ஏற்பவர்க்கு இட்டது எங்காயினும் வரும்
-----
தான் செய்கிற செயல் ஒவ்வொன்றும் தனக்குப் பல காலத்திற்குப் பயன்படும்படி செய்ய வேண்டும் என்றுதான் மக்கள் யாவரும் விரும்புவர். ஒரு நாளைக்கு மட்டும் சோறு சமைத்துச் சாப்பிடுகிறவன் அன்றாடம் காய்ச்சி. பல காலத்துக்கும் பொருள் சேகரித்து வைத்துக் கொண்டு சுகமாகச் சாப்பிடுகிறவன் செல்வன். பல காலத்திற்குப் பலவகையில் பயன்படுகிற நற்செயலைச் செய்கிறவனே அறிவாளி.
நம்முடைய உடம்பு நிலையானது அல்ல என்று நமக்குத் தெரியும். வாழ்நாளைப் பொறுத்து உடம்பு இருக்கிறது. உயிருக்கு இறுதி இல்லை. என்றைக்கு இறைவனோடு ஒன்று படுகிறதோ அன்றைக்குத்தான் அதன் பயணம் முடிவடைகிறது. அந்த உயிருக்குப் பயன்படுகிற பொருளைச் சேமித்து வைக்க வேண்டும். நம்முடைய கைப்பொருளை இல்லை என்பவர்களுக்கு இட்டு வைத்திருந்தால், அது நமக்குப் பின்னால் உயிருக்குப் பயன் அளிக்கும் என்கின்றார் அருணகிரிநாதர்.
ஒரு நல்ல செயலைச் செய்தால், அது எப்போது வந்து பலன் தரும் என்கின்ற ஆராய்ச்சிக்கு அவசியம் இல்லை. செயலுக்கு உரிய பலன் எப்போதாவது வந்தே தீரும்.
"நன்றி ஒருவற்குச் செய்தக்கால், அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா, - நின்று
தளரா வளர்தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்"
என்னும் ஔவைப் பிராட்டியின் பாடல் இதற்கு விளக்கம் தருகின்றது. ஒருவனுக்கு ஓர் உதவியைச் செய்தால், அதன் பயன் மறுபடியும் நமக்கு எப்படிக் கிடைக்கும் என்ற சிந்தனை கூடாது. நிச்சயமாக செய்ததைவிடக் குறைவாகத் கிடைக்காது, அதிகமாகவே கிடைக்கும். தென்ன மரத்திலிருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம் என்கிறார் ஔவைப் பிராட்டியார்.
இதைப் போலவே, அருணகிரிநாதர் நமக்கு உபதேசம் செய்கிறார். "நீ உன்பால் வந்து இரப்பவர்களுக்கு உன்னுடைய பொருளை இட்டால், அதனால் என்ன பயன் என்று நினைக்காதே. நீ அளிக்கிற கொடை உனக்கு எங்காயினும் வந்து உதவி பண்ணும். நீ செய்த தருமம் ஒன்று, அதற்கான இறையருள் ஒன்று. இரண்டும் உனக்கு உதவி செய்ய எப்படி வரும், எங்கே வரும், எப்போது வரும் என்று உனக்கே தெரியாது. எங்காயினும் அந்த இரண்டும் வந்து உதவும்" என்கிறார். பசிக்கு ஏதாவது கிடைக்காதா என்று ஏங்குகிறவர்களை வலிய அழைத்து, உணவு கொடுக்கின்ற தருமம் எங்காயினும் வரும்.
