51. தெரிந்து தெளிதல் - 10. தேரான் தெளிவும்

திருக்குறள்

பொருட்பால்


. அரசியல்


அதிகாரம் 51 -- தெரிந்து தெளிதல்


அதாவது, அரசன், அமைச்சர் முதலாயினாரை அவரது பிறப்பு, குணம், அறிவு என்பனவற்றையும், அவரது செயலையும் காட்சி, கருத்து, ஆகமம் என்னும் பிரமாணங்களால் ஆராய்ந்து தெளிதல். முந்தைய அதிகரங்களில் கூறப்பட்ட வலி அறிதல், காலம் அறிதல், இடம் அறிதல் ஆகிய மூன்றினையும் அறிந்து, பகைவர் மீது போருக்குச் செல்லுதற்கு முன்னர், படை வீரர்களின் தொழில் தன்மையை ஆராய்ந்து தெளிதல் வேண்டும் என்பதால் இது கூறப்பட்டது.


இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "ஆராய்ந்து பார்க்காமல் ஒருவனைத் தெளிவதும், தெளிந்த ஒருவனிடத்தில் ஐயுறவு கொள்வதும், தீராத துன்பத்தைக் கொடுக்கும்" என்கின்றார் நாயனார்.


ஒருவனைப் பற்றி நன்றாகத் தெளிந்து கொள்ளாமல், ஒரு வேலையில் அவனை வைக்கக் கூடாது. தெளிந்த ஒருவனிடம் ஒரு தொழிலைக் கொடுத்துச் செய்ய வைத்த பிறகு, அவன் நல்லவனா கெட்டவனா என்று சந்தேகம் கொண்டால், தொழிலைச் செய்யப் புகுந்தவன், "இவன் நம் மீது சந்தேகப்படுகின்றான், இவன் நம்மை நெடுநாள் வைத்திருக்கமாட்டான் என்று எண்ணி, செய்யக் கொடுத்த தொழிலை ஊக்கத்தோடு செய்யமாட்டான். அதனால் காரியம் கெடும். மேலும், வேண்டாதவர்கள் அவனைப் பிரிக்கவும் கூடும்.


ஆகையால், தீர ஆராயாமல் ஒருவனை ஒரு செயலுக்கு வைக்கக் கூடாது. வைத்தபின்னர் அவனைச் சந்தேகிக்கக் கூடாது. இரண்டுமே துன்பத்தைத் தரும்.


திருக்குறளைக் காண்போம்...


தேரான் தெளிவும், தெளிந்தான்கண்  ஐயுறவும்,

தீரா இடும்பை தரும்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---


தேரான் தெளிவும் --- அரசன் ஒருவனை ஆராயாது தெளிதலும், 


தெளிந்தான்கண் ஐயுறவும் --- ஆராய்ந்து தெளிந்தவன் மாட்டு ஐயப்படுதலும், இவ்விரண்டும்,  


தீரா இடும்பை தரும் --- அவனுக்கு நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.


(வினை வைத்த பின் ஒரு தவறு காணாது வைத்து ஐயுறுமாயின், அதனை அவன் அறிந்து, 'இனி இது நில்லாது' என்னும் கருத்தான் அவ்வினையை நெகிழ்த்துவிடும், அதுவேயன்றிப் பகைவரால் எளிதில் பிரிக்கவும் படும். ஆதலால் தெளிந்தான்கண் ஐயுறவும் ஆகாதாயிற்று. தெளிவிற்கு எல்லை கூறியவாறு. இவை ஐந்து பாட்டானும், தெளியப்படாதார் இவர் என்பதூஉம், அவரைத் தெளிந்தால் படும் இழுக்கும், தெளிவிற்கு எல்லையும் கூறப்பட்டன.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


கன்னன் தெளிந்து, ஆசான் காதலனை ஐயமுற்றான்

இன்னல் பொலிந்தான் இரங்கேசா --- முன்னமே

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்.”


இதன் பொருள் ---  


இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! கன்னன் - கர்ண மகாராஜனை, தெளிந்து - நம்பி, ஆசான் காதலனை - குருவாகிய துரோணாசாரியார் புத்திரன் அசுவத்தாமனை, ஐயம் உற்றான் - சந்தேகப்பட்டு நம்பாதவனாகிய துரியோதனன், இன்னல் பொலிந்தான் - துன்பத்தில் சிறந்தான், (ஆகையால், இது) முன்னமே - முந்தியே, தேரான் - (அரசன் ஒருவனை) ஆராயாதவனாகி, தெளிவும் - நம்புதலும்,  தெளிந்தான்கண் -  (அப்படி ஆராய்ந்து) நம்பின ஒருவனிடத்தில், ஐயுறவும் - சந்தேகப்படுதலும், தீரா இடும்பை தரும் - (அவனுக்கு என்றும்) அழியாத துன்பத்தைக் கொடுக்கும் (என்பதை விளக்குகின்றது).


