கற்பன விட்டேன் - கழல் பணிந்தேனே

 



கற்பன விட்டேன், கழல் பணிந்தேனே.

-----


உடலுக்கு உறுதியைத் தந்து, அதனைப் பேணுவதற்காக உணவை உண்ணுகின்றோம். உண்ணும்போது, உடலுக்கு உறுதியைத் தந்து, உள்ளத்து உணர்வைத் தெளிவிக்கின்ற உணவையே உண்ணவேண்டும். சுவை கருதி, கண்ட கண்ட உணவை எல்லாம் உண்டால் கேடு நிச்சயம். நாம் உண்ணும் உணவானது, மூன்று வகைகளில் செயல்படும். ஒன்று, உடலுக்கு வளமையைத் தரும். உள்ளத்தில் நல்லுணர்வை மிகுக்கும். எஞ்சியது சக்கையாகக் கழியும். உடலுக்கு வளத்தைத் தந்து, உள்ளத்தில் நல்லுணர்வு மிகவில்லையானாலும், உண்ட உணவு செரிமானம் ஆகி, சக்கையானது கழியாமல் இருந்தாலும் நல்லதல்ல. 


கள்ளை விரும்பி ஒருவன் உண்பானானால், அவனது உடல் தளர்கின்றது. உள்ளம் நல்லுணர்வை இழக்கின்றது. எஞ்சியது சிறுநீராக வெளியேறுகின்றது. அதுபோலவே, நல்ல உணவை உண்டால், அது உடலை வளப்படுத்தி, உணர்வைச் செம்மைப்படுத்தும்.


அதுபோலத்தான், நல்லறிவைப் புகட்டுகின்ற நூல்களை ஓதி, நல்லறிவு பெறுதல் வேண்டும். அட்டைப் பகட்டுடன் வெளிவந்து அறிவை மயக்குகின்ற நூல்களைப் படித்தல் கூடாது. அறிவு விளக்கம் பெறவேண்டும் என்பதற்காகவே, கல்வியைக் கற்கின்றோம். கற்ற கல்வியைப் பழுதற ஓதி, தெளிவு பெற்று, அறிவைப் பெருக்கிக் கொள்வதோடு, விளக்கிக் கொள்ளவும் வேண்டும். கல்வி, அறிவு, ஒழுக்கங்களால் மேன்மை பெற்ற பெரியோரை நாடி இருந்து, கல்வியின் பயனைப் பெற்றுக் கொள்ளவேண்டும். அறிவு விளங்கவில்லையானால், கற்ற கல்வியால் பயன் இல்லை.


பறவைக்குச் சிறகு போல், மனிதனுக்குக் கல்வி தேவைப்படுகின்றது. கல்வி அறிவு இல்லாதவன் சிறகு இழந்த பறவை போல, வலிமை இழந்து மடிவான். கண் இருந்தும், குருடனாய், காது இருந்து செவிடனாய், கால் இருந்தும் முடவனாய், உயிர் இருந்தும் சடமாய் இழிந்து போவான்.


பிறவியாகிய பெருங்கடலில் வாழும் உயிர்கள், ஆசாரியனாகிய மீகாமனோடு கூடிய சாத்திரமாகிய கப்பலில் ஏறவேண்டும். ஏறினால் முத்தியாகிய கரை ஏறலாம். உலகிலே உள்ள நூல்கள் யாவும் நம்மை உய்விக்காது. கற்கத் தகுந்த நூல்களையே கற்கவேண்டும். அதனாலேயே, திருவள்ளுவர் "கற்க கசடற கற்பவை" என்றனர். அறிவு நூல்களாவன  அருள் நூல்களும், ஞான சாத்திரங்களும், தோத்திர நூல்களும் ஆகும். அவை நமது அறவை விளக்க வந்தவை.  நூல்களை ஓதுவதன் பயன் வீடுபேற்றை அடைவதே ஆகும். எனவே தான், "அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்றது நன்னூல்.