எங்காயினும் என்றால் இந்த உலகத்தில் மாத்திரம் அல்ல. மறுபிறவியிலும் வரும். சிவஞானிக்கு ஒரு கவளம் அன்னம் இட்டால், எடுக்கிற பிறவியில் சோற்றுக்குப் பஞ்சம் இல்லாமல் வாழலாம். அறம் செய்தால், அது பின்பு வந்து விளையும். பொருள் கொடுத்தால், அது பிறன் ஒருவனால் உனக்குக் கொடுக்கப்படுகிற பொருளாக வந்து சேரும்.அருணகிரிநாதர், ஓர் உவமை சொல்லுகிறார். "முருகப் பெருமானுடைய அருள்போல், ஏற்பவர்க்கு இட்டது எங்காயினும் வரும்" என்கிறார்; "வேலையில் வேலை விட்டோன் அருள் எங்காயினும் வரும்" என்கின்றார்.
இறைவன் திருவருள், யாருக்கு, எப்போது, எப்படி வரும் என்று சொல்ல முடியாது. இறைவன் திருவருளினாலே நல்லது பொல்லாதது ஆகிய இரண்டுமே வந்து கொண்டிருந்தாலும் தீமை வரும்போதுதான், "இறைவன் என்னைப் இப்படி சோதிக்கிறார்” என்று பலர் நினைக்கிறார்கள். இறைவனுடைய அருளை உணர்வதற்கு மனம் இருந்தால், வாழ்க்கையில் ஒவ்வொரு கனமும் அவனுடைய திருவருளை அனுபவிக்கலாம்.
அலுவலக வேலையாக ஒருவர் டெல்லிக்குப் போக விமானச்சீட்டு வாங்கி வைத்து, பயண ஏற்பாடுகளைச் செய்து விட்டார். அன்றைக்கு என்று அவருடைய குழந்தைக்குச் சற்று உடம்பு சரியில்லை. மனைவி அவரைப் போகக்கூடாது என்று தடுக்கிறாள். போவதைத் தடுத்து விட்டதாக மனைவியின் மேல் கடுங்கோபம் உண்டானது. பொறுத்துக் கொண்டார். மறநாள் செய்தித் தாளில், அவர் கிளம்பிச் செல்ல இருந்த விமானம் நடுவழியில் விழுந்து எரிந்து விட்டதாக வந்ததைப் படித்தவுடன்தான், இறைவனுடைய திருவருள் நம்மை ஊருக்குப் போகாது தடுத்திருக்கிறது என்று நினைந்து உருகினார். மனைவியிடத்தில் கோபித்துக் கொண்டதற்காக வருத்தப்பட்டார். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் எதிர்பாராத நன்மைகள் இப்படி எத்தனையோ நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றை எல்லாம் இறைவனுடைய திருவருள் என்று நினைக்க மனம் இல்லை. எதிர்பாராமல் வந்து நிற்கிற இலாபத்தைக் காண்கிறோம். அதை நம் அதிருஷ்டம் என்று சொல்கிறோம்.
எதிர்பாராத வகையில் யாராவது எங்காயினும் உதவி செய்தால், அதை அவன் செய்தான் என்று நினையாமல் அவனைக் கருவியாகக் கொண்டு இறைவன் திருவருள் துணை செய்தது என்று நினைக்க வேண்டும். துன்பம் வந்தால் யாரோ நமக்கு வேண்டுமென்றே செய்ததாக நினைக்கிறோம். செய்தவனிடம் கோபப்படுகிறோம். எதிர்பார்த்து விளைந்தால் நம்மால் விளைந்தது எனச் சொல்லிக் கொள்ளலாம். எதிர்பாராமல் நல்லது வந்தாலும் இறைவன் திருவருள் என்று நினைக்க வேண்டும், தீயது வந்தாலும் அவ்வாறே நினைக்க வேண்டும்.
உடம்புக்கு வந்த நோயை எப்படிக் குணமாக்குவது என்று மருத்துவருக்குத் தான் தெரியும். உயிருக்கு வந்துள்ளது தீராத நோயாகிய பிறவிநோய். நம்முடைய புண்ணிய பாவ வினைகளைக் கழுவிவிட வேண்டும் என்பதற்காகவே இறைவன் இந்தப் பிறவியைக் கொடுத்திருக்கிறான். அவன் அருளால் நம்முடைய ஊழ்வினைக்கு ஏற்ப இன்பதுன்பங்கள் விளைகின்றன. துன்பம் வந்தாலும் இன்பம் வந்தாலும் இறைவனுடைய திருவருள் என்று நினைந்து வாழ்பவர்களுக்குத் துன்பத்தினாலே வருத்தம் இராது. இன்ப துன்பம் இரண்டும் அவர்களுக்குச் சமமாகவே இருக்கும்.
