கல்விச் செல்வம்


கல்விச் செல்வம்

-----

செல்வங்கள் பலவற்றுள் கல்வியும் ஒருவகை. இதனை, "கேடு இல் விழுச் செல்வம்" என்கிறார் திருவள்ளுவ நாயனார். "கேடு இல்லாத சிறந்த செல்வம்" என்பது இதன் பொருள். பிற செல்வங்கள் கேட்டையும் விளைவிக்கும் என்பது இதனால் விளங்கும். பொன், பொருள், நிலம் முதலிய பிற செல்வங்கள் நீராலும் நெருப்பாலும் அழியக் கூடியன. திருடு போகவும் வாய்ப்பு உண்டு. ஆனால், கல்விச் செல்வமோ வெள்ளத்தால் அழியாது, வெம்மையான நெருப்பில் வேகாது, கொள்ளையிட முடியாது, கொடுத்தாலும் குறையாது. இவ்வுலகிலுள்ள செல்வங்களில், பங்காளிகளால் பங்கிட்டுக் கொள்ள முடியாத ஒரே செல்வம் கல்விச் செல்வமே ஆகும்.

"வெள்ளத்தால் அழியாது, வெந்தணலால்

வேகாது, வேந்த ராலும்

கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும்

நிறைவு ஒழியக் குறைபடாது,

கள்ளத்தார் எவராலும், களவாட

முடியாது, கல்வி என்னும்

உள்ளத்தே பொருள் இருக்க உலகெங்கும்

பொருள்தேடி உழல்வது என்னே."

என்னும் தனிப்பாடல் இதனை விளக்கி நிற்கும்.


"கடல் உலகில் உற்றபொருளுக்கு உள்ளே நன்மைதரு

கல்வி நிலைபெற்ற பொருளாம்,

கனலினால் உருகாது, புனலினால் கரையாது,

கள்ளரால் திருட ஒ(ண்)ணாது,


திடமான ராசாதி ராசராலும்.அதைத்

தீண்டிச் சிதைக்க ஒ(ண்)ணாது,

செயல்மிக்க மாதரால் சேதம் ஆகாது,ஒருவர்

செலவிடில் குறைவு உறாதாம்;


அடம் மிகு சகோதரர்க்கு இடம் அது கொடாது, அதனை

அளவிடவும் முடியாது காண்,

அப் பொருளினைப் பெறாது இப்புவியில் அலைகின்ற

அற்பர் உறு பயன் என்கொலோ? --- தனிப்பாடல்.

ஒரு நாட்டின் மன்னனுக்குப் பிற நாடுகளில் அவ்வளவு சிறப்பு இராது. ஆனால், கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. ஒரு மன்னன் இடத்திலுள்ள செல்வங்கள் அனைத்தினுக்கும் மேலாக, கற்றவன் இடத்திலுள்ள கல்விச் செல்வம் ஒன்றே உயர்ந்து காணப்படும் என்பதை அறிவுறுத்த,

"மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் 

மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-மன்னற்குத் 

தன்தேயம் அல்லால் சிறப்பு இல்லை, கற்றோர்க்குச் 

சென்றஇடம் எல்லாம் சிறப்பு"

ஔவைப் பிராட்டியார் "மூதுரை" என்னும் நூலில் இவ்வாறு பாடி உள்ளார்.

பிற செல்வங்கள் ஒருவனிடம் சேர்ந்தால், அவனிடம் நிலைத்து நில்லாமல் அவனை விட்டு விலகி ஓடிப்போய் விடும். கல்விச் செல்வம் ஒருவனை அடைந்துவிட்டால் வாழ்விலும் தாழ்விலும் மட்டுமல்லாமல், சாவிலும் உடனிருந்தே அழியும். பொருட்செல்வத்தை அதனைப் பெற்றவன் வழிநடத்த வேண்டும். ஆனால், கல்விச் செல்வம் தன்னை உடையவனை வழி நடத்தும். 

கல்விச் செல்வத்தைப் பெற்ற குடும்பத்தில் பிறந்த பிள்ளைகளுக்குச் சில தலைமுறை வரையிலாவது அந்த மணம் கமழ்ந்து கொண்டிருக்கும். பிற செல்வங்களைப் பெற்ற குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு அச் செல்வம் அடுத்த தலைமுறை வரையிலாவது நிலைத்திருக்கும் என்பது உறுதியில்லை.

