51. தெரிந்து தெளிதல் - 05. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும்

திருக்குறள்

பொருட்பால்


. அரசியல்


அதிகாரம் 51 -- தெரிந்து தெளிதல்


அதாவது, அரசன், அமைச்சர் முதலாயினாரை அவரது பிறப்பு, குணம், அறிவு என்பனவற்றையும், அவரது செயலையும் காட்சி, கருத்து, ஆகமம் என்னும் பிரமாணங்களால் ஆராய்ந்து தெளிதல். முந்தைய அதிகரங்களில் கூறப்பட்ட வலி அறிதல், காலம் அறிதல், இடம் அறிதல் ஆகிய மூன்றினையும் அறிந்து, பகைவர் மீது போருக்குச் செல்லுதற்கு முன்னர், படை வீரர்களின் தொழில் தன்மையை ஆராய்ந்து தெளிதல் வேண்டும் என்பதால் இது கூறப்பட்டது.


இந்த அதிகாரத்தில் ஒரும் ஐந்தாம் திருக்குறளில், "குடிப்பிறப்பு, குணம், அறிவு என்பனவற்றால் மனிதர் அடையும் பெருமை என்னும் பொன்னின் மாற்றினை அறிவதற்கும், மற்றைச் சிறுமையாகிய பொன்னின் மாற்றினை அறிவதற்கும், அவரவர் செய்யும் செயல்களே உரைகல் ஆகும். (வேறு ஒன்று இல்லை) என்கின்றார் நாயனார்.


பொற்கொல்லன் ஒருவன் தன்னிடத்தே கிடைத்த பொன்னின் தகுதியை உரைகல் ஒன்றினைக் கொண்டு பார்ப்பதுபோல், மக்களது பெருமையையும், சிறுமையையும் அறிவதற்கு உரைகல்லாக இருப்பது அவர் செய்யும் செயல்களே ஆகும். ஆகவே, ஒருவன் குற்றம் உடையான், குணம் உடையான் என்று ஆராய்வதற்கு அவனுடைய செயலே கருவியாக உள்ளது.


திருக்குறளைக் காண்போம்...


பெருமைக்கும், ஏனைச் சிறுமைக்கும், தம்தம்

கருமமே, கட்டளைக் கல்.


இதற்குப் பரிமேலழகர் உரை ---


பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக்கல் - பிறப்பு குணம் அறிவு என்பனவற்றான் மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும் உரைகல்லாவது, 


தத்தம் கருமமே - தாம் தாம் செய்யும் கருமமே, பிறிதில்லை.


(இஃது ஏகதேச உருவகம். மக்களது பெருமையும் சிறுமையும் தப்பாமல் அறியலுறுவார்க்குப் பிற கருவிகளும் உளவாயினும், முடிந்த கருவி செயல் என்பது தேற்றேகாரத்தால் பெற்றாம். இதனால் குணம் குற்றங்கள் நாடற்குக் கருவி கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விள்ளகமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


இறைவர்நிலை காணார் இருவர் என்று கண்டால்

பெருமை சிறுமை இனிப் பேசும் இறையாம்

பெருமைக்கும், ஏனைச் சிறுமைக்கும், தம்தம்

கருமமே கட்டளைக் கல்.”


இருவர் ---  பிரமனும், திருமாலும்.  இருவரும் சிவபெருமானுடைய அடிமுடி தேடிய வரலாறு இங்கே குறிக்கப்பட்டது.


ஒரு காலத்தில் பிரம்மனும் திருமாலும் தங்களில் யார் பெரியவர் என்று வாக்குவாதம் செய்தனர். அது முற்றிப் போரில் முடிந்தது. இதைப் பார்த்த சிவபரம்பொருள் அவர்கள் முன் ஓர் அனற்பிழம்பாய் காட்சி அளித்தது. ‘நானே கடவுள்’ ‘நானே கடவுள்என்று கூறி போர்புரிந்த பிரம்மனும் திருமாலும் அச்சோதிப் பிழம்பைப் பார்த்து முதலில் திகைத்தனர். தாம் இருவரும் அறியாத வேறு ஒரு பொருள்  இருக்கிறதே என வியந்தனர். பின்னர் அவர்கள் இருவரில் அச்சோதிப்பிழம்பின் அடியையோ முடியையோ முதலில் காண்பவர் யாரோ அவரே அவர்களில் பெரியவர் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

பிரமன் அரி என்ற இருவரும் தம் பேதைமையால்

பரமம் யாம் பரமம் என்ற அவர்கள் பதைப்பு ஒடுங்க,

அரனார் அழல் உருவாய் அங்கே அளவிறந்து

பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ.”.   ---  திருவாசகம்.


