காதவழி பேர் இல்லாதவன் கழுதை

 


காதவழி பேர் இல்லாதவன் கழுதை

-----

இவ்வுலகத்தில் நிலையாக நிலைத்திருப்பது ஒன்று உண்டு. அதுதான் நிலையாமை. "நில்லாமையே நிலையிற்று ஆகலின்" என்பது "குறுந்தொகை" கூறுவது.  "நில்லா உலகில் நில்லோம், இனி நாம் செல்வோமே" என்பது திருவாசகம். "நில்லாத உலக இயல்பு" என்பது பெரியபுராணம். "நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு" என்பது திருக்குறள். நில்லாமை ஒன்றையே நிலையாக உடைய இந்த உலகில், நிலைத்து இருப்பது புகழ் ஒன்றே ஆகும். "மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே" என்ற புறநானூறு கூறும். அவ்வாறு குன்றாப் புகழை ஈட்டுவதற்கு வாய்ப்பாக அமைந்ததே இந்த மனித வாழ்க்கை.

"புகழ்" என்னும் அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "தனக்கு ஒப்புமை இல்லாத உயர்ந்த புகழை அன்றி, இந்த உலகத்தில் அழியாது நிலைபெறுவது வேறு ஒன்றும் இல்லை" என்கின்றார் நாயனார்.

தனக்கு ஒப்பு இல்லாமல் ஓங்குதலாவது, கொடுத்தற்கு அரிய உயிரையும், உறுப்பையும், பொருளையும் கொடுத்தலால், தன்னோடு ஒப்பு இல்லாமல் தானே உயர்கின்றது புகழ். உயிரைக் கொடுத்தவர் ததீசி முனிவர். உறுப்பைக் கொடுத்தவர் சிபிச் சக்கரவர்த்தி. கவசம், குண்டலம் முதலிய பொருள்களைக் கொடுத்தவன் கர்ணன்.

ஆதாரம் ஆகிய உலகம் உள்ள அளவும், ஆதேயம் ஆகிய புகழ் நிற்கும் என்பது, "சாதல் வந்து அடுத்தகாலும், தனக்கு ஒரு சாதல் இன்றிப் பூதலம் இறக்கும்காலும் புகழ் உடம்பு இருக்கும்" என்னும் விநாயகப் புராணப் பாட்டால் காணலாம்.

"ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்,

பொன்றாது நிற்பது ஒன்று இல்."            --- திருக்குறள்.


பின்வரும் பாடல்களைக் கருத்தில் வைத்தல் நலம்.

"ஒன்றாக நல்லது உயிரோம்பல், ஆங்கு அதன்பின்

நன்று ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல்--என்றிரண்டும்

குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்

நின்றது வாயில் திறந்து." ---  அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

ஒன்றாக நல்லது உயிரோம்பல் - அறங்களுள் தன்னோடு ஒப்பது இன்றித் தானாகச் சிறந்து உயர்ந்தது பிறவுயிர்களைப் பாதுகாத்தல், ஆங்கு அதன்பின் நன்கு ஆய்ந்து அடங்கினார்க்கு ஈத்து உண்டல் - அதனை அடுத்து ஞானநூல்களை ஆராய்ந்து மனம் பொறிவழி போகாது அடங்கினார்க்கு உணவு முதலியன உதவித் தாமும் உண்ணுதல், என்ற இரண்டும் குன்றாப் புகழோன் - இவ்விரு செயல்களாலும் நிறைந்த கீர்த்தி அடைந்தவனை, வருக என்று வாயில் திறந்து மேல் உலகம் நின்றது - வருக என்று கூறித் தனது வாயிலைத் திறந்து அவன் வருகையை எதிர்நோக்கி மேலுலகம் நிற்கா நின்றது.

"ஈத்து உண்பான் என்பான் இசைநடுவான், மற்றவன்

கைத்து உண்பான் காங்கி எனப்படுவான், தெற்ற

நகையாகும் நண்ணார்முன் சேறல், பகையாகும்

பாடு அறியாதானை இரவு." ---  நான்மணிக்கடிகை.

இதன் பதவுரை ---

ஈத்து உண்பான் என்பான் இசை நடுவான் - பிறர்க்கு கொடுத்து உண்பவன் எனப்படுவான் உலகத்தில் புகழை நிறுத்துவான்; அவன் கைத்து உண்பான் காங்கி எனப்படுவான் - அங்ஙனம் கொடுத்து உண்பவனது கைப்பொருளையும் பறித்து உண்பவன் அவா உடையன் எப்படுவான்; நண்ணார் முன் சேறல் தெற்ற நகை ஆகும் - விரும்பாதவர் முன், ஒன்றை விரும்பி அடைவது, தெளிவாகவே இகழ்ச்சியை உண்டாக்கும்; பாடு அறியாதானை இரவு பகையாகும் - தனது தகுதி அறியாதவனை  இரந்து செல்லல், பகைமைக்கே இடமாகும்.

"கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்

கனிகள் உப கார மாகும், 

சிட்டரும் அவ் வணம்தேடும் பொருளையெல்லாம்

இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார், 

மட்டுலவுஞ் சடையாரே! தண்டலையா

ரே! சொன்னேன் வனங்கள் தோறும் 

எட்டிமரம் பழுத்தாலும், ஈயாதார்

வாழ்ந்தாலும், என் உண்டாமே.  ---  தண்டலையார் சதகம்.

இதன் பதவுரை --- 

மட்டு உலவும் சடையாரே - மணம் கமழும் திருச்சடையை உடையவரே! தண்டலையாரே - திருத்தண்டலை என்னும் திருத்தலத்திலே எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே!! வனங்கள் தோறும் எட்டி மரம் பழுத்தாலும் என்  உண்டாம் - காடுகள் எங்கிலும் எட்டி மரம் பழுத்து விளங்கினாலும், அதனால் என்ன பயன் உண்டாகும்? ஈயாதார்  வாழ்ந்தாலும் என் உண்டாம் --- பிறருக்குக் கொடுத்து உதவும் பண்பு இல்லாதவர் வாழ்வதனாலும் அதனால் என்ன பயன் உண்டாகும்? கட்டு மாங்கனி  வாழைக்கனி பலவின் கனிகள் உபகாரம் ஆகும் --- பழுப்பதற்காகக் கட்டி வைக்கப்படுகின்ற மா, வாழை,  பலா ஆகிய  இவற்றின் பழங்கள் எல்லோருக்கும் பயன்படும்;  அவ்வணம் - அது போலவே, சிட்டரும் தேடும் பொருளை எல்லாம் இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் - அறிவில் சிறந்த நல்லோர் தாம் சேர்க்கும் பொருள் முழுவதையும் இல்லை என்று வருபவருக்கே அளித்துச் சிறப்புடன் வாழ்வார்கள்.

"ஓதஅரிய தண்டலையார் அடிபணிந்து

நல்லன் என்று உலகம் எல்லாம் 

போதமிகும் பேருடனே புகழ்படைத்து

வாழ்பவனே புருடன், அல்லால் 

ஈதலுடன் இரக்கம் இன்றிப் பொன்காத்த

பூதம் என இருந்தால் என்ன?

காதவழி பேரில்லான் கழுதையோடு

ஒக்கும் எனக் காணலாமே."   --- தண்டலையார் சதகம்.

இதன் பதவுரை ---

ஓத அரிய தண்டலையார் அடி பணிந்து - சொல்லுதற்கு அரிய புகயை உடைய திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் சிவபரம்பொருளின் திருவடிகளைப் பணிந்து, உலகம் எல்லாம் நல்லவன் என்று போதம் மிகும் பேருடனே - உலகில் உள்ளோர் எல்லாம் ‘இவன் நல்லவன்' என்று போற்றும் அறிவுமிக்க நற்பெயருடன், புகழ் படைத்து வாழ்பவனே புருடன் - புகழையும் படைத்து வாழ்கின்றவனே ஆண்மகன் ஆவான், அல்லால் - அவ்வாறு இல்லாமல்,   ஈதலுடன்  இரக்கம்  இன்றி - இல்லை என்று வந்தவர்க்கு இல்லை என்னாது கொடுத்து உதவும் கொடைப் பண்பும், உயிர்கள் மீது தயவும் இல்லாமல், பொன் காத்த பூதம் என இருந்தால் என்ன - பொன்னைக் காக்கும் பூதம்போல, தான் ஈட்டிய பொருளைக் காத்து வைத்து இருப்பதால் பயன் என்ன? காதவழி பேர் இல்லான் கழுதையோடு ஒக்கும் எனக் காணலாமே - காத தூரம் தன்னுடைய புகழ் விளங்குமாறு வாழாதவன் கழுதைக்குச் சமமாவான் என்று அறியலாம்.

"உண்ணான், ஒளிநிறான், ஓங்குபுகழ் செய்யான்,

துன்அரும் கேளிர் துயர் களையான் --- கொன்னே

வழங்கான், பொருள் காத்து இருப்பானேல், ஆஆ,

இழந்தான் என்று எண்ணப்படும்." ---  நாலடியார்.

