செங்கோல் - கொடுங்கோல்

செங்கோன்மை - கொடுங்கோன்மை

-----

தமது தொழிலைச் செய்வதற்கு வாய்ப்பாக, கோலைத் துணைக் கொள்பவர்கள் உண்டு. முடவன் ஒருவன் தான் நடப்பதற்குத் துணையாக ஒரு கோலைக் கைக்கொள்வான். அவன் அந்தக் கோலைக் கொண்டு தனக்கு இடையூறாக வருபவற்றையும் தடுத்துக் கொள்வான். பிறரையும் அடிக்கத் தலைப்படுவான். ஆடுமாடுகளை மேய்ப்பவர்கள் கையில் கோல் இருக்கும். தான் மேப்பவற்றை ஒழுங்குபடுத்துவதற்கும், கால்நடைகளுக்கு இடையூறு விளைப்பவற்றை விலக்குவதற்கும் அது பயன்படும். இது "செங்கோல்" ஆகும். தனது கையில் உள்ள கோலைக் கொண்டு தனக்கு வேண்டாதவர்களைப் புடைப்பதற்கு அந்தக் கோல் பயன்படுமானால், அது "கொடுங்கோல்" ஆகிவிடும். கோலின் பயன்பாட்டை வைத்தே, செங்கோல் அல்லது கொடுங்கோல் என்று சொல்லப்படும். கோலில் வேறுபாடு இல்லை. 

நாட்டை ஆள்பவர் நீதிமுறையுடன் அரசு புரிதல் வேண்டும். அந்த முறையானது ஒரு பக்கத்தில் சாயாமல், கோல் போல் நேராக இருத்தலினால், "செங்கோல்" எனப்பட்டது. அது "செங்கோன்மை" எனத் திருவள்ளுவ நாயனாரால் அடையாளம் இடப்பட்டது. "செங்கோன்மை" என்பது நீதிநெறிகளில் மறதி இல்லாத அரசனால் செய்யப்படும் என்றதால், "பொச்சாவாமை" என்னும் அதிகாரத்தின் பின்னர் வைக்ககப்பட்டது.

இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "தன் கீழ் வாழ்வார் குற்றம் செய்தால், அக்குற்றத்தை ஆராய்ந்து, முகம் கொடாமல், நடுவுநிலைமையோடு இருந்து, உரிய தண்டனையைத் தேர்ந்து அளிப்பதே நீதி ஆகும்" என்கின்றார் நாயனார். "முறை எனப்படுவது, கண்ணோடாது உயிர் வௌவல்" என்பது கலித்தொகை. முகம் கொடுத்தல் என்பது பழகியவர்க்குக் காட்டும் தாட்சண்ணியம் ஆகும்.

"ஓர்ந்து, கண் ஓடாது, இறை புரிந்து, யார் மாட்டும்

தேர்ந்து செய்வஃதே முறை." --- திருக்குறள்.

இதன் பொருள் ---

தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி, நடுவு நிலைமையைப் பொருந்தி, அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து,  அவ்வளவிற்றாகச் செய்வதே முறை ஆகும்.

இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

"இறைமகிழ வேந்தன் இளம் கன்றிற்காக

மகவினையும் தேர் ஊரும் ஆற்றால்

ஓர்ந்து, கண் ஓடாது, இறை புரிந்து, யார் மாட்டும்

தேர்ந்து செய்வஃதே முறை."

இறை - சிவபெருமான். வேந்தன் - மனுநீதிச் சோழன். தன் மகனுடைய தேர்க்காலில் அகப்பட்டு இறந்த ஒரு கன்றின் தாய்ப்பசுவுக்கு நீதி வழங்கும் பொருட்டு, தானே தனது மகன் மீது தேரைச் செலுத்திய மனுநீதிச் சோழனின் செங்கோன்மையைத் தெரிவிக்கும். 

சோழநாட்டு மன்னர்கள் செங்கோன்மையிலும், வண்மையிலும், வீரத்திலும் பேர் பெற்றவர்கள். சிறப்பு வாய்ந்த சோழநாட்டில், பழமையில் சிறந்து விளங்குவது திருவாரூர் என்னும் திருநகரம். அங்கே துறவோர்களும் அறவோர்களும் நீங்காமல் இருப்பார்கள். திருவாரூரில் பரவை நாச்சியார் வன்தொண்டரை மணந்து இல்லறம் நடத்திய சிறப்பினை உடையது. திருவாரூரை ஆண்ட மன்னர்களுள் ஒருவர் மனுநீதிகண்ட சோழர். இவர் அநபாய சோழனின் குலமுதல்வர். எல்லா உயிர்கட்கும் கண்ணும், உயிரும் போன்றவர். புற்றிடம் கொண்ட பெருமானார்க்குப் பூசனை முதலியன முறைப்படி நிகழ்த்தியவர்.

