51. தெரிந்து தெளிதல் - 06 அற்றாரைத் தேறுதல்

 

திருக்குறள்

பொருட்பால்


. அரசியல்


அதிகாரம் 51 -- தெரிந்து தெளிதல்


அதாவது, அரசன், அமைச்சர் முதலாயினாரை அவரது பிறப்பு, குணம், அறிவு என்பனவற்றையும், அவரது செயலையும் காட்சி, கருத்து, ஆகமம் என்னும் பிரமாணங்களால் ஆராய்ந்து தெளிதல். முந்தைய அதிகரங்களில் கூறப்பட்ட வலி அறிதல், காலம் அறிதல், இடம் அறிதல் ஆகிய மூன்றினையும் அறிந்து, பகைவர் மீது போருக்குச் செல்லுதற்கு முன்னர், படை வீரர்களின் தொழில் தன்மையை ஆராய்ந்து தெளிதல் வேண்டும் என்பதால் இது கூறப்பட்டது.


இந்த அதிகாரத்தில் வரும் ஆறாம் திருக்குறளில், "சுற்றம் ஒன்றும் இல்லாதவரை நம்பாது ஒழிதல் வேண்டும். ஏனெனில், அவர் எவ்வகையா பற்றும் இல்லாதவர் என்பதால் பழிக்கு நாணமாட்டார்" என்கின்றார் நாயனார்.


நற்குடித் தோற்றம் உடையவராக ஒருவர் இருந்தால், அவரது சுற்றத்தார்க்கு அஞ்சி, உலகமக்கள் பழிக்கும் செயல்களைச் செய்யாது இருப்பார்.


யாதொரு சுற்றமும் இல்லாது, யாரிடத்தும் தொடர்பு இல்லாது இருப்பவர் உலகநடையினை அறியாதவர். எனவே, அவர் பழிக்கு அஞ்சாமாட்டார்.


திருக்குறளைக் காண்போம்...


அற்றாரைத் தேறுதல் ஓம்புக, மற்று அவர்

பற்று இலர் நாணார் பழி.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---


அற்றாரைத் தேறுதல் ஓம்புக - சுற்றம் இல்லாரைத் தெளிதலை ஒழிக, 


அவர் மற்றுப் பற்று இலர் - அவர் உலகத்தோடு தொடர்பு இலர், 


பழி நாணார் - ஆகலான் பழிக்கு அஞ்சார்.


('பற்று இலர்' என்பதனால் 'சுற்றம்' என்பது வருவிக்கப்பட்டது. உலகத்தார் பழிப்பன ஒழிதற்கும் புகழ்வன செய்தற்கும் ஏதுவாகிய உலகநடை இயல்பு சுற்றம் இல்லாதார்க்கு இன்மையின், அவர் தெளியப்படார் என்பதாம்.)


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...


அந்தணர் ஓத்து உடைமை ஆற்ற மிகஇனிதே;

பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே;

தந்தையே ஆயினும் தான் அடங்கான் ஆகுமேல்

கொண்டு அடையான் ஆகல் இனிது.” --- இனியவை நாற்பது.


இதன் பொருள் ---


அந்தணர் ஓத்து உடைமை ஆற்ற மிக இனிதே - பிராமணர்க்கு வேதத்தினை மறவாமை மிக இனிது; பந்தம் உடையான் படை ஆண்மை முன் இனிதே - (மனைவி மக்கள் முதலியோர் மாட்டுப்) பற்றுடையவன் சேனையை ஆளுந்தன்மை, முற்பட இனிது ; தந்தையே ஆயினும் - (தன்னைப் பெற்ற) தந்தையே ஆனாலும், தான் அடங்கான் ஆகுமேல் - அவன் (மனமொழி மெய்கள் தீ நெறிக்கண் சென்று) அடங்கான் எனின், கொண்டு அடையான் ஆதல் - அவன் சொற்கொண்டு அதன்வழி நில்லாதான் ஆதல் இனிது;


விளிந்தாரே போலப் பிறராகி நிற்கும்

முளிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா

அளிந்தார்கண் ஆயினும் ஆராயா னாகித்

தெளிந்தான் விளிந்து விடும்.” --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


அளிந்தார் கண் ஆயினும் - தம்மாட்டு அன்பு உடையாரிடத்தாயினும், ஆராயானாகி தெளிந்தான் - ஆராய்தல் இலனாகித் தெளிந்தவன், விளிந்துவிடும் - அழிந்து விடுவான், விளிந்தாரே போல - எப்பொழுதும் வெகுண்டாரே போல இருந்து, பிறராகி நிற்கும் முளிந்தாரை - அன்பின்மையின் வேறாகி நிற்கும் ஈரம் அற்றாரை, தஞ்சம் மொழியலோ வேண்டா - (தேறவேண்டாம் என்று) உறுதியாகச் சொல்லவேண்டுவதில்லை.

No comments:

Post a Comment

51. தெரிந்து தெளிதல் - 10. தேரான் தெளிவும்

திருக்குறள் பொருட்பால் அ . அரசியல் அதிகாரம் 51 -- தெரிந்து தெளிதல் அதாவது , அரசன் , அமைச்சர் முதலாயினாரை அவரது பிறப்பு , குணம் , அறிவ...