இதன் பொருள் ---

தானும் உண்ணாமல், பிறருக்கு உதவிப் பெருமைப் படாமல், புகழை ஈட்டாமல், தன் சுற்றத்தார் துயர் துடைக்கப் பொருளைத் தந்து உதவாமல், தேடிய செல்வத்தை வீணே பூட்டி வைத்துக் காத்து இருப்பவன் வாழ்க்கை, சீ சீ வாழ்க்கையா அது? அப்படிப்பட்டவன் இருந்து என்ன? இறந்து என்ன? அவன் இருந்தாலும் இறந்தவனாகவே கருதப்படுவான்.

அறத்திற்கும் இன்பத்திற்கும் சாதனமாகிய பொருளை வீணிலே பூமியிற் புதைத்து வைப்தைப் பார்க்கிலும் அறியாமையில்லை.

"பாவிதனம் தண்டிப்போர் பால் ஆகும், அல்லது அருள்

மேவு சிவன் அன்பர் பால் மேவாதே --- ஓவியமே!

நாயின்பால் அத்தனையும் நாய்தனக்கு ஆம், அன்றியே

தூயவருக்கு ஆகுமோ? சொல்.: --- நீதிவெண்பா.

இதன் பொருள் ---

சித்திரம் போன்று அழகிய பெண்ணே! நாயினுடைய பால் அவ்வளவும் நாய்க்கே ஆகும். அல்லது, தூய்மையான மக்களுக்குப் பயன் ஆகுமோ? நீ சொல். அதுபோல, தீயவர்களின் செல்வம் தண்டித்து வாங்கும் தீயவர்களிடத்திலே சேருமே அல்லாமல், அருள் பொருந்திய சிவனடியார்களிடத்துச் சேராது.

கொடைப் பண்பு ஆகிய ஆன்ம நேயமும், உயிர்க்கு இரங்குவதாகிய அருட்பண்பு என்னும் சீவகாருண்ணியமும் கொண்டவர்களே நல்ல மனிதர்கள். ஆன்நேயமும், சீவகாருண்ணியமும் உடையவர்களின் பூத உடம்பு அழிந்தாலும், அவர்தம் புகழுடம்பு என்றும் அழியாது நிலைத்து இருக்கும். அறநெறியில் வாழ்தலே அழியாத புகழைப் பெறுதற்கு உரிய ஒரே வழியாகும். இதனை நம் முன்னோர் நன்கு உணர்ந்திருந்தனர் என்பதையே புறநானூறு காட்டுகிறது.

மதுரை தமிழ் நிலைபெற்ற இடம். முச்சங்கம் வைத்து மொழி வளர்த்தவர்கள் பாண்டியர்கள். தமிழ் மொழியும் இலக்கியமும் தழைத்த  இடம் மாடமதுரை. புகழ்பூத்த புலவர்கள் வாழ்ந்த இடம். மதுரையில் அந்நாளில் மருதன் இளநாகனார் என்னும் புலவர் வாழ்ந்து வந்தார் அவர் சான்றாண்மைக்கு ஆழி என விளங்கிய அறவோர். புரவலர்களின் புகழ்மிகு செயல்களை வடியா நாவில் வடித்துப் பாடியவர். அவர் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்னும் வேந்தனைப் பற்றிப் பாடிய பாட்டொன்று புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது. 

இப் பாண்டியன்,  மிக்க பேராண்மை  உடையவன். இவனைப் பாடிய சான்றோர் பலரும் இவனுடைய போர்வன்மை முதலிய பேராற்றல்களையே புகழ்ந்து பாடி இருக்கின்றனர்.  ஒருகால் இவனை ஆவூர் மூலங்கிழாரும், பேரிசாத்தனாரும் தனித் தனியே காணச் சென்றபோது அவர்கட்கு இவன் பரிசில் தர நீட்டித்தான். அதுகண்டு அவர்கள் வெகுண்டு பாடியன மிக்க பெருமிதம் கொள்ளத் தக்கன ஆகும். "செவி கைப்பச் சொல் பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக் கீழ்த் தங்கும் இவ் வுலகு" என்பார் திருவள்ளுவ நாயனார்.  புலவர்கள் தன்மீது வெகுண்டார்களே என்று உள்ளம் கொள்ளாது வாழ்ந்தவன் அந்தப் பாண்டியன். அறநெறியில் வழுவாது வாழும் அரசர்க்கே புகழ் நிலைத்து இருக்கும் என்பதை அருமையாக விளக்குகின்ற பாடல் ஒன்று காண்போம்.