கருத்துரை --- ஆராயாமல் யாரையும் நம்புதல் கூடாது.


விளக்கவுரை --- துரியோதனன் கர்ணனை இன்னான் என்றும், இன்ன வித்தையில் வல்லவன் என்றும் தெரியாதிருந்தும் நம்பிப் பாரதப் போரில் துரோணாசாரியாருக்குப் பிறகு படைத்தலைவனாக்கியும், துரோணாசாரியார் குமாரன் என்றும், வில் வித்தையில் வல்லவன் என்றும், சிரஞ்சீவியாய் அழியாதவன் என்றும் தெரிந்திருந்தும், அசுவத்தாமனைச் சந்தேகித்து, அங்ஙனம் செய்யாது ஒழித்தும் துன்பமுற்ற செய்தி யாவர்க்கும் தெரிந்த விஷயமாகும்.


"கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே"


என்றபடி, மதி கெட்ட மன்னவன் ஒவ்வொருவனும் தேரான் தெளிவும், தெளிந்தான்கண் ஐயுறவும் கொண்டு தீரா இடும்பைக்கு ஆளாவான் என்பதில் ஐயமில்லை.

பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருப்பததைக் காணலாம்....


விளிந்தாரே போலப் பிறராகி நிற்கும்

முளிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா

அளிந்தார்கண் ஆயினும் ஆராயா னாகித்

தெளிந்தான் விளிந்து விடும்.” --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


அளிந்தார் கண் ஆயினும் - தம் மாட்டு அன்பு உடையாரிடத்தாயினும், ஆராயானாகி தெளிந்தான் - ஆராய்தல் இலனாகித் தெளிந்தவன், விளிந்து விடும் - அழிந்து விடுவான், விளிந்தாரே போல - எப்பொழுதும் வெகுண்டாரே போல இருந்து, பிறராகி நிற்கும் முளிந்தாரை - அன்பு இன்மையின் வேறாகி நிற்கும் ஈரம் அற்றாரை, தஞ்சம் மொழியலோ வேண்டா - (தேற வேண்டாம் என்று) உறுதியாகச் சொல்லவேண்டுவது இல்லை.


தம்மாட்டு அன்புடையாரிடத்தே ஆராயாது தமது மறைபொருளை வெளியிட்டார் கெடுவர் என்றால்,பிறரை நம்பலாகாது என்பது சொல்லவேண்டா.


உறுமக்கள் ஆக ஒருவரை நாட்டிப்

பெறுமாற்றம் இன்றிப் பெயர்த்தே ஒழிதல்

சிறுமைக்கு அமைந்ததோர் செய்கை, அதுவே

குறுமக்கள் காவு நடல்.” --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


உறுமக்களாக ஒருவரை நாட்டி - வேலைக்குத் தகுதியானவராக ஒருவரை வேலையில் இருக்கச் செய்து, பெறுமாற்றம் இன்றி பெயர்த்தே ஒழிதல் - அவர் செய்த குற்றம் உண்டு என்னும் சொல் இன்றியே அவரை வேலையினின்றும் தவிர்த்து ஒழிதல், சிறுமைக்கு அமைந்ததோர் செய்கை - கீழ்மக்களுக்குப் பொருந்திய செயலாம். அது - அச்செயல், குறுமக்கள் காவு நடல் - பிள்ளைகள் சோலை வைத்து வளர்ப்பதை ஒக்கும்.


சோலை வைக்கப் புகுந்த சிறுவர்கள் செடிகளை நட்ட இடத்தில் தரிக்கவொட்டாராதலால் சோலை உண்டாதலில்லை. அதுபோல, கீழ்மக்களும் அடிக்கடி செயலாற்றுவோரை மாற்றும் தொழிலுடையராதலின், அவர் நினைத்த காரியம் முடிவு பெறுவதில்லை. சிறுமைக் குணம் மிகுதியும் உடையவர்கள் கீழ்மக்களாதலால் சிறுமை எனப்பட்டனர்.


ஆறாச் சினத்தன், அறிவிலன், மற்றவனை

மாறி ஒழுகல் தலை என்ப, - ஏறி

வளியால் திரையுலாம் வாங்குநீர்ச் சேர்ப்ப!

தெளியானைத் தேறல் அரிது.” --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


வளியால் ஏறி திரையுலாம் வாங்குநீர் சேர்ப்ப - காற்றால் கரைமீது ஏறித் திரைகள் வீசுகின்ற வளைந்த கடல் நாடனே! தெளியானைத் தேறல் அரிது - மனத்தின்கண் தெளிதல் இல்லாதவனை நம்புதல் முடியாது. (அதுபோல) ஆறாச் சினத்தன் அறிவிலன் - மாறாத வெகுளியை உடையான் (ஆனால்) அறிவு இல்லாதவன், அவனை மாறி ஒழுகல் தலை யென்ப - (அவனோடு சேர்ந்திருத்தல் முடியாது ஆதலால்) அவனை நீங்கி ஒழுகுதல் சிறந்ததென்று சொல்லுவர் நல்லோர்.