ஒரு கிலோ இரும்பு கனமா? ஒரு கிலோ பஞ்சு கனமா?' என்று கேட்டால், கொஞ்சம் மந்தமான புத்தி உள்ளவர், பஞ்சைவிட இரும்பு கனமானது என்று எண்ணி, "இரும்புதான் கனம்'"என்று சொல்லலாம். அறிவாளியாக இருந்தால், "பஞ்சாய் இருந்தால் என்ன? இரும்பாய் இருந்தால் என்ன? இரண்டு சமம்" என்று சொல்லுவார். அதுபோலத்தான், இன்பமாக இருந்தால் என்ன? துன்பமாக இருந்தால் என்ன? இரண்டும் ஆண்டவன் அருள்தான்' என்று நினைப்பவர்களுக்கு இன்பமும் துன்பமும் சமமாகவே இருக்கும். இன்பத்தைக் கண்டு அவர்கள் மனம் புதிய மகிழ்ச்சியை அடையாது. துன்பத்தைக் கண்டு அவர்கள் மனம் துவளாது.
"நன்றாங்கால் நல்லவாக் காண்பவன், அன்றாங்கால்
அல்லற்படுவது எவன்"
என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.
நல்லதுதான் வேண்டும், தீயது வேண்டாம் என்று சொல்வதற்கு நமக்கு உரிமை இல்லை. அடியார்கள் அப்படித்தான் நினைப்பார்கள். "கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்" என்று இவர்களை அடையாளப் படுத்துகிறார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.
நம்மை எப்படிக் காப்பாற்ற வேண்டும் என்பது இறைவனுக்குத் தெரியும். நாம் நினைக்கிறபடி எல்லாம் வேலை செய்யும் வேலைக்காரன் அல்ல அவன். குழந்தை கேட்கிறபடி எல்லாம் உணவுப் பண்டங்களைக் கொடுத்து விட்டால் குழந்தை உருப்படாது. பலாப்பழம் வேண்டும் என்று குழந்தைக் கத்துகிறது. தாய் அதை அதன் கண்ணில் படாமல் ஒளித்து விடுகிறாள். குழந்தை மாந்தம் வந்து துன்பப்படக் கூடாது என்கிற மேலான கருணையால் அப்படிச் செய்கிறாள். நமக்கு இன்பம் அளிப்பது எது, துன்பம் அளிப்பது எது என்று நமக்குத் தெரியாது. இறைவனுக்குத் தெரியும். "வேண்டத் தக்கது அறிவோய் நீ" என்கின்றார் மணிவாசகப் பெருமான். நம்முடைய பாவ புண்ணிய வினைகளுக்கு ஏற்ப இறைவன் அருள் துன்பமாகவும் வரலாம். இன்பமாகவும் வரலாம். இரண்டையும் அவன் திருவருளாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
துன்பம் இன்பம் இரண்டும் கலந்த வாழ்வில் இறைவன் அருள் என்பது தனியாக வருவது இல்லை. இரண்டுமே அவனுடைய அருள்தான். இத்தகைய மனப்பாங்கு வந்துவிட்டவர்கள் இடுக்கண் வந்தால், அதைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். நமக்குத் துன்பம் வந்தால் நெஞ்சு நடுங்குகிறது. இன்பம் வந்தால் மகிழ்ச்சி உண்டாகிறது. துன்பத்தைத் துன்பம் என்று பார்க்காமல் இறைவன் அருள் என்று நினைப்பார்க்கு, 'இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை' என்று உறுதி வந்துவிடும்.
