மனம் என்னும் மலர்



மனம் என்னும் மலர்

-----

அநாதி காலமாகப் பிறவியில் உழன்று வருகிற உயிர்களுக்குப் படலம்  படலமாக அழுக்கு ஏறிக் கிடக்கிறது. அந்த அழுக்கின் கனத்தினால் உயிர் ஆழ்கடலின் அடித்தளத்தில் கிடக்கிறது. அந்த அழுக்குப் படலம் சிறிது போனால் உயிர் சற்றே மேலே வருகிறது. மறுபடியும் அழுக்குப் படிந்தால் மறுபடியும் கீழே போய்விடுகிறது. அழுக்குக் கரைவது மிகுதியாக இருந்தால் அது மெல்ல மெல்ல மேலே வருகிறது. முன்பு இருந்த நிலையைவிட மேலே வருகிறது. ஆழம் முழுவதும் கடந்து நீர்மட்டத்துக்கு வந்துவிட்டதாக ஆகாது. உயிர் வளர்ச்சி நிலையில் சென்று கொண்டே இருந்தால், அதன் நிலை உயர்ந்துகொண்டே வரும். ஓரறிவு உயிராக இருந்த நிலை மாறி அடுத்த படியை அடையும். ஈரறிவுயிரில் சற்றே இழிந்தவையாக் உயரும்.  பின்பு அந்த இனத்தில் சிறந்ததாக உயரும். இந்தப் போக்கிலே தடையின்றி. அது வளருமானால், மறுபடியும் சறுக்கி விழும் நிலை வராமல் இருந்தால், அது மூவறிவு உயிராகி நாலறிவு உயிராகி ஐந்தறிவு உயிராகிக் கடைசியில் ஆறறிவு உயிராகிய மனிதப் பிறவியை எடுக்கும். அப்போதுதான் அது பிறவிக் கடலின் நீர்மட்டத்தை அடைந்ததாக ஆகும். கடலின் அளவுற்ற ஆழத்தில் இருந்து மெல்ல மெல்ல அழுக்குக்  குறைவதனால் மேல் ஏறி வந்து மேல் மட்டத்தை அடைவதற்கு எத்தனையோ பிறவிகள்  எடுத்திருக்க வேண்டும். அவ்வளவையும் எடுத்து எடுத்து வளர்ந்து வந்தாலும் மனிதப் பிறவி கிடைத்ததேயன்றி இன்னும் இலட்சியத்தை அடையவில்லை. பிறவியென்னும் கடலைத் தாண்டி முத்தி என்னும் கரையை அடைய வேண்டும். 

மற்றப் பிறவிகளை நினைத்தால் மனிதன் உயர்ந்தவன்தான். ஆனால், அவன் அடைய வேண்டிய  கரையை நினைத்தால் அவன் தாழ்ந்தவனாகவே ஆகிறான். பிறவிக் கடலின் அடித்தளத்திலே இருந்த உயிருக்கு நீர்மட்டம் எங்கே இருக்கிறது என்று தெரியாது; அதை அளந்தறியும் ஆற்றலும் அதற்கு இல்லை. மேலே வந்துவிட்டோம், இனிக் கரையை அடைந்து விடலாம் என்று எளிதாக நினைத்துவிட முடியாது. கரை எங்கே இருக்கிறது, எப்படி இருக்கும் என்றும் தெரியவில்லை. நீர் மட்டத்தின்மேல் மிதப்பதுதான் அவன் விருப்பம் என்றால் அந்த விருப்பமும் திருப்தியும் நெடுநேரம் நில்லாது. கரையை நோக்கிச் செல்ல முயலாமல் சும்மா இருந்தால் அவன் மீண்டும் கீழே ஆழ வேண்டியதுதான்.  மறுபடியும் விலங்காகப் பிறக்க வேண்டி வரும். ஆதலால், கரை தெரிகிறதோ  இல்லையோ, கரை உண்டு என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும். அப்படிச் முயலும்போது அவன் கை சோரலாம். இடையிலே பல தடைகள் உண்டாகலாம்.  மெல்ல மெல்ல, சிறிதும் சலிக்காமல் சளைக்காமல் முன்னேறினால், சரியான நெறியில் முன்னேறினால், கரை புலனாகும். வெறும் கற்பனையாகக் கரையைப் பற்றி எண்ணமிட்ட அவனுக்கு அதன் உண்மை தெளிவாகும். அது கண்களில் பட்டுவிட்டால் பின்பு அவனுடைய ஆர்வமும் ஊக்கமும் பலப்பல மடங்கு மிகுதி ஆகும். இறுதியில் கரையையே அடைந்துவிடுவான்.  இப்போது நாம் நடுக்கடலில், முத்திக் கரையைச் சேர வழி தெரியாமல் திகைத்துக் கொண்டு இருக்கிறோம். இறைவனை அணுக வேண்டும். நமக்கும் அவனுக்கும் நெடுந்துரம் என்று தெரிகிறது. மெல்ல மெல்ல முயன்றால் எதையும் சாதித்துவிடலாம். 