அவ்வரசர் பெருமானுக்கு ஓர் அரிய புதல்வன் பிறந்தான். பலகலைகளையும் பயின்று வளர்ந்து, இளவரசன் ஆகும் பருவத்தை அடைந்தான். அப் பருவத்தில் அவன் தேரில் ஏறி, சேனைகளும், மற்றவர்களும் புடைசூழ்ந்து உலா வருவது வழக்கம். வழக்கம் போல ஒருநாள் அவன் உலா வரலானான். அன்று வழியில் ஓரிடத்தில் இருந்து பசுங்கன்று ஒன்று துள்ளிப் பாய்ந்து, தேரின் உருளையில் அகப்பட்டு உயிர் துறந்தது. தாய்ப்பசு அங்கே ஓடி வந்து, அந்தக் காட்சியைக் கண்டு கதறித் துடித்துக் கீழே விழுந்தது. அதன் கதறலும், துடிப்பும் இளவரசனின் நெஞ்சைப் பிளந்தது. அது தேரில் இருந்து அவனைச் சாய்த்துத் தள்ளியது. கீழே விழுந்த இளவரசன், உடல் பதற, வாய் குழற, நாக்கு வறளத் தாய்ப்பசுவைப் பார்க்கின்றான். இறந்து கிடக்கும் கன்றைப் பார்க்கின்றான். கண்ணீர் விடுகின்றார். பெருமூச்சு விடுகின்றான். உள்ளம் மிகத் தளர்ந்து, "அந்தோ, அறவழியில் கோலோச்சும் எனது தந்தைக்கு நான் ஏன் மகனாய்ப் பிறந்தேன்? மனு என்னும் பெரும்பேர் தாங்கும் எனது தந்தைக்குப் பெரும்பழியைச் சுமத்தவோ தான் பிறந்தேன்?" என்று அழுகின்றான். "இந்தப் பெரும் பாவத்திற்குக் கழுவாய் இருக்குமாயின், எனது தந்தை அறியாமுன்னம், அக் கழுவாயைத் தேடுவது நலம்" என்று எண்ணி, அந்தணர் இருக்கை நோக்கிச் சென்றான்.

வாயில்லாப் பசு மனம் கலங்க, முகத்தில் கண்ணீர் தாரைதாரையாகப் பெருக, மன்னுயிர்களைத் தன்னுயிர்போல் காக்கும் மனுச்சோழ மன்னரின் அரண்மனையை விரைந்து சென்று அடைந்தது. அரண்மனை வாயிலில் தூங்கிக் கொண்டு இருந்த ஆராய்ச்சி மணியைத் தன் கொம்பினால் புடைத்தது.

அம் மணி ஓசை, மன்னர் பெருமான் செவியில் விழுந்ததும், அவர் திடுக்கிட்டு, அரியாசனத்தில் இருந்து குதித்து, வாயிலை அடைந்தார். வாயில் காப்போர் மன்னர்பிரானை வணங்கி, "இப் பசு தனது கோட்டினால் இம் மணியைத் துலக்கியது" என்றனர். மன்னர் பெருமான் சினந்துன, அமைச்சர் பெருமக்களை நோக்கினார். அமைச்சருள் ஒருவன் நிகழ்ந்ததைக் கூறினான். கருணை மன்னர் பசுவுக்கு உற்ற துயரத்தை அடைந்தார். நஞ்சு தலைக்கு ஏறினால் போல மயங்கினார். எழுந்தார். பசுவைப் பார்த்தார். "எனது அரசாட்சி நன்று, நன்று" என்று இரங்கினார்.

இவ்வாறு துயர் உறும் வேந்தரை அமைச்சர்கள் பார்த்து, "அரசே! சிந்தை தளர வேண்டாம். இந்தப் பழிக்குக் கழுவாய் உண்டு. என்றார்கள். அதற்கு அரசர், "அமைச்சர்களே! நீங்கள் கூறும் கழுவாய்க்கு நான் இசையேன். அக் கழுவாய் கன்றை இழந்து அலமரும் பசுவின் நோய்க்கு மருந்தாகுமோ? எனது மைந்தன் பொருட்டுக் கழுவாய் தேடினால், அறக்கடவுள் சலிப்பு உறாதோ? உயிர்களுக்குத் தன்னாலாவது, பரிசனங்களாலாவது, கள்வர்களாலாவது, பிற உயிர்களாலாவது விளையும் ஐந்து வகையான பயத்தையும் தீர்த்து அறத்தைக் காப்பவன் அல்லவோ அரசன். இன்று உங்கள் சொல்லுக்கு நான் இசைந்து, நாளை வேறு ஒருவன் ஓர் உயிரைக் கொன்றால், அவனுக்கு மட்டும் கொலைத் தண்டனை விதிக்கலாமோ? 'பண்டை மனுவின் நீதி பாவி மகனால் தொலைந்தது' என்னும் பழிமொழி உலகில் நிலையாதோ? நீங்கள் மந்திரிகள். உங்கள் வழக்கப்படி மொழிந்தீர்கள்" என்று இயம்பினார். 

மன்னரின் மனோ நிலையை உணர்ந்த மந்திரிகள், அவரைப் பார்த்து, "இத்தகைய நிகழ்ச்சி முன்னரும் நிகழ்ந்துள்ளது. இதன் பொருட்டு அருமைப் புதல்வனை இழப்பது முறை ஆகாது. கழுவாய் தேடுவதே முறை ஆகும்" என்றனர். சோழர் பெருமான், "இத்தகைய நிகழ்ச்சி இதற்கு முன்னர் எங்கே நடந்தது? எங்கே, எந்தப் பசு துன்பத்தால் மணியை அடித்தது? ஆகவே, பசு உற்ற துயரை, நானும் உறுதல் வேண்டும். திருவாரூரில் பிறந்த உயிரை அல்லவா என் மகன் கொன்றான். அவனைக் கொல்வதே தகுதி" என்று கூறி, அவ்வாறு செய்ய உறுதி கொண்டார்.