இறைவனுடைய திருவருள் எப்படிக் காப்பாற்றும் என்று சொல்ல முடியுமா? ஒரு பாலைவனத்திலே போய் நிற்பான். தாகத்திற்குத் தண்ணீர் கிடைக்கவில்லையே என்று அவன் துன்பப்பட்டுக் கொண்டிருப்பான். அவ்வழியே போகிறவன் தனக்காக எடுத்துச் செல்லும் இளநீரை இவனுக்குக் கொடுத்து விடுவான். இறைவன் திருவருள் இவன் தாகத்திற்கு இளநீராக வரும். எம்பெருமான் அருள் எங்கு வரும், எப்படி வரும் என்று சொல்ல முடியாது; எங்காயினும் வரும்.
"பொங்கார வேலையில் வேலைவிட்டோன் அருள்போல் உதவ எங்காயினும் வரும் ஏற்பவர்க்கு இட்டது" என்கின்றார் அருணகிரிநாதர். இறைவன் அருள் இன்ன இடத்தில் இப்படி வரும், இப்படி உபகாரம் செய்யும் என்று சொல்ல முடியாமல் எங்காயினும் வந்து உதவி செய்வது போலவே, இரப்பவர்களுக்குத் தருமம் செய்கிற பொருளும் வந்து உதவும். இந்த உலகத்தில் மாத்திரம் அல்ல; வேறு உலகத்தில், வேறு பிறவியிலும் வந்து சாரும். இது தெரிந்தும், இறைவனிடம் பத்தி பூண்டு இருக்காமல், பொருளை ஈட்டி, அதைப் பிறருக்குக் கொடுக்காமல் தமக்கே பயன்பட வேண்டும் என்று பலர் சேமித்து வைத்துக் கொள்ளுகிறார்களே, அவர்களைப் பார்த்து அருணகிரிநாதர், "வங்காரமும் உங்கள் சிங்கார வீடும் மடந்தையரும் சங்காதமோ? கெடுவீர்! உயிர் போம்அத் தனி வழிக்கே?" என்று பாடுகிறார்.
யாசிப்பவர்களுக்கு இடாமல் பொருளை வைத்துக் கொண்டிருப்பவர்கள், தம்மிடம் உள்ள பணம், தங்கம், தாங்கள் கட்டிக்கொண்ட அழகான வீடு, மனைவி இவைகள் எல்லாம் தங்களுக்கு எப்போதும் துணை என நினைக்கிறார்கள். வங்காரம் - தங்கம். ஒருவன் தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் தங்கமாக மாற்றி வைத்துக் கொள்கிறான். தங்கத்தின் மதிப்பு என்றைக்கும் நிலையானது, எப்போதும் அது துணையாக இருக்கும் என்று நினைக்கிறான். பெரிய வீட்டைக் கட்டிக் கொள்கிறான். அதில் பல அறைகள் இருக்கின்றன. மாடு கட்டும் கொட்டகையே மிகப் பெரியதாக, மிக அழகாக இருக்கிறது. அந்த மாளிகையில் இறைவனுக்கு ஒர் இடம் இல்லை. இறைவனை மறந்து சிங்காரமாகக் கட்டிய வீடு அது. அந்த வீட்டைத் தன்னுடைய மனைவியின் விருப்பபடி கட்டியிருக்கிறான். சிங்காரமான வீட்டில், சிங்கார மடந்தையுடன் வாழ்கிறான். தன்னுடைய கைப்பொருளை மனைவிக்கே பலரும் கொடுத்து விடுகிறார்கள், காரணம் அவளால் இன்பம் கிடைக்கிறது என்ற நினைவுதான்.
இப்படித் தம்மிடம் இருக்கும் பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல், யாசிப்பவர்க்கு இடாமல் தங்கமாக வைத்துக் கொண்டிருப்பவர்களும், வீடாக வைத்திருப்பவர்களும், மடந்தையரோடு வாழும் வாழ்வாக வைத்திருப்பவர்களும் கடைசியில் செத்துத்தான் போகிறார்கள். அவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு திட்டமாக இத்தனை காலம் வாழலாம் என்ற வரையறை ஏதும் இல்லை. "நெருநல் உளன்ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ் வுலகு" என்கிறார் திருவள்ளுவ நாயனார்.