இறைவனை அடைவதற்கு நான்கு படிகள் உண்டு. ஒவ்வொன்றாகத் தாண்டி முடிவில் இறைவன் என்னும் பொருளை அடைய வேண்டும். படியை வடமொழியில் 'சோபானம்' என்பார்கள்.  நான்கு பெரிய சோபானங்களை ஏறி இறைவனாகிய இலட்சியத்தை நாம் அடைய வேண்டும். நாம் இருக்கும் நிலையைவிட அந்த இன்ப நிலை உயர்ந்தது. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவைகளே அந்தப் படிகள். சரியை என்பது  ஒழுக்கம் அல்லது நடத்தையைக் குறிக்கும். கிரியை என்பது தொழில் அல்லது செய்கை. யோகம் என்பது ஒன்றாக இணைவது. ஞானம் என்பது அறிவது. நல்லொழுக்கம், நற்செய்கை, நல்லிணைப்பு, நல்லறிவு என்று இவற்றைத் தமிழில்  சொல்லலாம். இறைவனை அணுகுவதற்குரிய படிகள் இவை என்பதை நினைவுபடுத்திக் கொண்டால் இந்த ஒழுக்கம் முதலியன யாவும் இறைவனோடு தொடர்புடையனவாக இருக்க வேண்டும் என்ற உண்மை தெளிவாகும். 

பொதுவாக இறைவனிடம் அன்பு பூண்டவர்களை அடியவர்கள் என்று சொல்கிறோம். அவர்களின் செயல்களும் வழிபாட்டு முறைகளும் பலவேறு வகையாக இருக்கின்றன. ஒருவர் தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்து வருகிறார். ஒருவர் வேறு தலங்களுக்குச் செல்லா விட்டாலும் தன் ஊரிலுள்ள கோயிலுக்கு ஒரு நாளேனும்  தவறாமல் போய் வருகிறார். ஒருவர் நந்தவனம் வைக்கிறார். ஒருவர்  குளம் வெட்டுகிறார். இவர்கள் யாவரும் அடியவர்களே. ஒருவர் இறைவன் திருநாமத்தைப் பலமுறை சொல்கிறார். அவன் புகழைப் பாடுகிறார். ஒருவர் விக்கிரகத்தை வைத்துப் பால் முதலியவற்றால் அபிஷேகம் செய்கிறார். அலங்கரிக்கிறார். நறுமலரால் அருச்சனை செய்கிறார். தூபதீபம் காட்டுகிறார். உணவை நிவேதனம் செய்கிறார். கற்பூர தீபம் காட்டுகிறார். வலம் வந்து பணிகிறார். அவரும் பத்தியுடையவரே. ஒருவர் கண்ணை மூடிக் கொண்டு கண்ணீர் வார இறைவனைத் தியானம் செய்கிறார். முதலில் சில நிமிடங்கள் இப்படி இருந்தவர் நாளடைவில் மணிக்கணக்காக அப்படியே அமர்கிறார். அவரும் அடியவரே.  நின்றாலும் நடந்தாலும் உண்டாலும் படுத்தாலும் இறைவன் நினைவு மாறாமல், எந்தப். பொருளிலும் ஆசை. வைக்காமல், எதற்கும் அஞ்சாமல், நான் என்ற அகந்தையும், எனது என்ற  மமதையும் இல்லாமல் இருக்கிறார் ஒருவர். அவரும் அடியவர்தான். ஆனாலும் எல்லோரும் ஒரே நிலையை உடையவர்கள் அல்லர். பிறர் பூசை செய்கிறதைப் பார்த்து இறைவனை வழிபடும் பக்தனைவிட, தானே பூசை செய்கிறவர் சிறந்தவர். அவரை விடக் கண்மூடி அமர்பவர் உயர்ந்தவர். அவரைவிட எப்போதும் இறையுணர்வு மாறாமல் இருப்பவர் மிகச் சிறந்தவர். இந்த நால்வர் நிலைகளில் முதல் நிலை சரியை, இரண்டாவது நிலை கிரியை, மூன்றாவது நிலை யோகம்; நான்காவது நிலை ஞானம். இந்த நான்கும் படிப்படியாக எய்துவதற்கு உரியவை. 