அநபாயன் என்ற சோழ மன்னன், சீவகசிந்தாமணி என்ற அவநூலைப் படித்தபோது, அமைச்சராகிய சேக்கிழார் அடிகள், "மன்னர் பெருமானே! இது அவநூல். இதனை நீ பயில்வதனால் பயனில்லை. சிவநூலைப் படிக்கவேண்டும். கரும்பு இருக்க இரும்பு கடித்தல் கூடாது" என்று தெருட்டினர். 


அட்டைப் பகட்டுடன் கூடி வெளிவந்து உலாவும், அறிவை மயக்கும் நூல்கள் பல.  அறநெறியைத் தாங்கி நிற்கும் நூல்கள் சில. அறநெறியைத் தாங்காத நூல்களை வாங்கிப் படிக்காமல்,  ஆன்றோர்கள் அருளிய கூறிய அறிவு நூல்களைப் படித்து நலம் பெறுதல் வேண்டும்.


திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்திக் கூறியது "கற்க கசடற கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக".  இதற்குப் பரிமேலழகர் பெருமான் கண்டுள்ள உரையையும் நன்கு சிந்திக்கவும். "கற்பவை என்பதனால், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் உணர்த்துவன அன்றி, பிற பொருள் உணர்த்துவன, சின்னாள், பல்பிணி, சிற்றறிவினர்க்கு ஆகாது”. "கசடு அறக் கற்றலாவது, விபரீத ஐயங்களை நீக்கி, மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல்”.


பிறவியை நீக்க வேண்டின் ஒருவன் செய்ய வேண்டியது என்ன என்பதனை "அறநெறிச்சாரம்" என்னும் நூல் உணர்த்துவது காண்க.


"மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய

பிறஉரையும் மல்கிய ஞாலத்து, --- அறவுரை

கேட்கும் திரு உடையாரே பிறவியை

நீக்கும் திரு உடையார்."


இதன் பொருள் ---


பாவத்தினை வளர்க்கும் நூல்களும்,  ஆசையினை வளர்க்கும் நூல்களும், பிறவற்றினை வளர்க்கும் நூல்களும், கலந்து நிறைந்த உலகில், அறத்தினை வளர்க்கும் நூல்களைக் கேட்கின்ற நற்பேற்றினை உடையவர்களே பிறப்பினை நீக்குதற்கு ஏற்ற, வீட்டுலகினை உடையவர் ஆவர்.


பொன்னை வாங்குவோன், அதனை நிறுத்தும், அறுத்தும், சுட்டும், உரைத்தும் பார்த்து வாங்குதல்போல, அறநூல்களையும் பலவற்றாலும் ஆராய்ந்து தேடி,  பிறவியினை நீக்கும்படியான உண்மை நூல்களைத் தேர்ந்து கொள்ளுதல் வேண்டும். கண் சென்று பார்த்ததையே விரும்பி, அதுவே உண்மை எனக் கற்றால், உண்மை நூலை அடைய இயலாது.


கற்றதனால் ஆய பயன் கடவுளைக் கருதுவதே ஆகும். கற்றதும் கேட்டதும் கொண்டு, கற்பனை கடந்த காரணனைக் கசிந்து உருகி நினைந்து உய்தல் வேண்டும். அவ்வாறு இறைவனை நினைந்து நெஞ்சம் நெகிழாது, சிறிது படித்த மாத்திரத்தே தலை கிறுகிறுத்து, தற்செருக்கு உற்று தன்னைப் போல் படித்தவரிடம் தர்க்கித்து மண்டையை உடைத்து வறிதே கெடும் வம்பரை இடித்துரைக்கின்றனர் தாயுமான அடிகளார்.


"கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காக?

கடபடம் என்று உருட்டுதற்கோ? கல்லால் எம்மான்

குற்றம்அறக் கைகாட்டும் கருத்தைக் கண்டு

குணம் குறி அற்று இன்பநிலைகூட அன்றோ."  --- தாயுமானார்.


"அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது,

உலகநூல் ஓதுவது எல்லாம், - கலகல

கூஉந் துணையல்லால், கொண்டு தடுமாற்றம்

போஒம் துணை அறிவார் இல்." --- நாலடியார்.


ஆய்ந்து அறிந்து நல்ல அறிவு நூல்களைக் கற்காது, இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான நூல்களைப் படிப்பது எல்லாம், இவ்வுலகில் கலகல எனக் கூவித் திரியும் ஆரவார வாழ்க்கைக்கு உதவலாமே அல்லாது, அந்த நூல்கள் பிறவித் துயரில் தடுமாறும் துன்பத்தில் இருந்து விடுபடத் துணையாக மாட்டா.


வாய் என்பது எல்லா உயிர்களுக்கும் உள்ளது. உணவை உண்டு உயிரை வளர்க்க இறைவன் தந்த கருணை அது. பிற உயிர்கள் எவற்றாலும் பேச முடியாது. வாயினால் உணர்வை வெளிப்படுத்த முடியாது. அது மனிதப் பிறவி ஒன்றுக்கே கிடைத்தது. அந்த வாயைக் கொண்டு, உணவை உண்டு உடல் கொழுப்பதற்கு மட்டும் பயன்படுத்துவதும், வீண் பேச்சுக்களைப் பேசி வினையைப் பெருக்குவதும் கூடாது. இறைவன் திருப்புகழைப் பாடித் துதிப்பதற்கு அமைந்த கருவி வாய் ஆகும் என்பதை உணர வேண்டும்.


கசப்பு, உறைப்பு, துர்ப்பு, குளிப்பு, இனிப்பு, உவர்ப்பு என்னும் ஆறுவகைச் சுவைகளையும் நுகர்ந்து இன்புறுவது நாக்கு அல்ல. தவறாமல் காமம் வெகுளி மயக்கங்களை வென்ற இறைவனுடைய சிவந்த திருவடிகளை எப்போதும் மிக்க விருப்பத்தோடு நின்று துதிப்பதுவே நாக்கு ஆகும் என்கின்றது "அறநெறிச்சாரம்".


மனம், உயிரை வளப்படுத்தும் தலைவாயில். மனத்தின் வாயிலாகத்தான் உயிர், சிறப்பினையோ அல்லது இழிவினையோ அடைகிறது. மனம் ஒயாது தொழிற்படும் இயல்பினை உடையது. உறக்கத்தில் கூட அது தொழிற்படும். அதன் தொழில் இயக்க விரைவுக்கு ஏற்றவாறு அதற்கு நன்னெறிகளை நற்பணிகளை வழங்காவிடில், அது சைத்தானாக மாறித் தொல்லை கொடுக்கும்.


மனத்தை நற்சிந்தனையில், நற்செயலில் பழக்கப்படுத்தி விட்டால் அதைவிடச் சிறந்த துணை வேறு இல்லை. மனத்தை நறுமணமிக்க மலர்ச் சோலையாகவும் ஆக்கலாம். நரகமாகவும் ஆக்கலாம். இதற்கு ஆற்றலுடைய மனத்தை நெறிப்படுத்தி நினைப்பிக்கவே வழிபாட்டு முறைகள் தோன்றின.


இறைவனை நாள்தோறும் மனதாரத் துதித்து வழிபடவேண்டும். எவ்வளவு நாள் நாம் வாழ்வோம் என்பதோ, எப்போது சாவோம் என்பதோ நமக்குத் தெரியாது. இந்த நாள் நம்முடைய நாள். எனவே, விடிந்தவுடன் இறைவனைத் துதித்து வழிபடவேண்டும்.