பிற செல்வங்களைத் தேடிப் பயன் பெற்று மகிழ்ச்சியோடு வாழவேண்டுமானால், ஒருவன் கல்விச் செல்வத்தையும் பெற்றிருத்தல் வேண்டும். கல்விச் செல்வம் ஒன்று இல்லாமல் வேறு எத்தகைய செல்வத்தை ஒருவன் புற்று இருந்தாலும், அதனால் முழுப்பயனை அடைய முடியாது. துன்பத்தை அடையவும் நேரிடும். 

கல்வியே மக்கட்குத் தேடிவைக்கத் தக்க அழியாத செல்வம் என்கிறது நாலடியார்,

"வைப்புழிக் கோள்படா; வாய்த்து ஈயின் கேடுஇல்லை;

மிக்க சிறப்பின் அரசர் செறின் வவ்வார்;

எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன

விச்சைமற்று அல்ல பிற."

சேர்த்து வைத்த கல்வியறிவை யாரும் திருடிக் கொண்டு போய்விட முடியாது. பிறருக்கு வழங்குவதாலும் கல்விச் செல்வமானது குறையாமல் வளரவே செய்யும். மிகச் சிறந்த எலிமை மிக்க அரசர்களானாலும் ஒருவனது கல்விச்செல்வத்தைப் போரிட்டுப் பெற்று விட முடியாது. தனக்குப் பின்னர் வரும் சந்ததியினருக்கு மிச்சம் என ஒருவன் வைத்துவிட்டுச் செல்ல வேண்டியது கல்விச் செல்வமே தவிர வேறுஏதும் இல்லை.

செல்வந்தர் முன்னே வறியவன் நிற்பது நாம் காணக் கூடிய காட்சியே. ஆனால் கற்றவர் முன்னே கல்லாதான் நிற்பது காணச் சகியாத காட்சியாகும். உழைக்கும்போது மாடுகளின் முன்னே மக்களை வைத்து ஒப்பு நோக்குதலும் உண்டு. 'மாடுபோல் உழைக்கின்றான்' என்று உழைப்பாளி ஒருவனைக் குறிப்பிடுவது உலகியலில் காணலாம். ஆனால், கல்லாதவன் முன்னே கற்றவரை வைத்து ஒப்பு நோக்குதல் எங்கும் எப்போதுமில்லை. விதைக்காதபோது விளைவு இல்லை. சமைக்காதபோது உணவு இல்லை.  உழைக்காதபோது பலனும் இல்லை. அதுபோலவே, கல்லாதபோது ஒருவனுக்குச் சிறப்பும் இல்லை.

தோண்டாத மணலுக்குள் நீர் மறைந்திருப்பது போலக் கல்லாதார் உள்ளத்தில் அறிவும் மறைந்திருக்கிறது. தோண்டத் தோண்ட நீர் சுரப்பது போல் கற்கக் கற்க அறிவும் சுரக்கிறது. எந்த அளவிற்குத் தோண்டினாலும் அந்த அளவிற்கு நீர் நிரம்பிக் காணப்படுவது போல, எந்த அளவிற்குக் கற்றாலும் அந்த அளவிற்கு அறிவும் நிரம்பிக் காணப்படும். "தொட்ட அனைத்து ஊறும் மணல்கேணி, மாந்தர்க்குக் கற்ற அனைத்து ஊறும் அறிவு" என்றார் திருவள்ளுவ நாயனார்.

எல்லோரிடத்திலும் அறிவு புதைந்து உள்ளது. அறிவு இல்லாதவர் என்று எவரும் எங்கும் இல்லை. ஆனால், அதை  விளங்கச்செய்ய வேண்டும். கல்விச்செல்வத்தாலேயே ஒருவனது அறிவு விளக்கம் பெறும். இது ஒன்று. மற்றொன்று பட்டறிவு எனப்படும் அனுபவம். பட்டுப் பட்டு அறிவை வளர்க்கப் பல ஆண்டுகள் வேண்டும். ஆனால் கல்வி கற்று அறிவை வளர்க்கச் சில நாட்கள் போதும்.

கல்விச் செல்வம் கடல் போன்று பரந்து விரிந்ததொரு பெருஞ்செல்வம் ஆகும். ஒருவன் வாழ்நாள் முழுதும் படிப்பினும் அதனை முழுதும் பெற்றுவிட முடியாது. இவ்வுலகிலுள்ள மக்களின் கல்விச் செல்வத்தை நூறில் ஒரு பங்கு பெற்றவர் ஆயிரத்தில் ஒருவர்கூட இல்லை எனலாம். "கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு" எனக் கலைமகள் கூறுவதாகத் தெய்வத் தமிழ்மகள், ஔவைப் பிராட்டி கூறுகிறார்.

