Showing posts with label அறப்பளீசுர சதகம். Show all posts
Showing posts with label அறப்பளீசுர சதகம். Show all posts

100. நூலாசிரியரின் வணக்கம்


மலர்இதழி பைங்குவளை மென்முல்லை மல்லிகை

     மருக்கொழுந்து உயர்கூ விளம்

  மற்றும்உள வாசமலர் பத்திரம் சிலர்சூட

     மணிமுடி தனிற்பொ றுத்தே


சிலர்எருக் கொடுவனத் துட்பூளை பச்சறுகு

     செம்முள்ளி மலர்சூ டவே

  சித்தம்வைத்து அவையும்அங் கீகரித் திடுமகா

     தேவதே வா!தெ ரிந்தே


கலைவலா ருரைக்குநன் கவியொடுஅம் பலவாண

     கவிராயன் ஆகும் என்புன்

  கவியையும் சூடியே மனமகிழ்ந் திடுவதுஉன்

     கடன் ஆகும், அடல்நா கமும்


அலைபெருகு கங்கையும் செழுமதிய மும்புனையும்

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!


இதன் பொருள் —-

அடல் நாகமும், அலைபெருகு கங்கையும், செழுமதியமும் புனையும் அமலனே - கொல்லும் பாம்பும், அலைமிகுந்த கங்கையும், நல்ல பிறையும் அணிந்த தூயவனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

மலர் இதழி - மலர்ந்த கொன்றை, பைங்குவளை - பசிய குவளை, மென்முல்லை - மெல்லிய முல்லை, மல்லிகை - மருக்கொழுந்து, உயர் கூவிளம் - உயர்ந்த வில்வம், மற்றும் உள வாச மலர் - வேறும் உள்ள மணமலர், பத்திரம் - பச்சிலைகள் (ஆகியவற்றை) சிலர் சூட - சில (அடியார்கள்) அணிவிக்க, மணிமுடி தனில் பொறுத்து - நவமணிகள் இழைத்த திருமுடியில் ஏற்று, சிலர் எருக்கொடு வனத்துள் பூளை பச்சறுகு செம்முள்ளி மலர்சூட - சிலர் எருக்க மலருடன் காட்டிற் கிடைக்கும், பூளைப்பூவும், பசுமையான அறுகம்புல்லும் சிவந்த முள்ளி மலரும் அணிவிக்க, சித்தம் வைத்து அவையும் அங்கீகரித்திடும் மகாதேவ தேவா - மனம் வைத்து அவற்றையும் ஏற்று அருளும் பெருமைமிக்க தேவ தேவனே!

கலைவலார் தெரிந்து உரைக்கும் நன்கவியொடு - கலையில் வல்லவர்கள் ஆராய்ந்து கூறும் நல்ல பாக்களுடன், அம்பலவாண கவிராயன் ஆகும் என் புன்கவியையும் சூடிய - அம்பலவாண கவிராயன் ஆகிய என் இழிந்த பாவையும் அணிந்தே, மனம் மகிழ்ந்திடுவது உன் கடன் ஆகும் - திருவுள்ளம் களித்தருளுவது உன் கடமை ஆகும்.

99. சிவமூர்த்தங்கள்


"பிறைசூடி, உமைநேசன், விடையூர்தி, நடமிடும்

     பெரியன், உயர் வதுவை வடிவன்

  பிச் சாடனன்,காம தகனன், மற லியைவென்ற

     பெம்மான், புரம் தகித்தோன்,


மறமலி சலந்தரனை மாய்த்தவன், பிரமன்முடி

     வௌவினோன், வீரே சுரன்,

  மருவுநர சிங்கத்தை வென்றஅரன், உமைபாகன்

     வனசரன்,கங்கா ளனே,


விறல்மேவு சண்டேச ரட்சகன், கடுமாந்தி,

     மிக்கசக் கரம்உதவி னோன்,

  விநாயகற்கு அருள்செய்தோன், குகன்உமை யுடன்கூடி

     மிளிர்ஏக பாதன், சுகன்,


அறிவரிய தட்சிணா மூர்த்தியொடு இலிங்கம்ஆம்

     ஐயனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!”


இதன் பொருள் —-

பிறைசூடி - இளம்பிறையைத் திருமுடியில் தரித்தோன்,  உமைநேசன் - உமாதேவியின் காதலன் (உமாமகேசன்), விடை ஊர்தி - சேக்கிழான் (இடப ஊர்தி), நடம் இடும் பெரியன் - திருநடனம் புரியும் அண்ணல், உயர் வதுவை வடிவன் - உயர்ந்த திருமணக் கோலத்தான், பிச்சாடனன் - பிச்சை எடுப்போன், காம தகனன் - மாரனை எரித்தோன், மறலியை வென்ற பெம்மான் - காலனை உதைத்த பெரியோன், புரம் தகித்தோன் - முப்புரத்தை எரித்தவன், மறம் மலி சலந்தரனை மாய்த்தவன் - வீரம் நிறைந்த சலந்தரனைக் கொன்றவன், பிரமன் முடி வௌவினோன் - பிரமன் தலைகளில் ஒன்றைக் கிள்ளினோன், வீரேசுரன் - (வீரபத்திரன்), மருவும் நரசிங்கத்தை மாய்த்த அரன் - சரபேசுரன், உமை பாகன் - உமை பங்கன் (அர்த்தநாரீசன்) வனசரன் - வேடன், கங்காளன் - என்பு அணிந்தோன், விறல் மேவு சண்டேச ரட்சகன் - வலிமை பொருந்திய சண்டேசருக்கு அருளியவன், கடுமாந்தி - நஞ்சுண்டவன், மிக்க சக்கரம் உதவினோன் - (திருமாலுக்கு) உயர்ந்த சக்கரத்தைக் கொடுத்தவன், விநாயகற்கு அருள் செய்தோன் - மூத்த பிள்ளையாருக்கு அருளியவன், குகன் உமையுடன் கூடி - முருகன் உமை ஆகிய இருவருடன் கூடியவன் (சோமாஸ்கந்தமூர்த்தி) மிளிர் ஏக பாதன் - விளங்கும் ஒற்றைத் திருவடியான், சுகன் - இன்ப வடிவமானவன், அறிவு அரிய தட்சிணாமூர்த்தியொடு - அறிய இயலாத தக்கிணாமூர்த்தியுடன், இலிங்கம் ஆம் - இலிங்கம் ஆகிய, ஐயனே - தலைவனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

98. திருமால் அவதாரங்கள்

 



"சோமுகா சுரனை முன் வதைத்துஅமரர் துயர்கெடச்

     சுருதிதந் ததுமச் சம்ஆம்;

  சுரர்தமக்கு அமுதுஈந்தது ஆமையாம்; பாய்போற்

     சுருட்டிமா நிலம்எ டுத்தே


போம்இரணி யாக்கதனை உயிர்உண்டது ஏனமாம்;

     பொல்லாத கனகன் உயிரைப்

  போக்கியது நரசிங்கம்; உலகுஅளந்து ஓங்கியது

     புனிதவா மனமூர்த் திஆம்;


ஏமுறும் இராவணனை வென்றவன் இராகவன்;

     இரவிகுலம் வேர் அறுத்தோன்

  ஏர்பர சிராமன்; வரு கண்ணனொடு பலராமன்

     இப்புவி பயந்த விர்த்தோர்


ஆம்இனிய கற்கிஇனி மேல்வருவது இவைபத்தும்

     அரிவடிவம்; அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!”


இதன் பொருள் —-

அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

முன் சோமுக அசுரனை வதைத்து அமரர் துயர் கெடச் சுருதி தந்தது மச்சம் ஆம் - முற்காலத்தில் சோமுகன் என்னும் அசுரனைக் கொன்று தேவர்கள் துன்பம் கெடும்படி செய்து மறைகளைக் கொண்டு வந்தது மீன் தோற்றம் ஆகும், 

சுரர் தமக்கு அமுது ஈந்தது ஆமை ஆம் - வானவர்க்கு அமுதத்தை அளிக்க எடுத்துக் கொண்ட தோற்றம் ஆமை ஆகும், 

மாநிலம் பாய்போற் சுருட்டி எடுத்தே போம் இரணியாக்கதனை உயிர் உண்டது ஏனம் ஆம் - பெரிய நிலத்தைப் பாயைப் போலச் சுருட்டி எடுத்துச் செல்லும் இரணியாக்கன் உயிரைப் பருகியது பன்றி ஆகும், 

பொல்லாத கனகன் உயிரைப் போக்கியது நரசிங்கம் - கொடிய இரணியன் உயிரை ஒழித்தது நரசிங்கம் ஆகும், 

உலகு அளந்து ஓங்கியது புனித வாமன மூர்த்தி ஆம் - உலகத்தை (மாவலியிடம் மூவடி மண்ணைத் தானம் பெற்று) அளக்க நெடிய உருக் கொண்டது வாமன வடிவம் ஆகும்,

இரவிகுலம் வேர் அறுத்தோன் ஏர் பரசு இராமன் - கதிரவன் மரபை அடியுடன் ஒழித்தவன் அழகிய கோடரி ஏந்திய பரசுராமன் ஆவான், 

ஏம் உறும் இராவணனை வென்றவன் இராகவன் - செருக்கு அடைந்திருந்த இராவணனை வெற்றிகொண்டவன் இரகு மரபில் பிறந்த இராமன் ஆவான், 

இப் புவி பயம் தவிர்த்தோர் வரு பலராமனொடு கண்ணன் - இவ்வுலகின் அச்சத்தை நீக்கப் பிறந்து வந்தோர் பலராமனும் கண்ணனும் ஆவர், 

இனிமேல் வருவது இனிய கற்கி ஆம் - இனிமேல் தோன்றக்கூடியது இனிய கற்கி ஆகும், 

இவை பத்தும் அரிவடிவம் - இவை பத்தும் திருமாலின் திரு அவதாரங்கள்.

97. அரிதானவை, புகழ்ச்சிக்கு உரியவை

 



பருகாத அமுது,ஒருவர் பண்ணாத பூடணம்,

     பாரில்மறை யாத நிதியம்,

  பரிதிகண்டு அலராத நிலவுகண்டு உலராத

     பண்புடைய பங்கே ருகம்,


கருகாத புயல், கலைகள் அருகாத திங்கள், வெங்

     கானில் உறை யாத சீயம்;

  கருதரிய இக்குணம் அனைத்தும்உண் டானபேர்

     காசினியில் அருமை யாகும்!


