33. கோடரிக் காம்பு குலத்துக்குக் கேடு

 



கோடாமல் பெரியவர்பால் நடப்பதன்றிக்

    குற்றமுடன் குறைசெய் தோர்கள்

ஆடாகிக் கிடந்தஇடத் ததன்மயிரும்

    கிடவாமல் அழிந்து போவார்!

வீடாநற் கதியுதவும் தண்டலையா

    ரே! சொன்னேன் மெய்யோ? பொய்யோ?

கோடாலிக் காம்பேதன் குலத்தினுக்குக்

    கோடான கொள்கை தானே!”


இதன் பொருள் —-


வீடா நற்கதி உதவும் தண்டலையாரே - வீட்டின்பம் என்னும் நல்ல நிலையை  அருளும்  திருத்தண்டலை நீள்நெறி  இறைவரே! 


சொன்னேன் மெய்யோ, பொய்யோ - நான் சொல்லுவது உஉண்மையோ, பொய்யோ?


கோடாலிக் காம்பே தன் குலத்தினுக்குக் கேடான கொள்கை  - கோடரிக்குக் காம்பு தன் குலத்துக்குக் கேடு என்று கூறும் வழக்கம் போல, 

பெரியவர்பால் கோடாமல் நடப்பது அன்றி - கல்வி அறிவு ஒழுக்கங்களால் நிறைந்த சான்றோரிடம் அவரது மனம் கோணாமல் நடந்து கொள்வதை விடுத்து, குற்றமுடன் குறை செய்தோர்கள் - குற்றமும் குறையும் செய்தவர்கள், ஆடு ஆகிக் கிடந்த இடத்து அதன் மயிரும் கிடவாமல் அழிந்தே போவார் - ஆடு வளர்ச்சியற்றுக் கிடந்த இடத்திலே, அதன் மயிரும் கிடக்காமல் அழிந்து விடுவார்.


ஆடு கிடந்த இடத்து அதன் மயிரும் கிடவாது’,  கோடரிக் காம்பு குலத்துக்கு ஈனம்' என்பவை பழமொழிகள்.


  "நெருப்பினால் சுடப்பட்டாலும் பிழைத்தல் ஆகும். ஆனால், பெரியாரிடத்தில் தவறு செய்து ஒழுகுபவர் தப்பிப் பிழைத்தல் ஆகாது" என்கின்றார் திருவள்ளுவ நாயனார். “எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம், உய்யார் பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் என்னும் திருக்குறளைக் காண்க. காடுகளிலே உள்ள மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து, அதனால் உண்டாகும் தீயினிடத்தில் ஒருவன் அகப்பட்டுக் கொள்வானானால், அந்தத் தீயானது உடம்பினைப் பிடிக்கும் முன்னரோ அல்லது உடம்பினைப் பற்றிய பின்னரோ தப்பிச் சென்று காத்துக் கொள்ளலாம். ஆனால், நிறைமொழி மாந்தருக்கு உண்டான கோபத் தீயில் இருந்து ஒருவன் தன்னை எவ்விதத்திலும் காத்துக் கொள்ளுதல் முடியாது. அவரிடத்தில் பிழைத்தவர் அழிந்து போதல் நிச்சயம். எனவே, பெரியவரிடத்தில் பிழை செய்தல் ஆகாது.


பின்வரும் பாடல்கள் ஒப்பாக அமைந்துள்ளதை அறிக.


பெரியாரோடு யாத்த தொடர்விடுதல் இன்னா;

அரியவை செய்தும் என உரைத்தல் இன்னா;

பரியார்க்குத் தாம் உற்ற கூற்று இன்னா; இன்னா

பெரியோர்க்குத் தீய செயல்.” ---  இன்னா நாற்பது.


இதன் பொருள் ---


பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா - பெரியவருடன் கொண்ட, தொடர்பை விடுவது துன்பமாம்; அரியவை செய்தும் என உரைத்தல் இன்னா - செய்தற்கரிய காரியங்களைச் செய்து முடிப்போம் என்று சொல்லுதல் துன்பமாம்; பரியார்க்கு தாம் உற்ற கூற்று இன்னா - தம்மிடத்தில் அன்பு கொள்ளாதவர்க்கு, தாம் அடைந்த துன்பங்களைக் கூறுவது துன்பமாம்; பெரியார்க்குத் தீய செயல் இன்னா - பெருமையுடையார்க்குத் தீயனவற்றைச் செய்தல் துன்பமாம். 


பெருமை உடையாரைப் பீடு அழித்தல் இன்னா;

கிழமை உடையார்க் களைந்திடுதல் இன்னா;

வளமை இலாளர் வனப்பு இன்னா; இன்னா

இளமையுள் மூப்புப் புகல்.”    --- இன்னா நாற்பது.


இதன் பொருள் ---


பெருமை உடையாரைப் பீடு அழித்தல் இன்னா - பெருமையுடையவரை, அவரது பெருமை அழியக் கூறுதல் துன்பமாம்; கிழமை உடையார் களைந்திடுதல் இன்னா - உரிமை உடையவரை நீக்கி விடுதல் துன்பமாம்; வளமை இலாளர் வனப்பு இன்னா - செல்வம் இல்லாதவருடைய அழகு துன்பமாம்; இளமையுள் மூப்புப் புகல் இன்னா - இளமைப் பருவத்தில் முதுமைக்கு உரிய தன்மைகள் உண்டாதல் துன்பம் தருவதாகும். 


ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று

தாமாச் சிறியார் தறுகண்மை செய்து ஒழுகல்,

போமா(று) அறியாப் புலன்மயங்கி ஊர்புக்குச்

சாமாகண் காணாத வாறு.” --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


பெரியாரை ஆமாலோ என்று - பெரியோர்களை இவர்க்கு (எம்மோடு மாறுபடல்) ஆகுமோ என்று நினைத்து, சிறியார் தாமா முன் நின்று தறுகண்மை செய்து ஒழுகல் - அறிவில் சிறியார் தாமாக முன்னின்று மாறுபட்டு வன்மை செய்து நிற்றல், சாம் மா - சாதற்குரிய விலங்குகள், போம் ஆறு அறியா - செல்லும் வழியினை அறியாதவாறு, புலன் மயங்கி - அறிவு மயங்கலால், ஊர் புக்கு கண் காணாதவாறு - ஊரினுள் புகுந்து கண்களை இழந்து வருந்தியதை ஒக்கும். (பெரியாரோடு மாறுபடுவார் இறுதியை எய்துவர்.)


எல்லாத் திறத்தும் இறப்பப் பெரியாரைக்

கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் சொல்லின்,

நிறைந்து ஆர் வளையினாய்! அஃதால் எருக்கு

மறைந்து யானை பாய்ச்சி விடல்.”   --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


நிறைந்து ஆர் வளையினாய் - அழகு நிறைந்து பொருந்தி இருக்கின்ற வளையை உடையவளே! எல்லாத் திறத்தும் இறப்பப் பெரியாரை - எல்லா வகையானும் உயர்ந்த அறிஞர்களை, கல்லாத் துணையார் - கல்லாமையைத் துணையாக உடைய அறிவில்லார், தாம் கைப்பித்தல் சொல்லின் - தாம் அதனுள் மறைந்து நின்று வெறுக்கப் பண்ணுதலைச் சொல்லின், எருக்கு மறைந்து யானை பாய்ச்சிவிடல் - எருக்கம் புதரின்கண் மறைந்து ஒருவன் யானையின்மேல் அம்பு எய்தலோடு ஒக்கும். (அறிவுடையாரைக் கல்லார் துன்புறுத்துவாராயின், அவர் கெட்டொழிதல் உறுதி என்றறிதல் வேண்டும்.) 'எருக்கு மறைந்து யானை பாய்ச்சிவிடும்' என்பது பழமொழி.


வில்லது வளைந்தது என்றும், 

வேழம்அது உறங்கிற்று என்றும்

வல்லியம் பதுங்கிற்று என்றும் 

வளர்கடா பிந்திற்று என்றும்

புல்லர்தம் சொல்லுக்கு அஞ்சிப் 

பொறுத்தனர் பெரியோர் என்று

நல்லது என்று இருக்க வேண்டா 

நஞ்சு எனக் கருதலாமே.” விவேக சிந்தாமணி 


இதன் பதவுரை ---


(உலகத்தவர்களே! பகைவரைக் கொல்வதற்கு வளைக்கப்பட்டு இருக்கும் வில்லைப் பார்த்து) வில்லது வளைவுற்றது என்றும் - இந்த வில்லானது வளைந்து போனது (அது தீங்கு செய்யாது) என்றும்; (காலம் பார்த்துத் தனது பகையை முடிக்கக் கருதி உறங்குகின்ற யானையைப் பார்த்து) வேழம் அது உறங்கிற்று என்றும் - இந்த யானையானது உறங்கிவிட்டது (அதனால், அது தீங்கு செய்யாது) என்றும், (ஒரு விலங்கைக் கொல்வதற்குக் காலம் பார்த்துப் பதுங்கிக் கிடக்கும் புலியைப் பார்த்து) வல்லியம் பதுங்கிற்று என்றும் - இந்த புலியானது பதுங்கி விட்டது (அதனால் இது தீங்கு செய்யாது) என்றும், (தனது பகையின் மேல் பாய்வதற்காக ஓடி வந்து பின்னிடுகின்ற ஆட்டுக் கடாவைப் பார்த்து) வளர் கடா பிந்திற்று என்றும் - இந்த ஆட்டுக்கடாவானது பாய்வதை விடுத்து, பின்னே சென்று விட்டது (அதனால் இது பினும் பாய்ந்து வந்து தீங்கு செய்யாது) என்றும், (தம்மை நிந்திப்போர் தாமாகவே கெட்டுப் போவார்கள் என்பதை அறிந்து, கீழ்மக்களின் நிந்தனையைப் பொறுத்துக் கொண்டு வாளா இருக்கும்) பெரியோர்கள் புல்லர் தம் சொல்லுக்கு அஞ்சிப் பொறுத்தனர் என்றும் - இந்தப் பெரியவர்கள் கீழ்மக்களின் சொற்களுக்குப் பயந்தே பொறுத்துக் கொண்டார்கள் (எனவே, இவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள்) என்றும், எண்ணிக் கொண்டு, நல்லது என்று இருக்க வேண்டா - (இச் செய்கைகளால் வருவது) நன்மையே என்று முடிவு கட்டி இருந்துவிட வேண்டாம்; நஞ்சு எனக் கருதலாம் - (இவற்றால் வருவது) நஞ்சைப் போன்ற கேடுதான் என்று எண்ணலாம்.

8. ஏற்பது இகழ்ச்சி

“நொய்துஆம் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின் நொய்தாம் இரப்போன், நுவலுங்கால் - நொய்யசிறு பஞ்சுதனில் நொய்யானைப் பற்றாதோ காற்றணுக அஞ்சுமவன் கேட...