அமைச்சர்கள் நடுக்கு உற்றார்கள். நீதிமன்னர் தம்மொரு புதல்வனை வரவழைத்து, ஓர் அமைச்சரை விளித்து, "இவனைக் கன்று இறந்த இடத்தில் கிடத்தி, தேரைச் செலுத்துவாயாக" என்றார். அரசன் ஆணவழி நின்று கடமை ஆற்ற ஒருப்படாத அந்த அமைச்சர், அங்கிருந்து அகன்று சென்று தமது உயிரை மாய்த்துக் கொண்டார். அதற்குமேல் அரசர் பெருமான், தமது குலமகனைத் தாமே அழைத்துச் சென்று, தாம் எண்ணியவாறு முடித்தார்.

கருணை மன்னனின் செயல் கண்டு மண்ணவர்கள் கண்மழை பொழிந்தார்கள். விண்ணவர்கள் பூமழை சொரிந்தார்கள். வீதிவிடங்கப் பெருமான் விடைமேல் எழுந்தருளி, சோழர் பெருமானுக்குக் காட்சி கொடுத்து அருளினார். சோழர் பெருமான் இறைவரைத் தொழுது இன்பக் கடலில் திளைத்தார். அந் நிலையில், பசுவின் கன்று எழுந்தது. அரசிளங்குமரனும் விழித்து எழுந்தான். அமைச்சரும் உயிர் பெற்று எழுந்தார். தம்மை வணங்கிய புதல்வனை மார்புறத் தழுவிச் சோழவேந்தர் மகிழ்ந்தார்.

அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரியபுராணத்துள் வரும் கழற்சிங்க நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார் பாடி அருளிய "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

"தொழச்சங் கரன்சூடாத் தூய்மலர்மோந் தாள்கை

விழச்சென்று அரிந்து விடுத்தார் --- கழற்சிங்கர்,

ஓர்ந்துகண் ஓடாது இறைபுரிந்து யார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை."

கழற்சிங்க நாயனார், காடவர் குலத்தில் அவதரித்தவர்.  சிவபெருமான் திருவடிகளையே அன்றி மற்றொன்றும் அறியாத வாய்மையாளர். சிவபெருமானது திருவருளால் வடபுலத்தார்களைப் போரில் வென்றார். எங்கும் சைவசமயம் தழைத்து ஓங்குமாறு அரசு புரிந்தார். அவர் மாதேவியோடு சிவதரிசனம் செய்யுமாறு தலங்கள்தோறும் சென்று வணங்கிக் கொண்டு திருவாரூரை அடைந்தார். பூங்கோயிலின் உள்ளே சென்று புற்றிடங்கொண்டாரை வணங்கினார். அவருடைய மாதேவி திருக்கோயிலை வலம் வந்தாள். திருமாலை கட்டும் மண்டபத்தின் பக்கத்திலே விழுந்து கிடந்த ஒரு புதுப் பூவை எடுத்து மோந்தாள். அதனைச் செருத்துணை நாயனார் கண்டு விரைந்து ஓடிவந்து, பூமண்டபத்திலிருந்த பூவை எடுத்து மோந்ததாகக் கருதி அவளைக் கூந்தலைப் பிடித்து இழுத்து வீழ்த்தி அவளுடைய மூக்கை அரிந்தார். திருக்கோயில் வலம் வந்துகொண்டிருந்த கழற்சிங்க நாயனாரும் இதனைக் கண்டார்.  நடந்ததை விசாரித்து அறிந்து, பூவை எடுத்த பூவை கையை அன்றோ முதலில் துணிக்கவேண்டும் என்றார். உடைவாளை உருவிக் கையைத் துணித்தார்.  

தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி, யாவர் மாட்டும் கண்ணோடாது நடுவுநிலைமையைப் பொருந்தி, அக்குற்றத்துக்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராயந்து அவ்வளவிற்றாகச் செயவதே முறையாம் என்று திருவள்ளுவ நாயனார் அருளியச் செவ்வியை நோக்குக.

"பழமை கடைப்பிடியார் கேண்மையும் பாரார்

கிழமை பிறிதுஒன்றும் கொள்ளார் வெகுளின்மன்

காதன்மை உண்டே, இறைமாண்டார்க்கு ஏதிலரும்

ஆர்வலரும் இல்லை அவர்க்கு."   --- நீதிநெறி விளக்கம். 

இதன் பொருள் ---

வெகுளின்மன் - (அரசர்) மிகுதியாகக் கோபித்தால், பழமை - (இவர் நமக்கு அரசியலின்) தொன்று தொட்டுப் பணியாற்றி வருபவர் என்பதையும், கடைப்பிடியார் - நிலைநிறுத்தார்,  கேண்மையும் பாரார் - (இவர் நமக்கு) நண்பர் என்பதையும் கவனியார் பிறிது - (அவை) ஒழிய, கிழமை ஒன்றும் கொள்ளார் - (இவர் நமக்கு) உரியவர் என்பதையும் சிறிதும் நினையார், (ஆதலால்) இறை மாண்டார்க்கு - அரசியலில் அகப்பட்டார்க்கு, காதன்மை உண்டே - அன்புடைமை உண்டோ?, அவர்க்கு - அவ்வரசர்க்கு, ஏதிலரும் - (இவர்) அயலார் எனவும், ஆர்வலரும் - (இவர்) அன்பு உடையர் எனவும், இல்லை - கிடையா.