தெரியவுரை செய்யின்மொழி, கீர்த்தி, வரு கல்வியொடு,

     சீரிதயம், ஈகை, வதனம்,

  திடமான வீரம், இவை யென்றறிகு வார்கள்! இச்

     செகமெலாம் கொண்டா டவே


அருள் கற்ப தருஎன்ன ஓங்கிடும் தான துரை

     ஆகும்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!”


இதன்பொருள் —-


இச் செகம் எலாம் கொண்டாடவே - இவ்வுலகெங்கும் புகழும்படியாக, அருள் கற்ப தரு என்ன - அருள் மிகுந்த கற்பகத் தருவைப் போல, ஓங்கிடும் தானதுரை ஆகும் - உயர்ந்த கொடைத்தலைவன் ஆகிய, எமது அருமை மதவேள் - எம் அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே! 

பருகாத அமுது - உண்ணாத அமுதம், ஒருவர் பண்ணாத பூடணம் - ஒருவராற் செய்யப்படாத அணிகலம்; பாரில் மறையாத நிதியம் - உலகில் அழியாத செல்வம், பரிதி கண்டு அலராத, நிலவு கண்டு உலராத பண்புடைய பங்கேருகம் - ஞாயிற்றைக் கண்டு மலராததும் திங்களைக் கண்டு வாடாததும் ஆகிய தன்மையுடைய தாமரை, கருகாத புயல் - கருநிறம் பெறாது பெய்யும் முகில், கலைகள் அருகாத திங்கள் - கலைகள் குறையாத திங்கள், வெங்கானில் உறையாத சீயம் - கொடிய காட்டில் வாழாத சிங்கம், கருத அரிய இக்குணம் அனைத்தும் உண்டான பேர் காசினியில் அருமையாகும் - நினைவிற்கு எட்டாத இப்பண்புகள் யாவும் உடையவர் இவ்வுலகில் கிடைப்பது அருமையாகும், 

(எனினும், இவைகட்கு ஒப்பாக) தெரிய உரை செய்யின் - விளங்க எடுத்துக் கூறினால் (முறையே), மொழி, கீர்த்தி, வருகல்வியொடு, சீர்இதயம், ஈகை, வதனம், திடமான வீரம் இவை என்று அறிகுவார்கள் - உரையும், புகழும், வளரும் கல்வியும், சிறப்புள்ள உள்ளமும், கொடைப் பண்பும்,  அழகான முகமும், அசையாத வீரமும் ஆகிய இவையே என்று தெரிந்துகொள்வார்கள்.

96, புராணங்கள்

“தலைமைசேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்

     சாரும்வா மனம், மச் சமே,

  சைவம், பெ ருங்கூர்மம், வருவரா கம், கந்த

     சரிதமே, பிரமாண் டமும்,


தலைமைசேர் இப்பத்தும் உயர்சிவ புராணம்ஆம்;

     நெடியமால் கதை;வை ணவம்

  நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம்,

     நீடிய புராணம் நான்காம்;


கலைவளர்சொல் பதுமமொடு, கிரமகை வர்த்தமே,

     கமலா லயன்கா தைஆம்;

  கதிரவன் காதையே சூரிய புராணமாம்;

     கனல் காதை ஆக்கி னேயம்;


அலைகொண்ட நதியும்வெண் மதியும்அறு கும்புனையும்

     அத்தனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!”


இதன் பொருள் —

அலைகொண்ட நதியும் வெண்மதியும் அறுகும் புனையும் அத்தனே - அலை வீசும் கங்கை ஆற்றையும் வெண்திங்களையும் அறுகையும் மிலைந்த தலைவனே!  

அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

தலைமைசேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்சாரும் வாமனம், மச்சம், சைவம், பெருங்கூர்மம், வருவராகம், கந்தசரிதம், பிரமாண்டமும் - நிலைமைசேர் இப்பத்தும் உயர் சிவபுராணம் ஆம் - நிலையான இவை பத்தும் உயர்ந்த சிவபுராணங்கள் ஆகும், நெடிய மால் கதை - நெடியவனான திருமாலின் கதைகள், வைணவம், நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம், நீடிய புராணம் நான்கு ஆம் - பெருமையுடைய புராணங்கள் நான்கும் ஆம், கலைவளர் சொல் பதுமமொடு பிரமகை வர்த்தமே கமலாலயன் காதை ஆம் - கலைவல்லார் கூறும் பதுமபுராணமும் பிரமகைவர்த்த புராணமும் தாமரை மலரவன் காதைகள் ஆகும், கதிரவன் காதையே சூரிய புராணம் ஆம் -, கனல் காதை ஆக்கினேயம் - அக்கினியின் கதை ஆக்கினேய புராணம்.

சைவபுராணம் பத்து; வைணவபுராணம் நான்கு; பிரமபுராணம் இரண்டு, கதிரவன் புராணம் ஒன்று; ஆக்கினேய புராணம் ஒன்று; ஆகப் பதினெண் புராணங்கள்.

95. இல்லற மாண்பு

 


“தந்தைதாய் சற்குருவை இட்டதெய் வங்களைச்

     சன்மார்க்கம் உளமனை வியைத்

  தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்

     தனைநம்பி வருவோர் களைச்


சிந்தைமகிழ்வு எய்தவே பணிவிடைசெய் வோர்களைத்

     தென்புலத் தோர் வறிஞரைத்

  தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்

     தேனுவைப் பூசுரர் தமைச்


சந்ததம் செய்கடனை என்றும்இவை பிழையாது

     தான்புரிந் திடல்இல் லறம்;

  சாருநலம் உடையராம் துறவறத் தோரும்இவர்

     தம்முடன் சரியா யிடார்!


அந்தரி உயிர்க்கெலாந் தாய்தனினும் நல்லவட்

     கன்பனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!”


இதன் பொருள் —-

அந்தரி உயிர்க்கு எலாம் தாய் தனினும் நல்லவட்கு அன்பனே - பார்வதிதேவியும், உநிர்க்கு எல்லாம் தாயியினும் நல்லவளுமான உமையம்மைக்குக் காதலனே!

அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

தந்தைதாய் சற்குருவை - தந்தை தாயரையும் நல்லாசிரியனையும், இட்ட தெய்வங்களை - வழிபாடு தெய்வங்களையும், சன்மார்க்கம் உள மனைவியை - நல்லொழுக்கமுடைய இல்லாளையும், தவறாத சுற்றத்தை - நீங்காத உறவினரையும், ஏவாத மக்களை - குறிப்பறிந்து செய்யும் பிள்ளைகளையும், தனை நம்பி வருவோர்களை - தன்னை நம்பிப் புகலாக அடைந்தோர்களையும், சிந்தை மகிழ்வு எய்தவே பணிவிடை செய்வோர்களை - மனம் மகிழத் தொண்டு புரிவோர்களையும், தென்புலத்தோர் வறிஞரை - தென்புலத்தாரையும் ஏழைகளையும், தீது இலா அதிதியை - குற்றமற்ற விருந்தினரையும், பரிவு உடைய துணைவரை - அன்புமிக்க உடன்பிறப்பாளர்களையும், தேனுவை - பசுக்களையும், பூசுரர் தமை - அந்தணர்களையும், (ஆதரித்தலும்) சந்ததம் செய் கடனை - எப்போதும் செய்யும் கடமைகளையும், இவை - (ஆகிய) இவற்றை, சந்ததம் பிழையாது - எப்போதும் தவறாமல், தான் புரிந்திடல் இல்லறம் - ஒருவன் இயற்றுவது இல்லறம் எனப்படும், சாரும் நலம் உடையர் ஆம் துறவறத்தோரும் இவர் தம்முடன் சரிஆயிடார் - பொருந்திய நன்மையை உடையராகிய துறவு நெறியிலே தவறாது நிற்போரும் இவர்களுடன் ஒப்பாகமாட்டார்.

      “அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை, அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று” என்னும் திருவள்ளுவ நாயனார் வாய்மொழியையும், “இல்லறம் அல்லது நல்லறம் அன்று” என்னும் ஔவையின் அருள்மொழியையும் கருத்தில் கொள்க.

94. முப்பத்திரண்டு அறங்கள்

 


"பெறுமில், பெறுவித்தலொடு, காதோலை, நாள்தொறும்

     பிள்ளைகள் அருந்தி டும்பால்,

  பேசரிய சத்திரம், மடம்,ஆ வுரிஞ்சுகல்

     பெண்போகம், நாவிதன், வணான்,


மறைமொழிக ணாடி, தண்ணீர், தலைக் கெண்ணெய்பசு

     வாயின்உறை, பிணம்அ டக்கல்,

  வாவி, இறும் உயிர்மீட்டல், தின்பொருள், அடைக்காய்

     வழங்கல், சுண் ணாம்பு தவுதல்,


சிறையுறு பவர்க்கமுது, வேற்றிலம் காத்தல், பொழில்

     செய்தல், முன் னூலின் மனம்,

  திகழ்விலங் கூண், பிச்சை, அறுசமய ருக்குண்டி,

     தேவரா லாயம்,அ வுடதம்;


அறைதல்கற் போர்க்கன்னம் நாலெட் டறங்களும்முன்

     அன்னைசெயல்; அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---


அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

பெறும் இல் - மகவு பெறுதற்கு வீடு விடுதல், பெறுவித்தலொடு - மகவு பெறுதற்கு வேண்டியவற்றை உதவுதல், காது ஓலை - காதணி அளித்தல், நாள்தொறும் பிள்ளைகள் அருந்திடும் பால் - அன்றாடம் குழந்தைகள் பருகும் பால் அளித்தல், பேச அரிய சத்திரம் - சொலற்கரிய சத்திரம் கட்டல், மடம் - (துறவிகள் இருக்கும்) மடம் அமைத்தல், ஆவுரிஞ்சு கல் - பசுக்களின் தினவு நீக்கும் கல்நடுதல், பெண்போகம் - பெண்களுக்கு இன்பம் அளித்தல், நாவிதன் - அம்பட்டனுக்கு உதவுதல், வணான் - வண்ணானுக்கு உதவுதல், மறைமொழி கண்ஆடி - மறையில் கூறுமாறு கண்ணாடி யீதல், தண்ணீர் - நீர் வேட்கையைத் தணித்தல், தலைக்கு எண்ணெய் - தலைக்கு எண்ணெய் கொடுத்தல், பசுவின் வாய் உறை - பசுக்களுக்குத் தீனி, பிணம் அடக்கல் - (ஆதரவு அற்ற) பிணத்தை அடக்கம் செய்தல், வாவி - குளம் வெட்டுதல், இறும் உயிர் மீட்டம் - இறக்கும் உயிரைக் காத்தல், தின்பொருள் - தின்பண்டம் அளித்தல், அடைக்காய் வழங்கல் - வெற்றிலை பாக்குக் கொடுத்தல், சுண்ணாம்பு உதவுதல், சிறை உறுபவர்க்கு அமுது - சிறையில் அகப்பட்டவர்க்கு உணவு கொடுத்தல், வேறு இலம் காத்தல் - பிறர் துயரைப் போக்குதல், பொழில் செய்தல் - சோலை வைத்தல், முன் நூலின் மணம் - பழைய நூல் முறைப்படித் திருமணம் செய்வித்தல், திகழ் விலங்கு ஊண் - விளங்கும் விலங்குகளுக்கு உணவளித்தல், பிச்சை - இரப்போர்க்கு ஈதல், அறு சமயருக்கு உண்டி - அறுவகை அகச் சமயத்தாருக்கும் உணவு அளித்தல், தேவராலயம் - திருக்கோயில் கட்டுதல், அவுடதம் - மருந்து கொடுத்தல், அறைதல் கற்போருக்கு அன்னம் - பாடம் படிப்போர்க்கு உணவு அளித்தல், நாலெட்டு அறங்களும் - (ஆகிய) முப்பத்திரண்டு அறங்களும், முன் அன்னை செயல் - முற்காலத்தில் உமையம்மையார் திருக் காஞ்சியில் செய்தவை ஆகும்.


