, இரப்பவர்களுக்குத் தருமம் செய்கிற பொருளும் வந்து உதவும். இந்த உலகத்தில் மாத்திரம் அல்ல; வேறு உலகத்தில், வேறு பிறவியிலும் வந்து சாரும்.  இது தெரிந்தும், இறைவனிடம் பத்தி பூண்டு இருக்காமல், பொருளை ஈட்டி, அதைப் பிறருக்குக் கொடுக்காமல் தமக்கே பயன்பட வேண்டும் என்று பலர் சேமித்து வைத்துக் கொள்ளுகிறார்களே, அவர்களைப் பார்த்து அருணகிரிநாதர், "வங்காரமும் உங்கள் சிங்கார வீடும் மடந்தையரும்  சங்காதமோ? கெடுவீர்! உயிர் போம்அத் தனி வழிக்கே?" என்று பாடுகிறார்.

யாசிப்பவர்களுக்கு இடாமல் பொருளை வைத்துக் கொண்டிருப்பவர்கள், தம்மிடம் உள்ள பணம், தங்கம்,  தாங்கள் கட்டிக்கொண்ட அழகான வீடு, மனைவி இவைகள் எல்லாம் தங்களுக்கு எப்போதும் துணை என நினைக்கிறார்கள். வங்காரம் - தங்கம். ஒருவன் தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் தங்கமாக மாற்றி வைத்துக் கொள்கிறான். தங்கத்தின் மதிப்பு என்றைக்கும் நிலையானது, எப்போதும் அது துணையாக இருக்கும் என்று நினைக்கிறான். பெரிய வீட்டைக் கட்டிக் கொள்கிறான். அதில் பல அறைகள் இருக்கின்றன.  மாடு கட்டும் கொட்டகையே மிகப் பெரியதாக, மிக அழகாக இருக்கிறது. அந்த மாளிகையில் இறைவனுக்கு ஒர் இடம் இல்லை. இறைவனை மறந்து சிங்காரமாகக் கட்டிய வீடு அது. அந்த வீட்டைத் தன்னுடைய மனைவியின் விருப்பபடி கட்டியிருக்கிறான். சிங்காரமான வீட்டில், சிங்கார மடந்தையுடன் வாழ்கிறான். தன்னுடைய கைப்பொருளை மனைவிக்கே பலரும் கொடுத்து விடுகிறார்கள், காரணம் அவளால் இன்பம் கிடைக்கிறது என்ற நினைவுதான். 

இப்படித் தம்மிடம் இருக்கும் பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல், யாசிப்பவர்க்கு இடாமல் தங்கமாக வைத்துக் கொண்டிருப்பவர்களும், வீடாக வைத்திருப்பவர்களும், மடந்தையரோடு வாழும் வாழ்வாக வைத்திருப்பவர்களும் கடைசியில் செத்துத்தான் போகிறார்கள். அவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு திட்டமாக இத்தனை காலம் வாழலாம் என்ற வரையறை ஏதும் இல்லை. "நெருநல் உளன்ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ் வுலகு" என்கிறார் திருவள்ளுவ நாயனார்.  

திருமூல நாயனார் நமக்கு ஒரு காட்சியைக் காட்டுகிறார்.

"அடப்பண்ணி வைத்தார், அடிசிலை உண்டார்,

மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்,

இடப்பக்கமே இறை நொந்தது இங்கு என்றார்,

கிடக்கப் படுத்தார், கிடந்து ஒழிந்தாரே"  

இதன் பொருள் ---

உணவு சமைத்தற்கு வேண்டுவனவற்றை ஈட்டிக் கொணர்ந்து வைத்த தலைவர். சமைத்து முடித்த பின்பு அவ்வுணவை உண்டார். பின் தம் இல்லக்கிழத்தியாரொடு தனிமையில் இருந்து சிலவற்றை உசாவுதல் செய்தார்.  அச்செயலுக்கு இடையே, `உடம்பில் இடப் பக்கம் சிறிது நோகின்றது` என்று சொல்லி,  அது நீங்குதற்பொருட்டு ஓய்வு கொள்ளுதற்குப் படுத்தார.  படுத்தவர் படுத்துவிட்டவரே ஆயினார். மீள எழுந்திருக்கவில்லை.

அன்புடைய மனைவி அவருடன் போகவில்லை. அவர் செல்வமும் போகவில்லை. யாவும் இந்த உடம்பு வாழும் வரைக்கும் இங்கே தொடர்புடையவை போல இருக்கும். எதுவரை வரும்? என்றால்,  "அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே" என்கிறார் பட்டினத்தார். பணம், பொருள்,  வீடு எல்லாம் உயிர் இருக்கிற வரைக்கும் அனுபவிக்கலாம். உயிர் போகும் காலத்தில் அவை கூடவர மாட்டா. அவை வீட்டோடு சரி. அன்புடைய மடந்தையராவது கூட வருவார்களா?  என்றால், “விழி அம்பு ஒழுக மெத்திய மாதரும் வீதி மட்டே." பெண்கள் சுடுகாட்டுக்குப் போகும் வழக்கம் இல்லை. பிணத்தை எடுத்துக் கொண்டு போகும்போது தெருமுனை வரையில் வருவார்கள். சுடுகாட்டுப் பக்கம் திரும்பியவுடனேயே அவர்கள் திரும்பிப் போய்விடுவார்கள். ஆகவே, பெண்களும் வீதி மட்டுந்தான் வருவார்கள். அப்பா அப்பா என்று விம்மி விம்மி அலறி அழுகின்ற மைந்தர்களாவது கூட வருவார்களா? என்றால், அவர்களும் சுடுகாட்டோடு நின்று விடுவார்கள்; "விம்மி விம்மி இரு கைத்தலம் மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே"  நம்மைத் தொடர்ந்து வருவன எவை? "பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே." நாம் செய்கின்ற புண்ணிய பாவ வினைகளே நம்மைத் தொடர்ந்து வரும் என்கிறார் பட்டினத்தார்.

"அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே, விழி அம்பு ஒழுக 

மெத்திய மாதரும் வீதிமட்டே, விம்மி விம்மி இரு 

கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடுமட்டே, 

பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே." 

என்பது பட்டினத்தார் அருளிய பாடல்.

இருவினை - புண்ணிய பாவ வினை என்பன உலகிலுள்ள மக்களின் கண்ணுக்குத் தெரியாதவை. அவை உண்டு என்பது, அவற்றின் விளைவாகிய இன்ப துன்பங்களை அநுபவிக்கும்போது உணர்ந்து கொள்ள முடிகிறது. 

இரண்டு கம்பிகள் ஒரே மாதிரியாகத்தான் ஒடுகின்றன. ஒரு கம்பியைத் தொட்டால்  ஒன்றும் தெரியவில்லை. மற்றொரு கம்பியைத் தொட்டால் அதிர்ச்சி உண்டாகின்றது. இந்த விளைவைக் கொண்டே இதில் மின்சாரம் உள்ளது என்று உணர்ந்து கொள்ள முடிகிறது. கம்பியில் உள்ள மின்சாரம் கண்ணுக்குத் தெரிவது இல்லை. தாக்கும் போதுதான் தெரிகிறது. இரு வினைகளும் இப்படியே அனுபவமாக வந்து தாக்கும் போதுதான் பாவம் புண்ணியம் என்ற உண்மை தெரியும். 

உயிர் போகின்ற கடைசி வழிற, ஒரு தனி வழி. யாரும் உடன் வரமுடியாத தனி வழி. உடம்போடு போகத் துணை உண்டு. உயிரோடு போகத் துணை இல்லை  "நும்மை நேடிவரும் தொலையா வழி" என்று அருணகிரிநாதர் சொல்லியிருக்கிறார். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தானாகவே நம்மைத் தேடி வருகிற தொலையா வழி அது. அதில் நீங்கள் பயணம் செல்லும் போது துணை வேண்டுமென்றால், மலை ஆறு கூறுகளாகப் போகும்படி வேலை விடுத்த வேலாயுதப் பெருமானை வணங்கி, ஏற்றவர்களுக்குக் கீரை இருந்தாலும், வெந்தது எது இருந்தாலும பகிர்ந்து கொடுக்கும் நிலையான மாதவத்தைச் செய்ய வேண்டும். அதுதான் தொலையா வழிக்குப் பொதி சோறும் உற்ற துணையுமாக வந்து உதவும்.

ஒரு நாள் இரண்டு நாள் போகக்கூடிய வழியாக இருந்தாலே, 'துணையோடு அல்லது நெடு வழி போகேல்" என்று சொல்வார்கள். உயிர் எத்தனை பிறவிகள் யாத்திரை செய்யப்போகிறதோ தெரியாது. அது போகிற வழியும் தொலையாத நெடு வழி. யாரும் துணைக்கு வர இயலாத தனிவழி. பொன், பொருள், மனைவி, மக்கள் எல்லாம் உயிர் போகின்ற அந்தத் தனி வழிக்குத் துணையாக வரமுடியாது.  அவற்றைச் சங்காதம் என்று எண்ணிக் கொண்டிருந்தால் கெட்டுப்போக வேண்டிவரும். உயிரைத் தொடர்ந்து வருவது புண்ணிய பாவ வினைகள்தாம். நம்மிடம் உள்ள பொருள்களை ஏற்பவர்களுக்கு இட்டுப் புண்ணியத்தைத் தேடிக் கொள்ள வேண்டும். 

இறைவனுடைய அருளைப் பெற நினைக்கிறவர்களுக்குத் தங்கள் கையிலுள்ள பொருள் பொருளாகத் தோன்றாது. இறைவன் அருளில் பற்று வைத்திருப்பவர்களுக்குப் பொருளிலே பற்று இருக்காது. இறைவன் அருள் உதவி செய்ய வந்தால், பொருள் அறமாக மாறிவிடும். இளையான்குடி மாறனார் என்கிற நாயனார் இருந்தார். அவர் தனது செல்வம் முழுவதையும் சிவனடியார்களுக்கே அமுது படைப்பதில் செலவிட்டுக் கொண்டிருந்தார். என்னிடத்தில் பொருள் இருந்தால் நானும் அறம் செய்வேன் என்று சிலர் கூறுவார்கள். பொருள் வந்தால் செய்ய மாட்டார்கள். இவர்களுக்கு ஓர் உண்மையை உணர்த்த இறைவன் திருவுள்ளம் கொண்டார். மாறனாருக்கு வறுமை உண்டாயிற்று. வீட்டில் வைத்திருந்த நெல்லைக் கொண்டுபோய் அன்று காலையில்தான் விதைத்துவிட்டு வந்தார். மாலையிலே இடி மின்னனுடன் மழை வந்துவிட்டது. கும்மிருட்டுக் காலத்தில் பசியோடு ஒருவர் வந்தார்.  கொட்டுகிற மழையில்இரவுக் காலத்தில் பசியோடு வந்தார் அவர். நாயனார் வீட்டில் உணவு இல்லை. சமைக்கலாம் என்றால் அரிசி இல்லை. விறகு இல்லை. அத்தனை வறுமை! 

அவருடைய வேதனையை ஒரே விநாடியில் உணர்ந்து கொண்டாள் அவருடைய மனைவி. காலையிலே விதைத்த நெல் இந்த மழையில் நிச்சயம் மேலாகத்தான் மிதக்கும். அதுவும் ஒரு பக்கமாக ஒதுங்கிக் கிடக்கும். வயலுக்குப் போய் அதை அரித்துக் கொண்டு வந்தால், அதைக் குத்தி அரிசியாக்கி விரைவில் சமைத்து விடலாம் என்று ஆறுதல் கூறினாள். அவரும் அப்படியே கொட்டுகிற மழையில் கூடையை எடுத்துக் கொண்டு போய் நெல்லை அரித்து வந்தார். விறகு இல்லை. வீட்டில் மேல் இருந்த கூரையிலுள்ள கம்புகளைப் பிரித்துக் கொடுத்துச் சமைக்கச் சொன்னார். காய்கறி ஒன்றும் இல்லை. புறக்கடையில் இளம் பயிராகக் குழியில் ஏதோ இருந்தது. அதை அப்படியே அவசர அவசரமாக அரிந்து கொண்டு வந்தார். 

அவர் குழியிலுள்ள பயிரையா அரிந்தார்? தம்முடைய பாசத்தின் அடிவேரையே அரிந்தார். இதைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் அருமையாகப் பாடுகின்றார். 

"வழிவரும் இளைப்பி னோடும் வருத்திய பசியி னாலே,

அழிவுறும் ஐயன் என்னும் அன்பினில் பொலிந்து சென்று,

குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர் தடவி, பாசப்

பழிமுதல் பறிப்பார் போலப் பறித்தவை கறிக்கு நல்க"

வழி நடந்து வந்த இளைப்போடு, வருத்துகின்ற பசியினாலும் மனம் வருந்தி நிற்பார் எம் ஐயன் என்னும் அன்பினால் மீதூர்ந்தவராய்ச் சென்று குழிகளினின்றும் உயர்ந்து மேற்செல்லாத புன்செய் நிலத்தில் முளைத்திருக்கும் கீரை வகைகளைத் தடவி, அக் கீரைகளில் சிலவற்றைத் தம் பாசத்தின் வேரைக் களைவார் போலப் பறித்துக் கறியமுதுக்குக் கொடுத்தார். சமையல் செய்துவிட்டுத் திண்ணையில் வந்து பார்த்தால் அடியாரைக் காணவில்லை. யாவர்க்கும் மேலான சிவபிரான் சோதி வடிவாய்க் காட்சி தந்து,

"அன்பனே! அன்பர் பூசை அளித்த நீ, அணங்கி னோடும்

என்பெரும் உலகை எய்தி, இருநிதிக் கிழவன் தானே

முன்பெரு நிதியம் ஏந்தி மொழிவழி ஏவல் கேட்ப

இன்பம் ஆர்ந்து இருக்க என்றே அருள்செய்தான்"

என்கின்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். "அடியவனே! அடியவர்களுக்கு வழுவாது வழிபாடு செய்து உணவளித்து வந்த நீ, உன் மனைவியோடும் என்னுடைய பெருமை பொருந்திய சிவலோகத்தை அடைந்து, குபேரனே தனக்கு உரிய நிதிகளைக் கையில் ஏந்தி, உன் ஆணை வழிநின்று நீ பணித்த பணிகளைச் செய்து வர, இன்புற்று இருப்பாயாக என்று யாவர்க்கும் மேலோனாய சிவபெருமான் அருளிச் செய்தார்.

