திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 51 -- தெரிந்து தெளிதல்
அதாவது, அரசன், அமைச்சர் முதலாயினாரை அவரது பிறப்பு, குணம், அறிவு என்பனவற்றையும், அவரது செயலையும் காட்சி, கருத்து, ஆகமம் என்னும் பிரமாணங்களால் ஆராய்ந்து தெளிதல். முந்தைய அதிகரங்களில் கூறப்பட்ட வலி அறிதல், காலம் அறிதல், இடம் அறிதல் ஆகிய மூன்றினையும் அறிந்து, பகைவர் மீது போருக்குச் செல்லுதற்கு முன்னர், படை வீரர்களின் தொழில் தன்மையை ஆராய்ந்து தெளிதல் வேண்டும் என்பதால் இது கூறப்பட்டது.
இந்த அதிகாரத்தில் வரும் எட்டாம் திருக்குறளில், "தன்னோடு சம்பந்தம் உடையவன் அல்லாதானை, அவனது பிறப்பு முதலியவற்றாலும், செய்கையாலும் ஆராயாது தெளிந்தால், அப்படி நம்பியவனுக்கு மட்டுமல்லாது, அவனது சந்ததிக்கும் துன்பத்தைத் தரும்" என்கின்றார் நாயனார்.
வழிமுறை --- சந்ததி.
தனது குடியோடு சிறிதும் காணுதல் இல்லாத மரபினை இல்லாதவனையும், நற்குடிப்பிறப்பு, நற்குணம், நற்செயல், நல்லறிவு இல்லாதவனையும், ஆராயாமல் தனது தொழிலுக்கு உடையவனாக வைத்துக் கொள்ளும் செயலானது, அவன் கெடுவதுடன், அவனது வழி வந்தாரையும் கெடுதியில் கொண்டு செல்லும்.
திருக்குறளைக் காண்போம்...
“தேரான் பிறனைத் தெளிந்தான் ,வழிமுறை
தீரா இடும்பை தரும்.”
இதற்குப் பரிமேலழகர் உரை ---
பிறனைத் தேரான் தெளிந்தான் --- தன்னோடு இயைபுடையன் அல்லாதானைப் பிறப்பு முதலியவற்றானும் செயலானும் ஆராய்ந்து தெளிந்த அரசனுக்கு,
வழிமுறை தீரா இடும்பை தரும் - அத்தெளிவு தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.
(இயைபு: தன் குடியோடு தொடர்ந்த மரபு. இதனானே அதுவும் வேண்டும் என்பது பெற்றாம். தெளிதல் அவன்கண்ணே வினையை வைத்தல். அவ்வினை கெடுதலால், தன் குலத்துப் பிறந்தாரும் பகைவர் கைப்பட்டுக் கீழாய்விடுவர் என்பதாம். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது.)
இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான, மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
“தேரஅரும் ஆனந்தனைமுன் தேறிப் பழிபூண்டான்
சூரியசன் மாஎன்பான், சோமேசா! --- தாரணிமேல்
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.”
இதன்பொருள்---
சோமேசா! தாரணிமேல் - நிலவுலகத்து, பிறனைத் தேரான் தெளிந்தான் - தன்னோடு இயைபுடையான் அல்லாதானைப் பிறப்பு முதலியவற்றானும் செயலானும் ஆராயாது தெளிந்த அரசனுக்கு, வழிமுறை - அத் தெளிவு தன் வழிமுறையினும், தீரா இடும்பை தரும் - நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்,
தேர அரும் ஆனந்தனை - பிறப்பு முதலியவற்றானும் செயலானும் ஆராய்தற்கு அரிய ஆனந்தன் என்னும் அந்தணனை, சூரிய சன்மா - சூரியசன்மா என்னும் அந்தணன், தேறி - தெளிந்து, பழி பூண்டான் - வீணே பழியை மேற்கொண்டான் ஆகலான் என்றவாறு.
இயைபு - தன் குடியோடு தொடர்ந்த மரபு. இதனானே அதுவும் வேண்டும் என்பது பெற்றாம். தெளிதல் - அவன் கண்ணே வினையை வைத்தல். அவ்வினை கெடுதலால் தன் குலத்துப் பிறந்தாரும் பகைவர் கைப்பட்டுக் கீழாய் விடுவர் என்பதாம். தெளிந்தான் என்றவிடத்து நான்கனுருபு விகாரத்தால் தொக்கது.