திருமூல நாயனார் நமக்கு ஒரு காட்சியைக் காட்டுகிறார்.
"அடப்பண்ணி வைத்தார், அடிசிலை உண்டார்,
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்,
இடப்பக்கமே இறை நொந்தது இங்கு என்றார்,
கிடக்கப் படுத்தார், கிடந்து ஒழிந்தாரே"
இதன் பொருள் ---
உணவு சமைத்தற்கு வேண்டுவனவற்றை ஈட்டிக் கொணர்ந்து வைத்த தலைவர். சமைத்து முடித்த பின்பு அவ்வுணவை உண்டார். பின் தம் இல்லக்கிழத்தியாரொடு தனிமையில் இருந்து சிலவற்றை உசாவுதல் செய்தார். அச்செயலுக்கு இடையே, `உடம்பில் இடப் பக்கம் சிறிது நோகின்றது` என்று சொல்லி, அது நீங்குதற்பொருட்டு ஓய்வு கொள்ளுதற்குப் படுத்தார. படுத்தவர் படுத்துவிட்டவரே ஆயினார். மீள எழுந்திருக்கவில்லை.
அன்புடைய மனைவி அவருடன் போகவில்லை. அவர் செல்வமும் போகவில்லை. யாவும் இந்த உடம்பு வாழும் வரைக்கும் இங்கே தொடர்புடையவை போல இருக்கும். எதுவரை வரும்? என்றால், "அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே" என்கிறார் பட்டினத்தார். பணம், பொருள், வீடு எல்லாம் உயிர் இருக்கிற வரைக்கும் அனுபவிக்கலாம். உயிர் போகும் காலத்தில் அவை கூடவர மாட்டா. அவை வீட்டோடு சரி. அன்புடைய மடந்தையராவது கூட வருவார்களா? என்றால், “விழி அம்பு ஒழுக மெத்திய மாதரும் வீதி மட்டே." பெண்கள் சுடுகாட்டுக்குப் போகும் வழக்கம் இல்லை. பிணத்தை எடுத்துக் கொண்டு போகும்போது தெருமுனை வரையில் வருவார்கள். சுடுகாட்டுப் பக்கம் திரும்பியவுடனேயே அவர்கள் திரும்பிப் போய்விடுவார்கள். ஆகவே, பெண்களும் வீதி மட்டுந்தான் வருவார்கள். அப்பா அப்பா என்று விம்மி விம்மி அலறி அழுகின்ற மைந்தர்களாவது கூட வருவார்களா? என்றால், அவர்களும் சுடுகாட்டோடு நின்று விடுவார்கள்; "விம்மி விம்மி இரு கைத்தலம் மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே" நம்மைத் தொடர்ந்து வருவன எவை? "பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே." நாம் செய்கின்ற புண்ணிய பாவ வினைகளே நம்மைத் தொடர்ந்து வரும் என்கிறார் பட்டினத்தார்.
"அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே, விழி அம்பு ஒழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே, விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடுமட்டே,
பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே."
என்பது பட்டினத்தார் அருளிய பாடல்.
இருவினை - புண்ணிய பாவ வினை என்பன உலகிலுள்ள மக்களின் கண்ணுக்குத் தெரியாதவை. அவை உண்டு என்பது, அவற்றின் விளைவாகிய இன்ப துன்பங்களை அநுபவிக்கும்போது உணர்ந்து கொள்ள முடிகிறது.
