கொற்றவர்கள் ராணுவமும் ஆறுநேர் ஆகிய
குளங்களும் வேசையுறவும்
குணம்இலார் நேசமும் பாம்பொடு பழக்கமும்
குலவுநீர் விளையாடலும்
பற்றலார் தமதிடை வருந்துவிசு வாசமும்
பழையதா யாதிநிணறும்
பரதார மாதரது போகமும் பெருகிவரு
பாங்கான ஆற்றுவரவும்
கற்றும்ஒரு துர்ப்புத்தி கேட்கின்ற பேருறவும்
நல்லமத யானைநட்பும்
நாவில்நல் லுறவும்ஒரு நாள்போல் இராஇவைகள்
நம்பப் படாதுகண்டாய்
மற்றும்ஒரு துணையில்லை நீதுணை எனப்பரவும்
வானவர்கள் சிறைமீட்டவா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமர!ஈசனே!”
இதன் பொருள் —-
‘மற்றும் ஒரு துணையில்லை; நீ துணை' எனப் பரவும் வானவர்கள் சிறை மீட்டவா - ‘வேறு துணைவர் இல்லை; நீயே தஞ்சம்'என்று வேண்டி வழிபட்ட அமரர்களின் சிறையை நீக்கியவனே!
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
கொற்றவர்கள் ராணுவமும் - அரசர்களின் படையும், ஆறுநேர் ஆகிய குளங்களும் - ஆற்றுக்கு எதிர்ப்படும் பொய்கைகளும், வேசை உறவும் - பரத்தையரின் நட்பும், குணம் இலார் நேசமும் - நற்பண்பு இல்லாதவரின் நட்பும், பாம்பொடு பழக்கமும் - அரவுடன் பழகுதலும், குலவு நீர் விளையாடலும் - மிக்க நீரிலே ஆடுதலும்; பற்றலார் தமது இடை வருந்து விசுவாசமும் - பகைவரிடம் வருந்திக் கொள்ளும் அன்பும், பழைய தாயாதி நிணறும் - பழைய பங்காளிகளின் உறவும், பரதார மாதர் அநுபோகமும் - பிறர் மனைவியரின் கூட்டுறவும், பெருகிவரு பாங்கான ஆற்று வரவும் - பெருக்கெடுத்து வரும் அழகிய ஆற்று வெள்ளமும், கற்றும் ஒரு துர்ப் புத்தி கேட்கின்ற பேர் உறவும் - நூல்களைக் கற்றிருந்தும், நயமாகப் பேசுகின்றோரின் கெடுமதியைக் கேட்டு நடக்கின்றவரின் நட்பும், நல்ல மதயானை நட்பும் - அழகிய மதயானையின் நேசமும், நாவில் நல்லுறவும் - பேச்சளவிலே உள்ள இனிய உறவும், ஒரு நாள் போல் இரா - ஒரு நாளைப்போல நிலையாக இருக்கமாட்டா, இவைகள் நம்பப் படாது - (ஆகையால்) இவற்றை நம்புதல் கூடாது.
No comments:
Post a Comment