"கடுஞ்சினத்த கொல்களிறும், கதழ்பரிய கலிமாவும்,

நெடுங்கொடிய நிமிர்தேரும், நெஞ்சுடைய புகன்மறவரும் என

நான்குடன் மாண்டது ஆயினும், மாண்ட

அறநெறி முதற்றே அரசின் கொற்றம்;

அதனால், நமர் எனக் கோல் கோடாது,

பிறர் எனக் குணம் கொல்லாது,

ஞாயிற்று அன்ன வெந்திறல் ஆண்மையும்,

திங்கள் அன்ன தண்பெரும் சாயலும்,

வானத்து அன்ன வண்மையும், மூன்றும்

உடையை ஆகி, இல்லோர் கையற

நீநீடு வாழிய நெடுந்தகை! தாழ்நீர்

வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில்

நெடுவேள் நிலைஇய காமர் வியன்துறைக்

கடுவளி தொகுப்ப ஈண்டிய

வடுவாழ் எக்கர் மணலினும் பலவே." --- புறநானூறு.

இதன் பொருள் ---

ஓங்கி உயர்ந்த பெருமலை ஆகிய மேருவை வில்லாக்கி, வாசுகி என்ற பெரும்பாம்பை நாணாக அமைத்து, ஓர் அம்பைக் கொண்டு அதனையும் விடுக்காமலே, திரிபுரங்களையும் சிரித்தே எரித்து, பெருவலியை உடைய தேவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தவரும், நீலமணி போன்ற கண்டத்தினை உடையவரும், பிறைச்சந்திரனைச் சூடிய திருச்சடையை உடையவரும் ஆகிய சிவபரம்பொருளின் திருமுகத்தில் உயர்ந்து விளங்கும் நெற்றிக்கண்ணைப் போல, மற்ற மன்னவர்க்கு எல்லாம் மேலாக விளங்கும் பூமாலை அணிந்த புகழ் மாறனே! மிக்க சினம் உடைய போர் யானையும், விரைந்து செல்லும் தன்மை உடைய குதிரையும், நீண்ட கொடியை உடைய தேரும், வயிரநெஞ்சு உடைய வீர மறவரும் என நால்வகைப் படைச் சிறப்பும் உடையதே அரசு என்றாலும், அரசின் பெருமை உயர்ந்த அறநெறியில் வழுவாது ஆட்சி புரிவதே ஆகும். எனவே, இவர் நமக்கு வேண்டியவர் என்று அவர் செய்த குற்றம் மறைக்கச் செங்கோல் வளைக்கவும், இவர் நமக்கு அயலார் என்பதால், அவரிடத்து உள்ள நற்குணங்களை எண்ணாது தண்டிக்கவும் நினைக்காமல், எல்லார்க்கும் பொதுவாக, செங்கதிர்ச் சூரியன்போல் சுடர் ஒளி வீசியும், திங்கள் வெண்ணிலவு போலத் தண்ணளி பொழிந்தும், மழைபோலக் கொடைகள் வழங்கியும், இல்லை என்று வருவோரே இல்லை என்று சொல்லும்படியாக நீ நீடூழி காலம் வாழ்வாயாக. பெரியோனே! வெண்மையான அலைகளை வீசும் தாழ்ந்த கடல்நீரை உடைய செந்திற்பதியில் முருகப் பெருமான் கோயில் கொண்டு இருக்கும் கடற்கரை ஓரம், காற்றடித்துக் கொண்டு வந்து கொட்டி இருக்கும் பெருமணல் பரப்பிலும் மிகவாக, நீ பலகோடி நூறாண்டு வாழ்வாயாக.