93. பகுத்துப் பயன் கொள்ளுதல்.

 


"சுவைசேர் கரும்பைவெண் பாலைப் பருத்தியைச்

     சொல்லும்நல் நெல்லை எள்ளைத்

  தூயதெங் கின்கனியை எண்ணாத துட்டரைத்

     தொண்டரைத் தொழுதொ ழும்பை


நவைதீரு மாறுகண் டித்தே பயன்கொள்வர்

     நற்றமிழ்க் கவிவா ணரை

  நலமிக்க செழுமலரை ஓவிய மெனத்தக்க

     நயமுள்ள நாரியர் தமைப்


புவிமீதில் உபகார நெஞ்சரைச் சிறுவரைப்

     போர்வீர ரைத்தூ யரைப்

  போதவும் பரிவோடு இதஞ்செய்ய மிகுபயன்

     புகழ்பெறக் கொள்வர் கண்டாய்


அவமதி தவிர்த் தென்னை ஆட்கொண்ட வள்ளலே!

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

அவமதி தவிர்த்து என்னை ஆட்கொண்ட வள்ளலே - தீய அறிவை நீக்கி என்னை அடிமை கொண்ட வள்ளலே! அண்ணலே - தலைவனே! அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!


சுவை சேர் கரும்பை - சுவை பொருந்திய கரும்பையும், வெண் பாலை - வெண்மையான பாலையும், பருத்தியை - பருத்தியையும், சொல்லும் நல் நெல்லை - சொல்லப்படுகின்ற நல்ல நெல்லையும், எள்ளை - எள்ளையும், தூய தெங்கின் கனியை - தூய்மை பொருந்திய தென்னம் பழத்தையும், எண்ணாத துட்டரை - மதிக்காத தீயவர்களையும், தொண்டரை - அடிமையாளரையும், தொழு தொழும்பை - குற்றேவேல் செய்வோரையும், நவை தீருமாறு - குற்றம் நீங்கும்படி, கண்டித்தே பயன் கொள்வர் - கண்டனம் செய்தே அவர்களால் ஆன பயனைப் பெறுவார்கள்,

நல் தமிழ்வாணரை - நல்ல தமிழைக் கற்றுச் சிறந்த புலவரையும், நலம் மிக்க செழுமலரை - நன்மை மிகுந்த செழித்த பூவையும், ஓவியம் எனத் தக்க நயம் உள்ள நாரியர் தமை - ஓவியத்தில் எழுதிய பாவை என்று சொல்லத் தகுந்த அழகுள்ள பெண்களையும், புவி மீதில் உபகார நெஞ்சரை - பூமியின் மீதில் உதவி செய்யவேண்டுமென்று மனம் படைத்தோரையும், சிறுவரை - சிறுவரையும், போர் வீரரை - போர் வீரர்களையும், தூயரை - தூய்மை பொருந்திய பெரியோர்களையும், போதவும் பரிவோடு மிகுபயன் புகழ் பெறக் கொள்வர் - மிகுதியான அன்போடு மிகுந்த பயன்களை அவர்களுக்குப் புகழ் உண்டாகும்படி கொள்வார்கள்.

      (தொழும்பர் - , அடிமைத்தொழில் செய்வோர், அடிமையாள், குற்றேவல் செய்வோர். நவை - குற்றம், இழிவு.)


92. பகை கொள்ளத் தகாதவர்

 


"மன்னவர், அமைச்சர், துர்ச்சனர், கோளர், தூதரொடு

     மாறாத மர்மம் உடையோர்,

  வலுவர், கரு ணீகர்,மிகு பாகம்செய்து அன்னம்இடும்

     மடையர்,மந் திரவாதியர்,


சொன்னம் உடையோர் புலையர், உபதேசம் அதுசெய்வோர்

     சூழ்வயித் தியர், கவிதைகள்

  சொற்றிடும் புலவர் இவர் பதினைந்து பேரொடும்

     சொப்பனந் தனில் ஆகிலும்


நன்னெறி அறிந்தபேர் பகைசெய்தி டார்கள் இந்

     நானிலத்து என்பர் கண்டாய்!

  நாரியோர் பாகனே! வேதாக மம்பரவும்

     நம்பனே! அன்பர் நிதியே!


அன்னம்ஊர் பிரமனும் கண்ணனும் காணாத

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

நாரி ஓர் பாகனே - உமையொரு பங்கரே! 

வேத ஆகமம் பரவும் நண்பனே - மறையும் ஆகமமும் போற்றும் சிறப்பு உடையவரே!

அன்பர் நிதியே - அன்பரின் சேமப்பொருளே!, 

அன்னம் ஊர் பிரமனும் கண்ணனும் காணாத அண்ணலே - அன்னப் பறவையின் மேல் ஊர்ந்து வரும் நான்முகனும் திருமாலும் (முறை\யே திருமுடியும் திருவடியும்) காண இயலாத பெரியோனே!

அருமை மதவேள் -  அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,  

மன்னர் - அரசர், அமைச்சர் - மந்திரிகள், துர்ச்சனர் - தீயோர், கோளர் - கோள் சொல்லுவோர், தூதரொடு - தூதர்களுடன், மாறாத மர்மம் உடையோர் - நீங்காத செற்றம் கொண்டவர்கள், வலுவர் - வலிமையுடையோர், கருணீகர் - கணக்கர், மிகு பாகம் செய்து அன்னம் இடும் மடையர் - சிறந்த சமையல் செய்து உணவிடும் சமையற்காரர், மந்திர வாதியர் - மந்திரஞ் செய்வோர் சொன்னம் உடையோர் - செல்வ மிக்கவர்கள், புலையர் - இழிந்தோர், உபதேசமது செய்வோர் - உபதேசியர், சூழ் வயித்தியர் - ஆராய்ச்சியுடைய மருத்துவர், கவிதைகள் சொற்றிடும் புலவர் - செய்யுள் இயற்றும் புலவர்கள், 

இவர் பதினைந்து பேரொடும் சொப்பனந்தனில் ஆகிலும் நன்னெறி அறிந்த பேர் இந்நானிலத்து பகை செய்திடார் - இவர்கள் பதினைவருடனும் கனவிலும் நல்ல நெறி அறிந்தவர்கள் இவ்வுலகில் பகை கொள்ளார், என்பர் - என்று பெரியோர் கூறுவர்.

      (நன்மை + நெறி - நன்னெறி, மடை - சமையல் வேலை, சோறு. மடையர் - சமையல் செய்வோர். உபதேசம் புரிவோர் - ஆன்மநெறி கற்பிக்கும் ஆசிரியர்.


91. மன்மதனின் துணைப் பொருள்கள்

 

"வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;

     மேல்விடும் கணைகள் அலராம்;

  வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;

     வேழம்கெ டாதஇருள் ஆம்;


வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடிய

    வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;

  மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;

    மனதேபெ ரும்போர்க் களம்;


சஞ்சரிக இசைபாடல்; குமுதநே யன்கவிகை;

    சார்இரதி யேம னைவிஆம்;

  தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்

    தவறாதி ருக்கும் இடம்ஆம்;


அஞ்சுகணை மாரவேட் கென்பர்; எளியோர்க்கெலாம்

    அமுதமே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

    அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

எளியோர்க்கு எலாம் அமுதமே - ஆற்றல் அற்றவர்கள் எல்லாருக்கும் அமுதம் போன்றவனே!, அருமை மதவேள் -  அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

அஞ்சு கணை மார வேட்கு - ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு, வெம் சிலை செழுங் கழை - கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும், 

நாரி கருவண்டு இனம் - அம்பு கரிய வண்டின் கூட்டம் (ஆகும்). 

மேல் விடும் கணைகள் அலர் ஆம் - (உயிர்களின்) மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும், 

தேர் வீசிடும் தென்றல் - தேர் உலவும் தென்றற் காற்று (ஆகும்), 

பரிகள் பைங்கிள்ளையே - குதிரைகள் பச்சைக் கிளிகளே (ஆகும்). 

வேழம் கெடாத இருள் ஆம் - யானை அழியாத இருளாகும். 

பெருஞ்சேனை வஞ்சியர் - மிகுபடை பெண்கள் (ஆவர்), 

உடைவாள் கைதை - உடைவாள் தாழை மடல் (ஆகும்), 

முரசம் நெடிய வண்மைபெறு கடல் ஆம் - போர் முரசு நீண்ட கொடைத் தன்மை பொருந்திய கடலாகும், 

பதாகை மகரம் - கொடி மகர மீன் ஆகும், 

காகளம் வரு கோகிலம் - சின்னம் (வேனிலில்) வரும் குயிலாகும், 

பெரும் போர்க்களம் மனதே - பெரிய போர்க்களம் (உயிர்களின்) உள்ளமே ஆகும், 

பாடல் சஞ்சரிக இசை - பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும், 

கவிகை குமுதம் நேயன் - குடை சந்திரன் (ஆவான்); 

மனைவி சார் இரதியே ஆம் - காதலி (அழகு) பொருந்திய இரதியே ஆவாள், 

மகுடம் தறுகண் மடமாதர் இளமுலை ஆம் - அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள் முடி ஆகும், 

தவறாது இருக்கும் இடம் அல்குல் ஆம் - எப்போதும் விடாமல் வீற்றிருக்கும் இடம் (பெண்களின்) அல்குல் ஆகும், 

என்பர் - என்று அறிஞர் கூறுவர்.