அரசர் சினம் கொள்வாராயின், அயலார் எனவும் அன்புடையார் எனவும் பாரார் என்பதற்குச் சோழமன்னன் ஒரு பசுவினது கன்றின்பொருட்டுத் தன் புதல்வன் செய்த குற்றத்திற்காக அவனையே கீழே கிடத்தி அவன் மேல் தேரூர்ந்த வரலாறு சான்றாகும். 

"மன்னுயிர் அனைத்தும் தன்னுயிர் என்ன

மகிழ்வொடு தாங்கி, யாரேனும்

இன்னல் உற்று அயர்ந்தோம் எனக் கலுழ்ந்திடில்,தன்

இருவிழி நீரினை உகுப்பான்,

அன்னவெந் துயரை நீக்குமுன் தான் ஒன்று

அயின்றிடான், துயின்றிடான், எவரும்

நன்னகர் எங்கும் உளன் எனப் பகர

நாடொறும் இயங்குவோன் கோனே." ---  நீதிநூல்.

இதன் பொருள் ---

  எல்லா உயிரும் தன் உயிர்போல் காத்துப், பிறர் துன்பம் கண்டால் கண்ணீர்விட்டு, அத்துன்பம் நீக்கும் வரை ஊண் உறக்கமின்றி நகர் எங்கும் காணும்படி வருவோனே மன்னன் ஆவான். 

"காது இறைவனுக்குக் கண் எனலால்,மெய் 

காண்குறான் எனுமொழி மாற்றி,

வாதிகள் சாட்சி சாதகம் எல்லாம் 

வகைவகை இனிதுகேட்டு அமைந்த

மேதினிக் கிழமை நீங்கிடுந் தன்மை 

விளையினும் நடுவில் நீங்காது

பாதியா அணுவும் பகுந்து தீர்ப்பதுவே

பார்த்திபன் கடமையாம் அன்றோ." ---  நீதிநூல்.

இதன் பொருள் ---

  ஒற்றர் மொழியன்றிப் பிறர் மொழியைக் கேட்டு உண்மை காணான் மன்னன் என்று உலகோர் சொல்லும் உரையை மாற்றி, வழக்காளியும் எதிர்வழக்காளியும் சான்று சொல்லுவோரும் கூறுவனவும், மற்றை ஆவணமாகிய எழுத்து முதலியவும் செவ்வையாகக் கேட்டும் ஆய்ந்தும் முறைசெய்தல் வேண்டும். அரசே தன்னை விட்டு நீங்குமாயினும் தான் நடுவுநிலைமையில் நீங்காது அணுவையும் பாதியாகப் பிளந்து நடுவுநிலை செய்யும் மன்னனே வேந்தன்.

இனிக் "கொடுங்கோன்மை" குறித்து திருவள்ளுவ நாயனார் கூறுவதைக் காண்போம். "கொடுங்கோன்மை" என்னும் அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "தினந்தோறும் தனது நாட்டு மக்களுக்கு உண்டாகும் தீமைகளை ஆராய்ந்து, அதற்குத் தக்க நல்லாட்சி புரியாத அரசன் தினந்தோறும் தன்னுடைய நாட்டை இழப்பான்" என்கின்றார் நாயனார். தீமைகளைக் களைந்து, தீவினையாளரைத் தண்டித்து, குடிமக்களைக் காக்காவிட்டால், குடிமக்கள் நாள்தோறும் அரசனிடத்தில் வெறுப்பு அடைவர். சிறிது சிறிதாக ஆட்சியை இழக்க நேரிடும்.

"நாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன்,

நாள்தொறும் நாடு கெடும்." --- திருக்குறள்.

இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

"மாமன் என்றும் பாணன் என்றும் வந்தானைப் பொன்மதுரைச்

சேவகன்தான் என்றும், திரியாத சூரன் என்றும்

நாள்தொறும் நாடி  முறை செய்யா மன்னவன்

நாள்தொறும் நாடு கெடும்."

சேவகன் - வீரன். சூரன் என்பதும் அது. மாமனாகவும், பாணனாகவும் வந்தவன் வீரசூர பராக்கிரமம் பொருந்திய சிவபிரான் என்று அறிந்து நாடி முறைசெய்யா மன்னவன் நாடு கெடும். அரசன் கொடுங்கோலன் ஆயின், கடவுள் தாமே வந்து முறை செய்வார். திருவிளையாடல் புராணத்தில் மாமனாக வந்து வழக்கு உரைத்த படலம், விறகு விற்ற படலம் ஆகியவற்றினைக் காண்க.

மாமனாக வந்து வழக்கு உரைத்த படலம்

மதுரையில் தனபதி என்றொரு வணிகர் வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி பெயர் சுசீலை. இத்தம்பதியினருக்கு நீண்ட நாட்கள் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. தனபதியும் அவருடைய மனைவியும் சொக்கநாதரிடம் குழந்தைப் பேற்றினை வேண்டினர். ஒரு சமயத்தில் தனபதி தன்னுடைய சகோதரியின் மகனை தத்துப் பிள்ளையாகக் கொண்டார். தனபதியின் மனைவிக்கும், தங்கைக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். இதனால் மனம் வருந்திய தனபதி அடுத்த பிறவியிலாவது பிள்ளைப்பேறு கிடைக்க வேண்டும் என்று எண்ணி காட்டிற்குச் சென்று தவம் மேற்கொள்ள எண்ணி,  தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய தங்கை மகனுக்கு உரிமையாக்கிவிட்டு தன் மனைவியோடு தவத்திற்காக காட்டிற்குச் சென்றார்.