கௌசிக நாட்டில் விக்கிரம நகரத்தில் ஆனந்தன், சூரியசன்மா என்று இரண்டு அந்தணர்கள் இருந்தார்கள். வஞ்சகனாகிய ஆனந்தன், சூரியசன்மாவை எதிர்த்து வெல்லுதல் கூடாது என்று அறிந்து, வஞ்சானையால் வெல்லக் கருதி ஒரு நாள் அவனிடம் வந்து, "ஐயரே! அறிவின்மையால் இத்தனை நாள் உம்மைப் பகைத்து வந்தேன். பொறுத்தருள்க" என்று வீழ்ந்து வணங்கினான். சூரியசன்மா அவனிடம் கொண்ட பகைமை முற்றும் அப்பொழுதே மறந்து, அவனோடு அளவளாவினான். இருவரும் நெருக்கமாய் நெடுநாள் பழகினார்கள். ஒருநாள் ஆனந்தன் தன் எண்ணத்தை முடித்துக் கொள்ள எண்ணி, "ஐயரே! நமது வீதியில் புலி ஒன்று இரவில் வருகிறது. நான் அது வரும் சமயம் பார்த்திருந்து அழைக்கிறேன். நீர் உடனே வெளிவந்து அதனைக் கொல்லுக" என்று கூறி ஒரு பசுவிற்குப் புலித்தோல் போர்த்து நிறுத்தி நள்ளிரவில் சூரியசன்மாவை அழைத்தான். சூரியசன்மா ஓடிவந்து அப் பசுவைக் கொன்றான். அவனைக் கோஹத்தி (பசுவதை) பற்றியது. அதனோடு அமையாது ஆனந்தன், "ஐயரே! நீர் இங்கேயே இருக்க, நான் உமது மனைக்கண் உள்ள கள்வர்க்கு அஞ்சாது அங்குச் சென்று வருவேன்" என்று கூறிப்போய், சூரியசன்மாவின் மனையாட்டியிடம் சென்று, "அம்மையரே, கள்வர் வருவர். நீர் இங்கிராதீர். உம் மகன் விடுதியில் சென்றிருக்க" என்று அவளை அவன் மகனிருக்கையின் விட்டு, அவள் மகனையும் மருகியையும் அவள் விடுதியில் கொணர்ந்து விட்டுத் திரும்பிச் சென்று, "ஐயரே! ஓர் அடாத செய்கை நடைபெறுகின்றது. நும் மனைவியாள் வேற்றுமகன் ஒருவனுடன் ஒரு பாயலில் கிடக்கக் கண்டேன், காண்க" எனவே, அவன் விரைந்து சென்று வாயில்கள் அடைத்திருந்ததனால், புறக்கடை வழியாக வந்து மதில் சுவர் ஏறிக் குதித்து உட்புகுந்து தன் விடுதியில் ஒருவனும் ஒருத்தியும் ஒரு பாயலில் இருக்கக் கண்டு அவர்கள் மகனும் மருகியும் என்று அறியாது கொன்றான். மறுநாள் காலையில் சூரியசன்மாவின் மனைவி தன்னகம் புக்கபோது மகனும் மருகியும் கொலையுண்டு கிடப்பது கண்டு வாயினும் வயிற்றினும் அடித்துக்கொண்டு கதறினாள். அவள் அழுகையொலி கேட்ட சூரியசன்மா ஓடி வந்து பார்த்து நடந்த வஞ்சனை அறியாது தானும் புலம்பினான். அதற்குள் ஆனந்தன் அந்தணர் அவைக்குச் சென்று, "சூரியசன்மா பசுக்கொலை செய்ததும் அன்றித் தன் மகனையும் மருகியையும் கொன்றிட்டான்" என்று அறிவித்தான். அவையத்தார் சூரியசன்மாவை வருவித்து விசாரித்தனர். சூரியசன்மா மனமிக வருந்தி, "ஐயன்மீர்! சூதால் விளைந்த கெடுதி இவை. ஆனந்தனே இவற்றிற்கெல்லாம் காரணம்" என்றான். அவையத்தார், "அங்ஙனமாயின் நீ கேதாரநாதன் சந்நிதியிலுள்ள இடபத்திற்குப் புல் அருத்துவாய்" என்றனர். அதற்கு அவன், "அந்த இடபத்திற்கே அன்றி, திருமதில் இடபத்திற்கும், கோபுரத்து இடபத்திற்கும் உடன் அருத்துவன், வருக" என்றான். நான்கு அந்தணர்கள் அவனுடன் சென்றார்கள். "கேதார நாதன் திருநாமமாகிய பஞ்சாட்சரத்திற்குத் திருவருள் உண்டெனில் இடபங்களே வருக" என்றான் சூரியசன்மா. உடனே அவ் இடபங்கள் வந்து அவன் தந்த புல்லை அருந்தின. அவ் அருஞ்செயலை வியந்து யாவரும் சூரியசன்மைவை வணங்கினார்கள். அப்போது அவன் மனையாள் அவனை நோக்கி, "இறந்து பட்ட பசுவும், மகனும், மருகியும் உயிர் பெற்று எழும்படி செய்க" என்று வேண்டினாள். அவன் பஞ்சாட்சரத்தை ஓதிய அளவில், பசுவும், மகனும், மருகியும் துயில் நீத்தவர்கள் போல் எழுந்திருக்கவே, யாவரும் மனம் மகிழ்ந்தார்கள். ஆனந்தன் ஓடிக் காட்டில் ஒளித்துக் கடும்பிணி கொண்டு மாய்ந்து நரகமடைந்தான்.
அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...