சிலர் கிரியையாளர்க்குச் சரியை வேண்டாம் என்றும், யோகிகளுக்குக் கிரியையும் சரியையும் வேண்டாம் என்றும், ஞானிகளுக்கு ஒன்றுமே வேண்டாம் என்றும் சொல்வார்கள். அது தவறு. ஒருவன் சிறுகச் சிறுகச் சம்பாதித்து வீடு கட்டுகிறான். முதலில் கீழே பல அறைகளை உடைய வீட்டைக் கட்டிக் கொள்கிறான். பிறகு பொருள் ஈட்டி மேல்மாடி கட்டுகிறான். அப்பாலும் அவனுக்குப் பொருள் வந்தது; இரண்டாவது மாடி கட்டுகிறான். மறுபடியும் பணம் வந்து குவியவே, மூன்றாவது மாடியும் கட்டிக் கொள்கிறான். இப்போது அவனுடைய வீடு நாலடுக்கு மாளிகையாகப் பொலிகிறது. அவன் எப்போதும் நாலாவது அடுக்கில் உயர்ந்த பஞ்சணையில் இருக்கிறான். அப்படியானால் அவனுக்கும் மூன்றாவது அடுக்குக்கும் தொடர்பு உண்டு.  மற்ற அடுக்குகளுக்கு அவன் வருவது உண்டு. அவன் இருப்பது நாலாவது அடுக்கானாலும் மற்ற அடுக்குகளுக்கும் அவன் வருவான். ஒரடுக்கு மாத்திரம் கட்டிக் கொண்டவனுக்கு அந்த ஒன்றுதான் சொந்தம். இரண்டடுக்கை உடையவனுக்கு இரண்டும் சொந்தம். மூன்றடுக்கு மாளிகைக்காரனுக்கோ மூன்றுமே சொந்தந்தான். நாலடுக்கு மாளிகைக்காரன் மற்ற மூவரைவிட உயர்ந்த இடத்தில் இருப்பவன்தான். ஆனாலும் எல்லா அடுக்குகளிலும் அவன் உலாவி வருவான். 

அது போலத்தான் ஞானிகளாக இருப்பவர்கள் மற்ற மூன்று திறத்தினிலும்  ஈடுபடுவது உண்டு. திருஞானசம்பந்தப் பெருமான் இணையில்லாத ஞானம் பெற்றவர். அவர் திருத்தலங்கள்தோறும் சென்று வழிபாடு செய்தார்.  அது சரியை. நான்காம் பாதத்தை அடைந்தவர் நான்கு நிலையிலும் இருப்பார்கள் என்று தெரிந்துகொள்ள வேண்டும். "சிவஞான சித்தியார்" இந்த உண்மையைச் சொல்கிறது.

"ஞான யோகக் கிரியா சரியை நாலும்

     நாதன்தன் பணி; ஞானி நாலினுக்கும் உரியன்;

ஊனம் இலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன்

     யோகி; கிரியாவான்தான் ஒண்கிரியை ஆதி

ஆன இரண்டினுக்கு உரியன்; சரியையினில் நின்றோன்

     அச் சரியைக்கே உரியன்; ஆதலினால் யார்க்கும்

ஈனம் இலா ஞானகுருவே குருவும்; இவனே

     ஈசன் இவன்தான் என்றும் இறைஞ்சி ஏத்தே."  

ஆதலின், மெய்ஞ்ஞானம் பெற்றவர்களானாலும் இறைவன் அடியார்களைத் தொழுதலும் ஆலயங்களைத் தொழுதலும் ஆடுதலும் பாடுதலும் ஆகியவற்றை  இடைவிடாமல் செய்வார்கள். சீவன் முத்தராக இருப்பவர்களும் தம்மை வாசனாமலம்  தாக்காமல் இருக்கவேண்டி இவ்வாறு செய்வர். 

மேலே சொன்ன நாலு சோபானங்களில் இரண்டாவது கிரியை. இறைவனுடைய  திருவுருவைத் தானே பூசிப்பது அது.  இறைவனை பிம்பம், தம்பம், கும்பம் என்னும் வகைகளில் ஆவாகனம் செய்து அதனையே இறைவனாக மதித்துப்  பத்தியுடன் மலரிட்டுப் பூசை செய்ய வேண்டும். பூசை செய்வதற்கு அமைந்த முறைகள் பல. சிவபூசைக்கு உரிய விதிகள் பல. குருவினிடத்தில் தீட்சை பெற்றுக்கொண்டு முறையாகப் பூசை செய்யப் புகுந்தால் நெடுநேரம்  செல்லும். ஆயினும் யாவருக்கும் இந்த வசதியும் பக்குவமும் கிடைப்பதில்லை. அவர்களும்  ஒருவாறு பூசை செய்யலாம். மலரிட்டு இறைவனை வழிபடலாம். யாவரும் கிரியையாகிய பூசையைச் செய்யலாம் என்ற உரிமையைத் திருமூலர் "யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை" என்று சொல்லி, பூசை யாவரும் செய்யலாம் என்று தெளிய வைக்கிறார். 

