82. இதனினும் இது நல்லது

 

“பஞ்சரித் தருமையறி யார்பொருளை எய்தலின்

     பலர்மனைப் பிச்சைநன்று;

பரிவாக உபசாரம் இல்லா விருந்தினிற்

     பட்டினி யிருக்கைநன்று;


தஞ்சம்ஒரு முயலைஅடு வென்றிதனில் யானையொடு

     சமர்செய்து தோற்றல்நன்று;

சரசகுணம் இல்லாத பெண்களைச் சேர்தலிற்

     சன்னியா சித்தல்நன்று;


அஞ்சலார் தங்களொடு நட்பாய் இருப்பதனில்

     அரவினொடு பழகுவ துநன்று;

அந்தணர்க் காபத்தில் உதவா திருப்பதனில்

     ஆருயிர் விடுத்தல்நன்று;


வஞ்சக ருடன்கூடி வாழ்தலில் தனியே

     வருந்திடும் சிறுமைநன்று;

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.


இதன் பொருள் —-

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

அருமை அறியார் பொருளைப் பஞ்சரித்து எய்தலின், பலர்மனைப் பிச்சை நன்று - ஈகையின் அருமையை உணராதவர்பால் சென்று பொருளை இரந்து பெறுதலினும், பலருடைய வீடுகளுக்கும் சென்று பிச்சை எடுத்து உண்ணல் நல்லது; 

பரிவாக உபசாரம் இல்லா விருந்தினில், பட்டினி இருக்கை நன்று - அன்புடன் உபசரியாத விருந்தினை உண்பதைவிடப் பட்டினியாக இருத்தல் நல்லது; 

தஞ்சம் ஒரு முயலை அடு வென்றி தனில் யானையொடு சமர்செய்து தோற்றல் நன்று - எளிய ஒரு முயலைக் கொன்ற பெற்ற வெற்றியினும், யானையோடு போர்செய்து தோற்பது நல்லது; 

சரச குணம் இல்லாத பெண்களைச் சேர்தலின், சந்நியாசித்தல் நன்று - இனிய பண்பு இல்லாத பெண்களைக் கூடுவதினும், துறவுபூணுதல் நல்லது; 

அஞ்சலார் தங்களொடு நட்பாய் இருப்பதனில் அரவினொடு பழகுவது நன்று - பகைவருடன் நட்பாய் இருப்பதினும், பாம்பொடு பழமுதல் நல்லது; 

அந்தணர்க்கு ஆபத்தில் உதவாது இருப்பதினில் ஆருயிர் விடுத்தல் நன்று - அருட்பண்பு உடையாருக்கு ஆதரவு செய்ய முடியாத நிலையினும், இறப்பது நல்லது; 

வஞ்சகருடன் கூடிவாழ்தலில், தனியே வருந்திடும் சிறுமை நன்று - கரவான எண்ணம் உடையோருடன் கூடிவாழ்வதினும்  தனியே வருந்தும் இழிநிலை நல்லது.

விளக்கம் —- அன்போடு முகம் களித்து இடுவதே விருந்து ஆகும். "முகம் குழைந்து நோக்கக் குழையும் விருந்து" என்னும் திருவள்ளுவர் வாய்மொழி இங்கு வைத்து எண்ணத் தகும். முகம் சுளித்து இடுவது விருந்து ஆகாது. "அதிதி தேவோ பவ".  விருந்தினர்களை இறைவனாகவே எண்ணி, அருச்சனை செய்து உபசரித்து விருந்து படைக்க வேண்டும். உபசாரங்கள் என்பது பதினாறு வகைப்படும். அவை, தவிசு(இருக்கை) அளித்தல், கை கழுவ நீர் அளித்தல், கால் கழுவ நீர் தரல், முக்குடி நீர் தரல், நீராட்டல், ஆடை சாத்தல், முப்புரி நூல் தரல், சந்தனக் குழம்பு தருதல், மலர் சாத்தல், மஞ்சளரிசி தூவல், நறும்புகை காட்டல், விளக்கு இடல், கருப்பூரம் ஏற்றல், அமுதம் ஏந்தல், அடைக்காய் தருதல், மந்திரமலரால் அருச்சித்தல். இது மகேசுர பூசை எனப்படும்.