     (வி-ரை.) சஞ்சரிகம் - வண்டு. குமுதம் - அல்லி. அல்லியின் காதலன் சந்திரன் என்பர். சந்திரனைக் கண்டால் அல்லி மலரும். வெம்மை+சிலை - வெஞ்சிலை. பசுமை+கிள்ளை - பைங்கிள்ளை. செழுமை+கழை - செழுங் கழை. பெருமை + சேனை - பெருஞ்சேனை. உடைவாள் - அரையில் கட்டப்படும் வாள்.


90. மன்மதன் அம்புகள் - அவற்றின் பண்புகள்

 



"வனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,

     மலர்நீலம் இவைஐந் துமே

  மாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரி

     மனதில் ஆசையை எழுப்பும்;


வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;

     மிகஅசோ கம்து யர்செயும்;

  வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம்உயிர் போக்கிவிடும்;

     மேவும்இவை செயும்அ வத்தை;


நினைவில்அது வேநோக்கம், வேறொன்றில் ஆசையறல்,

     நெட்டுயிர்ப் பொடுபி தற்றல்,

  நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்

     நேர்தல், மௌனம் புரிகுதல்,


அனையவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்!

     அத்தனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

அத்தனே - தலைவனே! அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

வனசம் செழுஞ்சூதமுடன் அசோகம், தளவம், மலர்நீலம் இவை ஐந்துமே மாரவேள் கணைகள் ஆம் - தாமரை, வளமிகுந்த மா, அசோகு, முல்லை, மலர்ந்த நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும்,

இவை செயும் குணம் - இவை (உயிர்களுக்கு) ஊட்டும் பண்புகள், முளரி மனதில் ஆசையை எழுப்பும் - தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும், வினவில் ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும் - வினவுமிடத்துச் சிறப்புடைய மா மலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும், அசோகம் மிகத் துயர் செயும் - அசோக மலர் மிகவும் துன்பத்தைத் கொடுக்கும், குளிர் முல்லை வீழ்த்திடும் - குளிர்ந்த முல்லை மலர் (படுக்கையில்) விழச் செய்யும், நீலம் உயிர் போக்கிவிடும் - நீலமலர் உயிரை ஒழிக்கும்,

மேவும் இவை செயும் அவத்தை - பொருந்தும் இவை உண்டாக்கும் நிலைகளாவன:- நினைவில் அதுவே நோக்கம் - எண்ணத்தில் அதுவே கருதுதல், வேறு ஒன்றில் ஆசை அறல் - மற்றொன்றில் ஆசை நீங்கல், நெட்டுயிர்ப்பொடு பிதற்றல் - பெருமூச்சுடன் பிதற்றுதல், நெஞ்சம் திடுக்கிடுதல் - உள்ளம் திடுக்கிடல், அனம் வெறுத்திடல் - உணவில் வெறுப்பு, காய்ச்சல் - உடல் வெதும்புதல், நேர்தல் - மெலிதல், மௌனம் புரிகுதல் - பேசாதிருத்தல், அனைய உயிர் உண்டு இல்லை என்னல் - ஆசையுற்ற உயிர் உண்டோ இல்லையோ என்னும் நிலையடைதல், ஈரைந்தும் ஆம் - (ஆகிய இவை) பத்தும் ஆகும்.


89. தத்துவத் திரயம்.

 


"பூதம்ஓர் ஐந்துடன், புலன்ஐந்தும், ஞானம்

     பொருந்தும்இந் திரியம் ஐந்தும்,

  பொருவில்கன் மேந்திரியம் ஐந்தும், மனம் ஆதியாம்

     புகலரிய கரணம் நான்கும்,


ஓதினோர் இவை ஆன்ம தத்துவம் எனச் சொல்வர்;

     உயர்கால நியதி கலையோடு

  ஓங்கிவரு வித்தை, ராகம், புருடன் மாயை என்று

     உரைசெய்யும் ஓர் ஏழுமே


தீதில்வித் யாதத்வம் என்றிடுவர்; இவையலால்

     திகழ்சுத்த வித்தை ஈசன்,

  சீர்கொள்சா தாக்கியம், சத்தி, சிவம் ஐந்துமே

     சிவதத்வம் என்று அறைகுவார்;


ஆதிவட நீழலிற் சனகாதி யார்க்கருள் செய்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே."


இதன் பொருள் ---

ஆதி வடநீழலில் சனகாதியர்க்கு அருள்செய்  அண்ணலே - முற்காலத்தில் கல் ஆலமரத்தின் நிழலில் வீற்றிருந்து சனகாதியர் நால்வருக்கு அருள்புரிந்த பெரியோனே!, 

அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

பூதம் ஓர் ஐந்து - ஓர் ஐம்பூதங்களும், உடன் புலன் ஐந்தும் - (அவற்றுடன்) ஐம்புலன்களும், ஞானம் பொருந்தும் இந்திரியம் ஐந்தும் - ஞான இந்திரியங்கள் ஐந்தும், பொரு இல் கன்ம இந்திரியம் ஐந்தும் - உவமையில்லாத கன்ம இந்திரியங்கள் ஐந்தும், மனம் ஆதி ஆம் புகல் அரிய கரணம் நான்கும் - மனம் முதலிய சொல்லற்கரிய கரணங்கள் நான்கும், இவை ஆன்ம தத்துவம் என ஓதினோர் சொல்வர் - இவற்றை ஆன்ம தத்துவம் என்று கற்றறிந்தோர் கூறுவர்;

உயர்காலம் நியதி கலையோடு ஒங்கிவரு வித்தை ராகம் புருடன் மாயை என்று உரைசெய்யும் ஓரேழுமே தீது இல் வித்யா தத்துவம் என்றிடுவர் - உயர்வாகிய காலம், நியதி, கலைகளோடு கூறப்படும் ஏழினையும் குற்றமற்ற வித்தியாதத்துவம் எனக் கூறுவர்;

இவை அலால் - இவையல்லாமல், 

திகழ் சுத்தவித்தை, ஈசன், சீர்கொள் சாதாக்கியம், சத்தி, சிவம் ஐந்துமே சிவ தத்துவம் என்று அறைகுவார் - விளங்கும் சுத்தவித்தை, ஈசன், சிறப்புடைய சாதாக்கியம் சத்தி, சிவம் (ஆகிய) ஐந்தினையும் சிவ தத்துவம் என்று கூறுவர்.


விளக்கம் ---

பூதம் ஐந்து : மண், நீர், அனல், வளி, வான். 

புலன் ஐந்து: சுவை , ஒளி, ஊறு, ஒசை, நாற்றம். 

ஞான இந்திரியம் (அறிவுப் பொறி) ஐந்து : மெய், வாய், கண், மூக்கு, செவி. 

கன்ம இந்திரியம் (தொழிற்பொறி) ஐந்து : வாக்கு, பாதம், பாணி(கை), பாயுரு (எருவாய்), உபத்தம் (கருவாய்) 

கரணம் நான்கு: மனம், புத்தி, சித்தம், அகங்காரம். 

ஆன்மதத்துவம் - உயிருடன் சேர்ந்தவை : இருபத்துநான்கு தத்துவங்கள். வித்தியா தத்துவம் : கலையுடன் சேர்ந்தவை ஏழு தத்துவங்கள். சிவதத்துவம் : இறையுடன் சார்ந்தவை : ஐந்து தத்துவங்கள், ஆக தத்துவங்கள் முப்பத்தாறு.


88. பலவகை அறிவுரைகள்

 

"தாம்புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர்

     தங்களுக் கவைத ழுவுறா;

  சற்றும்அறி வில்லாமல் அந்தணரை நிந்தைசெய்

     தயவிலோர் ஆயுள் பெருகார்;


மேம்படு நறுங்கலவை மாலைதயிர் பால்புலால்

     வீடுநற் செந்நெல் இவைகள்

  வேறொருவர் தந்திடினும் மனுமொழி யறிந்தபேர்

     விலைகொடுத் தேகொள் ளுவார்;


தேன்கனி கிழங்குவிற கிலையிவை யனைத்தையும்

     தீண்டரிய நீசர் எனினும்

  சீர்பெற அளிப்பரேல் இகழாது கைக்கொள்வர்,

     சீலமுடை யோர்என் பரால்;


ஆன்கொடி யுயர்த்தவுமை நேசனே! ஈசனே!

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

ஆன் கொடி உயர்த்த உமை நேசனே - விடைக் கொடியை உயர்த்திய உமையன்பனே!  ஈசனே - செல்வத்தை அளிப்பவனே!, அண்ணலே - பெரியோனே!, அருமை மதவேள் - எம் அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

தாம் புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர் தங்களுக்கு அவை தழுவுறா - தாங்கள் செய்த தவத்தினையும் ஈகையையும் தாமே புகழ்ந்து கூறிக் கொள்வோருக்கு அவை கிடையாமல் போய்விடும்;

சற்றும் அறிவு இல்லாமல் அந்தணரை நிந்தை செய் தயவு இலோர் ஆயுள் பெருகார் - சிறிதும் அறியாமல் அந்தணரைப் பழிக்கும் இரக்கம் அற்றவருக்கு வாழ்நாள் குறையும்; 

மேம்படு நறுங் கலவை, மாலை, தயிர், பால், புலால், வீடு. நல் செந்நெல் இவைகள் - உயர்ந்த மணமிக்க கலவைச் சந்தனம், மாலை, தயிர், பால், ஊன், வீடு, நல்ல செந்நெல் ஆகிய இவற்றை, வேறு ஒருவர் தந்திடினும் மனுமொழி அறிந்த பேர் விலை கொடுத்தே கொள்ளுவார் - மற்றொருவர் கொடுத்தாலும், மனு கூறிய முறையை அறிந்தவர்கள் விலை கொடுத்துத் தான் வாங்குவார்கள்;

தேன், கனி, கிழங்கு, விறகு, இலை இவை அனைத்தையும் தீண்ட அரிய நீசர் எனினும் சீர் பெற அளிப்பரேல் - தேனையும், கனியையும், கிழங்கையும், விறகையும், இலையையும் இவை (போன்ற) யாவற்றையும் தீண்டத் தகாத  இழிந்தோரானாலும் நேர்மையோடு கொடுத்தாரானால், சீலம் உடையோர் இகழாது கைக் கொள்வர் - ஒழுக்கம் உடையோர் பழிக்காமல் ஏற்றுக்கொள்வர்.