திருமால் பன்றி உருவெடுத்து நிலத்தைப் பிளந்து சென்று பாதாளத்தில் தேடியும் அந்த சோதிப் பிழம்பின் அடியைக் காணமுடியவில்லை. திருமால் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். பிரம்மனோ அன்னப்பறவை உருவெடுத்து, முடியைக் காணவேண்டும் என்ற ஒரே நோக்கில் பறந்து கொண்டே இருந்தார். எனினும் முடியைக் காணமுடியவில்லை. முடியைக் காணாதவர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கலாம். அதற்கு அவர் மனம் இடம்கொடுக்கவில்லை. திருமாலை வென்றுவிடவேண்டும் என்ற ஆசை அவரைப் பொய் பேசவைத்தது. தான் அத்தீப் பிழம்பின் முடியைக் கண்டதாக  பிரமனே பொய் சொன்னார். தான் முடியைக் கண்டதற்கு தாழம்பூவைப் பொய்சாட்சி சொல்ல வைத்தார்.

"அடிமுடி காண்பார் அயன்மால் இருவர்

படி கண்டிலர், மீண்டும் பார்மிசைக் கூடி,

அடி கண்டிலேன் என்று அச்சுதன் சொல்ல,

முடிகண்டேன் என்று அயன் பொய் மொழிந்தானே”.     --- திருமந்திரம்.

அவர்களின் செயலைப் பார்த்திருந்த பரம்பொருளாகிய சிவம் அத் தீயிலிருந்து வெளிப்பட்டு, பிரமாவுக்கு எங்கேயும் கோயில் இல்லாது சபித்து, பொய்சாட்சி சொன்ன தாழம்பூவை பூசைக்கு உதவாத மலராக்கினார். பிரம்மனும், திருமாலும் பதைபதைத்து அஞ்சி மன்னிப்புக் கேட்டனர். அடிமுடி இல்லாமல் சோதி வடிவாக நின்ற இறைவன், திருமாலதும் பிரம்மனதும் வேண்டுகோளுக்கு இரங்கி சோதிலிங்கம் ஆனார். 


திருமாலும் அயனும் அடிமுடி தேடிய வரலாற்றின் உட்பொருள்.


(1) கீழ் நோக்குவது தாமத குணம். மேல் நோக்குவது ராஜச குணம். இந்த இரு குணங்களாலும் இறைவனைக் காணமுடியாது. சத்துவ குணமே இறைவனைக் காண்பதற்குச் சாதனமாக அமைகின்றது. "குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமே ஆக" என்பார் தெய்வச் சேக்கிழார் சுவாமிகள்.


(2) அடி - தாமரை. முடி - சடைக்காடு. தாமரையில் வாழ்வது அன்னம். காட்டில் வாழ்வது பன்றி. கானகத்தில் வாழும் பன்றி பாதமாகிய தாமரையையும், தாமரையில் வாழும் அன்னம் முடியாகிய சடைக் காட்டையும் தேடி, இயற்கைக்கு மாறாக முயன்றதால், அடிமுடி காணப்படவில்லை.  இறைவன் இயற்கை வடிவினன். இயற்கை நெறியாலேயே காணப்படவேண்டும்.


(3) திருமால் செல்வமாகிய இலக்குமிக்கு நாயகன். பிரமன் கல்வியாகிய வாணிதேவிக்கு நாயகன். இருவரும் தேடிக் கண்டிலர்.  இறைவனைப் பணத்தின் பெருக்கினாலும், படிப்பின் முறுக்கினாலும் காணமுடியாது. பத்தி ஒன்றாலேயே காணலாம்.