பசித் தீ மிகவும் கொடியது. 'பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்'  என்பார் ஔவைப் பிராட்டியார். தனது பசியைத் தணித்துக் கொள்ள ஒருவனுடைய வீட்டிற்குச் சென்றார் ஔவையார். அந்த வீட்டுக்காரனுக்கு ஒரே மகிழ்ச்சி.  இந்த அன்னையை உபசரிக்கும் பேறு கிடைத்ததே என்று அவன் பெருமகிழ்வு கொண்டான். அகங்காரியாகிய அவன் மனைவி உணவு பரிமாறினாள். அவள் உணவு இட்ட முறையும், நடந்து கொண்ட தன்மையும், வெறுக்கத்தக்க விதமாகவே இருந்தது. ஒளவையார் அன்புக்கு எளியவர். ஆனால் அகம்பாவத்திற்கு அவர் என்றும் பணிந்ததில்லை. அவர் உள்ளம் கொதித்தது. சோற்றையும் அகங்காரியின் முகத்தையும் ஒரு முறை நோக்கினார். அப்படியே எழுந்து வெளியே போய்விட்டார். அந்த அப்பாவிக் கணவன் அவரின் பின்னாகத் தொடர்ந்து ஓடினான். “அம்மையே! தாங்கள் உணவு கொள்ளாமல் போவது கூடாது" என்று மிகவும் வேண்டினான்.

“ஐயா! அந்த உணவைப் பார்க்கவே என் கண்கள் கூசுகின்றன. அன்பில்லாத அவள் படைத்த அமுது அது. அதைக் கையில் எடுக்கவே என் உள்ளம் நாணுகிறது. தமிழ் பாடிப் பெருமை பெற்ற எனது வாய், அந்த உணவை ஏற்றுக் கொள்ளத் திறக்க மறுக்கிறது. என் உடலெல்லாம் வேதனையால் பற்றி எரிகின்றது. என்னால் அதனை உண்ணவே முடியாது” என்றும் கூறினார். மனைவியின் கொடுமைகளுக்குப் பழக்கப்பட்ட அவன், பிராட்டியிடம் மீண்டும் மன்றாடினான். அப்போது, அவர் வாயினின்றும் எழுந்த பாடல் இது.

"காணக்கண் கூசுதே, கையெடுக்க நாணுதே,

மாண் ஒக்க வாய்திறக்க மாட்டாதே, - வீணுக்கு என்

என்பு எல்லாம் பற்றி எரிகின்றது, ஐயோ!

அன்பு இல்லாள் இட்ட அமுது"

"ஐயையோ! அன்பில்லாத உனது மனையாள் இட்ட உணவு அது. அதனைக் காணவும் எனது கண்கள் கூசுகின்றன. எடுத்து உண்பதற்கு எனது கை வெட்கப்படுகின்றது. பெருமை நிறைந்த என் வாயும் திறக்க மாட்டேன் என்கிறது. பயனின்றி என் எலும்பெல்லாம் கொதிக்கின்றன” என்பது மேற்குறித்த பாடலின் பொருள்.

உண்ணுங்கள், உண்ணுங்கள் என்று அன்போடு உபசரிக்காதவருடைய வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடிப் பொன் பெற்றதற்கு இணையானது என்கிறார் ஔவையார்.

"உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்

உண்ணாமை கோடி பெறும்."

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நாலடியார் இதனையே வலியுறுத்துகிறது. தனது உடம்பு பசியால் குட்டுப் போகும் என்றாலும், உண்ணத் தகதாவர் கையால் உண்ணக் கூடாது.

"தான்கெடினும் தக்கார் கேடு எண்ணற்க, தன்உடம்பின்

ஊன்கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க, - வான்கவிந்த

வையகம் எல்லாம் பெறினும் உரையற்க

பொய்யோடு இடைமிடைந்த சொல்."         --- நாலடியார்.