இறைவன் அருளை மனத்தில் வைக்காதவர்களுக்கு தங்கமாகவும் வீடாகவும் பொருளைச் சேர்த்துக் கொள்ளத் தெரியும். மடந்தையர்களுக்காகப் பொருளை அழிக்கத் தெரியும். அவர்களுடைய வீடும் மடந்தையருமா உயிர்போகும் தனி வழிக்குத் துணையாக வருவார்கள்? அத்தகையவர்களைப் பார்த்து இடித்து உரைக்கிறார் அருணகிரிநா"ர். 'நீங்கள் எவற்றை வாழ்க்கைக்கு நலம் செய்யும் என்று சேர்த்து வைக்கிறீர்களோ அவை பிறகு உதவ வருவதில்லை. ஏற்பவர்களுக்கு இட்டதுதான் வரும். அது எப்போது எப்படி வரும் என்று உங்களுக்குத் தெரியாது. எப்படியும் எங்கேனும் வரும். முத்துக்களையுடைய கடலில் வேலை விட்டவனுடைய அருள் போல எங்காயினும் வந்து உதவும். இது சத்தியம்"  என்று அருளையும், பொருளையும் இணைத்து ஒர் அறிவுரைப் பாடலை அருள்கிறார் அருணை முனிவர். 

"பொங்கு ஆர வேலையில் வேலை விட்டோன்.அருள் போல்உதவ 

எங்காயினும் வரும், ஏற்பவர்க்கு இட்டது, இடாமல் வைத்த 

வங்காரமும், உங்கள் சிங்கார வீடும், மடந்தையரும் 

சங்காதமோ? கெடுவீர்! உயிர் போம்அத் தனிவழிக்கே!" 

இதன் பொருள் ---

நல்வழியில் செல்லாமல் அல்வழியில் சென்று கேட்டினை அடைகின்ற மனிதர்களே! பொங்கி ஆர்ப்பரிக்கின்ற கடலில் வேலாயுதத்தை விடுத்து அருளிய முருகனுடைய திருவருளைப் போல, உங்களிடம் வந்து யாசித்த ஏழைகளுக்கு இட்ட புண்ணியத்தின் விளைவு தப்பாமல் உதவும்பொருட்டு எவ்விடத்திலாயினும் உங்களை நாடி வரும். அப்படி இரந்தவர்களுக்குக் கொடுக்காமல் பெட்டியில் பாதுகாத்து வைத்த பொன்னும், உங்கள் அழகிய வீடும், அழகிய மனைவிமாரும் உயிர் உடம்பை விட்டுச் செல்லும் தனிமையான வழிக்குத் துணை ஆகுமோ?

ஆசைகள் மூன்று என்று சொல்வார்கள். பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை என்பவை அவை. இந்தக் காலத்தில் மண்ணாசை என்பதற்குப் பொருளே வேறாகி விட்டது. நாடு பிடிக்க ஆசைப்படுவது மண்ணாசை. விரிவான நிலங்களை வாங்கிச் சொந்தமாக்கிக் கொள்வதும் மண்ணாசையே. தனக்கென்று வாழும் இடம் ஒன்று பெற விரும்புவதும் மண்ணாசை என்றே கொள்ளலாம். அப்படி வைத்துக் கொண்டால் இங்கே அருணகிரிநாதர் மூவகை ஆசைக்கும் உரிய பொருள்களைச் சொல்கிறார். வங்காரத்தில் உள்ள விருப்பம் பொன்னாசை, சிங்கார வீட்டில் மேலுள்ள ஆசை மண்ணாசை, சிங்கார மடந்தைபால் உள்ள பற்று பெண்ணாசை. 

அறம் செய்யாத பொருளும், அதனால் உண்டான போகமும், உயிர் பிரிந்து போகும்போது துணையாக வரமாட்டா. இறைவன் திருவருள் போல் தவறாமல் வந்து உதவுவது, ஏற்பவர்க்கு இட்டதே ஆகும்.


மனம் என்னும் மலர்



மனம் என்னும் மலர்

-----

அநாதி காலமாகப் பிறவியில் உழன்று வருகிற உயிர்களுக்குப் படலம்  படலமாக அழுக்கு ஏறிக் கிடக்கிறது. அந்த அழுக்கின் கனத்தினால் உயிர் ஆழ்கடலின் அடித்தளத்தில் கிடக்கிறது. அந்த அழுக்குப் படலம் சிறிது போனால் உயிர் சற்றே மேலே வருகிறது. மறுபடியும் அழுக்குப் படிந்தால் மறுபடியும் கீழே போய்விடுகிறது. அழுக்குக் கரைவது மிகுதியாக இருந்தால் அது மெல்ல மெல்ல மேலே வருகிறது. முன்பு இருந்த நிலையைவிட மேலே வருகிறது. ஆழம் முழுவதும் கடந்து நீர்மட்டத்துக்கு வந்துவிட்டதாக ஆகாது. உயிர் வளர்ச்சி நிலையில் சென்று கொண்டே இருந்தால், அதன் நிலை உயர்ந்துகொண்டே வரும். ஓரறிவு உயிராக இருந்த நிலை மாறி அடுத்த படியை அடையும். ஈரறிவுயிரில் சற்றே இழிந்தவையாக் உயரும்.  பின்பு அந்த இனத்தில் சிறந்ததாக உயரும். இந்தப் போக்கிலே தடையின்றி. அது வளருமானால், மறுபடியும் சறுக்கி விழும் நிலை வராமல் இருந்தால், அது மூவறிவு உயிராகி நாலறிவு உயிராகி ஐந்தறிவு உயிராகிக் கடைசியில் ஆறறிவு உயிராகிய மனிதப் பிறவியை எடுக்கும். அப்போதுதான் அது பிறவிக் கடலின் நீர்மட்டத்தை அடைந்ததாக ஆகும். கடலின் அளவுற்ற ஆழத்தில் இருந்து மெல்ல மெல்ல அழுக்குக்  குறைவதனால் மேல் ஏறி வந்து மேல் மட்டத்தை அடைவதற்கு எத்தனையோ பிறவிகள்  எடுத்திருக்க வேண்டும். அவ்வளவையும் எடுத்து எடுத்து வளர்ந்து வந்தாலும் மனிதப் பிறவி கிடைத்ததேயன்றி இன்னும் இலட்சியத்தை அடையவில்லை. பிறவியென்னும் கடலைத் தாண்டி முத்தி என்னும் கரையை அடைய வேண்டும். 

மற்றப் பிறவிகளை நினைத்தால் மனிதன் உயர்ந்தவன்தான். ஆனால், அவன் அடைய வேண்டிய  கரையை நினைத்தால் அவன் தாழ்ந்தவனாகவே ஆகிறான். பிறவிக் கடலின் அடித்தளத்திலே இருந்த உயிருக்கு நீர்மட்டம் எங்கே இருக்கிறது என்று தெரியாது; அதை அளந்தறியும் ஆற்றலும் அதற்கு இல்லை. மேலே வந்துவிட்டோம், இனிக் கரையை அடைந்து விடலாம் என்று எளிதாக நினைத்துவிட முடியாது. கரை எங்கே இருக்கிறது, எப்படி இருக்கும் என்றும் தெரியவில்லை. நீர் மட்டத்தின்மேல் மிதப்பதுதான் அவன் விருப்பம் என்றால் அந்த விருப்பமும் திருப்தியும் நெடுநேரம் நில்லாது. கரையை நோக்கிச் செல்ல முயலாமல் சும்மா இருந்தால் அவன் மீண்டும் கீழே ஆழ வேண்டியதுதான்.  மறுபடியும் விலங்காகப் பிறக்க வேண்டி வரும். ஆதலால், கரை தெரிகிறதோ  இல்லையோ, கரை உண்டு என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும். அப்படிச் முயலும்போது அவன் கை சோரலாம். இடையிலே பல தடைகள் உண்டாகலாம்.  மெல்ல மெல்ல, சிறிதும் சலிக்காமல் சளைக்காமல் முன்னேறினால், சரியான நெறியில் முன்னேறினால், கரை புலனாகும். வெறும் கற்பனையாகக் கரையைப் பற்றி எண்ணமிட்ட அவனுக்கு அதன் உண்மை தெளிவாகும். அது கண்களில் பட்டுவிட்டால் பின்பு அவனுடைய ஆர்வமும் ஊக்கமும் பலப்பல மடங்கு மிகுதி ஆகும். இறுதியில் கரையையே அடைந்துவிடுவான்.  இப்போது நாம் நடுக்கடலில், முத்திக் கரையைச் சேர வழி தெரியாமல் திகைத்துக் கொண்டு இருக்கிறோம். இறைவனை அணுக வேண்டும். நமக்கும் அவனுக்கும் நெடுந்துரம் என்று தெரிகிறது. மெல்ல மெல்ல முயன்றால் எதையும் சாதித்துவிடலாம். 

இறைவனை அடைவதற்கு நான்கு படிகள் உண்டு. ஒவ்வொன்றாகத் தாண்டி முடிவில் இறைவன் என்னும் பொருளை அடைய வேண்டும். படியை வடமொழியில் 'சோபானம்' என்பார்கள்.  நான்கு பெரிய சோபானங்களை ஏறி இறைவனாகிய இலட்சியத்தை நாம் அடைய வேண்டும். நாம் இருக்கும் நிலையைவிட அந்த இன்ப நிலை உயர்ந்தது. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவைகளே அந்தப் படிகள். சரியை என்பது  ஒழுக்கம் அல்லது நடத்தையைக் குறிக்கும். கிரியை என்பது தொழில் அல்லது செய்கை. யோகம் என்பது ஒன்றாக இணைவது. ஞானம் என்பது அறிவது. நல்லொழுக்கம், நற்செய்கை, நல்லிணைப்பு, நல்லறிவு என்று இவற்றைத் தமிழில்  சொல்லலாம். இறைவனை அணுகுவதற்குரிய படிகள் இவை என்பதை நினைவுபடுத்திக் கொண்டால் இந்த ஒழுக்கம் முதலியன யாவும் இறைவனோடு தொடர்புடையனவாக இருக்க வேண்டும் என்ற உண்மை தெளிவாகும். 

பொதுவாக இறைவனிடம் அன்பு பூண்டவர்களை அடியவர்கள் என்று சொல்கிறோம். அவர்களின் செயல்களும் வழிபாட்டு முறைகளும் பலவேறு வகையாக இருக்கின்றன. ஒருவர் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து வருகிறார். ஒருவர் வேறு தலங்களுக்குச் செல்லா விட்டாலும் தன் ஊரிலுள்ள கோயிலுக்கு ஒரு நாளேனும்  தவறாமல் போய் வருகிறார். ஒருவர் நந்தவனம் வைக்கிறார். ஒருவர்  குளம் வெட்டுகிறார். இவர்கள் யாவரும் அடியவர்களே. ஒருவர் இறைவன் திருநாமத்தைப் பலமுறை சொல்கிறார். அவன் புகழைப் பாடுகிறார். ஒருவர் விக்கிரகத்தை வைத்துப் பால் முதலியவற்றால் அபிஷேகம் செய்கிறார். அலங்கரிக்கிறார். நறுமலரால் அருச்சனை செய்கிறார். தூபதீபம் காட்டுகிறார். உணவை நிவேதனம் செய்கிறார். கற்பூர தீபம் காட்டுகிறார். வலம் வந்து பணிகிறார். அவரும் பத்தியுடையவரே. ஒருவர் கண்ணை மூடிக் கொண்டு கண்ணீர் வார இறைவனைத் தியானம் செய்கிறார். முதலில் சில நிமிடங்கள் இப்படி இருந்தவர் நாளடைவில் மணிக்கணக்காக அப்படியே அமர்கிறார். அவரும் அடியவரே.  நின்றாலும் நடந்தாலும் உண்டாலும் படுத்தாலும் இறைவன் நினைவு மாறாமல், எந்தப். பொருளிலும் ஆசை. வைக்காமல், எதற்கும் அஞ்சாமல், நான் என்ற அகந்தையும், எனது என்ற  மமதையும் இல்லாமல் இருக்கிறார் ஒருவர். அவரும் அடியவர்தான். ஆனாலும் எல்லோரும் ஒரே நிலையை உடையவர்கள் அல்லர். பிறர் பூசை செய்கிறதைப் பார்த்து இறைவனை வழிபடும் பக்தனைவிட, தானே பூசை செய்கிறவர் சிறந்தவர். அவரை விடக் கண்மூடி அமர்பவர் உயர்ந்தவர். அவரைவிட எப்போதும் இறையுணர்வு மாறாமல் இருப்பவர் மிகச் சிறந்தவர். இந்த நால்வர் நிலைகளில் முதல் நிலை சரியை, இரண்டாவது நிலை கிரியை, மூன்றாவது நிலை யோகம்; நான்காவது நிலை ஞானம். இந்த நான்கும் படிப்படியாக எய்துவதற்கு உரியவை. 

சிலர் கிரியையாளர்க்குச் சரியை வேண்டாம் என்றும், யோகிகளுக்குக் கிரியையும் சரியையும் வேண்டாம் என்றும், ஞானிகளுக்கு ஒன்றுமே வேண்டாம் என்றும் சொல்வார்கள். அது தவறு. ஒருவன் சிறுகச் சிறுகச் சம்பாதித்து வீடு கட்டுகிறான். முதலில் கீழே பல அறைகளை உடைய வீட்டைக் கட்டிக் கொள்கிறான். பிறகு பொருள் ஈட்டி மேல்மாடி கட்டுகிறான். அப்பாலும் அவனுக்குப் பொருள் வந்தது; இரண்டாவது மாடி கட்டுகிறான். மறுபடியும் பணம் வந்து குவியவே, மூன்றாவது மாடியும் கட்டிக் கொள்கிறான். இப்போது அவனுடைய வீடு நாலடுக்கு மாளிகையாகப் பொலிகிறது. அவன் எப்போதும் நாலாவது அடுக்கில் உயர்ந்த பஞ்சணையில் இருக்கிறான். அப்படியானால் அவனுக்கும் மூன்றாவது அடுக்குக்கும் தொடர்பு உண்டு.  மற்ற அடுக்குகளுக்கு அவன் வருவது உண்டு. அவன் இருப்பது நாலாவது அடுக்கானாலும் மற்ற அடுக்குகளுக்கும் அவன் வருவான். ஒரடுக்கு மாத்திரம் கட்டிக் கொண்டவனுக்கு அந்த ஒன்றுதான் சொந்தம். இரண்டடுக்கை உடையவனுக்கு இரண்டும் சொந்தம். மூன்றடுக்கு மாளிகைக்காரனுக்கோ மூன்றுமே சொந்தந்தான். நாலடுக்கு மாளிகைக்காரன் மற்ற மூவரைவிட உயர்ந்த இடத்தில் இருப்பவன்தான். ஆனாலும் எல்லா அடுக்குகளிலும் அவன் உலாவி வருவான். 