இரண்டு கம்பிகள் ஒரே மாதிரியாகத்தான் ஒடுகின்றன. ஒரு கம்பியைத் தொட்டால் ஒன்றும் தெரியவில்லை. மற்றொரு கம்பியைத் தொட்டால் அதிர்ச்சி உண்டாகின்றது. இந்த விளைவைக் கொண்டே இதில் மின்சாரம் உள்ளது என்று உணர்ந்து கொள்ள முடிகிறது. கம்பியில் உள்ள மின்சாரம் கண்ணுக்குத் தெரிவது இல்லை. தாக்கும் போதுதான் தெரிகிறது. இரு வினைகளும் இப்படியே அனுபவமாக வந்து தாக்கும் போதுதான் பாவம் புண்ணியம் என்ற உண்மை தெரியும்.
உயிர் போகின்ற கடைசி வழிற, ஒரு தனி வழி. யாரும் உடன் வரமுடியாத தனி வழி. உடம்போடு போகத் துணை உண்டு. உயிரோடு போகத் துணை இல்லை "நும்மை நேடிவரும் தொலையா வழி" என்று அருணகிரிநாதர் சொல்லியிருக்கிறார். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தானாகவே நம்மைத் தேடி வருகிற தொலையா வழி அது. அதில் நீங்கள் பயணம் செல்லும் போது துணை வேண்டுமென்றால், மலை ஆறு கூறுகளாகப் போகும்படி வேலை விடுத்த வேலாயுதப் பெருமானை வணங்கி, ஏற்றவர்களுக்குக் கீரை இருந்தாலும், வெந்தது எது இருந்தாலும பகிர்ந்து கொடுக்கும் நிலையான மாதவத்தைச் செய்ய வேண்டும். அதுதான் தொலையா வழிக்குப் பொதி சோறும் உற்ற துணையுமாக வந்து உதவும்.
ஒரு நாள் இரண்டு நாள் போகக்கூடிய வழியாக இருந்தாலே, 'துணையோடு அல்லது நெடு வழி போகேல்" என்று சொல்வார்கள். உயிர் எத்தனை பிறவிகள் யாத்திரை செய்யப்போகிறதோ தெரியாது. அது போகிற வழியும் தொலையாத நெடு வழி. யாரும் துணைக்கு வர இயலாத தனிவழி. பொன், பொருள், மனைவி, மக்கள் எல்லாம் உயிர் போகின்ற அந்தத் தனி வழிக்குத் துணையாக வரமுடியாது. அவற்றைச் சங்காதம் என்று எண்ணிக் கொண்டிருந்தால் கெட்டுப்போக வேண்டிவரும். உயிரைத் தொடர்ந்து வருவது புண்ணிய பாவ வினைகள்தாம். நம்மிடம் உள்ள பொருள்களை ஏற்பவர்களுக்கு இட்டுப் புண்ணியத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்.
இறைவனுடைய அருளைப் பெற நினைக்கிறவர்களுக்குத் தங்கள் கையிலுள்ள பொருள் பொருளாகத் தோன்றாது. இறைவன் அருளில் பற்று வைத்திருப்பவர்களுக்குப் பொருளிலே பற்று இருக்காது. இறைவன் அருள் உதவி செய்ய வந்தால், பொருள் அறமாக மாறிவிடும். இளையான்குடி மாறனார் என்கிற நாயனார் இருந்தார். அவர் தனது செல்வம் முழுவதையும் சிவனடியார்களுக்கே அமுது படைப்பதில் செலவிட்டுக் கொண்டிருந்தார். என்னிடத்தில் பொருள் இருந்தால் நானும் அறம் செய்வேன் என்று சிலர் கூறுவார்கள். பொருள் வந்தால் செய்ய மாட்டார்கள். இவர்களுக்கு ஓர் உண்மையை உணர்த்த இறைவன் திருவுள்ளம் கொண்டார். மாறனாருக்கு வறுமை உண்டாயிற்று. வீட்டில் வைத்திருந்த நெல்லைக் கொண்டுபோய் அன்று காலையில்தான் விதைத்துவிட்டு வந்தார். மாலையிலே இடி மின்னனுடன் மழை வந்துவிட்டது. கும்மிருட்டுக் காலத்தில் பசியோடு ஒருவர் வந்தார். கொட்டுகிற மழையில்இரவுக் காலத்தில் பசியோடு வந்தார் அவர். நாயனார் வீட்டில் உணவு இல்லை. சமைக்கலாம் என்றால் அரிசி இல்லை. விறகு இல்லை. அத்தனை வறுமை!