(4) "நான்" என்னும் ஆகங்காரம் ஆகிய அகப்பற்றினாலும், "எனது" என்னும் மமகாரம் ஆகிய புறப்பற்றினாலும் காண முடியாது. யான் எனது அற்ற இடத்திலே இறைவன் வெளிப்படுவான். "தானே உமக்கு வெளிப்படுமே" என்றார் அருணை அடிகள்.


(5) "நான் காண்பேன்" என்ற முனைப்புடன் ஆராய்ச்சி செய்வார்க்கு இறைவனது தோற்றம் காணப்பட மாட்டாது.  தன் முனைப்பு நீங்கிய இடத்தே தானே வெளிப்படும். ஆன்மபோதம் என்னும் தற்போதம் செத்துப் போகவேண்டும் என்பதை உணர்த்துவது திருவாசகத்தில் "செத்திலாப்பத்து".


(6) புறத்தே தேடுகின்ற வரையிலும் இறைவனைக் காண இயலாது. அகத்துக்குள்ளே பார்வையைத் திருப்பி அன்பு என்னும் வலையினை வீசி, அகக் கண்ணால் பார்ப்பவர்க்கு இறைவன் அகப்படுவான். "அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்" என்றார் திருமூலர்.


(7) பிரமன் - வாக்கு.  திருமால் - மனம். வாக்கு மனம் என்ற இரண்டினாலும் இறைவனை அறியமுடியாது. "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" அவன்.

(8) பிரமன் - நினைப்பு. திருமால் - மறப்பு. இந்த நினைப்பு மறப்பு என்ற சகல கேவலங்களாகிய பகல் இரவு இல்லாத இடத்தில் இறைவனுடைய காட்சி தோன்றும். "அந்தி பகல் அற்ற இடம் அருள்வாயே”.

அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பெரிய புராணத்தில் வரும் திருநாளைப் போவார் நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார் பாடி அருளிய, "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


மூவா யிரமறையோர் மொய்ப்பத் திருநாளைப்

போவார் சிதம்பரத்துள் போய்அடைந்தார் --- ஓவாப்

பெருமைக்கு ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்.


இதன் பொருள் ---


சோழவள நாட்டிலே, ஆதனூரிலே நந்தனார் எனபரவர் அவதரித்தார். முற்பிறவிகளில் செய்த புண்ணிய மேலீட்டால் அவர் திருச்சிற்றம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரியும் அம்பலவாணப் பெருமானை வழிபட்டு  உய்யவேண்டுமென முறுகிய சிந்தை உடையரானார். அவர் தாம் தோன்றிய புலையர் குலத்துக்குப் பொருந்தப் புறத்தொண்டு செய்துவரும் கடப்பாடு உடையராயினார். புலியூருக்கு நாளைப் போவேன் நாளைப் போவேன் என்னும் பெரும்பற்று உடையாராய்ச் சிவனை மறவாத சிந்தை உடையாராய்க் கவலையும் பெரிது உற்றார்.  தில்லை எல்லை சென்றும் எல்லைப் புறத்தே வலம் வந்து அவர் இறைவரை வணங்கி வந்தார். கூத்தப்பிரான் திருவருளால் வளர்க்கப்பட்ட தீயிடை மூழ்கிப் புண்ணிய மாமுனி வடிவாய்த் தில்லைவாழந்தணர்களும், சிவனடித் தொண்டர்களும் வணங்கி உடன்வரச் சிற்றம்பலத்தை நோக்கி நடந்தார். திருநாளைப் போவாரை யாவரும் கண்டிலர். அதிசயித்தனர்.  சிவபுண்ணியங்களை நாம் செய்தல் அருமை என்று விரும்பாது ஒழிதல் பெருங்குற்றமாம். இடைவிடாது விரும்பினால் சிவபெருமான் திருவருளால் அது முற்றுப்பெறும். இந்தப்  பிறப்பிலே முற்றுப் பெறாதாயினும் மறுபிறப்பிலே முற்றுப்பெறுதல் நிச்சயம் என்பது திருநாளைப்போவார் வரலாற்றால் நாம் அறிகின்றோம்.