அது போலத்தான் ஞானிகளாக இருப்பவர்கள் மற்ற மூன்று திறத்தினிலும்  ஈடுபடுவது உண்டு. திருஞானசம்பந்தப் பெருமான் இணையில்லாத ஞானம் பெற்றவர். அவர் திருத்தலங்கள்தோறும் சென்று வழிபாடு செய்தார்.  அது சரியை. நான்காம் பாதத்தை அடைந்தவர் நான்கு நிலையிலும் இருப்பார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டும். "சிவஞான சித்தியார்" இந்த உண்மையைச் சொல்கிறது.

"ஞான யோகக் கிரியா சரியை நாலும்

     நாதன்தன் பணி; ஞானி நாலினுக்கும் உரியன்;

ஊனம் இலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன்

     யோகி; கிரியாவான்தான் ஒண்கிரியை ஆதி

ஆன இரண்டினுக்கு உரியன்; சரியையினில் நின்றோன்

     அச் சரியைக்கே உரியன்; ஆதலினால் யார்க்கும்

ஈனம் இலா ஞானகுருவே குருவும்; இவனே

     ஈசன் இவன்தான் என்றும் இறைஞ்சி ஏத்தே."  

ஆதலின், மெய்ஞ்ஞானம் பெற்றவர்களானாலும் இறைவன் அடியார்களைத் தொழுதலும் ஆலயங்களைத் தொழுதலும் ஆடுதலும் பாடுதலும் ஆகியவற்றை  இடைவிடாமல் செய்வார்கள். சீவன் முத்தராக இருப்பவர்களும் தம்மை வாசனாமலம்  தாக்காமல் இருக்கவேண்டி இவ்வாறு செய்வர். 

மேலே சொன்ன நாலு சோபானங்களில் இரண்டாவது கிரியை. இறைவனுடைய  திருவுருவைத் தானே பூசிப்பது அது.  இறைவனை பிம்பம், தம்பம், கும்பம் என்னும் வகைகளில் ஆவாகனம் செய்து அதனையே இறைவனாக மதித்துப்  பத்தியுடன் மலரிட்டுப் பூசை செய்ய வேண்டும். பூசை செய்வதற்கு அமைந்த முறைகள் பல. சிவபூசைக்கு உரிய விதிகள் பல. குருவினிடத்தில் தீட்சை பெற்றுக்கொண்டு முறையாகப் பூசை செய்யப் புகுந்தால் நெடுநேரம்  செல்லும். ஆயினும் யாவருக்கும் இந்த வசதியும் பக்குவமும் கிடைப்பதில்லை. அவர்களும்  ஒருவாறு பூசை செய்யலாம். மலரிட்டு இறைவனை வழிபடலாம். யாவரும் கிரியையாகிய பூசையைச் செய்யலாம் என்ற உரிமையைத் திருமூலர் "யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை" என்று சொல்லி, பூசை யாவரும் செய்யலாம் என்று தெளிய வைக்கிறார். 

பூசையில் முக்கியமானது அருச்சனை. அபிடேகம், அருச்சனை, தூபதீபம், நிவேதனம் ஆகியவற்றில் அருச்சனை சிறந்தது. ஆதலின் அருச்சித்தார் என்றாலே பூசை செய்தார் என்று பொருள். திருவிளையாடற் புராணத்தின் இறுதிப்  படலம் அருச்சனைப் படலம் என்பது. ஆலவாய் இறைவனுடைய திருவிளையாடல்களைக் கேட்ட முனிவர்கள் மதுரை சென்று சொக்கலிங்கப் பெருமானைப் பூசை செய்த வரலாற்றை  அப்படலம் சொல்கிறது. பூசனைப் படலம் என்று தலைப்பிட்டு இருக்கலாம். ஆயினும்,  பூசையில் அருச்சனை சிறந்ததாகையால் அருச்சனைப் படலம் என்றே அப்படலத்திற்குப் பெயர் உண்டானது. 

முதலில் அந்த முனிவர்கள் திருவிளையாடல்களைச் சொன்ன அகத்திய முனிவனைப் பூசித்தார்களாம். அந்தச் செய்தியை, 

"போத ஆனந்தத் தனிக்கடல் பருகும்

புயல்புரை முனிவனை வசிட்ட

மாதவன் ஆதி முனிவரும் உலோபா

முத்திரை தன்னொடும் வரித்துப்

போதொடு சாந்தம் மான்மதம் தீபம்

புகைமுதற் கருவி கைக்கொண்டு

மேதகு சிறப்பால் அருச்சனை செய்து

பின்னும் ஓர் வினாவுரை செய்வார்."

என்று பாடுகிறார் பரஞ்சோதியார்.  இங்கே முனிவர் பூசை செய்ததையே, "அருச்சனை செய்து" என்று சொன்னார். கையும் வாயும் இறைவனை அருச்சனை செய்யும்போது, கை மலரை எடுத்து அவன் திருவடியில் தூவ, வாய் அவன் திருநாமங்களைச் சொல்ல வேண்டும். சும்மா மலர்களை மாத்திரம் இடுவதால்  சிறந்த பயன் இல்லை. அப்படி இட்டால் ஓரளவு பயன் உண்டாகலாம். ஆயினும் வாயினால் அவன் திருநாமத்தைச் சொல்லி அருச்சனை செய்ய வேண்டும் என்பதற்காகவே இறைவன் திருநாம வரிசைகளாகிய நாமாவளியைப் பெரியோர்கள் அமைத்திருக்கிறார்கள். பதினாறு நாமங்களைக் கொண்ட ஷோடச நாமாவளி,  நூற்றெட்டுத் திருப்பெயர்களைக் கொண்ட அஷ்டோத்தர சத நாமாவளி, முந்நூறு நாமங்களைக் கொண்ட திரிசதி, ஆயிரம் நாமங்களைக் கொண்ட சகசிர நாமாவளி என்று அருச்சனை செய்வதற்காகவே பலவகை நாமாவளிகள் உள்ளன. ஒரு நாமத்துக்கு ஒரு மலராக இட்டு அருச்சிப்பது வழக்கம். 

இந்த வழக்கத்தைச்  சிவபுராணக் கதை ஒன்றினாலும் உணரலாம். திருமால் சிவபெருமானை அருச்சனை  செய்யப் புகுந்தார். ஆயிர நாம அர்ச்சனை செய்ய வேண்டுமென்று சங்கற்பித்துக்  கொண்டு ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு அருச்சனையைத்  தொடங்கினார். ஒவ்வொரு நாமத்துக்கும் ஒவ்வொரு பூவாக இட்டு வந்தார். கடைசியில் ஒரு பூக் குறைந்தது. திருமால் வருந்தினார். அடுத்த கணமே தாமரை மலரைப் போன்ற தம் கண்ணையே பிடுங்கிக் கடைசி மலராக இறைவன் திருவடியில் அருச்சித்தார். அதனால் மகிழ்ந்த இறைவன் திருமாலுக்குச் சக்கராயுதத்தை வழங்கியருளினார் என்பது புராண வரலாறு. 

"பங்கயம் ஆயிரம் பூவினில் ஓர் பூக் குறைய,

தம்கண் இடந்து அரன் சேவடிமேல் சாத்தலுமே,

சங்கரன் எம்பிரான் சக்கரம் மாற்கு அருளியவாறு

எங்கும் பரவி நாம் தோள்நோக்கம் ஆடாமோ."    --- திருவாசகம்.

பூவை மாத்திரம் இறைவன் திருவடியில் தூவுவதால் பயனில்லை. இறைவன்  திருநாமத்தையும் சொல்லவேண்டும். மனிதனுடைய மூன்று கரணங்களில் கை உடம்போடு சார்ந்தது. அது ஒரு கரணம். வாய் ஒரு கரணம். மற்றொன்று மனம். திரிகரணமும் ஒன்றிச் செய்யும் செயலுக்குத்தான் பயன் உண்டு. கையால் பூவை இட்டு, நாவால் நாமத்தைச் சொல்லி அருச்சிப்பதால் இரண்டு கரணங்களும் ஒன்றுகின்றன. அது மட்டும் போதாது. மூன்றாவது கரணமாகிய மனமும்  அருச்சனையில் ஒன்ற வேண்டும். அப்போதுதான் முழுப்பயனும் உண்டாகும். மனம் எங்கோ அலைய, கை மலரை எடுத்துத் தூவ, வாய்ப் பழக்கத்தால் திருநாமத்தைச்  சொல்வதும் உண்டு. மனத்தை அலையவிட்டால் பூவைத்  தூவுவதும் நாமம் சொல்லுவதும் பயனின்றி ஒழிகின்றன. 

"கைஒன்று செய்ய, விழிஒன்று நாட, கருத்து ஒன்று எண்ண,

பொய்ஒன்று வஞ்சக நா ஒன்று பேச, புலால் கமழும்

மெய் ஒன்று சார, செவிஒன்று கேட்க விரும்பும் யான்

செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே"   --- பட்டினத்தார். 

மனம் ஒன்றிச் செய்யமல், மலரை எடுத்து இட்டு அருச்சனை செய்யும்போது வெறும் கைமாத்திரம்  இயங்கினால் போதாது; வாக்கும் மனமும் ஒன்றுபட வேண்டும். இதனை அறிவுறுத்துவதற்காக அருணகிரிநாதர், "தகட்டில் சிறந்த கடம்பையும், நெஞ்சையும், தாள் இணைக்கே புகட்டிப் பணியப் பணித்து அருளாய்" என்று முருகப்பெருமானிடம் விண்ணப்பிக்கின்றார்.

கடம்ப மலர்  முருகனுக்கு உகந்தது. கடம்பன் என்றே சொல்வார்கள்.  முருகனுக்குத் தகட்டைப் போலச்  சிவந்த கடம்ப மலரால் அருச்சனை புரிய வேண்டும் என்று அருணகிரிநாதருக்கு ஆசை.  இறைவனைப் பணிந்து அவனுடைய பேரருளைப் பெற வேண்டும். அந்தப்  பேரருள் கிடைப்பதற்கு முன்பே அவனுடைய அருள் நமக்கு வேண்டியிருக்கிறது. அவன் திருவடி பணியவும் அவன் திருவருள் துணை செய்தால்தான் முடியும். "அவன் அருளாலே அவன்தாள் வணங்கி" என்பது மணிவாசகம்.  மணமலரும் மனமலரும் இசைந்தால்தான் அது பூசையாகும். திருவடிப் பூசை அவனுடைய அங்கங்களுக்கெல்லாம் பூசை செய்யலாம். பூசையில் சிறந்தது அருச்சனை என்றால், அங்க அருச்சனையில் சிறந்தது திருவடி அருச்சனை. அதை அன்புடன் செய்ய வேண்டும். அன்பு மனத்திலே நிகழ்வது. "அருச்சனை வயலுள் அன்புவித்து இட்டுத்  தொண்ட உழவர் ஆரத் தந்த அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க" என்பது திருவாசகம். 

சரியை செய்து முதிர்ந்து கிரியையில் புக வேண்டும். கிரியை பழுத்து யோக  நெறியில் செல்ல வேண்டும். யோகம் முற்றி ஞானம் ஆக வேண்டும். கிரியையில் மனம்  ஒருமைப்பாட்டை அடைந்தால் பின்பு யோகம் கைவரப் பெறும். தானே தனி நின்று  ஒருமைப்பாட்டை அடைய முடியாதாகையால் மலரைத் துணைக் கொள்ள வேண்டும். எதை நினைக்க வேண்டும் என்று அறியாமல் திண்டாடுகிற மனத்துக்கு இதோ இதைத் தியானிக்க வேண்டும் என்று மலரால் அடையாளம் இட்டுக் கொள்வது போல இருக்கிறது, அருச்சனையில் மலரை இடுவது. குழந்தைக்குக் காது குத்த வேண்டுமானால் பொற்கொல்லர் முதலில் குங்குமத்தால் குத்தும் இடத்தில் அடையாளம் செய்து கொள்வார்; பிறகு குத்துவார். அது போன்றது இது. துப்பாக்கி சுடப் பழகிக் கொள்கிறவர்கள் முதலில் ஒர் இலக்கை வைத்துச் சுடுவார்கள். பழக்கமான பிறகு எதையும் குறிவைத்துச் சுடும் ஆற்றல் வந்துவிடும். அதுபோல, இறைவன் திருவடியிலே மலரை இட்டு அதுவே அடையாளமாக அவ்விடத்தில் மனத்தை ஈடுபடுத்த வேண்டும். இந்தப் பழக்கம் வளர வளர, மலர் இல்லாமலே மனம் திருவடித்  தியானம் செய்யும் ஆற்றலைப் பெறும். மனத்தால் தனித்துச் செய்வதற்கு ஆற்றல் அதிகம் வேண்டும். அதுதான் யோக நெறி.

மலரையும் சரி, மனத்தையும் சரி வேறு எங்கும் சாத்தக்கூடாது. அதனை இறைவன்  திருவடியில் அணியும்போது, அது நமது மனமாகிய மலரை இடுவதற்கு அடையாளம் ஆகிறது. புற மலரை இடுவதனால் பூசை நிரம்பாது. அக மலரையும் இட வேண்டும். புற மலரை மட்டும் இட்டால் அது அரைப் பூசையாகவே முடியும். மனத்தை இறைவன் திருவடி மலரில் வண்டாக நின்று ஊதச் செய்ய வேண்டும்.  அதுதான் யோகம். அதற்கு முன்பு செய்யும் பயிற்சி இது. குழந்தைக்கு  மனக்கணக்குப் போடும் பக்குவம் வருவதற்கு முன் புளியங்கொட்டையை வைத்துக் கணக்கிடச் சொல்லிக் கொடுப்பார்கள். அவ்வாறே இறைவன் திருநாமத்தையும் மலரையும் கொண்டு அருச்சனை செய்வது, மன மலரையும் இறைவன் தாள் மலரில் இணைக்கும் பயிற்சியாக அமையும். அது முதிர்ந்தால் மனம் திருவடியைப் பற்றும்.  "தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது" என்னும் திருக்குறளில், "சேர்தல்" என்பது இடைவிடாது நினைத்தல் என்பதைக் குறிக்கும். மனம் இறைவன் திருவடியை இடைவிடாது நினைப்பது  எளிதிலே கைகூடும் செயல் அல்ல. நடக்க மாட்டாத குழந்தை நடைவண்டியைக் கொண்டு நடை பழகிக் கொள்வதைப் போல, மனம் பூவைக் கொண்டு தியானத்தைப் பழகிக் கொள்ள வேண்டும். நெஞ்சு என்பது உள்ளத்தைக் குறிப்பது. மனத்தின் உள்பகுதி அது. அதைக் கடம்போடு முருகன் திருவடியில் புகட்ட வேண்டும்.