தனபதி காட்டிற்குச் சென்றதை அறிந்த தனபதியின் சொந்தங்கள் அனைவரும் தனபதியின் தங்கையிடமிருந்து சொத்துக்களை அபகரித்துக் கொண்டனர். இதனால் தனபதியின் தங்கை செய்வதறியாது திகைத்தாள். இறுதியில் சொக்கநாதரைச் சரணடைந்தாள்.  "என்னுடைய தமையனார் குழந்தைப்பேறு வேண்டி தவத்திற்குச் செல்லும்போது தத்துப் பிள்ளையான எனது மகனுக்கு அவருடைய செல்வங்கள் அனைத்தையும் விட்டு சென்றார்.  இதனை அறிந்த எங்களது உறவினர்கள் பொய் வழக்கு பேசி சொத்துக்களை அபகரித்துக் கொண்டனர். இறைவா! எங்களை இந்நிலையிலிருந்து காப்பாற்றுங்கள்"என்று மனமுருக வழிபட்டாள். சோர்வு மிகுதியால் கோயிலிலேயே கண்ணயர்ந்தாள்.

அப்போது சொக்கநாதர் அவளுடைய கனவில் தோன்றி "பெண்ணே, நீ நாளை உன்னுடைய சுற்றத்தாரை உன்னுடைய சொத்துக்களை கேட்டு வழக்காடு மன்றத்திற்கு அழைத்து வா. யாம் இப்பொய் வழக்கினைத் தீர்த்து உம்முடைய பங்கினை உமக்கு அளிப்போம்"  என்று கூறினார். இறைவரின் திருவாக்கினைக் கேட்டதும் திக்கற்றவருக்குத் தெய்வமே துணை என்பது இதுதானோ என்று எண்ணி, தன்னுடைய வீட்டிற்கு மகனை அழைத்துக் கொண்டு சென்றாள். மறுநாள் தன்னுடைய உறவினர்களிடம் சென்று தன்னுடைய சொத்துக்களை திருப்பி அளிக்கும்படி கேட்டாள். அவர்கள் அவளையும், அவளுடைய மகனையும் திட்டி அடித்து விரட்டினர். உடனே அவள் அழுதபடியே வழக்காடு மன்றத்திற்குச் சென்று தன்னுடைய சொத்துக்களை உறவினர்களிடமிருந்து திருப்பித் தரும்படி கேட்டாள்.  வழக்காடு மன்றத்தில் தனபதியின் தங்கைக்கும், உறவினர்களும் வழக்கு நடைபெற்றது. அப்போது இறைவன் தனபதியின் உருவில் வழக்காடு மன்றத்திற்கு வந்தார். தனபதியைக் கண்டதும் அவருடைய உறவினர்கள் நடுங்கினர்.

இறைவனான தனபதி தன்னுடைய தங்கையையும், மருமகனையும் கட்டிக் கொண்டார். பின்னர் சபையோர்களிடம் "என் தங்கையின் வழக்கை ஆராய்ந்து அறத்தின் வழியில் நின்று முடிவினைத் தெரிவியுங்கள்" என்றார். வழக்காடு மன்றத்தில் இருந்தவர்கள் இருதரப்பினரையும் நன்கு கேட்டறிந்து உறவினர்களின் கூற்று பொய் என்று கூறினர். இதனைக் கேட்டதும் தனபதியின் உறவினர்கள் "வந்திருப்பது தனபதியே அல்ல" என்றனர்.

இதனைக் கேட்டதும் இறைவனான தனபதி, அவருடைய சொத்துக்களின் விவரம், உறவினர்களின் விவரம், அவர்களின் குடிப்பெயர், உடன்பிறந்தோர், குணங்கள், செய்தொழில்கள் ஆகியவற்றை விளக்கமாக எடுத்து உரைத்தார். இதனைக் கேட்ட வழக்காடு மன்றத்தினர் "இவர் தனபதியே" என்றனர். இதனைக் கேட்டதும் தனபதியின் உறவினர்கள் எல்லோரும் இனியும் இங்கிருந்தால் அரச தண்டனைக் கிடைக்கும் என்று கருதி ஒருவர் பின்னர் ஒருவராக வெளியேறினர்.

பின்னர் வழக்காடு மன்றத்தினர் "தனபதியின் சொத்துக்கள் முழுவதும் அவருடைய மருமகனுக்கு உரியது" என்று கூறி சாசனம் அளித்தனர். தனபதியான இறைவனார் அந்த சாசனத்தை தனபதியின் தங்கையிடம் கொடுத்தார். பின்னர் எல்லோரும் பார்த்திருக்கும்போது அங்கிருந்து மறைந்தருளினார். இதனைக் கண்ட அங்கிருந்தோர் மாமனாக வந்தது சொக்கநாதரே என்பதை உணர்ந்தனர்.