“தீதுஎணும் இராக்கதனைத் தேர் மித்திரசகன்தான்
மூது அரக்கன் ஆனான், முருகேசா! --- ஆதலினால்,
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.”
இதன் பொருள் ---
முருகேசா - முருகப் பெருமானே, மித்திரசகன் - மித்திரசகன் என்னும் அரசன், தீது எணும் இராக்கதனை - தீமை செய்தற்கு எண்ணிய அரக்கனை, தேர் - சமையல் வேலைக்குத் தெரிந்து வைத்தபடியினால், மூது அரக்கன் ஆனான் - பெரிய அரக்கனாகித் திரிந்தான். பிறனை - மற்றவனை, தேரான் - ஆராயாமல், தெளிந்தான் வழிமுறை - தெரிந்தெடுத்தவனுக்கும் அவனுடைய வழிமுறைக்கும், தீரா இடும்பை தரும் - தீராத துன்பத்தைக் கொடுக்கும்.
மித்திரசகன் என்னும் அரசன் தீமை செய்யக் கருதிய அரக்கனை மடைத் தொழிலாளியாக ஆராயாது ஏற்படுத்திய குற்றத்தால் அரக்கனாகித் திரிந்தான். பிறனை ஆராய்ந்து பார்க்காமல் தெளிந்துகொண்டவனுடைய வழிமுறையானது தீராத துன்பத்தையடையும் என்பதாம்.
மித்திரசகன் கதை
முன்னாளில் மித்திரசகன் என்னும் பெயருடைய அரசன் ஒருவன் இருந்தான். அவன் வேட்டையாடும் பொருட்டுக் காட்டிற்குச் சென்றான். அப்பொழுது அங்கு எதிர்ப்பட்ட ஓர் அரக்கனைக் கொன்றான். அவனுடைய உடன் பிறந்தானாகிய அரக்கன் இவ் அரசனுக்குக்க் வஞ்சனையினால் கெடுதியைச் செய்ய வேண்டுமென்று எண்ணியவனாய் மடைத் தொழிலாளி போல் கோலம் பூண்டு, அரசன் அரண்மனைக்குச் சென்று தான் சமையல் தொழிலில் வல்லவன் என்றும் தனக்கு வேலை வேண்டும் என்றும் கேட்டான். அரசன் அவனுடைய வரலாற்றை உசாவாமல் சமையல் வேலையில் நிறுத்தினான். அவன் ஒருநாள் முனிவர் சிலருக்கு மனித ஊனைச் சமைத்துப் படைத்து முனிவர்களுக்குச் சினமுண்டாக்கி அரசனுக்கு அரக்கனாகுமாறு வசவுரை ஏற்படச் செய்துவிட்டான். அரசன் அவனைத் தேராது வேலையில் விட்டமையின் இத்தகைய தொல்லைக்குள்ளாகி வருந்தினான்.
பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...
“நன்று அறியாத் தீயோர்க்கு இடமளித்த நல்லோர்க்கும்
துன்று கிளைக்கும் துயர்சேரும், - குன்றிடத்தில்
பின்னிரவில் வந்த கரும் பிள்ளைக்கு இடம்கொடுத்த
அன்னமுதல் பட்டது போலாம்.” --- நீதிவெண்பா.
இதன் பொருள் ---
முன்னொரு காலத்து மலையில் இரவில் வந்த காக்கைக்குத் தங்க இடம் கொடுத்த அன்னப் பறவை பின்பு துன்பப்பட்டது போல, செய்த நன்மையைத் தெரிந்துகொள்ள மாட்டாத தீயவர்களுக்குத் தமது இடத்தைக் கொடுக்கும் நல்லவர்களுக்கும், அவர்களைச் சேர்ந்த உறவினர்களுக்கும் துன்பம் வந்து சேரும்.
(துன்று கிளை - நெருங்கிய உறவு. கரும்பிள்ளை - காக்கை.)
இதில் அமைந்த கதை ----
ஒரு மலையில் ஓர் அன்னம் தன் இனத்தோடு வசித்து வந்தது. ஒருநாள் இரவில் மழை கடுமையாகப் பெய்தது. அம் மழையில் நனைந்த காக்கை ஒன்று அன்னத்திடம் வந்து இரவு தங்க இடம் கேட்டது. அன்னமும் தங்க இடம் கொடுத்தது. காக்கை தங்கிய இடத்தில் எச்சம் இட்டுவிட்டது. அந்த எச்சத்தில் இருந்து ஒர் ஆலம் வித்து முளைத்துப் பெரிய மரமாகி விழுதுகள் விட்டுத் தொங்கின. அவ் விழுதுகளைப் பிடித்துக் கொண்டு மலை மீது பலர் ஏறி வந்து, அந்த அன்னத்தையும், அதனோடு சேர்ந்த பிற அன்னப் பறவைகளையும் பிடித்துச் சென்றனர். தாழ்ந்த காக்கைக்கு இடம் கொடுத்ததனால் அன்னத்திற்குக் கேடு வந்தது.
No comments:
Post a Comment