51. தெரிந்து தெளிதல் - 07. காதன்மை கந்தா

 

திருக்குறள்

பொருட்பால்


. அரசியல்


அதிகாரம் 51 -- தெரிந்து தெளிதல்


அதாவது, அரசன், அமைச்சர் முதலாயினாரை அவரது பிறப்பு, குணம், அறிவு என்பனவற்றையும், அவரது செயலையும் காட்சி, கருத்து, ஆகமம் என்னும் பிரமாணங்களால் ஆராய்ந்து தெளிதல். முந்தைய அதிகரங்களில் கூறப்பட்ட வலி அறிதல், காலம் அறிதல், இடம் அறிதல் ஆகிய மூன்றினையும் அறிந்து, பகைவர் மீது போருக்குச் செல்லுதற்கு முன்னர், படை வீரர்களின் தொழில் தன்மையை ஆராய்ந்து தெளிதல் வேண்டும் என்பதால் இது கூறப்பட்டது.


இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "விருப்பம் காரணமாகச் செய்திறன் அறியாதவரைத் தேர்ந்து தெளிதல், அறியாமைகள் அனைத்தையும் கொடுக்கும்" என்கின்றார் நாயனார்.


ஒருவன் மீது தனக்கு உள்ள அன்பின் காரணமாக, அவனது குற்றத்தினையும் குணத்தினையும் ஆராயாமல், அவனைத் தனது செயலைச் செய்வதற்கு உரியவனாகக் கொண்டால், அச் செயலானது அவனது அறியாமையால் முடியாது கெட்டுவிடும்.


திருக்குறளைக் காண்போம்...


காதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல்,

பேதைமை எல்லாம் தரும்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---


காதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல் --- அன்பு உடைமை பற்றுக் கோடாகத் தமக்கு அறிய வேண்டுவன அறியாதாரைத் தெளிதல், 


பேதைமை எல்லாம் தரும் --- அரசனுக்கு எல்லா அறியாமையும் கொடுக்கும்


(தன்னோடு அவரிடை நின்ற அன்புபற்றி அரசன் அறிவிலார் மேல் வினையை வைப்பின், அஃது அவர் அறிவின்மையாற் கெடும், கெட்டால் அவர்க்கு உளதேயன்றி வினைக்கு உரியாரை அறியாமை, மேல் விளைவு அறியாமை முதலாக அவனுக்கு அறியாமை பலவும் உளவாம் என்பதாம்.)



பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்...


சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரை

அற்றத்தால் தேறார் அறிவுடையார் --- கொற்றப்புள்

ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும்

சீர்ந்தது செய்யாதா ரில்.” --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


கொற்றம் புள் ஊர்ந்து - வெற்றியை உடைய கருடன் மீது ஏறி வீற்றிருந்து, உலகம் தாவின அண்ணலே ஆயினும் - உலகத்தைத் தாவி அளந்த பெருமை பொருந்திய திருமாலே ஆயினும், சீர்ந்தது செய்யாதார் இல் - தனக்கு ஊதியம் தரும் சீரியது ஒன்றைச் செய்யாது ஒழிய விடுவார் இல்லை (ஆகையால்), அறிவுடையார் - அறிவிற் சிறந்தோர், சுற்றத்தார் நட்டார் என சென்று - உறவினர், நட்பினர் என்பன கொண்டு சென்று, அற்றத்தால் - மறைத்துச் செய்யும் காரியத்தின்கண், ஒருவரை தேறார் - அவருள் ஒருவரையும் தெளிதல் இலர்.


திருமால் முதலியோர்களும் தமக்கு ஊதியம் பயப்பதாயின் பழி, பாவம் பாரார். ஆகவே, சுற்றத்தார் நட்டார் என்பன கொண்டு அவர் செய்யும் செயல்கள் தூயன என்று அறிதல் வேண்டா. அவர்கள் தம் நன்மையைக் குறித்துச் செய்வனவே என்றறிதல் வேண்டும். அவர்கள் மறைத்துச் செய்தலே அதற்குப் போதிய சான்றாம்.


உடைப்பெருஞ் செல்வத்து உயர்ந்த பெருமை

அடக்கமில் உள்ளத்தன் ஆகி --- நடக்கையின்

ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல், குரங்கின்கைக்

கொள்ளி கொடுத்து விடல்.” --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


உடை பெருஞ் செல்வத்து - உடைமையாகிய மிக்க செல்வத்தினை உடைய, உயர்ந்த பெருமை - உயர்ந்த பெருமை தரத்தக்க முதன்மையை, அடக்கம் இல் உள்ளத்தன் ஆகி - அடக்கமில்லாத உள்ளம் உடையனாகி, நடக்கையின் ஒள்ளியன் அல்லான்மேல் - ஒழுக்கத்தினும் தூய்மையுடையவன் அல்லாதவனிடத்து, வைத்தல் - அரசன் கொடுத்தல், குரங்கின் கை கொள்ளி கொடுத்துவிடல் - குரங்கினது கையில் கொள்ளியைக் கொடுத்து விடுதலை ஒக்கும்.


அற்பர்களுக்கு முதன்மையை அளிப்பது தீமையை அளிக்கும்.


தெற்ற அறிவுடையார்க் கல்லால் திறனிலா

முற்றலை நாடிக் கருமஞ் செயவையார்

கற்றொன் றறிந்து கசடற்ற காலையும்

மற்றதன் பாற்றேம்பல் நன்று.”     ---  பழமொழி நானூறு.



இதன் பொருள் ---


தெற்ற அறிவுடையார்க்கு அல்லால் - தெளிவாக அறிந்த அறிவுடையாரைத் தேடிவைப்பதல்லாமல், திறன் இலா முற்றலை - திறமையில்லாத முதிர்ந்தவர்களை, நாடி கருமம் செய வையார் - ஆராய்ந்து செயலைச் செய்ய வைக்க மாட்டார்கள். (காரியம் முடியவேண்டுமென்ற கருத்துடையார்), ஒன்று கற்று அறிந்து கசடு அற்ற காலையும் - ஒரு பொருளைக் கற்றறிந்து கல்வியின்கண் குற்றமில்லாது ஒருவர் விளங்கிய இடத்தும், மற்று அதன்பால் - குணமில்லையாயின் அவரிடத்துக் கொண்ட நட்பு, தேம்பல் நன்று - மெலிதலே நல்லது.


காரியம் முடியவேண்டுமென்று நினைப்பவர்கள் சிறந்த அறிவு பெற்றவர்களையே அதனைச் செய்ய நிறுத்துதல் வேண்டும்.


நட்புக் கொண்டாரிடத்துக் குணமில்லையாயின், தாம் பிழைத்தன பொறுத்தல் முதலியன அவரிடத்து இல்லை ஆகும். ஆகவே, அத்தகையோர் நட்புக் குறைதலே நல்லது. நட்புக் கொள்வதற்கு ஆராய வேண்டுவனவற்றுள் தலை சிறந்தது குணமேயாம். கல்வி வேண்டுவதில்லை. குணமில்லாரிடத்துக் கொண்ட நட்புப் பயன்தராது ஒழிதல்போல, அறிவில்லாரிடத்து ஒப்புவித்த காரியம் முடிதல் இல்லை.

No comments:

Post a Comment

51. தெரிந்து தெளிதல் - 10. தேரான் தெளிவும்

திருக்குறள் பொருட்பால் அ . அரசியல் அதிகாரம் 51 -- தெரிந்து தெளிதல் அதாவது , அரசன் , அமைச்சர் முதலாயினாரை அவரது பிறப்பு , குணம் , அறிவ...