84. காரிய சாதனை

 



வேங்கைகள் பதுங்குதலும், மாமுகில் ஒதுங்குதலும்,

     விரிசிலை குனிந்திடுதலும்,

மேடம தகன்றிடலும், யானைகள் ஒடுங்குதலும்,

     வெள்விடைகள் துள்ளிவிழலும்,


மூங்கில்கள் வணங்குதலும், மேலவர் இணங்குதலும்,

     முனிவர்கள் நயந்துகொளலும்,

முதிர்படை ஒதுங்குதலும், வினையர்கள் அடங்குதலும்,

     முதலினர் பயந்திடுதலும்,


ஆங்கரவு சாய்குதலும், மகிழ்மலர் உலர்ந்திடலும்,

     ஆயர்குழல் சூடுபடலும்,

அம்புவியில் இவைகா ரியங்களுக் கல்லாமல்,

     அதனால் இளைப்புவருமோ?


மாங்கனிக் காவரனை வலமது புரிந்துவளர்

     மதகரிக் கிளையமுருகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர!ஈசனே!”


இதன் பொருள் —-

மாங்கனிக்கா அரனை வலமது புரிந்து,வளர் மதகரிக்கு இளைய முருகா! - மாம்பழத்தை வேண்டிச் சிவபெருமானை வலம் வந்து வாழும் யானைமுகத்தவருக்குத் தம்பியான முருகப் பெருமானே!


மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


வேங்கைகள் பதுங்குதலும் - புலிகள் பதுங்கி (ஒளிந்து) இருத்தலும், மாமுகில் ஒதுங்குதலும் - பெரிய மேகக்கூட்டங்கள் விலகுவதும், விரிசிலை குனிந்திடுதலும் - நீண்ட வில் வளைதலும், மேடமது அகன்றிடலும் - ஆட்டுக்கடாக்கள் பின்வாங்கிச் செல்லுதலும், யானைகள் ஒடுங்குதலும் - யானைகள் அடங்கலும், வெள்விடைகள் துள்ளிவிழலும் - வெண்மையான காளைகள் துள்ளுதலும், மூங்கில்கள் வணங்குதலும் - மூங்கில்கள் வளைதலும், மேலவர் இணங்குதலும் - பெரியோர்கள் ஒத்துப்போதலும், முனிவர்கள் நயந்துகொளலும் - முனிவர்கள் (வெறுப்புக் காட்டாமல்) அன்பு காட்டலும், முதிர்படை ஒதுங்குதலும் - வலிமையில் முற்றிய சேனை விலகிச் செல்லுதலும், வினையர்கள் அடங்குதலும் - இடையூறு செய்வோர் அமைதியாதலும், முதலினர் பயந்திடுதலும் - தலைவர்கள் அஞ்சுதலும், ஆங்கு அரவு சாய்குதலும் - பாம்பு அடங்குதலும், மகிழ்மலர் உலர்ந்திடலும் - மகிழம்பூ வாடுவதும், ஆயர் குழல் சூடுபடலும் - இடையரின் புல்லாங்குழல் சுடப்படுவதும், இவை காரியங்களுக்கு அல்லாமல் - இவைகளெல்லாம் (பிற்காலத்திற்) காரிய சாதனைக்கே அல்லாமல், அம்புவியில் அதனால் இளைப்பு வருமோ? - உலகில் இச்செயலால் தாழ்வு உண்டாகுமோ?

8. ஏற்பது இகழ்ச்சி

“நொய்துஆம் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின் நொய்தாம் இரப்போன், நுவலுங்கால் - நொய்யசிறு பஞ்சுதனில் நொய்யானைப் பற்றாதோ காற்றணுக அஞ்சுமவன் கேட...