இந்த ஞானமானது, நூல்களைப் படிக்கத் தொடங்கிய உடனே வந்து விடாது. "கல்வி கரை இல" என்றார் ஔவையார். கல்வி என்பது கரை இல்லாத கடலைப் போன்றது. கடலில், பலவகையான உயிரினங்கள் வாழ்வது போல, கல்வி என்னும் கடலில் பலவகையான நூல்கள் உள்ளன. நூல்களிலும் பல பிரிவுகள் உள்ளன. எல்லை காணப்படாததாய் உள்ளதால், அவற்றின் எல்லையைக் கண்டுவிட வேண்டும் என்னும் வேட்கை மீதூரப்பட்டு, பல நூல்களையும் ஆரய்ந்து கற்கத் தோன்றும். கடல் நீரை உண்டால், தாகவிடாய் தீராது. அது போல நூல்கடலால், அறிவு விடாய் தீராது. எனவே, "கல்வி என்னும் பல்கடல் பிழைத்து" என்றார் மணிவாசகர்.  கற்ற கல்வியைக் கொண்டு வாதம் புரிந்து மலைத்தல் கல்வியாளர்களின் நிலை. அதிலிருந்து தப்பிப் பிழைத்து உய்யவேண்டும் என்பதால் இவ்வாறு கூறினார்.


கல்வியாளரகள் தான் இப்படி என்றால். சமயவாதிகள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. "சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்பார் மணிவாசகனார். மேலும்,


"உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரமாம்

சவலைக் கடல் உளனாய்க் கிடந்து, தடுமாறும்

கவலைக் கெடுத்து, கழல் இணைகள் தந்து அருளும்

செயலைப் பரவி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ"


என்றும் பாடினார் மணிவாசகப் பெருமான்.


"சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள்,

     சமய பஞ்ச பாதகர் ...... அறியாத,

தனிமை கண்டது ஆன, கிண் கிணிய தண்டை சூழ்வன,

     சரண புண்டரீகம் ...... அது அருள்வாயே."


என்றார் அருணகிரிநாதப் பெருமான்.


சமயவாதிகள் தத்தம் சமயமே சிறந்தது என்று கூறிப் பிற சமயத்தைப் பழித்தும், கடல் போல முழங்கி வாதிட்டும் போரிடுவர். அத்தகைய சமயவாதம் கூடாது. சமய வாதத்தால் இறைவனை உணர முடியாது. "சமயவாதிகள் பெற அரியது" என்றார் பிறிதொரு திருப்புகழில். "கலகல எனச்சில் கலைகள் பிதற்றுவ" என்பார் அடிகள் பிறிதொரு திருப்புகழில். சமயநூல்கள், உயிரானது மெய்ஞ்ஞானத்தைப் பெற்று, ஞானமே வடிவாகிய இறைவன் திருத்தாளை அடைந்து, தன் செயல் ஏதும் இன்றி, சிவானந்தத் தேனை அனுபவிக்கும் நிலைக்கு உரியவை. வாதம் புரிவதற்கு அல்ல.


பதிஞானம் என்னும் இறைஞானத்தைப் பெறாதவர்கள், சமய நூல்களால் பெற்ற அறிவையே தமது அறிவு என்று கொண்டு, தம்மைத் தாமே உவந்துகொண்டும், பிறரைக் காய்ந்து கொண்டும், ஏற்றத் தாழ்வுகளைத் தமது அறிவிற்கு ஏற்றவாறு கற்பித்துக் கொண்டும், கலகமிட்டுத் திரிவர். எனவே, "கற்றாரை யான் வேண்டேன்" என்றும், "இதுவரையில் கற்றதும் போதும்" என்றும், புலம்பினார் மணிவாசகப் பெருமான்.


உற்றாரை யான்வேண்டேன்; ஊர்வேண்டேன்; பேர்வேண்டேன்;

கற்றாரை யான்வேண்டேன்; கற்பனவும் இனியமையும்;

குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரைகழற்கே

கற்றாவின் மனம்போலக் கசிந்து உருக வேண்டுவனே.


இதன் பொருள் ---


திருக்குற்றாலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற கூத்தப்பெருமானே! உறவினரை நான் விரும்பவில்லை. வாழ்வதற்கு ஊரை விரும்பவில்லை. புகழை விரும்பவில்லை. (வேறு பற்று எனக்கு இல்லை) கல்வியை மட்டும் கற்றவரை நான் விரும்பவில்லை. கற்க வேண்டிய கல்விகளும் இனி எனக்குப் போதும். உனது ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடிக்கே, கன்றை உடைய பசுவினது மனத்தைப் போல, கனிந்து உருகுவதை நான் உன்பால் விரும்புகின்றேன்.