சினம் சேர்ந்தாரைக் கொல்லி. ஆதலால் அது உடையாரை விட்டு நீங்காவிடின் துன்பத்திற்கு உள்ளாக்கப்படுவார்கள். மனத்தெளிவு இல்லானை நம்புதல் கூடாதது போல சினம் உடையானோடு சேர்ந்து ஒழுகல் கூடாது.


தெற்ற ஒருவரைத் தீதுரை கண்டக்கால்

இற்றே அவரைத் தெளியற்க --- மற்றவர்

யாவரே யாயினும் நன்கொழுகார் கைக்குமே

தேவரே தின்னினும் வேம்பு.” --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


தெற்ற ஒருவரை - தெளிவாக நண்பு பூண்ட ஒருவரை, தீதுரை கண்டக்கால் - ஒருவர் பொல்லாங்கு உரைக்கும் உரையைக் கேட்டால், இற்றே - நம்மையும் இப் பெற்றியே உரைப்பார் என்று கருதி, அவரை தெளியற்க - அவரை நம்பாது ஒழிக, தேவரே தின்னினும் வேம்பு கைக்கும் - உண்பவர்கள் தேவர்களேயானாலும் வேம்பு கசக்குந் தன்மையது. (அதுபோல), யாவரே யாயினும் நன்கு ஒழுகார் - நட்புப் பூண்பவர்கள் மிகவும் சிறந்தவர்களாயினும் அவர்களோடு நன்றாக ஒழுகுதல் இலர்.


அஞ்சாமை அஞ்சுதி, ஒன்றின் தனக்கு ஒத்த

எஞ்சாமை எஞ்சல் அளவு எல்லாம் --- நெஞ்சு அறியக்

கோடாமை கோடி, பொருள் பெறினும் நாடாதி

நட்டார்கண் விட்ட வினை.” --- நான்மணிக்கடிகை


இதன் பொருள் ---


அஞ்சாமை அஞ்சுதி - அஞ்சுதற்குரிய செயல்களில் அஞ்சாமலிருக்கும் ஒழுக்கத்தை நீ அஞ்சுவாய்; ஒன்றில் தனக்கு ஒத்த அளவு எல்லாம் எஞ்சாமை  எஞ்சல் - ஒரு செயலில், தனக்குக் கூடுமான அளவுகளில் எல்லாம், பிறர்க்கு உதவி செய்தலில் குறையாமையாகிய ஒழுக்கத்தைக் குறைய விடாதே;  நெஞ்சு அறியக் கோடாமை கோடி - உள்ளம் அறிய, ஒருபக்கங் கோணாமையாகிய ஒழுக்கத்தைக் கொள்ளுவாய்; பொருள் பெறினும் நட்டார்கண் விட்ட வினை நாடாதி - பெரும் பொருள் பெறுவதானாலும், நண்பரது பொறுப்பில் செய்யவிட்ட தொழிலை ஆராயாதே.


அஞ்சுவது அஞ்சுக; இயன்றளவு உதவிசெய்வதிற் குறையாதே; ஒருபக்கங் கோணாதே; நண்பர்கள்பால் விட்ட தொழிலை ஆராயாதே.


தெளிவு இலார் நட்பின் பகைநன்று ; சாதல்

விளியா அருநோயின் நன்றால், - அளிய

இகழ்தலின் கோறல் இனிதே, மற்று இல்ல

புகழ்லின் வைதலே நன்று.” --- நாலடியார்.



இதன் பொருள் ---


தெளிவிலார் நட்பின் பகை நன்று - நம்பத் தகாதவரது நட்பினும் அவரது பகை நலந்தரும் ; சாதல் விளியா அருநோயின் நன்று - தீராத கொடிய நோயினும் இறத்தல் நலமாகும் ; அளிய இகழ்தலின் கோறல் இனிது - பிறரை நெஞ்சு புண்ணாகும்படி இகழ்தலினும் அவரைக் கொல்லுதல் நல்லது ; இல்ல புகழ்தலின் வைதலே நன்று - ஒருவரிடம் இல்லாதன கூறிப் புகழ்தலினும் அவரைப் பழித்தலே நன்மையாம்.


தேறலார் தமைத் தேறலும் 

தேறினர்த் தேறலாமையும் என்றும்

மாறு அலாருடன் மலைதலும், 

மாறுடன் மருவி வாழ்தலும், முன்னே

ஆறு அலாதன அரசருக்கு 

என்று கொண்டு அரச நீதியில் சொன்னார்

கூற அலாதன சொல்வது என்? 