அவருடைய வேதனையை ஒரே விநாடியில் உணர்ந்து கொண்டாள் அவருடைய மனைவி. காலையிலே விதைத்த நெல் இந்த மழையில் நிச்சயம் மேலாகத்தான் மிதக்கும். அதுவும் ஒரு பக்கமாக ஒதுங்கிக் கிடக்கும். வயலுக்குப் போய் அதை அரித்துக் கொண்டு வந்தால், அதைக் குத்தி அரிசியாக்கி விரைவில் சமைத்து விடலாம் என்று ஆறுதல் கூறினாள். அவரும் அப்படியே கொட்டுகிற மழையில் கூடையை எடுத்துக் கொண்டு போய் நெல்லை அரித்து வந்தார். விறகு இல்லை. வீட்டில் மேல் இருந்த கூரையிலுள்ள கம்புகளைப் பிரித்துக் கொடுத்துச் சமைக்கச் சொன்னார். காய்கறி ஒன்றும் இல்லை. புறக்கடையில் இளம் பயிராகக் குழியில் ஏதோ இருந்தது. அதை அப்படியே அவசர அவசரமாக அரிந்து கொண்டு வந்தார்.
அவர் குழியிலுள்ள பயிரையா அரிந்தார்? தம்முடைய பாசத்தின் அடிவேரையே அரிந்தார். இதைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் அருமையாகப் பாடுகின்றார்.
"வழிவரும் இளைப்பி னோடும் வருத்திய பசியி னாலே,
அழிவுறும் ஐயன் என்னும் அன்பினில் பொலிந்து சென்று,
குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர் தடவி, பாசப்
பழிமுதல் பறிப்பார் போலப் பறித்தவை கறிக்கு நல்க"
வழி நடந்து வந்த இளைப்போடு, வருத்துகின்ற பசியினாலும் மனம் வருந்தி நிற்பார் எம் ஐயன் என்னும் அன்பினால் மீதூர்ந்தவராய்ச் சென்று குழிகளினின்றும் உயர்ந்து மேற்செல்லாத புன்செய் நிலத்தில் முளைத்திருக்கும் கீரை வகைகளைத் தடவி, அக் கீரைகளில் சிலவற்றைத் தம் பாசத்தின் வேரைக் களைவார் போலப் பறித்துக் கறியமுதுக்குக் கொடுத்தார். சமையல் செய்துவிட்டுத் திண்ணையில் வந்து பார்த்தால் அடியாரைக் காணவில்லை. யாவர்க்கும் மேலான சிவபிரான் சோதி வடிவாய்க் காட்சி தந்து,
"அன்பனே! அன்பர் பூசை அளித்த நீ, அணங்கி னோடும்
என்பெரும் உலகை எய்தி, இருநிதிக் கிழவன் தானே
முன்பெரு நிதியம் ஏந்தி மொழிவழி ஏவல் கேட்ப
இன்பம் ஆர்ந்து இருக்க என்றே அருள்செய்தான்"
என்கின்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். "அடியவனே! அடியவர்களுக்கு வழுவாது வழிபாடு செய்து உணவளித்து வந்த நீ, உன் மனைவியோடும் என்னுடைய பெருமை பொருந்திய சிவலோகத்தை அடைந்து, குபேரனே தனக்கு உரிய நிதிகளைக் கையில் ஏந்தி, உன் ஆணை வழிநின்று நீ பணித்த பணிகளைச் செய்து வர, இன்புற்று இருப்பாயாக என்று யாவர்க்கும் மேலோனாய சிவபெருமான் அருளிச் செய்தார்.