விளக்கம் ---

தன்னைத் தானே ஒருவன் புகழ்ந்து கூறுதல் ஒருவனுக்கு அழிவைத் தரும் என்கிறார் திருவள்ளுவ நாயனார். "அமைந்து ஆங்கு ஒழுகலான், அளவு அறியான், தன்னை வியந்தான் விரைந்து கெடும்" என்னும் திருக்குறளைக் காண்க. சூழல் அமைந்தபடி வாழாதவனும், வலிமைகளின் அளவை அறியாதவனும், தன்னைத் தானே மதித்துக் கொண்டவனும் விரைவில் கெடுவான் என்கின்றார் நாயனார்.  பின்வரும் பாடல்களைக் கருத்தில் கொள்க.

"தமரேயும் தம்மைப் புகழ்ந்து உரைக்கும் போழ்தில்

அமராது அதனை அகற்றலே வேண்டும்;

அமையாரும் வெற்ப! அணியாரே தம்மைத்

தமவேனும் கொள்ளாக் கலம்." --- பழமொழி நானூறு.

இதன்பொருள் ---

அமை அரும் வெற்ப - மூங்கில்கள் நிறைந்த மலை நாடனே!, கொள்ளாக் கலம் தமவேனும் - தமக்கு ஏற்றதாக இல்லாத பொற்கலன்கள் தம்முடையதாயினும், தம்மை அணியார் - மக்கள் அவற்றை அணிந்து கொண்டு தம்மை அணிபெறச் செய்யார். (அதுபோல) தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில் - தம்மைப் புகழ்ந்து கூறுமிடத்து, தமரேயும் அமராததனை அகற்றலே வேண்டும் - சுற்றத்தாரேயானாலும் தமக்குப் பொருந்தாதனவற்றைக் கூறுவரேல் அவற்றை அவர் சொல்லாதவாறு விலக்குதலையே ஒருவன் விரும்புதல் வேண்டும்.

'அணியாரே தம்மைத் தமவேனும் கொள்ளாக் கலம்' என்பது பழமொழி. தமக்குப் பொருந்தாத புகழ்ச்சி உரையை ஏற்றல் கூடாது.


"தாயானும் தந்தையா லானும் மிக(வு)இன்றி

வாயின்மீக் கூறும் அவர்களை ஏத்துதல்

நோயின்(று) எனினும் அடுப்பின் கடைமுடங்கும்

நாயைப் புலியாம் எனல்."

இதன் பொருள் ---

தாயினால் ஆயினும், தந்தையினால் ஆயினும் யாதானும் ஒரு சிறப்புக் கூறப்படுதல் இல்லாமலே, தனது வாயினாலேயே தன்னைப் புகழ்ந்து கூறிக்கொள்ளும் தற்புகழ்ச்சியாளர்களை, மற்றவர்களுக் புகழ்ந்து கூறுதல் என்பது, புகழ்பவருக்கு ஒரு துன்பமும் தருவது இல்லை. என்றாலும், அவ்வாறு கூறுவது அடுப்பின் ஓரத்திலே முடங்கிக் கிடக்கும் நாயை பார்த்து, புலி என்று சொல்வது பொலப் பொருத்தம் இல்லலாத புகழ்ச்சியே ஆகும் அது. (குடிப் பெருமை இல்லாதவர் உயர்ந்த பண்பினை உடையவர் ஆதல் இல்லை. அவருடைய போலித் தோற்றத்தைக் கண்டு புகழ்வது எல்லாம் பொய்யான புகழ்ச்சியே ஆகும்.

 

"ஒன்னார் அடநின்ற போழ்தின்,ஒருமகன்

தன்னை எனைத்தும் வியவற்க;--- துன்னினார்

நன்மை இலராய் விடினும்,நனிமலராம்

பன்மையில் பாடு உடையது இல்." --- பழமொழி நானூறு.

இதன் பொருள் --- 

    ஒன்னார் அட நின்ற போழ்தின் - பொருந்தாத பகைவரிடத்தில் போரிடும்போது, தம்மைக் கொல்ல நின்ற பொழுதில், ஒரு மகன் தன்னை எனைத்தும் வியவற்க - வீரத்தில் மிக்கவனாக இருந்தாலும், தனித்து நின்ற ஒருவன், தன்னை எத்துணையும் வியந்து கூறுதல் கூடாது. துன்னினார் நன்மையிலராய்விடிலும் - கொல்லும் பொருட்டுச் சூழ்ந்து நின்றவர் வீரத்தால் நன்மையிலராய் நின்றாராயினும். நனி பலவாம் பன்மையில் பாடுடையது இல் - மிகப்பலராய் இருத்தலை விட வலிமையுடையது ஒன்று இல்லை.

 

"கற்(று)அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்,

பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார்;- தெற்ற

அறைகல் அருவி அணிமலை நாட!

நிறைகுடம் நீர்தளும்பல் இல்."  --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

      அறைகல் அருவி அணிமலை நாட - பாறைக் கற்களினின்றும் இழிகின்ற அருவிகளை (மாலையாக) அணிந்த மலைநாட்டை உடையவனே!, நிறைகுடம் நீர் தளும்பல் இல் - நீர் நிறைந்த குடம் ஆரவாரித்து அலைதல் இல்லை, (அதுபோல) கற்று அறிந்தார் கண்ட அடக்கம் - நூல்களைக் கற்று அவைகளின் உண்மைகளை அறிந்தவர்கள் தமது வாழ்வில் அமைத்துக் கண்டனவே அடக்கத்திற்கு உரிய செயல்களாம். அறியாதார் - கற்றதோடு அமைந்து நூல் உண்மையையும் அநுபவ உண்மையையும் அறியாதார், பொச்சாந்து தம்மைத் தெற்றப் புகழ்ந்து உரைப்பர் - மறந்து தங்களைத் தெளிவாக வாயாரப் புகழ்ந்து பேசுவர்.

    நிறைகுடம் நீர் தளும்பாது. குறைகுடமோ, தளும்பித் தளும்பி, இருக்கின்ற நீரும் இல்லாமல் போகும். கற்றறிந்தவர்கள் தங்களைப் புகழ்ந்து பேசமாட்டார்கள். அறிவில்லாதவர்கள் தம்மைத் தாமே பெரிதும் மதித்துப் பேசி, இழிவைத் தேடிக் கொள்வார்கள்.

 

 "தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்த்து அற்றால், -– தன்னை

வியவாமை அன்றே வியப்பு ஆவது, இன்பம்

நயவாமை அன்றே நலம்."        --- நீதிநெறி விளக்கம்

இதன் பொருள் ---

      தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் - தன்னைப் பிறர் மதிக்கும்படி செய்வதற்காகத் தன்னைத் தானே ஒருவன் புகழ்ந்து கொள்ளுதல், தீச் சுடர் நல்நீர் சொரிந்து வளர்த்தற்று - குளிர்ந்த நீரை விட்டுத் தீவிளக்கை வளர்த்தது போல ஆகும்;  ஆதலால்,  தன்னை வியவாமை அன்றே வியப்பு ஆவது -  தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாமை அன்றோ நன்மதிப்பாகும்; இன்பம் நயவாமை அன்றே நலம் - இன்பத்தை விரும்பாமை அன்றோ இன்பமாகும்?

    தீ வளரும் என்று நீர் விட்டால் முன்னிருந்த தீயும் எப்படி வளராது அவிந்தே போகுமோ, அதுபோலவே, தனக்கு மதிப்பு மிகும் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொண்டால் இதற்கு முன்னிருந்த மதிப்பும் மிகாது அழிந்தே போகும் என்று சொல்லப்பட்டது.

 

"கற்றாங்கு அறிந்துஅடங்கி, தீதுஒரீஇ, நன்றுஆற்றிப்

பெற்றது கொண்டு மனம் திருத்திப் - பற்றுவதே

பற்றுவதே பற்றி, பணிஅறநின்று, ஒன்றுஉணர்ந்து

நிற்பாரே நீள்நெறிச்சென் றார்."      --- நீதிநெறி விளக்கம்.

இதன் பொருள் ---

     கற்று ஆங்கு அறிந்து அடங்கி - அறிவுநூல்களைக் கற்று அவற்றின் மெய்ப்பொருளை உணர்ந்து, அவற்றிற்கேற்ப மன அடக்கத்தோடு இருந்து, தீது ஒரீஇ - (அந் நூல்களில் விலக்கிய) தீய காரியங்களைக் கைவிட்டு, நன்று ஆற்றி - (அந்நூல்களில் விதித்த) நற்காரியங்களைச் செய்து, பெற்றது கொண்டு மனம் திருத்தி - கிடைத்ததைக் கொண்டு மனம் அமைந்து அதனை ஒரு வழிப்படுத்தி, பற்றுவதே பற்றுவதே பற்றி - தாம் அடைய வேண்டிய வீட்டு நெறியையும் அந் நெறிக்குரிய முறைகளையும் மனத்தில் கொண்டு, பணி அற நின்று - சரியை முதலிய தொழில்கள் மாள, அருள் நிலையில் நின்று, ஒன்று உணர்ந்து - தனிப் பொருளாகிய இறைவனை அறிந்து, நிற்பாரே நீள்நெறி சென்றார் - நிற்கின்ற ஞானியரே வீட்டை அடையும் வழியில் நின்றவராவர்.

         அறிவு நூல்களில் விலக்கிய தீயகாரியங்களாவன: காமம் கோபம் முதலியன. அவற்றின்கண் விதித்த நற்காரியங்களாவன: கொல்லாமை,வாய்மை முதலியன. 

 

 "கற்றனவும் கண்ணகன்ற சாயலும் இற்பிறப்பும்

பக்கத்தார் பாராட்டப் பாடெய்தும்; தானுரைப்பின்

மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத

பித்தனென் றெள்ளப் படும்."           ---  நாலடியார்.

இதன் பொருள் --- 

      கற்றனவும் கண் அகன்ற சாயலும் இல் பிறப்பும் பக்கத்தார் பாராட்டப்பாடு எய்தும் - தான் கற்ற கல்விகளும், காட்சி பரந்த தனது சாயலும், தனது உயர் குடிப் பிறப்பும் அயலவர் பாராட்டப் பெருமை அடையும்;  தான் உரைப்பின் - அவ்வாறன்றித் தான் புகழ்ந்தால், மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத பித்தன் என்று எள்ளப்படும் - தனக்கு முகமன் மொழிந்து விளையாடுவோர் மிகப் பெருகி அதனால், 'மருந்தினால் தெளியாத பித்தன் இவன்' என்று உலகத்தவரால் இகழப்படும் நிலையை ஒருவன் அடைவான்.

         பேதைமை என்பது, பிறர் கருத்தை அறியாது, பிறர் கூறும் முகமனுக்கு மகிழும் பித்துத் தன்மை உடையது.