இதன் பொருள் ---

ஒருவன் தான் கெடுவதாய் இருந்தாலும் அக் கேட்டினை நீக்கிக் கொள்ளும் பொருட்டுச் சான்றோர்க்குக் கெடுதலை எண்ணாது இருக்க வேண்டும். தனது உடம்பின் தசை பசியால் உலர்வதாயினும் உண்ணத் தகாதவரது பொருளை உண்ணாமல் இருக்க வேண்டும். வானத்தால் கவியப் பெற்றிருக்கும் உலகம் முழுமையும் பெறுவதாய் இருந்தாலும் தனது பேச்சினிடையில் பொய்யொடு கலந்த சொற்களைச் சொல்லாமல் இருக்கவேண்டும்.

காலையிலே படைத்தாலும், வேண்டாதவர்கள் வீட்டு விருந்தில் வைத்த பொரியலும், கூட்டும், வேப்பங்காயைப் போலக் கசக்கவே செய்யும். ஆனால், நேரம் கெட்ட நேரத்தில், பிற்பகலில் படைத்தது வெறும் கீரையுடன் கூடிய உணவு என்றாலும், அதை வேண்டியவர்கள் வீட்டில் இருந்து உண்டால் சுவை உடையதாக இருக்கும் என்கிறது "நாலடியார்"

"நாள்வாய்ப் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து

வேளாண்மை வெங்கருனை வேம்பு ஆகும், -- கேளாய்,

அபராணப் போழ்தின்கண் அடகு இடுவரேனும்

தாமர் ஆயர் மாட்டே இனிது" --- நாலடியார்.

அமராவதி என்னும் ஊரிலே உள்ள குருக்கள் அளித்த விருந்தினை உண்டு அவனைப் புகழ்ந்து காளமேகப் புலவர் பாடிய பாடல்...

"ஆனை, குதிரை,தரும் அன்னைதனைக் கொன்றகறி,

சேனை,மன் னரைக்காய், துன்னீ அவரை --- பூநெய்யுடன்

கூட்டி அமுது இட்டான் குருக்கள் அமராபதியான்

வீட்டில் உண்டுவந்தேன் விருந்து."

இதன் பொருள் ---

அமராவதிக் குருக்கள் என்பவன் அத்திக்காய், மாங்காய், வாழைக்காய், சேனைக்கிழங்கு, நெல்லிக்காய், அவரைக்காய் ஆகியவற்றைக் கொண்டு, பொலிவு தரும் நெய்யைக் கலந்து, தின்னும் கறிகள் சமைத்து அமுது படைத்தான். அவன் வீட்டில் விருந்து உண்டு வந்தேன் (விருந்து உண்டு உவந்தேன்)

ஆனை - யானை. யானைக்கு அத்தி என்று பெயர் உண்டு. ஆனை என்னும் சொல் இங்கே அத்திக்காயைக் குறிக்கும். குதிரைக்கு 'மா' என்றும் பெயர் உண்டு. 'மா' என்பது இங்கே மாங்காயைக் குறிக்கும். அன்னை தனைக் கொன்ற கறி - வாழைக்காயைக் குறிக்கும். குலை சாய்ந்த உடனே தன்னை ஈன்ற தாயாய் இருந்த மரத்தை அழித்த வாழைக்காய் கறி என்பதை, அன்னைதனைக் கொன்ற கறி என்றார். சேனை என்பது சேனைக் கிழங்கைக் குறிக்கும். மன்னரைக் காய் - மன்+நரைக் காய். மன் = நெருக்கம். நரை - வெண்மை நிறம். நெருக்கமாகவும், வெண்மை நிறத்துடனும் காய்க்கின்ற நெல்லிக்காய். பூ நெய் - பொலிவு தருகின்ற நெய். பூவில் இருந்து கிடைக்கின்ற நெய்யாகிய தேன் என்றும் கொள்ளலாம். உண்டு வந்தேன் --- சாப்பிட்டு வந்தேன். உண்டு உவந்தேன் - உண்டு மகிழ்ந்தேன்.

"விண்நீரும் வற்றி, புரவிநீரும் வற்றி, விரும்புமழைத்

தண்ணீரும் வற்றி,புலவோர் தவிக்கின்ற காலத்திலே

உண்ணீர் உண்ணீர் என்று உபசாரம் சொல்லி உபசரித்துத்

தண்ணீரும் சோறும் தருவான் திருப்பனந்தாள் பட்டனே."