இறைவன் அருளை மனத்தில் வைக்காதவர்களுக்கு தங்கமாகவும் வீடாகவும் பொருளைச் சேர்த்துக் கொள்ளத் தெரியும். மடந்தையர்களுக்காகப் பொருளை அழிக்கத் தெரியும். அவர்களுடைய வீடும் மடந்தையருமா உயிர்போகும் தனி வழிக்குத் துணையாக வருவார்கள்? அத்தகையவர்களைப் பார்த்து இடித்து உரைக்கிறார் அருணகிரிநா"ர். 'நீங்கள் எவற்றை வாழ்க்கைக்கு நலம் செய்யும் என்று சேர்த்து வைக்கிறீர்களோ அவை பிறகு உதவ வருவதில்லை. ஏற்பவர்களுக்கு இட்டதுதான் வரும். அது எப்போது எப்படி வரும் என்று உங்களுக்குத் தெரியாது. எப்படியும் எங்கேனும் வரும். முத்துக்களையுடைய கடலில் வேலை விட்டவனுடைய அருள் போல எங்காயினும் வந்து உதவும். இது சத்தியம்" என்று அருளையும், பொருளையும் இணைத்து ஒர் அறிவுரைப் பாடலை அருள்கிறார் அருணை முனிவர்.
"பொங்கு ஆர வேலையில் வேலை விட்டோன்.அருள் போல்உதவ
எங்காயினும் வரும், ஏற்பவர்க்கு இட்டது, இடாமல் வைத்த
வங்காரமும், உங்கள் சிங்கார வீடும், மடந்தையரும்
சங்காதமோ? கெடுவீர்! உயிர் போம்அத் தனிவழிக்கே!"
இதன் பொருள் ---
நல்வழியில் செல்லாமல் அல்வழியில் சென்று கேட்டினை அடைகின்ற மனிதர்களே! பொங்கி ஆர்ப்பரிக்கின்ற கடலில் வேலாயுதத்தை விடுத்து அருளிய முருகனுடைய திருவருளைப் போல, உங்களிடம் வந்து யாசித்த ஏழைகளுக்கு இட்ட புண்ணியத்தின் விளைவு தப்பாமல் உதவும்பொருட்டு எவ்விடத்திலாயினும் உங்களை நாடி வரும். அப்படி இரந்தவர்களுக்குக் கொடுக்காமல் பெட்டியில் பாதுகாத்து வைத்த பொன்னும், உங்கள் அழகிய வீடும், அழகிய மனைவிமாரும் உயிர் உடம்பை விட்டுச் செல்லும் தனிமையான வழிக்குத் துணை ஆகுமோ?
ஆசைகள் மூன்று என்று சொல்வார்கள். பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை என்பவை அவை. இந்தக் காலத்தில் மண்ணாசை என்பதற்குப் பொருளே வேறாகி விட்டது. நாடு பிடிக்க ஆசைப்படுவது மண்ணாசை. விரிவான நிலங்களை வாங்கிச் சொந்தமாக்கிக் கொள்வதும் மண்ணாசையே. தனக்கென்று வாழும் இடம் ஒன்று பெற விரும்புவதும் மண்ணாசை என்றே கொள்ளலாம். அப்படி வைத்துக் கொண்டால் இங்கே அருணகிரிநாதர் மூவகை ஆசைக்கும் உரிய பொருள்களைச் சொல்கிறார். வங்காரத்தில் உள்ள விருப்பம் பொன்னாசை, சிங்கார வீட்டில் மேலுள்ள ஆசை மண்ணாசை, சிங்கார மடந்தைபால் உள்ள பற்று பெண்ணாசை.
அறம் செய்யாத பொருளும், அதனால் உண்டான போகமும், உயிர் பிரிந்து போகும்போது துணையாக வரமாட்டா. இறைவன் திருவருள் போல் தவறாமல் வந்து உதவுவது, ஏற்பவர்க்கு இட்டதே ஆகும்.
No comments:
Post a Comment