விறகு விற்ற படலம்

வரகுண பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆண்டு கொண்டிருந்தபோது ஏமநாதன் என்னும் வடநாட்டு யாழிசைக் கலைஞன் ஒருவன் வரகுணனின் அரண்மனைக்கு வந்தான். அவன் தன்னுடைய யாழினைக் கொண்டு இசை பாடி அரசவையில் அனைவரின் மனதையும் மயக்கினான். பின்னர் வரகுணனிடம் பலநாடுகளில் யாழிசையில் வெற்றி பெற்று பல பரிசுகளையும், பட்டங்களையும் பெற்றதாக ஆணவத்துடன் கூறினான்.

வரகுண பாண்டியனும் ஏமநாதனின் இசையைப் பராட்டி, அவன் தங்குவதற்கு அரசமாளிகை ஒன்றை ஏற்பாடு செய்தான். இதனைக் கண்டதும் ‘இந்த உலகில் தன்னை யாரும் இசை வாதில் வெல்ல ஆளில்லை'  என்ற ஆணவ எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. இதனால் வரகுணனிடம் "உங்கள் நாட்டில் என்னுடன் யாழிசைத்து இசைபாட வல்லார்கள எவரும் உளரோ?" என்று கேட்டான்.

அதற்கு வரகுணன் "நீங்கள் இப்பொழுது உங்கள் இருப்பிடம் செல்லுங்கள். நான் உங்களுடன் போட்டியிடும் நபரைத் தேர்ந்தெடுத்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன்" என்று கூறி அனுப்பினான். பின்னர் அவையோரிடம் கலந்தாலோசித்த வரகுணன், தன்னுடைய அவையில் இருந்த பாணபத்திரர் என்ற யாழிசைக் கலைஞரை ஏமநாதனிடம் யாழிசைத்து இசைபாடி போட்டியிட ஆணை இட்டான். மன்னனின் ஆணையைக் கேட்டதும் பாணபத்திரர் "சொக்கநாதரின் திருவருளோடு இசைப் போட்டியில் கலந்து கொள்கிறேன்" என்றார். கலக்கத்துடன் நேரே சொக்கநாதரைச் சரணடைந்தார். "இறைவா! நீதான் இக்கட்டிலிருந்து என்னைக் காப்பாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்று மனமுருக‌ வேண்டினார்.

சொக்கநாதரும் பாணபத்திரருக்கு உதவ எண்ணம் கொண்டார். வயதான விறகு விற்பவர் போல் வேடம் கொண்டு இடுப்பில் அழுக்காடையும், தலையில் இருக்கும் பிறைச்சந்திரனை அரிவாளாக மாற்றி இடுப்பில் செருகியும் இருந்தார். பழைய யாழினை இடக்கையில் கொண்டும், தலையில் விறகுகளைச் சுமந்தபடி மதுரை நகர வீதிக்குள் நுழைந்தார்.  மாலை வேளையில் ஏமநாதன் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் விறகுக் கட்டினை இறக்கி வைத்து விட்டுத் திண்ணையில் அமர்ந்து சொக்கநாதர் யாழினை மீட்டி பாடினார். பாட்டினைக் கேட்டதும் ஏமநாதன் வெளியே வந்து விறகு விற்பவரிடம் வந்து "நீ யார்?" என்று கேட்டான். அதற்கு, விறகு வெட்டியாக வந்த சொக்கநாதர் "நான் யாழிசையில் வல்லவராகிய பாணபத்திரனின் அடிமை" என்றார். "பாணபத்திரரிடம் இசை பயிலும் மாணவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவனாக இருந்தபோது, வயது முதிர்ந்ததால் இசை கற்கத் தகுதியற்றவன் என்று என்னை பாணபத்திரர் புறந்தள்ளி விட்டார். அதனால் விறகு விற்று பிழைப்பு நடத்துகிறேன். பாணபத்திரரிடம் கற்ற இசையை மறக்காமல் இருக்கும் பொருட்டு நான் அவ்வப்போது பாடுவேன்" என்று கூறினார்.

ஏமநாதன் விறகுவெட்டியாக வந்த இறைவரிடம் "நீ முன்னர் பாடிய பாடலை இன்னொரு தரம் இசையோடு பாடு" என்று கூறினான். இறைவரும் யாழினை மீட்டி சாதாரிப் பண்ணினைப் பாடத் தொடங்கினார். அவருடைய பாட்டில் ஏமநாதன் உட்பட உலக உயிர்கள் அனைத்தும் மெய் மறந்து ஓவியம் போல் இருந்தனர். ஏமநாதன் தன்னை மறந்து இருக்கையில், இறைவனார் மறைந்தருளினார்.

பின்னர் உணர்வு வந்த ஏமநாதன் "இது நான் அறிந்த சாதாரிப் பண்ணே அல்ல. இது தேவகானம். பாணபத்திரனால் தள்ளப்பட்டவன் இவ்வாறு இசையுடன் பாடினால், பாணபத்திரனின் பாட்டின் திறன் எத்தகையதோ?" என்று கூறிக் கவலையில் ஆழ்ந்தான். "இனி நாம் பாணபத்திரனோடு இசைவாதுவில் வெற்றி பெற இயலாது. ஆதலால் இப்போதே இங்கிருந்து புறப்படவேண்டும்"  என்று கூறித் தனது கூட்டத்தினருடன் மதுரையை விட்டு வெளியேறினான்.