87. கோபத்தின் கொடுமை

 


"கோபமே பாவங்களுக் கெல்லாம் தாய்தந்தை;

     கோபமே குடிகெ டுக்கும்;

  கோபமே ஒன்றையும் கூடிவர வொட்டாது;

     கோபமே துயர்கொ டுக்கும்;


கோபமே பொல்லாது! கோபமே சீர்கேடு;

     கோபமே உறவ றுக்கும்;

  கோபமே பழிசெயும்! கோபமே பகையாளி;

     கோபமே கருணை போக்கும்;


கோபமே ஈனமாம் கோபமே எவரையும்

     கூடாமல் ஒருவ னாக்கும்;

  கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீயநர

     கக்குழி யினில்தள் ளுமால்;


ஆபத்தெ லாந்தவிர்த் தென்னையாட் கொண்டருளும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

ஆபத்து எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்டருளும் அண்ணலே - இடையூறுகளை எல்லாம் நீக்கி என்னை ஏற்றுக்கொண்டருளும் பெரியோனே!,  அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

கோபமே பாவங்களுக்கு எல்லாம் தாய் தந்தை - சினமே எல்லாப் பாவங்களுக்கும் அன்னையும் அப்பனும் ஆகும்;

கோபமே குடிகெடுக்கும் - சினமே குடியைக் கெடுக்கும்;

கோபமே ஒன்றையும் கூடிவர ஒட்டாது - சினமே எதனையும் அடைய விடாது;

கோபமே துயர் கொடுக்கும் - சினமே துயரத்தைத் தரும்; 

கோபமே பொல்லாது - சினமே கெட்டது; 

கோபமே சீர்கேடு - சினமே புகழைக் கெடுப்பது;

கோபமே உறவு அறுக்கும் - சினமே உறவைத் தவிர்க்கும்;

கோபமே பழி செயும் - சினமே பழியை உண்டாக்கும்;

கோபமே பகையாளி - சினமே ஒருவனுக்குப் பகையாளி;

கோபமே கருணை போக்கும் - சினமே அருளைக் கெடுக்கும்; கோபமே ஈனம் ஆம் - சினமே இழிவாகும்; 

கோபமே எவரையும் கூடாமல் ஒருவன் ஆக்கும் - சினமே ஒருவரையும் சேர்க்காமல் தனியன் ஆக்கும், 

கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீய நரகக் குழியில் தள்ளும் - சினமே காலன்முன் இழுத்துச் சென்று கொடிய நரகக் குழியிலே வீழ்த்தும்.

விளக்கம் ---

ஔவைப் பிராட்டியார், அறம் செய்ய விரும்புகின்ற உனது மனத்துள் ஆறவேண்டியது நீ கொள்ளுகின்ற சினம் ஆகும் என்பதை அறிவுறுத்த, "ஆறுவது சினம்" என்றார். எனவே, கோபமானது ஒருவனுக்குத் தணிய வேண்டுவது ஆகும் என்பதை அறிதல் வேண்டும். காரணம், சினம் மிகுந்து தீராமல் இருந்தால், அது போராக முடியும் என்பதை அறிவுறுத்த, "தீராக் கோபம் போராய் முடியும்" என்று கொன்றைவேந்தன் மூலமாக விளக்கம் தந்தார் ஔவைப் பிராட்டியார். 


கோபம் சீக்கிரமாகப் போய் விட வேண்டும். இல்லையேல் அது சண்டையில் போய் முடியும். பின்வரும் பாடல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உள்ளத்தில் மிக்கு எழுகின்ற சினத்தின் வேகத்தைத் தணித்து, தன்னையும் பிறரையும் காத்துக் கொள்ளுவதே சிறந்த குணம் என்கின்றார் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.

"உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்குசினம் காத்துக்

கொள்ளும் குணமே குணம் என்க, - வெள்ளம்

தடுத்தல் அரிதோ? தடங்கரைதான் பேர்த்து

விடுத்தல் அரிதோ? விளம்பு."  ---  நன்னெறி.

இதன் பொருள் ---

மனத்தைத் தன்வயப்படுத்திக் கொண்டு ஓங்கி வளர்கின்ற சினத்தை வெளிவராமல் அடக்கிக் கொள்கிற  குணமே மேலான குணம் என்று அறிவாயாக. பெருகி வருகின்ற நீர்ப்பெருக்கைத் தடுத்தல் அரிய செயலோ? முன் கட்டப்பட்டிருந்த கரையை உடைத்து அதனுள் அடங்கிச் சென்ற வெள்ளத்தை வெளியில் செல்ல விடுத்தல் அரிய செயலோ? நீயே சொல்வாயாக.

உடம்போடு உயிரானது எப்போதும் கூடி இருப்பதில்லை. வாழ்நாள் முடிவில் பிரியத் தான் போகின்றது. அதுபோல, உள்ளத்தில் ஒருக்கால் தோன்றிய சினமானது தணியத் தான் வேண்டும். பயிரில் உடன் வளர்கின்ற புல்லைக் களைந்து, பயிரைக் காத்துக் கொள்வது போல, உள்ளத்தில் எழுகின்ற சினத்தைக் களைந்து, தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும் என்கின்றது "அறநெறிச்சாரம்".

"உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளிச்

செயிரும் சினமும் கடிந்து, - பயிரிடைப்

புல்களைந்து நெல்பயன் கொள்ளும் ஒருவன் போல்

நற்பயன் கொண்டு இருக்கற் பாற்று." --- அறநெறிச்சாரம்.

இதன் பதவுரை ---

உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளி - உயிரும் உடம்பும் வேறு வேறாகப் பிரிவது தவறாது என்பதை அறிந்து, பயிரிடை புல் களைந்து - பயிர்களின் இடையிடையே தோன்றிய களைகளைப் பிடுங்கி எறிந்துவிட்டு, நெல் பயன்கொள்ளும் ஒருவன்போல் - பயிர்களைக் காத்து நெல்லாகிய பயனை அடையும் உழவன்போல, செயிரும் சினமுங் கடிந்து - மயக்கம் வெகுளிகளை நீக்கி, நற்பயன் கொண்டு இருக்கற்பாற்று - இன்பத்துக்கு ஏதுவாகிய நல்வினையை மேற்கொண்டு ஒழுகுதல் நல்லது.

சான்றோர் உள்ளத்தில் சினம் தோன்றும். ஆனால் அது விரைவில் தணிந்துவிடும் என்கிற்து "நாலடியார்". சினத்தைத் தணிவித்துக் கொள்ளப் பழகுபவர் சான்றோர்.

"நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி

கெடுங்காலம் இன்றிப் பரக்கும், - அடுங்காலை

நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே

சீர்கொண்ட சான்றோர் சினம்." --- நாலடியார்.

இதன் பதவுரை ---

நெடுங் காலம் ஓடினும் - நீண்ட காலம் சென்றாலும், நீசர் வெகுளி - கீழ்மக்களின் கோபம், கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - தணியும் காலம் இல்லாமலே பெருகிக்கொண்டு போகும் ; ஆனால், அடுங் காலை நீர் கொண்ட வெப்பம்போல் - காய்ச்சுகின்ற காலத்தில் தண்ணீர் அடைந்த வெப்பத்தைப் போல, தானே தணியும் சீர் கொண்ட சான்றோர் சினம் - பெருமை மிக்க சான்றோரது கோபம் தானே தணிந்துவிடும்.


கோபத்தில் நன்மை எது என்பதே தோன்றாது, எல்லாம் கெட்டுப் போகும் என்கின்றது "நான்மணிக்கடிகை".

"கற்றார்முன் தோன்றா கழிவிரக்கம், காதலித்து ஒன்று

உற்றார்முன் தோன்றா உறாமுதல், - தெற்றென

அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா, எல்லாம்

வெகுண்டார்முன் தோன்றாக் கெடும்" --- நான்மணிக்கடிகை.

இதன் பதவுரை ---

கழிவு இரக்கம் கற்றார்முன் தோன்றா - இழந்த பொருள்களுக்கு வருத்தப்படுதல், கற்று உணர்ந்த பெரியோர்பால் தோன்றாது; காதலித்து ஒன்று உற்றார்முன் உறா முதல் தோன்றா - ஊக்கம் கொண்டு, ஒரு நன்முயற்சியைத் தொடங்கி ஆற்றுபவரிடத்தில், அது விரைவில் கிட்டாமையால் ஆகிய முயற்சித் துன்பம் தோன்றாது; தெற்றென அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா - தெளிவாய் தீயவை செய்தார்க்கு நல்லவை தோன்றமாட்டா; எல்லாம் வெகுண்டார் முன் தோன்றா கெடும் - எல்லா நன்மைகளும், சினந்து கொள்வாரிடத்தில் தோன்றாவாய்க் கெட்டு ஒழியும்.


"மூங்கிலில் பிறந்த முழங்குதீ மூங்கில்

முதல் அற முருக்குமா போல்

தாங்க அரும் சினத்தீ தன்னுளே பிறந்து

தன்உறு கிளை எலாம் சாய்க்கும்,

ஆங்கு அதன் வெம்மை அறிந்தவர் கமையால்

அதனை உள்ளடக்கவும் அடங்காது

ஓங்கிய கோபத் தீயினை ஒக்கும்

உட்பகை உலகில் வேறு உண்டோ?"  --- விவேக சிந்தாமணி.

இதன் பொருள் ---

மலைகளில் அடர்ந்து இருக்கின்ற மூங்கில் காட்டில் மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்வதாலே நெருப்பு உண்டாகும். அந்த நெருப்பு மூங்கில்களை அழிக்கும். அத்தோடு அருகில் உள்ள கிளை மூங்கில்களையும் அழிக்கும். அதுபோல, ஒருவனிடத்தில் வந்த கோபமானது பெரியோர் தடுத்தாலும் அடங்காமல் அவனை அழிப்பது அல்லாமல் அவனுடைய சுற்றத்தையும் அழித்துவிடும். எனவே, கொடுமையான கோபத்தை விட்டுவிட வேண்டும். அதைவிட உள் பகை வேறு இல்லை.


"கோபத்தால் கௌசிகன் தவத்தைக் கொட்டினான்,

கோபத்தால் நகுடனும் கோலம் மாற்றினான்,

கோபத்தால் இந்திரன் குலிசம் போக்கினான்,

கோபத்தால் இறந்தவர் கோடி கோடியே." --- விவேக சிந்தாமணி.