பூசையில் முக்கியமானது அருச்சனை. அபிடேகம், அருச்சனை, தூபதீபம், நிவேதனம் ஆகியவற்றில் அருச்சனை சிறந்தது. ஆதலின் அருச்சித்தார் என்றாலே பூசை செய்தார் என்று பொருள். திருவிளையாடற் புராணத்தின் இறுதிப்  படலம் அருச்சனைப் படலம் என்பது. ஆலவாய் இறைவனுடைய திருவிளையாடல்களைக் கேட்ட முனிவர்கள் மதுரை சென்று சொக்கலிங்கப் பெருமானைப் பூசை செய்த வரலாற்றை  அப்படலம் சொல்கிறது. பூசனைப் படலம் என்று தலைப்பிட்டு இருக்கலாம். ஆயினும்,  பூசையில் அருச்சனை சிறந்ததாகையால் அருச்சனைப் படலம் என்றே அப்படலத்திற்குப் பெயர் உண்டானது. 

முதலில் அந்த முனிவர்கள் திருவிளையாடல்களைச் சொன்ன அகத்திய முனிவனைப் பூசித்தார்களாம். அந்தச் செய்தியை, 

"போத ஆனந்தத் தனிக்கடல் பருகும்

புயல்புரை முனிவனை வசிட்ட

மாதவன் ஆதி முனிவரும் உலோபா

முத்திரை தன்னொடும் வரித்துப்

போதொடு சாந்தம் மான்மதம் தீபம்

புகைமுதற் கருவி கைக்கொண்டு

மேதகு சிறப்பால் அருச்சனை செய்து

பின்னும் ஓர் வினாவுரை செய்வார்."

என்று பாடுகிறார் பரஞ்சோதியார்.  இங்கே முனிவர் பூசை செய்ததையே, "அருச்சனை செய்து" என்று சொன்னார். கையும் வாயும் இறைவனை அருச்சனை செய்யும்போது, கை மலரை எடுத்து அவன் திருவடியில் தூவ, வாய் அவன் திருநாமங்களைச் சொல்ல வேண்டும். சும்மா மலர்களை மாத்திரம் இடுவதால்  சிறந்த பயன் இல்லை. அப்படி இட்டால் ஓரளவு பயன் உண்டாகலாம். ஆயினும் வாயினால் அவன் திருநாமத்தைச் சொல்லி அருச்சனை செய்ய வேண்டும் என்பதற்காகவே இறைவன் திருநாம வரிசைகளாகிய நாமாவளியைப் பெரியோர்கள் அமைத்திருக்கிறார்கள். பதினாறு நாமங்களைக் கொண்ட ஷோடச நாமாவளி,  நூற்றெட்டுத் திருப்பெயர்களைக் கொண்ட அஷ்டோத்தர சத நாமாவளி, முந்நூறு நாமங்களைக் கொண்ட திரிசதி, ஆயிரம் நாமங்களைக் கொண்ட சகசிர நாமாவளி என்று அருச்சனை செய்வதற்காகவே பலவகை நாமாவளிகள் உள்ளன. ஒரு நாமத்துக்கு ஒரு மலராக இட்டு அருச்சிப்பது வழக்கம். 

இந்த வழக்கத்தைச்  சிவபுராணக் கதை ஒன்றினாலும் உணரலாம். திருமால் சிவபெருமானை அருச்சனை  செய்யப் புகுந்தார். ஆயிர நாம அர்ச்சனை செய்ய வேண்டுமென்று சங்கற்பித்துக்  கொண்டு ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு அருச்சனையைத்  தொடங்கினார். ஒவ்வொரு நாமத்துக்கும் ஒவ்வொரு பூவாக இட்டு வந்தார். கடைசியில் ஒரு பூக் குறைந்தது. திருமால் வருந்தினார். அடுத்த கணமே தாமரை மலரைப் போன்ற தம் கண்ணையே பிடுங்கிக் கடைசி மலராக இறைவன் திருவடியில் அருச்சித்தார். அதனால் மகிழ்ந்த இறைவன் திருமாலுக்குச் சக்கராயுதத்தை வழங்கியருளினார் என்பது புராண வரலாறு. 