மனமும்  முருகன் திருவடியைப் பற்றுவதனால் சிறந்த பயனைப் பெறும். கடம்ப மலர் மென்மையானது. மனமும் கடம்போடு சேர்ந்து திருவடியில் கிடக்கத் தொடங்கினால் சார்ந்த பொருளின் மென்மையைப் பெறும். வன்மையான மனத்தில் நெகிழ்ச்சி இராது. அன்பு என்பதே நெகிழ்ச்சிதான். வலிய மனத்தில் அன்பு உண்டாகாது. நெகிழ்ந்து உருகினால் மனத்தில் அன்பு உண்டாயிற்று என்பதைத் தெரிந்து கொள்ளலாம். "கல்மனமே நல் மனமாக் கரையப் பெற்றோம்" என்பார் அப்பர் பெருமான். மனத்தைத் தாளில் புகட்டினால் அருச்சனையும் பணிதலும் உண்மையாக  நிகழும்.  மனம் ஆசை வயப்பட்டு உலகத்தையெல்லாம் சுற்றுகிறது. உலகு முழுவதையும் தன் ஆசைக்  கரத்தில் அடக்கப் பார்க்கிறது. அதை இறைவன் திருவடியில் அடக்கப் பார்க்கிறார் அருணை வள்ளலார். அதற்குத் திருவருள் துணையை நாடுகிறார். 

முருகன், ஆசையை வளர்த்து உடலையும் வளர்த்துப் படையையும்  வளர்த்துக் கொடுமையையும் வளர்த்த சூரபதுமனை அடக்கியவன். சூரபதுமனுடைய ஆசைக்கு  அளவே இல்லை. ஆற்றல் இல்லாத நமக்கே எல்லையில்லாத ஆசைகள் எழுகின்றன. அசுரேந்திரனாகிய அவனுடைய ஆசை அசுர ஆசையாகத்தான்  இருக்கும். அதை அளவிட முடியாது. ஆனாலும் ஒருவாறு அதன் பரிமாணத்தை அவனுடைய பரிமாணத்தால்  சித்தரித்துக் காட்டுகிறார் அருணகிரிநாதர்.  இந்தப் பூவுலகமும் பிறவும் சேர்ந்த பெரிய உருண்டை ஒன்று உண்டு. அதற்குப்  பிரம்மாண்டம் என்று பெயர். தான் யாவருக்கும் எப்பொருளுக்கும் தலைவனாக இருக்க வேண்டும் என்ற பதவியாசை சூரபதுமனுக்கு உண்டாயிற்று. நாம் ஒரு காணி நிலம் வாங்குகிறோம். அதில் வேலி போட்டுக் கொள்கிறோம். பிறகு பக்கத்திலுள்ள வேறொரு காணியை வாங்குகிறோம். அதற்கும் சேர்த்து வேலி  போடுகிறோம். இப்படி நம் சொத்து விரிய விரிய வேலியும் விரிவடைகிறது. சூரபதுமனும் தன் சொத்தை விரிவாக்குகிறான். அதற்குத் தனியே வேலி போடவில்லை. தானே வேலியாகப் படர்கிறான்; உயர்கிறான். தானே தன் பொருளுக்கு எல்லை கோலி  நிற்கிறான். தன் மாயத்தால் எல்லாம் செய்யவல்ல அவன், இந்தப் பூமியைத் தனதாக்கிக் கொண்டான்.  இதைச் சார்ந்த கிரகங்களையும் தன்  ஆணைக்குள் அடக்கினான். பிரம்மாண்டம் முழுவதையும் தனக்கு உரியதாக்கி,  அதன் கீழே காலும் உச்சியில் தலையும் உடையவனாக வளர்ந்து சுற்று முற்றும் தன்  அரசின் அளவைப் பார்த்தான். தலைக்குமேல் புண்டரீகன் (பிரமன்) அண்டத்தின் முகடு இருந்தது. அதையும் நாம் நமக்குச் சொந்தமாக்கிக் கொண்டால் என்ன?’ என்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று: 

கடலையும் மலையையும் நாட்டையும் கடந்து,  வானவெளியைத் தாண்டி, மேலே பறந்து  சந்திரமண்டலத்தில் கொடி கட்ட ஆசைப்படாத அரசு இல்லை. மனிதர்களுக்கே இந்த  ஆசை இருக்குமானால் அசுரர் தலைவனுக்குப் பிரம்மாண்டத்துக்கு மேலே உள்ளவற்றையும் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை எழுந்ததில் வியப்பு இல்லை. அவன் பிரம்மாண்டத்தின் அடிக்கும் முகட்டுக்குமாக தம்பம் போல  நின்றவன். அந்த முகட்டை ஒரு முட்டு முட்டினான். அண்ட முகடு பிளந்தது. மேலே ஆசை வளர்ந்தது. அதோடு அவனும் வளர்ந்தான். மேலே எட்டிப் பார்த்தான். அங்கே  இந்திரலோகம் இருந்தது. அதன் பொலிவு அவன் கண்ணைக் கவ்வியது. அங்கும் தன் ஆசைக் கரத்தை நீட்டினான். பின்னும் உயர்ந்தான். அந்த லோகத்தை முட்டும்படி அவன் எட்டினான். புண்டரீகன் அண்ட முகட்டைப் பிளந்து,  இந்த்ர லோகத்தை முட்ட எட்டி,  சூரபதுமன் தான் பிறந்த இடத்தோடு நில்லாமல் ஒவ்வோரிடமாகச் சென்று மோதித் தன் ஆணையை நிலை நிறுத்தினான். போன இடங்களிலெல்லாம் அவனுடைய கொடுமைக்குப் பயந்து யாவரும் குலைந்தனர். யாருக்கும் அடங்காத எருது, கொம்புகளை நீட்டிக் கொண்டு பாய்ந்து வரும்போது அதன் முன்னே நிற்க யாவரும் அஞ்சுவார்கள். அது மண்மேட்டைக் குத்தும்; சுவரை முட்டும்; மரத்தை மோதும்; மனிதர்களைக் குத்திக் குலை சாய்க்கும். அது போன இடமெல்லாம் படுநாசம். சூரபதுமனும் அப்படித்தான் புகுந்தான். தன் கொடுமையினால் யாவரையும் அஞ்சச் செய்தான். எங்கும் கொடுமையைப் பரப்பினான். விண்ணவர் யாவரும் அஞ்சி நடுங்கினர். 

இத்தகைய நிட்டூரம் உடையவனை - பகட்டைப் போலப் பொருதவனை - இந்திர லோகத்தை முட்டும்படியாக எட்டினவனை, அழிக்கப் புறப்பட்டான் முருகப்பெருமான். முருகனுடைய வீரச் செயலைக் கண்டு அதுகாறும் அச்சத்தை அறியாத சூரபதுமன் அச்சமுற்றான். எல்லாருக்கும் பயங்கரனாக இருந்த சூரனுக்குப் பயங்கரனாக முருகன் விளங்கினான். அப்படிபட்ட முருகப் பெருமானிடத்தில் இந்த விண்ணப்பத்தைச் செய்துகொள்கிறார் அருணகிரிநாதர். அடக்குவார் இல்லாமல் வளர்ந்து கொடுமை செய்த சூரபதுமனை அடக்கினவன்  முருகன். அடக்க முடியாமல் ஓடிக் கொடுமை செய்யும் மனத்தை அடக்க அந்த முருகனே  வழி காட்டுவான் என்று எண்ணி, இந்த வரலாற்றை இங்கே நினைத்துப் பின்வருமாறு முருகப் பெருமானிடம் விண்ணப்பிக்கின்றார்.  

"தகட்டில் சிவந்த கடம்பையும் நெஞ்சையும் தாள்இணைக்கே

 புகட்டிப் பணியப் பணித்து அருளாய், புண்டரீகன் அண்ட

முகட்டைப் பிளந்து வளர்ந்து இந்த்ர லோகத்தை முட்டஎட்டிப் 

பகட்டில் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே!"           --- கந்தர் அலங்காரம்.

இதன் பொருள் --- 

தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவரது உலகத்தின் வாயிலைப் பிளந்து, அதுவரை ஓங்கி நின்று, இந்திரலோகத்தை முட்டும்படி எட்டிச்சென்று, ஆண்யானை போல் போர் புரிந்த கொடும் குணம் உடையவன் ஆகிய சூரபதுமனுக்குப் பயங்கரத்தை உண்டு பண்ணினவரே! இலைகளோடு கூடி சிவந்த நிறம் உள்ள கடப்பமலர் மாலையையும், அடியேனுடைய மனத்தையும் தேவரீருடைய இரண்டு திருவடிக்கே சேர்த்து வணங்குமாறு அடியேனுக்குக் கட்டளை இட்டு அருள்வீர்.

(தகடு - மென்மையும் தட்டையுமான வடிவு. தகடு என்பதற்குப் பூவின் புற இதழ் என்றும் பொருள் உண்டு. புகட்டி - புகுத்தி; செலுத்தி. பணிய - வணங்கல். பணித்தல் - ஏவல் செய்யும்படி ஆக்குதல்; ஏவுதல். புண்டரீகன் - பிரமன். அவன் அண்டம், பிரமாண்டம். முகடு - உச்சி. முட்ட முட்டும்படியாக. பகடு - காளை பகட்டின் - பகட்டைப் போல. நிட்டுரம் - கொடுமையுடைய)

இறைவன் திருவடிகளில் மலரிட்டு வணங்கும்போது, நமது மனமாகிய மலரையும் சேர்த்து இட்டு வணங்குதல் வேண்டும். புறமலர் மட்டும் திருவடியில் சேர்ந்து, அகமலர் திருவடியில் பொருந்தவில்லையானால், பயனில்லை. இந்தப் பழக்கம் நாளடைவில், புறமலர் இல்லாமலே அகமலரால் இறைவனை வழிபாடு செய்யும் பக்குவத்தில் புகுத்தி விடும்.





நிலையான பெருந்தவம்

நிலையான பெருந்தவம்

-----

அறம் எல்லோரும் செய்வதற்கு உரியது. அறத்தைச் செய்வதற்குப் பொருள் கருவியாக இருக்கிறது. அறத்தின் வழியாக வந்த பொருளே, மீட்டும் அறத்தைச் செய்வதற்குரிய கருவியாக அமையும். அறவழியில் சேராத பொருள் பொருளாகாது. இன்பமும் அறத்தோடு பொருந்தியதாக இருக்கவேண்டும். அறத்தைச் செய்வதற்கு ஏற்ற வாழ்க்கைத் துணைவியாகிய மனைவியோடு பெறும் இன்பமே இன்பம். அறத்தின் வழுவிய இன்பம் இன்பமாகாது. ஆகவே, அறம் பொருள் இன்பம் என்ற மூன்றிலும் அறம் உயிர்நாடியாக இருப்பது. அறம் என்பது, நாம் செய்ய வேண்டியவை இன்ன, செய்யக் கூடாதவை இன்ன என்று தெரிவிப்பது. செய்யக் கூடியவை விதி. செய்யக் கூடாதவை  விலக்கு என்று சொல்வார்கள். 

"அறு" என்னும் சொல்லை அடியாக உண்டானது அறம். இன்ன இன்னது செய்ய வேண்டுமென்று வரையறுப்பது அறம். இது செய்யக் கூடாதென்று வரையறுப்பதும் அதுவே. அப்படி வரையறுத்த நெறியே, அறநெறி என்று சொல்லப்பெறும். ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதனவுமாகிய அறத்தின் பகுதிகளைத் திருவள்ளுவர் "அறத்துப்பால்" என்ற தலைப்பில் முப்பத்தேழு அதிகாரங்களில் முறையாகச் சொல்கிறார். எல்லாவற்றுக்கும் நாடியாக இருப்பது ஈகை. எல்லா அறங்களிலும் தலையாயது ஈகை. "பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்றார் திருவள்ளுவ நாயனார். 

நூல்கள் யாவும் தருமம் (அறம்) அர்த்தம் (பொருள்) காமம் (இன்பம்) மோட்சம் (வீடு) என்ற புருஷார்த்தங்கள் நான்கைப் பற்றியும் விரிவாகப் பேசுகின்றன. அந்த நூல்களை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு வாழ்நாள் போதாது. ஔவைப் பாட்டி சுருக்கமாக எதையும் சொல்வதில் வல்லவர். பெருக்கமாகவும் சொல்வார். பெருக்கமாகச் சொல்வதற்கு அறிவு நுட்பமாக இருக்கவேண்டும் என்பது இல்லை. சுருக்கிச் சொல்லத்தான் நுட்பம் வேண்டும். பெரிய அம்மிக் கல்லைப் பொளிபவனைக் காட்டிலும் வைரக் கல்லில் வேலை செய்பவனுக்கு நல்ல திறமை வேண்டும்.  

சுருக்கமாகப் பாடுகிற ஆற்றலலைத் திருவருளால் பெற்ற ஔவைப் பாட்டி மனிதனுக்கு உரிய உறுதிப் பொருள்கள் நான்கையும் சுருக்கமாக ஒரு பாட்டில் காட்டினார். "ஈதல் அறம்" என்றார். அறம் செய்ய வேண்டுமானால் பொருள் வேண்டும். பொருளை எவ்வாறு ஈட்டுவது?  "தீவினை விட்டு ஈட்டல் பொருள்" என்றார். பணம் ஈட்டுவதற்கு இக் காலத்தில் எத்தனையோ தந்திரங்களைக் கண்டுபிடித்துக் கையாளுகின்றார்கள். எப்படியாவது பொருள் கிடைத்தால் போதும் என்ற ஒரே நோக்கத்தோடு இப்போது பொருளை ஈட்டுகிறார்கள். ஆனால், நமது முன்னோர் இப்படி ஈட்டுவதைப் பொருளாகக் கொள்ளவில்லை. நல்ல வழியில் ஈட்டிய பொருளையே பொருள் என்று சொன்னார்கள். நல்ல வழியாவது அறநெறி. அறநெறியில் ஈட்டிய பொருளே பின்னும் அறம் செய்வதற்குத் தகுதியானது. இந்தப் பண்பை நினைவு கொண்டு ஒளவை பொருளைப் பற்றிச் சொன்ன பிறகு காதலைப் பற்றிச் "காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு பட்டதே இன்பம்" என்றார்.