இதன் பொருள் ---

விசுவாமித்திரன் தனது கோப மிகுதியினாலே வசிட்டரோடு சபதம் புரிந்து தனது தவத்தை எல்லாம் இழந்தான். நகுடன் என்னும் அரசன் நூறு அசுவமேத யாகங்களைப் புரிந்து இந்திர பதவியை அடைந்தும், முனிவர்களிடம் தனது கோபத்தைக் காட்டியதால், அகத்திய முனிவரின் சாபத்தால், அப் பதவியை இழந்து மீண்டும் பாம்பாக ஆனான். இந்திரன் ஒரு காலத்தில் உக்கிரபாண்டியனோடு போர் புரிந்து தன்னுடைய வச்சிராயுதத்தைப் போக்கினான். கோபத்தால் எண்ணிறந்த பேர் உயிர் துறந்தனர்.

சினம் தோன்றுவது இயல்புதான். சினம் தோன்றினால், அதனைத் தணித்துக் (ஆற்றிக்) கொள்ளுதல் வேண்டும். 


86. அரசவைக் கணக்கன்

 


"வரும்ஓலை உத்தரத் தெழுதிவரு பொருளினால்

     வரவிடுப் போன்ம னதையும்,

  மருவிவரு கருமமும் தேசகா லத்தையும்

     வருகர தலாம லகமாய்


விரைவாய் அறிந்தரசர் எண்ணில்எண் ணினையள

     விடஎழு தவாசிக் கவும்

  வெற்றிகொண் டேபெரிய புத்தியுடை யோன்புவி யின்

     மேன்மைரா யசகா ரன்ஆம்;


கருவாய் அறிந்து தொகை யீராறு நொடியினிற்

     கடிதேற் றிடக்கு றைக்கக்

  கடுகையொரு மலையாக மலையையொரு கடுகுமாக்

     காட்டுவோன் கருணீ கன்ஆம்;


அருவாகி உருவாகி ஒளியாகி வெளியாகும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---


அரு ஆகி உரு ஆகி ஒளி ஆகி வெளி ஆகும் அண்ணலே - அருவமாகவும், உருவமாகவும், ஒளியாகவும், வெளியாகவும் உள்ள பெரியோனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 


வரும் ஓலை உத்தரத்து எழுதிவரு பொருளினால் - வருகின்ற ஓலையின் புறத்திலே எழுதிவிட்ட பொருளைக் கொண்டு, வர விடுப்போன் மனதையும் - ஓலையை விட்டவன் உள்ளத்தையும், மருவி வரு கருமமும் - அவன் விரும்பிய தொழிலையும், தேச காலத்தையும் - இடத்தையும் காலத்தையும், வரு கரதல ஆமலகம் ஆய், விரைவாய் அறிந்து - உள்ளங்கையில் உள்ள நெல்லிக்கனியாக நொடியில் உணர்ந்து, அரசர் எண்ணில் எண்ணினை அளவு இட எழுத வாசிக்கவும் - அரசருடைய கருத்தில் உள்ள கருத்தை மதிப்பிடவும் எழுதவும் வாசிக்கவும், வெற்றி கொண்டே பெரிய புத்தியுடையோன் புவியின் மேன்மை ராயச காரன் ஆம் - தேர்ச்சி பெற்றுப் பேரறிவு உடையோன் உலகிலே பெருமை பெற்ற அரசாங்க எழுத்தாளன் ஆவான், தொகை வருவாய் அறிந்து ஈராறு நொடியினில் கடிது ஏற்றிடக் குறைக்க - ஒரு தொகையை மனத்தில் உணர்ந்து பன்னிரு விநாடியில் விரைவாகக் கூட்டவும் குறைக்கவும், கடுகை ஒரு மலை ஆக மலையை ஒரு கடுகும் ஆ(க)க் காட்டுவோன் கருணீகன் ஆம் - கடுகை மலை போலவும், மலையைக் கடுகுபோலவும் ஆக்கிக் காண்பிக்க வல்லவன் அரசாங்கக் கணக்கன் ஆவான்.

      எழுத்தாளரும் கணக்குப் பார்ப்போரும் கணக்கர் எனவே வழங்கப்படுகின்றனர். ஆமலகம் - நெல்லி. கரதலாமலகம் (கர தல ஆமலகம்) என்பது வெளிப்படை என்பதை விளக்கும் சொல். கையில் வைத்திருக்கும் பொருள் தெரிவதைப் போலத் தெளிவித்தல் என்பதே அதனால் விளக்கப்படும் பொருள்.


85. தானைத் தலைவன், அமைச்சன், படைத் தலைவன்

 


"தன்னரசன் வலிமையும், பரராசர் எண்ணமும்,

     சாலமேல் வருக ருமமும்

  தானறிந் ததிபுத்தி உத்தியுண் டாயினோன்

     தானாதி பதியா குவான்;


மன்னவர் மனத்தையும், காலதே சத்தையும்,

     வாழ்குடி படைத்தி றமையும்,

  மந்திரா லோசனை யும்எல்லாம் அறிந்தவன்

     வளமான மதிமந் திரி;


துன்னிய படைக்குணம் கரிபரி பரீட்சையே,

     சூழ்பகைவர் புரிசூழ்ச் சியும்,

  தோலாத வெற்றியும் திடமான சித்தியுள

     சூரனே சேனா திபன்


அன்னையினும் நல்லமலை மங்கைபங் காளனே!

     அனகனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


 இதன் பொருள் ---

அன்னையினும் நல்ல மலைமங்கை பங்காளனே - தாயினும் நல்லருள் புரியும் மலைமகளாகிய உமையம்மையாரை இடப்பாகத்தில் கொண்டவனே!, அனகனே - தூயவனே! அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

தன் அரசன் வலிமையும் பரராசர் எண்ணமும் சால மேல்வரு கருமமும் தான் அறிந்து - தன் அரசனுடைய ஆற்றலும், மாற்றரசர் நினைவும், நன்றாகப் பின்வரும் அலுவலும் ஆராய்ந்து, அதி புத்தி உத்தி உண்டாயினோன் தான அதிபதி ஆகுவான் - சிறந்த அறிவும் சூழ்ச்சியும் பொருந்தியவன் தானைத் தலைவன் எனப்படுவான்,

  மன்னவர் மனத்தையும், கால தேசத்தையும், வாழ்குடி படைத் திறமையும், மந்திர ஆலோசனையும் எல்லாம் - அரசர்களின் உள்ளக் கருத்தையும், காலத்தையும், இடத்தையும், வாழ்கின்ற குடிபடைகளின் ஆற்றலையும், ஆராய்ச்சித் திறனையும், அறிந்தவன் வளமான மதி மந்திரி - தெரிந்தவன் தேர்ச்சிபெற்ற அறிவுடைய அமைச்சன் ஆவான், 

துன்னிய படைக் குணம் - செறிவான படைகளின் இயல்பும், கரி பரி பரீட்சையே - யானை குதிரைகளின் தேர்ச்சியும், சூழ் பகைவர் புரி சூழ்ச்சியும் - சூழந்துள்ள மாற்றலர் செய்யும் சூழ்ச்சியும், தோலாத வெற்றியும் - பின் வாங்காத வெற்றியும், திடமான சித்தி(யும்) உறுதியான சித்தியும், உள சூரனே சேனாதிபன் - உடைய வீரனே படைத்தலைவன் ஆவான்.


84. வேளாளர் சிறப்பு

 

"யசனாதி கருமமும் தப்பாமல் வேதியர்

     இயற்றிநல் லேர்பெ றுவதும்,

  இராச்யபா ரஞ்செய்து முடிமன்னர் வெற்றிகொண்

     டென்றும்நல் லேர்பெ றுவதும்,


வசனாதி தப்பாது தனதா னியந் தேடி

     வசியர்நல் லேர்பெ றுவதும்,

  மற்றுமுள பேரெலாம் மிடியென்றி டாததிக

     வளமைபெற் றேர்பெ றுவதும்,


திசைதோறும் உள்ளபல தேவா லயம்பூசை

     செய்யுநல் லேர்பெ றுவதும்,

  சீர்கொண்ட பைங்குவளை மாலைபுனை வேளாளர்

     செய்யும்மே ழிப்பெ ருமைகாண்,


அசையாது வெள்ளிமலை தனில்மேவி வாழ்கின்ற

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

வெள்ளிமலை தனில் அசையாது மேவி வாழ்கின்ற அண்ணலே - வெள்ளிமலை என்னும் திருக்கயிலையில் எப்போதும் பொருந்தி வீற்றிருக்கும் பெரியோனே! 

அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

வேதியர் யசனம் ஆதி கருமமும் தப்பாமல் இயற்றி, நல் ஏர் பெறுவதும் - மறையவர் வேள்வி முதலிய தொழில்களைத் தவறாமல் செய்து பேரழகு பெறுவதும், முடிமன்னர் என்றும் வெற்றி கொண்டு இராச்சிய பாரம் செய்து நல் ஏர் பெறுவதும் - முடியரசர் எப்போதும் பகைவரை வென்றிகொண்டு, ஆட்சி புரிந்து சிறப்பு அடைவதும், வசியர் வசனம் ஆதி தப்பாது தனதானியம் தேடி நல் ஏர் பெறுவதும் - வணிகர் சொல் முதலிய பிறழாமல் பொன்னும் தானியமும் ஈட்டிச் சிறப்புப் பெறுவதும், மற்றும் உள  பேரெலாம் மிடி என்றிடாது அதிக வளமை பெற்று ஏர் பெறுவதும் - மேலும் உள்ள யாவரும் வறுமை என்று கூறாமல் மிக்க வளம் பெற்று சிறப்பு உறுவதும், திசைதோறும் உள்ள பல தேவாலயம் பூசை செய்யும் நல் ஏர் பெறுவதும் - எல்லாத் திக்கினும் இருக்கும் பல திருக்கோயில்களும் வழிபாடு பெற்று சிறப்புப் பெறுவதும், சீர் கொண்ட பைங்குவளை மாலை புனை வேளாளர் செய்யும் மேழிப் பெருமை - புகழ் பெற்ற பசிய குவளைமலர் மாலை அணிந்த வேளாளர் புரியும் உழவின் பெருமையாகும்.

      யசனம் - வேள்வி. வைசியர் என்பது வசியர் எனச் செய்யுள் விகாரம் பெற்றது.


83. வணிகர் சிறப்பு

 


"நீள்கடல் கடந்திடுவர்; மலையாள மும்போவர்!