பிறப்பு குணம் அறிவு என்பனவற்றால் மக்கள் எய்தும் பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும் உரைகல் ஆவது, அவரவர்கள் செய்யும் கருமமே.  பிறிதில்லை எனத் திருவள்ளுவ நாயனார் கூறியமை காண்க.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

அத்தன் பதத்துஇயற்றும் ஆழி சலந்தரனைச்

சித்ரவதை செய்த சிவசிவா! --- தத்தம்

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல்.”


இதன் பொருள் ---


அத்தன் - சிவபெருமான். ஆழி - சக்கரம். சிவபெருமான் காலால் கீறிய சக்கரம் சலந்தரனைக் கொன்றது.


இதன் வரலாறு

சலந்தராசுரன் என்பவன் பிரமனை நோக்கிக் கடும் தவம் செய்து சாகாவரம் கேட்டான். பிரமம் தன்னால் அவ்வாறு சாகாவரம் தர இயலாது என்று கூற, சலந்தாசுரன் "தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும்" என வரம் வாங்கி விட்டான். தனது வரத்தின் பலத்தாலும், உடல் வலிமையாலும் செருக்குற்று தேவர்களுக்கு தொல்லைகள் பல கொடுத்தான். தேவர்கள் திருக்கயிலை மலையை அடைந்து சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். சலந்தாசுரன் போர்க்கோலம் பூண்டு திருக்கயிலை மலையை அடைந்தான். சிவபெருமான் ஒரு கிழ அந்தணர் வேடத்தில் சலந்தாசுரன் முன்பு தோன்றினார். அதற்கு முன்பு திருமாலை சலந்தாசுரன் போல் வடிவெடுத்து அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். கணவன்தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில், மாற்றானை தன் கணவன் என நினைத்ததால் அவளது மனம் களங்கம் அடைந்தது. இத்தருணத்தில் சலந்தாசுரனிடம் தான் கூறும் ஒரு சிறிய செயலை அவனால் செய்ய முடியுமா என்று சிவபெருமான் கேட்டார். தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று செருக்குடன் சலந்தாசுரன் கூறினான். சிவபெருமன் தனது கால் பெருவிரலால் மண்ணில் ஒரு வட்டமிட்டு, அந்த வட்டத்தைப் பெயர்த்து அவனது தலை மேல் தாங்கி நிற்குமாறு சலந்தாசுரனிடம் கூறினார். அவனும் பெருமுயற்சிக்குப் பின் அந்த வட்டத்தைப் பெயர்த்தெடுத்து தன் தலை மேல் தாங்கினான். மனைவி பிருந்தையின் மனம் சிறிது நேரம் களங்கப்பட்டதால், அந்த வட்டச் சக்கரம் சலந்தாசுரன் உடலை இருகூறாகப் பிளந்துவிட்டு இறைவனின் கரத்தில் அமர்ந்தது.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து வரு பாடல்...


தமேவும் பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கரு--
மமே கட்டளைக்கல் எனல்கண்டு வானவரை வளர்வித்
து,மேலும் அவுணரைத் தேய்த்தும் அதிசயந் தோன்றநின்றான்
இமேதினி உண்டு உமிழ்வோன் புல்லையூரில் இருப்பவனே.”


இதன் பொருள் ---


தமக்கு உண்டாகும் பெருமைக்கும், சிறுமைக்கும் அவரவரது செயல்களே உரைகல் ஆகும் என்பது போல், பெருமைக்கு உரிய தேவர்களை வாழ்வித்து, கொடும் செயல்களைப் புரிந்த அரக்கர்களை அழித்து, புதுமை புலப்படுமாறு நின்றவன், இந்த உலகத்தை உண்டு உமிழ்ந்தவனும், திருப்புல்லாணி என்னும் திவ்விய தேசத்தில் திருக்கோயில் கொண்டு இருப்பவனும் ஆன திருமால்.