எல்லாப் புலவர்களுமே காதல் இன்பத்தைப் பற்றிப் பாடி இருக்கிறார்கள். இந்த உலகத்தில் ஒருவனும் ஒருத்தியும் ஒன்றுபட்டுப் பழகுவதே இன்பம் என்று யாவரும் அறிவார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கையில் உடம்பு இணைவது மட்டுமே அல்ல.  உள்ளமும் இணைய வேண்டும். கருத்து ஒருமித்து ஆதரவுபடும் இன்பத்தை எல்லோருமே சொல்லியிருக்கிறார்கள். காதலைப் பற்றிச் சொல்கிற நுட்பம் ஒன்று உண்டு. உடல் இணைவது, உள்ளம் இணைவது போலவே உயிரோடு ஒன்றுபட்டு அமைவது காதல். பிறவிதோறும் காதல் தொடர்ந்து வரும்.  எனவே,, ஒளவைப் பாட்டி, "காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பம்"  என்று சொன்னார். பல பிறவிகளிலே ஒன்றுபட்டுக் காதல் உடையவர்கள், இந்தப் பிறவியிலும் காதல் கொண்டு கருத்து ஒருமித்து அன்பு செய்வதே இன்பம் என்று பொருள் கொள்ளவேண்டும். இந்த மூன்றிலும் பற்றற்று இறைவனுடைய திருவருளைப் பெறுவது வீடு என்று முடித்தாள். "பரனை நினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு."

இந்தப் பாட்டில் அறத்தின் இலக்கணத்தை, மிகச் சுருக்கமாக "ஈதல் அறம்" பாட்டி என்று சொல்லிவிட்டார். ஈதல் - கொடுப்பது. ஆடை கொடுத்தாலும், ஆபரணம் கொடுத்தாலும் உண்டி கொடுத்தாலும், உறங்கும் இடம் கொடுத்தாலும், யார் யாருக்கு எது எது வேண்டுமோ அதைக் கொடுத்தாலும் எல்லாம் ஈகைதான். அறச்செயல்கள் பலவகையானாலும் அவற்றுள் ஈகை சிறந்தது. அதுபோலவே பலவகையான ஈகைகளிலும் சிறந்ததாக ஓர் ஈகை இருக்கிறது. அறங்கள் முப்பத்திரண்டு வகை என்று சொல்வார்கள். அவை எல்லாவற்றுள்ளும் சிறந்தது அன்னதானம். அறத்தின் பகுதிகளில் சிறந்தது ஈகை என்றால், ஈகைப் பகுதிகளில் சிறந்தது பிறருடைய பசியைப் போக்க உண்டி அளிக்கும் ஈகையாகும். 

எல்லா வகையான ஒழுக்கங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது உயிரும் உடம்பும் சேர்ந்த இந்த வாழ்க்கை. உயிரும் உடம்பும் சேர்ந்து அமைந்து இருப்பதனால்தான் உலகமே வாழ் கிறது. உயிர் தனித்து நில்லாது; உடம்போடு சேர்ந்தே நிற்கும். "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்பார் திருமூல நாயனார். இந்த உடம்பு சோற்றுப் பிண்டம். சோறு இல்லாவிட்டால் சோர்ந்துவிடும். 

உயிர் வாழ, உடம்பு வேண்டும். உடம்பை உணவால் ஓம்புதல் வேண்டும். சோறு இல்லா விட்டால் பசிநோய் உண்டாகும். எல்லா நோய்களையும் விடக் கொடியது பசிநோய். அது வந்துவிட்டால் எல்லா வகையான அறங்களும், ஆசாரங்களும் அழிந்து போகின்றன. துறவிகளையும் பசித் துன்பம் விடுவது இல்லை. பசி வந்துவிட்டால் அவர்களுக்கும் அறிவு மங்கிவிடும். எத்தனையோ மக்கள் பசியினால் பிள்ளையை விற்றும் பிழைக்கிறார்கள். 

தானம், தவம் ஆகிய இரண்டும் உலகத்தில் நிற்க வேண்டும். இல்லறத்தார் தானத்தினால் சிறப்பு அடைகிறார்கள். துறவறத்தார் தவத்தினால் சிறப்பு அடைகிறார்கள். இந்த இரண்டும் நிற்க வேண்டுமானால் பசிப்பிணி போகவேண்டும். பசிப்பிணியைப் போக்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது மழை. அதனால், "தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் வானம் வழங்காது எனின்" என்று பாடினார் திருவள்ளுவ நாயனார். மணிமேகலைக் காப்பியம், பசியை, "பசிப்பிணி என்னும் பாவி" என்று பசியின் கொடுமையைச் சொல்வது மட்டும் அல்லாமல், "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்றும் அன்னதானத்தின் சிறப்பையும் சொல்கிறது.

மணிமேகலை என்னும் துறவி பிறருக்கு உபதேசம் செய்வதை மேற்கொள்ளவில்லை. எல்லோருக்கும் பயன்படுகிற ஒரு காரியத்தை அவள் மேற்கொண்டாள். அவளுக்கு "அமுதசுரபி" ஒன்று கிடைத்தது. பசித்தோர் எல்லோருக்கும் சோறு கொடுத்தார். அமுதசுரபியில் சோறு அளித்த, ஆதிரை என்பாளும், "பாரகம் முழுவதும் பசிப்பிணி அறுக" என்று சொல்லி இட்டாள் என்கின்றது காப்பியம். ஆதிரைக்கு எவ்வளவு பேராசை பாருங்கள். உலகம் முழுவதும் பசி இல்லாமல் வாழவேண்டுமாம்.

நமது நாட்டில் எந்த நிகழ்வாக இருந்தாலும், அன்னதானம் இல்லாமல் இருக்காது. பசித்து வந்தவர்க்கு அன்னம் அளிப்பது சிறந்த தானம். ஒருவன் ஈட்டிய பொருளைப் பாதுகாப்பாக வைக்கின்ற இடமே பசித்தவர் வயிறுதான் என்கின்றார் திருவள்ளுவ நாயனார். "அற்றார் அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன் பெற்றான் பொருள் வைப்புழி" என்றார். தவம் செய்கிறவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது. ஆனால், அன்னதானம் செய்கிறவர்களுடைய ஆற்றலுக்கும் பின்தான் அதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் சொல்கிறார். “ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்; அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்"  என்பது திருக்குறள். தவம் செய்கிறவனுடைய ஆற்றல் பெரிதுதான். அவன் தன்னுடைய ஊனை உருக்கி உண்ணாவிரதம் இருக்கிறான். உடம்பை வருத்தித் தவம் செய்கிறான். இந்திரிய நிக்கிரகம் செய்கிறான். அந்த உண்ணா நோன்பிற்கும் ஓர் எல்லை உண்டு. பசி மிகுந்துவிட்டால் தவம் செய்வாருடைய தவம் அழிந்துவிடும். இவர்கள் தாம் பட்டினி கிடப்பார்கள். இவர்கள் பிறர் பட்டினியைப் போக்கும் ஆற்றல் இல்லாதவர்கள். அன்னதானம் செய்கிறவனோ தன்னுடைய பசியைப் போக்கிக் கொள்வதோடு, பசித்து வருகிற மற்றவர்களுடைய பசியையும் போக்கி விடுகிறான். 

'இடம்பட வீடு எடேல்' என்று ஔவைப் பாட்டி சொல்லியிருக்கிறாள். வீட்டை இடம் அழியும்படி பெரியதாகக் கட்டாதே என்று பொருள். ஒரு பக்கத்தில் விளைச்சலை அதிகப் படுத்துங்கள் என்று சொல்லிக்கொண்டு, மற்றொரு பக்கத்தில் நெல் விளைகிற வயல்களை அழித்துக் கட்டிடங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். விளைநிலம் அழிந்து போகிறது. உடம்பை வளர்த்தற்கு உரிய அன்னத்திற்கு உரிய நெல் விளையாமல் போகின்றது. இது கூடாது. சிறுகக் கட்டிப் பெருக வாழவேண்டும் என்று அந்தக் காலத்தில் பெரியவர்கள் நினைத்தார்கள். நிறைய நெல் விளைந்தால்தான் அறம் செய்ய முடியும். பழைய காலத்தில் எல்லா மக்களும் சோம்பல் இல்லாமல் வேளாண்மை செய்தார்கள். பிச்சை கேட்கிறவன் ஒரே ஒருவன்தான். அவன் துறவி.  இரவலர் என்ற பெயர் கலைஞர்களுக்கு உரியதாக இருந்தது. பாணர். புலவர், கூத்தர் ஆகிய இவர்கள் அங்கங்கே சென்று தமது கலைத் திறத்தைக் காட்டி வள்ளல்களிடம் பரிசு பெற்றார்கள். அவர்களை அன்றிப் பிறரிடம் பிச்சை என்று இரப்பவர்கள் மிக அரிது. நாளடைவில் அந்த நிலை மாறிப் பலரும் பிச்சை எடுக்கும் நிலை வந்துவிட்டது. 

உயிர் வாழ்வதற்கு உடம்பு வாழவேண்டும். உடம்பு அன்னத்தால் ஆனது என்ற உண்மை யாவருக்கும் தெரிந்தது. இந்த நாட்டில் தொழில் துறையில் மிகுதியான கவனம் செலுத்தவில்லை என்று குறை கூறுகிறோம். எத்தனை தொழில்கள் வளர்ந்தாலும் மனிதனுடைய மூலத் தேவையாகிய சோறு கிடைக்கவில்லை என்றால் மற்றத் தொழில்களினால் பலன் இல்லை. "உழந்தும் உழவே தலை" என்றார் நாயனார்.

சடையப்ப வள்ளல் பலருக்கு உண்டி கொடுத்து உயிர் கொடுத்திருக்கிறார். ஒருநாள் அவரிடம் பரிசு பெற்றுப் போக ஒரு புலவர் வந்தார். அப்போது சடையப்ப வள்ளல் நெல் மூட்டைகளைத் தம் முடைய வீட்டுக்குள் கொண்டுபோய் அடுக்கிக் கொண்டிருந்தார். வரும் வழியில் வண்டியில் இருந்து நெல்மணிகள் சிந்தி இருந்தது. வள்ளல் அந்த நெல்லைப் பொறுக்கித் தம் மேல்துண்டில் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்த்த புலவர் ஒருவர்,  "வீதியில் சிந்திக் கிடக்கிற நெல்லைப் பொறுக்கும் கருமியாக இருக்கிறாரே! இவர் நமக்கு எங்கே பரிசு கொடுக்கப் போகிறார்?" என்று எண்ணினார். புலவருடைய முகத்தைப் பார்த்தபோது சடையப்ப வள்ளலுக்கு அவருடைய எண்ணம் விளங்கியது. சடையப்பர் அந்தப் புலவரைத் தம் வீட்டுக்குள் அழைத்துச் சென்று இனிமையாகப் பேசிச் சாப்பிட்டுப் போக வேண்டுமென்று சொல்லி இலையைப் போட்டு உட்கார வைத்தார். ஆனால் இலையில் சோற்றை வைப்பதற்குப் பதிலாகக் கைநிறையப் பொன்னைக் கொண்டு வந்து வைத்தார். அதைப் பார்த்த புலவர் முகத்தைச் சுளித்தார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒருவிதமாகப் பார்த்தார். நெல்லை விடப் பொன் உயர்ந்தது அல்ல என்று காட்டவே,  பொன்னைக் கொண்டுவந்து இலையில் இட்டார். புலவருக்கு உண்மை விளங்கியது. "பொன்னால் உடம்பு வளராது. அரிசி உடம்பை வளர்க்கும் என்பதை உணர்ந்தேன்” என்றார் புலவர்.

தமக்குச் சோறு அளித்த சடையப்பரைக் கம்பர் இராமாயணத்தில் பல இடங்களில் பாடியிருக்கிறார். மிகவும் முக்கியமான இடத்தில் அந்த வள்ளலைப் பற்றிய புகழை அமைத்திருக்கிறார். இராமாயணத்தை இந்த நாட்டில் சொற்பொழிவு செய்கிறவர்கள் இராம பட்டாபிடேகத்தைச் சொல்லாமல் விடமாட்டார்கள். யார் இராமாயணம் சொன்னாலும் இராமனுடைய புகழோடு சடையப்பர் புகழும் வரவேண்டும் என்று கம்பர் கருதினார். இராம பட்டாபிடேகத்தைச் சொல்லும் பாட்டில் சடையப்பர் புகழைப் புதைத்து வைத்தார். இராம பட்டாபிடேகத்தன்று விசுவாமித்திரர், வசிட்டர், அநுமன், சீதாதேவி முதலிய எல்லோரும் சபையில் இருந்ததாகச் சொல்லலாம். சடையப்ப வள்ளலுக்கு அங்கே இடமே இல்லை. ஆனால், இடத்தை உண்டாக்கி, சடையப்பர் புகழை அந்தப் பாட்டில் மிகவும் நயமாகப் புகுத்தி விட்டார். 

"அரியணை அனுமன் தாங்க,

    அங்கதன் உடைவாள் ஏந்த,

பரதன் வெண்குடை கவிக்க,

    இருவரும் கவரி வீச

விரைசெறி குழலி ஓங்க,

    வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்

மரபுஉ(ள்)ளார் கொடுக்க வாங்கி,

    வசிட்டனே புனைந்தான் மௌலி". --- கம்பராமாயணம்.

சிங்காதனத்தை அனுமன் தாங்கினான். அங்கதன் உடைவாளை ஏந்திக் கொண்டிருந்தான். பரதன் வெண்கொற்றக் குடை பிடித்தான். இலக்குவனும் சத்துருக்கனனும் கவரி வீசினார்கள். சீதாபிராட்டி மிக்க பொலிவோடு இராமபிரான் அருகில் அமர்ந்திருந்தாள். அப்போது வசிட்டன் மகுடத்தைச் சூட்டினான் - இப்படிச் சொன்னாலே போதும். ஆனால் அங்கே சடையப்பர் புகழைக் கொண்டு வந்து இணைக்கிறார் கம்பர். "வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபு உள்ளோர் கொடுக்க வாங்கி" இராமபிரானுக்கு வசிட்டர் திருமுடியைச் சூட்டினார் என்கிறார். இராமபிரானுக்குச் சூட்டிய மகுடத்தை சடையப்பருக்கு முன்னோர்கள் ஆகிய வேளாளர் மரபில் வந்தவர்கள் எடுத்துக் கொடுத்தார்கள் என்று பாடியிருக்கிறார்.  கம்பருடைய அன்புக்கு மூலகாரணம் சடையப்ப வள்ளலின் சோறே ஆகும். அன்னதானம் சடையப்பரை இராமனுக்குச் சமமாக நிமர்த்தி விட்டது. 