கல்லாத மக்களிடத்தும் சில பொழுது அறிவு காணப்படும். எனினும், அது குட்டைகளில் தேங்கிக் கிடக்கும் கலங்கிய நீர் போன்றது. கற்றவருடைய அறிவு ஆறுகளில் ஊறிச் சிலுசிலுத்து ஒடுகின்ற தெளிந்த நீரைப் போன்றது. கல்வி வேறு, அறிவு வேறு என்பதை ஒப்புக் கொண்டால், கற்றவனுடைய அறிவு வேறு, கல்லாதவனுடையறிவு வேறு என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கற்றவரும் கல்லாதவரும் மக்களே. கற்களிலும், வயிரக்கல், கருங்கல் என்று இருப்பது காணலாம். கற்றவர்கள் வயிரக்கல் போன்றவர்கள். கல்லாதவர்கள் கருங்கல் போன்றவர்கள்.

"என் மகன் படிக்கவில்லை. எனக்கு இரண்டு எருமைகள் உள்ளன. அவற்றை மேய்த்துக் கொண்டிருக்கிறான்” என்றான் ஒருவன். அதைக்கேட்ட கவிராச பண்டிதர் செகவீர பாண்டியனார் அவர்கள், "இனி இரண்டு என்று எவரிடமும் கூறாதே, உனக்கு மூன்று எருமைகள் உள்ளன என்றே கூறு" என்று கூறினாராம். பாவம் கல்லாத மக்கள் பொல்லாத விலங்குகள் என்பது அவரது கருத்து போலும்.

கல்விச் செல்வத்தை முதுமையில் முயன்றாலும் பெற முடியாது. அது இளமையில் பெறவேண்டிய ஒன்று. முதுமையில் ஒருவன் பெறவேண்டிய செல்வங்கள் அனைத்திற்கும் இது உற்ற துணையாக இருக்கும். முதுமையிற் கல்வி முயன்றாலும் வராது.. வந்தாலும் தங்காது. 

பதின்பருவத்தில் இருக்கிற பிள்ளைகள், ஏதேனும் ஒரு செயலைக் கவனக்குறைவின் காரணமாக ஒழுங்காகச் செய்யாமல் குழப்பிவிடும்போது, ‘இன்னும் சின்னப் பிள்ளையா நீ? இவ்வளவு வளர்ந்தும் பொறுப்பு வரவில்லையே?’ என்று பெரியவர்கள் கடிந்து கொள்வார்கள். பெற்றவர்கள், பொறுப்பு என்னும் தலைச்சுமையைப் பிள்ளைகள்மேல் சுமத்தத் தொடங்கும் பருவம் அது. சுமந்து பழகத்தான் வேண்டும். அவ்வாறு பொறுப்பைப் பழக்கிவிடாத பெற்றோரைப் பின்னாளில் பிள்ளைகளே திட்டுவதாக அமைந்தது பின்வரும் பழம்பாடல் ஒன்று.

"அள்ளிக் கொடுக்கின்ற செம்பொன்னும் ஆடையும் ஆதரவாக்

கொள்ளிக்கும் பட்ட கடனுக்கும் என்னைக் குறித்தது அல்லால்,

துள்ளித் திரிகின்ற காலத்தில் என்றன் துடுக்குஅடக்கிப்

பள்ளிக்கு வைத்திலனே தந்தை ஆகிய பெரும் பாதகனே."

"என் தந்தை எனக்கு அள்ளி அள்ளிப் பணத்தைக் கொடுத்தார். புத்தாடைகளை வாங்கிக் கொடுத்தார். "நான் பெற்றது பிள்ளை அல்ல, யாருமே காணாத பெரும்பேறு" என்று என்னைத் தலைமேல் வைத்துக் கொண்டாடினார். நானும் துள்ளித் திரிந்தேன். ஆனால் அவர் எனது துடுக்கை அடக்கவில்லை. பொறுப்பானவனாக வாழ முடியவில்லை. ஒட்டியும் முட்டியும் வாழ ம் க்கவில்லை. அடப் பாதகத் தந்தையே! வெறும் கொள்ளிக்கும் கடனுக்குந்தானா என்னைப் பிள்ளை என்று பெற்றாய்?"