"பங்கயம் ஆயிரம் பூவினில் ஓர் பூக் குறைய,

தம்கண் இடந்து அரன் சேவடிமேல் சாத்தலுமே,

சங்கரன் எம்பிரான் சக்கரம் மாற்கு அருளியவாறு

எங்கும் பரவி நாம் தோள்நோக்கம் ஆடாமோ."    --- திருவாசகம்.

பூவை மாத்திரம் இறைவன் திருவடியில் தூவுவதால் பயனில்லை. இறைவன்  திருநாமத்தையும் சொல்லவேண்டும். மனிதனுடைய மூன்று கரணங்களில் கை உடம்போடு சார்ந்தது. அது ஒரு கரணம். வாய் ஒரு கரணம். மற்றொன்று மனம். திரிகரணமும் ஒன்றிச் செய்யும் செயலுக்குத்தான் பயன் உண்டு. கையால் பூவை இட்டு, நாவால் நாமத்தைச் சொல்லி அருச்சிப்பதால் இரண்டு கரணங்களும் ஒன்றுகின்றன. அது மட்டும் போதாது. மூன்றாவது கரணமாகிய மனமும்  அருச்சனையில் ஒன்ற வேண்டும். அப்போதுதான் முழுப்பயனும் உண்டாகும். மனம் எங்கோ அலைய, கை மலரை எடுத்துத் தூவ, வாய்ப் பழக்கத்தால் திருநாமத்தைச்  சொல்வதும் உண்டு. மனத்தை அலையவிட்டால் பூவைத்  தூவுவதும் நாமம் சொல்லுவதும் பயனின்றி ஒழிகின்றன. 

"கைஒன்று செய்ய, விழிஒன்று நாட, கருத்து ஒன்று எண்ண,

பொய்ஒன்று வஞ்சக நா ஒன்று பேச, புலால் கமழும்

மெய் ஒன்று சார, செவிஒன்று கேட்க விரும்பும் யான்

செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே"   --- பட்டினத்தார். 

மனம் ஒன்றிச் செய்யமல், மலரை எடுத்து இட்டு அருச்சனை செய்யும்போது வெறும் கைமாத்திரம்  இயங்கினால் போதாது; வாக்கும் மனமும் ஒன்றுபட வேண்டும். இதனை அறிவுறுத்துவதற்காக அருணகிரிநாதர், "தகட்டில் சிறந்த கடம்பையும், நெஞ்சையும், தாள் இணைக்கே புகட்டிப் பணியப் பணித்து அருளாய்" என்று முருகப்பெருமானிடம் விண்ணப்பிக்கின்றார்.

கடம்ப மலர்  முருகனுக்கு உகந்தது. கடம்பன் என்றே சொல்வார்கள்.  முருகனுக்குத் தகட்டைப் போலச்  சிவந்த கடம்ப மலரால் அருச்சனை புரிய வேண்டும் என்று அருணகிரிநாதருக்கு ஆசை.  இறைவனைப் பணிந்து அவனுடைய பேரருளைப் பெற வேண்டும். அந்தப்  பேரருள் கிடைப்பதற்கு முன்பே அவனுடைய அருள் நமக்கு வேண்டியிருக்கிறது. அவன் திருவடி பணியவும் அவன் திருவருள் துணை செய்தால்தான் முடியும். "அவன் அருளாலே அவன்தாள் வணங்கி" என்பது மணிவாசகம்.  மணமலரும் மனமலரும் இசைந்தால்தான் அது பூசையாகும். திருவடிப் பூசை அவனுடைய அங்கங்களுக்கெல்லாம் பூசை செய்யலாம். பூசையில் சிறந்தது அருச்சனை என்றால், அங்க அருச்சனையில் சிறந்தது திருவடி அருச்சனை. அதை அன்புடன் செய்ய வேண்டும். அன்பு மனத்திலே நிகழ்வது. "அருச்சனை வயலுள் அன்புவித்து இட்டுத்  தொண்ட உழவர் ஆரத் தந்த அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க" என்பது திருவாசகம். 