என்னிடம் பொருள் சேர்ந்தால் நானும் அன்னதானம் செய்யலாம். அதற்கு வழி இல்லை. எப்படி அன்னதானம் செய்ய முடியும்?' என்று சிலர் நினைக்கலாம். அத்தகைய எண்ணம் உடையவர்களுக்கு வாழ்க்கையில் அனுபவ பூர்வமான முறையில் ஒரு தந்திரத்தை அருள்கிறார் அருணகிரிநாதப் பெருமான். 

நீங்கள் கொஞ்சம் சோறு கொடுத்தாலும் அது பெரிய சோறு ஆகிவிடும். ஒரு பிடி சோறு கொடுத்தால் மலையளவு சோறாகி விடும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்கள் போக வேண்டிய தொலையா வழி ஒன்று இருக்கிறது. அந்த வழியில் இப்போது நீங்கள் கொடுக்கும் பிடி சோறு, கட்டுச் சோறாகி, வந்து சேரும் என்று அவர் சொல்கிறார். அரிசியில் பிளவு பட்டால் உண்டாவது நொய் அரிசி. அந்த நொய் அரிசியில் ஒரு பாதியையாவது பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள் என்று சொன்னார்.

பலவித பண்டங்களோடுதான் விருந்து படைக்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. வறுமை நிலையில் இருந்தவர்கள் கீரையைக் கறி ஆக்கி உண்டார்கள். தம்மிடம் இருந்த பொருள் அனைத்தும் வற்றிய நிலையில், தன்னை நாடி வந்த அடியவர்க்கு அமுது படைக்க, இளையான்குடி மாற நாயானார் தன் வீட்டுத் தோட்டத்தில் இருந்த கீரையைத் தான் தேர்ந்து எடுத்தார். வறியவர்கள் உப்பும் இல்லாமல் கீரையைச் சுண்டிச் சாப்பிட்டார்கள். மக்கள் எதையாவது வேகவைத்துச் சாப்பிட்டுப் பசியைப் போக்கிக் கொள்கிறார்கள். அப்படி வெந்தது எதுவோ அதைக் கொடுங்கள் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான். பசி என்று வந்து கேட்கிற வறியவர்களுக்குக் கொஞ்சம் பகிர்ந்து கொடுத்து நீங்களும் சாப்பிடுங்கள்  என்று சொல்கிறார். பகிர்தலாவது தனக்கு உரியதில் ஒரு பகுதியைப் பிரித்துக் கொடுத்தல். பசி என்று தெருவில் வந்து நிற்பவனைப் பார்த்து,  நாளைக்கு வா. பாயசத்தோடு அமுது படைக்கிறேன் என்று சொல்வதைக் காட்டிலும் நொய்யாக இருந்தாலும், வெறும் கீரையாக இருந்தாலும் இருக்கிறதை இருக்கிறபோதே முதலில் அவனுக்கு ஒரு பிடி கொடுத்துவிட்டு உண்ணுவதே உயர்வு.

பணக்காரர்களுக்குத்தான் அறம் உண்டு. மற்றவருக்கு இல்லை என்று சொல்ல இயலாது. பசி என வந்தவனுக்கு ஒரு பிடி அன்னம் இட்டாலும் போதும். ஒரு பிடிதான் கொடுக்க முடியும் என்ற நிலையில் உள்ள மனிதனுக்கு அதுவே பெரும் பயனைத் தரும். "யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி" என்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார். அருணகிரிநாதர் வெந்தது எல்லாவற்றையும் தானம் செய்து விடு என்று சொல்லவில்லை. இரண்டு பேரும் கலந்து பகிர்ந்து உண்ணுங்கள்  என்றே சொல்கிறார். 

இப்படிச் செய்கிற தானமே தவமாகும் என்று அருணகிரிநாதர் கூறுகின்றார். அதை "அன்பின் நிலையான மாதவம்" என்கின்றார். புலன்களை அடக்கிச் செய்வதுதான் தவம் என்று எண்ணவேண்டாம். தவம் செய்கிறவனுடைய ஆற்றலைவிடப் பிறருடைய பசியைப் போக்குகிறவன் ஆற்றல் பெரிது என்னும் திருவள்ளுவர் கருத்தை மேலே கண்டோம். ஆகவே பசியைப் போக்கும் தவத்தை அன்போடு செய்து வந்தால், அதுவே "நிலையான மாதவம்" என்கின்றார் அருணை வள்ளலார்.

பசித்து வந்தவருக்கு இலையாவது, வெந்தது ஏதாவது அன்போடு கொடுத்தால், அது பின்னால் பின்பு பொதி சோறாக விளையும்  என்கின்றார். மரணம் வந்தபோது, உயிரானது தான் இருக்கும் உடலை விட்டுப் போகின்றது. இனிக் கவலை இல்லை என்று நினைக்க முடியாது. மற்றோர் உடம்புக்குப் போகிற பிறவி என்னும் வாசல் அடுத்து நிற்கிறது. மரணத்திற்குப் பின் உண்டாகிற நெடிய பயணத்திற்கு முடிவே இல்லை. இப்போது செய்கிற "நிலையான மாதவம்" அந்தப் பயணத்தில் பொதி சோறாகவும், உற்ற துணையாகவும் வந்து சேரும்.

அறிவை மழுங்க அடிக்கிற, இந்திரியங்களைச் செயலற்றுப் போகும்படியாகச் செய்கிற பசியைப் போக்குவது சிறந்த தானம். இறைவனை எண்ணி அதைச் செய்தால், அதுவே தவமாகிவிடும். பலர் அன்னதானம் செய்கிறார்கள். அவர்களுடைய செயல் எல்லாம் தவம் ஆகிவிடும் என்று சொல்வதற்கில்லை. அவர்களுடைய மனத்தில் அவ்வாறு தானம் செய்வதற்குக் காரணமான உணர்ச்சி வேறாக இருக்கிறது. சிலர் பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு அன்னதானம் செய்கிறார்கள். அவன் செய்கிறானே நாம் ஏன் செய்யக்கூடாது? என்ற பொறாமையினால் சிலர் செய்கிறார்கள். சிலரோ, அப்படிச் செய்யாவிட்டால் ஊரிலுள்ளவர்கள் ஏசுவார்களே என்று எண்ணிச் செய்கிறார்கள். இவை எல்லாம் தானம் ஆவதில்லை; தவமும் ஆவதில்லை. "அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்" என்றும், "மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன், ஆகுல நீர பிற" என்றும் சொன்னார் திருவள்ளுவ நாயனார்.

அறத்தின்வழி ஈட்டிய பொருள் இறைவன் தந்தது என்று, மறவாமல் கருத்தில் இருத்தி, அப்பொருளை அடியார்கட்கும் வறியார்கட்கும் இறை திருப்பணிகட்கும் வழங்குதல் வேண்டும். வழங்காத வன்னெஞ்சர்கள்ப் பூமி தாங்குதற்குக் கூசும். அவர்களை ஏன் படைத்தாய் என்று கூறி இறைவனை நோக்கி வினவுகின்றார் பட்டினத்தடிகள்.

"நாயாய்ப் பிறக்கினும் நல்வேட்டைஆடி நயம்புரியும்,

தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து,பின் சம்பன்னராய்,

காயா மரமும், வறளாம் குளமும், கல்ஆவும் என்ன

ஈயா மனிதரை ஏன் படைத்தாய், கச்சிஏகம்பனே".  ---  பட்டினத்தார்.

    இறைவனுடைய நினைவோடு செய்கிற அறந்தான் "நிலையான மாதவம்" ஆகிறது. தர்மங்கள் செய்கிறபோது, நம்மை நினைத்தால் ஆசை வளரும். அதுவே வெறும் கர்மம் ஆகிறது. இறைவனை நினைந்து செய்தால் அதுவே "கர்மயோகம்" ஆகிறது. கர்மயோகமும் ஒருவகைத் தவம்தான்.  ஆகவே, நாம் பிறருடைய பசியைத் தீர்க்கும்போது இறைவனை நினைத்துக்கொண்டு அந்தச் செயலைச் செய்தால் வேறு எந்தவிதமான உணர்ச்சியும் வந்து தடைப்படுத்தாது. அதுவே தவமாக முடியும். அன்பு இருந்தால் ஏழையைக் கண்டு ஏளனம் செய்யத் தோன்றாது. இறைவன் நினைவு உண்டாகும். மரணம் அடைந்த பிறகு செல்லும் வழிக்குத் துணையாக இருப்பது இந்தத் தவம் என்றார் அருணகிரிநாதர். மற்ற ஒன்றும் பற்றித் தொடராது. "பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே” என்று பட்டினத்தார் சொன்னார். 

நமக்கு வழித் துணையாகிய அறங்களில் சிறந்த அறம் ஈகை. ஈகையில் சிறந்தது அன்னதானம். அன்னதானத்தை இறைவன் நினைவோடு செய்யவேண்டும். செய்வது ஒரு பிடியாக இருந்தாலும் அதனால் உண்டாகிற புண்ணியம் மலையாக இருக்கும். இப்போது செய்கிற அறம் சிறிதாகத் தோற்றினாலும் அது பயனாக விளையும்போது பெரிதாக இருக்கும். மூடி வைத்திருக்கும் குடை சிறிதாகத் தோன்றலாம். வெயிலில் விரிக்கும் போது பெரிதாகத் தோன்றுகிறது. 

"மலைஆறு கூறுஎழ வேல் வாங்கினானை வணங்கி, அன்பின் 

நிலையான மாதவம் செய்குமினோ, நும்மை நேடிவரும்

தொலையா வழிக்குப் பொதிசோறும் உற்ற துணையும் கண்டீர்; 

இலை.ஆயினும் வெந்தது ஏதாயினும் பகிர்ந்நு ஏற்றவர்க்கே". 

என்று அருணகிரிநாதப் பெருமான் நமக்கு அருள் உபதேசம் புரிந்து நல்வழியைக் காட்டுகின்றார்.

இதன் பொருள் --- 

உலகத்தவர்களே! பசியோடு வந்தவர்க்கு நீங்கள் வழங்கியது நீங்கள் இறுதியில் தொலையாத வழியில் செல்லும் நெடிய பயணத்துக்கு, உங்களைத் தேடிக்கொண்டு வருகின்ற கட்டுச் சோறும், பொருந்திய உதவியும் ஆகும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆதலால், உம்மிடத்தில் வந்து யாசித்தவர்க்கு இலைக் கறியையாவது, வெந்தது வேறு எதையாவது பங்கிட்டுக் கொடுத்து, கிரவுஞ்ச மலையானது வழிகாணப் பிளக்குமாறு வேலை விட்டு அருளிய முருகப்பெருமானை அன்புடன் பணிந்து, நிலைபெற்ற பெருந்தவத்தைச் செய்து வருவீர்களாக.


மனமே! இப்படி இருந்தால் எப்படி?

 


மனமே! இப்படி இருந்தால் எப்படி?

-----

பல படிகளில் ஏறிய பிறகே  உயர்ந்த மாடியை அடைய முடியும். முயற்சி மெல்ல மெல்ல அதிகமாக ஆக, அதனால் ஏற்படும் பலனும் மெல்ல மெல்ல வளர்ந்து வரும். திடீரென்று ஒருவருக்கு உயர்ந்த நிலை வந்ததானால், அது இந்தப் பிறவியின் முயற்சியினால் வந்த பயன் என்று சொல்ல முடியாது. முற்பிறவிகளில் செய்த முயற்சிகளின் பயன் அது. முயற்சியின் அளவுக்கு ஏற்றபடி அனுபவங்களும் உண்டாகும். 

பசியின் காரணமாக, உணவு கொள்ளத் தலைப்பட்ட ஒருவனுடைய பசியானது, பாயசத்திலிருந்து தயிர்ச் சோறு வரையில் முழுமையாக உண்ட  பிறகுதான் அடங்கும் என்று சொல்ல முடியாது.  ஒவ்வொன்றாகச் சாப்பிடச் சாப்பிட அவனுக்கு உண்டாகி இருந்த  பசி மெல்ல மெல்லக் குறைந்து வரும். 

சாதகம் செய்யும்போது எந்த எந்தப் பக்குவத்தில் இருக்கிறோமோ அந்த அந்தப் பக்குவத்திற்கு ஏற்ப அனுபவம் ஏற்படும். அதனால்தான் குருநாதரைச் சரண் அடைந்து, அவர் சொன்ன வழிப்படி மெல்ல மெல்லப் பயின்று வரவேண்டும் என்கிறார்கள். குருவின் உபதேசம் பெற்றவுடனே முடிந்த முடிவாகிய பயன் கிடைத்து விடாது.  உழைப்பு இல்லாமல் ஊதியம் இல்லை. 'பல நூல்களைப் பலர் எழுதியிருக்கிறார்கள்.  விரிவான விளக்கமும் தந்து இருக்கின்றார்கள். அவற்றையே நாம் குரு உபதேசமாகக் கொள்ளக் கூடாதா, குருவை நேரிலே அடைந்து உபதேசம் பெற வேண்டும் என்பது அவசியமா? என்று ஐயம் தோன்றலாம்.  ஒருவர் மண்டிக் கடை வைத்திருக்கிறார். அவர் உயர்ந்த சீரகசம்பா அரிசி வியாபாரம் பண்ணுகிறார். ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் அந்தக் கடையில்தான்  அரிசி வாங்குகிறார்கள். விலை உயர்ந்த அரிசி என்பதற்காக, அதை அப்படியே சாப்பிட முடியாது.  வீட்டிற்கு எடுத்துச் சென்று,  தங்கள் தேவைக்கு ஏற்ப அரிசியைக் கொஞ்சம் எடுத்துச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள். ஒருவர்  கடைக்காரர் வீட்டுக்கு விருந்தினராகப் போகிறார். கடைக்காரர் தமது கடையில் இருக்கும் அரிசியை எடுத்தும் தமது வீட்டிலேயே சமைத்து, விருந்தினருக்கு வேண்டிய அமுது படைக்கிறார்.  ஊருக்கு எல்லாம் அரிசி வியாபாரம் செய்யும் ஒருவர் தம் வீட்டிற்கு வரும்  விருந்தாளிக்கும் அதே அரிசியைக் கொண்டுதான் அன்னம் படைக்கிறார். 