கலைஞானம் என்னும் நூல் அறிவின் பயன், அனுபவ ஞானம் என்னும் அனுபூதி ஞானத்தைப் பெறுவதே ஆகும். அதனைப் பெற முயலாது, கலைஞானத்தை (நூல் அறிவை) மட்டும் விரும்பிப் பயில்கின்றவர்களை "வேண்டேன்" என்று கூறினார். அந்த மேலான அனுபவம் இறையருளால் தமக்குக் கிடைத்து விட்டதால், இனி தமக்கு நூல் அறிவு தேவையில்லை என்பதால், "கற்பனவும் இனி அமையும்" என்றார். தாய்ப் பசுவானது, தன் கன்றினை நினைந்து கதறுவது போல, தான் இறைவனை நினைந்து கதறி உருக வேண்டும் என்பார்,  "கற்றாவின் மனம்போலக் கசிந்து உருக வேண்டுவனே" என்றார்.


நுண்ணிய அறிவைப் பெற்றவர்க்கு, நூல்களை ஓதவேண்டிய அவசியம் இல்லை என்பதை,


"கோலும், புல்லும், ஒருகையில் கூர்ச்சமும்,

தோலும் பூண்டு துயரம் உற்று என்பயன்?

நீல மாமயி லாடு துறையனே

நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்கட்கே."


என்னும் பாடலால் அறிவுறுத்துகின்றார் அப்பர் பெருமான்.


மூன்று கிளைகளை உடைய கோல் யோகதண்டம் எனப்படும். அந்த யோகதண்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு, தருப்பையும்,  தருப்பைப் புல்லால் ஆன கூர்ச்சத்தையும் வைத்துக் கொண்டும், மான் தோலை உடுத்துக் கொண்டும் என்னதான் தவம் செய்தாலும், தான் ஓதிய நூல்களின் பொருளை உணர்ந்து தெளியவேண்டும். அவ்வாறு தெளியாத போது துயரமே மிஞ்சி இருக்கும். நுண்மையான அறிவைப் பெற்றவர்களுக்கு நூல் தேவையில்லை. அதுபோல, மெய்ப்பொருளை உள்ளவாறு நுணுகி அறிந்த மெய்ஞ்ஞானிகளுக்கு, அந்த சாதனங்கள் தேவையில்லை என்கின்றார் அப்பர் பெருமான்.


எத்தனை நூல்களைக் கற்றாலும், அவை உணர்த்துவது, உயிரானது அஞ்ஞான இருளில் இருந்து துன்பத்தில் உழலுவதில் நீங்கி, ஞானத்தைப் பெற்றுப் பேரின்ப வாழ்வைப் பெறவேண்டும் என்பதுதான். அதனைத் தெளிந்துகொள்ள, பல நூல்களைத் தான் கற்கவேண்டும் என்பதில்லை. கற்கின்ற ஒரு நூலை, ஐயம் திரிபு அற ஓதி, உணர்ந்தாலே போதும்.


"மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்றும் மெய்த்தன்மை காண்பது அறிவு" என்றும் திருவள்ளுவ நாயனார் காட்டினார். மெய்ப்பொருளை உணர்ந்து, பொய்ப்பொருள்களில் இருந்து விடுபட்டு, மெய்யறிவு பெறுவதே ஆன்மா பெறவேண்டிய உன்னதமான நிலை.


குருவருளால் இது நிகழும் என்பதை,


"உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும்

பற்றிய மாயா படலம் எனப் பண்ணி,

"அற்றனை நீ" என்று அடிவைத்தான் பேர்நந்தி

கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே."


என்னும் திருமந்திரத்தின் மூலம் அறிவுறுத்தினார் திருமூல நாயனார்.


