திருக்குறள்
பொருட்பால்
அ. அரசியல்
அதிகாரம் 51 -- தெரிந்து தெளிதல்
அதாவது, அரசன், அமைச்சர் முதலாயினாரை அவரது பிறப்பு, குணம், அறிவு என்பனவற்றையும், அவரது செயலையும் காட்சி, கருத்து, ஆகமம் என்னும் பிரமாணங்களால் ஆராய்ந்து தெளிதல். முந்தைய அதிகரங்களில் கூறப்பட்ட வலி அறிதல், காலம் அறிதல், இடம் அறிதல் ஆகிய மூன்றினையும் அறிந்து, பகைவர் மீது போருக்குச் செல்லுதற்கு முன்னர், படை வீர்ர்களின் தொழில் தன்மையை ஆராய்ந்து தெளிதல் வேண்டும் என்பதால் இது கூறப்பட்டது.
இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "ஒருவரிடம் உள்ள நற்பண்புகளை ஆராய்ந்து, குற்றங்களையும் ஆராய்ந்து, ஆராய்ந்தவற்றுள் மிகுந்தவை ஆராய்ந்து, உயர்ந்தன அறிந்து கொள்க" என்கின்றார் நாயனார்.
குணம் குற்றம் ஆகிய இரண்டினுள், ஒன்றினை மட்டும் உடையவர் உலகத்தில் இல்லை. குணமும் குற்றமும் கலந்தே இருக்கும். ஒருவரது குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து, அவ் இரண்டினுள், குணம் மிகுந்து இருந்தால் கொள்ளவேண்டும். குற்றம் மிகுந்து இருந்தால் தள்ளவேண்டும்.
குணங்களையே ஒருவன் மிகுதியாக உடையவனாக இருந்து, ஏதோ ஓர் குற்றம் உடையவனாக இருந்தால், அந்தக் குற்றத்தின் பொருட்டு அவனைக் கொள்ளாது விடாமல், குணங்களின் மிகுதி பற்றி அவனைக் கொள்ளுதல் வேண்டும்.
ஒருவன் குற்றங்களையே மிகுதியும் உடையவானகி இருந்து, அவனிடத்தில் ஏதோ ஒரு நற்குணம் உடையவனாக இருந்தால், அந்த ஒரு நற்குணத்தை மட்டும் நோக்கி, அவனைக் கொள்ளாது, குற்றங்களின் மிகுதி பற்றி அவனை விடுத்தல் வேண்டும்.
குணத்தோடு குற்றத்தையும் நாடுதல் வேண்டும் என்பதால், "குற்றமும் நாடி" என்று நாயனார் அறிவுறுத்தியது அறிக.
இதற்குத் திருக்குறள்....
"குணம் நாடி, குற்றமும் நாடி, அவற்றுள்
மிகை நாடி, மிக்க கொளல்."
இதற்குப் பரிமேலழகர் உரை ---
குணம் நாடி --- குணம் குற்றங்களுள் ஒன்றேயுடையார் உலகத்து இன்மையின், ஒருவன் குணங்களை ஆராய்ந்து,
குற்றமும் நாடி --- ஏனைக் குற்றங்களையும் ஆராய்ந்து,
அவற்றுள் மிகை நாடி --- பின் அவ்விரு பகுதியுள்ளும் மிக்கவற்றை ஆராய்ந்து,
மிக்க கொளல் - அவனை அம் மிக்கவற்றானே அறிக.
(மிகையுடையவற்றை 'மிகை' என்றார். அவையாவன: தலைமையானாகப் பன்மையானாக உயர்ந்தன. அவற்றான் அறிதலாவது, குணம் மிக்கதாயின் வினைக்கு உரியன் என்றும், குற்றம் மிக்கதாயின் அல்லன் என்றும் அறிதல். குணமே உடையார் உலகத்து அரியர் ஆகலின், இவ்வகை யாவரையும் தெளிக என்பது இதனான் கூறப்பட்டது.)
பின்வரும் படால்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...
"கற்றும் பலபல கேள்விகள் கேட்டுங் கறங்கெனவே
சுற்றுந் தொழில்கற்றுச் சிற்றின்பத் தூடு சுழலின்என்னாங்
குற்றங் குறைந்து குணமே லிடுமன்பர் கூட்டத்தையே
முற்றுங் துணையென நம்புகண் டாய்சுத்த மூடநெஞ்சே.” --- தாயுமானவர்.
இதன் பொருள் ---
மிகவும் அறியாமையால் பற்றப்பட்டு மூடம் பொருந்திய நெஞ்சமே! பலபல நூல்களைக் கற்றும், செவிச்செல்வம் ஆகிய பல கேள்விகளைக் கேட்டும் உள்ளம் ஒருநிலைப்படாது காற்றாடி போன்று சுற்றி உழலும் தொழிலால் அடையும் பயன் யாது? சிற்றின்பத்துடன் சுழன்று கொண்டு இருப்பதனால் பிறவித் துன்பமே அன்றி பிறவாப் பேரின்பம் வாய்க்குமோ? (குற்றம் சுருங்கிச் செயலற்றுக் குணமே மிகுந்து மேலிட்டு) வழுவாது ஒழுகும் மெய்யன்பர் திருக்கூட்டத்தையே உற்ற துணையென நம்புவாயாக.
குணமாகிய ஒளிதோன்றக் குற்றமாகிய இருள் சுருங்குவது இதற்கு ஒப்பாகும். சுருங்குவது - அடங்குவது.
"நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
நெல்லுக்கு உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு." --- நாலடியார்.
இதன் பொருள் ---
நல்லார் எனத் தாம் நனி விரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும் - நல்லவர் என்று தாம் பலகால் ஆராய்ந்து மிகவும் நேசித்துக் கொண்டவரைப் பின்பு ஒருகால் அவர் நல்லவரல்லாராய் பிழைபட்டாரெனினும் அதனைப் பொறுத்து அவரைத் தம்மிடமே இணக்கிக் கொள்ளல்வேண்டும்; நெல்லுக்கு உமி உண்டு நீர்க்கு நுரை உண்டுபுல் இதழ் பூவிற்கும் உண்டு - ஏனென்றால், பயன்படுதல் உடைய, நெல்மணிக்கு அதிலிருந்து நீக்குதற்குரிய உமியுண்டு, அவ்வாறே நீர்க்கு நுரையுண்டு, பூவிற்கும் புறவிதழ் உண்டு.
உலகத்தில் குற்றமிருத்தல் இயற்கை. ஆதலின், நண்பரிடத்து அதனைப் பாராட்டுதல் ஆகாது.
"குணநன்கு உணராக் கொடியோர் இடத்தில்
குணநன்கு உடையார் குறுகார் - குணமுடைமை
நண்ணாச் சமண நகரத்தில் தூசொலிக்கும்
வண்ணானுக்கு உண்டோ வழக்கு." --- நீதிவெண்பா.
இதன் பொருள் ---
ஆடையை அணியும் இயல்பு இல்லாத சமண மதத்தினர் இருக்கும் இடத்தில், ஆடை வெளுப்பவருக்கு வேலை இல்லை. அதுபோல, நல்லியல்பு இல்லாத தீயோரிடத்தில், நல்ல இயல்புகளை உடைய பெரியோருக்கு வேலை இல்லை.
(தூசு - ஆடை. ஒலித்தல் - மாசு நீக்கி வெளுக்கச் செய்தல். பண்டைக் காலத்தில் சமணர்கள் ஆடை உடுத்தார். திகம்பரர் எனப்படுவர்.)
No comments:
Post a Comment