எல்லோருக்கும் அரிசி தருவது பொதுவான வேலை.  தம் வீட்டிற்கு வருபவருக்கு அமுது படைப்பது சிறப்பான செயல். பொதுவான அனுபவத்தையும், சிறப்பான அனுபவத்தையும் தருபவர் ஒருவர்தான். அதுபோலத்தான், பெரியவர்கள் எழுதி வைத்திருக்கும் நூல்களில் உள்ளவை பொதுவான உபதேசம். ஆனால், அவற்றை விளக்குகின்றவர்களிடமே நேரில் சென்றால் அவர்கள் செய்வது சிறப்பான உபதேசம். வந்திருப்பவர் இன்ன பக்குவம் உடையவர் என்பதை உணர்ந்து, அதற்கு ஏற்றபடி செய்யும் உபதேசம் சிறப்பான உபதேசம். அந்த  உபதேசத்தின்படி நடப்பவர்களுக்கு வெவ்வேறு அனுபவம் விளையும். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவன் அவனுடைய நிலைக்கு ஏற்றபடி அனுபவம் உண்டாகும். 

மாம்பழத்தை ஒருவன் நறுக்கிச் சாப்பிடுகிறான். மற்றொருவன். அப்படியே கடித்துச் சாப்பிடுகிறான். இன்னொருவன் சாற்றைப்  பிழித்து சாப்பிடுகிறான். இப்படிச் சுவைக்கும் முறை வேறுபட்டாலும் சுவைத்த பின் கிடைக்கின்ற இனிப்பாகிய அனுபவம் ஒன்றாகவே இருக்கும். உலகியல் சம்பந்தமான இந்திரியங்களின் அனுபவத்திலேயே இத்தகைய வேறுபாடுகள்  இருக்கின்றன. அறதுபோலத்தான் இறைவன் அருள்நெறியில் செல்கின்றபோது வேறுபட்ட பல அனுபவங்கள் உண்டு. ஒவ்வொருவரும் பின்பற்றும் சாதனம் வேறு வேறாக இருக்கும்.  ஒருவர் இறைவன் திருவுருவத்தை உள்ளத்திலே பதித்துக் கொண்டு எப்போதும் தியானத்தில் மூழ்கி இருப்பார். மற்றொருவரோ  இறைவன் பொருள்சேர் புகழைக் கூறும் அருட்பாடல்களைப் பாடிப் பரவசமாய் இருப்பார். வேறு ஒருவர் இறைவன் திருவுருவத்திற்கு வண்ண வண்ண மலர்களால் அருச்சனை செய்து கொண்டே இருப்பார்.  இவ்வாறு பலபடியாக இறைவனை நினைந்து, வாழ்த்தி, வணங்கி அவன் திருவருளைப்  பெற்றவர்கள் எத்தனையோ பேர். அகண்டமான இறைவனைக் கண்டமான உருவத்தில்  வழிபடுகிறோம். அந்த உருவங்கள் பலவாக இருக்கின்றன. அதைப் போலவே அவனை அடைவதற்குரிய வழிகளும் பலவாகவே உள்ளன. இது ஒன்றுதான் வழி என அறுதியிட்டுக் கூற முடியாது. அவரவர்களுடைய பக்குவத்திற்கு ஏற்ப வழிகள் மாறுபடும். 

பலர் ஒரே குருநாதரிடம் சென்றாலும், அவர் அத்தனை மாணவர்களுக்கும்  ஒரே மாதிரியாக உபதேசம் செய்வது இல்லை. ஏனென்றால், அவர்கள் எல்லோருடைய  மனமும் ஒரே விதமான பக்குவத்தில் இருக்காது. அவரவர்களுடைய பக்குவத்தை உணர்ந்து, மனத்தின் திண்மையை உணர்ந்து, அவர்கள் எல்லோரும் பயனடைய வேண்டும் என்ற கருணையினால் அவரவர்களுக்கு ஏற்றபடி உபதேசம் செய்வார் குருநாதர். தம்மை வந்து அடைகின்ற மாணவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை முதலில் உணர்ந்து,  அவர்கள் மேலே ஏறும் அடுத்த நிலை இன்னது என்பதைக் கண்டு, அதற்கு  ஏற்ப உபதேசம் செய்வார். இறைவன் திருவருளைப் பெறுகிற முயற்சி உடையவர்களுக்குக் குருநாதரின் அருள் இருந்தால் அனுபவம் வரவர, உயர்ந்து வரும்.  அனுபவம் ஏற ஏற, அதனால் பெறும் இன்பமும் ஏறிக் கொண்டே இருக்கும். ஒரு பிடி சாப்பிட்ட உடனே அதற்கு ஏற்ற அளவு பசி தணிவது போல, அனுபவம் கொஞ்சம் பெற்ற உடனே  இன்பம் தலைப்பட ஆரம்பித்துவிடும். தொடங்கும்போதே முடிந்த முடிபாகிய முத்தியின்பம் கிடைக்கும் என்பது இல்லை. ஆனால் செய்யும் முயற்சி உண்மையானால்க, அதற்கேற்ற அனுபவம் நிச்சயமாக உண்டாகும். ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பதில் பயன் இல்லை. சிறிது செய்தாலும் மெய்வருத்தக் கூலி உண்டு. "முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்" என்றார் திருவள்ளுவ நாயனார். முயன்று வந்தால், இந்தப் பிறவியிலேயே முடிந்த முடிபாகிய இன்பத்தைப் பெற முடியாமலும் போகலாம். ஆனால் முயற்சிக்கு ஏற்ற பலன் நிச்சயமாக உண்டு. அடுத்த பிறவிகளிலாவது கிடைக்கும் என்பது உறுதி. 

உயிர் உடம்போடு வாழும் வாழ்க்கையில் இந்த உடம்போடு இருப்பது ஒர் அத்தியாயம். ஒரு நல்ல சாதனத்தைத் தொடங்கினால் அது எப்படியும் சிறந்த பயனைப் பெறும்படி செய்துவிடும். இப்போது நாம் செய்கின்ற முயற்சியின் பயன், வரும் பிறவியாகிய அடுத்த அத்தியாயத்தில் உயிரோடு ஒட்டி வரும். "ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து" என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார். எனவே இந்தப் பிறவியில் செய்கின்ற முயற்சி கைகூடுமோ கூடாதோ என்று நினைக்க வேண்டாம். இப்பொழுது கை கூடாவிட்டாலும் இந்த முயற்சியின் பயன் வரும் பிறவிகளிலும் தொடரும். ஆதலால், ஏதாவது ஒரு வகையில் ஈடுபட்டு இறைவன் அருள் பெறுவதற்குரிய சாதனத்தைத் தளர்ச்சியின்றிச் செய்து வர வேண்டும். அதற்கு குருவின் அருள் பெற வேண்டும்.  மனிதனுடைய வளர்ச்சி அவன் உடம்பைப் பற்றியது அல்ல. மனத்தைப் பற்றியது ஆகும். மனப் பண்பு வளர வளர, மனிதன் வளருகிறான். மனத்தின் இயல்பு ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றுவதுதான். அப்படிப் பற்றுகிற மனம் எவ்வளவுக்கு எவ்வளவு உயர்ந்த பண்புடைய ஒன்றைப் பற்றுகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது உயரும். 

சாதாரண மனிதன் ஒருவன் தன் முயற்சியினால் மக்கள் தொண்டனாகி,  நகரமன்ற உறுப்பினர் ஆகி, நகரமன்றத் தலைவர் ஆகி, சட்டமன்ற உறுப்பினர் ஆகி, அமைச்சர் ஆகவும் வந்துவிடுகிறான். இது போன்ற வளர்ச்சிமுறை மனப் பண்பாட்டினால் உண்டாக  வேண்டும். சமூகத்தாரின் கண்ணில் கீழ்ச்சாதியில் பிறந்தவர் நந்தனார். ஆனால், அவரைக் காட்டிலும் உயர்ந்த வேதியர் யாரும் இல்லை.   "நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் இந்த நானிலத்தில் கண்டது இல்லை" என்றுதானே பாரதியார் அவரைப் போற்றினார்.  கண்ணப்பர் வேட்டுவ  குலத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால், ஆறு நாட்களில் அவரைக் காட்டிலும் உயர்ந்தவர் யாரும் இல்லை.  அவர்களுடைய மனநலம் வளர்ச்சி பெற்றது.  "மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்"  என்பது திருக்குறள்.  புறக் கண்களால் பார்க்கும் உருவத்தைக் கண்டு மயங்காதே.  தேர் பெரியது. அச்சாணி எவ்வளவு சிறியது? அதுபோன்ற மனிதர்கள்  இருக்கிறார்கள்'  என்று கூறுகிறார் திருவள்ளுவ நாயனார். அதனால், "உருவு கண்டு எள்ளாமை வேண்டும்" என்றார். 

சிவபிரான் திருமணத்தின் போது வானவர்களும், பூவுலகத்தினரும் திருமணக் கோலம் கண்டுகளிக்க இமயமலையில் வந்து கூடிவிட்டார்கள். வடநாடு தாழ்ந்ததால்  தென்னாடு உயர்ந்துவிட்டது. இதைச் சமன்படுத்த உருவத்தால் சிறுத்த அகத்திய முனிவரை எம்பெருமான் தென்னாடு அனுப்பினார்.  சின்னஞ்சிறு குறுமுனிவர், தமிழ் நூலை நமக்குத் தந்த குருமுனிவர்,  "உருவு கண்டு எள்ளாமை வேண்டும்" என்பதற்குச் சான்றாக நிற்கிறார். அகத்திய முனிவர் தென்னாடு வந்தார். நிலம் சமன்பட்டு விட்டது. அது அவரது உடம்பின் வல்லமையால் அல்ல.  அவர் உள்ளம் பெரியது. மனத்தின் வன்மை அதிகமாக, திடம் அதிகமாக, பண்பு செறிந்து  வளர்ந்து நிற்கும்.  

நம்முடைய முயற்சிகள் தொடர்ந்து வந்தால், பண்பு வளர்ந்து வரும். மனத்தில் உறுதி தோன்றும். இறையருள் நமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை தோன்றும். இறைவன் இருக்கிறான் என்று பிறர் சொல்லக் கேட்கிறோம்.  நமக்கு அதில் முழு நம்பிக்கை இல்லை. சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. அந்தச் சந்தேகம் நீங்க வேண்டும். இறைவன் நிச்சயம் இருக்கிறான். அவனைக் காணாத குறை  நம்முடையதே. அவன் எங்கே, எங்கே, எங்கே என்ற கேள்வி தொடங்கும்போது, நம்பிக்கை உதயமாகும். கேள்விக் குறியைப் போட்டுக் கொண்டே போனால் பயன் இல்லை.  கேள்விக்குப் பதிலை அளிக்கும் குருநாதரை அண்டி, அவர் காட்டும் நெறியிலே,  சீலத்திலே ஒழுகி நின்றால் பயன் உண்டு. மனத் திட்பம் என்பது ஒரு நாளில் வந்துவிடாது. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உடல்  வலிமை ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. பயிற்சியை விடாமல் செய்யச் செய்யப்  படிப்படியாகத்தான்  உடல் வலுப்பெறுகிறது. அதைப் போலவே மனம் திட்பம் உண்டாக, படிப்படியாக விடாமல் சாதனம் செய்ய வேண்டும். இறைவன் திருவருளை நம்பியிருந்தால் இடையில் தடை ஏற்படாது. 

பல காலமாக உலக மாயையில் சிக்கிச் சுழன்ற மனத்தில் படிந்துள்ள பழைய வாசனை மறைய வேண்டுமென்றால், பல கால உழைப்பு வேண்டும். அந்த உழைப்பினால் பழைய வாசனை அற்றுப் போகச் செய்து, மனத்தையே நாசம் செய்பவர்கள் சீவன்முத்தர்கள்.  இறைவனிடத்தில் கொள்ளும் நம்பிக்கையினால் திடம் வரும். ஒன்றை ஒன்றாகப் பார்த்து மயங்குகின்ற தன்மை ஒழியும். அந்தத் திடம் உண்மையாக இருந்தால், அதையே புணையாகக் கொண்டு பிறவிப் பெருங் கடலை நீந்தி விடலாம். 

மனம் எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்யவில்லை. எதைச் செய்யக் கூடாதோ அதைச் செய்கிறது. கண் பார்க்கிறது: நான் பார்த்தேன்  என்று சொல்கிறோம். காது கேட்கிறது;  நான் கேட்டேன் என்று சொல்கிறோம். கண்ணையும் காதையும் கருவியாகக் கொண்டு 'நான்' என்பது பார்க்கிறது; கேட்கிறது. எதையோ ஒன்றை நினைத்துக் கொண்டு ஒருவன் போய்க் கொண்டிருக்கிறான். அவனுக்கு எதிரிலே போகின்ற நம்மை அவன் பார்ப்பது இல்லை. நம் மேல் அவனுடைய கண் படாமல் இல்லை. ஆனால், அவன் மனம் கண்ணோடு ஒன்றி நம்மைப் பார்க்கவில்லை. கண்ணை வாயிலாகக் கொண்டு மனம் இயங்கவில்லை. மனம் எதையோ நினைத்துக் கொண்டு இருக்கிறது. மனம் ஆகிய ஒன்று, கண் காது ஆகிய இந்திரியங்களை வாயிலாகக் கொண்டு இயங்கும்போதுதான் பார்க்கிறேன், கேட்கிறேன் என்றெல்லாம் சொல்கிறோம். அதனால் எல்லாவற்றுக்கும் மூலமாக இருக்கும் மனம் ஒரு காரியத்தைச் செய்கிறது; மற்றொரு காரியம் செய்யவில்லை. 

நமது மனமானது, பால் என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர் கண் சேல் என்பதாக எப்போதும் திரிந்து கொண்டே இருக்கிறது. ஒன்றை நினைக்காமல், பலபல பொருள்களைப் பற்றி நினைந்து திரிகின்றது. மனத்திற்கு அதுதான் வேலை. மனம் வாயுவின் கூறு உடையது.  ஆகையால், அது சலித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு கணமும் ஒரு நிலையில் நிற்பதில்லை. மனத்தை நிறுத்துவது எளிய காரியம் அல்ல. ஒன்றையும் பேசாமல், நினையாமல் மனம் ஒய்வாக ஒருகணம் கூட இருக்காது. "சினம் இறக்கக் கற்றாலும், சித்தி எல்லாம் பெற்றாலும், மனம் இறக்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே?” என்று தாயுமானவர் பாடுகிறார். 