"இளமையிற் கல்" என்பது ஒளவையின் வாக்கு. " பிறவி எடுத்த தனக்குப் பாழ் கற்று அறிவில்லா உடம்பு" என்கிறார் விளம்பி நாகனார். இளமையிற் கல்வியை இழந்தவன், கண்களையும் இழந்தவன் ஆவான். "கற்றவன் முகத்திலிருப்பதே கண்; மற்றது புண்" என்பது திருவள்ளுவ நாயனார் கண்ட உண்மை. 

"கண்டதைப் படித்தவன் பண்டிதன் ஆவான்" என்பது ஒரு வழக்குமொழி. கண்டதை எல்லாம் படிப்பவன் பண்டிதன் ஆகமுடியாது. அறிவை விளங்கச் செய்கின்ற நல்ல நூல்கள் எவையெவை என்பதைக் கண்டு, அவற்றைப் படித்தால் ஒரு வன் பண்டிதன் ஆகலாம் என்பதே உண்மை. எனவே, அட்டைப் பகட்டுடன், வணிக நோக்கத்தோடு வருகின்ற நூல்களைப் படிக்காமல், மனத் தடுமாற்றத்தைப் போக்கி, நல்லறிவை வளர்க்கின்ற அறிவு நூல்களையே படிக்க வேண்டும். படிக்க வேண்டியவை அறிவு நூல்களே. பொழுதுபோக்குக்காகப் படித்தால், பொழுதுதான் போகும். அறிவு விளங்காது. படித்து அறிந்தவைகளைச் சிந்தித்து உணர வேண்டும். நல்லதைக் கொள்ள வேண்டும். பின் அப்படியே நடக்க வேண்டும். உள்ளத்தில் படிந்து உள்ள கசடுகள் நீங்கத் துணை செய்கின்ற நூல்களையே படிக்கவேண்டும். படித்தவற்றை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்.

"கல்வி" என்னும் அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "ஒருவன் கற்கவேண்டிய நூல்களைக் கற்வேண்டும்; கற்பனவற்றைக் குற்றம் நீங்கக் கற்கவேண்டும்; அவ்வாறு கற்றுத் தேர்ந்தபின், அதற்குத் தகுந்தவாறு ஒழுகுதல் வேண்டும்" என்றார் திருவள்ளுவ நாயனார். "கற்க கசடு அறக் கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக" என்பது திருக்குறள்.

அதாவது, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களையும் உணர்த்தும் நூல்களை அன்றி, சிற்றின்பம் தரும் நூல்களைப் பயிலுதல் கூடாது. உயிர்கள் தமது வாழ்நாளில் சிலவே பிழைத்து இருப்பன. அவற்றுள்ளும், பல, நோய்களை அடைந்து துன்றுபுவனவாக உள்ளன. உயிர்களுக்குச் சிற்றறிவும் உள்ளதால், சிற்றின்பத்தைப் பயக்கும் நூல்களில் மனம் செல்லுமாயின், கிடைத்தற்கு அரிய வாழ்நாள் பயனற்றுக் கழிந்து, பிறப்பின் பயனை அடைய முடியாமல் போகும்.

"அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்று நன்னூல் கூறும். அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களைப் பயக்கும் நூல்களையும் ஆசிரியரிடத்தில் கற்குங்காலையில், நூல்களின் பொருளை ஒன்றை ஒன்றாக எண்ணிக் கொள்ளுகின்ற விபரீதமும், இதுவோ அதுவோ என்னும் ஐயப்பாடும் நீக்கி, உண்மைப் பொருளை உணர்ந்து, உணர்ந்த வழியில் நிற்கின்ற பலரோடும் பல காலமும் பழகி வந்தால், உள்ளத்தில் உள்ள குற்றம் அகலும். 

கற்ற வழியில் நிற்றல் என்பது, இல்லறத்தில் வழுவாது நின்று, மனைவியோடு போகம் புசித்து, கெடுதல் இல்லாத அறங்களைச் செய்து வருதல் ஆகும். இல்லறத்தில் இருந்து நீங்கி, துறவறத்தில் நின்றவரானால், தவத்தினால் மெய்ப்பொருளை உணர்ந்து, அவா அறுத்து, சிறிதும் குற்றப்படாமல் ஒழுகுதல் வேண்டும். இதனால், மக்கள் அனைவரும் கற்கவேண்டிய நூல்களைக் கற்கவேண்டும் என்பதும், கற்கும் முறை இது என்பதும், முறைப்படி கற்ற பின்னர் ஒழுகும் முறை இது என்பதும் அறிவிக்கப்பட்டது.