வினைப் பயனால் உண்டானது இந்த உடம்பு. ஆணவம் முதலான மலங்கள் உடம்பு எடுத்த ஆசையால் உண்டாயின. இவையெல்லாம் அறிவை மறைக்கும் மாயத் திரை என்பதை உணரச் செய்து, " நீ அவை எல்லாவற்றையும் நீக்கி விட்டாய்" எனக் கூறி, சிவபெருமான் குருவடிவாக, என் தலைமேல் தனது திருவடிகளைச் சூட்டி அருளினார். அந்த நிலையில், இதுவரை நான் கற்றதெல்லாம் பொய் என்று உணா்ந்து, அவற்றை எல்லாம் விட்டேன். குருவடிவான இறைவன் திருவடிகளைப் பணிந்தேன். 


மணிவாசகப் பெருமான், "கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்" என்றும், திருமூல நாயனார், "கற்றன விட்டேன், கழல் பணிந்தேனே" என்றும் பாடி அருளியதன் உண்மை இதன் மூலம் விளங்கும்.


சரி. இந்த நிலை வாய்க்க என்ன செய்யவேண்டும்? உண்மை அறிவு விளங்கும் நூல்களைத் தேர்ந்து கற்று, கற்றாரை அணுகி இருந்து, உண்மை ஞானத்தைப் பெற முயலவேண்டும். இது மட்டும் போதுமா? என்றால், திருமூலர் மேலும் ஒரு வழியைக் கூறி அருளுகின்றார்.


"விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்;     

விளக்கினின் முன்னே வேதனை மாறும்;     

விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்,  

விளக்கில் விளங்கும் விளக்கு அவா் தாமே."    


இதன் பொருள் ---


கற்ற கல்வி அறிவாலும், அதனால் விளைந்த ஆன்ம அறிவாலும், மயக்கம் கொண்டுள்ள உங்களின் உயிர் உணர்வாகிய திரியில், திருவருள் ஞானம் என்னும் சுடரைக் கொளுத்தி, ஞான விளக்கை ஏற்றுங்கள். அந்த ஒளியில், ஒளி மயமாக, எல்லாப் பொருள்களுக்கும் இடம் தந்து, எல்லாப் பொருள்களிலும் நிறைந்து விளங்குகின்ற, ஞானவெளியில் விளங்கும் பரம்பொருளைத் தரிசியுங்கள். அந்தத் திருவருள் ஒளியின் முன்னர், இதுவரையில் உங்களுக்கு உண்டாகி இருந்த துன்பங்கள் அனைத்தும் அற்று ஒழியும். இவ்வாறு பசுஞானமாகிய ஆன்ம அறிவை, இறைஞானமாய் விளங்கச் செய்கின்ற திருவருளாகிய விளக்கைப் பெற்றவர்களே, அந்த விளக்கின் உள்ளே விளங்கும் மற்றொரு விளக்காய் விளங்குவார்கள்.


புறத்திலே உள்ள இருள் அகல விளக்கை ஏற்றுவது போல, அகத்திலே உள்ள, துன்பத்தையே விளைக்கின்ற அஞ்ஞான இருள் அகலுமாறு, இறைவனது அருள் விளக்கை ஏற்றுங்கள். அந்த விளக்கின் முன்னால் உங்களுடைய வேதனைகள் அனைத்தும் தொலைந்து ஒழியும்.


"அலையும் மனத்தைப் பிடித்து வைத்து, அதில்

உறையும் இருட்டுக் கருக்கலுக்கு நின்

அழகு விளக்கைப் பதித்து வைத்து, அதும் ... அவியாதே

அறிவை உருட்டித் திரட்டி வைத்து, அதில்

அமிர்த குணத்தைத் துதிக்க வைத்து, என்னை

அடிமை படைக்கக் கருத்தில் முற்றிலும் நினையாயோ?"


என்று அருணகிரிநாதப் பெருமான் பாடிய திருப்புகழ்ப் பாடல் வரிகள் அருமையாக உணர்த்துவதை அறிந்து இன்புறுக.


No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...