பலவற்றையும் சிந்தித்துக் கொண்டே இருக்கும் மனத்தை, "எதைப் பற்றியும் சிந்திக்காதே"  என்று எவ்வளவு பலமான கூட்டில் வைத்து அடைத்தாலும் அது நில்லாது. சிந்திக்காதே எனச் சொல்வதைவிட,  'நல்லவற்றைச் சிந்தி'  என்று சொல்வது நலம். "இறைவன் சம்பந்தமானவற்றைச் சிந்தி' என்று சொல்லி, அதன் போக்கிலே விட்டு மடைமாற்றி விட வேண்டும். இறைவனோடு தொடர்புடையவற்றை நினைந்து, மற்ற நினைப்புகள் மெல்ல மெல்லக் குறைய,  இறைவனையே நினைக்கின்ற நினைப்பு வரும்போது மனம் நிற்கும். அதை "மனோலயம்" என்பர். 

ஒரு குளத்தில் தாமரை மலர்ந்திருக்கிறது. அந்தப் பக்கம் போகிற ஒரு பிள்ளை அதைப் பார்க்கிறான்; பறிக்கிறான்; இதழ் இதழாகக் கிள்ளிக் கசக்கி எறிந்துவிட்டுப் போகிறான். ஓர் ஒவியன் வருகிறான். அதன் வண்ணத்தையும் மலர்ச்சியையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து அப்படியே ஓவியம் தீட்ட முனைகிறான். ஒரு கவிஞன் பார்க்கிறான். 'இந்தத் தாமரையைப் போல் அழகு மிக்கதாகப் பெண்களின் முகங்கள் இருக்கின்றன' என்று வருணிக்கிறான். அதையே ஒரு அடியவர் பார்க்கிறார். 'இன்பத் தேனைச் சொரிந்து, அடியவர்களைத் தன்பால் அழைக்கின்ற இறைனுடைய திருவடிகளைப் போலவே, வண்டுகளை அழைக்கும் தாமரை உள்ளது’ என்று பரவசப்படுகிறார். நினைக்கின்ற நினைப்பை நல்லதாக்கிக் கொண்டவர் அடியவர். ஆதலால், தாமரையைப் பார்க்கும்போது  பெருமானுடைய திருவடி மலர்களை அவர் நினைக்கிறார்.  எங்கெங்கோ போகின்ற மனத்தை மடைமாற்றி இறைவனைப் பற்றி நினைக்கப் பழகினால், கடைசியில் நேரே இறைவனை நினைக்கிற நிலைக்கு மனம் வந்து விடும். 

விளையாட்டுப் புத்தியுள்ள சிறு குழந்தை  எப்போதும் வீதியிலே  விளையாடிக் கொண்டிருக்கிறது. சாப்பிடுகிற வேளையில் கூட உள்ளே வராமல்  விளையாடுகிறது. தாய் கிண்ணத்தில் உணவைப் பிசைந்து எடுத்துச் சென்று  குழந்தையை இழுத்து வந்து ஊட்டுகிறாள். ஒரு வாய் சாப்பிடுகிறது;  மறுபடியும் ஒடிவிடுகிறது. திரும்பவும் இழுத்து வந்து ஊட்டுகிறாள். விளையாட்டுத் தோழர்கள் போய் விடுவார்களே என அந்தப் பிடிசோற்றை வாயில் வாங்கிக் கொண்டு ஒடப்  பார்க்கிறது. ஒர் அடி அடித்துத் தாய் அதட்டுகிறாள். தாய்க்குப் பயந்துகொண்டு உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்காமல் வாயைத் திறக்கிறது. ஆனால், அதன் கண் வீதியிலேயே இருக்கிறது. அந்தக் குழந்தை உணவின் சுவையை ரசித்துச் சாப்பிடப் பழகிவிட்டால்,  அப்புறம் மிக்க பசி வந்தவுடன் வீட்டுக்கு ஓடி வரும்.

அதைப் போலப் பலபலவற்றை நினைத்துத் தாவித் தாவி ஒடிக்கொண்டிருக்கும்  மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மடைமாற்றி விட்டு இறைவன் சம்பந்தமான பொருளை நினைக்கச் செய்தால், பிறகு இறைவனையே நினைக்கப் பழகிவிடும். பார்க்கின்ற பார்வையில், கேட்கின்ற மொழியில், செய்கின்ற செய்கையில் எப்படி இறைவன் நினைவு வரும். எந்தக் காரியத்தைச் செய்தாலும், எந்த இடத்திலே இருந்தாலும் நினைப்பு  நமக்கு எதில் ஊன்றி இருக்கிறதோ, அதுவே முந்திக்கொண்டு நிற்கும்.  "எத் தொழிலைச் செய்தாலும், ஏது அவத்தைப் பட்டாலும் முத்தர் மனம் இருக்கும் மோனத்தே" என்றார் பட்டினத்து அடிகளார்.

செருப்பு இல்லாமல் வருந்திய வைணவர் ஒருவர், நல்ல செருப்பு ஒன்று வாங்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். வறுமையினால் வாங்க இயலவில்லை. ஒருவழியாக வாங்கிவிட்டார்.  அதைப் போட்டுக் கொண்டு பெருமாள் கோயிலுக்கு வந்தார். பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. காலிலே போட்டிருக்கும் புதுச் செருப்பைக் கழற்றி வெளியே வைத்துவிட்டு உள்ளே போனார். விரைவில் கோயிலை விட்டு வரமுடியவில்லை. அவர் நினைவோ செருப்பு மேலேயே உள்ளது. தீபாராதனை ஆயிற்று. சடகோபம் சாதிக்க நாழிகை ஆயிற்று. 'சீக்கிரம் செருப்புச் சாதிக்க வேணும்'  என்றார். பெருமாள் சந்நிதியில் இருந்தாலும் அவருக்குச்  செருப்புமேல் ஆசை 'செருப்பு வைத்துச் சேவடி தொழுமாப் போலே" என்று வைணவ  நூல்களில் வியாக்கியானத்தில் இந்த உதாரணம் வருகிறது. 

மனத்திலே எந்த நினைப்பு இருக்கின்றதோ அதுவே முந்திக்கொண்டு வரும் என்பதற்கு  இது சிறந்த உதாரணம்.  இறக்கும் தருவாயிலும் இறைவன் நினைப்பு வரவேண்டுமானால் காலையும் மாலையும் அவனை  நினைத்துப் பழக வேண்டும். பார்க்கின்ற பொருள்களை எல்லாம் இறைவனோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கவேண்டும். அவன் உருவத்தைக் கண்டு கண்டு அதை உள். வாங்கிக்கொண்டு அகக் கண்ணால் பார்க்க வேண்டும்.  இறைவனது திருவுருவத்தைத் தியானம் பண்ண வேண்டுமென்ற ஆசை இருக்கிறவர்கள் அது நழுவாது இருக்கத் திரும்பத் திரும்ப ஓடிப்போய் அத்திருவுருவத்தைப் பார்க்க வேண்டும். "உயிராணம் இருந்து. உற்று நோக்கி, உள்ளக் கிழியில் உருவு எழுதி" என்று அப்பர் பெருமான் பாடுகிறார்.  அந்தத் தியானத்திற்கு எது தடையாக இருக்கிறதோ, அதை நீக்குவது எளிது அல்ல. ஒன்றை  நினைக்கின்ற மனத்தை எதையும் நினைக்காதே என்று சொல்வதற்குப் பதிலாக,  'இதை நினை' என்று சொல்ல வேண்டும்.  "நெஞ்சே! நீ நினையாய், நிமிர் புன்சடை நின்மலனை" என்று தமது நெஞ்சுக்கு அறிவுறுத்தி, நிலை நிறுத்தினார் அப்பர் பெருமான். "நீ நாளும் நினை கண்டாய்" என்றும், "நன்னெஞ்சே! உன்னை இரந்தேன், நம்பெருமான் திருவடியே உன்னம் செய்து இரு கண்டாய், உய்வதனை வேண்டுதியேல்" என்றும் பாடினார் திருஞானசம்பந்தப்  பெருமான். 

மக்களுக்குத் தாம் அனுபவிக்கும் பொருளைப் பற்றிச் சிறப்பித்துப் பேச ஆசை உண்டாவது இயல்பு. மகளிரை எத்தனையோ வகையில் வருணனை செய்யத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.  'பாவையர்கள் பேசுகின்ற மொழியைக் கேட்டுப் பால் என்றும்,  அவர்களது ஒயிலான நடையைப் பார்த்து அவர்கள் பாதம் பஞ்சு என்றும், அவர்களது  கண்களைப் பார்த்துச் சேல் போல் இருக்கின்றன என்றும் நினைப்பதும், சொல்லித் திரிவதும் இயல்பு. இந்த மூன்றுக்கும்  மூன்று முறிவு சொல்லித் தருகிறார் அருணகிரிதாநர். அவர் சொல்லுவன கற்புடைய மகளிரைப் பற்றி அல்ல. அற வழியில் இன்பம் நுகர்பவர்களைப் பற்றி  அவர் சொல்லவில்லை. கண்ணாலும், மேனி மினுக்காலும்  உலகோரின் மனத்தை மயக்கும் பாவையர்களைப் பற்றியே பேசுகின்றார்.  இத்தகைய பாவையர்கள் எல்லாக் காலத்தும், எல்லா இடத்தும் இருந்துகொண்டுதான்  இருக்கிறார்கள். உலகத்தில் பிறந்து வாழ்கின்ற மனிதர்கள் யாரும் இவர்கள் கண்ணில் படாமல் இருக்க முடியும் எனச் சொல்ல முடியாது. 

நமக்கு நஞ்சாக இருப்பதை, நாம் செய்யக் கூடாததை முதலில் சொல்லி, நமக்கு நன்மை அளிப்பதை, நாம் செய்ய வேண்டியதைப் பின்னே அடிகளார் சொல்கிறார். எல்லாப் பெண்களைப் பார்க்கும்போதும் காம உணர்ச்சி உண்டாவதில்லை. தாயாகப்  பார்க்கும்போதும் சகோதரியாகப் பார்க்கும்போதும் உள்ளத்தில் தீய எண்ணம் உண்டாகாது. ஆகையால் பெண்களைப் பார்ப்பதில் தீமை இல்லை. பார்க்கின்றபோது  நினைக்கின்ற நினைப்புக்கு ஏற்ப நன்மை, தீமை ஆகிய விளைவுகள் இருக்கின்றன. காம ஊற்றைத் திறக்கின்ற அதே கண்தான் பக்தி ஊற்றையும் பொங்கச் செய்கிறது. 

"பெண்களின் கண்ணைப் பார்த்துச் சேல் எனச் சொல்வதற்குப் பதிலாகச் செந்தில் ஆண்டவன் திருக்கரத்தில் உள்ள வேல் என்று சொல்"  என்பது அருணகிரிநாதர் செய்யும் அருள்  உபதேசம். நமது நினைப்பு,  பேரின்பத்திற்கு  வழிகோலுவதாக இருக்கவேண்டும். பாவையர்களைப் பார்க்கின்ற பார்வை தவறானது அல்ல. ஆனால் எண்ணம் தவறானதாக  இருக்கக் கூடாது.  'சேல்விழி' என்று சொல்லாமல், 'வேல்விழி' என்று சொல்லும்போது, முருகப் பெருமானுடைய வேல் நினைவுக்கு வரும். பாவையர் பாதம் மென்மையாகப் பஞ்சு போல் இருக்கிறது என்கிறாயே. பெண்களின் நடை மயிலின் நடை என்றும் சொல்வார்களே. 'பதம் பஞ்சு' என்று நினைப்பதை விடுத்து, 'கொற்ற  மாயூரம்' என்று நினை. பாவையரின் பேச்சு பாலைப் போல் இருக்கிறது என்று, காமப் பாலை நினைப்பதை விடுத்து, இறைவன் அருட்பாலை நினைக்க வேண்டும்.  

காணும் பொருளிலே இறைவன் நினைவை வருவித்துக் கொள்ள வேண்டும். பாவையர் கண்ணைப் பார்த்துச் 'சேல்' எனச் சொல்லித் திரிகின்றதை ஒழித்துச் 'செந்திலோன் திருக்கை வேல்' என நினைத்து உருகினால், பாவையர் பதங்களைப் பார்த்துப் 'பஞ்சு' எனச் சொல்லித் திரிகின்றதை ஒழித்து, 'கொற்ற மாயூரம்' என எண்ணி வியந்தால், பாவையர் மொழியைக் கேட்டுப் 'பால்' எனச் சொல்லித் திரிகின்றதை ஒழித்துச் செந்திலோன் கால் வெட்சித் தண்டை எழுப்பும் ஒலி எனக் கேட்டு நின்றால் அந்த நினைவு நம்மை மேலே ஏற்றிவிடும். அதனால் இந்திரியங்கள் அடங்கி, மலம் ஒழிந்து, இன்ப துன்பமில்லாப் பெருவாழ்வாகிய முத்தி கிடைக்கும். அப்படிச் செய்யாமல் மனம் திரிகிறது. "மனமே, இப்படி இருந்தால் மனமே, உனக்கு எவ்வாறு முத்தி கிட்டும்?" என்று கேட்கிறார் அருணகிரிநாதர். 


"பால் என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர் கண் 

சேல்,என்பதாகத் திரிகின்ற நீ, செந்திலோன் திருக்கை 

வேல் என்கிலை;கொற்ற மாயூரம் என்கிலை; வெட்சித்தண்டைக் 

கால் என்கிலை; மனமே! எங்ஙனே முத்தி காண்பதுவே?"

என்பது அருணகிரிநாதர் அருளிய உபதேசம்.


இதன் பொருள் ---

ஏ மனமே! பெண்களின் சொல்லானது பாலை ஒத்தது எனவும், பாதமானது பஞ்சை ஒத்தது எனவும், கண்கள் சேல் மீனை ஒத்ததாகவும் எண்ணி மயங்கித் திரிகின்ற நீ, திருச்செந்தூரில் எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளின் திருக்கரத்திலே விளங்கும் வேல் என்று சொல்லுகின்றாயில்லை. வெற்றி பொருந்திய மயில் என்று சொல்லுகின்றாயில்லை. வெட்சி மலரையும் தண்டையையும் அணிந்த திருவடி என்று சொல்லுகின்றாயில்லை. முத்தியை நீ எப்படி அடைவாய்? 


பொது --- 1126. பட்டாடைக்கே

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பட்டு ஆடைக்கே (பொது) முருகா!  திருவடியில் அணுக வரம் அருள்வாயே தத்தா தத்தா தத்தா தத்தா      தத்தா தத்தத் .....