சரியை செய்து முதிர்ந்து கிரியையில் புக வேண்டும். கிரியை பழுத்து யோக  நெறியில் செல்ல வேண்டும். யோகம் முற்றி ஞானம் ஆக வேண்டும். கிரியையில் மனம்  ஒருமைப்பாட்டை அடைந்தால் பின்பு யோகம் கைவரப் பெறும். தானே தனி நின்று  ஒருமைப்பாட்டை அடைய முடியாதாகையால் மலரைத் துணைக் கொள்ள வேண்டும். எதை நினைக்க வேண்டும் என்று அறியாமல் திண்டாடுகிற மனத்துக்கு இதோ இதைத் தியானிக்க வேண்டும் என்று மலரால் அடையாளம் இட்டுக் கொள்வது போல இருக்கிறது, அருச்சனையில் மலரை இடுவது. குழந்தைக்குக் காது குத்த வேண்டுமானால் பொற்கொல்லர் முதலில் குங்குமத்தால் குத்தும் இடத்தில் அடையாளம் செய்து கொள்வார்; பிறகு குத்துவார். அது போன்றது இது. துப்பாக்கி சுடப் பழகிக் கொள்கிறவர்கள் முதலில் ஒர் இலக்கை வைத்துச் சுடுவார்கள். பழக்கமான பிறகு எதையும் குறிவைத்துச் சுடும் ஆற்றல் வந்துவிடும். அதுபோல, இறைவன் திருவடியிலே மலரை இட்டு அதுவே அடையாளமாக அவ்விடத்தில் மனத்தை ஈடுபடுத்த வேண்டும். இந்தப் பழக்கம் வளர வளர, மலர் இல்லாமலே மனம் திருவடித்  தியானம் செய்யும் ஆற்றலைப் பெறும். மனத்தால் தனித்துச் செய்வதற்கு ஆற்றல் அதிகம் வேண்டும். அதுதான் யோக நெறி.

மலரையும் சரி, மனத்தையும் சரி வேறு எங்கும் சாத்தக்கூடாது. அதனை இறைவன்  திருவடியில் அணியும்போது, அது நமது மனமாகிய மலரை இடுவதற்கு அடையாளம் ஆகிறது. புற மலரை இடுவதனால் பூசை நிரம்பாது. அக மலரையும் இட வேண்டும். புற மலரை மட்டும் இட்டால் அது அரைப் பூசையாகவே முடியும். மனத்தை இறைவன் திருவடி மலரில் வண்டாக நின்று ஊதச் செய்ய வேண்டும்.  அதுதான் யோகம். அதற்கு முன்பு செய்யும் பயிற்சி இது. குழந்தைக்கு  மனக்கணக்குப் போடும் பக்குவம் வருவதற்கு முன் புளியங்கொட்டையை வைத்துக் கணக்கிடச் சொல்லிக் கொடுப்பார்கள். அவ்வாறே இறைவன் திருநாமத்தையும் மலரையும் கொண்டு அருச்சனை செய்வது, மன மலரையும் இறைவன் தாள் மலரில் இணைக்கும் பயிற்சியாக அமையும். அது முதிர்ந்தால் மனம் திருவடியைப் பற்றும்.  "தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது" என்னும் திருக்குறளில், "சேர்தல்" என்பது இடைவிடாது நினைத்தல் என்பதைக் குறிக்கும். மனம் இறைவன் திருவடியை இடைவிடாது நினைப்பது  எளிதிலே கைகூடும் செயல் அல்ல. நடக்க மாட்டாத குழந்தை நடைவண்டியைக் கொண்டு நடை பழகிக் கொள்வதைப் போல, மனம் பூவைக் கொண்டு தியானத்தைப் பழகிக் கொள்ள வேண்டும். நெஞ்சு என்பது உள்ளத்தைக் குறிப்பது. மனத்தின் உள்பகுதி அது. அதைக் கடம்போடு முருகன் திருவடியில் புகட்ட வேண்டும்.

மனமும்  முருகன் திருவடியைப் பற்றுவதனால் சிறந்த பயனைப் பெறும். கடம்ப மலர் மென்மையானது. மனமும் கடம்போடு சேர்ந்து திருவடியில் கிடக்கத் தொடங்கினால் சார்ந்த பொருளின் மென்மையைப் பெறும். வன்மையான மனத்தில் நெகிழ்ச்சி இராது. அன்பு என்பதே நெகிழ்ச்சிதான். வலிய மனத்தில் அன்பு உண்டாகாது. நெகிழ்ந்து உருகினால் மனத்தில் அன்பு உண்டாயிற்று என்பதைத் தெரிந்து கொள்ளலாம். "கல்மனமே நல் மனமாக் கரையப் பெற்றோம்" என்பார் அப்பர் பெருமான். மனத்தைத் தாளில் புகட்டினால் அருச்சனையும் பணிதலும் உண்மையாக  நிகழும்.  மனம் ஆசை வயப்பட்டு உலகத்தையெல்லாம் சுற்றுகிறது. உலகு முழுவதையும் தன் ஆசைக்  கரத்தில் அடக்கப் பார்க்கிறது. அதை இறைவன் திருவடியில் அடக்கப் பார்க்கிறார் அருணை வள்ளலார். அதற்குத் திருவருள் துணையை நாடுகிறார். 