இறைவனார் பாணபத்திரனின் கனவில் தோன்றி "பாணபத்திரரே! இன்று யாம் ஏமநானிடம் உன்னுடைய அடிமை என்று கூறி இசைபாடி வென்றோம். அஞ்சற்க" என்று கூறினார். இதனைக் கேட்ட பாணபத்திரர் விழித்தெழுந்து மகிழ்ச்சியடைந்தார். பின்னர் விடிந்ததும் திருக்கோயிலுக்குச் சென்று சொக்கநாதரை வழிபட்டு "அடியேன் பொருட்டு தங்கள் திருமுடியில் விறகினைச் சுமந்தீர்களோ?" என்று கூறி வழிபாடு நடத்தினார்.

காலையில் அரசவை கூடியதும் வரகுணன் "ஏமநானை அழைத்து வாருங்கள்" என்று கட்டளையிட்டான். காவலர்கள் ஏமநாதன் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றனர். ஏமநாதனைக் காணாது அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது "ஏமநாதன் நேற்று வரை இங்கிருந்தான். நேற்றுமாலை ஒரு வயதான விறகு விற்பவன் தன்னை பாணபத்திரனின் அடிமை என்று கூறி இசைபாடினான். பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை. ஏமநாதன் நள்ளிரவில் ஓடிவிட்டான்" என்று கூறினர்.

அதனைக் கேட்ட அவர்கள் வரகுணனிடம் தெரிவித்தார்கள். இதனைக் கேட்டதும் பாணபத்திரர் தன்னுடைய மனக் கவலையை இறைவனாரிடம் தெரிவித்ததையும், இறைவனார் கனவில் கூறியதையும் விளக்கினார். இது சொக்கநாதரின் திருவிளையாடல் என்பதை அறிந்த வரகுணன் பாணபத்திரரை யானைமீது அமர்த்தி மரியாதை செலுத்தினான். பல பரிசுப் பொருட்களை வழங்கினான். பாணபத்திரர் தனக்கு அரசன் கொடுத்த வெகுமதிகளை தன்னுடைய சுற்றத்தாருக்கும் கொடுத்து இன்புற்று வாழ்ந்தார்.

"நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி

நாடோறும் நாடி அரன்நெறி நாடானேல்

நாடோறும் நாடு கெடும், மூட நண்ணுமால்

நாடோறும் செல்வம் நரபதி குன்றுமே." --- திருமந்திரம்.

இதன் பொருள் ---

நீதிநூலைக் கற்ற அரசன், அந்நூலின் நோக்கு முதற்கண் வைதிகநெறி மேலும், பின்னர்ச் சிவநெறி மேலும் ஆதலை அறிந்து, நாள்தோறும் தனது நாட்டில் அவை பற்றி நிகழ்வனவற்றை, நாள்தோறும் அயராது ஒற்று முதலியவற்றான் ஆராய்ந்து, அவை செவ்வே நடைபெறச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யானாயின், அவனது நாடும், செல்வமும் நாள்தோறும் பையப் பையக் குறைந்து, இறுதியில் முழுதும் கெட்டுவிடும். அவற்றிற்குக் காரணம், யாண்டும் பாவச் செய்கையே மலிதலாம்.

"ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்

முறையில் அரசன் நாடு நல்கூர்ந்தன்று." --- முதுமொழிக் காஞ்சி.

இதன் பொருள் ---

கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மனிதர் எல்லார்க்கும் நீதி முறை இல்லாத அரசனது நாடானது வறுமை உடையது ஆகும்.

"பழமொழி விளக்கம்" என்று சொல்லப்படும் "தண்டலையார் சதகம்" என்னும் நூல், உலகநீதியைக் கூறுவது போலவே, அரசநீதி சிலவற்றையும் கூறி உள்ளது. திறமை இல்லாத அமைச்சர் அரசவையினில் நியாயம் இருப்பது இல்லை. அரசர்க்கு எல்லா அறிவுரையும் கூறவும், நியாய வழிகளைச் சொல்லவும் அமைச்சர் வேண்டுமே அன்றி, வேறொருவர் சொல்லுதல் ஆகாது. சிவபெருமான் திருத்தொண்டிற்குக் குறை செய்பவர்கள், நீண்ட கோலை உடையராய்ப் பயனற்ற வீணனைப் போல நியாயம் செய்வர் என்கிறது.

"தத்தைமொழி உமைசேரும் தண்டலையார்

     பொன்னிவளம் தழைத்த நாட்டில்

வித்தகமந் திரியில்லாச் சபைதனிலே

     நீதியில்லை! வேந்தர்க் கெல்லாம்

புத்திநெறி நீதிசொல்லு மந்திரியல்

     லாதொருவர் போதிப் பாரோ!

நித்தலுமுண் சோற்றில்முழுப் பூசணிக்காய்

     மறைத்ததுவும் நிசம் அதாமே!"

இதன் பொருள் ---

கிளி எனப் பேசும் உமையம்மை (இடப் பாகத்தில்) அமரும் தண்டலையாரின் காவிரி வளங்கொழிக்கும் (சோழ) நாட்டில், அறிவுடைய அமைச்சன் இல்லாத அவையிலே உயர்வு உண்டாகாது, அரசர்க்கெல்லாம் அறிவுரையும், அரசியல் நெறியும், அரசு முறைமையைக் கற்பிக்கும் அமைச்சனை அன்றி, ஒருவர் கற்பித்தல் கூடுமா?  நாள்தோறும் உண்ணும் உணவிலே முழுப் பூசணிக்காயை மறைத்ததுவும் (மதிமந்திரி இல்லா அரசவையிலே) உண்மையாக முடியும்.

