திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 51 -- தெரிந்து தெளிதல்
அதாவது, அரசன், அமைச்சர் முதலாயினாரை அவரது பிறப்பு, குணம், அறிவு என்பனவற்றையும், அவரது செயலையும் காட்சி, கருத்து, ஆகமம் என்னும் பிரமாணங்களால் ஆராய்ந்து தெளிதல். முந்தைய அதிகரங்களில் கூறப்பட்ட வலி அறிதல், காலம் அறிதல், இடம் அறிதல் ஆகிய மூன்றினையும் அறிந்து, பகைவர் மீது போருக்குச் செல்லுதற்கு முன்னர், படை வீரர்களின் தொழில் தன்மையை ஆராய்ந்து தெளிதல் வேண்டும் என்பதால் இது கூறப்பட்டது.
இந் அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "தேர்ந்து தெளியாமல் எவர் ஒருவரையும் நம்புதல் கூடாது; தெளிந்த பின்னர் நம்புதற்கு உரிய காரியங்களை மேற்கொள்க" என்கின்றார் நாயனார்.
ஒருவனை அறியாததற்கு முன் அவனை ஒரு செயலில் வைக்கக் கூடாது. அவருடைய வல்லமையை அறிந்து, செயலை வைத்த பிறகு சந்தேகம் கொள்ளுதலும் கூடாது.
திருக்குறளைக் காண்போம்...
“தேறற்க யாரையும் தேராது, தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.”
இதற்குப் பரிமேலழகர் உரை ---
யாரையும் தேராது தேறற்க --- யாவரையும் ஆராயாது தெளியா தொழிக,
தேர்ந்த பின்தேறும் பொருள் தேறுக --- ஆராய்ந்தபின் தெளியும் பொருள்களை ஐயுறாது ஒழிக.
('தேறற்க' என்ற பொதுமையான் ஒருவினைக் கண்ணும் தெளியலாகாது என்பது பெற்றாம். ஈண்டு , 'தேறுக' என்றது தாற்பரியத்தால் ஐயுறவினது விலக்கின்மேல் நின்றது. 'தேறும் பொருள்' என்றது அவரவர் ஆற்றற்கு ஏற்ற வினைகளை. 'பொருள்' ஆகுபெயர்.)
பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்திருப்பதைக் காணலாம்....
“சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரை
அற்றத்தால் தேறார் அறிவுடையார் --- கொற்றப்புள்
ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும்
சீர்ந்தது செய்யாதா ரில்.” --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
கொற்றம் புள் ஊர்ந்து - வெற்றியையுடைய கருடன் மீது ஏறி வீற்றிருந்து, உலகம் தாவின அண்ணலே ஆயினும் - உலகத்தைத் தாவி அளந்த பெருமை பொருந்திய திருமாலே ஆயினும், சீர்ந்தது செய்யாதார் இல் - தனக்கு ஊதியம் தரும் சீரியது ஒன்றைச் செய்யாதொழிய விடுவார் இல்லை (ஆகையால்), அறிவுடையார் - அறிவில் சிறந்தோர், சுற்றத்தார் நட்டார் என சென்று - உறவினர், நட்பினர் என்பன கொண்டு சென்று, அற்றத்தால் - மறைத்துச் செய்யும் காரியத்தின்கண், ஒருவரை தேறார் - அவருள் ஒருவரையும் தெளிதல் இலர்.
திருமால் முதலியோர்களும் தமக்கு ஊதியம் பயப்பதாயின் பழி, பாவம் பாரார். ஆகவே, சுற்றத்தார் நட்டார் என்பன கொண்டு அவர் செய்யும் செயல்கள் தூயனவென்றறிதல் வேண்டா. அவர்கள் தம் நன்மையைக் குறித்துச் செய்வனவே என்றறிதல் வேண்டும். அவர்கள் மறைத்துச் செய்தலே அதற்குப் போதிய சான்றாம்.
“மறந்தானும் தாம்உடைய தாம்போற்றின் அல்லால்,
சிறந்தார் தமர் என்று தேற்றார்கை வையார்;
கறங்குநீர்க் கால் அலைக்கும் கானல் அம் சேர்ப்ப!
இறந்தது பேர்த்து அறிவார் இல்.” --- பழமொழி நானூறு.
இதன் பொருள் ---
கறங்கு நீர்க்கால் - ஒலிக்கின்ற நீரை உடைய உப்பங்கழிகள், அலைக்கும் - அலைவீசுதற்கு இடனாய, கானல் அம் சேர்ப்ப - கடற்கரைச் சோலையை உடைய அழகிய கடல் நாடனே!, இறந்தது - தமது கையினின்றும் போய பொருளை, பேர்த்து அறிவார் இல் - மீட்டுத் தர அறிவாரில்லை, ஆதலால், தாம் உடைய - தம்மிடத்துள்ள பொருளை, தாம் போற்றின் அல்லால் - தாம் காவல் செய்யின் அல்லது சிறந்தார் தமர் என்று - தமக்குச் சிறந்தார் எனவும், உறவினர் எனவும் கருதி, தேற்றார் கை - நம்பலாகாதார் கையின்கண், மறந்தானும் வையார் - ஒருகால் மறந்தும் வைத்தல் இலர் அறிவுடையார்.
ஒவ்வொருவரும் தந்தம் பொருளைத் தாமே பாதுகாத்தல் வேண்டும். போனபொருளை மீட்டும் பெறுதல் அரிது. ஆதலால், உள்ளபொருள் கைவிட்டுப் போகாதவண்ணம் தாமே காவல் செய்தல் வேண்டும்.