"சோமுகா சுரனை முன் வதைத்துஅமரர் துயர்கெடச்
சுருதிதந் ததுமச் சம்ஆம்;
சுரர்தமக்கு அமுதுஈந்தது ஆமையாம்; பாய்போற்
சுருட்டிமா நிலம்எ டுத்தே
போம்இரணி யாக்கதனை உயிர்உண்டது ஏனமாம்;
பொல்லாத கனகன் உயிரைப்
போக்கியது நரசிங்கம்; உலகுஅளந்து ஓங்கியது
புனிதவா மனமூர்த் திஆம்;
ஏமுறும் இராவணனை வென்றவன் இராகவன்;
இரவிகுலம் வேர் அறுத்தோன்
ஏர்பர சிராமன்; வரு கண்ணனொடு பலராமன்
இப்புவி பயந்த விர்த்தோர்
ஆம்இனிய கற்கிஇனி மேல்வருவது இவைபத்தும்
அரிவடிவம்; அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!”
இதன் பொருள் —-
அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
முன் சோமுக அசுரனை வதைத்து அமரர் துயர் கெடச் சுருதி தந்தது மச்சம் ஆம் - முற்காலத்தில் சோமுகன் என்னும் அசுரனைக் கொன்று தேவர்கள் துன்பம் கெடும்படி செய்து மறைகளைக் கொண்டு வந்தது மீன் தோற்றம் ஆகும்,
சுரர் தமக்கு அமுது ஈந்தது ஆமை ஆம் - வானவர்க்கு அமுதத்தை அளிக்க எடுத்துக் கொண்ட தோற்றம் ஆமை ஆகும்,
மாநிலம் பாய்போற் சுருட்டி எடுத்தே போம் இரணியாக்கதனை உயிர் உண்டது ஏனம் ஆம் - பெரிய நிலத்தைப் பாயைப் போலச் சுருட்டி எடுத்துச் செல்லும் இரணியாக்கன் உயிரைப் பருகியது பன்றி ஆகும்,
பொல்லாத கனகன் உயிரைப் போக்கியது நரசிங்கம் - கொடிய இரணியன் உயிரை ஒழித்தது நரசிங்கம் ஆகும்,
உலகு அளந்து ஓங்கியது புனித வாமன மூர்த்தி ஆம் - உலகத்தை (மாவலியிடம் மூவடி மண்ணைத் தானம் பெற்று) அளக்க நெடிய உருக் கொண்டது வாமன வடிவம் ஆகும்,
இரவிகுலம் வேர் அறுத்தோன் ஏர் பரசு இராமன் - கதிரவன் மரபை அடியுடன் ஒழித்தவன் அழகிய கோடரி ஏந்திய பரசுராமன் ஆவான்,
ஏம் உறும் இராவணனை வென்றவன் இராகவன் - செருக்கு அடைந்திருந்த இராவணனை வெற்றிகொண்டவன் இரகு மரபில் பிறந்த இராமன் ஆவான்,
இப் புவி பயம் தவிர்த்தோர் வரு பலராமனொடு கண்ணன் - இவ்வுலகின் அச்சத்தை நீக்கப் பிறந்து வந்தோர் பலராமனும் கண்ணனும் ஆவர்,
இனிமேல் வருவது இனிய கற்கி ஆம் - இனிமேல் தோன்றக்கூடியது இனிய கற்கி ஆகும்,
இவை பத்தும் அரிவடிவம் - இவை பத்தும் திருமாலின் திரு அவதாரங்கள்.