இவர்கள் நாட்டில் மழைதான் பெய்யுமோ? விளைச்சல்தான் உண்டோ? கொடுங்கோல் அரசன் வாழுகின்ற நாட்டை விடக் கடும்புலி வாழுகின்ற காடு நன்மை உடையது ஆகும் என்று கொடுங்கோல் மன்னன் நாட்டைப் பற்றிப் புலவர் கூறியிருப்பதை அறிய முடிகிறது. நல்ல அமைச்சர் துணையும் இல்லாமல், நீதி கெட்டு ஆரவாரமாக ஆட்சி செய்யும் மன்னனது நாட்டை விடக் காடே சிறந்தது என்கிறார் புலவர்.

"படுங்கோலம் அறியாமல் தண்டலையார்

     திருப்பணிக்கும் பங்கம் செய்வார்!

நெடுங்கோளும் தண்டமுமாய் வீணார

     வீணனைப்போல் நீதி செய்வார்!

கெடுங்கோபம் அல்லாமல் விளைவுண்டோ?

     மழையுண்டோ? கேள்வி யுண்டோ?

கொடுங்கோல்மன் னவன் நாட்டிற் கடும்புலிவா

     ழுங்காடு குணமென் பாரே!

இதன் பொருள் ---

அடையப் போகும் தன்மையை உணராமல் தண்டலையாரின் திருத்தொண்டுக்கும் குறைவு புரிவார்கள். வீணார வீணன் என்பானைப் போலப் பெரிய கொலையும் தண்டனையுமாக அரசியல் புரிவர். (இதனால்)  (தம்மைக் கெடுக்கும்) சீற்றமேயன்றி நாட்டில் விளைவும் மழையும் கேள்வி முறையும்  இருக்குமோ? முறைதவறிய அரசன்  வாழும் நாட்டில் வாழ்வதினும் கொடிய புலி வாழும் காடு நலந்தரும் என்று அறிஞர் கூறுவர்.

அரசன் ஆட்சி நன்றாயிருப்பின் மழைபெய்து விளைவு பெருகி நாடு வளமுற்று இருக்கும். இல்லையானால் இவை அழியும் என்று உலகம் கூறும். "கொடும்கோல் மன்னன் வாழும் நாட்டில், கடும்புலி வாழும் காடு நன்றே" என்று "வெற்றிவேற்கை" கூறும்.

செங்கோல் செலுத்தும் மன்னனையே உலகம் போற்றி வணங்கும். மன்னன் அறநெறி வழுவாமல் ஆட்சி நடத்த வேண்டும். செங்கோல் வளையாமல் உலகை ஆளுதல் வேண்டும். நாடு பல்வேறு வளங்களைப் பெறுவதாய் மன்னன் ஆட்சி அமைதல் வேண்டும். இவ்வாறு ஆட்சி செய்யும் மன்னனையே மக்கள் தெய்வம் என்பார்கள். இதற்கு மாறாகக் கொடுங்கோல் செலுத்தி ஆட்சி செய்யும் அறியாமை உடைய அரசனும் அவன் அமைச்சனும் மீளா நரகத்தில் அழுந்துவார்கள். இதனைப் பின்வரும் பாடல் விவரிக்கும்:

"நாற்கவியும் புகழவரும் தண்டலையார்

    வளநாட்டில் நல்ல நீதி

மார்க்கமுடன் நடந்து, செங்கோல் வழுவாமற்

    புவியாளும் வண்மை செய்த

தீர்க்கமுள்ள அரசனையே தெய்வம் என்பார்

    கொடுங்கோன்மை செலுத்தி நின்ற

மூர்க்கமுள்ள அரசனும்தன் மந்திரியும்

   ஆழ்நரகில் மூழ்கு வாரே!" --- தண்டலையார் சதகம்.

இதன் பொருள் ---

நால்வகைக் கவிஞர்களும் புகழுமாறு சிறப்புற்ற தண்டலை இறைவரின் செழிப்பான நாட்டில் நல்ல அறநெறியுடன் ஒழுகி, நடுநிலை தவறாத ஆட்சியில் தவறாமல் உலகத்தை ஆளும் கொடையாளியான, துணிவுடைய மன்னனையே கடவுள் என்று கூறுவார்கள். தவறான ஆட்சி நடத்துகின்ற கொடிய அரசனும் அவனுடைய அமைச்சனும் ஆழமான நரகத்திலே அழுந்துவார்கள்.

செங்கோல் என்றும், கொடுங்கோல் என்றும் பிரித்துப் பார்க்க ஏதும் இல்லை. கோலில் அவ்வாறு பொறிக்கப்படவோ, எழுதப்படவோ இல்லை. நல்லாட்சி புரிந்தால் "செங்கோன்மை" என்றும், தீய ஆட்சி புரிந்தால் "கொடுங்கோன்மை" என்றும் கொள்ளவேண்டும்.





No comments:

Post a Comment

வான் செய்த நன்றிக்கு வையகம் என்ன செய்யும்?

  2. வான்செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?                              ----- கூன்செய்த பிறையணியும் தண்டலையார்      கருணைசெய்து, கோடி கோட...