இதன் பொருள் ---

விண்ணுலகத்திலே உள்ள ஆகாயகங்கை நீரும் வற்றிப் போய், மண்ணுலகத்தில் உள்ள ஊற்று நீரும் வற்றிப் போய், எல்லோரும் விரும்புகின்ற மேகம் தருகின்ற மழை நீர் இல்லாது ஆறு, குளம் முதலியனவும் வற்றிப் போய், புலவர்கள் நீர்வேட்கை கொண்டு தவிக்கின்ற காலத்திலே, திருப்பனந்தாள் என்னும் ஊரிலே குடி இருக்கின்ற பட்டன் என்பவன், 'உண்ணுங்கள், உண்ணுங்கள்' என்று அன்போடு சொல்லி, உபசாரம் செய்து நீரும் சோறும் தருவான்.

"காட்டில் ஓடுகின்ற முயலை எய்த அம்பினை ஏந்துவதைப் பார்க்கிலும், வெளியிலே நின்ற யானையை எறிந்து தப்பிய வேலை ஏந்துதல் இனிது" என்கின்றார் திருவள்ளுவ நாயனார். “கான முயல் எய்த அம்பினில், யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது” என்னும் திருக்குறள் காண்க. அம்பு தூர இலக்கில் எய்யப் பெறுவது. வேல் கைக்கு எட்டிய தூரத்தில் எறியப் பெறுவது. கானமுயல் ஆளைக் கண்டால் அஞ்சிக் காட்டுக்குள் ஓடுவது. களிறு எதிர்த்து நிற்பது.  தூர இருந்து எய்யத் தக்க களிற்றின்மேல் அணுகி எறிந்தது படைச் செருக்கு. அணுகித் துன்புறுத்தத் தக்க முயலை எய்தது படை இழிவு. ஆகவே வெற்றி தோல்விகளில் செருக்கு இல்லை.  எதிர்க்கப் பெற்ற பொருளின் உயர்வு இழிவுகளில் செருக்கு அமைந்துள்ளது. ஆதலால், யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது என்று பாராட்டப் பெறுகிறது. பிறிது மொழிதலாக முயல் வலியற்ற வீரரையும், களிறு எதிர்த்துப் போரிடும் வீரரையும் காட்டிற்று.

“இசையும் எனினும் இசையாது எனினும்

வசைதீர எண்ணுவர் சான்றோர்; - விசையின்

நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ,

அரிமாப் பிழைப்பெய்த கோல்?” --- நாலடியார்.

இதன் பொருள் ---

இசையும் எனினும் இசையாது எனினும் வரை தீர எண்ணுவர் சான்றோர் --- கைகூடும் என்றாலும், கை கூடாது என்றாலும் பழித்தலில்லாத வகையில் அரிய காரியங்களையே மேன்மக்கள் எண்ணிச் செய்வர்; விசையின் நரிமா உளம் கிழித்த அம்பினின் தீதோ அரிமாப் பிழைப்புஎய்த கோல் --- விரைவோடு நரி என்னும் விலங்கின் நெஞ்சைக் கிழித்துச் சென்ற அம்பை விடப் பழிப்புடையதோ, சிங்கத்தினிடம் தவறுதலைப் பொருந்திய அம்பு?

செய்தற்கு அரிய காரியங்களையே எண்ணிச் செய்வது மேன்மக்கள் இயல்பு என்பது சொல்லப்பட்டது.

பஞ்சரித்து - இரந்து; பஞ்சம் என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது. தஞ்சம் - எளிமை. அஞ்சலார் - பகைவர். அந்தணர் - அருளுடையார்: அம் தண்மை உடையார் அந்தணர்; சாதியைக் குறித்ததன்று.


8. ஏற்பது இகழ்ச்சி

“நொய்துஆம் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின் நொய்தாம் இரப்போன், நுவலுங்கால் - நொய்யசிறு பஞ்சுதனில் நொய்யானைப் பற்றாதோ காற்றணுக அஞ்சுமவன் கேட...