     நெடிதுதூ ரந்தி ரிந்தும்

  நினைவுதடு மாறார்கள்; சலியார்கள்; பொருள்தேடி

     நீள்நிலத் தரசு புரியும்


வாளுழவ ரைத்தமது கைவசம் செய்வார்கள்;

     வருமிடம் வராத இடமும்

  மனத்தையும் அறிந்துதவி ஒன்றுநூ றாயிட

     வளர்ப்பர்;வரு தொலைதொ லைக்கும்


ஆள்விடுவர்;மலிவுகுறை வதுவிசா ரித்திடுவர்;

     அளவில்பற் பலச ரக்கும்

  அமைவுறக் கொள்வர்;விற் பார்கணக் கதிலணுவும்

     அறவிடார்; செலவு வரிலோ


ஆளியொத் தேமலையின் அளவும் கொடுத்திடுவர்,

     அருள் வைசியர்! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---


அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

அருள் வைசியர் - அருளுடைய மனத்தவரான வணிகர், நீள் கடல் கடந்திடுவர் - (வணிகத்திற்கு)ப் பெருங்கடலையும் கடந்து செல்வர், மலையாளமும் போவர் - மலைநாடுகளையும் சுற்றுவர், நெடிது தூரம் திரிந்தும் நினைவு தடுமாறார்கள் - நீண்ட தொலைவு அலைந்தாலும் எண்ணத்திலே கலக்கம் அடையார், சலியார்கள் - சோர்வு அடையார், பொருள் தேடி நீள் நிலத்து அரசு புரியும் வாள் உழவரைத் தமது கைவசம் செய்வார்கள் - பொருளை ஈட்டி வைத்துக்கொண்டு பெரிய நாட்டை ஆளும் வாளேந்திய அரசர்களையும் தமது வசம் ஆக்கிக்  கொள்வார்கள், வரும் இடம் வராத இடமும் மனத்தையும் அறிந்து உதவி - (பொருள்) வரும் இடத்தையும் வராத இடத்தையும் (பொருள் வாங்குவோர்) உள்ளத்தையும் தெரிந்து (பொருள்) கொடுத்து, ஒன்று நூறு ஆயிட வளர்ப்பார் - ஒரு பொருள் நூறாக வளரும்படி பொருளை ஈட்டுவர், வரு தொலை தொலைக்கும் ஆள் விடுவர் - (பொருள்) வரக்கூடிய நீண்ட தொலைவுக்கும் ஆளைச் செலுத்துவர், மலிவு குறைவது விசாரித்திடுவர் - (பொருள்) மிகுதியையும் குறைவையும் கேட்டறிவர், அளவு இல் பற்பல சரக்கும் அமைவுறக் கொள்வர் - எல்லை அற்ற பலவகையான பொருள்களையும் பொருத்தம் அறிந்து வாங்குவர், விற்பார் - விற்பார்கள், கணக்கதில் அணுவும் அற விடார் - கணக்கினில் இம்மியும் பிசக விடமாட்டார்கள், செலவு வரிலோ ஆளி ஒத்தே மலையின் அளவும் கொடுத்திடுவர் - (ஒழுங்கான) செலவு வந்தாலோ சிங்கம் போல அஞ்சாமல் மலையளவாயினும் செலவழிப்பார்கள்.


82.அரசர் சிறப்பு

 


"மனுநீதி முறைமையும், பரராசர் கொண்டாட

     வரும்அதிக ரணவீ ரமும்,

  வாள் விசய மொடுசரச சாதன விசேடமும்,

     வாசிமத கரியேற் றமும்,


கனமாம் அமைச்சரும், பலமான துர்க்கமும்,

     கைகண்ட போர்ப்ப டைஞரும்,

  கசரத பதாதியும், துரகப்ர வாகமும்

     கால தேசங்க ளெவையும்


இனிதாய் அறிந்ததா னாபதிக ளொடுசமர்க்

     கிளையாத தளகர்த் தரும்,

  என்றும்வற் றாததன தானிய சமுத்திரமும்,

     ஏற்றம்உள குடிவர்க் கமும்,


அனைவோரும் மெச்ச இங்கிவையெலாம் உடையபேர்

     அரசராம்! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

மனுநீதி முறைமையும் - மனுவினால் ஏற்படுத்தப் பெற்ற அரசநெறி ஒழுங்கும், பரராசர் கொண்டாட வரும் அதிக ரணவீரமும் - மற்ற மன்னர்கள் புகழுமாறு காணப்படும் சிறந்த போர் வீரமும், வாள் விசயமொடு சரச சாதன விசேடமும் - வாள்கொண்டு வெற்றி பெறுவதுடன் இனிய முறையிலே தொழிலை முடித்துக்கொள்ளும் சிறப்பும், வாசி மதகரி ஏற்றமும் - குதிரை தேற்றம் யானை ஏளற்றங்களில் பயிற்சியும், கனம் ஆம் அமைச்சரும் - பெருமை மிக்க மந்திரிகளும், பலமான துர்க்கமும் - உறுதியான அரணும், கைகண்ட போர்ப்படைஞரும் - பயிற்சி பெற்ற போர் வீரரும், கச ரத பதாதியும் - யானைள, தேர், காலாட்களும், துரக ப்ரவாகமும் - குதிரை வெள்ளமும், காலதேசங்கள் எவையும் இனிதாய் அறிந்த தானாபதிகளோடு - காலம் இடம் முதலானவற்றை எல்லாம் நன்றாக உணர்ந்த தானத் தலைவருடனே, சமர்க்கு இளையாத தளகர்த்தரும் - போர்க்குப் பின்னடையாத படைத்தலைவரும், என்றும் வற்றாத தனதானிய சமுத்திரமும் - எப்போதும் குறையாத பொன்னும் தானியமும் ஆகிய பெருக்கும், ஏற்றம் உள குடிவர்க்கமும் - (வெளிநாட்டில் இருந்தும்) வந்து சேரும் இயல்புடைய பலவகைக் குடிகளும், இங்கு இவையெலாம் அனைவோரும் மெச்ச உடைய பேர் அரசர் ஆம் - இங்குக் கூறப்பட்ட இவற்றையெல்லாம் யாவரும் புகழப் பெற்றவர்களே அரசராவர்.

      இரணம் - புண். புண்படும் வீரம் போர்க்கள வீரம். வாள்விசயம் - போரில் வெற்றிபெறுதல் (தண்டம்) சரச சாதனம் - சாமபேத தானங்கள். எனவே நால்வகைச் சூழ்ச்சிகளாயின. அரண் : மதில், நீர், காடு, மலை என்னும் நால்வகை அரண்கள். ஏற்றம் : மேன்மை என்பதைவிடக் (குடி)யேற்றத்தைக் குறிப்பதே சிறப்பாகும்.

"மனுநீதிச் சோழன்" என்னும் அரசன் பற்றி பெரியபுராணத்தில் உள்ளது. மனுநீதியைக் கடைப்பிடித்து ஒழுகுவதில் சிறந்தவனாக இவன் விளங்கினான். "இந்த மனுநீதி பழைய காலத்தைச் சேர்ந்தது. இடைக் காலத்தில் மனுநீதி இடத்துக்கு ஏற்றவாறு திரிக்கப்பட்டது. நாளடைவில் அதன் உரு குலைக்கப்பட்டு விட்டது. இப்பொழுது மனுவின் பெயரால் வழங்கப்படுவது ஸ்மிருதி. பண்டை மனுதர்மம் இறந்து பட்டது" என்பது தமிழ்த் தென்றல் திரு வி க அவளர்களின் கருத்து.


81. அந்தணர் சிறப்பு

 


"ஓராறு தொழிலையும் கைவிடார்; சௌசவிதி

     ஒன்றுதப் பாது புரிவார்;

  உதயாதி யிற்சென்று நீர்படிகு வார்; காலம்

     ஒருமூன்றி னுக்கும் மறவா


தாராய்ந்து காயத்ரி யதுசெபிப் பார்;நாளும்

     அதிதிபூ சைகள்பண் ணுவார்;

  யாகாதி கருமங்கள் மந்த்ரகிரி யாலோபம்

     இன்றியே செய்து வருவார்;


பேராசை கொண்டிடார்; வைதிகநன் மார்க்கமே

     பிழையா திருக்கும் மறையோர்

  பெய்யெனப் பெய்யும்மு கில்;அவர்மகி மையெவர்களும்

     பேசுதற் கரித ரிதுகாண்!


ஆரார் நெடுஞ்சடில அமலனே! எனையாளும்

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---


ஆர் ஆர் நெடுஞ் சடில அமலனே - ஆத்திமாலை தரித்த நீண்ட திருச்சடையை உடைய தூயவனே! எனை ஆளும் அண்ணலே - என்னை ஆட்கொண்டு அருள் புரியும் தலைவனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே! 

வைதிக நல்மார்க்கமே பிழையாது இருக்கும் மறையோர் - மறைநெறியாகிய நல்ல வழியிலே தவறாது செல்லும் மறையவர்கள், ஓர் ஆறு தொழிலையும் கைவிடார் - (தமக்கு உரிய) ஆறு தொழில்களையும் விடமாட்டார், சௌசவிதி ஒன்று தப்பாது புரிவார் - தூய்மை விதிகளை ஒன்றேனும் விடாமல் செய்வார், உதய ஆதியில் சென்று நீர் படிகுவார் - வைகறையிலே போய் நீராடுவார், காலம் ஒரு மூன்றினுக்கும் மறவாது ஆராய்ந்து காயத்திர அது செபிப்பார் - முக்காலத்தினும் மறவாமல் காயத்திரி மந்திரத்தைத் தெரிந்து ஓதுவார், நாளும் அதிதி பூசைகள் பண்ணுவார் - எப்போதும் விருந்தினரை ஓம்புவார், யாகாதி கருமங்கள் மந்திர கிரியாலோபம் இன்றியே செய்து வருவார் - வேள்வி முதலிய தொழில்களை மந்திர உச்சரிப்புக் குறையாமலும், கிரியைகளில் குறைவு இல்லாமலும் செய்து வருவார், பேராசை கொண்டிடார் - பேராசை கொள்ளமாட்டார், பெய் என முகில் பெய்யும் - (இவர்கள்) பெய் என்று கூறியவுடன் மழை பெய்யும், அவர் மகிமை எவர்களும் பேசுதற்கு அரிது, அரிது - அவருடைய மேன்மை யாவராலும் கூற இயலாதது! இயலாதது!

     அந்தணர்களுக்கு உரிய ஆறு தொழில் : ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல். (வேட்டல் - வேள்வி செய்தல். வேட்பித்தல் - வேள்வி செய்வித்தல்.)


பொது --- 1126. பட்டாடைக்கே

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பட்டு ஆடைக்கே (பொது) முருகா!  திருவடியில் அணுக வரம் அருள்வாயே தத்தா தத்தா தத்தா தத்தா      தத்தா தத்தத் .....