செல்வது என் கொடியவன் அருகு என்றான்.”---  வில்லிபாரதம்.


இதன் பொருள் --- 

(அருச்சுனன் தருமபுத்திரனை நோக்கி), 'தேறலார் தமை தேறலும் - தெளியப்படாதவர்களை நம்புதலும், தேறினர் தேறலாமையும் - தெளியப்பட்டவர்களை(ப் பின்பு) நம்பாதிருத்தலும், என்றும் மாறு (ல்)லாருடன் மலைதலும் - ஒருநாளும் (தம்மோடு) பகைக்கும் தன்மையில்லாத நண்ப(ரைப் பகைவரென்று கொண்டு அவ)ரோடு பொருதலும், மாறுடன் மருவி வாழ்தலும் - பகைவருடனே நட்புக்கொண்டு கலந்து வாழ்தலும், (ஆகிய இச்செயல்கள்), அரசருக்கு ஆறு அலாதன - அரசர்கட்கு முறைமையல்லாத காரியங்களாம், என்று கொண்டு - என்று, முன்னே - முற்காலத்திலேயே, அரச நீதியில் சொன்னார் - அரசர்கட்கு உரிய நீதி நூல்களில் (ஆன்றோர்) கூறியுள்ளார்;  கூறலாதன - (அரசர்கட்கு உரியனவென்று) சொல்லாமல் விலக்கியுள்ளவற்றை, சொல்வது - (அரச நீதியை நன்கு உணர்ந்த நீ இப்பொழுது செய்யவேண்டிய காரியமாக) எடுத்துச்சொல்வது, என் - யாது காரணம் பற்றி? கொடியவன் அருகு செல்வது என் - (நம்மிடத்துக்) கொடும் பகைமை கொண்டுள்ளவனாகிய துரியோதனனை (உரிய நண்பனாகக் கருதி நாம்) அவனருகில் செல்வது எதற்காக? என்றான் - என்று கூறினான்.

     அரசன் ஒருவனைப் பலவகையாலும் சோதித்து 'தக்கவன்' என்று துணிந்த பின்பே அவனைத் தன்னிடத்து வினை செய்பவனாகக் கொள்ள வேண்டும்.  அவ்வாறு ஆராய்ந்து தெளியப்படாத ஒருவனை வினைசெய்பவனாகக் கொண்டாலோ, அவ்வினை கெடத் தான் கெடுவதோடு தன் குலத்துப் பிறந்தாரும் பகைவர் கைப்பட்டுக் கீழாய் விடுவர். அவ்வாறே சோதித்து அறிந்து தெளிந்தவனிடத்துத் தொழிலை வைத்துப் பின்பு ஒரு தவறும் காணாது இருக்கையில் ஐயுற்றால், அதனை அவன் அறிந்து 'இனி இத்தொழில் நமக்கு நிலையாது' என்று எண்ணித் தான் கொண்ட தொழிலை நெகிழ்த்தி விடப் பகைவரால் எளிதிற் பிரிக்கப்பட்டு விலகிச் செல்வன்: ஆகவே, தேறலார் தமைத் தேறலும், தேறினர்தமைத் தேறாமையுங் கூடாவென்க; "தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை, தீரா இடும்பை தரும்," "தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும், தீரா இடும்பை தரும்" என்ற திருக்குறட்பாக்களினால் முதலடியின் கருத்து விளங்கும்.  

இனி, தேறலார் தமை தேறலும் - நம்புதற்குத் தகுதியல்லாத அயோக்கியர்களை நம்புதலும், தேறினர் தேறலாமையும் - யோக்கியர் என்று கொண்டவர்களை நம்பாது ஒழிதலும் என்றுமாம். 'மாறுடன் மருவி வாழ்தல்' என்பதே இங்குச் சந்தர்ப்பத்துக்கு ஏற்றதாயினும், அதன் இனமாக மற்றவற்றையும் உடன்கூட்டி யுரைத்தார். "நட்புப்பிரித்தல் பகைநட்டல் ஒற்று இகழ்தல் பக்கத்தார் யாரையும் ஐயுறுதல் - தக்கார், நெடுமொழி கோறல் குணம் பிறிதாதல், கெடுவது காட்டுங் குறி" என்ற நீதிநெறி விளக்கச் செய்யுள் இங்கு அறியத்தக்கது.

8. ஏற்பது இகழ்ச்சி

“நொய்துஆம் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின் நொய்தாம் இரப்போன், நுவலுங்கால் - நொய்யசிறு பஞ்சுதனில் நொய்யானைப் பற்றாதோ காற்றணுக அஞ்சுமவன் கேட...