தம் மேவும் - தமக்கு உண்டாகும். வானவரை வளர்வித்து - தேவர்களை மிகுதியாக்கி. அதிசயம் தோன்ற - புதுமை புலப்பட. இமேதினி - இவ்வுலகம்.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...


"தாமே தமக்குச் சுற்றமும்,

தாமே தமக்கு விதிவகையும்,

யாம் ஆர்? எமது ஆர்? பாசம் ஆர்?

என்ன மாயம்? இவைபோகக்

கோமான் பண்டைத் தொண்டரொடும்

அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு

போமாறு அமைமின் பொய்நீக்கி,

புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. --- திருவாசகம்.


இதன் பொருள் ---


தமக்குச் சுற்றமும் தாமே - ஒவ்வொருவருக்கும் உறவினரும் அவரே, தமக்கு விதி வகையும் தாமே - நடைமுறைகளை வகுத்துக் கொள்பவரும் அவரே; ஆதலால், அடியவர்களே, நீங்கள், யாம் ஆர் - நாம் யார், எமது ஆர் - எம்முடையது என்பது எது, பாசம் ஆர் - பாசம் என்பது எது, என்ன மாயம் - இவையெல்லாம் என்ன மயக்கங்கள்? என்று உணர்ந்து, இவை போக - இவை நம்மை விட்டு நீங்க, கோமான் பண்டைத் தொண்டரொடும் - இறைவனுடைய பழைய அடியார்களோடும் கூடி, அவன் தன் குறிப்பே - இறைவனது திருவுளக் குறிப்பையே, குறிக்கொண்டு - உறுதியாகப் பற்றிக்கொண்டு, பொய் நீக்கி - பொய் வாழ்வை விட்டு, புயங்கன் - பாம்பினை அணிந்தவனும், ஆள்வான் - எம்மை ஆள்வோனுமாகிய பெருமானது, பொன் அடிக்கு - பொன் போல ஒளிரும் திருவடிக்கீழ், போம் ஆறு அமைமின் - போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்.


இறைவன் திருக்குறிப்பாவது, ஆன்மாக்கள் எல்லாம் வீடுபேறு எய்த வேண்டும் என்பது, இதனை உணர்ந்து அவனது திருவடியைப் பற்றிக்கொள்ள வேண்டும். 


"தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும்

தானேதான் செய்த வினைப்பயன் துய்ப்பானும்

தானே தனக்குத் தலைவனும் ஆமே". --- திருமந்திரம்.

 

தனக்கு துன்பம் செய்யும் பகைவனும் இன்பம் செய்யும் நட்பு உடையவனும் தானே ஆவான்.  பிறர் காரணம் அல்ல. தனக்கு மறுமை இன்பத்தையும் இம்மை இன்பத்தையும் செய்துகொள்பவனும் தானே ஆவான். தான் செய்த வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத் தானே அனுபவிப்பவனும் அவனே. அதனால், தனக்குத் தானே தலைவனாக இருந்து தன்னை நல்ல நெறியில் செலுத்திக் கொள்பவனும்,  தீய நெறியில் செலுத்திக் கொள்பவனும் அவனே தான். உயிர்களின் பக்குவத்தைப் பொறுத்தே நன்மையும் தீமையும் அமையும்.


நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை

நிலைகலக்கிக் கீழ் இடுவானும், நிலையினும்

மேன்மேல் உயர்த்து நிறுப்பானும், தன்னைத்

தலையாகச் செய்வானும் தான்.”     --- நாலடியார்.


எல்லோரும் போற்றும்படியாக சிறந்த நிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்பவனும், தனது முன் நிலையையும் குலையச் செய்து, தன்னைக் கீழ்நிலையில் தாழ்த்திக் கொள்பவனும், தான் முன் இருந்த சிறந்த நிலையில் இருந்து, மேன்மேலும் உயர்ந்த நிலையில் தன்னை மேம்படுத்தி நிலைசெய்து கொள்பவனும், தன்னை அனைவரினும் தலைமை உடையவனாகச் செய்து கொள்பவனும் தானே ஆவான்.