பாண்டியன் நன்மாறன் முப்புரங்க்ளையும் சிரித்தே அழித்த சிவபெருமானின் நெற்றிக் கண்ணைப் போலப் பிற வேந்தரினும் மேம்பட்டு விளங்குகின்றான். போர்க்களத்தில் எதிரிகளைக் கொல்லும் யானைகளையும்; விரைந்து செல்லும் குதிரைகளையும், கொடி பறக்கும் தேர்களையும், கூற்று உடன்று வரினும் எதிர்த்துப் போர் புரிய அஞ்சாத போர்மறவர்களையும் உடைய வேந்தனாய் உள்ளான். ஆயினும் அவனுக்குப் பெருமை சேர்ப்பன இவை மட்டுமே அல்ல. அறநெறியை முதலாக அடையவன் அரசன் என்னும் சிறப்பே அரசனின் உண்மையான உயர்வான சிறப்பாகும். எனவே அவன் மேற்கொள்ள வேண்டிய அறநெறிகள் மூன்றாகும். அவையாவன : ஒன்று : நமக்கு வேண்டியவர்கள்  தவறு செய்வார்களேயானால் அவர்களுக்காக நீதியினின்றும் வழுவக்கூடாது. இரண்டு: அயலார் தனக்கு வேண்டாதவர்கள் எவ்வளவுதான் நல்லவர்களாக இருந்தாலும், எவ்வளவுதான் நன்மை விளைவிக்கும் செயல்களைச் செய்தாலும் அவர்களைப் பாராட்டி ஊக்குவிக்காமல், மாறாக செங்கோல் வளைந்து அவர்களைக் கொல்லும் முயற்சியில் ஈடுபடுதல் கூடாது. மூன்று : பகலில் வான வீதியில் வரும் பகலவன் போல ஆண்மையும், இரவில் வெண்ணிறக் கதிர்களைச் சொரியும் சந்திரன் போன்று அருளும், காலத்தே பெய்து மக்கள் மனங்களைக் கணிவிக்கும் மழை போன்று கொடையும் உடையவனாக அரசன் விளங்க வேண்டும். இல்லை என்று இரந்து வந்துவிட்ட இல்லாதவர்க்கு இல்லை என்று சொல்லாமல் அவர்களுக்கு ஈந்து அவர்தம் துயரினைத் துடைக்கவேண்டும் என்று அறிவுரை சொல்லப்படுகிறது.

பழைய புறநானூற்றுப் பாட்டே ஆயினும், அரசர்க்கு அறிவுறுத்தப் பெற்ற அறநெறியாகவே இருப்பினும், ஈராயிரம் ஆண்டுகள் கழிந்து முடிந்து போயிற்றே ஆயினும் கூட, இப்பாட்டில் இன்று நாம் அனைவரும் (தனிமனிதரும், அரசும்) மேற்கொள்ள வேண்டிய, மேற்கொண்டு உறுதியாக ஒழுகவேண்டிய அறநெறி தெள்ளத் தெளிவாகவே கூறப்பட்டு உள்ளதைக் காணலாம்.

எவ்வளவுதான் வல்லவராய் இருந்தாலும் நல்லவராயும் இருத்தல் வேண்டும் என்பது இதன் மூலம் பெறப்படும் செய்தி ஆகும். அடுத்து, வல்லமையும், எதனையும் சாதிக்கும் நிலைமையும் ஏற்பட்டாலும்கூட, நம்மவர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக அவர்கள் முறையின்றிச் செய்யும் தீச்செயல்களைப் பொறுத்துப் பாதுகாப்பு கொடுக்கத் தலைப்பட்டு விட்டால் இறுதியில் அழிவு உறுதி என்பதாகும். அதுபோன்றே, நமக்கு வேண்டாதவர் என்பதற்காக அவர் செய்யும் நற்செயல்களுக்குக் கூடக் களங்கம் கற்பிக்கத் தொடங்குவோமானால், இறுதி நமக்கு உறுதி என்பதை உறுதியாக எண்ண வேண்டும். எனவே, ஒருவர் செய்வது நற்செயல் ஆயின் அதனைப் போற்றி வரவேற்று,  தீச்செயல் செயின் அதனைக் கடிந்து நீக்கி, கதிரவன் போல் ஆண்மையும், திங்களைப் போன்று அருளையும், மழையைப் போல் கொடையும் பண்பும் கொண்டு அறநெறியில் வாழ முற்படுவோமானால் திருச்செந்தூர் உறையும் திருமுருகன் திருக்கோயிலின்முன் குவிந்திருக்கும் மணலின் எண்ணிக்கை போலப் பல்லாண்டுகள் பயனுற இப்பாரில் வாழலாம் என்பது அறநெறி ஆகும். இந்த அறநெறியின் மூலம் புகழுற வாழாதவன், மனிதன் அல்ல. அவன் கழுதைக்கு ஒப்பாவான். எனவே, "காதவழி பேர் இல்லான் கழுதையோடு ஒக்கும் எனல் ஆமே" என்றது "தண்டலையார் சதகம்". 


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 7

  "அன்ன விசாரம் அதுவே விசாரம், அது ஒழிந்தால், சொன்ன விசாரம் தொலையா விசாரம், நல் தோகையரைப் பன்ன விசாரம் பலகால் விசாரம், இப் பாவி நெஞ்சுக...