கல்வி என்பதை, அறிவுக்கல்வி, தொழிற்கல்வி, ஆன்மீகக்கல்வி என்பதாக வகைப்படுத்திக் கொள்ளலாம். மக்கள் பிறப்பு சில்நாள், பல்பிணி, சிற்றறிவு உடையவை என்பதால், அவர் எவ்வாறு கற்றல் வேண்டும் என்பது, பின்வரும் நாலடியார் பாடல்களால் தெளியப்படும்.

"கல்வி கரையில! கற்பவர் நாள்சில;

மெல்ல நினைக்கின் பிணிபல; - தெள்ளிதின்

ஆராய்ந்து அமைவு உடைய கற்பவே, நீர் ஒழியப்

பால்உண் குருகின் தெரிந்து."   

இதன் பொருள் ---

கல்விகள் அளவில்லாதன. ஆனால், கற்பவர் வாழ்நாட்களோ சில ஆகும். சற்று அமைதியாக நினைத்துப் பார்த்தால் அச் சில வாழ்நாட்களில் பிணிகள் பலவாய் இருக்கின்றன. நீர் நீங்கப் பாலை உண்ணும் பறவையைப் போல, பொருத்தமுடைய நூல்களைத் தெரிந்து அவற்றைத் தெளிவுகொள்ள ஆராய்ந்து கற்பார்கள்.

"அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது,

உலகநூல் ஓதுவது எல்லாம், - கலகல

கூஉந் துணை அல்லால், கொண்டு தடுமாற்றம்

போஒந் துணை அறிவார் இல்."

இதன் பொருள் ---

அளவு அமைந்த கருவிக் கல்வியினால் ஞானநூல்களைக் கற்று மெய்ப்பயன் பெறாமல் உலக வாழ்வுக்குரிய வாழ்க்கை நூல்களையே எப்போதும் ஓதிக் கொண்டிருப்பது,  கலகல என்று இரையும் அவ்வளவே அல்லால், அவ்வுலக நூலறிவு கொண்டு பிறவித் தடுமாற்றம் நீங்கு முறைமையை அறிகின்றவர் எங்கும் இல்லை.

"இற்றைநாள் கற்றதும் கேட்டதும் போக்கிலே போகவிட்டுப் பொய் உலகன் ஆயினேன், நாயினும் கடையான புன்மையேன்" என்றும்,  "ஆடித் திரிந்து நான் கற்றதும் கேட்டதும் அவலமாய்ப் போதல் நன்றோ?" என்றும் இரங்கிய தாயுமான அடிகளார் பாடி அருளிய பாடல்களின் கருத்தினை உள்ளத்து இருத்துதல் வேண்டும்.

கல்வியின் குறிக்கோள் அறிவை அடைவது மட்டுமல்ல: அன்பையும் அருளையும் பண்பையும் ஒழுக்கத்தையும் பெற்று நல்வாழ்வு வாழ்வதும் ஆகும். எனவே, அழியாத கல்விச் செல்வத்தை நமது சந்ததியினர் இளமையிலேயே பெறத் துணை நிற்போம். கற்றதுபோதும் என்று நிறுத்திக் கொள்ளாமல், வாழ்நாளின் இறுதி வரை கற்றுக் கொண்டே இருப்போம். "ஒருமைக்கண் தாம் கற்ற கல்வி, ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து" எனத் திருவள்ளுவ நாயனார் அருளியதைக் கருத்தில் கொண்டு, எக்காலத்தும் அழியாத கல்விச்செல்வத்தைப் பெற்று வாழ்வோம்.

கல்லாமையால் உண்டாகும் கேடுகளை விளக்க, "கல்லாமை" என்னும் ஓர் அதிகாரத்தை வைத்து, அதன் இறுதியில், அறிவு துலங்கும் நூல்களைக் கற்றவர்களையே மக்கள் என்றும், கல்லாதவர்களை விலங்கு என்றும் காட்டி, "விலங்கொடு மக்கள் அனையர், இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்" என்று திருவள்ளுவ நாயனார் அருளி இருத்தலைக் கருத்தில் கொள்க.


No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...