தானே தனக்குப் பகைவனும் நட்டானும்

தானே தனக்கு மறுமையும் இம்மையும்

தானேதான் செய்த வினைப்பயன் துய்த்தலால்

தானே தனக்குக் கரி.” --- அறநெறிச்சாரம்.


இதன் பொருள் ---


தனக்குப் பகைவனும் நட்டானும் தானே - தனக்கு துன்பம் செய்யும் பகைவனும் இன்பம் செய்யும் நட்பினனும் தானே ஆவான், பிறர் அன்று; தனக்கு மறுமையும் இம்மையும் தானே - தனக்கு மறுமை இன்பத்தையும் இம்மை இன்பத்தையும் செய்துகொள்பவனும் தானே, தான் செய்த வினைப்பயன் தானே துய்த்தலால் - தான் செய்த வினைகளின் பயனாக இன்ப துன்பங்களைத் தானே அனுபவித்தலால், தனக்குக் கரி தானே - தான் செய்த வினைகளுக்குச் சான்று ஆனும் தானேயாவன்.


பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.

சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.

பெருமையும் சிறுமையும் தான்தர வருமே.”      ---  நறுந்தொகை.



பெரியோர் எல்லாம் --- (உருவத்தால்) பெரியவரெல்லாரும், பெரியரும் அல்லர் --- பெருமையுடையவரும் ஆகார்.

(உருவத்தால் பெரியவர் எல்லாரும் பெருமை உடையவராகார்.) அறிவினாலும், பிறர்க்கு உதவி செய்தல் முதலியவற்றாலும் பெரியவரே பெருமையுடையவர் ஆவர். 


சிறியோர் எல்லாம் - (உருவத்தால்) சிறியவரெல்லாரும், சிறியரும் அல்லர் - சிறுமையுடையவரும் ஆகார்உருவத்தால் சிறியவர் எல்லாரும் சிறுமை உடையவர் ஆகார். உருவத்தால் பெரியவர் எல்லாரும் பெருமை உடையவர் ஆகார்.


பெருமையும் - மேன்மையும், சிறுமையும் - கீழ்மையும், தான் தர - தான்செய்து கொள்ளுதலால், வரும் - உண்டாகும். 

மேன்மையும் கீழ்மையும் தான் செய்யும் செய்கையாலேயே உண்டாகும் (பிறரால் உண்டாவதில்லை). 


'அரு மைந்து அற்றம் அகற்றும் வில்லியார்,

ஒரு மைந்தற்கும் அடாதது உன்னினார்;

தருமம் பற்றிய தக்கவர்க்கு எலாம்,

கருமம் கட்டளை என்றல் கட்டதோ?’. ---  கம்பராமாயணம், வாலி வதைப்படலம்.


இதன் பொருள் ---


அரு மைந்து - பெறுதற்கரிய வன்மையால்; அற்றம் அகற்றும் - (தன்னை அடைந்தவர்களின்) பெருந்துன்பத்தைப் போக்கும்; வில்லியார் - வில்லினையுடைய இராமர்; ஒரு மைந்தற்கும் - எந்த வீரனுக்கும்; அடாதது உன்னினார் - பொருந்தாத முறையற்ற செயலை, நினைத்துச் செய்துவிட்டார். தருமம் பற்றிய - அறநெறியைக் கடைப்பிடித்து ஒழுகும்; தக்கவர்க்கு எலாம் - தகுதியுடைய பெரியவர்களுக்கெல்லாம்; கருமம் கட்டளை என்றல் - அவரவர் செய்யும் செயல்களே அவரவர் தகுதியை அளக்கும் உரைகல் ஆகும் என்று கூறும் ஆன்றோர் உரை; கட்டு அதோ - (உண்மையோடு பொருந்தாத) புனைந்துரைதானா?

No comments:

Post a Comment

51. தெரிந்து தெளிதல் - 10. தேரான் தெளிவும்

திருக்குறள் பொருட்பால் அ . அரசியல் அதிகாரம் 51 -- தெரிந்து தெளிதல் அதாவது , அரசன் , அமைச்சர் முதலாயினாரை அவரது பிறப்பு , குணம் , அறிவ...