முருகன், ஆசையை வளர்த்து உடலையும் வளர்த்துப் படையையும்  வளர்த்துக் கொடுமையையும் வளர்த்த சூரபதுமனை அடக்கியவன். சூரபதுமனுடைய ஆசைக்கு  அளவே இல்லை. ஆற்றல் இல்லாத நமக்கே எல்லையில்லாத ஆசைகள் எழுகின்றன. அசுரேந்திரனாகிய அவனுடைய ஆசை அசுர ஆசையாகத்தான்  இருக்கும். அதை அளவிட முடியாது. ஆனாலும் ஒருவாறு அதன் பரிமாணத்தை அவனுடைய பரிமாணத்தால்  சித்தரித்துக் காட்டுகிறார் அருணகிரிநாதர்.  இந்தப் பூவுலகமும் பிறவும் சேர்ந்த பெரிய உருண்டை ஒன்று உண்டு. அதற்குப்  பிரம்மாண்டம் என்று பெயர். தான் யாவருக்கும் எப்பொருளுக்கும் தலைவனாக இருக்க வேண்டும் என்ற பதவியாசை சூரபதுமனுக்கு உண்டாயிற்று. நாம் ஒரு காணி நிலம் வாங்குகிறோம். அதில் வேலி போட்டுக் கொள்கிறோம். பிறகு பக்கத்திலுள்ள வேறொரு காணியை வாங்குகிறோம். அதற்கும் சேர்த்து வேலி  போடுகிறோம். இப்படி நம் சொத்து விரிய விரிய வேலியும் விரிவடைகிறது. சூரபதுமனும் தன் சொத்தை விரிவாக்குகிறான். அதற்குத் தனியே வேலி போடவில்லை. தானே வேலியாகப் படர்கிறான்; உயர்கிறான். தானே தன் பொருளுக்கு எல்லை கோலி  நிற்கிறான். தன் மாயத்தால் எல்லாம் செய்யவல்ல அவன், இந்தப் பூமியைத் தனதாக்கிக் கொண்டான்.  இதைச் சார்ந்த கிரகங்களையும் தன்  ஆணைக்குள் அடக்கினான். பிரம்மாண்டம் முழுவதையும் தனக்கு உரியதாக்கி,  அதன் கீழே காலும் உச்சியில் தலையும் உடையவனாக வளர்ந்து சுற்று முற்றும் தன்  அரசின் அளவைப் பார்த்தான். தலைக்குமேல் புண்டரீகன் (பிரமன்) அண்டத்தின் முகடு இருந்தது. அதையும் நாம் நமக்குச் சொந்தமாக்கிக் கொண்டால் என்ன?’ என்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்று: 

கடலையும் மலையையும் நாட்டையும் கடந்து,  வானவெளியைத் தாண்டி, மேலே பறந்து  சந்திரமண்டலத்தில் கொடி கட்ட ஆசைப்படாத அரசு இல்லை. மனிதர்களுக்கே இந்த  ஆசை இருக்குமானால் அசுரர் தலைவனுக்குப் பிரம்மாண்டத்துக்கு மேலே உள்ளவற்றையும் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை எழுந்ததில் வியப்பு இல்லை. அவன் பிரம்மாண்டத்தின் அடிக்கும் முகட்டுக்குமாக தம்பம் போல  நின்றவன். அந்த முகட்டை ஒரு முட்டு முட்டினான். அண்ட முகடு பிளந்தது. மேலே ஆசை வளர்ந்தது. அதோடு அவனும் வளர்ந்தான். மேலே எட்டிப் பார்த்தான். அங்கே  இந்திரலோகம் இருந்தது. அதன் பொலிவு அவன் கண்ணைக் கவ்வியது. அங்கும் தன் ஆசைக் கரத்தை நீட்டினான். பின்னும் உயர்ந்தான். அந்த லோகத்தை முட்டும்படி அவன் எட்டினான். புண்டரீகன் அண்ட முகட்டைப் பிளந்து,  இந்த்ர லோகத்தை முட்ட எட்டி,  சூரபதுமன் தான் பிறந்த இடத்தோடு நில்லாமல் ஒவ்வோரிடமாகச் சென்று மோதித் தன் ஆணையை நிலை நிறுத்தினான். போன இடங்களிலெல்லாம் அவனுடைய கொடுமைக்குப் பயந்து யாவரும் குலைந்தனர். யாருக்கும் அடங்காத எருது, கொம்புகளை நீட்டிக் கொண்டு பாய்ந்து வரும்போது அதன் முன்னே நிற்க யாவரும் அஞ்சுவார்கள். அது மண்மேட்டைக் குத்தும்; சுவரை முட்டும்; மரத்தை மோதும்; மனிதர்களைக் குத்திக் குலை சாய்க்கும். அது போன இடமெல்லாம் படுநாசம். சூரபதுமனும் அப்படித்தான் புகுந்தான். தன் கொடுமையினால் யாவரையும் அஞ்சச் செய்தான். எங்கும் கொடுமையைப் பரப்பினான். விண்ணவர் யாவரும் அஞ்சி நடுங்கினர். 

இத்தகைய நிட்டூரம் உடையவனை - பகட்டைப் போலப் பொருதவனை - இந்திர லோகத்தை முட்டும்படியாக எட்டினவனை, அழிக்கப் புறப்பட்டான் முருகப்பெருமான். முருகனுடைய வீரச் செயலைக் கண்டு அதுகாறும் அச்சத்தை அறியாத சூரபதுமன் அச்சமுற்றான். எல்லாருக்கும் பயங்கரனாக இருந்த சூரனுக்குப் பயங்கரனாக முருகன் விளங்கினான். அப்படிபட்ட முருகப் பெருமானிடத்தில் இந்த விண்ணப்பத்தைச் செய்துகொள்கிறார் அருணகிரிநாதர். அடக்குவார் இல்லாமல் வளர்ந்து கொடுமை செய்த சூரபதுமனை அடக்கினவன்  முருகன். அடக்க முடியாமல் ஓடிக் கொடுமை செய்யும் மனத்தை அடக்க அந்த முருகனே  வழி காட்டுவான் என்று எண்ணி, இந்த வரலாற்றை இங்கே நினைத்துப் பின்வருமாறு முருகப் பெருமானிடம் விண்ணப்பிக்கின்றார்.  

"தகட்டில் சிவந்த கடம்பையும் நெஞ்சையும் தாள்இணைக்கே

 புகட்டிப் பணியப் பணித்து அருளாய், புண்டரீகன் அண்ட

முகட்டைப் பிளந்து வளர்ந்து இந்த்ர லோகத்தை முட்டஎட்டிப் 

பகட்டில் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே!"           --- கந்தர் அலங்காரம்.

இதன் பொருள் --- 

தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவரது உலகத்தின் வாயிலைப் பிளந்து, அதுவரை ஓங்கி நின்று, இந்திரலோகத்தை முட்டும்படி எட்டிச்சென்று, ஆண்யானை போல் போர் புரிந்த கொடும் குணம் உடையவன் ஆகிய சூரபதுமனுக்குப் பயங்கரத்தை உண்டு பண்ணினவரே! இலைகளோடு கூடி சிவந்த நிறம் உள்ள கடப்பமலர் மாலையையும், அடியேனுடைய மனத்தையும் தேவரீருடைய இரண்டு திருவடிக்கே சேர்த்து வணங்குமாறு அடியேனுக்குக் கட்டளை இட்டு அருள்வீர்.

(தகடு - மென்மையும் தட்டையுமான வடிவு. தகடு என்பதற்குப் பூவின் புற இதழ் என்றும் பொருள் உண்டு. புகட்டி - புகுத்தி; செலுத்தி. பணிய - வணங்கல். பணித்தல் - ஏவல் செய்யும்படி ஆக்குதல்; ஏவுதல். புண்டரீகன் - பிரமன். அவன் அண்டம், பிரமாண்டம். முகடு - உச்சி. முட்ட முட்டும்படியாக. பகடு - காளை பகட்டின் - பகட்டைப் போல. நிட்டுரம் - கொடுமையுடைய)

இறைவன் திருவடிகளில் மலரிட்டு வணங்கும்போது, நமது மனமாகிய மலரையும் சேர்த்து இட்டு வணங்குதல் வேண்டும். புறமலர் மட்டும் திருவடியில் சேர்ந்து, அகமலர் திருவடியில் பொருந்தவில்லையானால், பயனில்லை. இந்தப் பழக்கம் நாளடைவில், புறமலர் இல்லாமலே அகமலரால் இறைவனை வழிபாடு செய்யும் பக்குவத்தில் புகுத்தி விடும்.





No comments:

Post a Comment

மக்கட்செல்வம்

  மக்கட் செல்வம் ----- வாழ்வில் ஒருவன் பெற வேண்டிய செல்வங்கள் பலவற்றுள் மக்கள் செல்வமும் ஒன்று ஆகும். அதனை "நன்மக்கள் பேறு" என்ற...